Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

“யெகோவாவின் சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரம் உண்டு.” —2 கொ. 3:17.

பாடல்கள்: 11, 137

1, 2. (அ) சுதந்திரமும் அடிமைத்தனமும் பவுலுடைய காலத்தில் ஏன் முக்கிய விஷயங்களாக இருந்தன? (ஆ) உண்மையான சுதந்திரம் எங்கிருந்து கிடைக்குமென்று பவுல் சொன்னார்?

ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசின்கீழ் வாழ்ந்தார்கள். அங்கிருந்த மக்கள், தங்களுடைய நாட்டிலிருந்த சட்டங்கள், நீதித்துறை, சுதந்திரம் ஆகியவற்றை நினைத்துப் பெருமைப்பட்டார்கள். இருந்தாலும், அதிகாரம் படைத்த அந்தப் பேரரசு, கடினமான வேலைகளைச் செய்ய பெரும்பாலும் அடிமைகளையே நம்பியிருந்தது. ஒரு கட்டத்தில், ரோமப் பேரரசில் வாழ்ந்த மூன்று பேரில் கிட்டத்தட்ட ஒருவர் அடிமையாக இருந்தார். சாதாரண குடிமக்களுடைய மனதிலும் சரி, கிறிஸ்தவர்களுடைய மனதிலும் சரி, சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்தைப் பற்றிய எண்ணங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தன.

2 சுதந்திரத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் அடிக்கடி எழுதினார். அந்தக் காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள், உலகத்திலிருந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால், பவுல் அதுபோன்ற எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. அதற்குப் பதிலாக, பவுலும் அவருடைய சக கிறிஸ்தவர்களும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக கடினமாக உழைத்தார்கள். இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலி எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்தார்கள். உண்மையான சுதந்திரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தன் சக கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார். “யெகோவா காணமுடியாத உருவத்தில் இருக்கிறார்; யெகோவாவின் சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரம் உண்டு” என்று அவர் எழுதினார்.—2 கொ. 3:17.

3, 4. ( அ) 2 கொரிந்தியர் 3:17-க்கு முன்பிருக்கும் வசனங்களில் பவுல் எதைப் பற்றிப் பேசினார்? (ஆ) யெகோவாவிடமிருந்து வரும் சுதந்திரம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?

3 கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், யெகோவாவுடைய தூதரின் பிரசன்னத்தைப் பார்த்துவிட்டு சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கிய மோசேயைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். மோசே கீழே இறங்கியபோது, அவருடைய முகம் ஒளிவீசியது! இஸ்ரவேலர்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். அதனால், மோசே முகத்திரையைப் போட்டுக்கொண்டார். (யாத். 34:29, 30, 33; 2 கொ. 3:7, 13) “ஆனால், ஒருவர் யெகோவாவிடம் திரும்பும்போது, அந்தத் திரை நீக்கப்பட்டுவிடுகிறது” என்று பவுல் சொன்னார். (2 கொ. 3:16) இதற்கு என்ன அர்த்தம்?

4 எல்லாவற்றையும் படைத்த யெகோவாவுக்கு மட்டுமே எல்லையில்லாத சுதந்திரம் இருக்கிறது என்று முந்தின கட்டுரையில் கவனித்தோம். அதனால், யெகோவாவின் பிரசன்னம் எங்கேயோ, “யெகோவாவின் சக்தி எங்கேயோ,” அங்கே சுதந்திரம் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இப்படிப்பட்ட சுதந்திரம் நமக்கு வேண்டுமென்றால், நாம் யெகோவாவிடம் திரும்ப வேண்டுமென்று பவுல் சொன்னார். அதாவது, நாம் யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும்! வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேலர்கள், எல்லாவற்றையும் மனித கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்களே தவிர, யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. தங்களுடைய மனதையும் இதயத்தையும் அவர்கள் திரைபோட்டு மறைத்ததைப் போல் அது இருந்தது. தங்களுக்குக் கிடைத்த புது சுதந்திரத்தை, தங்களுடைய ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதற்குப் பயன்படுத்தவே அவர்கள் விரும்பினார்கள்.—எபி. 3:8-10.

5. (அ) எப்படிப்பட்ட சுதந்திரத்தை யெகோவாவின் சக்தி தருகிறது? (ஆ) அடிமையாக அல்லது கைதியாக இருப்பவர்களால்கூட யெகோவா தரும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (இ) நாம் எந்த விஷயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

5 யெகோவாவின் சக்தி கொடுக்கிற சுதந்திரம், அடிமைத்தனத்திலிருந்து கிடைக்கிற சுதந்திரத்தைவிட சிறந்தது. மனிதர்களால் தர முடியாத சுதந்திரத்தை யெகோவாவின் சக்தி தருகிறது. பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அது நம்மை விடுதலை செய்கிறது. அதோடு, பொய் வணக்கத்திலிருந்தும், அதன் பழக்கவழக்கங்களிலிருந்தும் நமக்கு விடுதலை தருகிறது. (ரோ. 6:23; 8:2) இந்தச் சுதந்திரத்துக்கு ஈடிணையே இல்லை! அடிமையாக அல்லது சிறையில் இருப்பவர்களால்கூட இந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்! (ஆதி. 39:20-23) விசுவாசத்தைக் காத்துக்கொண்டதால் நிறைய வருஷங்கள் சிறையிலிருந்த சகோதரி நான்ஸி யுன் மற்றும் சகோதரர் ஹாரல்டு கிங் இந்தச் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். அவர்களுடைய அனுபவம் JW பிராட்காஸ்டிங்கில் இருக்கிறது. (பேட்டிகளும் அனுபவங்களும் > சோதனைகளை சகித்தல் என்ற தலைப்பில் பாருங்கள்.) இப்போது, இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களை நாம் பார்க்கலாம்: (1) நம்முடைய சுதந்திரத்தை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (2) நமக்கு இருக்கும் சுதந்திரத்தை நாம் எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம்?

கடவுள் நமக்குத் தரும் சுதந்திரம் ரொம்ப விலைமதிப்புள்ளது

6. யெகோவா கொடுத்த சுதந்திரத்துக்கு தாங்கள் நன்றியோடு இருக்கவில்லை என்பதை இஸ்ரவேலர்கள் எப்படிக் காட்டினார்கள்?

6 விலைமதிப்புள்ள பரிசை யாராவது கொடுக்கும்போது, நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடு இருப்போம். ஆனால், யெகோவா கொடுத்த சுதந்திரத்துக்கு இஸ்ரவேலர்கள் நன்றி காட்டவில்லை. யெகோவா அவர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்த சில மாதங்களுக்குள், எகிப்தில் சாப்பிட்ட உணவை நினைத்து அவர்கள் ஏங்கினார்கள். யெகோவா கொடுத்துவந்த உணவான மன்னாவைக் குறை சொன்னார்கள். எகிப்துக்கே திரும்பிப்போகக்கூட ஆசைப்பட்டார்கள்! தன்னை வணங்குவதற்காக யெகோவா கொடுத்த சுதந்திரத்தைவிட, “மீன், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு” ஆகியவைதான் அவர்களுக்கு ரொம்ப முக்கியமானதாக இருந்தது. அவர்கள்மேல் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததில் ஆச்சரியமே இல்லை! (எண். 11:5, 6, 10; 14:3, 4) இதிலிருந்து நாம் முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

7. இரண்டு கொரிந்தியர் 6:1-ல் தான் சொன்ன அறிவுரையின்படி பவுல் எப்படி நடந்துகொண்டார், அதேபோல் நாமும் எப்படி நடந்துகொள்ளலாம்?

7 தன்னுடைய மகனான இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா கொடுத்திருக்கும் சுதந்திரத்துக்கு நன்றி காட்டாமல் இருக்கக் கூடாது என்று கிறிஸ்தவர்கள் எல்லாரையும் பவுல் எச்சரித்தார். (2 கொரிந்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.) பவுல் பாவ இயல்புள்ளவராக இருந்தார், பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாக இருந்தார்; அதை நினைத்து அவர் ரொம்பக் கவலைப்பட்டார். இருந்தாலும், “நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என்று சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? அதைப் பற்றித் தன்னுடைய சக கிறிஸ்தவர்களிடம், “கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறவர்களுக்கு வாழ்வு தருகிற கடவுளுடைய சக்தியின் சட்டம் உங்களைப் பாவத்தின் சட்டத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும் விடுதலை செய்திருக்கிறது” என்று சொன்னார். (ரோ. 7:24, 25; 8:2) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் யெகோவா நம்மை விடுதலை செய்திருக்கிறார் என்பதை பவுல் மறக்கவில்லை, நாமும் மறந்துவிடக் கூடாது. சுத்தமான மனசாட்சியோடு கடவுளுக்குச் சேவை செய்ய மீட்புவிலை நமக்கு வாய்ப்பளிக்கிறது; அப்படிச் சேவை செய்வது நமக்கு உண்மையான சந்தோஷத்தைத் தருகிறது.—சங். 40:8.

உங்கள் சுதந்திரத்தை எதற்குப் பயன்படுத்துகிறீர்கள், யெகோவாவுக்கு விருப்பமானதைச் செய்யவா, உங்களுக்கு விருப்பமானதைச் செய்யவா? (பாராக்கள் 8-10)

8, 9. (அ) நம் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் அப்போஸ்தலன் பேதுரு என்ன எச்சரிக்கையைக் கொடுக்கிறார்? (ஆ) ஒருவர் எப்படித் தன்னுடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது?

8 ‘யெகோவாவுக்கு நான் ரொம்ப நன்றியோடு இருக்கேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. நம் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு நாம் ரொம்பக் கவனமாகவும் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, தவறான காரியங்களைச் செய்வதற்கு நமக்கு இருக்கும் சுதந்திரத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று அப்போஸ்தலன் பேதுரு எச்சரித்தார். (1 பேதுரு 2:16-ஐ வாசியுங்கள்.) வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேலர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த எச்சரிக்கை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இன்று நமக்கும் இந்த எச்சரிக்கை அவசியம், அதுவும் ரொம்பவே அவசியம்! ஏனென்றால், விதவிதமான உடைகளையும் உணவுகளையும் பானங்களையும் பொழுதுபோக்குகளையும் காட்டி, சாத்தான் நமக்கு வலைவிரிக்கிறான்; அவனுடைய உலகமும் நமக்கு வலைவிரிக்கிறது. விளம்பரதாரர்கள் புத்திசாலிகள்! தங்களுடைய விளம்பரங்களில் அழகான ஆண்களையும் பெண்களையும் காட்டி, தேவையில்லாத பொருள்களைக்கூட வாங்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைத்துவிடுகிறார்கள். இந்த உலகம் ரொம்பச் சுலபமாக நம்மை ஏமாற்றி, நம்முடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வைத்துவிடும்.

9 கல்வி, வேலை, வாழ்க்கைத்தொழில் போன்ற முக்கியமான விஷயங்களுக்கும் பேதுருவின் ஆலோசனை பொருந்துகிறது. உதாரணத்துக்கு, சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்காக கடினமாக முயற்சி செய்யும்படி இளைஞர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். உயர்கல்வி படித்தால், நல்ல வேலை கிடைக்கும்... கைநிறைய சம்பாதிக்கலாம்... மதிப்பு மரியாதை கிடைக்கும்... என்றெல்லாம் மற்றவர்கள் அவர்களுக்கு ஆசைகாட்டுகிறார்கள். பள்ளிப் படிப்பை முடித்தவர்களைவிட கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள்தான் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்று நிரூபிப்பதற்காக சில புள்ளிவிவரங்களைக்கூட காட்டலாம். வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகிற முக்கியமான தீர்மானங்களை எடுக்கிற இந்தச் சமயத்தில், உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதுதான் நல்லது என்பதுபோல இளைஞர்களுக்குத் தோன்றலாம். ஆனால், அவர்களும் அவர்களுடைய பெற்றோரும் மனதில் வைக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

10. சொந்த விஷயங்களில் தீர்மானங்கள் எடுக்கும்போது நாம் எதை மறந்துவிடக் கூடாது?

10 இவையெல்லாம் சொந்த விஷயங்களாக இருப்பதால், தங்களுடைய மனசாட்சி பாதிக்காதவரையில் தங்கள் இஷ்டப்படி செய்ய தங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது என்றும் சிலர் நினைக்கலாம். “எனக்கு இருக்கும் சுதந்திரம் ஏன் இன்னொருவனுடைய மனசாட்சியால் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்?” என்று பவுல் சொன்னதை அவர்கள் குறிப்பிடலாம். (1 கொ. 10:29) நம்முடைய கல்வி, வேலை சம்பந்தமாக முடிவெடுக்க நமக்குச் சுதந்திரம் இருப்பது உண்மைதான். ஆனாலும், அதற்கு சில வரம்புகள் இருக்கின்றன என்பதையும், நம்முடைய தீர்மானங்கள் எல்லாவற்றுக்கும் சில பின்விளைவுகள் இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதனால்தான், “எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அனுமதி இருக்கிறது; ஆனால், எல்லாமே பிரயோஜனமானவை கிடையாது; எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எல்லாமே பலப்படுத்துவதில்லை” என்று பவுல் சொன்னார். (1 கொ. 10:23, அடிக்குறிப்பு) அதனால், சொந்த விஷயங்களில் தீர்மானம் எடுக்க நமக்கு சுதந்திரம் இருந்தாலும், நம்முடைய விருப்பு வெறுப்புகள் மட்டுமே முக்கியம் கிடையாது.

யெகோவாவுக்குச் சேவை செய்வதன் மூலம் சுதந்திரத்தை ஞானமாகப் பயன்படுத்துகிறோம்

11. எதற்காக யெகோவா நம்மை விடுதலை செய்திருக்கிறார்?

11 நம்முடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று பேதுரு எச்சரித்தபோது, சரியாகப் பயன்படுத்துவதைப் பற்றியும் சொன்னார். ‘கடவுளுக்கு அடிமைகளாக வாழும்போதுதான்’ அதைச் சரியாகப் பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம். நாம் வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், இயேசுவைப் பயன்படுத்தி நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் யெகோவா விடுதலை செய்திருக்கிறார்.

12. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் நமக்கு என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்கள்?

12 யெகோவாவுக்கு முழுமையாகச் சேவை செய்வதற்காக நம் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்வதுதான் நம்முடைய சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி! இப்படிச் செய்யும்போது, நம்முடைய சுயநல லட்சியங்களும், சொந்த ஆசைகளும் நம் வாழ்க்கையின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடாமல் இருக்கும். (கலா. 5:16) நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் பற்றி யோசித்துப்பாருங்கள். வன்முறையான, ஒழுக்கங்கெட்ட உலகத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். இருந்தாலும், சுற்றியிருந்த மக்கள் செய்த காரியங்களில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை; அந்த மக்களுக்கு இருந்ததைப் போன்ற லட்சியங்களும் அவர்களுக்கு இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவா கொடுத்த வேலையை மும்முரமாகச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள். பேழையைக் கட்டினார்கள், தங்களுக்கும் மிருகங்களுக்கும் உணவு சேகரித்தார்கள், பெருவெள்ளம் வரப்போவதைப் பற்றி மக்களை எச்சரித்தார்கள். “கடவுள் சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார். அவர் அப்படியே செய்தார்.” (ஆதி. 6:22) அதனால், அந்த உலகம் அழிந்தபோது நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் உயிர்பிழைத்தார்கள்.—எபி. 11:7.

13. யெகோவா நமக்கு என்ன கட்டளையைக் கொடுத்திருக்கிறார்?

13 பிரசங்கிக்கும்படி இன்று யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார் என்பது இயேசுவின் சீஷர்களான நமக்கு நன்றாகவே தெரியும். (லூக்கா 4:18, 19-ஐ வாசியுங்கள்.) சாத்தான் இன்று பெரும்பாலான மக்களுடைய மனதைக் குருடாக்கியிருக்கிறான். அதனால், பொய் மதத்துக்கும் பொருள் வசதிகளுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் தாங்கள் அடிமையாக இருப்பதை அவர்கள் உணருவதில்லை. (2 கொ. 4:4) சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவரை வணங்கவும் மற்றவர்களுக்கு இயேசு உதவினார். அந்த வேலையைச் செய்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். (மத். 28:19, 20) மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பது சுலபம் கிடையாது. சில இடங்களில், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்களுக்கு விருப்பமே இருப்பதில்லை; நாம் சொல்கிற செய்தியைக் கேட்டு சிலர் பயங்கரமாகக் கோபப்படுகிறார்கள். ஆனால், பிரசங்கிக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளை கொடுத்திருப்பதால், “யெகோவாவோட சேவைய இன்னும் அதிகமா செய்றதுக்கு என்னோட சுதந்திரத்தை நான் எப்படி பயன்படுத்தலாம்?” என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.

14, 15. யெகோவாவின் மக்களில் பெரும்பாலானவர்கள் என்ன செய்யத் தீர்மானம் எடுத்திருக்கிறார்கள்? (ஆரம்பப் படம்)

14 இந்த உலகத்துக்கு ரொம்பச் சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது என்பதை உணர்ந்து, யெகோவாவின் மக்களில் நிறையப் பேர், தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறார்கள்; பயனியர் சேவையை ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது ரொம்ப உற்சாகமாக இருக்கிறது! (1 கொ. 9:19, 23) சிலர், உள்ளூரிலேயே பயனியர் சேவை செய்கிறார்கள். சிலர், தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிப் போயிருக்கிறார்கள். கடந்த ஐந்து வருஷங்களில், 2,50,000-க்கும் அதிகமானவர்கள் பயனியர் சேவையை ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது, 11,00,000-க்கும் அதிகமான ஒழுங்கான பயனியர்கள் இருக்கிறார்கள். யெகோவாவுக்கு இப்படிச் சேவை செய்வதற்காக நிறையப் பேர் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது!—சங். 110:3.

15 தங்கள் சுதந்திரத்தை ஞானமாகப் பயன்படுத்த எது அவர்களுக்கு உதவியது? ஜான் மற்றும் ஜூடித் என்பவர்களுடைய அனுபவத்தைப் பார்க்கலாம். கடந்த 30 வருஷங்களில் அவர்கள் நிறைய நாடுகளில் சேவை செய்திருக்கிறார்கள். பயனியர் ஊழியப் பள்ளி 1977-ல் ஆரம்பிக்கப்பட்டபோது, தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய்ச் சேவை செய்யும்படி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். அந்த இலக்கை அடைய, ஜானும் ஜூடித்தும் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக ஜான் அடிக்கடி வேலையை மாற்றினார். கடைசியில், பிரசங்கிப்பதற்காக அவர்கள் வெளிநாட்டுக்குப் போனார்கள். புதிய மொழி... புதிய கலாச்சாரம்... புதிய சீதோஷ்ணம்... இதையெல்லாம் சமாளிக்க எது அவர்களுக்கு உதவியது? யெகோவாவிடம் அவர்கள் ஜெபம் செய்தார்கள், உதவிக்காக அவரையே நம்பியிருந்தார்கள். இவ்வளவு வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்ததைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள்? “யெகோவாவோட சேவையில நான் மூழ்கிப்போயிட்டேன். இதைவிட ஒரு நல்ல வேலை வேற எதுவுமே கிடையாது. அன்பான அப்பா மாதிரி, முன்னவிட யெகோவா எனக்கு ஒரு நிஜமான நபரா ஆகியிருக்குறார். ‘கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்’னு யாக்கோபு 4:8-ல சொல்லியிருக்கிறதுக்கு என்ன அர்த்தம்னு இப்போ எனக்கு நல்லா புரியுது. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழணும்னு நான் ஆசைப்பட்டேன், இப்போ அது எனக்கு கிடைச்சிருக்கு” என்று ஜான் சொல்கிறார்.

16. ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை எப்படி ஞானமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்?

16 ஜான் மற்றும் ஜூடித்தைப் போலவே, சிலரால் ரொம்ப வருஷத்துக்கு பயனியர் ஊழியம் செய்ய முடிகிறது. சூழ்நிலை காரணமாக சிலரால் கொஞ்சக் காலத்துக்குத்தான் பயனியர் சேவை செய்ய முடிகிறது. இருந்தாலும், நிறையப் பேர் உலகம் முழுவதும் நடக்கிற கட்டுமான வேலையில் ஈடுபட முன்வருகிறார்கள். உதாரணத்துக்கு, நியு யார்க், வார்விக்கில் இருக்கிற உலகத் தலைமை அலுவலகத்தின் கட்டுமான வேலைக்குக் கிட்டத்தட்ட 27,000 பேர் வந்திருந்தார்கள். சிலர், இரண்டு வாரங்கள் வேலை செய்ய வந்திருந்தார்கள். மற்றவர்கள், சில மாதங்கள் வேலை செய்ய வந்திருந்தார்கள். இன்னும் சிலர், ஒரு வருஷம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்ய வந்திருந்தார்கள். அவர்களில் நிறையப் பேர் பல தியாகங்களைச் செய்திருந்தார்கள். சுதந்திரத்தைத் தருகிற கடவுளான யெகோவாவைப் புகழவும், அவரை மகிமைப்படுத்தவும் தங்களுடைய சுதந்திரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கு இவர்கள் அருமையான முன்மாதிரிகள், இல்லையா?

17. நம்முடைய சுதந்திரத்தை ஞானமாகப் பயன்படுத்தும்போது, என்ன ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கலாம்?

17 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டதற்காகவும், அவரை வணங்குவதால் கிடைக்கும் சுதந்திரத்துக்காகவும் நாம் நன்றியோடு இருக்கிறோம். இந்தச் சுதந்திரத்தை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை, நாம் எடுக்கும் தீர்மானங்கள் காட்டட்டும். நம்முடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நம்மால் முடிந்தளவுக்கு யெகோவாவை முழுமையாக வணங்குவதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், “படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும்” என்ற யெகோவாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது, அவர் வாக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களை நாம் அனுபவிப்போம்.—ரோ. 8:21.