Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 14

‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்’

‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்’

“கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.”—1 பே. 2:21.

பாட்டு 5 ஏசு நமக்கு முன்மாதிரி

இந்தக் கட்டுரையில்... *

நாம் நெருக்கமாகப் பின்பற்றுவதற்காக, இயேசு தன்னுடைய அடிச்சுவடுகளை விட்டுவிட்டுப் போயிருக்கிறார் (பாராக்கள் 1-2)

1-2. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியுமா? உதாரணத்தோடு விளக்குங்கள்.

இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: நீங்களும் உங்களுடைய நண்பர்களும் அடர்ந்த ஒரு காட்டை சுற்றிப் பார்ப்பதற்காக போகிறீர்கள். அந்தக் காட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவர் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறார். நீங்கள் அவருக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று பார்த்தால், அவர் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது, நீங்கள் பயந்துபோக வேண்டுமா? தேவையில்லை! ஏனென்றால், அவருடைய அடிச்சுவடுகள், அதாவது அவருடைய கால் தடங்கள், உங்கள் முன்னால் இருக்கின்றன. அதைப் பார்த்துக்கொண்டே நீங்கள் போகலாம்.

2 உண்மை கிறிஸ்தவர்களாகிய நாமும், இந்த உலகம் என்ற ஆபத்தான அடர்ந்த காட்டில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், சிறந்த வழிகாட்டியான இயேசு கிறிஸ்துவை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். (1 பே. 2:21) ஒன்று பேதுரு 2:21-ல், வழிகாட்டி என்ற ஓர் உருவகத்தை பேதுரு பயன்படுத்தியிருப்பதாக ஒரு பைபிள் ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. ஒரு வழிகாட்டி எப்படித் தன்னுடைய கால்தடங்களை விட்டுவிட்டுப் போவாரோ, அதேபோல் நாம் பார்த்து பின்பற்றுவதற்காக இயேசுவும் தன்னுடைய கால்தடங்களை, அதாவது அடிச்சுவடுகளை, விட்டுவிட்டுப் போயிருக்கிறார். அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது என்றால் என்ன? நாம் ஏன் அதைப் பின்பற்ற வேண்டும்? எப்படிப் பின்பற்றலாம்? இந்தக் கேள்விகளுக்கு இப்போது பதில்களைப் பார்க்கலாம்.

இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது என்றால் என்ன?

3. ஒருவருடைய கால்தடங்களைப் பின்தொடர்ந்து போவது என்றால் என்ன?

3 ஒரு மனிதன் வாழ்ந்த விதத்தைப் பற்றிச் சொல்வதற்காக பைபிளில் சில சமயங்களில் ‘நடப்பது,’ “காலடிகள்” போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. (ஆதி. 6:9; சங். 44:18) ஒருவர் நடக்கும்போது, தன்னுடைய அடிச்சுவடுகளை, அதாவது கால்தடங்களை, விட்டுவிட்டுப் போகிறார். அவர் வாழ்கிற விதத்தை இந்தக் கால்தடங்களுக்கு ஒப்பிடலாம். ஒருவருடைய கால்தடங்களைப் பின்தொடர்ந்து போகும்போது, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம் என்று அர்த்தம்.

4. இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது என்றால் என்ன?

4 இயேசுவைப் பின்பற்றுவது என்றால், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது என்று அர்த்தம். இந்தக் கட்டுரையின் முக்கிய வசனத்தில், கஷ்டங்களைச் சகித்துக்கொள்கிற விஷயத்தில் இயேசு எப்படி முன்மாதிரி வைத்திருக்கிறார் என்று பேதுரு சொல்கிறார். ஆனால், இன்னும் நிறைய வழிகளில் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற முடியும். (1 பே. 2:18-25) சொல்லப்போனால், அவருடைய வாழ்க்கையே நமக்கு ஒரு முன்மாதிரிதான்! அவர் சொன்னவை, செய்தவை என எல்லாமே நமக்கு ஒரு முன்மாதிரிதான்!

5. நாம் பாவிகளாக இருந்தாலும் இயேசுவின் முன்மாதிரியை நம்மால் பின்பற்ற முடியுமா? விளக்குங்கள்.

5 ‘நானே ஒரு பாவி, என்னால எப்படி இயேசு மாதிரியே நடந்துக்க முடியும்?’ என்று நாம் யோசிக்கலாம். ஆனால், நிச்சயம் நம்மால் முடியும். இயேசுவின் ‘அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்’ என்றுதான் பேதுரு சொன்னாரே தவிர, ‘நூறு சதவீதம் பின்பற்றுங்கள்’ என்று சொல்லவில்லை. நாம் பாவிகளாக இருந்தாலும், இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது அப்போஸ்தலன் யோவான் சொன்னதுபோலவே நடந்துகொள்ள முடியும். ‘[இயேசு] நடந்தபடியே [நீங்களும்] தொடர்ந்து நடங்கள்’ என்று அவர் சொன்னார்.—1 யோ. 2:6.

இயேசுவின் அடிச்சுவடுகளை ஏன் பின்பற்ற வேண்டும்?

6-7. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் யெகோவாவிடம் நல்ல நட்பை வைத்துக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம்?

6 இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்போது யெகோவாவின் நண்பர்களாக ஆக முடியும். எப்படிச் சொல்கிறோம்? முதலாவது, கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதில் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். (யோவா. 8:29) அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கும்போது யெகோவாவை சந்தோஷப்படுத்த முடியும். தன்னுடைய நண்பராக ஆவதற்கு யாரெல்லாம் கடின முயற்சி எடுக்கிறார்களோ, அவர்களிடம் யெகோவாவும் நெருங்கி வருவார்.—யாக். 4:8.

7 அடுத்ததாக, இயேசு யெகோவாவை அச்சுப்பிசகாமல் பின்பற்றினார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா. 14:9) ஒரு தொழுநோயாளிக்கு இயேசு இரக்கம் காட்டினார். தீராத வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் கரிசனையோடு நடந்துகொண்டார். பாசத்துக்குரியவர்களை இழந்து தவித்தவர்களுடைய வேதனையைப் புரிந்துகொண்டார். இயேசு காட்டிய இந்தக் குணங்களை நாமும் மற்றவர்களிடம் காட்டும்போது யெகோவாவைப் பின்பற்ற முடியும். (மாற். 1:40, 41; 5:25-34; யோவா. 11:33-35) எந்தளவுக்கு யெகோவாவின் குணங்களைக் காட்டுகிறோமோ, அந்தளவுக்கு அவரிடம் இருக்கிற நட்பு பலமாகும்.

8. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் நம்மால் உலகத்தை “ஜெயிக்க” முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

8 இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்போது கவனம் சிதறாமல் யெகோவாவுக்கு சேவை செய்ய முடியும். இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, “நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்“ என்று இயேசுவால் சொல்ல முடிந்தது. (யோவா. 16:33) அப்படியென்றால், இந்த உலகத்தின் யோசனைகள்... குறிக்கோள்கள்... செயல்கள்... ஆகியவை தன்னுடைய கவனத்தைச் சிதறடிப்பதற்கு அவர் இடம்கொடுக்கவில்லை. அவர் இந்தப் பூமிக்கு வந்ததற்கான காரணமே யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கிற களங்கத்தை நீக்குவதற்காகத்தான்! அதை அவர் மறந்துவிடவே இல்லை. இன்று நம்முடைய கவனத்தையும் சிதறடிப்பதற்கு இந்த உலகத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இயேசு மாதிரியே யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தால் நம்மாலும் இந்த உலகத்தை “ஜெயிக்க” முடியும்.—1 யோ. 5:5.

9. முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

9 இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும். பணக்கார வாலிபன் ஒருவன் இயேசுவிடம் வந்து, ‘முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு அவர், “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார். (மத். 19:16-21) இன்னொரு சமயம், அவர்தான் கிறிஸ்து என்பதை நம்பாத யூதர்கள் சிலரிடம், “என் ஆடுகள் . . . என் பின்னால் வருகின்றன. நான் அவற்றுக்கு முடிவில்லாத வாழ்வு தருகிறேன்” என்று சொன்னார். (யோவா. 10:24-29) இயேசுவின் போதனைகளை விரும்பிய நியாயசங்க உறுப்பினர் நிக்கொதேமுவிடம், ‘[என்மேல்] விசுவாசம் வைக்கிறவர்களுக்கு . . . முடிவில்லாத வாழ்வு’ கிடைக்கும் என்று சொன்னார். (யோவா. 3:16) இயேசு சொன்ன, செய்த விஷயங்களின்படி நாமும் செய்தால், அவர்மேல் விசுவாசம் காட்டுகிறோம் என்று அர்த்தம். இப்படிச் செய்யும்போது முடிவில்லாத வாழ்வு நமக்குக் கிடைக்கும்.—மத். 7:14.

இயேசுவின் அடிச்சுவடுகளை எப்படி நெருக்கமாகப் பின்பற்றலாம்?

10. இயேசுவைப் பற்றி “தெரிந்துகொண்டே” இருப்பது என்றால் என்ன? (யோவான் 17:3)

10 இயேசுவை நாம் நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு, அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். (யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.) இயேசுவைப் பற்றி ‘தெரிந்துகொண்டே இருப்பது’ என்பது, தொடர்ச்சியாக செய்ய வேண்டிய ஒரு விஷயம். ஒவ்வொரு நாளும் இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது, அவருடைய குணங்கள்... அவர் யோசிக்கிற விதம்... அவர் பின்பற்றிய நெறிமுறைகள்... இதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டே இருக்க வேண்டும். நாம் எவ்வளவு வருஷங்கள் சத்தியத்தில் இருந்தாலும், யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் தெரிந்துகொண்டே இருக்க வேண்டும்.

11. சுவிசேஷ புத்தகங்கள் எதைப் பற்றி சொல்கின்றன?

11 இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்காக, நான்கு சுவிசேஷ புத்தகங்களை யெகோவா கொடுத்திருக்கிறார். இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும், அவர் செய்த ஊழியத்தைப் பற்றியும் அவை சொல்கின்றன. அவற்றைப் படிக்கும்போது, இயேசுவின் வார்த்தைகள்... செயல்கள்... உணர்வுகள்... ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். அவருடைய முன்மாதிரியை ‘கவனமாக யோசித்துப் பார்ப்பதற்கு’ இந்தப் புத்தகங்கள் உதவும். (எபி. 12:3) சொல்லப்போனால், இயேசுவின் அடிச்சுவடுகளை இவற்றில் பார்க்க முடியும். அதனால், இவற்றை நன்றாக ஆராய்ச்சி செய்து படியுங்கள். அப்படிச் செய்தால், இயேசுவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவும் முடியும்.

12. சுவிசேஷ புத்தகங்கள் நமக்குப் பிரயோஜனமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

12 சுவிசேஷ புத்தகங்கள் நமக்குப் பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்றால், அதை சும்மா படித்துக்கொண்டே போனால் பத்தாது. நேரம் எடுத்து கவனமாகப் படிக்க வேண்டும். ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். (ஒப்பிடுங்கள்: யோசுவா 1:8, அடிக்குறிப்பு.) இதைச் செய்வதற்கு இரண்டு ஆலோசனைகள் உதவும். இப்போது அதைப் பற்றிப் பார்க்கலாம்.

13. சுவிசேஷ பதிவுகளுக்கு நாம் எப்படி உயிர் கொடுக்கலாம்?

13 முதலில், சுவிசேஷ பதிவுகளுக்கு உயிர் கொடுங்கள். நீங்கள் படிக்கிற சம்பவங்களில் இருக்கிற காட்சிகளைக் கண்ணால் பாருங்கள். அந்தச் சம்பவத்தைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதைக் காதால் கேளுங்கள். நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் உங்கள் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இப்படிச் செய்வதற்கு, அமைப்பு கொடுத்திருக்கிற ஆராய்ச்சிக் கருவிகள் ரொம்ப உதவியாக இருக்கும். ஆராய்ச்சி செய்யும்போது, நீங்கள் படிக்கிற விஷயத்துக்கு மேலேயும் கீழேயும் நடக்கிற சம்பவங்களைப் படித்துப் பாருங்கள். அங்கே வாழ்ந்த மக்களைப் பற்றியும், அந்த இடங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற அதே சம்பவத்தைப் பற்றி வேறொரு சுவிசேஷ புத்தகம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். ஏனென்றால், நீங்கள் படிக்கிற சுவிசேஷ புத்தகத்தில் இல்லாத சில சுவாரஸ்யமான தகவல்கள் வேறு சுவிசேஷ புத்தகங்களில் இருக்கலாம்.

14-15. சுவிசேஷ பதிவுகள் சொல்வதைப் போல் நடந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

14 இரண்டாவது, சுவிசேஷ புத்தகங்களிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களின்படி செய்யுங்கள். (யோவா. 13:17) சுவிசேஷ புத்தகங்களைப் படித்ததற்குப் பிறகு, ‘இதுல இருந்து நான் என்ன கத்துக்கலாம்? மத்தவங்களுக்கு உதவுறதுக்கு இந்த பதிவ எப்படி பயன்படுத்தலாம்?’ என்று உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கு உதவி தேவை என்று யோசித்துப் பாருங்கள். அப்புறம், பொருத்தமான நேரத்தில், நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை அன்பாகவும் பக்குவமாகவும் அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

15 இதுவரை கவனித்த இரண்டு ஆலோசனைகளின்படி எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். அதற்கு, ஏழை விதவையைப் பற்றிய பதிவை ஆராய்ச்சி செய்யலாம்.

ஆலயத்தில் ஓர் ஏழை விதவை!

16. மாற்கு 12:41-ல் இருக்கிற காட்சியை விளக்குங்கள்.

16 படிக்கிற பதிவுக்கு உயிர் கொடுங்கள். (மாற்கு 12:41-ஐ வாசியுங்கள்.) இந்தப் பதிவை உங்கள் மனதில் ஒரு படமாக ஓடவிடுங்கள். அது. கி.பி. 33, நிசான் 11-ஆம் தேதி. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இயேசு இறக்கப்போகிறார். அன்றைக்கு இயேசு ரொம்ப நேரம் ஆலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். ஆனால், எதிரிகள் அவருக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ‘யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது?’ என்று கேள்வி எழுப்பினார்கள். இன்னும் சிலர், அவரைச் சிக்க வைப்பதற்காகவே சில கேள்விகளைக் கேட்டார்கள். (மாற். 11:27-33; 12:13-34) இப்போது, ஆலயத்தின் இன்னொரு பகுதிக்கு இயேசு போகிறார். பெண்களுக்கான இடம் என்று அழைக்கப்பட்ட பகுதியாக அது இருந்திருக்கலாம். அவர் இருக்கிற இடத்திலிருந்து பார்த்தால் காணிக்கைப் பெட்டிகள் அவருடைய கண்களில் படுகின்றன. அங்கே உட்கார்ந்துகொண்டு, மக்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து பெட்டிகளில் போடுவதை அவர் கவனிக்கிறார். பணக்காரர்கள் நிறைய பேர் ஏராளமான காசுகளைக் கொண்டுவந்து பெட்டிக்குள் போடுகிறார்கள். அந்தக் காசுகள் ‘கிளிங் கிளிங்’ என்று பெட்டிக்குள் விழுகிற சத்தம்கூட அவருக்கு கேட்டிருக்கலாம்.

17. மாற்கு 12:42-ல் சொல்லப்பட்டிருக்கிற ஏழை விதவை என்ன செய்தாள்?

17 மாற்கு 12:42-ஐ வாசியுங்கள். கொஞ்ச நேரத்தில், அங்கே ஒரு பெண் வருவதை இயேசு கவனிக்கிறார். அந்தப் பெண், ஓர் “ஏழை விதவை.” (லூக். 21:2) ரொம்ப கஷ்டப்பட்டுதான் அவள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறாள். தேவையான பொருள்களை வாங்குவதற்குக்கூட அவளிடம் காசு இல்லை. இருந்தாலும், இரண்டு சின்ன காசுகளைக் கொண்டுவந்து காணிக்கைப் பெட்டியில் போடுகிறாள். ஒருவேளை, அந்தக் காசு பெட்டிக்குள் விழுகிற சத்தம்கூட வெளியே கேட்டிருக்காது. ஆனால், இரண்டு லெப்டா காசுகளைத்தான் அவள் போட்டாள் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அந்தச் சமயத்தில் புழக்கத்தில் இருந்த காசுகளிலேயே அதுதான் ரொம்ப மதிப்பு குறைந்த காசாக இருந்தது. அதை வைத்து, உணவுக்காக மலிவு விலைக்கு விற்கப்பட்ட பறவைகளில் ஒன்றான சிட்டுக்குருவியைக்கூட வாங்க முடியாது. ஆமாம், ஒரு சிட்டுக்குருவியைக்கூட வாங்க முடியாது!

18. ஏழை விதவை போட்ட காணிக்கையைப் பற்றி மாற்கு 12:43, 44-ல் இயேசு என்ன சொன்னார்?

18 மாற்கு 12:43, 44-ஐ வாசியுங்கள். அந்த ஏழை விதவை செய்த விஷயம், இயேசுவின் மனதை ஆழமாகத் தொடுகிறது. அதனால், சீஷர்களைக் கூப்பிடுகிறார். “மற்ற எல்லாரும் போட்டதைவிட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்” என்று சொல்கிறார். பிறகு, “அவர்கள் எல்லாரும் [முக்கியமாக, பணக்காரர்கள்] தங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் போட்டார்கள்; ஆனால், இவள் தனக்குத் தேவையிருந்தும், தன்னிடமிருந்த எல்லாவற்றையும், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள்” என்று சொல்கிறார். தன்னை யெகோவா பார்த்துக்கொள்வார் என்ற முழு நம்பிக்கை இருந்ததால்தான் தன்னிடமிருந்த கடைசி காசையும் அவள் காணிக்கைப் பெட்டியில் போட்டுவிட்டாள்.—சங். 26:3.

யெகோவாவுக்குத் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறவர்களை, இயேசு மாதிரியே நீங்களும் பாராட்டுங்கள் (பாராக்கள் 19-20) *

19. ஏழை விதவையிடமிருந்து நாம் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

19 கற்றுக்கொண்ட விஷயங்களின்படி செய்யுங்கள். ‘அந்த ஏழை விதவைய பத்தி இயேசு சொன்ன விஷயத்துல இருந்து நான் என்ன கத்துக்கலாம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றுதான் அந்த விதவை ஆசைப்பட்டிருப்பாள். இருந்தாலும், அப்போதைக்கு அவளால் என்ன முடியுமோ அதைச் செய்தாள். அதை யெகோவா உயர்வாக நினைத்தார் என்பது இயேசுவுக்கு தெரியும். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நம்மால் முடிந்ததை எல்லாம் யெகோவாவுக்குக் கொடுக்கும்போது, அதாவது முழு இதயத்தோடும் முழு மனதோடும் அவருக்கு சேவை செய்யும்போது, அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். (மத். 22:37; கொலோ. 3:23) அப்படியென்றால், அவரை வணங்குவதற்காக, அதாவது ஊழியத்துக்கும் கூட்டங்களுக்கும் போவது உட்பட வழிபாடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களைச் செய்வதற்காக, எந்தளவு நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்துகிறோம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

20. ஏழை விதவையைப் பற்றிய பதிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின்படி எப்படிச் செய்யலாம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

20 ஏழை விதவையைப் பற்றிய பதிவிலிருந்து முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொண்டோம். கற்றுக்கொண்டதன்படி எப்படிச் செய்யலாம்? ‘யெகோவாவுக்கு அதிகமா செய்ய முடியலயே’ என்று நினைத்து யாராவது சோர்ந்துபோயிருக்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, ‘முன்ன மாதிரி ஊழியம் செய்ய முடியலயே’ என்று நினைத்து வயதான சகோதரி ஒருவர் குற்ற உணர்வில் புழுங்கலாம். ‘நான் எதுக்குமே லாயக்கு இல்ல’ என்று நினைத்தும் அவர் வேதனைப்படலாம். தீராத வியாதியில் கஷ்டப்படுகிற ஒரு சகோதரர், ‘எல்லா கூட்டங்களுக்கும் போக முடியலயே’ என்று நினைத்து சோர்ந்துபோயிருக்கலாம். இப்படிப்பட்டவர்களிடம், “பலப்படுத்துகிற” நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள். (எபே. 4:29) ஏழை விதவையைப் பற்றிய பதிவிலிருந்து கற்றுக்கொண்ட நல்ல பாடங்களை அவர்களிடம் சொல்லுங்கள். நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது, யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார் என்பதை நம் வார்த்தைகள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும். (நீதி. 15:23; 1 தெ. 5:11) முடிந்ததை அவர்கள் செய்யும்போது, அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், அவர்களைப் பாராட்டுங்கள். இப்படிச் செய்யும்போது, இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம்.

21. என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் முடிவெடுத்து இருக்கிறீர்கள்?

21 சுவிசேஷ புத்தகங்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி நிறைய விவரங்களைச் சொல்கின்றன. அவர் மாதிரியே நடந்துகொள்வதற்கு உதவுகின்றன. அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கின்றன. இதற்காக, நாம் ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும்! இந்தப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்து படிப்பதற்கு அல்லது குடும்ப வழிபாட்டில் கலந்து பேசுவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம், இல்லையா? இவற்றிலிருந்து நமக்குப் பிரயோஜனம் கிடைக்க வேண்டும் என்றால், படிக்கிற விஷயங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதையும், படித்த விஷயங்களின்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. இயேசு என்ன செய்தாரோ அதன்படி நாமும் செய்ய வேண்டும். அதோடு, அவர் சொன்ன வார்த்தைகளையும் கவனமாகக் கேட்க வேண்டும். அவர் இறப்பதற்கு முன்பு சொன்ன சில வார்த்தைகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 109 யெகோவாவின் தலைமகனை வாழ்த்தி வரவேற்போம்!

^ பாரா. 5 உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவின் ‘அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற’ வேண்டும். அவருடைய “அடிச்சுவடுகளை” பின்பற்றுவது என்றால் என்ன? அவருடைய அடிச்சுவடுகளை ஏன் பின்பற்ற வேண்டும்? அதை எப்படிச் செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

^ பாரா. 60 படவிளக்கம்: ஏழை விதவையைப் பற்றிய பதிவை ஒரு சகோதரி ஆழமாக யோசிக்கிறார். பிறகு, இன்னொரு வயதான சகோதரியை மனதாரப் பாராட்டுகிறார்.