Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 17

நீங்கள் யெகோவாவின் கண்மணிகள்!

நீங்கள் யெகோவாவின் கண்மணிகள்!

“யெகோவா தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.”—சங். 149:4.

பாட்டு 18 தேவனின் பற்றுமாறா அன்பு

இந்தக் கட்டுரையில்... *

நம் ஒவ்வொருவரையும் பார்த்து யெகோவா “சந்தோஷப்படுகிறார்” (பாரா 1)

1. தன்னுடைய மக்களிடம் யெகோவா எதைப் பார்க்கிறார்?

யெகோவா “தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.” (சங். 149:4) இதை நினைக்கும்போது நமக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! நம்மிடம் இருக்கிற நல்ல குணங்களை அவர் பார்க்கிறார். அவரிடம் நாம் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வோம் என்பது அவருக்குத் தெரியும். அதனால், அவர் பக்கம் நம்மை ஈர்க்கிறார். நாம் தொடர்ந்து அவருக்கு உண்மையாக இருந்தால், என்றென்றைக்கும் அவர் நமக்கு நண்பராக இருப்பார்.—யோவா. 6:44.

2. யெகோவா தங்களை நேசிக்கிறார் என்பதை ஏன் சிலரால் நம்ப முடிவதில்லை?

2 ‘பூமியில இருக்கற தன்னோட குடும்பத்த யெகோவா நேசிக்கிறார்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, அந்த குடும்பத்துல இருக்கற என்னை அவரு நேசிப்பாரா?’ என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். இந்த மாதிரி சந்தேகம் வருவதற்கு எது காரணமாக இருக்கலாம்? ரேச்சல் * என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். குழந்தைப் பருவத்தில் அவருக்குச் சில கசப்பான அனுபவங்கள் இருந்தன. “ஞானஸ்நானம் எடுத்தப்பவும் பயனியர் ஊழியத்த ஆரம்பிச்சப்பவும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, 15 வருஷத்துக்கு அப்புறம் பழைய ஞாபகங்கள் என்னை பாடாய்படுத்துச்சு. அதனால, என்மேல அன்பு காட்றத யெகோவா நிறுத்திக்கிட்டாரோனு தோணுச்சு. அவரோட அன்புக்கு நான் தகுதியில்லாதவனு நினைச்சேன்” என்று அவர் சொல்கிறார். பயனியராக இருக்கிற ஆஷா என்ற சகோதரிக்கும் குழந்தைப் பருவத்தில் சில கசப்பான அனுபவங்கள் இருந்தன. “நான் யெகோவாவ சந்தோஷப்படுத்தணும்னு ஆசப்பட்டேன். அதனால, என் வாழ்க்கைய அவருக்கு அர்ப்பணிச்சேன். ஆனா, அவர் என்னை நேசிக்கவே மாட்டாருங்குற எண்ணம் என் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு” என்று அவர் சொல்கிறார்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

3 ரேச்சல், ஆஷா மாதிரி நீங்களும் யெகோவாவை ரொம்ப நேசிக்கலாம். ஆனால், அவர் உங்களை நேசிக்கிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அவர் உங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் ஏன் நம்ப வேண்டும்? அவர் உங்களை நேசிப்பதில்லை என்ற எண்ணம் உங்களை வாட்டும்போது அதை எப்படிச் சமாளிக்கலாம்? இதற்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

சந்தேகம் ஆபத்தானது

4. சந்தேகம் ஏன் ஆபத்தானது?

4 அன்பு ரொம்ப வலிமையானது. நம்மைச் செயல்பட வைக்கிற சக்தி அதற்கு இருக்கிறது. யெகோவாவின் அன்பும் ஆதரவும் எப்போதுமே நமக்கு இருக்கிறது என்பதை நாம் உறுதியாக நம்பினால், வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அவருக்கு நாம் முழு மனதோடு சேவை செய்வோம். ஆனால், யெகோவா நம்மை நேசிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்பட்டால், நம்முடைய “பலம் குறைந்துவிடும்.” (நீதி. 24:10) நாம் சோர்ந்துவிடுவோம். அப்போது, சாத்தான் நம்மைச் சுலபமாகக் கவ்விக்கொண்டு போய்விடுவான்.—எபே. 6:16.

5. யெகோவா தங்களை நேசிக்கிறாரா என்ற சந்தேகம் வந்ததால் சிலருக்கு என்ன நடந்திருக்கிறது?

5 யெகோவா தங்களை நேசிக்கிறாரா என்ற சந்தேகம் இன்றைக்கும் சில சகோதர சகோதரிகளுக்கு வந்திருக்கிறது. அதனால், யெகோவாவுக்கும் அவர்களுக்கும் இருக்கிற பந்தம் பலவீனமாகியிருக்கிறது. சிலர் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம். மூப்பராக இருக்கிற சகோதரர் ஜேம்ஸ் இப்படிச் சொல்கிறார்: “நான் பெத்தேல்ல சேவை செஞ்சிட்டிருந்தேன். வேற மொழி சபையோட சேர்ந்து சந்தோஷமா ஊழியமும் பண்ணிக்கிட்டிருந்தேன். ஆனா, நான் செய்றத எல்லாம் யெகோவா ஏத்துக்குவாராங்குற சந்தேகம் எனக்கு வர ஆரம்பிச்சுது. ஒரு கட்டத்துல என்னோட ஜெபத்தகூட யெகோவா கேட்கறாரான்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.” முழுநேர சேவை செய்கிற எஸ்தர் இப்படிச் சொல்கிறார்: “நம்ம மேல யெகோவாவுக்கு அன்பு இருக்குதான்னு சந்தேகப்பட ஆரம்பிச்சோம்னா எதுவுமே செய்யாம அப்படியே உட்கார்ந்துடுவோம். யெகோவாவோட வழிபாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்லயும் ஆர்வம் குறைஞ்சுடும். அவருக்கு சேவ செய்றதுல கிடைக்கிற சந்தோஷமும் பறிபோயிடும்.” ஒழுங்கான பயனியராகவும் மூப்பராகவும் சேவை செய்கிற மைக்கேல் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவுக்கு உங்க மேலே அக்கறையில்லன்னு நினைக்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்க கொஞ்சம் கொஞ்சமா அவர விட்டு விலகிப்போயிடுவீங்க.”

6. மனதுக்குள் சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

6 சந்தேகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த அனுபவங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். அதனால், யெகோவா நம்மை நேசிக்கிறாரா என்ற சந்தேகம் நம் மனதுக்குள் முளைத்தவுடனே அதைக் கிள்ளி எறிந்துவிட வேண்டும். இப்படிச் செய்வதற்கும், ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் நம்முடைய இதயத்தையும் மனதையும் பாதுகாப்பதற்கும்’ யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். (பிலி. 4:6, 7) உங்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற நிறைய சகோதர சகோதரிகள் இந்த எண்ணங்களோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அந்தக் காலத்தில் வாழ்ந்த ஊழியர்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. இப்போது, அப்போஸ்தலன் பவுலைப் பற்றி பார்க்கலாம்.

பவுலிடமிருந்து பாடம்

7. பவுலுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன?

7 நிறைய பொறுப்புகள் இருப்பதால் சில சமயங்களில் நீங்கள் திக்குமுக்காடிப்போகலாம். அதோடு, உடல்நல பிரச்சினைகள் உங்களைப் பாடாய்ப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், உங்களுடைய பாவ இயல்பை நினைத்தும் நீங்கள் நொந்துபோகலாம். அப்போஸ்தலன் பவுலுக்கும் இந்த எல்லா பிரச்சினைகளும் இருந்தன. உதாரணத்துக்கு, ஒரு சபையை நினைத்தல்ல, “எல்லா சபைகளையும்” நினைத்து அவர் கவலைப்பட்டார். (2 கொ. 11:23-28) அதோடு, “என் உடலில் ஒரு முள் குத்திக்கொண்டிருக்கிறது” என்று சொன்னார். ஒருவேளை, உடல்நல பிரச்சினையைப் பற்றி அவர் சொல்லியிருக்கலாம். அந்தப் பிரச்சினை சரியாக வேண்டும் என்று அவர் ஏங்கினார் (2 கொ. 12:7-10) தன்னுடைய பாவ இயல்போடு போராடுவதை நினைத்தும் அவர் நொந்துபோனார். அதனால், “எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்!” என்று சொன்னார்.—ரோ. 7:21-24.

8. தன்னுடைய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு பவுலுக்கு எது உதவியது?

8 இவ்வளவு சோதனைகளும் கஷ்டங்களும் பவுலைப் போட்டு நெருக்கினாலும் தொடர்ந்து அவர் யெகோவாவுக்கு சேவை செய்தார். அவரால் எப்படி முடிந்தது? மீட்புவிலைமீது அவர் அவ்வளவு விசுவாசம் வைத்திருந்தார்! அதோடு, தன்மேல் “விசுவாசம் வைக்கிற” எல்லாருக்கும் ‘முடிவில்லாத வாழ்வு’ கிடைக்கும் என்று இயேசு கொடுத்த வாக்குறுதியை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். (யோவா. 3:16; ரோ. 6:23). அதோடு, ஒருவர் எவ்வளவு மோசமான பாவம் செய்திருந்தாலும் உண்மையிலேயே மனம் திருந்தினால், அவரை யெகோவா மன்னிப்பார் என்பதையும் தெரிந்துவைத்திருந்தார்.—சங். 86:5.

9. கலாத்தியர் 2:20-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

9 தன்மேல் யெகோவாவுக்கு அன்பு இருக்கிறது என்பதில் பவுலுக்குத் துளிகூட சந்தேகம் இருக்கவில்லை. ஏனென்றால், தனக்காகவும் யெகோவா இயேசுவை அனுப்பினார் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (கலாத்தியர் 2:20-ஐ வாசியுங்கள்.) வசனத்தின் கடைசியில் பவுல் என்ன சொல்கிறார் என்று கவனித்தீர்களா? “கடவுளுடைய மகன் . . . என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்” என்று சொல்கிறார். ‘சகோதர சகோதரிகள்மேல வேணும்னா கடவுள் அன்பு காட்டுவாரு. ஆனா நான் ஒரு பாவி, என்மேல எல்லாம் அவர் அன்பு காட்ட மாட்டாரு’ என்று பவுல் நினைக்கவில்லை. சொல்லப்போனால், ‘நாம் பாவிகளாக இருந்தபோதே [கிறிஸ்து] நமக்காக உயிரைக் கொடுத்தார்’ என்று ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் சொன்னார். (ரோ. 5:8) கடவுளுடைய அன்புக்கு எல்லையே இல்லை!

10. ரோமர் 8:38, 39-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

10 ரோமர் 8:38, 39-ஐ வாசியுங்கள். கடவுளுடைய அன்பு எவ்வளவு வலிமையானது என்பது பவுலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், எதுவுமே “கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று” அவர் எழுதினார். இஸ்ரவேலர்களிடம் யெகோவா எவ்வளவு பொறுமையாக இருந்தார் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதோடு, தன்மேல் யெகோவா எவ்வளவு இரக்கம் காட்டினார் என்பதையும் யோசித்துப் பார்த்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பவுல் தன்னுடைய மனதுக்குள் இப்படிச் சொல்லியிருக்கலாம்: ‘எனக்காக தன்னோட மகனையே யெகோவா பலியா கொடுத்திருக்கிறப்போ, அவருக்கு என்மேல அன்பு இருக்கா இல்லையான்னு நான் ஏன் சந்தேகப்படணும்?’—ரோ. 8:32.

நீங்கள் முன்பு செய்த தவறுகளை யெகோவா மனதில் வைத்துக்கொண்டே இருக்க மாட்டார். இப்போது என்ன செய்கிறீர்கள், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் அவருக்கு முக்கியம் (பாரா 11) *

11. ஒன்று தீமோத்தேயு 1:12-15-ல் சொல்லியிருக்கிற தவறுகளை பவுல் செய்திருந்தாலும், தன்மேல் கடவுளுக்கு அன்பு இருக்கிறது என்பதை அவர் எப்படி உறுதியாக நம்பினார்?

11 ஒன்று தீமோத்தேயு 1:12-15-ஐ வாசியுங்கள். முன்பு செய்த பாவங்களை நினைத்து சில சமயங்களில் பவுல் துவண்டுபோயிருக்கலாம். அதனால்தான், தன்னை “பெரும் பாவி” என்று சொன்னார். அவர் சத்தியத்துக்கு வருவதற்கு முன்பு, கிறிஸ்தவர்கள்மீது பயங்கர வெறியோடு இருந்ததால் நகரம் நகரமாகப் போய் அவர்களைக் கொடுமைப்படுத்தினார். சிலரை சிறையில் அடைத்தார். சிலருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். (அப். 26:10, 11) இப்படி மரண தண்டனை கிடைத்தவர்களுடைய பிள்ளைகளை பவுல் சந்தித்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பழைய காரியங்களை நினைத்து அவர் வேதனைப்பட்டிருப்பார். ஆனால், இப்போது எதையுமே அவரால் மாற்ற முடியாதே! கிறிஸ்து தனக்காக இறந்தார் என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார். அதனால், “கடவுளுடைய அளவற்ற கருணையால் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்” என்று சொன்னார். அதாவது, ‘அப்போஸ்தலனாக இருக்கிறேன்’ என்று சொன்னார். (1 கொ. 15:3, 10) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? கிறிஸ்து உங்களுக்காக இறந்தார் என்பதையும் யெகோவாவிடம் நீங்கள் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள அவர் வழி செய்திருக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். (அப். 3:19) நீங்கள் யெகோவாவின் சாட்சி ஆவதற்கு முன்பும், ஆனதற்குப் பின்பும் என்னென்ன தப்பெல்லாம் செய்தீர்கள் என்பதை யெகோவா மனதில் வைத்துக்கொண்டே இருப்பதில்லை. ஏனென்றால், நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் அவருக்கு முக்கியம்.—ஏசா. 1:18.

12. நாம் எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணம் வரும்போது 1 யோவான் 3:20 எப்படி ஆறுதலாக இருக்கும்?

12 இயேசு உங்களுடைய பாவங்களுக்காக இறந்தார் என்ற விஷயத்தை யோசிக்கும்போது, ‘அதுக்கெல்லாம் எனக்கு தகுதியே இல்ல’ என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுடைய இதயம் உங்களை அப்படி நினைக்க வைக்கலாம். நீங்கள் எதற்குமே லாயக்கில்லாதவர் என்றும், யாருடைய அன்புக்கும் தகுதி இல்லாதவர் என்றும் அது உங்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கலாம். (1 யோவான் 3:20-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்போது, “கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார்” என்பதை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய இதயத்தைத் துளைக்கிற இந்த மாதிரியான எண்ணங்களைவிட, கடவுளுடைய அன்பும் மன்னிக்கிற குணமும் ரொம்ப ரொம்ப வலிமையானது. அதனால், கடவுள் நம்மை எப்படிப் பார்க்கிறாரோ அதே மாதிரி நாமும் நம்மைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதற்கு, பைபிளைத் தவறாமல் படிக்க வேண்டும். அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகளோடு நன்றாகப் பழக வேண்டும். இதையெல்லாம் செய்வது ஏன் அவ்வளவு முக்கியம்?

நம் உதவிக்கு—பைபிள், ஜெபம், நண்பர்கள்

13. பைபிளைப் படிப்பது நமக்கு எப்படி உதவுகிறது? (“ இவர்களுக்கு பைபிள் எப்படி உதவுகிறது?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

13 தினமும் பைபிளைப் படியுங்கள். அப்படிப் படிக்கும்போது யெகோவாவின் அழகான குணங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வீர்கள். அவர் உங்கள்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். தினமும் பைபிளைப் படித்து, அதை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, கெட்ட எண்ணங்களை ‘சரிசெய்ய’ முடியும், தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியும். (2 தீ. 3:16) மூப்பராக சேவை செய்கிற கெவின் சில சமயங்களில் தன்னைப் பற்றி தாழ்வாக நினைப்பாராம். அந்த மாதிரியான எண்ணங்கள் அவ்வப்போது அவரைக் கஷ்டப்படுத்துமாம். “103-ம் சங்கீதத்த படிச்சு அத பத்தி ஆழமா யோசிக்கிறப்போ, என்னோட எண்ணங்கள சரிசெஞ்சுக்க முடியுது. யெகோவா உண்மையிலயே என்னை பத்தி என்ன நினைக்கிறாருங்கிறத புரிஞ்சுக்க முடியுது” என்று அவர் சொல்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்த எஸ்தர் இப்படிச் சொல்கிறார்: “ஒவ்வொரு நாளோட கடைசிலயும் யெகோவாவோட எண்ணங்கள பத்தி யோசிக்கிறதுக்கு நான் நேரம் ஒதுக்குறேன். அதனால, எனக்கு மன அமைதி கிடைக்குது, என் விசுவாசமும் பலமாகுது.”

14. ஜெபம் எப்படி நமக்கு உதவும்?

14 அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். (1 தெ. 5:17) ஒருவருடைய உயிர் நண்பராக நாம் இருக்க வேண்டுமென்றால் அவரிடம் அடிக்கடி பேச வேண்டும், மனம் திறந்து பேச வேண்டும். நாம் யெகோவாவின் நண்பராக இருப்பதற்கும் இதைத்தான் செய்ய வேண்டும். நம்முடைய உணர்வுகளையும் யோசனைகளையும் கவலைகளையும் ஜெபத்தில் கொட்டும்போது, அவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறோம். அதோடு, அவர் நம்மை நேசிக்கிறார் என்பதைப் புரிந்துவைத்திருப்பதையும் காட்டுகிறோம். (சங். 94:17-19; 1 யோ. 5:14, 15) நாம் ஏற்கெனவே பார்த்த ஆஷா இப்படிச் சொல்கிறார்: “நான் ஜெபம் பண்றப்போ, அன்னைக்கு என்னெல்லாம் நடந்துச்சோ அத சொல்றதோட நிறுத்திக்க மாட்டேன். மனசுல இருக்கிற எல்லாத்தையும் சொல்வேன். இப்படி பண்றப்போ யெகோவாவ ஏதோ கம்பெனி மேனேஜர் மாதிரி பார்க்காம அன்பான அப்பா மாதிரி பார்க்க முடியுது.”—“ இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

15. நம்மேல் அக்கறை இருப்பதை யெகோவா எப்படிக் காட்டியிருக்கிறார்?

15 நண்பர்களைவிட்டு விலகிவிடாதீர்கள். ஏனென்றால், அவர்கள் யெகோவா கொடுத்த பரிசு. (யாக். 1:17) நம்மேல் அக்கறை இருப்பதால்தான் இந்த அருமையான சகோதர சகோதரிகளை யெகோவா கொடுத்திருக்கிறார். நம்மேல் இவர்கள் ‘எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறார்கள்.’ (நீதி. 17:17) இந்த அன்பை அப்போஸ்தலன் பவுலும் அனுபவித்தார். கொலோசெயர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சில சகோதர சகோதரிகள் அவருக்கு “மிகவும் ஆறுதலாக” இருந்ததாகச் சொன்னார். (கொலோ. 4:10, 11) இயேசு கிறிஸ்துவுக்கும் மற்றவர்களுடைய உதவி தேவைப்பட்டது. தேவதூதர்களும் மற்ற நண்பர்களும் செய்த உதவிக்கு அவர் ரொம்ப நன்றியோடு இருந்தார்.—லூக். 22:28, 43.

16. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு நல்ல நண்பர்கள் எப்படி உதவியாக இருப்பார்கள்?

16 உங்களுக்கு உதவி தேவைப்படும்போது யெகோவா கொடுத்திருக்கிற நண்பர்களிடம் போகிறீர்களா? அவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்கிறீர்களா? முதிர்ச்சியுள்ள நண்பர்களிடம் உங்களுடைய பிரச்சினையைப் பற்றிச் சொல்வதால் உங்களுக்கு விசுவாசம் இல்லை என்று ஆகிவிடாது. அப்படிச் சொல்வது உங்களுக்குப் பாதுகாப்புதான். நாம் ஏற்கெனவே பார்த்த ஜேம்ஸ் இப்படிச் சொல்கிறார்: “முதிர்ச்சியுள்ளவங்ககிட்ட நெருக்கமான நட்பு வெச்சுக்கிட்டது என் வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்திருக்கு. சோர்வான எண்ணங்கள் என்னை திணறடிச்சப்ப நான் சொன்னத அவங்க பொறுமையா கேட்டாங்க. என்மேல அவங்க எவ்வளவு பாசம் வெச்சிருக்காங்க அப்படிங்குறதயும் காட்டுனாங்க. யெகோவா என்மேல வெச்சிருக்கிற அன்பயும் அக்கறயயும் நான் அவங்க வழியா புரிஞ்சுகிட்டேன்.” யெகோவாவோடு நெருக்கமான நட்பு வைத்திருப்பவர்களிடம் நாம் நட்பு வைத்துக்கொள்வதும், அதை விட்டுவிடாமல் இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறதா?

யெகோவாவின் அன்பில் நிலைத்திருங்கள்

17-18. யார் சொல்வதை நாம் கேட்க வேண்டும், ஏன்?

17 சரியானதைச் செய்வது இன்றைக்கு ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்தப் போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டும் என்று சாத்தான் ஆசைப்படுகிறான். யெகோவாவுக்கு நம்மேல் அன்பில்லை என்றும், அவர் நம்மைக் காப்பாற்றுகிற அளவுக்கு நமக்குத் தகுதியில்லை என்றும் அவன் சொல்கிறான். அவன் சொல்வது சுத்தப் பொய்!

18 யெகோவா உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்! நீங்கள் எல்லாரும் அவருக்குக் கண்மணிகள் மாதிரி! அவர் சொன்னபடியெல்லாம் நீங்கள் நடந்துகொள்ளும்போது, இயேசு மாதிரியே நீங்களும் என்றென்றைக்கும் அவருடைய “அன்பில் நிலைத்திருப்பீர்கள்.” (யோவா. 15:10) அதனால், சாத்தான் சொல்வதைக் காதிலேயே போட்டுக்கொள்ளாதீர்கள். உங்கள் இதயம் சொல்வதையும் கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவா சொல்வதைக் கேளுங்கள். உங்களிடம் இருக்கிற நல்லதைத்தான் அவர் பார்க்கிறார். யெகோவா “தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்” என்பதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். அந்த மக்களில் நீங்களும் ஒருவர்!

பாட்டு 130 உயிர் ஓர் அற்புதமே

^ பாரா. 5 ‘என்னை போய் யெகோவா நேசிப்பாரா?’ என்று சில சகோதர சகோதரிகள் நினைக்கலாம். ஆனால், யெகோவா நம் ஒவ்வொருவரையும் ரொம்ப நேசிக்கிறார். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதோடு, இந்த மாதிரி சந்தேகப்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 2 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 67 படவிளக்கம்: ஒருகாலத்தில் பவுல் கிறிஸ்தவர்களைச் சிறையில் போட்டார். ஆனால், இயேசு கிறிஸ்து தனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டதற்குப் பிறகு, அவர் மாறிவிட்டார். மற்ற கிறிஸ்தவர்களைப் பலப்படுத்தினார். அந்தக் கிறிஸ்தவர்களில் சிலர், அவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்.