Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, சங்கீதம் 22:1-ல் இருக்கிற தாவீதின் வார்த்தைகளை இயேசு ஏன் சொன்னார்?

மத்தேயு 27:46-ல், “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?” என்று இயேசு கேட்டார். இறப்பதற்கு முன்பு அவர் பேசிய கடைசி வார்த்தைகளில் இதுவும் ஒன்று. இப்படிச் சொன்னதன் மூலம் சங்கீதம் 22:1-ல் இருக்கிற தாவீதின் வார்த்தைகளை இயேசு நிறைவேற்றினார். (மாற். 15:34) ஏதோ ஏமாற்றத்தாலோ, விசுவாசம் குறைந்ததாலோ இயேசு இந்த வார்த்தைகளை சொல்லவில்லை. ஏனென்றால், அவர் சாக வேண்டியிருந்ததற்கான காரணத்தைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். அதோடு, மனப்பூர்வமாக தன்னுடைய உயிரைக் கொடுக்கவும் அவர் தயாராக இருந்தார். (மத். 16:21; 20:28) அதுமட்டுமல்ல, தான் சாகப்போகிற அந்தச் சமயத்தில் தன்னைச் சுற்றி போட்டிருந்த ‘வேலியை’ யெகோவா நீக்கிவிடுவார் என்பதும் அவருக்குத் தெரியும். (யோபு 1:10) எப்பேர்ப்பட்ட சித்திரவதையை அனுபவித்து சாக வேண்டியிருந்தாலும் கடைசிவரைக்கும் உண்மையோடு இருக்க முடியும் என்பதை இயேசு நிரூபிப்பதற்காக, யெகோவா இந்தச் சூழ்நிலையை அனுமதித்தார்.—மாற். 14:35, 36.

அப்படியென்றால், சங்கீதத்தில் இருக்கிற அந்த வார்த்தைகளை இயேசு ஏன் சொல்லியிருக்கலாம்? நமக்கு உறுதியாகத் தெரியாது. ஒருவேளை இந்தந்த விஷயங்களெல்லாம் அவர் மனதில் இருந்திருக்கலாம்: *

யெகோவா தலையிட்டு தன்னைக் காப்பாற்ற மாட்டார் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக இயேசு இந்த வார்த்தைகளை சொல்லியிருப்பாரா? யெகோவாவின் உதவி இல்லாமலேயே இயேசு மீட்புவிலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு மனிதனாக, அவர் ‘எல்லாருக்காகவும் மரணமடைய’ வேண்டியிருந்தது.—எபி. 2:9.

சுற்றியிருந்தவர்களுக்கு முழு சங்கீதமும் ஞாபகத்துக்கு வர வேண்டும் என்பதற்காக இயேசு அதிலிருக்கிற சில வார்த்தைகளைச் சொன்னாரா? நிறைய சங்கீதங்களை மனப்பாடம் செய்து வைப்பது அந்தக் காலத்திலிருந்த யூதர்களுடைய வழக்கமாக இருந்தது. அதனால், ஏதோவொரு சங்கீதத்தில் இருக்கிற ஒரு வசனத்தைச் சொன்னாலே அதிலிருக்கிற எல்லா வசனங்களும் அவர்களுக்கு ஞாபகம் வந்துவிடும். ஒருவேளை இதை மனதில் வைத்து இயேசு சொல்லியிருந்தார் என்றால், அவருடைய மரணத்தைப் பற்றி அந்தச் சங்கீதத்தில் சொல்லியிருந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் அவருடைய சீஷர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். (சங். 22:7, 8, 15, 16, 18, 24) அதோடு, யெகோவாவின் அரசாட்சி இந்தப் பூமி முழுவதும் நடக்கும் என்று அந்தச் சங்கீதத்தின் கடைசியில் சொல்லியிருப்பதும் அவர்கள் ஞாபகத்துக்கு வந்திருக்கும்.—சங். 22:27-31.

தன்மேல் எந்தத் தப்பும் இல்லையென்று காட்டுவதற்காக இயேசு இதைச் சொல்லியிருப்பாரா? சட்டவிரோதமாக, அவசர அவசரமாக, ராத்திரியோடு ராத்திரியாக, இயேசுவை விசாரணை செய்தார்கள். (மத். 26:65, 66) அவர் தெய்வ நிந்தனை செய்ததாகச் சொல்லி பழி சுமத்தினார்கள். (மத். 26:59; மாற். 14:56-59) மரண தண்டனை கொடுக்கிற அளவுக்கு தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்பதைக் காட்டுவதற்காக, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்” என்று அவர் கேட்டிருக்கலாம்.

தாவீது கஷ்டப்படுவதற்கு யெகோவா விட்டுவிட்டாலும் யெகோவாவின் தயவை அவர் இழந்துவிடவில்லை என்பதை ஞாபகப்படுத்துவதற்காக இயேசு அப்படிச் சொல்லியிருப்பாரா? விசுவாசம் இல்லாததால் தாவீது அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. ஏனென்றால், அந்தக் கேள்வியைக் கேட்டதற்குப் பிறகு, யெகோவா தன்னைக் காப்பாற்றுவார் என்று அவர் நம்பிக்கையோடு சொன்னார். யெகோவாவும் தொடர்ந்து அவரை ஆசீர்வதித்தார். (சங். 22:23, 24, 27) அதே மாதிரி, ‘தாவீதின் மகனான’ இயேசுவை சித்திரவதைக் கம்பத்தில் வேதனைப்படுவதற்கு யெகோவா விட்டுவிட்டார் என்பது உண்மைதான். அதற்காக யெகோவாவின் தயவை அவர் இழந்துவிட்டார் என்று அர்த்தம் கிடையாது.—மத். 21:9.

தன்னுடைய உத்தமத்தை தானே நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, தனக்குக் கொடுத்திருந்த பாதுகாப்பை யெகோவா விலக்கிவிட்ட துக்கத்தில் இயேசு அப்படிச் சொல்லியிருப்பாரா? தன்னுடைய மகன் சித்திரவதைப்பட்டு சாக வேண்டும் என்று யெகோவா நினைக்கவில்லை. ஆதாம் ஏவாள் கீழ்ப்படியாமல் போனதற்குப் பின்புதான் மீட்புவிலை என்ற ஏற்பாடு தேவைப்பட்டது. இயேசு எந்தத் தப்பும் செய்யவில்லை. ஆனால் சாத்தான் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்வதற்காகவும் மனிதரை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்காகவும் அவர் சித்திரவதைப்பட்டு சாக வேண்டியிருந்தது. (மாற். 8:31; 1 பே. 2:21-24) இதையெல்லாம் யெகோவாவின் பாதுகாப்பு இல்லாமல் செய்ய வேண்டியிருந்தது. சொல்லப்போனால், அந்தச் சமயத்தில்தான், இயேசுவின் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக கொஞ்ச நேரத்துக்கு யெகோவாவின் பாதுகாப்பு அவருக்கு இல்லாமலி​ருந்தது.

சித்திரவதைப்பட்டு சாவதற்கு யெகோவா ஏன் தன்னை விட்டுவிட்டார் என்பதற்கான காரணத்தை சீஷர்களுக்குப் புரிய வைப்பதற்காக இயேசு அப்படிச் சொல்லியிருப்பாரா? * குற்றவாளியாக சித்திரவதைக் கம்பத்தில் தான் சாவது நிறைய பேருக்குத் தடைக்கல்லாக இருக்கும் என்று இயேசுவுக்குத் தெரியும். (1 கொ. 1:23) ஆனால், அவர் அப்படிச் சாவதற்கு உண்மையான காரணம் என்னவென்பதை சீஷர்கள் தெரிந்துகொண்டால் அவரை குற்றவாளியாகப் பார்க்க மாட்டார்கள், மீட்பராகத்தான் பார்ப்பார்கள்.—கலா. 3:13, 14.

சங்கீதத்தில் இருக்கிற வார்த்தைகளை இயேசு எதற்காக சொல்லியிருந்தாலும் சரி, ஒன்று மட்டும் நிச்சயம்! அதாவது, தான் சித்திரவதைக் கம்பத்தில் சாவதன் மூலம் யெகோவாவின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும் என்பதை அவர் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். இந்த வார்த்தைகளை சொன்ன கொஞ்ச நேரத்திலேயே “முடித்துவிட்டேன்” என்று சொன்னார். (யோவா. 19:30; லூக். 22:37) அவர் ஏன் அப்படிச் சொன்னார்? எதற்காக பூமிக்கு வந்தாரோ அதையெல்லாம் செய்து முடித்துவிட்டதால் அப்படிச் சொன்னார். அதுவும், கொஞ்ச நேரத்துக்கு யெகோவாவின் பாதுகாப்பு இல்லாமலேயே எல்லாவற்றையும் செய்து முடித்தார். அதுமட்டுமல்ல, தன்னைப் பற்றி “மோசேயின் திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும்” எழுதப்பட்ட எல்லா விஷயங்களையும் நிறைவேற்றினார்.—லூக். 24:44.

^ பாரா. 2 இந்தப் பத்திரிகையில் இருக்கிற, “இயேசுவின் கடைசி வார்த்தைகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்” என்ற கட்டுரையில் பாராக்கள் 9, 10-ஐ பாருங்கள்.

^ பாரா. 4 இயேசு ஊழியம் செய்த சமயத்தில் அவ்வப்போது சில விஷயங்களை சொன்னார், சில கேள்விகளைக் கேட்டார். அவர் என்ன நினைக்கிறார் என்பதைச் சொல்வதற்காக அவர் அப்படிச் செய்யவில்லை. சீஷர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அப்படிச் செய்தார்.—மாற். 7:24-27; யோவா. 6:1-5; அக்டோபர் 15, 2010 காவற்கோபுரம் பக்கங்கள் 4-5-ஐப் பாருங்கள்.