படிப்புக் கட்டுரை 15
இயேசு செய்த அற்புதங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
‘அவர் தேசம் முழுவதும் போய் நன்மைகள் செய்தார், . . . எல்லாரையும் குணப்படுத்தினார்.’—அப். 10:38.
பாட்டு 13 ஏசு நமக்கு முன்மாதிரி
இந்தக் கட்டுரையில்... a
1. இயேசு எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் முதல் அற்புதத்தைச் செய்தார்?
அது கி.பி. 29-ன் பிற்பகுதி. இயேசு தன் ஊழியத்தை அப்போதுதான் ஆரம்பித்திருந்தார். அவரும் அவருடைய அம்மா மரியாளும் அவருடைய சில சீஷர்களும், கானா ஊரில் நடந்த ஒரு கல்யாணத்துக்குப் போனார்கள். இயேசுவின் சொந்த ஊரான நாசரேத்துக்கு வடக்குப் பக்கத்தில் அந்த ஊர் இருந்தது. கல்யாண வீட்டுக்காரர்கள் மரியாளுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள். அதனால், விருந்தாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கு அநேகமாக மரியாளும் கூடமாட உதவி செய்திருப்பார். ஆனால், திடீரென்று ஒரு பிரச்சினை வந்தது. விருந்தில் பரிமாற வேண்டிய திராட்சமது தீர்ந்துபோய்விட்டது! இந்தப் பிரச்சினையை உடனே சரிசெய்யவில்லை என்றால், அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களுக்கும் மாப்பிள்ளை பெண்ணுக்கும் ரொம்ப அவமானமாகப் போயிருக்கும். b ஒருவேளை, அவர்கள் எதிர்பார்த்ததைவிட நிறைய பேர் அந்த விருந்துக்கு வந்திருக்கலாம். அதனால், மரியாள் உடனடியாக இயேசுவிடம் வந்து, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சமது இல்லை” என்று சொன்னார். (யோவா. 2:1-3) அப்போது இயேசு ஒரு பெரிய அற்புதத்தைச் செய்தார். தண்ணீரை ‘தரமான திராட்சமதுவாக’ மாற்றினார்!—யோவா. 2:9, 10.
2-3. (அ) என்ன மாதிரியான அற்புதங்களை இயேசு செய்தார்? (ஆ) இயேசு செய்த அற்புதங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை?
2 ஊழியம் செய்த காலத்தில் இயேசு இன்னும் நிறைய அற்புதங்களைச் செய்தார். c கடவுள் கொடுத்த சக்தியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உதவினார். உதாரணத்துக்கு, ஒருசமயம் 5,000 ஆண்களுக்கும், இன்னொரு சமயம் 4,000 ஆண்களுக்கும் உணவு கொடுத்தார். அந்த ஆண்கள் தவிர, பெண்களும் பிள்ளைகளும்கூட அங்கு இருந்தார்கள். அப்படியென்றால், மொத்தம் 27,000-க்கும் அதிகமானவர்களுக்கு அவர் உணவு கொடுத்திருப்பார்! (மத். 14:15-21; 15:32-38) அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், நிறைய நோயாளிகளைக்கூட இயேசு குணப்படுத்தினார். (மத். 14:14; 15:30, 31) இப்படி, இயேசு அற்புதமாகக் குணப்படுத்தியபோதும் உணவு கொடுத்தபோதும் மக்கள் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார்கள்!
3 இயேசு செய்த அற்புதங்களிலிருந்து நம்மால் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். விசுவாசத்தைப் பலப்படுத்தும் அப்படிப்பட்ட சில பாடங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இயேசு அற்புதங்கள் செய்தபோது காட்டிய மனத்தாழ்மையையும் கரிசனையையும் நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.
யெகோவாவையும் இயேசுவையும் பற்றி நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
4. இயேசு செய்த அற்புதங்களிலிருந்து நாம் யாரைப் பற்றிக்கூட பாடம் கற்றுக்கொள்கிறோம்?
4 இயேசு செய்த அற்புதங்களிலிருந்து அவரைப் பற்றி மட்டுமல்ல, யெகோவாவைப் பற்றியும் நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், அற்புதங்களைச் செய்ய இயேசுவுக்கு சக்தி கொடுத்ததே யெகோவாதான். அப்போஸ்தலர் 10:38 இப்படிச் சொல்கிறது: “இயேசுவைக் கடவுள் தன்னுடைய சக்தியாலும் வல்லமையாலும் அபிஷேகம் செய்ததையும், கடவுள் அவரோடு இருந்ததால் அவர் தேசம் முழுவதும் போய் நன்மைகள் செய்ததையும், பிசாசின் கொடுமைக்கு ஆளான எல்லாரையும் குணப்படுத்தியதையும் பற்றிப் பேசப்பட்டதெல்லாம் உங்களுக்கே தெரியும்.” இயேசு என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி, அவருடைய அப்பாவின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அப்படியே வெளிக்காட்டினார்; அவர் அற்புதங்கள் செய்தபோதும் அப்படித்தான்! (யோவா. 14:9) அவருடைய அற்புதங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மூன்று பாடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
5. அற்புதங்களைச் செய்ய எது இயேசுவைத் தூண்டியது? (மத்தேயு 20:30-34)
5 ஒன்று: இயேசுவும் யெகோவாவும் நம்மை உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள். இயேசு பூமியில் இருந்தபோது மக்கள்மேல் ரொம்ப அன்பு வைத்திருந்ததைக் காட்டினார். எப்படி? அவர்களுக்கு இருந்த பிரச்சினைகளை அற்புதமாகத் தீர்த்து வைத்தார். ஒரு சந்தர்ப்பத்தில், பார்வையில்லாத இரண்டு பேர் இயேசுவிடம் வந்து பார்வை தரச் சொல்லிக் கெஞ்சினார்கள். (மத்தேயு 20:30-34-ஐ வாசியுங்கள்.) இயேசு அவர்களைப் பார்த்து “மனம் உருகி” அவர்களைக் குணப்படுத்தினார். “மனம் உருகி” என்பதற்கான கிரேக்க வினைச்சொல், நம் உடலுக்குள்ளிருந்து, அதுவும் அடிஆழத்திலிருந்து, பெருக்கெடுக்கும் கரிசனையைக் குறிக்கிறது. மக்கள்மேல் இருந்த அன்பினால்தான் இந்தளவுக்கு இயேசு கரிசனை காட்டினார். அதே கரிசனையால்தான் பசியில் வாடியவர்களுக்கு அவர் உணவு கொடுத்தார், தொழுநோயாளி ஒருவரைக் குணப்படுத்தினார். (மத். 15:32; மாற். 1:41) ‘கரிசனையுள்ள’ கடவுளான யெகோவாவும் அவருடைய மகனும் நம்மை ரொம்ப நேசிக்கிறார்கள்... நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து துடித்துப்போகிறார்கள்... என்பதில் சந்தேகமே இல்லை. (லூக். 1:77; 1 பே. 5:7) உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அவர்கள் எந்தளவுக்கு ஏங்கிக்கொண்டிருப்பார்கள், இல்லையா?
6. இயேசுவுக்கு எதையெல்லாம் செய்ய கடவுள் சக்தி கொடுத்திருக்கிறார்?
6 இரண்டு: மனிதர்களுக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யும் சக்தியை இயேசுவுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். இயேசு அற்புதங்களைச் செய்வதன் மூலம், நம்மால் சரிசெய்ய முடியாத பிரச்சினைகளை தன்னால் சரிசெய்ய முடியும் என்று காட்டினார். உதாரணத்துக்கு, நம் பிரச்சினைகளுக்கு ஆணிவேராக இருக்கும் பாவத்திலிருந்தும், அதனால் வரும் வியாதியிலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தி அவருக்கு இருக்கிறது என்பதைக் காட்டினார். (மத். 9:1-6; ரோ. 5:12, 18, 19) “எல்லா விதமான” நோய்களையும் இயேசுவால் குணப்படுத்த முடியும், இறந்தவர்களைக்கூட அவரால் உயிரோடு எழுப்ப முடியும் என்று அவர் செய்த அற்புதங்கள் காட்டுகின்றன. (மத். 4:23; யோவா. 11:43, 44) அதுமட்டுமல்ல, பயங்கரமான புயல்காற்றை அடக்குவதற்கும் பேய்களை அடக்குவதற்கும்கூட இயேசுவுக்குச் சக்தி இருக்கிறது. (மாற். 4:37-39; லூக். 8:2) தன்னுடைய மகனுக்கு யெகோவா எவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது நமக்குப் புதுத்தெம்பு கிடைத்த மாதிரி இருக்கிறது, இல்லையா?
7-8. (அ) இயேசு செய்த அற்புதங்கள் நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கின்றன? (ஆ) புதிய உலகத்தில் எந்த அற்புதத்தைப் பார்க்க நீங்கள் ஆசையாகக் காத்திருக்கிறீர்கள்?
7 மூன்று: கடவுளுடைய அரசாங்கத்தில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நாம் நிச்சயம் நம்பலாம். பூமியில் இயேசு அற்புதங்களைச் செய்தது, பரலோகத்தில் அவர் ராஜாவாக ஆட்சி செய்யும்போது இன்னும் பெரிய அளவில் அற்புதங்களைச் செய்வார் என்பதைக் காட்டுகிறது. இயேசுவின் ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! நாம் பரிபூரண ஆரோக்கியத்தோடு இருப்போம். ஏனென்றால், நம்மைப் பாடாய்ப் படுத்துகிற எல்லா நோய்நொடிகளையும் இயேசு நீக்கிவிடுவார். (ஏசா. 33:24; 35:5, 6; வெளி. 21:3, 4) நாம் பசியில் வாட மாட்டோம், இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவிக்கவும் மாட்டோம். (ஏசா. 25:6; மாற். 4:41) இறந்துபோன நம் அன்பானவர்கள் ‘நினைவுக் கல்லறைகளிலிருந்து’ வெளியே வரும்போது ஆனந்தக் கண்ணீரோடு அவர்களை வரவேற்போம். (யோவா. 5:28, 29) புதிய உலகத்தில் எந்த அற்புதத்தைப் பார்க்க நீங்கள் ஆசையாகக் காத்திருக்கிறீர்கள்?
8 இயேசு அற்புதங்களைச் செய்தபோது ரொம்ப மனத்தாழ்மையாக, கரிசனையாக நடந்துகொண்டார். அந்தக் குணங்களை நாமும் வளர்த்துக்கொள்வது முக்கியம். இயேசு அந்தக் குணங்களைக் காட்டிய இரண்டு சந்தர்ப்பங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். முதலில், கானா ஊர் கல்யாணத்தில் நடந்த சம்பவத்தைப் பார்க்கலாம்.
மனத்தாழ்மை பற்றிய பாடம்
9. கானா ஊர் கல்யாண விருந்தில் இயேசு ஏன் அற்புதத்தைச் செய்தார்? (யோவான் 2:6-10)
9 யோவான் 2:6-10-ஐ வாசியுங்கள். கல்யாண விருந்தில் திராட்சமது தீர்ந்துபோனபோது எதையாவது செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இயேசுவுக்கு இருந்ததா? இல்லை! மேசியா அற்புதமாகத் திராட்சமது கொடுப்பார் என்று எந்தத் தீர்க்கதரிசனமும் சொல்லவில்லை. ஆனால், உங்களுடைய கல்யாணத்தில் சாப்பாடு தீர்ந்துபோனால் எவ்வளவு அவமானமாக இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்த மாதிரி ஒரு அவமானம் அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களுக்கும் மாப்பிள்ளை பெண்ணுக்கும் வரக் கூடாது என்று இயேசு நினைத்திருப்பார். அதனால்தான், அவர்களுக்குக் கரிசனை காட்டினார். முதல் பாராவில் பார்த்த மாதிரி அவர் ஒரு அற்புதத்தைச் செய்தார். கிட்டத்தட்ட 390 லிட்டர் தண்ணீரை ரொம்ப ரொம்பத் தரமான திராட்சமதுவாக மாற்றினார்! இயேசு ஏன் இவ்வளவு தாராளமாகக் கொடுத்தார்? ஒருவேளை, மீதியிருக்கும் திராட்சமது பிற்காலத்தில் அவர்களுக்கு உதவும் என்று நினைத்திருப்பார். இல்லையென்றால், மாப்பிள்ளையும் பெண்ணும் அதை விற்று அவர்களுடைய செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசித்திருப்பார். இயேசு செய்த உதவிக்காக அந்த மாப்பிள்ளையும் பெண்ணும் எவ்வளவு நன்றியோடு இருந்திருப்பார்கள், இல்லையா?
10. இந்த அற்புதத்தைப் பற்றி யோவான் 2-வது அதிகாரத்தில் என்ன சில முக்கியமான விவரங்கள் இருக்கின்றன? (படத்தையும் பாருங்கள்.)
10 இந்த அற்புதத்தைப் பற்றி யோவான் 2-வது அதிகாரத்தில் சொல்லியிருக்கிற சில முக்கியமான விவரங்களைக் கவனிக்கலாம். இயேசு அவராகவே போய் அங்கிருக்கும் கல்ஜாடிகளில் தண்ணீரை நிரப்பவில்லை என்பதைக் கவனித்தீர்களா? மக்களுடைய கவனம் அவர் பக்கம் திரும்ப வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால், பரிமாறுகிறவர்களைக் கூப்பிட்டு அந்த ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார். (வசனம் 6, 7) அதே மாதிரி, தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றிய பின்பு அவராகவே அதை எடுத்துக்கொண்டுபோய் விருந்தை மேற்பார்வை செய்தவரிடம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, பரிமாறுகிறவர்களையே அதைக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னார். (வசனம் 8) அவர் ஒரு கப் திராட்சமதுவை எடுத்து விருந்தாளிகள் எல்லார் முன்பும் அதைக் காட்டி, ‘நான் செய்த திராட்சமதுவை எல்லாரும் குடித்துப் பாருங்கள்!’ என்று பெருமை அடிக்கவில்லை.
11. இயேசு செய்த அற்புதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 இயேசு செய்த அற்புதத்திலிருந்து, மனத்தாழ்மை காட்டுவது அவசியம் என்ற பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். ஒரு பெரிய அற்புதத்தைச் செய்ததாக இயேசு பெருமையடிக்கவில்லை. சொல்லப்போனால், அவர் எந்தச் சமயத்திலுமே, ‘நான் இதைச் செய்தேன்.. அதைச் செய்தேன்..’ என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடு எல்லா புகழையும் மகிமையையும் யெகோவாவுக்கே கொடுத்தார். (யோவா. 5:19, 30; 8:28) இயேசு மாதிரியே நாமும் மனத்தாழ்மையோடு நடந்துகொண்டால், நாம் செய்த எதைப் பற்றியும் பெருமையடிக்க மாட்டோம். யெகோவாவின் சேவையில் நாம் எவ்வளவு செய்தாலும் சரி, நாம்தான் எதையோ சாதித்ததுபோல் பெருமையடிக்காமல், யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுவோம். அவருக்குச் சேவை செய்ய நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு ஒரு பெரிய பாக்கியம்! (எரே. 9:23, 24) அவருடைய உதவி இல்லாமல் நம்மால் எதையாவது சாதிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது! அதனால், யெகோவாவுக்குச் சேர வேண்டிய புகழை நாம் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்.—1 கொ. 1:26-31.
12. வேறு என்ன விதத்தில் நாம் இயேசு மாதிரியே மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளலாம்? உதாரணம் சொல்லுங்கள்.
12 இன்னொரு விதத்திலும் நாம் இயேசு மாதிரியே மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளலாம். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு இளம் உதவி ஊழியர் முதல் தடவையாக பொதுப் பேச்சைக் கொடுக்கப்போகிறார். அந்தப் பேச்சைத் தயாரிக்க ஒரு மூப்பர் நிறைய நேரம் செலவு செய்து அவருக்கு உதவுகிறார். கடைசியில், அந்த உதவி ஊழியர் அருமையாகப் பேச்சு கொடுக்கிறார். சபையில் இருக்கும் எல்லாருக்கும் அது ரொம்பப் பிடித்துப்போய்விடுகிறது. கூட்டம் முடிந்த பிறகு ஒருவர் அந்த மூப்பரிடம் வந்து, ‘அந்த பிரதர் சூப்பராக டாக் கொடுத்தார், இல்லையா?’ என்று சொல்கிறார். ‘ஆமாம், நான்தான் மணிக்கணக்காக அவரோடு உட்கார்ந்து அந்த டாக்கைத் தயாரிக்க உதவி செய்தேன்’ என்று அந்த மூப்பர் சொல்வதற்கு ஏதாவது அவசியம் இருக்கிறதா? இல்லையென்றால், ‘ஆமாம், சூப்பராக டாக் கொடுத்தார். அவரை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது’ என்று மனத்தாழ்மையோடு சொல்வது சரியாக இருக்குமா? நாம் மனத்தாழ்மையாக இருந்தால், மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைச் சொல்லிக்காட்டி நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று நினைக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, ‘நான் செய்ததையெல்லாம் யெகோவா பார்க்கிறார், அவர் சந்தோஷப்படுவார், அதுவே எனக்குப் போதும்’ என்று நினைத்துத் திருப்தியோடு இருப்போம். (மத்தேயு 6:2-4-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்; எபி. 13:16) இயேசு மாதிரியே நாம் மனத்தாழ்மையாக நடந்துகொள்ளும்போது யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.—1 பே. 5:6.
கரிசனையைப் பற்றிய பாடம்
13. நாயீன் ஊருக்குப் பக்கத்தில் இயேசு எதைப் பார்த்தார், அதன்பின் என்ன செய்தார்? (லூக்கா 7:11-15)
13 லூக்கா 7:11-15-ஐ வாசியுங்கள். இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். கலிலேயா பகுதியில் இருந்த நாயீன் என்ற ஊருக்கு இயேசு போனார். அது சூனேம் என்ற ஊருக்குப் பக்கத்தில் இருந்தது. சூனேமில்தான் கிட்டத்தட்ட 900 வருஷங்களுக்குமுன் எலிசா தீர்க்கதரிசி ஒரு பெண்ணின் மகனை உயிரோடு எழுப்பியிருந்தார். (2 ரா. 4:32-37) இயேசு நாயீன் ஊர் வாசலுக்கு வந்தபோது, இறந்துபோன ஒருவனைச் சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அது நெஞ்சை உருக்கும் ஒரு காட்சியாக இருந்தது. ஏனென்றால், இறந்துபோனவன் ஒரு விதவையின் ஒரே பிள்ளை. அந்த ஊரில் இருந்தவர்கள் அந்த விதவையை அம்போவென்று விடாமல் ஒரு பெரிய கூட்டமாக அவளோடு சேர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். இயேசு அங்கு போய், சோகத்தில் மூழ்கியிருந்த அந்த விதவைக்காக ஒரு பெரிய அற்புதத்தைச் செய்தார். அவளுடைய மகனை உயிரோடு கொண்டுவந்தார். இயேசு செய்ததாக சுவிசேஷப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மூன்று உயிர்த்தெழுதல்களில் இதுதான் முதல் உயிர்த்தெழுதல்.
14. இந்தப் பதிவைப் பற்றி லூக்கா 7-வது அதிகாரத்தில் என்ன முக்கியமான விவரங்கள் இருக்கின்றன? (படத்தையும் பாருங்கள்.)
14 இந்தப் பதிவைப் பற்றி லூக்கா 7-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விவரங்களைக் கவனிக்கலாம். இயேசு முதலில் அந்த விதவையை ‘பார்த்தார்.’ அதன் பிறகு அவளை நினைத்து ‘மனம் உருகினார்.’ (வசனம் 13) அப்படியென்றால், அவர் பார்த்த விஷயம்தான், அதாவது இறந்துபோன மகனுக்கு முன்னால் அந்த விதவை கதறி அழுதுகொண்டே போன காட்சிதான், அவருடைய மனதை உருக வைத்தது. இயேசு அவளைப் பார்த்து ‘ஐயோ பாவம்!’ என்று நினைத்ததோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை, அவள்மேல் கரிசனையையும் காட்டினார். அவளிடம் பேசினார், “அழாதே” என்று சொல்லி ஆறுதல்படுத்தினார். அதன் பிறகு, அந்த விதவைக்காக அவரே முன்வந்து ஒரு விஷயத்தைச் செய்தார். இறந்துபோன மகனை உயிரோடு எழுப்பி, ‘அவளிடம் ஒப்படைத்தார்.’—வசனங்கள் 14, 15.
15. இயேசு செய்த அற்புதத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
15 இயேசு செய்த இந்த அற்புதத்திலிருந்து, துக்கத்தில் இருக்கிறவர்களுக்கு நாம் கரிசனை காட்ட வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். இறந்துபோனவர்களை இயேசு மாதிரியே நம்மால் உயிரோடு கொண்டுவர முடியாது என்பது உண்மைதான். ஆனால், துக்கத்தில் தவிக்கிறவர்களுக்கு நம்மால் அவரைப் போலவே கரிசனை காட்ட முடியும். எப்படி? முதலில், அவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பிறகு, நாமாகவே முன்வந்து அவர்களுக்குக் கரிசனை காட்ட வேண்டும். அதைச் செய்வதற்கு, அவர்களிடம் ஆறுதலாகப் பேச வேண்டும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். d (நீதி. 17:17; 2 கொ. 1:3, 4; 1 பே. 3:8) நாம் சொல்கிற ஒருசில வார்த்தைகளும், செய்கிற சின்னச் சின்ன விஷயங்களும்கூட அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தெரியும்!
16. படத்தில் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறபடி, மகளை இழந்த ஒரு சகோதரியுடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
16 ஒரு அனுபவத்தைப் பார்க்கலாம். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு, சபையில் பாட்டு பாடிக்கொண்டு இருந்தபோது ஒரு சகோதரி அழுவதை இன்னொரு சகோதரி கவனித்தார். அந்தப் பாட்டு உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி இருந்ததால், சமீபத்தில் இறந்த மகளை நினைத்து அவர் அழுதுகொண்டிருந்தார். அதைக் கவனித்த அந்த இன்னொரு சகோதரி உடனே அவரிடம் போய், அவர் தோள்மேல் கைபோட்டு அவரோடு சேர்ந்து பாடினார். அழுதுகொண்டிருந்த அந்தச் சகோதரி பிறகு என்ன சொன்னார் தெரியுமா? “இனி சகோதர சகோதரிகள்தான் எனக்கு எல்லாமே என்று தோன்றியது!” என்று சொன்னார். அவர் அன்றைக்குக் கூட்டத்துக்குப் போனதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்பட்டார். “ராஜ்ய மன்றத்தில்தான் நமக்குத் தேவையான உதவி கிடைக்கிறது” என்று சொன்னார். துக்கத்தில் ‘மனம் நொந்துபோனவர்களுக்கு’ கரிசனை காட்ட நாம் செய்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட யெகோவா கவனிக்கிறார்... அதை உயர்வாக மதிக்கிறார்... என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—சங். 34:18.
விசுவாசத்தைப் பலப்படுத்தும் படிப்பு
17. இந்தக் கட்டுரையில் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம்?
17 இயேசு செய்த அற்புதங்களைப் பற்றி சுவிசேஷப் புத்தகங்களில் ஆராய்ச்சி செய்து படிக்கும்போது, நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். யெகோவாவும் இயேசுவும் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள்... மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க இயேசுவுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது... கடவுளுடைய அரசாங்கத்தில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நாம் ஏன் முழுமையாக நம்பலாம்... என்பதையெல்லாம் அவை காட்டுகின்றன. அவற்றை நாம் அலசிப் பார்க்கும்போது, இயேசு காட்டிய குணங்களை எப்படியெல்லாம் காட்டலாம் என்று யோசிக்க வேண்டும். இயேசு செய்த மற்ற அற்புதங்களைப் பற்றி உங்களுடைய தனிப்பட்ட படிப்பில் அல்லது குடும்ப வழிபாட்டில் நீங்கள் ஏன் ஆராய்ச்சி செய்து படிக்கக் கூடாது? அதிலிருந்து என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று பாருங்கள். அதை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். அப்படி நீங்கள் சொல்லும்போது, நிறைய பேரை உங்களால் உற்சாகப்படுத்த முடியும்.—ரோ. 1:11, 12.
18. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
18 இயேசுவுடைய ஊழிய காலத்தின் கடைசி பகுதியில், மூன்றாவதாக அவர் ஒருவரை உயிரோடு எழுப்பினார். சுவிசேஷப் பதிவுகளின்படி இதுதான் அவர் செய்த கடைசி உயிர்த்தெழுதல். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், அவருடைய நெருங்கிய நண்பரை அவர் உயிரோடு எழுப்பினார், அதுவும் அந்த நண்பர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு! அந்த அற்புதத்திலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? உயிர்த்தெழுதல் நம்பிக்கையின்மேல் நமக்கு இருக்கிற விசுவாசத்தை எப்படி இன்னும் பலப்படுத்தலாம்? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரையில் பதில் பார்ப்போம்.
பாட்டு 20 அருமை மகனையே தந்தீர்கள்!
a இயேசு செய்த அற்புதங்களைப் பற்றிப் படிக்கும்போது நாம் புல்லரித்துப்போகிறோம்! உதாரணமாக, அவர் புயல்காற்றை அடக்கினார், நோயாளிகளைக் குணப்படுத்தினார், இறந்தவர்களைக்கூட உயிரோடு எழுப்பினார். வெறுமனே சுவாரஸ்யமாக இருப்பதற்காக அல்ல, நல்ல பாடங்களைக் கற்றுத்தருவதற்குத்தான் இதெல்லாம் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயேசு செய்த சில அற்புதங்களிலிருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். நாம் வளர்க்க வேண்டிய குணங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
b ஒரு பைபிள் அறிஞர் இப்படிச் சொன்னார்: “பைபிள் நாடுகளில், விருந்தாளிகளை உபசரிப்பது ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்பட்டது. அதுவும், விருந்தாளிகளுக்குப் போதும் போதும் என்ற அளவுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. முக்கியமாகக் கல்யாண வீடுகளில், உண்மையான உபசரிப்புக்கு அழகே தடபுடலான விருந்து வைப்பதுதான் என்று நம்பப்பட்டது.”
c இயேசு 30-க்கும் அதிகமான அற்புதங்களைச் செய்ததாக சுவிசேஷ புத்தகங்கள் சொல்கின்றன. உண்மையில், அவர் செய்த அற்புதங்கள் அதைவிடப் பல மடங்கு அதிகம்! ஏனென்றால், ஒரு சந்தர்ப்பத்திலேயே அவர் எத்தனையோ பேரைக் குணப்படுத்தியிருக்கிறார். ஒரு தடவை, “ஊரே” அவரிடம் திரண்டு வந்தது, “நிறைய பேரை அவர் குணமாக்கினார்.”—மாற். 1:32-34.
d துக்கத்தில் தவிக்கிறவர்களை ஆறுதல்படுத்த என்ன சொல்லலாம் அல்லது என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ள, காவற்கோபுரம் 2016 பொது இதழ் எண் 3-ல் பக்கம் 6-7-ல் இருக்கிற, “துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
e பட விளக்கம்: மாப்பிள்ளையும் பெண்ணும், அவர்களுடைய விருந்தாளிகளும் தரமான திராட்சமதுவைச் சந்தோஷமாகக் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னால் இயேசு நின்றுகொண்டிருக்கிறார்.