Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 16

“உன் சகோதரன் எழுந்திருப்பான்”!

“உன் சகோதரன் எழுந்திருப்பான்”!

“இயேசு [மார்த்தாளிடம்], ‘உன் சகோதரன் எழுந்திருப்பான்’ என்று சொன்னார்.”—யோவா. 11:23.

பாட்டு 151 அவர் அழைப்பார்

இந்தக் கட்டுரையில்... a

1. உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருந்ததை மாத்யூ எப்படிக் காட்டினான்?

 மாத்யூ என்ற சின்னப் பையனுக்கு ஒரு பயங்கரமான நோய் இருந்தது. அதனால், அவனுக்கு நிறைய ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது. அவனுக்கு ஏழு வயது இருக்கும்போது, அவனும் அவனுடைய அம்மா அப்பாவும் JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மறுபடியும் உயிரோடு வருகிறவர்களை வரவேற்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒரு இசை வீடியோ காட்டப்பட்டது. b அதைப் பார்த்த பிறகு, மாத்யூ அவனுடைய அம்மா அப்பாவிடம் போய், அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, “மம்மி, டாடி... நான் இறந்துபோய்விட்டால்கூட மறுபடியும் உயிரோடு வருவேன். அதனால், நீங்கள் கவலைப்படாதீர்கள். எனக்காகக் காத்திருங்கள்” என்று சொன்னான். உயிர்த்தெழுதலில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்ததைப் பார்த்தபோது அவனுடைய அம்மா அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும், இல்லையா?

2-3. உயிர்த்தெழுதல் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளைப் பற்றி நாம் அவ்வப்போது யோசித்துப் பார்ப்பது ஏன் நல்லது?

2 உயிர்த்தெழுதல் சம்பந்தமாக பைபிளில் இருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி அவ்வப்போது நாம் யோசித்துப் பார்ப்பது ரொம்ப நல்லது. (யோவா. 5:28, 29) ஏன்? ஏனென்றால், உயிருக்கு ஆபத்தான ஏதாவது ஒரு வியாதி திடீரென்று நமக்கு வந்துவிடலாம். இல்லையென்றால், நாம் நேசிக்கும் ஒருவரைத் திடீரென்று மரணத்தில் பறிகொடுத்துவிடலாம். (பிர. 9:11; யாக். 4:13, 14) இதுபோன்ற பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு உதவி செய்யும். (1 தெ. 4:13) யெகோவா அப்பா நம்மை ரொம்ப நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்... நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார்... என்று பைபிள் சொல்கிறது. (லூக். 12:7) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நமக்கு இருக்கும் அதே சுபாவத்தோடும் நினைவுகளோடும் நம்மை மறுபடியும் உயிரோடு கொண்டுவர வேண்டுமென்றால், யெகோவா நம்மை எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! அதுமட்டுமல்ல, நாம் இறந்துபோனாலும் யெகோவா மறுபடியும் நம்மை உயிரோடு கொண்டுவந்து என்றென்றும் வாழ வைக்கப்போகிறார் என்றால், நம்மேல் அவருக்கு எவ்வளவு அன்பு!

3 முதலில், நாம் ஏன் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதன் பிறகு, நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஒரு பைபிள் பதிவைப் பற்றிப் பார்ப்போம். அந்தப் பதிவில்தான், முக்கிய வசனத்தில் நாம் பார்த்த மாதிரி, “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று இயேசு சொன்னார். (யோவா. 11:23) கடைசியாக, உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு இன்னும் நிஜமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நாம் ஏன் நம்பலாம்?

4. ஒருவர் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நாம் நம்ப வேண்டுமென்றால், எதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்? உதாரணம் சொல்லுங்கள்.

4 ஒருவர் கொடுக்கும் வாக்குறுதியை நாம் எப்போது நம்புவோம்? அதை நிறைவேற்ற அவருக்கு ஆசையும் சக்தியும் [அதாவது, திறமையும்] இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும்போது அவருடைய வாக்குறுதியை நம்புவோம். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு புயலில் உங்களுடைய வீடு சின்னாபின்னமாகிவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். உங்கள் நண்பர் உங்களிடம் வந்து, ‘நான் உங்கள் வீட்டைத் திரும்பக் கட்டிக்கொடுக்கிறேன்’ என்று சொல்கிறார். அவர் சும்மா சொல்லவில்லை, உண்மையிலேயே உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையில்தான் சொல்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உதவி செய்வதற்கான திறமையும் அவருக்கு இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அவர் திறமையான ஒரு கட்டிடக் கலைஞர். தேவையான கருவிகளைக்கூட அவர் வைத்திருக்கிறார். அதனால், அவருடைய வாக்கை அவர் காப்பாற்றுவார் என்று நீங்கள் நம்புகிறீர்கள். அப்படியென்றால், உயிர்த்தெழுதல் சம்பந்தமாகக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியைப் பற்றி என்ன சொல்லலாம்? அதை நிறைவேற்றுவதற்கான ஆசையும் சக்தியும் அவருக்கு உண்மையிலேயே இருக்கிறதா?

5-6. இறந்தவர்களை உயிரோடு கொண்டுவர யெகோவாவுக்கு ஆசை இருக்கிறது என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

5 இறந்தவர்களை உயிரோடு கொண்டுவர வேண்டுமென்ற ஆசை யெகோவாவுக்கு இருக்கிறதா? கண்டிப்பாக, அதில் சந்தேகமே இல்லை! உயிர்த்தெழுதல் சம்பந்தமாக பைபிளில் நிறைய தடவை தன்னுடைய வாக்குறுதிகளை அவர் பதிவு செய்திருக்கிறார். (ஏசா. 26:19; ஓசி. 13:14; வெளி. 20:11-13) யெகோவா ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார். (யோசு. 23:14) சொல்லப்போனால், இறந்தவர்களை உயிரோடு கொண்டுவர அவர் ஆசையாகக் காத்திருக்கிறார். ஏன் அப்படிச் சொல்லலாம்?

6 யோபு என்ன சொன்னார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் இறந்துபோனாலும் அவரை மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவா ஏக்கமாக இருப்பார் என்று யோபு சொன்னார். (யோபு 14:14, 15) இறந்துபோன தன் ஊழியர்கள் எல்லாரையுமே மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவா ஏக்கமாக இருக்கிறார். அவர்களை உயிரோடு கொண்டுவந்து ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ வைக்க யெகோவா ஆசையாகக் காத்திருக்கிறார். ஆனால், யெகோவாவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பே கிடைக்காமல் இறந்துபோன கோடிக்கணக்கான ஜனங்களுக்கு என்ன ஆகும்? நம்முடைய அன்பான கடவுள், அவர்களையும் உயிரோடு கொண்டுவர ஆசைப்படுகிறார். (அப். 24:15) அவருடைய நண்பராகும் வாய்ப்பை... இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பை... அவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (யோவா. 3:16) இறந்தவர்களை உயிரோடு எழுப்ப யெகோவா ஆசைப்படுகிறார் என்பதில் சந்தேகமே இல்லை!

7-8. இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் சக்தி யெகோவாவுக்கு இருக்கிறது என்று நாம் ஏன் நம்பலாம்?

7 இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் சக்தியும் யெகோவாவுக்கு இருக்கிறதா? கண்டிப்பாக! அவர்தான் “சர்வவல்லமையுள்ளவர்.” (வெளி. 1:8) அதனால், எப்படிப்பட்ட எதிரியையும் ஒழித்துக்கட்ட அவருக்குச் சக்தி இருக்கிறது, அது மரணமாகவே இருந்தாலும் சரி! (1 கொ. 15:26) இதைத் தெரிந்துகொள்வது, நமக்கு ஆறுதலையும் தெம்பையும் கொடுக்கிறது. எம்மா அர்னால்ட் என்ற சகோதரியின் அனுபவத்தை இப்போது கவனிக்கலாம். இரண்டாவது உலகப் போரின்போது, அவருடைய விசுவாசத்துக்கும் அவருடைய குடும்பத்தில் இருந்தவர்களின் விசுவாசத்துக்கும் பயங்கரமான சோதனைகள் வந்தன. அன்பானவர்கள் சிலர் நாசி சித்திரவதை முகாம்களில் இறந்துபோனபோது, எம்மா தன் மகளை ஆறுதல்படுத்துவதற்காக அவளிடம், “மனிதர்கள் மரணத்தின் பிடியிலிருந்து என்றைக்குமே தப்பிக்க முடியாது என்றால், கடவுளைவிட மரணத்துக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது என்றாகிவிடும், இல்லையா?” என்று கேட்டார். உண்மையில், யெகோவாவின் சக்திக்கு முன்னால் வேறு எதுவுமே நிற்க முடியாது! உயிரை முதலாவதாக படைத்தவரே சர்வவல்லமையுள்ள யெகோவாதான், அப்படியிருக்கும்போது இறந்தவர்களுக்கு மறுபடியும் உயிர் கொடுப்பது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்குமா?

8 இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவாவினால் முடியும் என்று நாம் நம்புவதற்கு இன்னொரு காரணம்: அவருடைய ஞாபக சக்திக்கு அளவே இல்லை! அவர் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார். (ஏசா. 40:26) அதுமட்டுமல்ல, இறந்துபோனவர்களை அவர் ஞாபகம் வைத்திருக்கிறார். (யோபு 14:13; லூக். 20:37, 38) யாரையெல்லாம் உயிரோடு கொண்டுவரப் போகிறாரோ அவர்களைப் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அவரால் சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். அவர்களுடைய தோற்றம்... அவர்களுடைய சுபாவம்... வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்... அவர்களுடைய நினைவுகள்... போன்ற எல்லாவற்றையுமே அவரால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.

9. இறந்தவர்களை யெகோவா உயிரோடு கொண்டுவருவார் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

9 இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவதற்கான ஆசையும் சக்தியும் யெகோவாவுக்கு இருப்பதால், அதை அவர் கண்டிப்பாகச் செய்வார் என்று நாம் நம்பலாம். அவர் அதைச் செய்வார் என்று நாம் நம்புவதற்கு இன்னொரு காரணம்: அவர் அதை ஏற்கெனவே செய்திருக்கிறார்! பைபிள் காலங்களில், இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவதற்கு அவர் தன்னுடைய ஊழியர்களில் சிலருக்குச் சக்தி கொடுத்திருக்கிறார். அவர்களில் இயேசுவும் ஒருவர். இயேசு செய்த ஒரு உயிர்த்தெழுதலைப் பற்றி யோவான் 11-வது அதிகாரத்தில் நாம் படித்துப் பார்க்கலாம்.

இயேசுவின் நெருங்கிய நண்பர் இறந்துபோகிறார்

10. இயேசு யோர்தானுக்கு இன்னொரு பக்கம் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது பெத்தானியாவில் என்ன நடந்தது, அவர் என்ன செய்தார்? (யோவா. 11:1-3)

10 யோவான் 11:1-3-ஐ வாசியுங்கள். கி.பி. 32-ன் இறுதியில் பெத்தானியாவில் நடந்த ஒரு சம்பவத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த லாசருவும், அவருடைய சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் இயேசுவின் உயிர் நண்பர்களாக இருந்தார்கள். (லூக். 10:38-42) ஆனால் திடீரென்று, லாசருவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அவருடைய சகோதரிகளுக்கு ரொம்பக் கவலையாக இருந்தது. அவர்கள் உடனே ஆள் அனுப்பி, இயேசுவுக்கு அந்த விஷயத்தைச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இயேசு யோர்தானுக்கு இன்னொரு பக்கத்தில் இருந்தார்; பெத்தானியாவிலிருந்து அங்கு நடந்துபோக கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகும். (யோவா. 10:40) வருத்தமான விஷயம் என்னவென்றால், இயேசுவுக்குச் செய்தி போய்ச்சேருவதற்கு முன்பே லாசரு இறந்துவிட்டார். அந்த விஷயம் தெரிந்தும், இயேசு இன்னும் இரண்டு நாட்களுக்கு அங்கேயே இருந்தார். அதன் பிறகுதான் பெத்தானியாவுக்கு வந்தார். அவர் பெத்தானியாவுக்கு வந்த சமயத்தில், லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. இயேசு தன் நண்பர்களுக்கு உதவி செய்வதற்காகவும் கடவுளை மகிமைப்படுத்துவதற்காகவும் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தார்.—யோவா. 11:4, 6, 11, 17.

11. இந்தப் பதிவிலிருந்து, நட்பைப் பற்றி நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

11 இந்தப் பதிவிலிருந்து, நட்பைப் பற்றி நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: மரியாளும் மார்த்தாளும் இயேசுவுக்குச் செய்தி அனுப்பியபோது அவரை பெத்தானியாவுக்கு வரச் சொல்லிக் கூப்பிடவில்லை. அவருடைய பாசத்துக்குரிய நண்பர் உடம்பு முடியாமல் இருக்கிறார் என்ற விஷயத்தை மட்டும்தான் சொல்லி அனுப்பினார்கள். (யோவா. 11:3) இயேசு நினைத்திருந்தால், தூரத்திலிருந்தே லாசருவை உயிரோடு எழுப்பியிருக்கலாம். ஆனாலும், அவர் பெத்தானியாவுக்குப் போய் தன் நண்பர்களான மரியாளோடும் மார்த்தாளோடும் இருக்க முடிவு பண்ணினார். உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடிவந்து உதவி செய்யும் நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா? அப்படியென்றால், “கஷ்ட காலங்களில்” அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நீங்கள் நம்பிக்கையாக இருப்பீர்கள். (நீதி. 17:17) இயேசு மாதிரியே நாமும் மற்றவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு நண்பராக இருக்கலாம்! இப்போது நாம் மறுபடியும் அந்தப் பதிவுக்குப் போய், அடுத்ததாக என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

12. மார்த்தாளிடம் இயேசு என்ன வாக்குக் கொடுத்தார், அதை அவள் நம்பலாம் என்பதற்கு என்ன காரணத்தைச் சொன்னார்? (யோவான் 11:23-26)

12 யோவான் 11:23-26-ஐ வாசியுங்கள். இயேசு பெத்தானியாவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். உடனே ஓடோடிப் போய் அவரைப் பார்த்து, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள். (யோவா. 11:21) உண்மைதான், லாசரு இறப்பதற்கு முன்பே இயேசு அவரைக் குணப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதைவிட ஒரு பெரிய அற்புதத்தைச் செய்ய இயேசு நினைத்தார். “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று அவர் மார்த்தாளிடம் சொன்னார். இந்த வாக்கை மார்த்தாள் ஏன் நம்பலாம் என்பதற்கான காரணத்தையும் சொன்னார். “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொன்னார். அப்படியென்றால், இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் சக்தியைக் கடவுள் இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறார். முன்பு, ஒரு சின்னப் பெண் இறந்த கொஞ்ச நேரத்திலேயே இயேசு அவளை மறுபடியும் உயிரோடு கொண்டுவந்தார். அதேபோல், இறந்துபோன ஒரு இளைஞனையும் அவர் உயிரோடு கொண்டுவந்தார், அநேகமாக அவன் இறந்த அதே நாளில்! (லூக். 7:11-15; 8:49-55) ஆனால், இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்த ஒருவரை அவரால் மறுபடியும் உயிரோடு கொண்டுவர முடியுமா? இறந்தவரின் உடல் அழுக ஆரம்பித்திருக்குமே!

“லாசருவே, வெளியே வா!”

துக்கத்தில் இருந்த நண்பர்களைப் பார்த்தபோது இயேசுவுக்கும் துக்கம் தாங்க முடியவில்லை (பாராக்கள் 13-14)

13. யோவான் 11:32-35 சொல்கிறபடி, மரியாளும் மற்றவர்களும் அழுவதைப் பார்த்தபோது இயேசுவுக்கு எப்படி இருந்தது? (படத்தையும் பாருங்கள்.)

13 யோவான் 11:32-35-ஐ வாசியுங்கள். அடுத்ததாக என்ன நடந்ததென்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். லாசருவின் இன்னொரு சகோதரியான மரியாளும் இயேசுவைப் பார்க்கப் போனாள். அவளும் மார்த்தாளைப் போலவே இயேசுவிடம், “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள். மரியாளும் மற்றவர்களும் துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் கதறி அழுவதை இயேசு பார்த்தபோது அவருக்கும் துக்கம் தாங்க முடியவில்லை. அவருடைய நண்பர்களின் வேதனையைப் பார்த்தபோது, அவர்கள்மேல் இருந்த கரிசனையில் அவர் கண்ணீர்விட்டு அழுதார். அன்பானவர்களைப் பறிகொடுப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்று அவர் புரிந்துகொண்டார். அதனால், அவர்களுடைய சோகக் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்ற அவர் துடித்தார்.

14. மரியாள் அழுவதைப் பார்த்தபோது இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

14 மரியாள் அழுவதைப் பார்த்தபோது இயேசு நடந்துகொண்ட விதம், யெகோவா கரிசனையுள்ள கடவுள் என்பதைக் காட்டுகிறது. எப்படிச் சொல்லலாம்? போன கட்டுரையில் நாம் பார்த்தபடி, இயேசு தன் அப்பாவின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அப்படியே வெளிக்காட்டுகிறார். (யோவா. 12:45) துக்கத்தில் இருந்த நண்பர்களைப் பார்த்து இயேசு அவ்வளவு வேதனைப்பட்டார் என்றால், துக்கத்தில் நாம் கண்ணீர் விடுவதைப் பார்க்கும்போது யெகோவாவும் ரொம்ப வேதனைப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை! (சங். 56:8) இவ்வளவு பாசமும் கரிசனையும் காட்டுகிற நம் கடவுளிடம் இன்னும் நெருங்கிப்போக வேண்டுமென்று தோன்றுகிறது, இல்லையா?

இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் சக்தி தனக்கு இருப்பதை இயேசு காட்டினார் (பாராக்கள் 15-16)

15. யோவான் 11:41-44 சொல்கிறபடி, இயேசு லாசருவின் கல்லறைக்குப் போய் என்ன செய்தார்? (படத்தையும் பாருங்கள்.)

15 யோவான் 11:41-44-ஐ வாசியுங்கள். இயேசு லாசருவின் கல்லறைக்குப் போய் அங்கிருந்த கல்லை எடுத்துப்போடச் சொன்னார். அப்போது மார்த்தாள் அவரிடம், “எஜமானே, நான்கு நாளாகிவிட்டது, நாறுமே” என்று சொன்னாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைப் பார்ப்பாய் என்று உனக்குச் சொன்னேன், இல்லையா?” என்று சொன்னார். (யோவா. 11:39, 40) அதன்பின், இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, எல்லாருக்கும் முன்னால் ஜெபம் செய்தார். அவர் செய்யப்போகும் அற்புதத்துக்காக யெகோவாவுக்கு எல்லா புகழையும் கொடுத்தார். அதன் பிறகு, “லாசருவே, வெளியே வா!” என்று சத்தமாகக் கூப்பிட்டார். உடனே, லாசரு கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே வந்தார்! நடக்க வாய்ப்பே இல்லை என்று சிலர் நினைத்ததை இயேசு நடத்திக் காட்டினார்!—2008 காவற்கோபுரம் ஜனவரி 1 இதழில் பக்கம் 31-ல் வந்த, “லாசருவின் கல்லறைக்கு இயேசு வந்துசேர ஏன் நான்கு நாட்கள் எடுத்தன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

16. யோவான் 11-வது அதிகாரத்தில் இருக்கும் பதிவு, உயிர்த்தெழுதலில் நமக்கு இருக்கும் நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகிறது?

16 யோவான் 11-வது அதிகாரத்தில் இருக்கும் பதிவு, உயிர்த்தெழுதலில் நமக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. எப்படி? “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று இயேசு மார்த்தாளுக்கு வாக்குக் கொடுத்ததைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (யோவா. 11:23) யெகோவாவைப் போலவே இயேசுவுக்கும், இந்த வாக்கை நிறைவேற்றுவதற்கான ஆசையும் இருக்கிறது, சக்தியும் இருக்கிறது. அவர் கண்ணீர்விட்டு அழுதது, மரணத்தையும் மரணத்தால் வரும் வேதனையையும் ஒழித்துக்கட்ட அவர் எவ்வளவு ஏக்கமாக இருக்கிறார் என்பதைக் காட்டியது. லாசரு கல்லறையிலிருந்து வெளியே வந்தபோது, இறந்தவர்களை உயிரோடு கொண்டுவரும் சக்தி இயேசுவுக்கு இருப்பது மறுபடியும் தெளிவாகத் தெரிந்தது. அதுமட்டுமல்ல, அவர் மார்த்தாளிடம், “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைப் பார்ப்பாய் என்று உனக்குச் சொன்னேன், இல்லையா?” என்று கேட்டதை யோசித்துப் பாருங்கள். (யோவா. 11:40) உயிர்த்தெழுதல் சம்பந்தமாகக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்று நாம் நம்புவதற்கு எவ்வளவு காரணங்கள் இருக்கின்றன! இந்த நம்பிக்கை நமக்கு இன்னும் நிஜமாக இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு இன்னும் நிஜமாக இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

17. உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிளில் இருக்கும் பதிவுகளை வாசிக்கும்போது நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

17 முன்பு நடந்த உயிர்த்தெழுதல்களைப் பற்றி வாசித்துப் பாருங்கள், யோசித்துப் பாருங்கள். இந்தப் பூமியில் இறந்துபோன எட்டுப் பேர் மறுபடியும் உயிரோடு எழுப்பப்பட்டதாக பைபிள் சொல்கிறது. c அந்த ஒவ்வொரு பதிவையும் நீங்கள் ஏன் கவனமாகப் படித்துப் பார்க்கக் கூடாது? அதில் வரும் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் நிஜமாகவே வாழ்ந்தவர்கள் என்பதை ஞாபகம் வைத்துப் படியுங்கள். இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவதற்கான ஆசையும் சக்தியும் கடவுளுக்கு இருப்பதை இந்த ஒவ்வொரு பதிவும் எப்படிக் காட்டுகிறது... அதிலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்... என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதுதான் இருப்பதிலேயே ரொம்ப முக்கியமான உயிர்த்தெழுதல். அவருடைய உயிர்த்தெழுதலுக்கு நூற்றுக்கணக்கான பேர் கண்கண்ட சாட்சிகளாக இருந்தார்கள். உயிர்த்தெழுதலில் நாம் நம்பிக்கை வைப்பதற்கு இது பலமான காரணம்!—1 கொ. 15:3-6, 20-22.

18. உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றிய நம் பாடல்களை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ள நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

18 உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றிய நம் பாடல்களை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். d (எபே. 5:19) உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு இன்னும் நிஜமாக இருப்பதற்கும், அதில் நமக்கு இருக்கும் விசுவாசம் இன்னும் பலமாவதற்கும் இந்தப் பாடல்கள் உதவி செய்யும். அதனால், இந்தப் பாடல்களைக் கேளுங்கள், பாடிப் பழகுங்கள். இந்தப் பாடல்களில் வரும் வரிகளைப் பற்றி உங்களுடைய குடும்ப வழிபாட்டில் கலந்துபேசுங்கள். அந்தப் பாடல் வரிகளை உங்களுடைய மனதிலும் இதயத்திலும் செதுக்கி வையுங்கள். அப்படிச் செய்யும்போது, உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலை வந்தாலும் சரி, அன்பான ஒருவரை நீங்கள் மரணத்தில் பறிகொடுத்தாலும் சரி, அந்தப் பாடல் வரிகளை யெகோவாவின் சக்தி உங்களுக்கு ஞாபகப்படுத்தும். அந்த வரிகள் உங்களுக்குத் தேவையான ஆறுதலையும் பலத்தையும் கொடுக்கும்.

19. உயிர்த்தெழுதலைப் பற்றி நாம் என்னவெல்லாம் கற்பனை செய்து பார்க்கலாம்? (“ நீங்கள் அவர்களிடம் என்ன கேட்பீர்கள்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

19 கற்பனை செய்து பாருங்கள். புதிய உலகத்தில் நாம் இருப்பதுபோல் கற்பனை செய்து பார்க்கும் திறமையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “புதிய உலகத்தில் நான் இருப்பதுபோல் கற்பனை செய்து பார்க்க நிறைய நேரம் செலவு செய்வேன். பூஞ்சோலையில் பூக்கும் ரோஜா பூக்களின் வாசனையைக்கூட முகர்ந்து பார்ப்பேன்.” பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் சந்திக்கும்போது எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களில் யாரைப் பார்க்க நீங்கள் ஆசையாகக் காத்திருக்கிறீர்கள்? அவரிடம் என்ன கேள்விகளைக் கேட்கப்போகிறீர்கள்? இறந்துபோன உங்கள் அன்பானவர்களை நீங்கள் வரவேற்கப்போவதையும் கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் மறுபடியும் உயிரோடு வரும்போது நீங்கள் அவர்களிடம் பேசப்போகும் முதல் வார்த்தைகள்... அவர்களை நீங்கள் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கப்போகும் காட்சி... இதையெல்லாம் உங்கள் மனக்கண்களில் பாருங்கள்.

20. என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?

20 உயிர்த்தெழுதல் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கலாம்! இந்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்று நாம் நம்பலாம். ஏனென்றால், அதை நிறைவேற்றுவதற்கான ஆசையும் சக்தியும் யெகோவாவுக்கு இருக்கிறது. இந்த வாக்குறுதியில் நமக்கு இருக்கும் நம்பிக்கையைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ள நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, கடவுளிடம் நாம் இன்னும் இன்னும் நெருங்கிப்போவோம். ஒருவிதத்தில், அவர் நம் ஒவ்வொருவரிடமும், ‘உங்கள் அன்பானவர்கள் எழுந்திருப்பார்கள்!’ என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்.

பாட்டு 147 பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!

a அன்பான ஒருவரை நீங்கள் மரணத்தில் பறிகொடுத்திருந்தால், உயிர்த்தெழுதல் நம்பிக்கை உங்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். ஆனால், உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு உங்களால் விளக்கிச் சொல்ல முடியுமா? உயிர்த்தெழுதல் நம்பிக்கை உங்களுக்கு இன்னும் நிஜமாக இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? இந்தக் கட்டுரையில், நமக்கு இருக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பலப்படுத்தும் நிறைய விஷயங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

b அந்த இசை வீடியோவின் தலைப்பு, பூஞ்சோலை நம் கண்ணெதிரே! அது நவம்பர் 2016 பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியில் காட்டப்பட்டது.

d யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’ என்ற புத்தகத்தில் இருக்கும் இந்தப் பாடல்களைப் பாருங்கள்: “பூஞ்சோலையில் வாழ்க்கை” (பாட்டு 139), “கண் முன் பரிசை வைப்போம்!” (பாட்டு 144), “அவர் அழைப்பார்” (பாட்டு 151). jw.org-ல் இருக்கும் இந்த சிறப்புப் பாடல்களையும் பாருங்கள்: “பூஞ்சோலை நம் கண்ணெதிரே!” “புத்தம் புது பூமி வருமே!” “பூஞ்சோலை பார்ப்போம் வா!