படிப்புக் கட்டுரை 17
எதிர்பாராத பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவா உங்களுக்கு உதவுவார்
“நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும். ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.”—சங். 34:19.
பாட்டு 44 சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்
இந்தக் கட்டுரையில்... a
1. என்ன விஷயங்கள் நமக்கு நன்றாகத் தெரியும்?
யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார்... நாம் ரொம்ப சந்தோஷமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார்... என்பது நமக்கு நன்றாகவே தெரியும். (ரோ. 8:35-39) பைபிள் நியமங்களின்படி வாழ்வது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்றும் நமக்கு நன்றாகத் தெரியும். (ஏசா. 48:17, 18) ஆனால், திடீரென்று ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால் என்ன செய்வது?
2. நமக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரலாம், அதுபோன்ற சமயங்களில் நாம் எப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடலாம்?
2 யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருக்குமே பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்துக்கு, நம் குடும்பத்தில் இருக்கும் யாராவது நம்மைக் கஷ்டப்படுத்துவதுபோல் ஏதாவது செய்துவிடலாம். இல்லையென்றால், நமக்கு ஏதாவது ஒரு பெரிய வியாதி வந்துவிடலாம், அதனால் யெகோவாவின் சேவையில் நிறைய செய்ய முடியாதபடி ஆகிவிடலாம். ஒருவேளை, இயற்கைப் பேரழிவுகளால் நாம் பாதிக்கப்படலாம். இல்லையென்றால், நம்முடைய நம்பிக்கைகளுக்காக மற்றவர்கள் நம்மைத் துன்புறுத்தலாம். இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது, ‘எனக்கு மட்டும் இதெல்லாம் ஏன் நடக்கிறது? நான் ஏதாவது தப்பு செய்துவிட்டேனா? யெகோவாவுக்கு என்னைப் பிடிக்கவில்லையா?’ என்றெல்லாம் நாம் யோசிக்கலாம். நீங்களும் என்றாவது இப்படியெல்லாம் யோசித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! யெகோவாவின் உண்மை ஊழியர்கள் நிறைய பேருக்கு இதே மாதிரியான யோசனைகள் வந்திருக்கின்றன.—சங். 22:1, 2; ஆப. 1:2, 3.
3. சங்கீதம் 34:19-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
3 சங்கீதம் 34:19-ஐ வாசியுங்கள். இந்த வசனத்திலிருந்து இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். (1) நீதிமான்களுக்குப் பிரச்சினைகள் வரும். (2) அந்தப் பிரச்சினைகளிலிருந்து யெகோவா நம்மைக் காப்பாற்றுகிறார். எப்படிக் காப்பாற்றுகிறார்? ஒரு வழி: வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள அவர் நமக்கு உதவி செய்கிறார். அவருக்குச் சேவை செய்தால் நாம் சந்தோஷமாக வாழ்வோம் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காக இப்போது நாம் கவலையே இல்லாமல் வாழலாம் என்று அவர் சொல்லவில்லை. (ஏசா. 66:14) ஆனால், எதிர்காலத்தில் கவலையே இல்லாமல் என்றென்றும் நம்மை வாழ வைக்கப்போகிறார். அந்த வாழ்க்கையைத்தான் எப்போதும் நம் கண்முன் வைக்க வேண்டுமென்று சொல்கிறார். (2 கொ. 4:16-18) அதுவரை, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சேவை செய்ய நமக்கு உதவி செய்கிறார்.—புல. 3:22-24.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 பைபிள் காலங்களிலும் சரி, நம்முடைய காலங்களிலும் சரி, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். நமக்கும் திடீரென்று பிரச்சினைகள் வரலாம். ஆனால், நாம் யெகோவாவையே நம்பியிருந்தால் அவர் நிச்சயம் நம்மைக் கைவிட மாட்டார். (சங். 55:22) அந்த உதாரணங்களைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அவர்களுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? யெகோவாமேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள இந்த உதாரணங்கள் எப்படி உதவி செய்யும்? அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களை நான் எப்படி என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம்?’
பைபிள் காலங்களில்
5. லாபானால் யாக்கோபுக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தன? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)
5 பைபிள் காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் வந்தன. யாக்கோபின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவை வணங்கிய அவருடைய தாய்மாமன் லாபானின் ஒரு மகளைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி அவருடைய அப்பா சொன்னார். அப்படிச் செய்தால், யெகோவா யாக்கோபை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் என்றும் சொன்னார். (ஆதி. 28:1-4) அவருடைய அப்பா சொன்னதைக் கேட்டு யாக்கோபு சரியானதைச் செய்தார். அவர் கானானிலிருந்து புறப்பட்டு லாபானின் வீட்டுக்குப் போனார். லாபானுக்கு லேயாள், ராகேல் என்ற இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவருடைய இரண்டாவது மகள் ராகேலை யாக்கோபு காதலித்தார். அவளைக் கல்யாணம் செய்வதற்காக லாபானிடம் ஏழு வருஷங்கள் வேலை செய்ய அவர் ஒத்துக்கொண்டார். (ஆதி. 29:18) ஆனால், யாக்கோபு நினைத்த மாதிரி நடக்கவில்லை. லாபான் யாக்கோபை ஏமாற்றி, தன்னுடைய முதல் மகள் லேயாளைக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார். ஒரு வாரம் கழித்து லாபான் ராகேலையும் யாக்கோபுக்குக் கல்யாணம் செய்துவைத்தார். ஆனால், அவளுக்காக இன்னும் ஏழு வருஷம் யாக்கோபு வேலை செய்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். (ஆதி. 29:25-27) வேலை விஷயத்திலும் லாபான் யாக்கோபிடம் அநியாயமாக நடந்துகொண்டார். இப்படியே, 20 வருஷம் அவர் யாக்கோபைப் பாடாய்ப் படுத்தினார்!—ஆதி. 31:41, 42.
6. யாக்கோபுக்கு வேறு என்ன பிரச்சினைகள் வந்தன?
6 யாக்கோபுக்கு இன்னும் நிறைய பிரச்சினைகளும் வந்தன. அவருக்கு ஒரு பெரிய குடும்பம் இருந்தது, ஆனால் அவருடைய மகன்கள் ஒற்றுமையாக வாழவில்லை. சொல்லப்போனால், அவர்களுடைய தம்பி யோசேப்பை அடிமையாகவே விற்றுவிட்டார்கள். யாக்கோபின் இரண்டு மகன்களான சிமியோனும் லேவியும் குடும்பத்தின் பெயரைக் கெடுத்தார்கள், யெகோவாவின் பெயரையும் களங்கப்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல, யாக்கோபின் ஆசை மனைவி ராகேல் இரண்டாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டாள். இதெல்லாம் போதாதென்று, கடுமையான பஞ்சத்தினால் யாக்கோபு வயதான காலத்தில் எகிப்துக்குக் குடிமாறிப்போக வேண்டியிருந்தது.—ஆதி. 34:30; 35:16-19; 37:28; 45:9-11, 28.
7. யெகோவா யாக்கோபை எப்படியெல்லாம் ஆசீர்வதித்தார்?
7 இவ்வளவு நடந்தும், யெகோவா மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை யாக்கோபு விடவே இல்லை. அதனால், யெகோவா அவரை ஆசீர்வதித்தார். உதாரணத்துக்கு, லாபான் என்னதான் யாக்கோபை ஏமாற்றினாலும், யாக்கோபுக்கு நிறைய சொத்துகளைக் கொடுத்து யெகோவா ஆசீர்வதித்தார். அதுமட்டுமல்ல, நிறைய வருஷங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக அவர் நினைத்துக்கொண்டிருந்த அவருடைய மகன் யோசேப்பை மறுபடியும் பார்க்கும் சந்தோஷத்தை யெகோவா அவருக்குக் கொடுத்தார். அப்போது யாக்கோபு யெகோவாவுக்கு எவ்வளவு நன்றி சொல்லியிருப்பார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெகோவாவோடு நெருக்கமான பந்தம் இருந்ததால்தான் யாக்கோபினால் எல்லா பிரச்சினைகளையுமே சமாளிக்க முடிந்தது. (ஆதி. 30:43; 32:9, 10; 46:28-30) நாமும் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொண்டால், திடீரென்று வரும் பிரச்சினைகளை நம்மாலும் நல்லபடியாகச் சமாளிக்க முடியும்.
8. தாவீது ராஜா என்ன செய்ய ஆசைப்பட்டார்?
8 தாவீது ராஜாவினால் யெகோவாவின் சேவையில் தான் நினைத்த எல்லாவற்றையுமே செய்ய முடியவில்லை. உதாரணத்துக்கு, யெகோவாவுக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று தாவீது ரொம்ப ஆசைப்பட்டார். அவருடைய ஆசையை நாத்தான் தீர்க்கதரிசியிடம் சொன்னார். அதற்கு நாத்தான், “உங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள், உண்மைக் கடவுள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்” என்று சொன்னார். (1 நா. 17:1, 2) இந்த வார்த்தைகளைக் கேட்டபோது தாவீதுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும், இல்லையா? ஒருவேளை, அந்தப் பிரம்மாண்டமான ஆலயத்தைக் கட்ட என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று அவர் உடனே திட்டம்போட ஆரம்பித்திருப்பார்.
9. எதிர்பார்க்காத ஒரு சோகமான செய்தியைக் கேட்டபோது தாவீது என்ன செய்தார்?
9 ஆனால், தாவீது ஆலயத்தைக் கட்ட மாட்டார் என்றும், அவருடைய மகன்களில் ஒருவர்தான் கட்டுவார் என்றும் “அன்று ராத்திரியே” நாத்தானிடம் யெகோவா சொன்னார். (1 நா. 17:3, 4, 11, 12) இந்தச் சோகமான செய்தியை தாவீதிடம் நாத்தான் சொன்னார். அதைக் கேட்டபோது தாவீது என்ன செய்தார்? அவருடைய லட்சியத்தை மாற்றிக்கொண்டார். ஆலயத்தைக் கட்ட தன் மகன் சாலொமோனுக்குத் தேவைப்படும் பணம், பொருள் எல்லாவற்றையும் சேர்க்க ஆரம்பித்தார்.—1 நா. 29:1-5.
10. யெகோவா தாவீதை எப்படி ஆசீர்வதித்தார்?
10 தாவீது ஆலயத்தைக் கட்ட மாட்டார் என்று யெகோவா சொன்ன பிறகு, தாவீதோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்தார். தாவீதின் வம்சத்தில் வரும் ஒருவர் என்றென்றுமே ஆட்சி செய்வார் என்று யெகோவா வாக்குக் கொடுத்தார். (2 சா. 7:16) இயேசுவின் ஆயிர வருஷ ஆட்சியில் தாவீது வாழும்போது, தன்னுடைய வம்சத்தில் வந்த ஒரு ராஜாவின் ஆட்சியில் வாழ்வதை நினைத்து எவ்வளவு சந்தோஷப்படுவார்! இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? நாம் ஆசைப்படுவதுபோல் யெகோவாவுக்கு எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்றாலும், நாம் எதிர்பார்க்காத மற்ற ஆசீர்வாதங்களை யெகோவா நமக்குக் கொடுக்கலாம்.
11. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்த சமயத்தில் கடவுளுடைய அரசாங்கம் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு என்ன ஆசீர்வாதம் கிடைத்தது? (அப்போஸ்தலர் 6:7)
11 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. உதாரணத்துக்கு, கடவுளுடைய அரசாங்கம் உடனே வரும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அது எப்போது வரும் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. (அப். 1:6, 7) ஆனாலும், அவர்கள் என்ன செய்தார்கள்? சுறுசுறுப்பாக ஊழியம் செய்துகொண்டே இருந்தார்கள். நல்ல செய்தியை எல்லா இடங்களிலும் அவர்கள் சொல்லச் சொல்ல, யெகோவா அவர்களுடைய முயற்சிகளை எந்தளவுக்கு ஆசீர்வதித்தார் என்பதை அவர்களால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.—அப்போஸ்தலர் 6:7-ஐ வாசியுங்கள்.
12. பஞ்சம் வந்தபோது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள்?
12 முதல் நூற்றாண்டில் ஒரு சமயத்தில், “உலகம் முழுவதும்” ஒரு கொடிய பஞ்சம் வந்தது. (அப். 11:28) அப்போது இருந்த கிறிஸ்தவர்களும் அந்தப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் எந்தளவுக்குக் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? குடும்பத்தை எப்படிக் கவனித்துக்கொள்ளப் போகிறோமோ என்று குடும்பத் தலைவர்கள் ரொம்பக் கவலைப்பட்டிருப்பார்கள். இன்னும் நிறைய ஊழியம் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டு வைத்திருந்த இளைஞர்களைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ‘பஞ்சம் முடியட்டும், அதற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவர்கள் நினைத்திருப்பார்களா? உண்மையில், எந்த மாதிரி சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அதற்கு ஏற்றபடி அந்தக் கிறிஸ்தவர்கள் தங்களை மாற்றிக்கொண்டார்கள். அவர்களால் முடிந்தளவுக்குத் தொடர்ந்து ஊழியம் செய்தார்கள். அவர்களிடம் இருந்த பொருள்களை யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு சந்தோஷமாகக் கொடுத்து உதவினார்கள்.—அப். 11:29, 30.
13. பஞ்சம் வந்த சமயத்தில் கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன?
13 பஞ்சம் வந்த சமயத்தில் கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன? அவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்தன. அப்போது, யெகோவா அவர்களுக்கு உதவி செய்ததை அவர்களால் கண்ணாரப் பார்க்க முடிந்தது. (மத். 6:31-33) அதுமட்டுமல்ல, அவர்களுக்கு உதவி செய்த சகோதர சகோதரிகளோடு அவர்கள் இன்னும் நெருக்கமாகியிருப்பார்கள். நன்கொடைகளைக் கொடுத்தவர்களும் சரி, மற்ற விதங்களில் நிவாரண வேலை செய்தவர்களும் சரி, கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவித்திருப்பார்கள். (அப். 20:35) சூழ்நிலைக்கு ஏற்றபடி அவர்கள் எல்லாரும் தங்களை மாற்றிக்கொண்டதால், யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்.
14. பர்னபாவுக்கும் அப்போஸ்தலன் பவுலுக்கும் என்ன நடந்தது, ஆனாலும் என்ன பலன் கிடைத்தது? (அப்போஸ்தலர் 14:21, 22)
14 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டார்கள். சிலசமயம், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் துன்புறுத்தல் வந்தது. பர்னபாவும் அப்போஸ்தலன் பவுலும் லீஸ்திராவில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது என்ன நடந்தது என்று பார்க்கலாம். முதலில் அவர்கள் ஊழியம் செய்தபோது எல்லாரும் நன்றாகக் கேட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு, எதிரிகள் ‘கூட்டத்தாரைத் தூண்டிவிட்டார்கள்.’ (அப். 14:19) அதனால், முன்பு பர்னபாவும் பவுலும் சொன்னதை நன்றாகக் கேட்ட அதே மக்கள் பவுல்மேல் கல்லெறிந்தார்கள். அதன் பிறகு, அவர் இறந்துவிட்டதாக நினைத்து ஊருக்கு வெளியே இழுத்துக்கொண்டுபோய் போட்டுவிட்டார்கள். ஆனாலும், பர்னபாவும் பவுலும் வேறு இடங்களுக்குப் போய் ஊழியம் செய்தார்கள். அதனால் என்ன பலன் கிடைத்தது? அவர்கள் “நிறைய பேரைச் சீஷர்களாக்கினார்கள்”; அவர்கள் சொன்னதைக் கேட்டபோதும் அவர்களுடைய உதாரணத்தைப் பார்த்தபோதும் மற்ற சகோதர சகோதரிகளின் விசுவாசம் இன்னும் பலமானது. (அப்போஸ்தலர் 14:21, 22-ஐ வாசியுங்கள்.) திடீரென்று துன்புறுத்தல் வந்தபோதுகூட, பர்னபாவும் பவுலும் விடாமல் ஊழியம் செய்ததால் நிறைய பேர் பயன் அடைந்தார்கள். யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் வேலையை நாமும் விடாமல் செய்தால், யெகோவா நம்மையும் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்!
நம் காலத்தில்
15. சகோதரர் ஏ. ஹெச். மேக்மில்லனுடைய உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
15 1914-க்கு முன்பு சில விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும் என்று யெகோவாவுடைய மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். சகோதரர் ஏ. ஹெச். மேக்மில்லனுடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில் பரலோக நம்பிக்கையோடு இருந்த நிறைய பேரை மாதிரியே சகோதரர் மேக்மில்லனும், ரொம்பச் சீக்கிரத்தில் பரலோகத்துக்குப் போகப்போவதாக நினைத்துக்கொண்டிருந்தார். செப்டம்பர் 1914-ல் அவர் ஒரு பேச்சைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, “அநேகமாக இதுதான் நான் கொடுக்கும் கடைசி பேச்சாக இருக்கும்” என்று சொன்னார். ஆனால், அவர் சொன்ன மாதிரி அது அவருடைய கடைசி பேச்சு கிடையாது. அதற்குப் பிறகு அவர் இப்படி எழுதினார்: “நம்மில் சிலர் பரலோகத்துக்கு உடனே போய்விடுவோம் என்று கொஞ்சம் அவசரப்பட்டு யோசித்துவிட்டோம் போலத் தெரிகிறது. இப்போதைக்கு, எஜமானுடைய வேலையை நாம் சுறுசுறுப்பாகச் செய்துகொண்டே இருப்பதுதான் முக்கியம்.” சகோதரர் மேக்மில்லன் சொன்ன மாதிரியே செய்தார். சுறுசுறுப்பாக ஊழியம் செய்தார். நடுநிலைக்காகச் சிறையில் இருந்த நிறைய சகோதரர்களை உற்சாகப்படுத்தும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. வயதான காலத்திலும் அவர் கூட்டங்களுக்குத் தவறாமல் போனார். பரலோகத்துக்குப் போவதற்காகக் காத்துக்கொண்டிருந்த சமயத்தை சகோதரர் மேக்மில்லன் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டதால் அவருக்கு என்ன நன்மை கிடைத்தது? 1966-ல் அவர் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு இப்படி எழுதினார்: “அன்று முதல் இன்றுவரை என் விசுவாசம் குறையவே இல்லை. அது இன்னும் பலமாகத்தான் இருக்கிறது.” நம் எல்லாருக்கும், அதுவும் நினைத்ததைவிட ரொம்ப நாளாக பிரச்சினைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும், அவர் எவ்வளவு ஒரு அருமையான உதாரணம்!—எபி. 13:7.
16. ஹெர்பர்ட் ஜென்னிங்சுக்கும் அவருடைய மனைவிக்கும் என்ன எதிர்பாராத பிரச்சினை வந்தது? (யாக்கோபு 4:14)
16 யெகோவாவுடைய மக்களில் நிறைய பேருக்குத் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. உதாரணத்துக்கு, ஹெர்பர்ட் ஜென்னிங்ஸ் என்ற சகோதரருடைய வாழ்க்கை அனுபவத்தை எடுத்துக்கொள்ளலாம். b அவரும் அவருடைய மனைவியும் கானாவில் மிஷனரிகளாகச் சந்தோஷமாகச் சேவை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று அவருக்கு ஒரு மோசமான மனநலப் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அவருடைய வாழ்க்கையில் வந்த அந்த மாற்றத்தைப் பற்றி அவர் விளக்கும்போது, யாக்கோபு 4:14-ல் இருக்கும் வார்த்தைகளை மேற்கோள் காட்டிவிட்டு, “எங்கள் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு ‘நாள்’ வருமென்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொன்னார். (வாசியுங்கள்.) அதற்குப் பிறகு அவர் இப்படி எழுதினார்: “நாங்கள் நிஜத்தை ஏற்றுக்கொண்டு கானாவையும் அங்கிருந்த எங்களுடைய நெருங்கிய நண்பர்களையும் விட்டுவிட்டு சிகிச்சைக்காக கனடாவுக்கே திரும்பிப் போக முடிவு செய்தோம்.” பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்து உண்மையாகச் சேவை செய்வதற்கு சகோதரர் ஜென்னிங்சுக்கும் அவருடைய மனைவிக்கும் யெகோவா உதவி செய்தார்.
17. சகோதரர் ஜென்னிங்சின் உதாரணம் மற்றவர்களுக்கு எப்படி உதவியாக இருந்திருக்கிறது?
17 சகோதரர் ஜென்னிங்ஸ் அவருடைய வாழ்க்கை சரிதையில் அவருடைய பிரச்சினைகளைப் பற்றி ரொம்ப வெளிப்படையாகச் சொன்னது நிறைய பேருக்கு ரொம்ப உதவியாக இருந்தது. அதைப் பற்றி ஒரு சகோதரி இப்படி எழுதினார்: “வேறு எந்தக் கட்டுரையுமே இந்தளவுக்கு என்னுடைய மனதைத் தொட்டதே இல்லை. . . . உடம்பு முடியாததால் சகோதரர் ஜென்னிங்ஸ் அவருடைய நியமிப்பை விட்டுக்கொடுக்க வேண்டியதைப் பற்றிப் படித்தபோது என்னுடைய சூழ்நிலைமையைச் சமநிலையாகப் பார்க்க நான் கற்றுக்கொண்டேன்.” அதேமாதிரி, இன்னொரு சகோதரர் இப்படி எழுதினார்: “பத்து வருஷமாகச் சபை மூப்பராக நான் சேவை செய்தேன். ஆனால், ஒருவித மனநலப் பிரச்சினை வந்தபோது அந்தப் பொறுப்பை நான் விட்டுவிட வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில், நம் பத்திரிகைகளில் வரும் வாழ்க்கை சரிதைகளை வாசிக்கும்போது, . . . நான் எதற்குமே லாயக்கில்லாமல் இருக்கிறேனே என்ற எண்ணம் என்னை வாட்டி எடுக்கும். ஆனால், சகோதரர் ஜென்னிங்சின் விடாமுயற்சி என்னைத் தூக்கி நிறுத்தியது.” இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? திடீரென்று நமக்கு ஏதாவது பிரச்சினைகள் வரும்போது நாம் அதைச் சகித்துக்கொண்டால் நம்மைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அது உற்சாகமாக இருக்கும். நாம் நினைத்ததுபோல் நம் வாழ்க்கை அமையவில்லை என்றாலும் விசுவாசத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் நாம் நல்ல முன்மாதிரிகளாக இருக்க முடியும்.—1 பே. 5:9.
18. நைஜீரியாவில் இருக்கிற சகோதரியின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (படத்தில் நடித்துக் காட்டப்பட்டுள்ளது.)
18 கொரோனா கொள்ளைநோய் மாதிரியான பேரழிவுகளால் யெகோவாவின் மக்கள் நிறைய பேர்கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நைஜீரியாவில் இருக்கிற ஒரு சகோதரியின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவர் ஒரு விதவை. அவருடைய கையில் காசே இல்லை. சாப்பாட்டுக்கு அவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார். ஒருநாள் காலையில், அவருடைய மகள் அவரிடம் வந்து, ‘நம்மிடம் கடைசியாக ஒரேவொரு கப் அரிசிதான் இருக்கிறது. இதற்கு அப்புறம் நாம் என்ன சாப்பிடுவோம்?’ என்று கேட்டாள். அதற்கு அந்தச் சகோதரி, ‘ஆமாம், நம் கையில் சாப்பாடும் இல்லை, காசும் இல்லை. ஆனால், சாறிபாத் ஊர் விதவை மாதிரி நாம் நம்பிக்கையாக இருக்க வேண்டும். இப்போதைக்கு என்ன இருக்கிறதோ அதைச் சாப்பிடலாம். அதற்குப் பிறகு யெகோவா கொடுப்பார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்’ என்று சொன்னார். (1 ரா. 17:8-16) அன்று மத்தியானம் என்ன சாப்பிடலாம் என்று அவர்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே, சகோதரர்கள் அவர்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். இரண்டு வாரங்களுக்குமேல் அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா உணவுப் பொருள்களும் அதில் இருந்தன. ‘நான் என் மகளிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் யெகோவா கவனித்துக் கேட்பார் என்று நான் நினைக்கவே இல்லை’ என்று அவர் சொன்னார். நாம் யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தால், வாழ்க்கையில் திடீரென்று வரும் பிரச்சினைகள்கூட யெகோவாவிடம் நம்மை இன்னும் அதிகமாக நெருங்கிப்போக வைக்கும்.—1 பே. 5:6, 7.
19. சகோதரர் அலெக்ஸீ யர்ஷோவுக்கு எப்படிப்பட்ட துன்புறுத்துதல் வந்தது?
19 சமீப வருஷங்களில் சகோதர சகோதரிகள் நிறைய பேருக்குத் துன்புறுத்துதல் வந்திருக்கிறது. அதுவும் சிலசமயம் எதிர்பார்க்காத விதத்தில்! அதற்கு ஒரு உதாரணம்தான் ரஷ்யாவில் வாழ்கிற சகோதரர் அலெக்ஸீ யர்ஷோவ். 1994-ல் அவர் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவாவுடைய மக்களுக்கு அங்கே ஓரளவுக்குச் சுதந்திரம் இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு ரஷ்யாவில் மெதுமெதுவாகச் சூழ்நிலைமை மாறிவிட்டது. 2020-ல் சகோதரர் யர்ஷோவுடைய வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அவருக்குச் சொந்தமான நிறைய பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தார்கள். சில மாதங்களுக்குப் பிறகு அவர் ஒரு குற்றவாளி என்று சொல்லி அரசாங்கம் அவர்மேல் வழக்குப் போட்டது. அவர்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காகச் சில வீடியோக்களைக் காட்டினார்கள். ஒரு வருஷமாகச் சகோதரர் யர்ஷோவோடு சேர்ந்து ஆர்வமாக பைபிளைப் படிப்பது மாதிரி நடித்த ஒரு நபர்தான் இந்த வீடியோக்களை எடுத்திருந்தார். எவ்வளவு பெரிய துரோகம் பார்த்தீர்களா!
20. சகோதரர் யர்ஷோவ் யெகோவாவோடு அவருக்கு இருந்த நட்பை எப்படிப் பலப்படுத்தியிருக்கிறார்?
20 துன்புறுத்தல் வந்ததால் சகோதரர் யர்ஷோவுக்கு ஏதாவது பலன் கிடைத்திருக்கிறதா? நிச்சயம் கிடைத்திருக்கிறது! யெகோவாவோடு அவருக்கு இருந்த நட்பு இன்னும் பலமாகியிருக்கிறது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து யெகோவாவிடம் இன்னும் அடிக்கடி ஜெபம் செய்கிறோம். யெகோவாவுடைய உதவி இல்லாமல் என்னால் இந்தச் சூழ்நிலைமையைச் சமாளிக்கவே முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன். சோர்வைச் சமாளிக்க தனிப்பட்ட படிப்பு எனக்கு உதவி செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த யெகோவாவுடைய உண்மையுள்ள ஊழியர்களுடைய உதாரணத்தை நான் யோசித்துப் பார்ப்பேன். பதட்டப்படாமல் யெகோவாமேல் நம்பிக்கை வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிற நிறைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன” என்று சொல்கிறார்.
21. இந்த கட்டுரையில் நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
21 இந்த கட்டுரையில் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம் என்று இப்போது பார்க்கலாம். இந்த உலகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் நமக்கு வரத்தான் செய்யும். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தால் அவர் எப்போதுமே நமக்கு உதவி செய்வார். இந்த கட்டுரையின் முக்கிய வசனத்தில் நாம் பார்த்த மாதிரி, “நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும். ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.” (சங். 34:19) நமக்கு வருகிற கஷ்டங்களைப் பற்றி யோசிக்காமல், யெகோவா நம்மை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறார் என்பதை பற்றி நாம் எப்போதும் யோசிக்க வேண்டும். அப்படி செய்தால் அப்போஸ்தலன் பவுல் மாதிரியே, “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று நம்மாலும் சொல்ல முடியும்.—பிலி. 4:13.
பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்
a இந்த உலகத்தில் சிலசமயம் நமக்கு எதிர்பாராத பிரச்சினைகள் வந்தாலும், யெகோவா தன் ஊழியர்களுக்கு உதவி செய்வார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அந்தக் காலத்தில் யெகோவா தன் ஊழியர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார்? இன்று நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? இதைத் தெரிந்துகொள்ள, பைபிளில் இருக்கும் சில உதாரணங்களையும் நவீன கால உதாரணங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நாம் யெகோவாவை நம்பியிருந்தால் அவர் நமக்கும்கூட உதவி செய்வார் என்ற நம்பிக்கையை அந்த உதாரணங்கள் பலப்படுத்தும்.
b காவற்கோபுரம், டிசம்பர் 1, 2000, பக். 24-28-ஐப் பாருங்கள்.