Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 18

சபைக் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்

சபைக் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்

“ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; . . . ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.”—எபி. 10:24, 25.

பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!

இந்தக் கட்டுரையில்... a

1. கூட்டங்களில் நாம் ஏன் பதில் சொல்கிறோம்?

 நாம் ஏன் கூட்டங்களுக்குப் போகிறோம்? முக்கியமாக, யெகோவாவைப் புகழ்வதற்காகப் போகிறோம். (சங். 26:12; 111:1) அதோடு, இந்தக் கஷ்டமான காலத்தில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்காகவும் போகிறோம். (1 தெ. 5:11) கூட்டங்களில் கையைத் தூக்கி நாம் பதில் சொல்லும்போது, இந்த இரண்டு விஷயங்களையுமே நம்மால் செய்ய முடிகிறது.

2. கூட்டங்களில் பதில் சொல்ல எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்புக் கிடைக்கிறது?

2 ஒவ்வொரு வாரமும் கூட்டங்களில் பதில் சொல்லும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. உதாரணத்துக்கு, வார இறுதி நாட்களில் நடக்கும் காவற்கோபுர படிப்பில் நம்மால் பதில் சொல்ல முடிகிறது. வார நாட்களில் நடக்கும் கூட்டத்தில், புதையல்களைத் தோண்டி எடுங்கள்... சபை பைபிள் படிப்பு... கலந்தாலோசிப்புகள்... போன்ற பகுதிகளில் நம்மால் பதில் சொல்ல முடிகிறது.

3. பதில் சொல்ல எதுவெல்லாம் நமக்குப் பிரச்சினையாக இருக்கலாம், எபிரெயர் 10:24, 25 நமக்கு எப்படி உதவி செய்யலாம்?

3 யெகோவாவைப் புகழவும், சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தவும் நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். ஆனால், பதில் சொல்லும் விஷயத்தில் நமக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். ஒருவேளை நமக்கு ரொம்ப பயமாக இருக்கலாம் அல்லது நிறைய பதில் சொல்ல நாம் ஆசைப்பட்டாலும் சிலசமயம் சகோதரர்கள் நம்மைக் கேட்காமல் போய்விடலாம். இந்தப் பிரச்சினைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? எபிரெயர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில் அதற்கான பதில் இருக்கிறது. கூட்டங்களுக்குப் போவது எவ்வளவு அவசியம் என்பதைப் பற்றி அவர் சொன்னபோது, ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது’ ரொம்ப முக்கியம் என்று சொன்னார். (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) நம் விசுவாசத்தை வெளிக்காட்டும் ஒருசில வார்த்தைகள்கூட மற்றவர்களை உற்சாகப்படுத்தும். இதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டால், பதில் சொல்ல அவ்வளவாகப் பயப்பட மாட்டோம். ஒருவேளை, பதில் சொல்ல நமக்கு அடிக்கடி வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், மற்றவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுவோம்.—1 பே. 3:8.

4. இந்தக் கட்டுரையில் என்ன மூன்று விஷயங்களைப் பற்றி நாம் பார்ப்போம்?

4 இந்தக் கட்டுரையில் நாம் மூன்று விஷயங்களைப் பார்ப்போம். முதலில், பதில் சொல்ல நிறைய பேர் இல்லாத ஒரு சின்ன சபையில் நாம் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம் என்று பார்ப்போம். அதன் பிறகு, பதில் சொல்ல நிறைய பேர் இருக்கும் ஒரு பெரிய சபையில் நாம் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம் என்று பார்ப்போம். கடைசியாக, நம் பதில் எப்படியெல்லாம் இருந்தால் அது உண்மையிலேயே மற்றவர்களை உற்சாகப்படுத்தும் என்று பார்ப்போம்.

சின்ன சபையில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்

5. பதில் சொல்ல நிறைய பேர் இல்லாத ஒரு சின்ன சபையில் நாம் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்?

5 ஒரு சின்ன சபையில் அல்லது தொகுதியில், பதில் சொல்வதற்கு நிறைய பேர் இருக்க மாட்டார்கள். அதனால் சிலசமயங்களில், யாராவது கை தூக்க மாட்டார்களா என்று கூட்டத்தை நடத்துகிறவர் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கலாம். இப்படி, கூட்டம் போரடிக்க ஆரம்பித்துவிடலாம். இது கண்டிப்பாக யாருக்குமே உற்சாகம் தராது. இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்யலாம்? அடிக்கடி கை தூக்கி பதில் சொல்லுங்கள். அப்படிச் செய்தால், மற்றவர்களும் உங்களைப் பார்த்து நிறைய பதில் சொல்வார்கள்.

6-7. பயப்படாமல் பதில் சொல்ல நாம் என்ன செய்யலாம்?

6 பதில் சொல்ல நினைத்தாலே உங்களுக்குக் கை காலெல்லாம் உதறுகிறதா? கவலைப்படாதீர்கள்! உங்களைப் போலவே நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், சகோதர சகோதரிகளுக்கு உங்கள் மூலமாக இன்னும் நிறைய உற்சாகம் கிடைக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், பயத்தைக் குறைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று கண்டுபிடியுங்கள். இதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?

7 முன்பு வந்த காவற்கோபுர இதழ்களில் இருக்கும் ஆலோசனைகளை எடுத்துப் பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். b அதில் ஒரு ஆலோசனை என்னவென்றால், நன்றாகத் தயாரிக்க வேண்டும். (நீதி. 21:5) கூட்டங்களில் பார்க்கப்போகும் விஷயங்களை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தால், பதில் சொல்லும்போது அந்தளவுக்குப் பயமாக இருக்காது. அதோடு, சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள். (நீதி. 15:23; 17:27) ஏனென்றால், ஓரிரு வரிகளில் சுருக்கமாகப் பதில் சொல்லும்போது, சரியாகச் சொல்லி முடிப்போமா என்ற பயம் நமக்கு இருக்காது. அதுமட்டுமல்ல, சின்னச் சின்னப் பதில்களைத்தான் சகோதர சகோதரிகளால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாகப் பதில் சொல்லும்போது, நன்றாகத் தயாரித்திருக்கிறீர்கள்... படிக்கிற விஷயங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்... என்றெல்லாம் தெளிவாகத் தெரியும்.

8. பதில் சொல்ல உங்களால் முடிந்தளவுக்கு நீங்கள் நன்றாக முயற்சி செய்வதைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

8 இந்த ஆலோசனைகளின்படி செய்தும் உங்களுக்குப் பதட்டமாக இருக்கிறதா? ஓரிரு பதில்களுக்குமேல் உங்களால் கை தூக்க முடியவில்லையா? அப்படியென்றால், உங்களால் முடிந்ததைச் செய்ய நீங்கள் முழு முயற்சி எடுப்பதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்! (லூக். 21:1-4) உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக, உங்களையே நீங்கள் ரொம்ப வருத்திக்கொள்ள வேண்டுமென்று அர்த்தம் கிடையாது. (பிலி. 4:5) உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள்... அதைச் செய்வதற்கு ஒரு குறிக்கோள் வையுங்கள்... பதட்டப்படாமல் இருப்பதற்கு ஜெபம் செய்யுங்கள். ஆரம்பத்தில், ஒரேவொரு சுருக்கமான பதிலைச் சொல்வதற்கு நீங்கள் குறிக்கோள் வைக்கலாம்.

பெரிய சபையில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்

9. பதில் சொல்லும் விஷயத்தில் பெரிய சபைகளில் என்ன பிரச்சினை வரலாம்?

9 நீங்கள் ஒரு பெரிய சபையில் இருந்தால், உங்களுக்கு வேறொரு பிரச்சினை வரலாம். நிறைய சகோதர சகோதரிகள் கை தூக்குவதால், பதில் சொல்ல உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடலாம். டேனியலா என்ற சகோதரியின் விஷயத்தில் இதுதான் நடந்தது. c கூட்டங்களில் பதில் சொல்வது எப்போதுமே அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதை அவருடைய வணக்கத்தின் ஒரு பாகமாக அவர் பார்த்தார்; மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் பைபிள் விஷயங்கள்மேல் இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் ஒரு முக்கியமான வழியாக அதை நினைத்தார். ஆனால், அவர் ஒரு பெரிய சபைக்கு மாறிப்போன பிறகு, அந்தளவுக்குப் பதில் சொல்ல அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. சிலசமயம், ஒரேவொரு பதில் சொல்லக்கூட அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “எனக்கு ஒரே வெறுப்பாக இருக்கும். பதில் சொல்லும் பாக்கியம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்று தோன்றும். மறுபடியும் மறுபடியும் இப்படி நடக்கும்போது, கூட்டத்தை நடத்துகிறவர்கள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்களோ என்றுகூட தோன்றும்.”

10. பதில் சொல்ல நாம் எப்படியெல்லாம் முயற்சி செய்யலாம்?

10 டேனியலா மாதிரியே நீங்களும் யோசித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், ‘இனிமேல் கையே தூக்க வேண்டாம், அமைதியாக உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம்’ என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். தொடர்ந்து பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? ஒவ்வொரு கூட்டத்துக்கும் நிறைய பதிலை முன்கூட்டியே தயாரித்துவிட்டு வாருங்கள். அப்படிச் செய்தால், ஆரம்பத்தில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால்கூட போகப்போக வேறு பதில்களைச் சொல்ல வாய்ப்புக் கிடைக்கலாம். காவற்கோபுர படிப்புக்குத் தயாரிக்கும்போது, ஒவ்வொரு பாராவும் அந்தக் கட்டுரையின் முக்கியப் பொருளோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அப்போது, படிப்பு முழுவதும் சொல்வதற்கு உங்களுக்கு நிறைய குறிப்புகள் இருக்கும். அதோடு, ஆழமான விஷயங்கள் இருக்கும் பாராக்களை நன்றாகத் தயாரித்துவிட்டு வாருங்கள். (1 கொ. 2:10) ஏனென்றால், அதை விளக்கிச் சொல்வது கஷ்டம் என்பதால் நிறைய பேர் கை தூக்க மாட்டார்கள். இந்த ஆலோசனைகள்படி செய்தும் அடுத்தடுத்த பல கூட்டங்களில் உங்களுக்குப் பதில் சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்யலாம்? கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே, படிப்பை நடத்துகிறவரிடம் போய், எந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என்று சொல்லி வைத்துவிடுங்கள்.

11. பிலிப்பியர் 2:4 என்ன செய்ய நம்மை உற்சாகப்படுத்துகிறது?

11 பிலிப்பியர் 2:4-ஐ வாசியுங்கள். மற்றவர்களுடைய நலனில் நாம் அக்கறை காட்ட வேண்டுமென்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது நாம் எப்படி இந்த ஆலோசனையின்படி நடக்கலாம்? பதில் சொல்ல நம்மைப் போலவே மற்றவர்களும் ஆசைப்படுவார்கள் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களோடு இருக்கும்போது அவர்கள் பேசுவதற்கு எப்படி வாய்ப்பு கொடுப்பீர்களோ அதேமாதிரி கூட்டங்களில் இருக்கும்போது மற்றவர்களும் பதில் சொல்ல வாய்ப்புக் கொடுங்கள் (பாரா 12)

12. கூட்டங்களில் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழி என்ன? (படத்தையும் பாருங்கள்.)

12 இப்படி யோசித்துப் பாருங்கள்: உங்கள் நண்பர்களோடு நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்களைப் பேசவிடாமல் நீங்களே பேசிக்கொண்டு இருப்பீர்களா? நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டீர்கள்! பேச அவர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பீர்கள். கூட்டங்களிலும், தங்கள் விசுவாசத்தைப் பற்றிச் சொல்ல எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு நாம் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். சொல்லப்போனால், நம் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியே அதுதான். (1 கொ. 10:24) அதை நாம் எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

13. பதில் சொல்ல நிறைய பேருக்கு நம்மால் எப்படி வாய்ப்புக் கொடுக்க முடியும்?

13 அதற்கு ஒரு வழி, சுருக்கமாகப் பதில் சொல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது, நிறைய பேர் பதில் சொல்ல நேரம் இருக்கும். மூப்பர்களும் அனுபவமுள்ள பிரஸ்தாபிகளும் இதற்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கலாம். இன்னொரு வழி என்னவென்றால், சுருக்கமாகப் பதில் சொல்லும்போதுகூட நிறைய குறிப்புகளைச் சொல்லக் கூடாது. பாராவில் இருக்கும் எல்லாவற்றையுமே நீங்கள் சொல்லிவிட்டால், மற்றவர்கள் சொல்வதற்குக் குறிப்புகளே இருக்காது. இதைப் புரிந்துகொள்ள இந்தப் பாராவையே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இரண்டு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, சுருக்கமாகப் பதில் சொல்ல வேண்டும்; இன்னொன்று, நிறைய குறிப்புகளைச் சொல்லக் கூடாது. இந்தப் பாராவுக்கு நீங்கள்தான் முதலில் பதில் சொல்கிறீர்கள் என்றால், இந்த இரண்டு குறிப்புகளில் ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லுங்கள்.

கூட்டத்தில் எப்போது நீங்கள் கை தூக்காமல் இருக்க முடிவு பண்ணலாம்? (பாரா 14) f

14. எவ்வளவு பதில்கள் சொல்வது என்று விவேகமாக முடிவு செய்வது ஏன் முக்கியம்? (படத்தையும் பாருங்கள்.)

14 எவ்வளவு பதில்கள் சொல்லப்போகிறீர்கள் என்பதை விவேகமாக முடிவு செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் அடிக்கடி கையைத் தூக்கிக்கொண்டே இருந்தால், புதிதாகக் கை தூக்குகிறவர்களைக் கேட்பதற்குப் பதிலாக உங்களையே கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமென்று நடத்துகிறவரை நீங்கள் கட்டாயப்படுத்துவதுபோல் ஆகிவிடும். அதோடு, நாமே பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் மற்றவர்களுக்குக் கை தூக்கவே தோன்றாது.—பிர. 3:7.

15. (அ) பதில் சொல்ல நமக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் நாம் என்ன செய்யக் கூடாது? (ஆ) நடத்துகிறவர்கள் எப்படி எல்லார் மீதும் அக்கறை காட்டலாம்? (“ நீங்கள் நடத்தும்போது...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

15 நிறைய பேர் கை தூக்கும்போது, நாம் நினைத்த அளவுக்கு நிறைய பதில்களை நம்மால் சொல்ல முடியாமல் போகலாம். சிலசமயம், ஒரேவொரு பதில் சொல்லக்கூட வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடலாம். அப்போது நமக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனாலும் நாம் கோபித்துக்கொள்ளக் கூடாது.—பிர. 7:9.

16. பதில் சொல்பவர்களை நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்?

16 நீங்கள் நினைத்த மாதிரி உங்களால் நிறைய பதில் சொல்ல முடியாவிட்டால்கூட, மற்றவர்கள் சொல்லும் பதிலைக் கவனமாகக் கேளுங்கள். கூட்டம் முடிந்த பிறகு அவர்களைப் பாராட்டுங்கள். நீங்கள் சொல்லும் பதிலைக் கேட்பது மற்றவர்களுக்கு எந்தளவு உற்சாகமாக இருக்குமோ அதேபோல் நீங்கள் அவர்களைப் பாராட்டுவதும் அவர்களுக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கும். (நீதி. 10:21) அதனால், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்கு இன்னொரு வழி அவர்களைப் பாராட்டுவதுதான்.

ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேறுசில வழிகள்

17. (அ) பொருத்தமான பதில்களைத் தயாரிக்க பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம்? (ஆ) வீடியோவில் பார்த்தபடி, நல்ல பதில்களைத் தயாரிக்க என்ன நான்கு விஷயங்களை நாம் செய்ய வேண்டும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

17 கூட்டங்களில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த நாம் வேறு என்னவெல்லாம் செய்யலாம்? நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், வயதுக்கு ஏற்ற பதில்களைத் தயாரிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம். (மத். 21:16) சில சமயம், கல்யாணமானவர்களுக்கு வரும் பிரச்சினைகளைப் பற்றி அல்லது ஒழுக்க சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றி கட்டுரையில் இருக்கும். இதெல்லாம் பெரியவர்களுக்கு ஆலோசனை சொல்வதுபோல் இருந்தாலும், பிள்ளைகளும் பதில் சொல்வதற்கு ஓரிரு பாராக்களாவது இருக்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் இன்னொரு விஷயத்தையும் புரியவைக்கலாம். கை தூக்கும் எல்லா சமயங்களிலும் அவர்களிடம் பதில் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்பதையும் விளக்கிச் சொல்லலாம். அப்போதுதான், வேறு யாரையாவது கேட்டால்கூட அவர்கள் சோர்ந்துபோக மாட்டார்கள்.—1 தீ. 6:18. d

18. பதில் சொல்லும்போது நீதிமொழிகள் 27:2 சொல்வதுபோல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

18 நம் எல்லாராலுமே, யெகோவாவைப் புகழும் விதத்திலும் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தும் விதத்திலும் நல்ல பதில்களைத் தயாரித்து சொல்ல முடியும். (நீதி. 25:11) அவ்வப்போது நம்முடைய சொந்த அனுபவத்தைச் சுருக்கமாகச் சொல்வதில் தவறு இல்லை. ஆனால், எப்போது பார்த்தாலும் நம்மைப் பற்றியே நாம் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. (நீதிமொழிகள் 27:2-ஐ வாசியுங்கள்; 2 கொ. 10:18) அதற்குப் பதிலாக, யெகோவாவைப் பற்றியும், அவருடைய வார்த்தையைப் பற்றியும், அவருடைய மக்களைப் பற்றியும்தான் நாம் முக்கியமாகப் பேச வேண்டும். (வெளி. 4:11) ஆனால், கேள்வியிலேயே நம்முடைய சொந்த அனுபவத்தைப் பற்றிக் கேட்டிருந்தால் நாம் தாராளமாகச் சொல்லலாம். அதற்கு ஒரு உதாரணத்தைத்தான் அடுத்த பாராவில் பார்க்கப்போகிறோம்.

19. (அ) கூட்டத்துக்கு வந்திருக்கும் எல்லார்மீதும் நீங்கள் அக்கறை காட்டும்போது என்ன நன்மை கிடைக்கும்? (ரோமர் 1:11, 12) (ஆ) பதில் சொல்ல உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நீங்கள் ஏன் ரொம்ப பெரிதாக நினைக்கிறீர்கள்?

19 எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று எந்தக் கறாரான சட்டமும் இல்லையென்றாலும், மற்றவர்களை உற்சாகப்படுத்துவது போல் பதில் சொல்ல நாம் எல்லாருமே முயற்சி செய்யலாம். அதற்கு, சிலர் இன்னும் நிறைய பதில் சொல்ல வேண்டியிருக்கலாம். வேறு சிலர், அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நினைத்து திருப்தியாக இருக்கலாம், மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படலாம். மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவது மூலமாக நம் எல்லாராலும் ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த’ முடியும்.—ரோமர் 1:11, 12-ஐ வாசியுங்கள்.

பாட்டு 93 கூட்டங்களை ஆசீர்வதியுங்கள்

a கூட்டங்களில் நாம் பதில் சொல்லும்போது ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துகிறோம். ஆனால் சிலருக்கு, பதில் சொல்வதை நினைத்தாலே ரொம்ப பயமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு, பதில் சொல்ல ரொம்ப பிடிக்கலாம், அதனால் இன்னும் நிறைய பதில் சொல்ல ஆசைப்படலாம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், நாம் எப்படி மற்றவர்கள்மேல் அக்கறை காட்டலாம்? அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் எப்படிப் பதில்களைச் சொல்லலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

b கூடுதலான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள, ஜனவரி 2019 காவற்கோபுர இதழில் பக். 8-13-ஐயும், செப்டம்பர் 1, 2003 இதழில் பக். 19-22-ஐயும் பாருங்கள்.

c பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

e ஜூலை 15, 2013 காவற்கோபுரத்தில் பக். 32-ஐயும், செப்டம்பர் 1, 2003 காவற்கோபுரத்தில் பக். 21-22-ஐயும் பாருங்கள்.

f பட விளக்கம்: ஒரு பெரிய சபையில், ஏற்கெனவே பதில் சொன்ன ஒரு சகோதரர் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பைக் கொடுக்கிறார்.