Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 19

புதிய உலகம் வரும் என்பதில் நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்?

புதிய உலகம் வரும் என்பதில் நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்?

“[யெகோவா] சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா?”—எண். 23:19.

பாட்டு 142 நம்பிக்கை ஒரு நங்கூரம்

இந்தக் கட்டுரையில்... a

1-2. புதிய உலகத்துக்காகக் காத்திருக்கிற சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

 யெகோவா இந்தக் கெட்ட உலகத்தை அழித்துவிட்டு நீதியான புதிய உலகத்தைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லியிருக்கிறார். (2 பே. 3:13) அதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். புதிய உலகம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாதுதான். ஆனாலும், இந்த உலகத்தில் நடப்பதையெல்லாம் பார்க்கும்போது அதற்காக நாம் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.—மத். 24:32-34, 36; அப். 1:7.

2 நாம் எவ்வளவு நாளாக யெகோவாவை வணங்கிக்கொண்டிருந்தாலும் சரி, அவருடைய வாக்குறுதிகளில் இருக்கும் விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நம் விசுவாசம் பலமாக இருந்தாலும், அது குறைய வாய்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால், விசுவாசக் குறைவு என்பது ‘நம்மை எளிதில் சிக்க வைக்கிற பாவம்’ என்று பவுல் சொன்னார். (எபி. 12:1) நம் விசுவாசம் குறையாமல் இருக்க வேண்டும் என்றால், புதிய உலகம் சீக்கிரத்தில் வரும் என்பதற்கான அத்தாட்சிகளைப் பற்றி நாம் அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும்.—எபி. 11:1.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

3 புதிய உலகத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிமீது நம் விசுவாசத்தைப் பலப்படுத்த மூன்று விஷயங்களை நாம் செய்ய வேண்டும். (1) மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும், (2) யெகோவாவுடைய வல்லமையைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும், (3) யெகோவாவிடம் நெருங்கிப்போக உதவுகிற விஷயங்களைச் செய்ய வேண்டும். இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் விவரமாகப் பார்ப்போம். ஆபகூக்குக்கு யெகோவா சொன்ன செய்தி இன்று நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்துகிறது என்பதையும் பார்ப்போம். புதிய உலகம் வரும் என்பதில் நமக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தால்தான் இன்று சில சூழ்நிலைகளை நம்மால் நன்றாகச் சமாளிக்க முடியும். அப்படிப்பட்ட சில சூழ்நிலைகளைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

பலமான விசுவாசம் தேவைப்படும் சூழ்நிலைமைகள்

4. எந்தெந்த விஷயங்களில் தீர்மானங்கள் எடுக்கும்போது நமக்குப் பலமான விசுவாசம் தேவை?

4 ஒவ்வொரு நாளும் தீர்மானங்களை எடுக்கும்போது நமக்குப் பலமான விசுவாசம் தேவை. எந்தெந்த விஷயங்களில் நாம் தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது? நண்பர்கள், பொழுதுபோக்கு, படிப்பு, கல்யாணம், பிள்ளைகள், வேலை போன்ற விஷயங்களில்! அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: “‘இந்த உலகம் இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கும், சீக்கிரத்தில் புதிய உலகம் வரும்’ என்று நான் நம்புவதை என் தீர்மானங்கள் காட்டுகிறதா? அல்லது, ‘இருக்கும்வரை சந்தோஷமாக இருந்துவிட்டுப் போய்விடலாம்’ என்று உலகத்தார் மாதிரியே நானும் நினைப்பதைக் காட்டுகிறதா?” (மத். 6:19, 20; லூக். 12:16-21) புதிய உலகம் ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது என்று நாம் உறுதியாக நம்பினால் ஞானமான தீர்மானங்களை எடுப்போம்.

5-6. பிரச்சினையில் இருக்கும்போது நமக்கு ஏன் பலமான விசுவாசம் தேவை? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

5 சில பிரச்சினைகள் வரும்போதும் நமக்குப் பலமான விசுவாசம் தேவை. உதாரணமாக, நமக்குத் துன்புறுத்தல் வரலாம், தீராத வியாதி வரலாம், அல்லது நம்மைச் சோர்வடைய வைக்கும் வேறு ஏதாவது பிரச்சினை வரலாம். ஆரம்பத்தில் அதை நாம் தைரியமாகச் சமாளிப்போம். ஆனால், பொதுவாகப் பிரச்சினைகள் உடனடியாகத் தீருவதில்லை. அதனால், சகித்திருப்பதற்கும் தொடர்ந்து யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வதற்கும் நமக்குப் பலமான விசுவாசம் தேவை.—ரோ. 12:12; 1 பே. 1:6, 7.

6 நாம் ஏதாவது ஒரு பிரச்சினையில் இருக்கும்போது, ‘புதிய உலகம் வருவதுபோலவே தெரியவில்லை’ என்று யோசிக்கலாம். அதற்காக நம் விசுவாசம் குறைந்துவிட்டது என்று அர்த்தமா? அப்படிச் சொல்ல முடியாது. ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். கடுமையான வெயில் காலத்தில் இருக்கும்போது, ‘மழைக்காலம் வருவது போலவே தெரியவில்லை’ என்று நாம் யோசிக்கலாம். ஆனால், அது கண்டிப்பாக வரும் என்று நமக்குத் தெரியும். அதே மாதிரி, நாம் சோர்ந்துபோயிருக்கும்போது, ‘புதிய உலகம் வருவது போலவே தெரியவில்லை’ என்று நாம் யோசிக்கலாம். ஆனாலும், புதிய உலகம் கண்டிப்பாக வரும் என்று நமக்குத் தெரியும். நம் விசுவாசம் பலமாக இருக்கும்போது, கடவுளுடைய வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும் என்று நம்புவோம். (சங். 94:3, 14, 15; எபி. 6:17-19) அந்த நம்பிக்கையோடு, யெகோவாவுடைய வணக்கத்துக்கு வாழ்க்கையில் எப்போதுமே முதலிடம் கொடுப்போம்.

7. எந்த மாதிரி யோசிப்பதை நாம் தவிர்க்க வேண்டும்?

7 பிரசங்க வேலையைச் செய்யும்போதும் நமக்குப் பலமான விசுவாசம் தேவை. ஏனென்றால், புதிய உலகத்தைப் பற்றிய ‘நல்ல செய்தியை’ நாம் சொல்லும்போது நிறைய பேர் அதை நம்புவது இல்லை, ‘இதெல்லாம் எங்கு நடக்கப்போகிறது’ என்று நினைக்கிறார்கள். (மத். 24:14; எசே. 33:32) நாம் ஒருபோதும் அவர்களை மாதிரி யோசித்துவிடக் கூடாது. அப்படி யோசிக்காமல் இருப்பதற்கு நம் விசுவாசத்தை பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.

மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசியுங்கள்

8-9. மீட்புவிலையைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தும்?

8 நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான ஒரு வழி, மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பதுதான். கடவுளுடைய வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும் என்பதற்கு மீட்புவிலை ஒரு உத்தரவாதம். யெகோவா எதற்காக மீட்புவிலைக்கு ஏற்பாடு செய்தார்... அதற்காக எந்தளவு தியாகம் செய்தார்... என்பதையெல்லாம் நன்றாக யோசித்துப் பார்க்கும்போது, அவர் வாக்குக் கொடுத்த மாதிரியே புதிய உலகத்தில் என்றென்றும் வாழ்வோம் என்பதில் நம் விசுவாசம் பலமாகும். ஏன் என்பதைப் பார்க்கலாம்.

9 மீட்புவிலையைக் கொடுப்பதற்காக யெகோவா எந்தளவு தியாகம் செய்தார்? யெகோவா தன்னுடைய ஒரே மகனை, அதுவும் கோடிக்கணக்கான வருஷங்களாக தன்கூடவே இருந்த பாச மகனை, பரலோகத்திலிருந்து இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு பரிபூரண மனிதராகப் பிறந்து, எத்தனையோ பாடுகள் பட்டு, கடைசியில் துடிதுடித்து இறந்துபோனார். யெகோவா எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறார்! நாம் கொஞ்சக் காலம் மட்டும் நன்றாக வாழ்வதற்காகவா இயேசு பாடுகள் பட்டு இறந்துபோக யெகோவா அனுமதித்திருப்பார்? கண்டிப்பாக இல்லை! (யோவா. 3:16; 1 பே. 1:18, 19) அவர் இவ்வளவு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறார் என்றால், புதிய உலகத்தில் நம்மை என்றென்றும் வாழ வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை!

யெகோவாவின் வல்லமையைப் பற்றி யோசியுங்கள்

10. எபேசியர் 3:20 சொல்வதுபோல் எதைச் செய்ய யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறது?

10 நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான இரண்டாவது வழி, யெகோவாவின் வல்லமையைப் பற்றி யோசித்துப் பார்ப்பதுதான். தன்னுடைய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும் சக்தியும் வல்லமையும் யெகோவாவுக்கு இருக்கிறது. புதிய உலகத்தில் என்றென்றும் வாழ்வதெல்லாம் நடக்காத விஷயம் என்று மனிதர்கள் நினைக்கலாம். ஆனால், மனிதர்களால் எதைச் செய்ய முடியாதோ அதைச் செய்யப்போவதாகத்தான் யெகோவா நிறைய தடவை வாக்குக் கொடுத்திருக்கிறார். அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுள் ஆயிற்றே! (யோபு 42:2; மாற். 10:27) அவர் கொடுக்கும் வாக்குறுதிகள் என்ன சாதாரணமாகவா இருக்கும்?எபேசியர் 3:20-ஐ வாசியுங்கள்.

11. யெகோவா கொடுத்த ஏதாவது ஒரு அற்புதமான வாக்குறுதியைப் பற்றிச் சொல்லுங்கள். (“ அற்புதமான சில வாக்குறுதிகளின் நிறைவேற்றம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

11 பைபிள் காலங்களில் யெகோவா அவருடைய மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதெல்லாம் நடக்காத விஷயங்கள்போல் மனிதர்களுக்குத் தெரிந்திருக்கலாம். உதாரணத்துக்கு, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் வயதான காலத்தில் ஒரு மகன் பிறப்பான் என்று யெகோவா சொன்னார். (ஆதி. 17:15-17) அதுமட்டுமல்ல, ஆபிரகாமுடைய சந்ததிக்கு கானான் தேசத்தைக் கொடுக்கப்போவதாகச் சொன்னார். ஆனால், ஆபிரகாமுடைய சந்ததியான இஸ்ரவேலர்கள் எகிப்தில் வருஷக்கணக்காக அடிமைகளாக இருந்தார்கள். அதனால், யெகோவாவின் வாக்குறுதி நிறைவேறாது என்று அப்போது அவர்கள் நினைத்திருக்கலாம். இருந்தாலும், யெகோவா சொன்ன மாதிரியே நடந்தது. அதற்குப் பிறகு, வயதான எலிசபெத்துக்கு ஒரு மகன் பிறப்பான் என்று அவர் சொன்னார். கன்னிப்பெண்ணாக இருந்த மரியாள் வயிற்றில் தன்னுடைய மகனே பிறப்பார் என்றும் சொன்னார். அது நடந்தபோது, ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் யெகோவா கொடுத்திருந்த இன்னொரு வாக்குறுதியும் நிறைவேறியது!—ஆதி. 3:15.

12. யெகோவாவின் வல்லமையைப் பற்றி யோசுவா 23:14 மற்றும் ஏசாயா 55:10, 11 என்ன நம்பிக்கையைக் கொடுக்கின்றன?

12 சொன்னதையெல்லாம் யெகோவா எப்படி நிறைவேற்றியிருக்கிறார் என்று நாம் யோசித்துப் பார்க்கும்போது, அவருக்கு எவ்வளவு வல்லமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். புதிய உலகத்தைப் பற்றி அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதியில் நம் விசுவாசம் பலமாகும். (யோசுவா 23:14-ஐயும், ஏசாயா 55:10, 11-ஐயும் வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, புதிய உலகம் வெறும் கற்பனையோ கனவோ அல்ல, அது கண்டிப்பாக வரும் என்பதைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கும் நம்மால் உதவ முடியும். புதிய வானத்தையும் புதிய பூமியையும் பற்றிச் சொல்லும்போது, “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை” என்று யெகோவாவே சொல்லியிருக்கிறார்.—வெளி. 21:1, 5.

யெகோவாவிடம் நெருக்கமாவதற்கு உதவும் விஷயங்களையே எப்போதும் செய்யுங்கள்

சபைக் கூட்டங்கள்

இந்த விஷயம் உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தும்? (பாரா 13)

13. சபைக் கூட்டங்கள் எப்படி நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன? விளக்குங்கள்.

13 நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான மூன்றாவது வழி, கடவுளோடு நெருக்கமாவதற்கு உதவும் விஷயங்களைச் செய்வதுதான். அதில் ஒரு விஷயம்தான், சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது. ஆன்னா என்ற சகோதரி, பல வருஷங்களாக வித்தியாசமான முழுநேர சேவைகளைச் செய்திருக்கிறார். b கூட்டங்களைப் பற்றி அவர் சொல்லும்போது, “என் விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள கூட்டங்கள் ரொம்ப உதவி செய்திருக்கின்றன. பேச்சு கொடுப்பவர் திறமையாகப் பேசவில்லை என்றாலும் சரி, புதிதாக எதையாவது சொல்லவில்லை என்றாலும் சரி, அந்தப் பேச்சு ஏதோவொரு விதத்தில் எனக்குப் பிரயோஜனமாகத்தான் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு பைபிள் விஷயத்தை நான் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு உதவும் குறிப்புகள் அதில் இருந்திருக்கின்றன. அது என் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கிறது” என்று சொல்கிறார். சகோதர சகோதரிகள் சொல்லும் பதில்கள்கூட நிச்சயமாகவே நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்.—ரோ. 1:11, 12; 10:17.

ஊழியம்

இந்த விஷயம் உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தும்? (பாரா 14)

14. ஊழியம் எப்படி நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது?

14 நாம் ஊழியம் செய்யும்போதும் நம் விசுவாசம் பலமாகும். (எபி. 10:23) எழுபது வருஷங்களுக்கும் மேல் யெகோவாவுக்குச் சேவை செய்துவரும் பார்பரா இப்படிச் சொல்கிறார்: “நான் ஊழியம் செய்யும்போதெல்லாம் என் விசுவாசம் உறுதியாகியிருக்கிறது. யெகோவாவின் அருமையான வாக்குறுதிகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லச் சொல்ல, என் விசுவாசம் இன்னும் இன்னும் பலமாகிறது.”

தனிப்பட்ட படிப்பு

இந்த விஷயம் உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தும்? (பாரா 15)

15. தனிப்பட்ட படிப்பு எப்படி நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்? (படங்களையும் பாருங்கள்.)

15 நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் இன்னொரு விஷயம், தனிப்பட்ட படிப்பு. தனிப்பட்ட படிப்புக்கு ஒரு அட்டவணையை வைத்துக்கொள்வது சூசன் என்ற சகோதரிக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அடுத்த வார காவற்கோபுர படிப்புக்காகத் தயாரிப்பேன். திங்கள்கிழமையும் செவ்வாய்கிழமையும், வார நாளில் நடக்கும் கூட்டத்துக்காகத் தயாரிப்பேன். மற்ற நாட்களில், ஆராய்ச்சி செய்ய நினைத்த மற்ற விஷயங்களையெல்லாம் படிப்பேன்” என்று சொல்கிறார். இப்படித் தவறாமல் படிப்பதால், தன் விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ள அவரால் முடிகிறது. உலகத் தலைமை அலுவலகத்தில் வருஷக்கணக்காகச் சேவை செய்துவரும் ஐரீன் என்ற சகோதரி பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் படிக்கிறார். அது அவருடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதாகச் சொல்கிறார். “யெகோவா சொல்லியிருக்கும் தீர்க்கதரிசனங்களில் சின்னச் சின்ன விஷயங்கள்கூட அப்படியே நிறைவேறியிருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் சொல்கிறார். c

“நிச்சயம் நிறைவேறும்”

16. ஆபகூக் தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி இன்று நமக்கும் எப்படிப் பொருந்துகிறது? (எபிரெயர் 10:36, 37)

16 யெகோவாவின் ஊழியர்களில் சிலர் இந்த உலகத்தின் முடிவு வருவதற்காக ரொம்ப காலமாகக் காத்திருக்கிறார்கள். முடிவு வருவதற்கு ரொம்ப தாமதமாவதுபோல் நமக்கு ஒருவேளை தோன்றலாம். யெகோவா அதைப் புரிந்துகொள்கிறார். சொல்லப்போனால், அவர் ஆபகூக் தீர்க்கதரிசியிடம், “நிறைவேற வேண்டிய காலத்தில் தரிசனம் நிறைவேறும். அது வேகமாய் வந்துகொண்டிருக்கிறது; அது வராமல் போகாது. ரொம்ப நாட்கள் ஆவதுபோல் தெரிந்தாலும் அதற்காகக் காத்திரு. தரிசனம் நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” என்று சொன்னார். (ஆப. 2:3) ஆபகூக் தீர்க்கதரிசிக்காக மட்டும்தான் யெகோவா இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா? அல்லது, நமக்காகவும் சேர்த்துக் கொடுத்திருக்கிறாரா? கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் இந்த வார்த்தைகளை, புதிய உலகத்துக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்திக் காட்டினார். (எபிரெயர் 10:36, 37-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மை விடுவிக்கப்போகும் நாள் தாமதிப்பதுபோல் தெரிந்தாலும், அது “நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” என்பதில் நாம் நம்பிக்கையாக இருக்கலாம்.

17. ஆபகூக் தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுத்த ஆலோசனைப்படி ஒரு சகோதரி எப்படி நடந்துகொண்டார்?

17 “காத்திரு” என்று யெகோவா கொடுத்திருக்கும் ஆலோசனைப்படியே அவருடைய ஊழியர்களில் நிறைய பேர் செய்துவருகிறார்கள். சிலர் எத்தனையோ வருஷங்களாக அப்படிக் காத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, லூயீசா என்ற சகோதரி 1939-ல் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் என்னுடைய ஸ்கூல் படிப்பை முடிப்பதற்குள் அர்மகெதோன் வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. இருந்தாலும், யெகோவாவின் வாக்குறுதி நிறைவேறுவதற்காகக் காத்திருந்தவர்களைப் பற்றி பைபிளில் படிப்பது இவ்வளவு வருஷங்களாக எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, நோவா, ஆபிரகாம், யோசேப்பு மாதிரி நிறைய பேர், யெகோவா வாக்குக் கொடுத்திருந்த ஆசீர்வாதத்துக்காக ரொம்ப நாள் காத்திருந்தார்கள். அவர்களைப் பற்றிப் படிப்பது எனக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது. கடவுளுடைய வாக்குறுதிகள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்பிக்கையாக இருப்பதால், புதிய உலகம் ரொம்ப பக்கத்தில் வந்துவிட்டது என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள முடிகிறது. எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படித்தான்.” லூயீசா சொல்வது உண்மை என்று ரொம்ப காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துவரும் இன்னும் நிறைய பேரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

18. படைப்புகளைக் கவனிப்பது, புதிய உலகம் வரப்போகிறது என்பதில் நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தும்?

18 புதிய உலகம் இன்னும் வரவில்லைதான். ஆனால், அது கண்டிப்பாக வரும். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நம்மைச் சுற்றியிருக்கும் மனுஷர்கள், நட்சத்திரங்கள், மரங்கள், மிருகங்கள் போன்ற எதுவுமே ஒருசமயத்தில் இல்லை. ஆனால், அவற்றை உருவாக்க வேண்டுமென்று யெகோவா நினைத்தார். நினைத்தபடியே செய்தார். அதனால்தான், இன்று அவை நம் கண்முன் இருக்கின்றன. (ஆதி. 1:1, 26, 27) அதேபோலத்தான், புதிய உலகத்தைக் கொண்டுவர அவர் நினைத்திருக்கிறார். அதைக் கண்டிப்பாகக் கொண்டுவருவார். புதிய உலகத்தில் நாம் எல்லாருமே முழு ஆரோக்கியத்தோடு என்றென்றும் சந்தோஷமாக வாழப்போகிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் படைப்புகளை இன்று எப்படிக் கண்ணாரப் பார்க்கிறோமோ அதேபோல், யெகோவா குறித்திருக்கும் சமயத்தில் புதிய உலகத்தையும் கண்ணாரப் பார்ப்போம்!—ஏசா. 65:17; வெளி. 21:3, 4.

19. உங்களுடைய விசுவாசத்தை நீங்கள் எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்?

19 அதுவரை, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மீட்புவிலைக்காக நன்றியோடு இருங்கள். யெகோவாவின் வல்லமையைப் பற்றி யோசியுங்கள். யெகோவாவோடு நெருக்கமாவதற்கு உதவி செய்யும் விஷயங்களையே எப்போதும் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, “விசுவாசத்தாலும் பொறுமையாலும்” கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தைப் பார்க்கப்போகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்!—எபி. 6:11, 12; ரோ. 5:5.

பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை

a புதிய உலகம் வரும் என்று பைபிள் சொல்வதை இன்று நிறைய பேர் நம்புவதில்லை. ‘அதெல்லாம் ஒரு கனவுதான். நிஜத்திலெல்லாம் நடக்காது’ என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம், யெகோவாவுடைய வாக்குறுதிகள் எல்லாமே நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறோம். அதேசமயத்தில், அந்த வாக்குறுதிகள்மேல் நமக்கு இருக்கும் விசுவாசத்தை பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

c யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில்,தீர்க்கதரிசனங்கள்” என்ற தலைப்பில், பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிய நிறைய கட்டுரைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஜனவரி 1, 2008 காவற்கோபுர இதழில் வந்த “யெகோவா முன்னறிவிப்பவை நிறைவேறியே தீரும்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.