Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 17

பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்

ஆன்மீக பூஞ்சோலையை விட்டு வெளியே போய்விடாதீர்கள்!

ஆன்மீக பூஞ்சோலையை விட்டு வெளியே போய்விடாதீர்கள்!

“நான் புதிதாகப் படைக்கிறவற்றை என்றென்றும் அனுபவித்து மகிழுங்கள்.”—ஏசா. 65:18.

என்ன கற்றுக்கொள்வோம்?

ஆன்மீக பூஞ்சோலையால் நமக்கு என்ன நன்மை... அதற்குள் வருவதற்கு மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்... என்பதையெல்லாம் கற்றுக்கொள்வோம்.

1. ஆன்மீக பூஞ்சோலை என்றால் என்ன? நாம் என்ன செய்ய உறுதியாக இருக்க வேண்டும்?

 இன்று இந்த உலகத்தில் ஒரு பூஞ்சோலை இருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் அதில் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான சமாதானத்தை அனுபவிக்கிறார்கள். நல்ல விஷயங்களை சுறுசுறுப்பாக செய்கிறார்கள். அதில் இருப்பவர்கள், அதை விட்டு வெளியே போகக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார்கள். அதோடு, மற்றவர்களையும் எப்படியாவது அதற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், அது நிஜமான ஒரு இடம் கிடையாது. அது என்னவென்று யோசிக்கிறீர்களா? அதுதான் ஆன்மீக பூஞ்சோலை! a

2. ஆன்மீக பூஞ்சோலையை ஒரு அற்புதம் என்று எப்படி சொல்லலாம்?

2 சாத்தானுடைய கையில் இருக்கிற இந்த உலகம் ரொம்ப ஆபத்தானது. அதில் எங்கே பார்த்தாலும் வெறுப்பும் பகையும்தான் இருக்கிறது. (1 யோ. 5:19; வெளி. 12:12) ஆனால் யெகோவா, இதே உலகத்தில் ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார். அதில் அவருடைய மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பதற்கு உதவுகிறார். அவர்கள் ஆன்மீக விதத்தில் செழிப்பாக இருப்பதற்குத் தேவையானதையும் தருகிறார். அதனால்தான், இந்த ஆன்மீக பூஞ்சோலையை ஒரு ‘அடைக்கலம்’ என்றும் ‘தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டம்’ என்றும் பைபிள் சொல்கிறது. (ஏசா. 4:6; 58:11) சமாளிக்க முடியாத இந்தக் கடைசி நாட்களிலும், இந்தப் பூஞ்சோலையில் இருப்பவர்கள் யெகோவாவின் உதவியோடு சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.—ஏசா. 54:14; 2 தீ. 3:1.

3. ஏசாயா 65-ல் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் அன்று எப்படி நிறைவேறியது?

3 ஆன்மீக பூஞ்சோலையில் இருக்கிறவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார். அதை நாம் ஏசாயா 65-வது அதிகாரத்தில் பார்க்கலாம். அதன் முதல் நிறைவேற்றம் கி.மு. 537-ல் நடந்தது. அந்த சமயத்தில், பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். பாழாய் கிடந்த எருசலேமை மறுபடியும் அழகான ஒரு இடமாக மாற்றுவதற்கு யெகோவா அவர்களுக்கு உதவினார். அதுமட்டுமல்ல, அங்கே இருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கும் உண்மை வணக்கத்தின் மையமாக அதை ஆக்குவதற்கும் அவர்களுக்கு உதவினார்.—ஏசா. 51:11; சக. 8:3.

4. ஏசாயா 65-ல் இருக்கிற தீர்க்கதரிசனம் நம்முடைய காலத்தில் எப்படி நிறைவேறிக்கொண்டிருக்கிறது?

4 ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இரண்டாவது நிறைவேற்றம் கி.பி. 1919-ல் ஆரம்பித்தது. அந்த சமயத்தில், மகா பாபிலோனின் கீழ் அடிமைகளாக இருந்த யெகோவாவின் மக்கள் விடுதலையானார்கள். அதற்குப் பிறகு, இந்த ஆன்மீக பூஞ்சோலை கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. நல்ல செய்தியை ஆர்வமாக பிரசங்கித்தவர்கள் புது சபைகளை உருவாக்கினார்கள்; கிறிஸ்தவ குணங்களைக் காட்டினார்கள். முன்பு கொடூரமாகவும் மிருகத்தனமாகவும் நடந்துகொண்ட மக்கள் ‘கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொண்டார்கள்.’ (எபே. 4:24) ஏசாயா சொன்ன எல்லா ஆசீர்வாதங்களும் எதிர்காலத்தில் வரும் பூஞ்சோலையில் நிறைவேறும் என்பது உண்மைதான். ஆனாலும், இப்போதே நாம் ஆன்மீக பூஞ்சோலையில் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவை என்னென்ன என்பதைப் பற்றியும் அந்தப் பூஞ்சோலையை விட்டு நாம் ஏன் வெளியே போகவே கூடாது என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஆன்மீக பூஞ்சோலையின் ஆசீர்வாதங்கள்

5. ஏசாயா 65:13 சொல்கிறபடி, ஆன்மீக பூஞ்சோலைக்குள் இருக்கிற நாம் என்ன ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறோம்?

5 ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும். ஆன்மீக பூஞ்சோலையில் இருக்கிறவர்களுடைய வாழ்க்கையும் அதில் இல்லாதவர்களுடைய வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்பதை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் தத்ரூபமாக காட்டுகிறது. (ஏசாயா 65:13-ஐ வாசியுங்கள்.) ஆன்மீக பூஞ்சோலையில் இருக்கிறவர்கள், அதாவது தன்னை வணங்குகிறவர்கள், தன்னிடம் நெருங்கியிருக்க என்னவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் யெகோவா கொடுக்கிறார். உதாரணத்துக்கு, அவருடைய சக்தியையும், அவருடைய வார்த்தையையும் கொடுத்திருக்கிறார். எக்கச்சக்கமான ஆன்மீக உணவையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதனால், நாம் ‘சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாக’ இருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 22:17-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) ஆனால், ஆன்மீக பூஞ்சோலைக்கு வெளியே இருக்கிறவர்கள் ‘பசியில் வாடுகிறார்கள், தாகத்தில் தவிக்கிறார்கள், அவமானத்தில் கூனிக் கூறுகிறார்கள்.’ அவர்களுக்கு கடவுளோடு ஒரு நெருக்கமான பந்தம் இல்லை.—ஆமோ. 8:11.

6. யெகோவா நமக்கு எதைத் தருவதாக யோவேல் 2:21-24 சொல்கிறது, அவற்றிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம்?

6 யெகோவா தன்னுடைய மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களையும் அள்ளி தருவதாக யோவேல் தன்னுடைய தீர்க்கதரிசனத்தில் சொல்கிறார். அதாவது, தானியம், திராட்சமது மற்றும் ஒலிவ எண்ணெய்யை யெகோவா தருவதாக சொல்கிறார். அவர் தருகிற ஆன்மீக உணவும் இதில் அடங்கி இருக்கிறது. (யோவே. 2:21-24) பைபிள், பைபிள் பிரசுரங்கள், வெப்சைட், கூட்டங்கள், மாநாடுகள் மூலமாக அவர் அதைத் தருகிறார். இவற்றையெல்லாம் நாம் தினமும் எடுத்துக்கொண்டால், ஆன்மீக விதத்தில் ஆரோக்கியமாக இருப்போம்; புத்துணர்ச்சியும் அடைவோம்.

7. ‘சந்தோஷம் பொங்கும் இதயம்’ நமக்கு இருப்பதற்கு என்ன காரணம்? (ஏசாயா 65:14)

7 சந்தோஷமும் மனநிறைவும். கடவுளுடைய மக்களால் ‘சந்தோஷமாக ஆரவாரம்’ செய்ய முடிகிறது. ஏனென்றால், அவர்களுடைய இதயம் நன்றியால் பொங்குகிறது. (ஏசாயா 65:14-ஐ வாசியுங்கள்.) விசுவாசத்தைப் பலப்படுத்துகிற சத்தியம்... கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற ஆறுதலான வாக்குறுதிகள்... மீட்புவிலையின் அடிப்படையில் நமக்குக் கிடைத்திருக்கும் அருமையான எதிர்கால நம்பிக்கை... போன்றவை ‘சந்தோஷம் பொங்கும் இதயத்தை’ நமக்குத் தருகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் சகோதர சகோதரிகளிடம் பேசுவது நம்மை மகிழ்ச்சியில் பூரித்துப்போக வைக்கிறது!—சங். 34:8; 133:1-3.

8. ஆன்மீக பூஞ்சோலையில் இருக்கிற இரண்டு முக்கியமான அம்சங்கள் என்ன?

8 யெகோவாவின் மக்களுக்கு மத்தியில் இருக்கிற அன்பும் ஒற்றுமையும் ஆன்மீக பூஞ்சோலையின் முக்கியமான அம்சங்கள். இன்று நாம் அன்பால் ‘இணைந்திருப்பது’ புதிய உலகத்தில் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அழகாக படம்பிடித்து காட்டுகிறது. அந்த சமயத்தில், யெகோவாவின் மக்கள் இன்னும் அதிக அன்பையும் ஒற்றுமையையும் அனுபவிப்பார்கள். (கொலோ. 3:14) முதல் தடவையாக யெகோவாவின் சாட்சிகளைப் பார்த்தபோது தனக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: “சந்தோஷம் என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாமல் இருந்தது; என் குடும்பத்திலும் எனக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை. ஆனால், யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். ஒருவர்மேல் ஒருவர் அன்பைப் பொழிவதை நான் அங்கேதான் முதல் தடவையாக பார்த்தேன்.” ஒருவருக்கு உண்மையான சந்தோஷமும் மனநிறைவும் வேண்டுமென்றால், அவர் ஆன்மீக பூஞ்சோலைக்குள் வர வேண்டும்! யெகோவாவின் மக்களைப் பற்றி இந்த உலகம் சொல்லும் கதைகளை சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள், இங்கே வந்தால் உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் நாம் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், நாம் யெகோவாவிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கிறோம், அவருடைய சர்வலோக குடும்பத்தில் இருக்கிற எல்லாரிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கிறோம்.—ஏசா. 65:15.

9. நாம் அனுபவிக்கிற கஷ்டங்களுக்கு என்ன ஆகும் என்று ஏசாயா 65:16, 17 சொல்கிறது?

9 மன அமைதியும் நிம்மதியும். ஆன்மீக பூஞ்சோலையில் இல்லாதவர்கள் ‘வேதனை நிறைந்த இதயத்தோடு அலறுவார்கள்; துக்கத்தினால் அழுது புலம்புவார்கள்’ என்று ஏசாயா 65:14 சொல்கிறது. ஆனால், கடவுளுடைய மக்களும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்களே! அதைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் “இனிமேல் [கடவுளுடைய] கண் முன்னால் கஷ்டப்பட மாட்டார்கள். இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்துவிடுவார்கள்.” (ஏசாயா 65:16, 17-ஐ வாசியுங்கள்.) நம்முடைய கஷ்டங்களுக்கு யெகோவா முடிவு கட்டிவிடுவார். காலங்கள் போகப்போக, நாம் அனுபவித்த வலியும் வேதனையும்கூட நம் ஞாபகத்துக்கு வராது.

10. சகோதர சகோதரிகளோடு ஒன்றுகூடி வருவதை ஒரு ஆசீர்வாதம் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)

10 இன்றைக்கேகூட, கூட்டங்களுக்கு வரும்போது நம் மனதுக்கு அமைதி கிடைக்கிறது; கவலைகளை மறந்து அங்கே நிம்மதியாக இருக்க முடிகிறது. கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களான அன்பு, சந்தோஷம், சமாதானம், கருணை, சாந்தம் ஆகியவற்றை நாம் காட்டினால், ஆன்மீக பூஞ்சோலையில் இருக்கிற சமாதான சூழலுக்கு நம்மாலும் கைகொடுக்க முடியும். (கலா. 5:22, 23) கடவுளுடைய அமைப்பில் ஒருவராக இருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! இந்த ஆன்மீக பூஞ்சோலையில் இருப்பவர்கள், ‘புதிய வானமும், புதிய பூமியும்’ வரும் என்று கடவுள் தந்திருக்கும் வாக்குறுதி முழுமையாக நிறைவேறுவதைப் பார்ப்பார்கள்.

கடவுளுடைய குடும்பத்தில் ஒருவராக, ஆன்மீகப் பூஞ்சோலையில் இருப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்! (பாரா 10) c


11. ஏசாயா 65:18, 19-ல் சொல்லியிருக்கிறபடி, யெகோவா உருவாக்கியிருக்கிற ஆன்மீக பூஞ்சோலைக்குள் இருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்?

11 நன்றியுணர்வும் மகிழ்ச்சியும். இந்த ஆன்மீக பூஞ்சோலையை நாம் ஏன் ‘அனுபவித்து மகிழ வேண்டும்’ என்பதற்கான காரணத்தை ஏசாயா விளக்குகிறார். இந்த ஆன்மீக பூஞ்சோலையை உருவாக்கியதே யெகோவாதான்! (ஏசாயா 65:18, 19-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், ஆன்மீக ரீதியில் வறண்டு போயிருக்கும் இந்த உலகத்திலிருந்து அழகு கொஞ்சும் ஆன்மீக பூஞ்சோலைக்குள் மக்களை அவர் கூட்டிச்சேர்க்கிறார். அதற்கு நம்மைப் பயன்படுத்துகிறார். சத்தியத்தில் இருப்பதால் நாம் ஏகப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். இவற்றைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று தூண்டப்படுகிறோம்.—எரே. 31:12.

12. ஏசாயா 65:20-24-ல் சொல்லியிருக்கிற வாக்குறுதிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஏன்?

12 ஆன்மீக பூஞ்சோலையில் இருப்பதால் நமக்கு எதிர்கால நம்பிக்கை இருக்கிறது. அதைப் பற்றி நினைக்கும்போதே நம் இதயம் சந்தோஷத்தில் துள்ளுகிறது; நன்றியுணர்வு பொங்குகிறது. புதிய உலகத்தில் நாம் எதையெல்லாம் பார்க்கப் போகிறோம்... என்னவெல்லாம் செய்யப் போகிறோம்... என்று கற்பனை செய்து பாருங்கள்! பைபிள் இப்படி வாக்குறுதி கொடுக்கிறது: “இனி எந்தக் குழந்தையும் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோகாது. அற்ப ஆயுசில் யாரும் செத்துப்போக மாட்டார்கள்.” நாம் ‘வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்போம். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவோம்.’ நம்முடைய “கடின உழைப்பு வீண்போகாது.” ஏனென்றால், நாம் “யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற ஜனங்களாக” இருப்போம். நமக்கு ஒரு பாதுகாப்பான, திருப்தியான வாழ்க்கையைக் கொடுப்பதாக கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கப்போகிறது. நம் ஒவ்வொருவருடைய தேவைகளும் கடவுளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், நாம் ‘கூப்பிடுவதற்கு முன்பே அவர் பதில் சொல்வார். . . . எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துவார்.’—ஏசா. 65:20-24; சங். 145:16.

13. யெகோவாவை வணங்க ஆரம்பித்தப் பிறகு மக்கள் தங்கள் வாழ்க்கையில் செய்கிற மாற்றங்களைப் பற்றி ஏசாயா 65:25 என்ன சொல்கிறது?

13 சமாதானமும் பாதுகாப்பும். ஒருகாலத்தில் மிருகத்தனமாக நடந்தவர்கள்கூட கடவுளுடைய சக்தியின் உதவியால் மென்மையானவர்களாக மாறியிருக்கிறார்கள். (ஏசாயா 65:25-ஐ வாசியுங்கள்.) நிறைய முயற்சி எடுத்து தங்களுடைய மோசமான குணங்களை மாற்றியிருக்கிறார்கள். (ரோ. 12:2; எபே. 4:22-24) இருந்தாலும், நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்கள்தான், அதனால் தவறுகள் செய்வோம். இதை யோசித்துப் பாருங்கள்: யெகோவாதான் “எல்லா விதமான ஆட்களையும்” கூட்டிச்சேர்த்திருக்கிறார். அன்பு மற்றும் சமாதானம் என்ற முறிக்க முடியாத கயிறுகளால் அவர் நம்மை இணைத்திருக்கிறார். (தீத். 2:11) இப்படி ஒரு அற்புதத்தை சர்வவல்லமையுள்ள கடவுளால் மட்டும்தான் செய்ய முடியும்!

14. ஒரு சகோதரருடைய வாழ்க்கையில் ஏசாயா 65:25 எப்படி நிஜமானது?

14 மக்களால் உண்மையிலேயே தங்களுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். 20 வயது இளைஞர் ஒருவர் அடிக்கடி ஜெயிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். ஒழுக்கக்கேடான விஷயங்களை செய்தார், அடிதடி அட்டூழியம் செய்துகொண்டிருந்தார். கார் திருடுவது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் இன்னும் பெரிய பெரிய குற்றங்களையும் செய்துவந்தார். சண்டை என்றாலே வரிந்து கட்டிக்கொண்டு முதலில் போய் நிற்பார். பிறகு, அவருக்கு சத்தியம் கிடைத்தது; யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தார். அப்போது, ஆன்மீக பூஞ்சோலையில் யெகோவாவை வணங்குவதுதான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டார். ஞானஸ்நானம் எடுத்தப் பிறகு ஏசாயா 65:25 தன்னுடைய வாழ்க்கையில் எப்படி நிஜமாக ஆனது என்பதை அடிக்கடி யோசித்துப் பார்க்கிறார். சிங்கம் மாதிரி முரட்டுத்தனமாக இருந்தவர் ஆட்டுக்குட்டி மாதிரி சாதுவாக மாறிவிட்டார்.

15. ஆன்மீக பூஞ்சோலைக்குள் மற்றவர்கள் வரவேண்டும் என்று நாம் ஏன் நினைக்கிறோம், அவர்களை எப்படி அழைக்கலாம்?

15 “உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்” என்று ஏசாயா 65:13 ஆரம்பிக்கிறது. வசனம் 25, “யெகோவா சொல்கிறார்” என்று முடிகிறது. யெகோவா சொல்கிற ஒவ்வொரு வார்த்தையும் கண்டிப்பாக நிறைவேறும். (ஏசா. 55:10, 11) ஆன்மீக பூஞ்சோலையை யெகோவா ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்; அழகான ஒரு குடும்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். பாலைவனமாக இருக்கிற இந்த உலகத்தில் பாதுகாப்பான சோலைவனத்தில் நாம் இருக்கிறோம். (சங். 72:7) இவ்வளவு அருமையான இந்த ஆன்மீக பூஞ்சோலைக்குள் நிறைய பேர் வரவேண்டும் என்பதுதான் நம் ஆசை! அதனால்தான், சீஷராக்கும் வேலையை நாம் மும்முரமாக செய்கிறோம்.—மத். 28:19, 20.

ஆன்மீக பூஞ்சோலைக்குள் வர மற்றவர்களுக்கு உதவுங்கள்

16. ஆன்மீக பூஞ்சோலைக்குள் வர மக்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள்?

16 மற்றவர்கள் இந்தப் பூஞ்சோலைக்குள் வரவேண்டும் என்றால், நம் எல்லாருக்குமே ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. யெகோவா மாதிரியே நடந்துகொண்டால், நம் பொறுப்பை நம்மால் சரியாக செய்ய முடியும். விருப்பம் இல்லாத ஒருவரை யெகோவா வற்புறுத்தி தன்னுடைய அமைப்புக்குள் இழுக்க மாட்டார். அதற்கு பதிலாக, அன்பாக மக்களைத் தன் பக்கம் ‘ஈர்க்கிறார்.’ (யோவா. 6:44; எரே. 31:3) யெகோவாவுடைய நல்ல நல்ல குணங்களைப் பற்றியும் அவருடைய அருமையான சுபாவத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளும்போது, நல்மனமுள்ள மக்கள் அவர் பக்கம் தானாகவே ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல், நம்முடைய நல்ல குணங்களையும் நல்ல நடத்தையையும் பார்த்துக்கூட அவர்கள் ஈர்க்கப்பட வேண்டும்! அதற்கு நாம் என்ன செய்யலாம்?

17. ஆன்மீக பூஞ்சோலைக்குள் மற்றவர்களை ஈர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

17 ஆன்மீக பூஞ்சோலைக்குள் மற்றவர்களை ஈர்ப்பதற்கு ஒரு வழி: சகோதர சகோதரிகளிடம் நாம் அன்பாகவும் கரிசனையாகவும் நடந்துகொள்வதுதான். முதல் நூற்றாண்டில் இருந்த மக்கள் கொரிந்து சபையில் இருந்தவர்களைப் பார்த்து: “உண்மையாகவே கடவுள் உங்கள் மத்தியில் இருக்கிறார்” என்று சொன்னார்கள். ஒருவேளை, கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு அவர்கள் அப்படி சொல்லியிருக்கலாம். (1 கொ. 14:24, 25; சக. 8:23) நம்முடைய சபைக் கூட்டங்களுக்குப் புதிதாக வருகிறவர்களும் அதேமாதிரி சொல்ல வேண்டும். நாம் நடந்துகொள்ளும் விதம் அப்படி இருக்க வேண்டும்! ‘ஒருவரோடொருவர் சமாதானமாக இருங்கள்’ என்று பைபிள் சொல்கிற ஆலோசனைக்கு நாம் தொடர்ந்து கீழ்ப்படிய வேண்டும்.—1 தெ. 5:13.

18. எதைப் பார்த்து மக்கள் நம்முடைய அமைப்புக்குள் வரலாம்?

18 யெகோவா பார்க்கிற மாதிரி நாமும் நம்முடைய சகோதர சகோதரிகளைப் பார்க்க வேண்டும். அதை எப்படி செய்யலாம்? அவர்களுடைய குறைகளைப் பார்க்காமல், அவர்களுடைய நல்ல நல்ல குணங்களைப் பார்க்கலாம். அந்தக் குறைகள் காலங்கள் போகப்போக மறைந்துவிடும். நமக்குள் கருத்துவேறுபாடுகள் வந்தால், அன்பாக அதை சரி செய்துகொள்ளலாம். ‘ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டலாம். ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னிக்கலாம்.’ (எபே. 4:32) அன்புக்கு ஏங்கும் நெஞ்சங்கள் இதையெல்லாம் பார்த்து தானாகவே இந்தப் பூஞ்சோலைக்குள் வருவார்கள். b

ஆன்மீக பூஞ்சோலைக்கு உள்ளேயே இருங்கள்!

19. (அ) “ யெகோவாவை விட்டுப் போனவர்கள் திரும்பி வந்தார்கள்” என்ற பெட்டியில் இருப்பதுபோல், ஆன்மீக பூஞ்சோலைக்குள் மறுபடியும் வந்த சிலர் என்ன சொல்கிறார்கள்? (ஆ) என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

19 ஆன்மீக பூஞ்சோலைக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! இதன் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. யெகோவாவைப் புகழும் இதயங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த ஆன்மீக பூஞ்சோலையைக் கொடுத்ததற்காக நாம் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். யாருக்கெல்லாம் புத்துணர்ச்சி, மனநிறைவு, அமைதி, பாதுகாப்பு தேவையோ அவர்கள் எல்லாரும் ஆன்மீக பூஞ்சோலைக்குள் வரவேண்டும்; அதை விட்டு வெளியே போகக் கூடாது. ஆனால், நம்மை எப்படியாவது அதிலிருந்து வெளியே இழுக்க சாத்தான் வலையை விரித்து காத்துக்கொண்டிருக்கிறான். அதனால் ஜாக்கிரதை! (1 பே. 5:8; வெளி. 12:9) அவன் ஜெயிப்பதற்கு நாம் விடவே கூடாது. ஆன்மீக பூஞ்சோலையின் அழகையும் பரிசுத்தத்தையும் சமாதானத்தையும் காப்பாற்ற நாம் கடினமாக உழைக்கலாம்!

ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கிறவர்களுக்கு இப்போதும் எதிர்காலத்திலும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் (பாரா 19)


உங்கள் பதில் என்ன?

  • ஆன்மீக பூஞ்சோலை என்றால் என்ன?

  • ஆன்மீக பூஞ்சோலையில் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம்?

  • ஆன்மீக பூஞ்சோலைக்குள் மற்றவர்களை ஈர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பாட்டு 144 கண் முன் பரிசை வைப்போம்!

a வார்த்தையின் விளக்கம்:ஆன்மீக பூஞ்சோலை” என்பது யெகோவாவை வணங்குவதற்கான பாதுகாப்பான ஒரு சூழலைக் குறிக்கிறது. அதில் நாம் யெகோவாவோடு நல்ல பந்தத்தை அனுபவிக்கிறோம், சகோதர சகோதரிகளோடு சமாதானத்தையும் அனுபவிக்கிறோம்.

b ஆன்மீக பூஞ்சோலைக்குள் இருப்பதால் ஒரு சகோதரி எப்படி நன்மையடைந்தார் என்று தெரிந்துகொள்ள, jw.org-ல் இருக்கிற அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? அலினா ஷீட்நிகோவா: என் கனவு நனவானது என்ற வீடியோவைப் பாருங்கள்.

c பட விளக்கம்: கூட்டத்தில் எல்லாரும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சகோதரர் மட்டும் யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கியிருக்கிறார்.