Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்’

‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்’

“உன் கைகளைத் தளரவிடாதே.”—செப். 3:16.

பாடல்கள்: 81, 32

1, 2. (அ) இன்று நிறைய பேருக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன, அதனால் என்ன ஆகிறது? (ஆ) ஏசாயா 41:10, 13 நமக்கு என்ன நம்பிக்கையைத் தருகிறது?

ஒழுங்கான பயனியராகவும் மூப்பருடைய மனைவியாகவும் இருக்கிற ஒரு சகோதரி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “ஆன்மீக காரியங்கள்ல நான் தவறாம ஈடுபட்டாலும், ரொம்ப வருஷமாவே நான் கவலையில மூழ்கியிருந்தேன். என்னால சரியா தூங்க முடியாது. என் உடல்நிலை பாதிக்கப்பட்டுச்சு, நான் மத்தவங்கள நடத்துற விதமும் பாதிக்கப்பட்டுச்சு. சில சமயத்தில, இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாதுனு தோணும்” என்று அவர் சொல்கிறார்.

2 இந்தச் சகோதரியின் உணர்ச்சிகளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகத்தில் வாழ்வதால் நமக்கு நிறைய அழுத்தங்கள் வருகின்றன. அதனால், நாம் கவலையில் மூழ்கிவிடலாம், மனச்சோர்வால் பாதிக்கப்படலாம். ஒரு நங்கூரம் படகை நகர விடாமல் தடுப்பது போல் இது இருக்கிறது. (நீதி. 12:25) என்னென்ன பிரச்சினைகளால் நீங்கள் கவலையில் மூழ்கிவிடலாம்? ஒருவேளை உங்கள் அன்பானவர்கள் இறந்திருக்கலாம், நீங்கள் மோசமான வியாதியால் கஷ்டப்படலாம், துன்புறுத்தலை சகித்துக்கொண்டு இருக்கலாம். அல்லது, பணக்கஷ்டத்தால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கலாம். நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால், காலப்போக்கில் உங்கள் பலம் குறைந்து விடும், உங்கள் சந்தோஷமும் பறிபோய்விடும். ஆனால், உங்களுக்கு உதவி செய்ய கடவுள் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதில் நம்பிக்கையாக இருங்கள்.ஏசாயா 41:10, 13-ஐ வாசியுங்கள்.

3, 4. (அ) “கை” என்ற வார்த்தை பைபிளில் எதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? (ஆ) நம் கைகள் ஏன் தளர்ந்து போய்விடலாம்?

3 ஒரு நபரின் குணங்கள் அல்லது செயல்களைப் பற்றி விவரித்துச் சொல்வதற்கு, உடல் உறுப்புகளை பைபிள் நிறைய சமயங்களில் பயன்படுத்தியிருக்கிறது. உதாரணத்துக்கு, “கை” என்ற வார்த்தை நூற்றுக்கணக்கான தடவை பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவரின் கைகள் திடப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பைபிள் சொல்லும்போது, அவருக்கு உற்சாகம் கிடைத்திருக்கிறது, பலம் கிடைத்திருக்கிறது, அவர் செயல்பட தயாராக இருக்கிறார் என்று அர்த்தம். (1 சா. 23:16; எஸ்றா 1:6) அதோடு, அவர் நம்பிக்கையாக இருக்கிறார் என்றும் எதிர்கால நம்பிக்கை அவருக்கு இருக்கிறது என்றும் அர்த்தம்.

4 ஒருவர் தன் கைகளை நெகிழவிட்டுவிட்டார், அதாவது தளரவிட்டுவிட்டார் என்று சொல்லும்போது, அவர் சோர்ந்துவிட்டார், நம்பிக்கையிழந்துவிட்டார் என்று அர்த்தம். (2 நா. 15:7; எபி. 12:12) நீங்கள் அழுத்தத்தில் இருந்தாலோ உடல் ரீதியில் சோர்வாக இருந்தாலோ, அல்லது யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பு பலவீனமாகிக்கொண்டே வருவதுபோல் தெரிந்தாலோ, இதற்கு மேல் எதையும் செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். அப்போது, உங்களுக்குத் தேவையான தைரியம் எங்கிருந்து கிடைக்கும்? உற்சாகத்தையும், சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தையும் நீங்கள் எப்படிப் பெறலாம்? அதேசமயம், நீங்கள் எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம்?

‘இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவில்லை’

5. (அ) பிரச்சினைகள் வரும்போது நாம் எப்படி உணரலாம், ஆனால் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

5 செப்பனியா 3:16, 17-ஐ வாசியுங்கள். நமக்குப் பிரச்சினைகள் வரும்போது, நாம் பயந்துவிடலாம், சோர்ந்துவிடலாம், நம் கைகளைத் தளரவிட்டுவிடலாம். ஆனால், நம் அன்பான அப்பா யெகோவா, நம்முடைய எல்லா கவலைகளையும் அவர்மேல் போட்டுவிடும்படி சொல்கிறார். (1 பே. 5:7) இஸ்ரவேலர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டது போல் அவர் நம்மையும் பார்த்துக்கொள்வார். ‘இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவில்லை’ என்று யெகோவா அவர்களிடம் சொன்னார். தனக்கு உண்மையாக இருக்கும் ஊழியர்களைக் காப்பாற்ற அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். (ஏசா. 59:1) இந்தக் கட்டுரையில் மூன்று அருமையான பைபிள் உதாரணங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். தன்னுடைய மக்களுக்குக் கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும் தன்னுடைய நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற தன் மக்களை யெகோவாவால் பலப்படுத்த முடியும் என்றும், அதற்கான ஆசை அவருக்கு இருக்கிறது என்றும் இந்த உதாரணங்களிலிருந்து தெரிந்துகொள்வோம். இந்த உதாரணங்கள் உங்களை எப்படிப் பலப்படுத்தும் என்று இப்போது பார்க்கலாம்.

6, 7. இஸ்ரவேலர்கள் போரில் ஜெயித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 எகிப்திலிருந்து விடுதலையான கொஞ்ச காலத்திலேயே அமலேக்கியர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கினார்கள். போரில் இஸ்ரவேலர்களை முன்நின்று வழிநடத்தும்படி தைரியசாலியான யோசுவாவிடம் மோசே சொன்னார். பின்பு, ஆரோனையும் ஊரையும் கூட்டிக்கொண்டு பக்கத்திலிருந்த ஒரு மலையுச்சிக்குப் போனார். அங்கிருந்து, அவர்களால் போர்க்களத்தைப் பார்க்க முடிந்தது. அவர்கள் மூன்று பேரும் பயந்துபோய் போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டார்களா? இல்லை!

7 இஸ்ரவேலர்கள் போரில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மோசே என்ன செய்தார்? உண்மைக் கடவுளுடைய கோலை வானத்தை நோக்கி தூக்கிப் பிடித்தார். மோசே அப்படிச் செய்தபோது, அமலேக்கியர்களைத் தோற்கடிக்க யெகோவா இஸ்ரவேலர்களுக்குச் சக்தி கொடுத்தார். ஆனால், மோசேயின் கைகள் வலித்தன, தளர்ந்துபோக ஆரம்பித்தன. அப்போது, அமலேக்கியர்கள் ஜெயிக்க ஆரம்பித்தார்கள். உடனே, ஆரோனும் ஊரும் மோசேக்கு உதவி செய்தார்கள். “அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.” யெகோவாவின் பலத்த கையால் இஸ்ரவேலர்கள் அந்தப் போரில் ஜெயித்தார்கள்.—யாத். 17:8-13.

8. (அ) எத்தியோப்பியர்கள் யூதாவை மிரட்டியபோது, ஆசா என்ன செய்தார்? (ஆ) நாம் எப்படி ஆசாவைப் போல் நடந்துகொள்ளலாம்?

8 தன் மக்களுக்கு உதவி செய்வதற்காக, ஆசா ராஜாவின் காலத்திலும் யெகோவா தன் பலத்த கையைப் பயன்படுத்த தயாராக இருந்தார். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் படைகளிலேயே எத்தியோப்பியனாகிய சேராவின் படைதான் மிகப்பெரியது. எத்தியோப்பிய படை ஆசா ராஜாவின் படையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரியதாக இருந்தது. அனுபவமுள்ள பத்து லட்சம் போர் வீரர்கள் அந்தப் படையில் இருந்தார்கள். அதை நினைத்து ஆசா கவலைப்பட்டாரா, பயந்தாரா, சோர்ந்துபோய்விட்டாரா, தன் கைகளைத் தளரவிட்டுவிட்டாரா? இல்லை! உடனடியாக அவர் யெகோவாவிடம் உதவி கேட்டார். போர் செய்கிறவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், எத்தியோப்பியர்களிடம் போரில் ஜெயிப்பது முடியாத காரியமாகத் தெரியலாம். ஆனால், “கடவுளால் எல்லாமே முடியும்.” (மத். 19:26) கடவுள் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, ‘எத்தியோப்பியரை ஆசாவுக்கு முன்பாக முறியடித்தார்.’ ஏனென்றால், “ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.”—2 நா. 14:8-13; 1 இரா. 15:14.

9. (அ) எருசலேமின் சுவர்களைப் பார்த்து நெகேமியா சோர்ந்து போனாரா? விளக்குங்கள். (ஆ) நெகேமியாவின் ஜெபத்துக்குக் கடவுள் எப்படிப் பதிலளித்தார்?

9 நெகேமியா எருசலேமுக்குப் போனபோது, அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். வேறு நாட்டு எதிரிகள் யூதர்களை மிரட்டிக்கொண்டு இருந்ததால், யூதர்கள் எருசலேமின் சுவர்களைக் கட்டுவதை நிறுத்தியிருந்தார்கள். அந்த நகரம் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. அதனால், யூதர்கள் சோர்ந்து போயிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து நெகேமியாவும் சோர்ந்து போனாரா, தன் கைகளைத் தளர விட்டாரா? இல்லை! மோசே, ஆசா, மற்றும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்த மற்ற ஊழியர்களைப் போல இவரும் எப்போதும் யெகோவாவை நம்பினார். அந்தச் சூழ்நிலையில்கூட, உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தார். யெகோவாவும் அவருக்குப் பதில் கொடுத்தார். தன்னுடைய ‘மகா வல்லமையாலும்’ ‘பலத்த கரத்தினாலும்’ அவர் யூதர்களைப் பலப்படுத்தினார். (நெகேமியா 1:10; 2:17-20; 6:9-ஐ வாசியுங்கள்.) யெகோவா இன்றும் தன் ஊழியர்களை தன்னுடைய ‘மகா வல்லமையாலும்’ ‘பலத்த கரத்தினாலும்’ பலப்படுத்துகிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

யெகோவா உங்கள் கைகளைப் பலப்படுத்துவார்

10, 11. (அ) நம் கைகளைத் தளரவிடுவதற்கு சாத்தான் என்ன செய்கிறான்? (ஆ) யெகோவா நம்மை எப்படியெல்லாம் பலப்படுத்துகிறார்? (இ) யெகோவா கொடுக்கிற ஆலோசனைகளிலிருந்தும் பயிற்சிகளிலிருந்தும் நீங்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள்?

10 சாத்தான் தன்னுடைய கைகளை ஒருபோதும் தளரவிட மாட்டான் என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நம்முடைய வேலைகளைத் தடுத்து நிறுத்த அவன் நம்மைத் தொடர்ந்து தாக்குவான். அரசாங்கங்களையும், மதத் தலைவர்களையும், விசுவாச துரோகிகளையும் பயன்படுத்தி நமக்கு எதிராகப் பொய்களைப் பரப்புகிறான், நம்மை மிரட்டுகிறான். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிப்பதை நாம் நிறுத்த வேண்டும் என்பதுதான் அவனுடைய குறிக்கோள். ஆனால், யெகோவாவால் நமக்கு உதவி செய்ய முடியும், அப்படி உதவி செய்ய அவருக்கு ஆசையும் இருக்கிறது. அதோடு, அவருடைய சக்தியைத் தந்து அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். (1 நா. 29:12) சாத்தானையும் அவனுடைய பொல்லாத உலகத்தையும் எதிர்த்துப் போராட அவருடைய சக்திக்காக ஜெபம் செய்வது ரொம்ப முக்கியம். (சங். 18:39; 1 கொ. 10:13) அதோடு, கடவுளுடைய வார்த்தையிலிருந்து நமக்குக் கிடைக்கும் உதவிக்காகவும் நன்றியோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய பிரசுரங்களிலிருந்து நாம் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம் என்றும் யோசித்துப் பாருங்கள்! சகரியா 8: 9, 13-ல் (வாசியுங்கள்) இருக்கிற வார்த்தைகள், எருசலேம் ஆலயம் திரும்பக் கட்டப்பட்ட சமயத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இன்றும் நமக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன.

11 நம்முடைய கூட்டங்கள், மாநாடுகள், மற்றும் பைபிள் பள்ளிகளிலிருந்து கிடைக்கிற ஆலோசனைகள் மூலமாகவும் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். சரியான உள்நோக்கத்தோடு கடவுளுக்குச் சேவை செய்ய இந்த ஆலோசனைகள் நமக்கு உதவுகின்றன. அதோடு, இலக்குகள் வைக்கவும், கடவுளுடைய சேவையில் நமக்கு இருக்கும் பொறுப்புகளைச் சரியாகச் செய்யவும் அவை உதவுகின்றன. (சங். 119:32) யெகோவா கொடுக்கிற ஆலோசனைகள் மூலம் பலம் பெறுவதற்கு நீங்கள் ஆர்வமாக முயற்சி செய்கிறீர்களா?

12. பலமுள்ளவர்களாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

12 அமலேக்கியர்களையும் எத்தியோப்பியர்களையும் தோற்கடிக்க யெகோவா இஸ்ரவேலர்களுக்கு உதவி செய்தார். அதுமட்டுமல்ல, எருசலேமின் சுவரைத் திரும்பக் கட்டி முடிப்பதற்கு நெகேமியாவுக்கும் யூதர்களுக்கும் பலம் கொடுத்தார். அதே போல், எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும், நம் செய்தியை மற்றவர்கள் கேட்காமல் போனாலும் நாம் தொடர்ந்து ஊழியம் செய்ய அவர் நமக்குப் பலம் கொடுப்பார். (1 பே. 5:10) யெகோவா நம் பிரச்சினைகளை அற்புதமான விதத்தில் சரிசெய்ய மாட்டார். பிரச்சினைகளைச் சமாளிக்க, நம்முடைய பங்கில் நாம் தொடர்ந்து முயற்சி எடுப்பது அவசியம். அதற்கு, நாம் தினமும் பைபிளை வாசிக்க வேண்டும், கூட்டங்களுக்குத் தயாரிக்க வேண்டும், ஒவ்வொரு வாரமும் தவறாமல் கூட்டங்களுக்குப் போக வேண்டும். அதோடு, தனிப்பட்ட படிப்பையும் குடும்ப வழிபாட்டையும் தவறவிடக்கூடாது. விடாமல் ஜெபம் செய்ய வேண்டும், எப்போதும் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். நம்மைப் பலப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் யெகோவா செய்திருக்கிற ஏற்பாடுகளிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்ப எதையும் அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை, இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் சரியாகச் செய்யாதது போல் தெரிந்தால் உதவிக்காக யெகோவாவிடம் கேளுங்கள். அப்போது, செயல்படுவதற்கான ஆர்வத்தையும் வல்லமையையும் கடவுளுடைய சக்தி உங்களுக்குத் தரும். (பிலி. 2:13) உங்களால் மற்றவர்களுடைய கைகளைப் பலப்படுத்த முடியுமா, அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள்

13, 14. (அ) மனைவியை இழந்த ஒரு சகோதரருக்கு எப்படிப் பலம் கிடைத்தது? (ஆ) நாம் எப்படி மற்றவர்களைப் பலப்படுத்தலாம்?

13 நம்மை உற்சாகப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் அன்பான சகோதர சகோதரிகளை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். “தளர்ந்த கைகளையும் தள்ளாடுகிற முழங்கால்களையும் திடப்படுத்துங்கள்; உங்கள் கால்களுக்கு வழிகளை எப்போதும் நேராக்குங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 12:12, 13) ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு, சகோதர சகோதரிகள் மூலம் இது போன்ற உதவிகள் கிடைத்தன. இன்றும் அப்படிப்பட்ட உதவிகள் நமக்குக் கிடைக்கின்றன. ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: தன் மனைவி இறந்த பிறகு, பல கஷ்டமான சூழ்நிலைகளைச் சகித்த ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நமக்கு என்ன கஷ்டம் வரும், எப்ப வரும், அது எப்படியிருக்கும்னு யாருக்கும் தெரியாது. தண்ணீல மூழ்கிடாம இருக்குறதுக்கு உதவுற கவசம் மாதிரி, ஜெபமும் தனிப்பட்ட படிப்பும்தான் கஷ்டங்கள தாக்குப்பிடிக்க எனக்கு உதவியா இருந்துச்சு. சபையில இருக்கிற சகோதர சகோதரிகள் ஆதரவா இருந்தது, எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. கஷ்டம் வர்றதுக்கு முன்னாடியே யெகோவாகிட்ட நல்ல பந்தத்தை வளர்த்துக்குறது எவ்வளவு முக்கியம்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.”

சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம் (பாரா 14)

14 அமலேக்கியர்களுக்கு எதிரான போரில், மோசேயின் கைகளைத் தாங்கிப் பிடித்ததன் மூலம் ஆரோனும் ஊரும் அவருடைய கைகளைத் திடப்படுத்தினார்கள். அதே போல், மற்றவர்களைப் பலப்படுத்தவும் அவர்களுக்கு உதவவும் என்ன செய்யலாம் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நம் சகோதர சகோதரிகள் சிலர், வயதாவதாலும் உடல்நலப் பிரச்சினைகளாலும் கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சிலர், குடும்பத்தாரிடமிருந்து வரும் எதிர்ப்புகளாலும், தனிமையாலும், அன்பானவரை மரணத்தில் இழந்ததாலும் அவதிப்படுகிறார்கள். இளம் பிள்ளைகள் சிலர், தவறு செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அல்லது இந்த உலகத்தில் பெரிய ஆளாக ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளை நாம் பலப்படுத்தலாம். (1 தெ. 3:1-3; 5:11, 14) சபையிலோ, ஊழியம் செய்யும்போதோ, ஒன்றுசேர்ந்து சாப்பிடும்போதோ, ஃபோனில் பேசும்போதோ சகோதர சகோதரிகளிடம் எப்படி அக்கறை காட்டலாம் என்று யோசித்துப் பாருங்கள்.

15. நல்வார்த்தைகளைப் பேசுவதால் நம் சகோதர சகோதரிகள் எப்படி நன்மையடைவார்கள்?

15 எத்தியோப்பியர்களின் பெரிய படையைத் தோற்கடித்த ஆசா ராஜாவையும் அவருடைய மக்களையும் அசரியா தீர்க்கதரிசி உற்சாகப்படுத்தினார். அவர்களிடம், “நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு” என்று சொன்னார். (2 நா. 15:7) உண்மை வணக்கத்தை மறுபடியும் கொண்டுவருவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்யும்படி இந்த வார்த்தைகள் ஆசாவைத் தூண்டியது. அதேபோல், நீங்கள் சொல்லும் நல்வார்த்தைகள் மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம், அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யவும் உதவலாம். (நீதி. 15:23) கூட்டங்களில் நீங்கள் சொல்லும் உற்சாகமான பதில்கள் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்தும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

16. மூப்பர்கள் எப்படி நெகேமியாவைப் போல் நடந்துகொள்ளலாம்? சகோதர சகோதரிகள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

16 யெகோவாவின் உதவியால் நெகேமியாவும் மற்ற யூதர்களும் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். வெறும் 52 நாட்களில் எருசலேமின் சுவர்களைக் கட்டி முடித்தார்கள். (நெ. 2:18; 6:15, 16) மற்றவர்கள் வேலை செய்தபோது நெகேமியா சும்மா நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கவில்லை, அவரும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்தார். (நெ. 5:16) இன்றும் நிறைய மூப்பர்கள் நெகேமியாவைப் போலவே இருக்கிறார்கள். கட்டுமான வேலையில் உதவி செய்கிறார்கள், ராஜ்ய மன்றங்களைச் சுத்தம் செய்கிறார்கள், அதைப் பராமரிக்கிறார்கள். அதோடு, இந்த அன்பான சகோதரர்கள் சபையில் இருக்கிறவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார்கள், கவலையில் இருக்கிறவர்களைப் போய் பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் அவர்களைப் பலப்படுத்துகிறார்கள்.ஏசாயா 35:3, 4-ஐ வாசியுங்கள்.

உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்

17, 18. கஷ்டங்கள் வரும்போதும், கவலையில் இருக்கும்போதும் நாம் எதைப் பற்றி நம்பிக்கையோடு இருக்கலாம்?

17 நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து வேலை செய்யும்போது நமக்குள் இருக்கும் ஒற்றுமை பலப்படுகிறது. என்றென்றும் நிலைத்திருக்கும் நட்புகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது. கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் கொண்டுவரப்போகும் ஆசீர்வாதங்களின் மேல் நம் நம்பிக்கையும் அதிகமாகிறது. மற்றவர்களைப் பலப்படுத்தும்போது, கஷ்டமான சூழ்நிலைகளைச் சகிக்கவும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருக்கவும் அவர்களுக்கு உதவுகிறோம். அப்படிச் செய்யும்போது, நம்முடைய கைகளும் பலப்படுகின்றன. அதோடு, எதிர்காலத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கவும் அது நமக்கு உதவியாக இருக்கிறது.

18 பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார், அவர்களை எப்படியெல்லாம் பாதுகாத்திருக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அப்போது, யெகோவாமேல் நமக்கு இருக்கும் விசுவாசமும் நம்பிக்கையும் பலப்படும். அதனால், கஷ்டங்கள் வரும்போதும், கவலையில் இருக்கும்போதும், உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள். உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அப்போது, அவருடைய பலத்த கை உங்களைப் பலப்படுத்தும், அவருடைய அரசாங்கத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களை வழிநடத்தும்.—சங். 73:23, 24.