Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது”

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

“உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்று எபிரெயர் 4:12-ல் சொல்லப்பட்டிருக்கும் அந்த “கடவுளுடைய வார்த்தை” எது?

பைபிளில் இருக்கும் செய்தியை அல்லது திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருக்கும் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார் என்பதை இந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது.

வாழ்க்கையை மாற்றும் சக்தி பைபிளுக்கு இருப்பதைப் பற்றி விளக்க, நம் பிரசுரங்கள் எபிரெயர் 4:12-ஐ அடிக்கடி பயன்படுத்துகின்றன. நம் பிரசுரங்கள் அப்படி விளக்குவது பொருத்தமானதுதான். இருந்தாலும், இந்த வசனத்தின் சூழமைவை இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்ப்பது நல்லது. கடவுளுடைய நோக்கங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி எபிரெய கிறிஸ்தவர்களை பவுல் உற்சாகப்படுத்தினார். அதைப் பற்றி பரிசுத்த எழுத்துக்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. எகிப்திலிருந்து காப்பாற்றப்பட்ட இஸ்ரவேலர்களை பவுல் உதாரணம் காட்டினார். கடவுள் வாக்குக் கொடுத்திருந்த “பாலும் தேனும் ஓடுகிற” தேசத்தில் நுழையும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது; உண்மையான இளைப்பாறுதலை, அதாவது ஓய்வை அவர்களால் அங்கே அனுபவிக்க முடியும்.—யாத். 3:8; உபா. 12:9, 10.

அவர்கள் ஓய்வை அனுபவிக்க வேண்டும் என்பது கடவுளுடைய திட்டவட்டமான நோக்கமாக இருந்தது. சில காலத்துக்குப் பிறகு, இஸ்ரவேலர்களின் இதயம் இறுகிப்போனது, அவர்கள் விசுவாசத்தைக் காட்டவில்லை. அதனால், பெரும்பாலான இஸ்ரவேலர்கள் அந்த ஓய்வை அனுபவிக்கவில்லை. (எண். 14:30; யோசு. 14:6-10) இருந்தாலும், “[கடவுளோடு] சேர்ந்து ஓய்வை அனுபவிப்பது பற்றிய வாக்குறுதி” இன்னும் இருப்பதாக பவுல் சொன்னார். (எபி. 3:16-19; 4:1) கடவுளுடைய திட்டவட்டமான நோக்கத்தின் ஒரு பாகம்தான் அந்த “வாக்குறுதி.” எபிரெய கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் அந்த நோக்கத்தைப் பற்றி படித்து, அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம். பைபிள் வசனங்களின் அடிப்படையில்தான் அந்த வாக்குறுதி சொல்லப்பட்டது என்பதை வலியுறுத்துவதற்காக, ஆதியாகமம் 2:2 மற்றும் சங்கீதம் 95:11-ல் இருக்கும் சில பகுதிகளை பவுல் மேற்கோள் காட்டினார்.

“[கடவுளோடு] சேர்ந்து ஓய்வை அனுபவிப்பது பற்றிய வாக்குறுதி இன்னும் இருப்பதால்” நாம் சந்தோஷப்பட வேண்டும். இந்த வாக்குறுதி பைபிள் அடிப்படையிலானது. அதனால், கடவுளுடைய ஓய்வை அனுபவிப்பதற்கான வாய்ப்பு உண்மையிலேயே இருக்கிறது என்பதை நாம் நம்புகிறோம்; அதற்காகச் சில படிகளையும் எடுத்திருக்கிறோம். மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவோ மற்ற விஷயங்களைச் செய்து கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவோ கடினமாக முயற்சி செய்வதன் மூலம் நாம் அந்தப் படிகளை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, விசுவாசத்தால்தான் கடவுளுடைய திட்டவட்டமான நோக்கத்துக்கு சந்தோஷமாக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறோம், தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தும் வருகிறோம். ஏற்கெனவே பார்த்தபடி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பைபிளைப் படிக்கவும் கடவுளுடைய திட்டவட்டமான நோக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்திருக்கிறார்கள். நிறைய பேர், அவர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறார்கள், விசுவாசம் காட்டியிருக்கிறார்கள், ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்பதற்கு அவர்களுடைய வாழ்க்கை ஆணித்தரமான அத்தாட்சி! பைபிளில் இருக்கிற கடவுளுடைய திட்டவட்டமான நோக்கம், ஏற்கெனவே நம் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது, தொடர்ந்து அது நம் வாழ்க்கையில் வல்லமையோடு செயல்படும்.