Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரே, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்!

பெற்றோரே, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்!

‘இளம் ஆண்களும் இளம் பெண்களும் யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.’ —சங். 148:12, 13, NW.

பாடல்கள்: 88, 115

1, 2. (அ) யெகோவாமீது விசுவாசம் வைக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது ஏன் சுலபம் இல்லை, அதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்? (ஆ) என்ன 4 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கப்போகிறோம்?

பிரான்சில் இருக்கும் ஓர் அப்பா அம்மா இப்படிச் சொன்னார்கள்: “நாம யெகோவாவ நம்புறோங்கிறதுக்காக பிள்ளைகளும் நம்புவாங்கனு சொல்ல முடியாது. பிறக்கும்போதே யாருக்கும் விசுவாசம் இருக்குறது இல்ல. நம்ம பிள்ளைங்க அதை கொஞ்சம் கொஞ்சமாதான் வளர்த்துக்கிறாங்க.” ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு சகோதரர் இப்படி எழுதினார்: “விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவி செய்வதுதான் இருப்பதிலேயே கஷ்டமான விஷயம்.” அதோடு, அவர் இப்படியும் எழுதினார்: “உங்கள் பிள்ளை கேட்ட கேள்விக்கு நீங்கள் திருப்தியாக பதில் சொல்லிவிட்டதாக நினைக்கலாம். ஆனால், அவர்கள் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். உங்களுடைய பதில், உங்கள் பிள்ளைக்கு அப்போதைக்குத் திருப்தியாக இருக்கலாம். ஆனால், நாளையும் திருப்தியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.” பிள்ளைகளுக்கு ஏற்கெனவே சொன்ன ஒரு விஷயத்தை, அவர்கள் வளர்ந்த பிறகும் விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை நிறைய பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள். யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள, வெவ்வேறு வழிகளில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

2 எதிர்காலத்தில் விசுவாசமுள்ள ஆண்களாகவும் பெண்களாகவும் ஆகும் விதத்தில் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதும் வடிவமைப்பதும் சுலபம் இல்லை என்று நினைக்கிறீர்களா? நாம் யாராலுமே நம்முடைய சொந்த அறிவால் அதைச் செய்ய முடியாது என்பது உண்மைதான். (எரே. 10:23) அதனால்தான், உதவிக்காக யெகோவாவை நம்பியிருப்பது முக்கியம். பெற்றோர்களுக்கு யெகோவா நிறைய ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். உங்கள் பிள்ளைகளுடைய விசுவாசத்தை வளர்க்க நீங்கள் செய்ய வேண்டிய 4 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். (1) அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். (2) யெகோவாவைப் பற்றி இதயப்பூர்வமாகக் கற்றுக்கொடுங்கள். (3) உதாரணங்களைப் பயன்படுத்துங்கள். (4) கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள், பொறுமையாக இருங்கள்.

உங்களுடைய பிள்ளைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்

3. இயேசுவைப் போல பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்?

3 சீஷர்கள் எதை நம்புகிறார்கள் என்று இயேசு அடிக்கடி அவர்களிடம் கேட்டார். (மத். 16:13-15) நீங்களும் இயேசுவைப் போல செய்யலாம். உங்கள் பிள்ளைகளிடம் பேசும்போதோ, அவர்களோடு சேர்ந்து ஏதாவது செய்யும்போதோ, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அதைப் பற்றி உங்களிடம் பேசச் சொல்லுங்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 15 வயது இளம் சகோதரர் இப்படிச் சொன்னார்: “என்னோட நம்பிக்கைய பத்தி அப்பா அடிக்கடி எங்கிட்ட கேட்பார். அதோட, அந்த விஷயத்தை பத்தி நல்லா யோசிக்கிறதுக்கு உதவி செய்வார். ‘இதை பத்தி பைபிள் என்ன சொல்லுது?’ ‘பைபிள் சொல்றத நீ நிஜமாவே நம்புறியா?’ ‘ஏன் நம்புற?’ அப்படீனு எல்லாம் கேட்பார். அப்பாவோ அம்மாவோ சொன்ன வார்த்தைகளை திருப்பிச் சொல்லாம, என் சொந்த வார்த்தையிலயே பதில் சொல்லணும்னு எதிர்பார்ப்பார். நான் வளர்ந்ததுக்கு அப்புறம், அந்த கேள்விகளுக்கு விளக்கமா பதில் சொல்ல வேண்டியிருந்துச்சு.”

4. உங்கள் பிள்ளைகளின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்வது ஏன் முக்கியம்? உதாரணம் கொடுங்கள்.

4 பைபிளில் இருக்கிற விஷயங்களை உங்கள் பிள்ளைகள் உடனடியாக நம்பவில்லை என்றாலும் பொறுமையாக இருங்கள். அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க உதவுங்கள். ஓர் அப்பா இப்படிச் சொன்னார்: “உங்க பிள்ளை கேட்கிற கேள்வியை சாதாரணமா நினைக்காதீங்க. அது ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லனு நினைச்சு, அப்படியே விட்டுடாதீங்க. ஒரு விஷயம் உங்களுக்கு தர்மசங்கடமா இருக்குங்கிறதுக்காக பதில் சொல்லாம இருந்துடாதீங்க.” பிள்ளைகள் கேள்வி கேட்பது நல்லதுதான், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். இளம் வயதில் இருந்தபோது, இயேசுவும் நிறைய கேள்விகள் கேட்டார். (லூக்கா 2:46-ஐ வாசியுங்கள்.) டென்மார்க்கைச் சேர்ந்த 15 வயது இளம் பையன் ஒருவன் இப்படிச் சொன்னான்: “‘நம்ம மதம்தான் உண்மையான மதமா?’னு அப்பா அம்மாகிட்ட கேட்டப்போ, அவங்களுக்கு கவலையா இருந்திருக்கலாம். ஆனா, அதுக்காக அவங்க கோபப்படல. என்னோட எல்லா கேள்விகளுக்கும் பைபிள்ல இருந்து பதில் சொன்னாங்க.”

5. பிள்ளைகளுக்கு யெகோவாமீது விசுவாசம் இருப்பதுபோல் தெரிந்தாலும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

5 உங்கள் பிள்ளைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஊழியத்துக்கும் கூட்டங்களுக்கும் போவதால் மட்டும் உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாமீது விசுவாசம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்க, ஏதாவது ஒரு விஷயம் அவர்களுக்குச் சவாலாக இருக்கிறதா என்று கண்டுபிடிக்க கடினமாக முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளோடு வேலை செய்யும்போது தினமும் யெகோவாவைப் பற்றி பேசுங்கள். அவர்களோடு ஜெபம் செய்யும்போதும் சரி, தனியாக ஜெபம் செய்யும்போதும் சரி, உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபம் செய்யுங்கள்.

யெகோவாவைப் பற்றி இதயப்பூர்வமாகக் கற்றுக்கொடுங்கள்

6. யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் பெற்றோர் தொடர்ந்து தெரிந்துகொள்வது, பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க எப்படி உதவும்?

6 யெகோவாவை, அவருடைய வார்த்தையை, மக்களை இயேசு நேசித்தார். அதனால் ஒரு போதகராக, மக்களுடைய மனதை அவரால் தொட முடிந்தது. (லூக். 24:32; யோவா. 7:46) அதேபோல், பெற்றோரும் யெகோவாவை, அவருடைய வார்த்தையை, மக்களை நேசிக்கும்போது பிள்ளைகளுடைய மனதைத் தொட முடியும். (உபாகமம் 6:5-8; லூக்கா 6:45-ஐ வாசியுங்கள்.) அதனால், பெற்றோரே! தொடர்ந்து பைபிளையும் நம் பிரசுரங்களையும் கவனமாகப் படியுங்கள். யெகோவா படைத்திருப்பவற்றைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். (மத். 6:26, 28) எந்தளவு யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்கிறீர்களோ அந்தளவு அவரைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.—லூக். 6:40.

7, 8. யெகோவாவைப் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ளும்போது நீங்கள் என்ன செய்யலாம்? சில பெற்றோர் என்ன செய்திருக்கிறார்கள்?

7 யெகோவாவைப் பற்றி ஏதாவது தெரிந்துகொண்டால் அதை உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். கூட்டங்களுக்குத் தயாரிக்கும்போதும் குடும்ப வழிபாட்டின்போதும் மட்டுமல்ல, எல்லா சமயத்திலும் இதைச் செய்யுங்கள். அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெற்றோர் இதைத்தான் செய்கிறார்கள். இயற்கை அழகைப் பார்க்கும்போது, சுவையான உணவைச் சாப்பிடும்போது, யெகோவாவைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுகிறார்கள். “யெகோவா நம்ம மேல அன்பு வைச்சிருக்கிறதுனாலதான் நமக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்கார்னு எங்க பிள்ளைகள்கிட்ட சொல்லுவோம்” என்று அவர்கள் சொன்னார்கள். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு கணவன் மனைவி, அவர்களுடைய இரண்டு மகள்களோடு சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்யும்போது, படைப்பைப் பற்றி அவர்களிடம் பேசுகிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு விதை செடியாக வளர்வது எவ்வளவு ஆச்சரியமான விஷயம் என்று சொல்கிறார்கள். “உயிரையும் அதோட சிக்கலான தன்மையையும் மதிக்க, எங்க பிள்ளைகளுக்கு உதவி செய்றோம்” என்று அந்தக் கணவன் மனைவி சொன்னார்கள்.

8 ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஓர் அப்பா, தன்னுடைய 10 வயது பையனை அருங்காட்சியகத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவனுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும், யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதற்கான அத்தாட்சியைக் காட்டவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நினைத்தார். “அம்மோநாய்ட்ஸ் (ammonoids), ட்ரிலோபைட்ஸ் (trilobites) என்ற பழங்காலத்து கடல்வாழ் உயிரினத்தை அங்க வைச்சிருந்தாங்க. அழிஞ்சுபோன அந்த உயிரினம், ரொம்ப அழகா, சிக்கலா, அதே சமயத்தில முழுமையா இருக்கிறத பார்த்தப்போ ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இன்னைக்கு இருக்குற உயிரினங்களைவிட இது எந்த விதத்திலயும் குறைஞ்சது கிடையாது. எளிமையான உயிரினங்கள் சிக்கலான உயிரினங்களா மாறுனது உண்மையா இருந்தா, இந்த பழங்கால உயிரினம் எப்படி ஏற்கெனவே சிக்கலா இருந்திருக்க முடியும்? அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்ததுனால, அதை பத்தி என் பையன்கிட்ட சொன்னேன்” என்று அவர் சொன்னார்.

உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்

9. உதாரணங்களைப் பயன்படுத்துவது ஏன் நல்லது? ஓர் அம்மா என்ன உதாரணத்தைப் பயன்படுத்தினார்?

9 இயேசு அடிக்கடி உதாரணங்களைப் பயன்படுத்தினார். கதையையோ உதாரணத்தையோ சொல்லி முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். (மத். 13:34, 35) உதாரணங்களைப் பயன்படுத்தும்போது, நீங்கள் சொல்லும் விஷயத்தை உங்கள் பிள்ளைகளால் கற்பனை செய்ய முடியும். நீங்கள் கற்றுக்கொடுக்கும் விஷயத்தைப் பற்றி யோசிக்கவும், தெளிவாகப் புரிந்துகொள்ளவும், அதை ஞாபகத்தில் வைக்கவும் முடியும். அதோடு, சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, வாயுமண்டலம் உண்டாக்கப்பட்ட விதத்திலிருந்து, யெகோவாவுக்கு நம்மீது எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதைப் பற்றி தன்னுடைய 2 பையன்களுக்கும் புரியவைக்க வேண்டும் என்று ஜப்பானில் இருக்கும் ஓர் அம்மா ஆசைப்பட்டார். ஒரு பையனுக்கு 8 வயதும், இன்னொரு பையனுக்கு 10 வயதும் ஆவதால், அவர்களுக்குப் புரிகிற விதத்தில் ஓர் உதாரணத்தைப் பயன்படுத்தினார். பால், சர்க்கரை, காபித்தூள் ஆகியவற்றைக் கொடுத்துத் தனக்குக் காபி போடும்படி சொன்னார். “அவங்க எனக்காக பார்த்து பார்த்து செஞ்சாங்க. அதுக்கான காரணத்த கேட்டப்போ, எனக்கு பிடிச்ச மாதிரி காபி இருக்கணும்னுதான் அப்படி செஞ்சதா சொன்னாங்க. கடவுளுக்கும் நம்மமேல ரொம்ப அக்கறை இருக்குறதுனாலதான், வாயுமண்டலத்துல இருக்குற எல்லா வாயுக்களையும் சரியான அளவுல கலந்திருக்கார்னு அவங்ககிட்ட சொன்னேன்” என்று அவர் சொன்னார். இப்படிக் கற்றுக்கொண்டது அந்தப் பையன்களுக்குச் சுவாரஸ்யமாக இருந்தது. அதை அவர்கள் மறக்கவே இல்லை!

சாதாரண பொருள்களைப் பயன்படுத்தி, கடவுள் மீதும் படைப்புகள் மீதும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு உதவலாம் (பாரா 10)

10, 11. (அ) எல்லாவற்றையும் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைக்க நீங்கள் என்ன உதாரணத்தைப் பயன்படுத்தலாம்? (ஆரம்பப் படம்) (ஆ) நீங்கள் என்ன உதாரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

10 எல்லாவற்றையும் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரியவைக்க நீங்கள் என்ன உதாரணத்தைப் பயன்படுத்தலாம்? உங்கள் பிள்ளையோடு சேர்ந்து கேக் செய்யலாம்; அதற்கு சமையல் குறிப்பைப் பயன்படுத்தலாம். அப்போது, சமையல் குறிப்பில் இருக்கிறபடியே செய்வது ஏன் முக்கியம் என்று உங்கள் பிள்ளையிடம் விளக்குங்கள். ஓர் ஆப்பிளையோ வேறு ஏதாவது ஒரு பழத்தையோ கொடுத்து, “இந்த ஆப்பிளுக்கும் சமையல் குறிப்பு இருக்குனு உனக்கு தெரியுமா?” என்று கேளுங்கள். பின்பு, அந்த ஆப்பிளை இரண்டாக வெட்டி அதிலிருக்கிற விதையை எடுத்து உங்கள் பிள்ளையிடம் கொடுங்கள். அந்த விதைதான், அந்த ஆப்பிளுடைய சமையல் குறிப்பு போல் இருக்கிறது என்று சொல்லுங்கள். ஆப்பிள் செய்வதற்கான குறிப்புகள் அந்த விதையில்தான் இருக்கின்றன. ஆனால், கேக் செய்வதற்கான குறிப்புகளைவிட இது ரொம்பவும் சிக்கலானது. பின்பு, இப்படிக் கேளுங்கள்: “கேக் செய்றதுக்கு தேவையான குறிப்பை ஒருத்தர் எழுதியிருக்கிறாங்க. அப்படீனா, ஆப்பிள் செய்றதுக்கு தேவையான குறிப்பை யார் எழுதுனது?” ஒருவேளை, உங்கள் பிள்ளைகள் வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் என்ன செய்யலாம்? ஏராளமான ஆப்பிள்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆப்பிள் மரத்துக்குத் தேவையான எல்லா குறிப்புகளும் அந்த விதைக்குள் இருக்கும் டிஎன்ஏ-வில் இருக்கின்றன என்று சொல்லுங்கள். அதோடு, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டில், பக்கங்கள் 10-20-ல் இருக்கிற சில படங்களையும் உதாரணங்களையும் காட்டுங்கள்.

11 விழித்தெழு!-வில் வருகிற “யாருடைய கைவண்ணம்?” என்ற தொடர் கட்டுரையை நிறைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு படிக்கிறார்கள். பிள்ளைகள் ரொம்பவும் சின்னப் பிள்ளைகளாக இருந்தால், பெற்றோர் அவர்களுக்கு எளிமையாக விளக்கலாம். உதாரணத்துக்கு, டென்மார்க்கில் இருக்கிற ஓர் அப்பா அம்மா விமானத்தைப் பறவைகளுக்கு ஒப்பிட்டு, பிள்ளைகளிடம் இப்படிக் கேட்டார்கள்: “விமானம் பறவை மாதிரியே இருந்தாலும், அதால முட்டை போட்டு குட்டி விமானத்தை உருவாக்க முடியுமா? விமானம் இறங்குறதுக்கு ஒரு இடம் தேவைப்படுற மாதிரி, பறவைகள் இறங்குறதுக்கும் ஒரு இடம் தேவையா? விமானத்தோட சத்தத்தையும் பறவையோட பாட்டு சத்தத்தையும் பார்க்கும்போது, அதை பத்தி என்ன சொல்லலாம்? யாரு ரொம்ப புத்திசாலி, விமானத்தை உருவாக்குனவரா, பறவையை உருவாக்குனவரா?” உங்கள் பிள்ளைகளிடம் காரணங்காட்டிப் பேசும்போதும் கேள்விகளைக் கேட்கும்போதும், அவர்களுடைய யோசிக்கும் திறனைப் பயன்படுத்த உதவுகிறீர்கள். அதோடு, யெகோவாமீது அவர்களுக்கு இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்தவும் உதவுகிறீர்கள்.—நீதி. 2:10-12.

12. பைபிள் என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைக்க உதாரணங்களை எப்படிப் பயன்படுத்தலாம்?

12 பைபிள் என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைக்க உதாரணங்களைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு யோபு 26:7-ஐ வாசித்துக் காட்டலாம். (வாசியுங்கள்.) இதில் இருக்கும் தகவல் யெகோவாவிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று மட்டும் சொன்னால் போதாது; அவர்களுடைய கற்பனைத் திறனைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு உதவ வேண்டும். பூமி விண்வெளியில் மிதப்பதை, யோபு காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்பாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லுங்கள். ஆனால் பந்து, கல் போன்ற பொருள்கள் அந்தரத்தில் தொங்காமல் ஏதோ ஒன்றின் மீதுதான் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றும் சொல்லுங்கள். அந்தக் காலத்தில் தொலைநோக்கியோ விண்வெளி கப்பல்களோ இல்லாததால், பூமி விண்வெளியில் மிதப்பதை யாரும் நிரூபித்திருக்க மாட்டார்கள். நீங்கள் இப்படிக் கற்றுக்கொடுப்பதன் மூலம் உங்கள் பிள்ளைகள் எதைப் புரிந்துகொள்வார்கள்? ரொம்ப காலத்துக்கு முன்னால் பைபிள் எழுதப்பட்டிருந்தாலும் அது யெகோவாவிடமிருந்து வந்திருப்பதால் அது எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்று புரிந்துகொள்வார்கள்.—நெ. 9:6.

பைபிளின்படி நடப்பதால் வரும் நன்மையைப் பற்றி கற்றுக்கொடுங்கள்

13, 14. பிள்ளைகள் பைபிளின்படி நடப்பதற்குப் பெற்றோர் எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்?

13 பைபிளின்படி நடந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதும் ரொம்ப முக்கியம். (சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, ஒரு தீவில் போய் வாழப்போவதாகக் கற்பனை செய்யும்படி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். தங்களோடு இருப்பதற்கு அவர்கள் இப்போது சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, “எல்லாரும் சந்தோஷமா, சமாதானமா இருக்கணும்னா எப்படிப்பட்ட ஆட்களை அங்க கூட்டிக்கிட்டு போவீங்க?” என்று கேளுங்கள். கடைசியில், கலாத்தியர் 5:19-23-ஐ வாசித்து, எப்படிப்பட்ட ஆட்கள் புதிய உலகத்தில் இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

14 இப்படிச் செய்வதன் மூலம், முக்கியமான இரண்டு பாடங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்: (1) யெகோவாவுடைய நியமங்களின்படி வாழும்போது சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முடியும். (2) இப்போதே கற்றுக்கொடுப்பதன் மூலம், புதிய உலகத்துக்காக யெகோவா நம்மைத் தயார்படுத்துகிறார். (ஏசா. 54:13; யோவா. 17:3) நம் சகோதரர்களுக்கு பைபிள் எப்படி உதவியிருக்கிறது என்றும் நீங்கள் சொல்லலாம். உதாரணத்துக்கு, காவற்கோபுரத்தில் வரும் “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தொடர் கட்டுரையில் இருக்கிற அனுபவங்களைச் சொல்லலாம். யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதற்காகத் தங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்ய உங்கள் சபையில் இருக்கும் சிலருக்கு பைபிள் உதவியிருக்கும். அவர்களுடைய அனுபவத்தை உங்களிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் சொல்லும்படி அவர்களிடம் கேட்கலாம்.—எபி. 4:12.

15. உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க எது உதவும்?

15 பிள்ளைகளுக்குச் சுவாரஸ்யமாகக் கற்றுக்கொடுக்க உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்துங்கள். யெகோவாவைப் பற்றி ஆர்வமாகக் கற்றுக்கொள்ளவும் அவரிடம் நெருங்கவும் உங்கள் பிள்ளைகளுக்கு என்னென்ன வழிகளில் உதவலாம் என்று யோசியுங்கள். அவர்கள் வளர்ந்த பிறகும், இதைத் தொடர்ந்து செய்யுங்கள். “ஏற்கனவே தெரிஞ்ச விஷயங்களை புதுப்புது வழிகள்ல எப்படி கத்துக்கொடுக்கலாம்னு எப்பவும் யோசிச்சுக்கிட்டே இருங்க” என்று ஓர் அப்பா சொல்கிறார்.

கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள், பொறுமையாக இருங்கள்

16. பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது பொறுமையாக இருப்பது ஏன் முக்கியம்? சில பெற்றோர் எப்படிப் பொறுமையாக இருந்திருக்கிறார்கள்?

16 யெகோவாவுடைய சக்தியின் உதவியால் உங்கள் பிள்ளைகள் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். (கலா. 5:22, 23) ஆனால், அதற்குக் காலமெடுக்கும் என்பதால் பிள்ளைகளிடம் பொறுமையாக இருங்கள், அவர்களுக்குத் தொடர்ந்து கற்றுக்கொடுங்கள். “என் மனைவியும் நானும் எங்க பிள்ளைகளோடு சேர்ந்து நிறைய நேரம் செலவு செஞ்சோம்” என்று ஜப்பானைச் சேர்ந்த ஓர் அப்பா சொல்கிறார். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். “அவங்க ரொம்ப சின்ன பிள்ளைகளா இருந்த சமயத்துல இருந்தே, கூட்டங்கள் இருக்கிற நாட்களை தவிர எல்லா நாளும் அவங்களோடு சேர்ந்து 15 நிமிஷம் படிப்பேன். அப்படி 15 நிமிஷம் செலவு செஞ்சது எங்களுக்கோ பிள்ளைகளுக்கோ ரொம்ப கஷ்டமா தெரியல” என்றும் அவர் சொன்னார். ஒரு வட்டாரக் கண்காணி இப்படி எழுதினார்: “நான் டீனேஜ் வயசுல இருந்தப்போ என் மனசுல நிறைய கேள்விகள் இருந்துச்சு. ஆனா, யார்கிட்டயும் அதை பத்தி பேசல. காலங்கள் போகப்போக கூட்டங்கள்ல, குடும்ப வழிபாட்டுல, தனிப்பட்ட படிப்புல அந்த எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சது. அதனால, அப்பா அம்மா தொடர்ந்து பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறது ரொம்ப முக்கியம்.”

நீங்கள் நன்றாகக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால் கடவுளுடைய வார்த்தை உங்கள் மனதில் முதலில் இருக்க வேண்டும்((பாரா 17)

17. பெற்றோர் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வது ஏன் ரொம்ப முக்கியம்? தங்களுடைய மகள்கள் யெகோவாமீது விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பெர்முடாவில் இருக்கும் ஒரு பெற்றோர் எப்படி உதவினார்கள்?

17 யெகோவாமீது உங்களுக்குப் பலமான விசுவாசம் இருப்பதைப் பார்க்கும்போது, பிள்ளைகள் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்கள் கவனிப்பதால் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டே இருங்கள். யெகோவா உங்களுக்கு எந்தளவு நிஜமானவர் என்பதையும் உங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு பெர்முடாவில் இருக்கும் ஒரு பெற்றோர், கவலையாக இருக்கும் சமயங்களில், தங்களுடைய மகள்களோடு சேர்ந்து ஜெபம் செய்வார்கள், தங்களை வழிநடத்தும்படி யெகோவாவிடம் கேட்பார்கள். அதோடு, தனியாக ஜெபம் செய்யும்படி பிள்ளைகளை உற்சாகப்படுத்துவார்கள். “‘யெகோவாவ முழுசா நம்பு. கடவுளோட அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள சுறுசுறுப்பா செய், அளவுக்கு அதிகமா கவலப்படாத’னு நாங்க எங்க பெரிய பொண்ணுகிட்ட சொல்வோம். எங்களுக்கு கிடைக்கிற பலனை பார்க்குறப்போ யெகோவாதான் உதவி செய்றார்னு அவளுக்கு தெரியுது. கடவுள் மேலயும் பைபிள் மேலயும் இருக்கிற விசுவாசத்தைப் பலப்படுத்த அது அவளுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.’’

18. என்ன முக்கியமான விஷயத்தைப் பெற்றோர் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

18 பெற்றோரே, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும்படி உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். நீங்கள் நடுகிறீர்கள், நீர் பாய்ச்சுகிறீர்கள்; ஆனால், யெகோவாதான் அதை வளர வைக்கிறார். (1 கொ. 3:6) அதனால், அவருடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். உங்கள் அருமையான பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்க கடினமாக முயற்சி செய்யுங்கள். உங்களுடைய முயற்சியை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—எபே. 6:4.