Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள போராடுங்கள்!

யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள போராடுங்கள்!

“தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே.” —ஆதி. 32:28.

பாடல்கள்: 60, 38

1, 2. யெகோவாவின் ஊழியர்களுக்கு என்னென்ன போராட்டங்கள் இருக்கின்றன?

ஆபேல் முதல் இன்றுள்ள ஊழியர்கள் வரை, கடவுளுடைய உண்மையான ஊழியர்கள் எல்லாருமே தங்கள் விசுவாசத்துக்காகப் போராடியிருக்கிறார்கள். யெகோவா தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், தங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காக, எபிரெய கிறிஸ்தவர்கள் ‘துன்பங்களோடு கடுமையாகப் போராடியதாக’ அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 10:32-34) ஓட்டப் பந்தயம், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற கிரேக்க போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள். கிறிஸ்தவர்களுடைய போராட்டங்களை அந்த வீரர்களுடைய போராட்டங்களுக்குப் பவுல் ஒப்பிட்டுப் பேசினார். (எபி. 12:1, 4) இன்று நாம் வாழ்வுக்கான ஓட்டத்தில் ஓடுவதால், சக்திவாய்ந்த எதிரிகள் நம்மைத் திசை திருப்பலாம், இப்போது நாம் அனுபவிக்கும் சந்தோஷத்தையும் எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களையும் இழந்துவிடும்படி செய்யலாம்.

2 நம்முடைய போராட்டங்களிலேயே கடுமையான போராட்டம், அல்லது “மல்யுத்தம்,” சாத்தான் மற்றும் அவனுடைய உலகத்துக்கு எதிரான போராட்டம்தான். (எபே. 6:12) இந்த உலகத்தின் போதனைகளோ தத்துவங்களோ நம்மை பாதிக்காமல் இருப்பதற்காக நாம் போராடுவது ரொம்ப முக்கியம். பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவது, புகை பிடிப்பது, மதுபானம் அல்லது போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்ற கெட்ட பழக்கவழக்கங்களில் சிக்கிவிடாமல் இருக்க நாம் போராடுவதும் ரொம்ப முக்கியம். அதுமட்டுமல்ல, நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்கவும் பலவீனங்களைச் சமாளிக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.—2 கொ. 10:3-6; கொலோ. 3:5-9.

3. நம் எதிரிகளை எதிர்த்துப் போராட யெகோவா நமக்கு எப்படிப் பயிற்சி தருகிறார்?

3 இப்படிப்பட்ட சக்திவாய்ந்த எதிரிகளை நாம் ஜெயிக்க முடியுமா? முடியும்! ஆனால், அது அவ்வளவு சுலபம் இல்லை! பவுல் தன்னை ஒரு குத்துச்சண்டை வீரரோடு ஒப்பிட்டு, “போராடுகிறேன், ஆனால் காற்றோடு குத்துச்சண்டை போடுகிறவன்போல் அல்ல” என்று சொன்னார். (1 கொ. 9:26) ஒரு குத்துச்சண்டை வீரர் தன் எதிரியை எதிர்த்துப் போராடுவது போல, நாமும் நம் எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்குத் தேவையான உதவியையும் பயிற்சியையும் பைபிள் மூலமாக யெகோவா தருகிறார். அதுமட்டுமல்ல, பைபிள் சார்ந்த பிரசுரங்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், மாநாடுகள் மூலமாகவும் நமக்கு உதவுகிறார். இவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களின்படி நீங்கள் செய்கிறீர்களா? அப்படிச் செய்யவில்லை என்றால் காற்றோடு குத்துச்சண்டை போடுகிறவரைப் போல்தான் இருப்பீர்கள்; எதிரிகளை உங்களால் முழுமையாக எதிர்த்துப் போராட முடியாது.

4. தீமை நம்மை ஜெயிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

4 நாம் எதிர்பார்க்காத சமயத்தில் அல்லது பலவீனமாக இருக்கும் சமயத்தில் எதிரிகள் நம்மைத் தாக்கலாம். அதனால், எல்லா சமயங்களிலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (ரோமர் 12:21) ‘தீமை நம்மை வெல்லாமல்’ பார்த்துக்கொள்ளும்படி பைபிள் நம்மை ஊக்கப்படுத்துவதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? தொடர்ந்து தீமையை எதிர்த்துப் போராடும்போது, நம்மால் தீமையை ஜெயிக்க முடியும் என்று தெரிந்துகொள்ளலாம். நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால், போராடுவதையே நிறுத்தி விட்டால், சாத்தானும், அவனுடைய உலகமும், நம் பலவீனங்களும் நம்மை ஜெயித்து விடும். அதனால் போராடுவதை நிறுத்தி விடாதீர்கள். சோர்ந்து போய் உங்கள் கைகளைத் தளர விடாதீர்கள்!—1 பே. 5:9.

5. (அ) கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆசீர்வதிக்க வேண்டுமென்றால் நாம் எதை மறந்துவிடக்கூடாது? (ஆ) யாரைப் பற்றியெல்லாம் நாம் பார்க்கப் போகிறோம்?

5 ஜெயிக்க வேண்டுமென்றால், நாம் எதற்காகப் போராடுகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் நாம் விரும்புகிறோம். “கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார் என்றும் நம்ப வேண்டும்” என்று எபிரெயர் 11:6 சொல்கிறது. யெகோவாவை ஊக்கமாக நாடுவது எதை அர்த்தப்படுத்துகிறது? அவர் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கடினமாக உழைப்பதை அர்த்தப்படுத்துகிறது. (அப். 15:17) இப்படிச் செய்த நிறைய ஆண்கள் மற்றும் பெண்களுடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. உதாரணத்துக்கு யாக்கோபு, ராகேல், யோசேப்பு, பவுல் ஆகியவர்கள் உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் நிறைய கஷ்டமான சூழ்நிலைகளைச் சந்தித்தார்கள். இருந்தாலும், அவர்களால் வெற்றி பெற முடிந்தது. நாமும் கடினமாக உழைத்தால் யெகோவாவின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்பதை இவர்களுடைய உதாரணங்கள் காட்டுகின்றன. அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

விடாமுயற்சியோடு இருந்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!

6. விடாமுயற்சியோடு போராட யாக்கோபுக்கு எது உதவியது, அதனால் அவருக்கு என்ன பலன் கிடைத்தது? (ஆரம்பப் படம்)

6 யெகோவாவுக்கு உண்மையாக இருந்த யாக்கோபு, யெகோவாவை நேசித்ததாலும் அவரோடு இருந்த பந்தத்தை உயர்வாக மதித்ததாலும் விடாமுயற்சியோடு போராடினார். அவருடைய சந்ததியை யெகோவா ஆசீர்வதிப்பார் என்ற வாக்குறுதியில் யாக்கோபுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. (ஆதி. 28:3, 4) அவருக்குக் கிட்டத்தட்ட 100 வயது இருந்தபோது, கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக ஒரு தேவதூதரோடு போராடினார். (ஆதியாகமம் 32:24-28-ஐ வாசியுங்கள்.) யாக்கோபு தன் சொந்த பலத்தில் அந்தச் சக்திவாய்ந்த தூதரோடு போராடவில்லை. ஆனால், கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்று அவர் தீர்மானமாக இருந்தார். ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகத் தன்னால் கடினமாக உழைக்க முடியும் என்பதை நிரூபித்தும் காட்டினார். அவருடைய விடாமுயற்சியை யெகோவா ஆசீர்வதித்தார், “கடவுளோடு போராடுகிறவர், அல்லது விடாமுயற்சி செய்கிறவர்” என்ற அர்த்தமுள்ள ‘இஸ்ரவேல்’ என்ற பெயரை யெகோவா அவருக்குக் கொடுத்தார். கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும், நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாம் விரும்புவது போல யாக்கோபும் விரும்பினார்; விரும்பியதை அவர் பெற்றுக்கொண்டார்.

7. (அ) ராகேலுக்கு இருந்த கஷ்டமான சூழ்நிலை என்ன? (ஆ) அவள் என்ன செய்தாள், அதனால் அவளுக்கு என்ன ஆசீர்வாதம் கிடைத்தது?

7 தன்னுடைய கணவனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை யெகோவா எப்படி நிறைவேற்றுவார் என்பதைப் பார்க்க யாக்கோபின் அன்பு மனைவி ராகேலும் ஆர்வமாக இருந்தாள். ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததுதான் அந்தப் பிரச்சினை. பைபிள் காலங்களில் வாழ்ந்த பெண்களுக்கு, குழந்தை இல்லாதது பயங்கர வேதனையைத் தந்தது. குழந்தை இல்லாத அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் ராகேலால் எப்படித் தொடர்ந்து போராட முடிந்தது? நம்பிக்கையை விட்டுவிடாமல் யெகோவாவிடம் தொடர்ந்து உருக்கமாக ஜெபம் செய்வதன் மூலம் அவளால் தொடர்ந்து போராட முடிந்தது. அவள் மனமார செய்த ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்தார். கடைசியில், பிள்ளைகளைக் கொடுத்து யெகோவா அவளை ஆசீர்வதித்தார். அதனால்தான், “நான் மகா போராட்டமாய் . . . போராடி மேற்கொண்டேன்” என்று அவள் சொன்னாள்.—ஆதி. 30:8, 20-24.

8. யோசேப்பு என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார், அவர் நமக்கு எப்படி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்?

8 யாக்கோபு மற்றும் ராகேலின் நல்ல உதாரணம், அவர்களுடைய மகன் யோசேப்புக்கு உதவியாக இருந்தது. அதனால்தான், வாழ்க்கையில் வந்த கஷ்டங்களை அவரால் சமாளிக்க முடிந்தது. யோசேப்புக்கு 17 வயதானபோது அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவர் மேல் இருந்த பொறாமையால் அவருடைய சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றார்கள். பிறகு, எந்தத் தவறும் செய்யாதபோதிலும் எகிப்தில் பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். (ஆதி. 37:23-28; 39:7-9, 20, 21) இருந்தாலும், அவர் சோர்ந்துவிடவோ வெறுப்பை வளர்த்துக்கொள்ளவோ இல்லை. அதோடு, பழிவாங்கவும் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால், யெகோவாவோடு இருக்கும் பந்தத்துக்குத்தான் அவர் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தார். (லேவி. 19:18; ரோ. 12:17-21) யோசேப்பின் உதாரணம் நமக்கும் உதவியாக இருக்கலாம். சிறு வயதில் மோசமான சூழ்நிலைகளால் நாம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி, இப்போது இருக்கும் வாழ்க்கை இருண்டுபோனது போல தெரிந்தாலும் சரி, நாம் விடாமுயற்சியோடு போராட வேண்டும். அப்படிச் செய்யும்போது யெகோவா நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்பலாம்.—ஆதியாகமம் 39:21-23-ஐ வாசியுங்கள்.

9. யாக்கோபு, ராகேல் மற்றும் யோசேப்பை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

9 இன்று நாமும் கஷ்டமான சூழ்நிலைகளைச் சகிக்க வேண்டியிருக்கிறது. அநீதி, தப்பெண்ணம், கேலி கிண்டல், அல்லது மற்றவர்களுக்கு உங்கள் மேலிருக்கும் பொறாமை ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், சோர்ந்துவிடாதீர்கள்! யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய யாக்கோபு, ராகேல் மற்றும் யோசேப்புக்கு எது உதவியது என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாவோடு இருந்த பந்தத்தை அவர்கள் உயர்வாக மதித்ததால் யெகோவா அவர்களைப் பலப்படுத்தினார், ஆசீர்வதித்தார். அவர்கள் தொடர்ந்து போராடினார்கள், தாங்கள் செய்த ஜெபங்களுக்கு ஏற்றபடி நடந்துகொண்டார்கள். நாம் கடைசி நாட்களில் வாழ்வதால், நம்முடைய எதிர்கால நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும். யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு நீங்கள் மல்யுத்தம் செய்ய, அதாவது, கடினமாகப் போராட தயாராக இருக்கிறீர்களா?

ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள மல்யுத்தம் செய்யுங்கள்

10, 11. (அ) கடவுளுடைய ஆசீர்வாதத்துக்காக நாம் ஏன் மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம்? (ஆ) சரியான தீர்மானங்கள் எடுக்க நமக்கு எது உதவும்?

10 கடவுளுடைய ஆசீர்வாதத்துக்காக நாம் ஏன் மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம், அதாவது போராட வேண்டியிருக்கலாம்? நாம் தவறு செய்கிறவர்களாக இருப்பதால், தவறான ஆசைகளை எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. ஊழியத்தில் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது சிலருக்குக் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் சிலர், உடல்நலப் பிரச்சினைகளாலோ தனிமையாலோ போராடுகிறார்கள். தங்களைப் புண்படுத்தியவர்களையோ தங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களையோ மன்னிப்பது சிலருக்குப் போராட்டமாக இருக்கிறது. யெகோவா உண்மையுள்ளவர்களுக்குப் பலன் தருகிறார். நாம் அவருக்கு எத்தனை வருடங்கள் சேவை செய்திருந்தாலும் சரி, அவருக்குச் சேவை செய்ய தடையாக இருக்கும் விஷயங்களை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்.

கடவுளுடைய ஆசீர்வாதத்துக்காக நீங்கள் மல்யுத்தம் செய்கிறீர்களா? (பாராக்கள் 10, 11)

11 ஒரு கிறிஸ்தவராக இருப்பதும் சரியான தீர்மானங்கள் எடுப்பதும் ரொம்பவே கஷ்டம்தான். முக்கியமாக, நாம் தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடும்போது அது இன்னும் கஷ்டமாக இருக்கிறது. (எரே. 17:9) உங்களுக்கு அப்படிக் கஷ்டமாக இருக்கும் சமயங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அவருடைய சக்திக்காகக் கேளுங்கள். சரியானதைச் செய்வதற்கான பலத்தைப் பெறுவதற்கு ஜெபமும் கடவுளுடைய சக்தியும் உங்களுக்கு உதவி செய்யும். அப்படிச் சரியானதைச் செய்யும்போது யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் ஜெபங்களுக்கு ஏற்றபடி நடந்துகொள்ள தீர்மானமாக இருங்கள். ஒவ்வொரு நாளும் பைபிளை வாசிக்க முயற்சி செய்யுங்கள். தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப வழிபாட்டுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.—சங்கீதம் 119:32-ஐ வாசியுங்கள்.

12, 13. தவறான ஆசைகளை எதிர்த்துப் போராட இரண்டு கிறிஸ்தவர்களுக்கு எது உதவியது?

12 தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கு கடவுளுடைய வார்த்தையும், அவருடைய சக்தியும், நம்முடைய பிரசுரங்களும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவியிருக்கின்றன. ஜனவரி 8, 2004 விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த, “தவறான ஆசைகளை நீங்கள் எவ்வாறு விரட்டலாம்?” என்ற கட்டுரையைப் படித்த ஓர் இளைஞன் இப்படிச் சொன்னான்: “தவறான யோசனை வராம இருக்க ரொம்ப போராடிக்கிட்டு இருந்தேன். ‘பெரும்பாலோருக்கு தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமாக இருக்கிறது’னு அந்த பத்திரிகையில சொல்லியிருந்தாங்க. அதை படிச்சப்போ, என்னை மாதிரியே நிறைய சகோதர சகோதரிகள் போராடிக்கிட்டு இருக்காங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.” நவம்பர் 8, 2003 விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த “மாறுபட்ட வாழ்க்கை பாணிகள்—கடவுள் அங்கீகரிக்கிறாரா?” என்ற கட்டுரையையும் அந்த இளைஞன் படித்தான். சிலர், தவறான ஆசைகளோடு தொடர்ந்து போராடுவதாகவும் ‘உடலில் இருக்கும் ஒரு முள்ளைப்’ போல அந்தப் போராட்டம் அவர்களைக் குத்திக்கொண்டு இருப்பதாகவும் அவன் தெரிந்துகொண்டான். (2 கொ. 12:7) இப்படிப்பட்டவர்கள், நல்ல நடத்தையோடு இருக்க தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தாலும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருக்கிறார்கள். “இந்த நம்பிக்கை இருக்கிறதுனால ஒவ்வொரு நாளும் என்னால யெகோவாவுக்கு உண்மையா இருக்க முடியும்னு புரிஞ்சுக்கிட்டேன். இந்த மோசமான உலகத்துல, ஒவ்வொரு நாளையும் சமாளிக்குறதுக்கு யெகோவா அவரோட அமைப்பு மூலமா உதவி செய்றாரு. அவருக்கு நான் ரொம்ப நன்றியோட இருக்கேன்” என்று அந்த இளைஞன் சொல்கிறான்.

13 அமெரிக்காவில் இருக்கும் ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் இப்படி எழுதினார்: “எங்களுக்கு தேவையான ஆன்மீக உணவைச் சரியான நேரத்தில் தருவதற்காக ரொம்ப நன்றி. இந்த எல்லா கட்டுரைகளும் எனக்காகவே எழுதியது போல் இருப்பதாகப் பல தடவை நினைத்திருக்கிறேன். யெகோவாவுக்குப் பிடிக்காத ஒரு தவறான ஆசையை எதிர்த்துப் பல வருடங்களாக போராடிக்கொண்டு இருந்தேன். சில சமயங்களில், நான் ரொம்ப சோர்ந்துவிடுவேன், போராடியது போதும் என்று நினைத்திருக்கிறேன். யெகோவா இரக்கமுள்ளவர், மன்னிக்கிறவர் என்று எனக்குத் தெரியும். ஆனால், இந்தத் தவறான ஆசை என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் யெகோவாவின் உதவியைப் பெறுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று நினைத்தேன். இந்தப் போராட்டம் என் வாழ்க்கையை ரொம்பவே பாதித்தது . . . மார்ச் 15, 2013 காவற்கோபுரத்தில் வெளிவந்த “யெகோவாவை ‘அறியும் இருதயம்’ உங்களுக்கு இருக்கிறதா?” என்ற கட்டுரையைப் படித்த பிறகு, யெகோவா எனக்கு உதவி செய்ய விரும்புகிறார் என்று தெரிந்துகொண்டேன்.”

14. (அ) தனக்கு இருந்த போராட்டங்களைப் பற்றி பவுல் எப்படி உணர்ந்தார்? (ஆ) நம் பலவீனங்களை எதிர்த்து எப்படி வெற்றிகரமாகப் போராடலாம்?

14 ரோமர் 7:21-25-ஐ வாசியுங்கள். தவறான ஆசைகளையும் பலவீனங்களையும் எதிர்த்துப் போராடுவது எவ்வளவு கஷ்டம் என்று பவுலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருந்தாலும், யெகோவாவிடம் ஜெபம் செய்தால், அவருடைய உதவிக்காகக் காத்திருந்தால், இயேசுவுடைய பலியில் விசுவாசம் வைத்தால் இந்தப் போராட்டத்தில் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்ற முழு நம்பிக்கை அவருக்கு இருந்தது. நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நம் பலவீனங்களை எதிர்த்து நம்மாலும் போராடி ஜெயிக்க முடியுமா? பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினால், நம்மீது நம்பிக்கை வைக்காமல் யெகோவாமீது நம்பிக்கை வைத்தால், மீட்பு பலியில் விசுவாசம் வைத்தால் நம்மால் நிச்சயம் ஜெயிக்க முடியும்!

15. நாம் உண்மையாக இருக்கவும் பிரச்சினைகளைச் சகிக்கவும் ஜெபம் எப்படி உதவும்?

15 ஒரு விஷயத்தைப் பற்றி நாம் எந்தளவு அக்கறையாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள கடவுள் விரும்பலாம். உதாரணத்துக்கு, நாமோ நம் வீட்டில் இருப்பவர்களோ மோசமான உடல்நலப் பிரச்சினையை அல்லது அநீதியை அனுபவித்துக்கொண்டு இருந்தால், நாம் என்ன செய்வோம்? யெகோவாமீது நமக்கு முழு நம்பிக்கை இருந்தால், அவருக்கு உண்மையாக இருப்பதற்குத் தேவையான பலத்தைத் தரும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்போம். அவரோடு நமக்கிருக்கும் பந்தத்தையும் நம் சந்தோஷத்தையும் இழந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரிடம் மன்றாடுவோம். (பிலி. 4:13) கடந்த காலங்களிலும் சரி, இன்றும் சரி, நிறைய கிறிஸ்தவர்களுடைய உதாரணங்களிலிருந்து, ஜெபம் நம்மை பலப்படுத்தும் என்பதையும் சகித்திருப்பதற்குத் தேவையான தைரியத்தைக் கொடுக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

யெகோவாவுடைய ஆசீர்வாதத்துக்காகத் தொடர்ந்து போராடுங்கள்

16, 17. நீங்கள் என்ன செய்ய தீர்மானமாக இருக்கிறீர்கள்?

16 நீங்கள் சோர்ந்துபோய் உங்கள் கைகளைத் தளரவிடுவதைப் பார்க்க சாத்தான் ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறான். அதனால், ‘நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்க’ தீர்மானமாக இருங்கள். (1 தெ. 5:21) சாத்தானையும், அவனுடைய பொல்லாத உலகத்தையும், தவறான ஆசைகளையும் எதிர்த்து உங்களால் போராடி ஜெயிக்க முடியும்! கடவுளால் உங்களைப் பலப்படுத்த முடியும் என்றும் உங்களுக்கு உதவ முடியும் என்றும் நீங்கள் முழுமையாக நம்பினால் உங்களால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.—2 கொ. 4:7-9; கலா. 6:9.

17 அதனால், தொடர்ந்து போராடுங்கள். விடாமுயற்சியோடு இருங்கள். அப்போது யெகோவா, ‘இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை’ பொழிவார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.—மல். 3:10.