Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 36

அர்மகெதோன்​—ஓர் ஆசீர்வாதமே!

அர்மகெதோன்​—ஓர் ஆசீர்வாதமே!

‘அர்மகெதோனில் . . . அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.’—வெளி. 16:16.

பாட்டு 133 மீட்படைய தேவனை நாடுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) அர்மகெதோன் போரை ஓர் ஆசீர்வாதம் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

அணு ஆயுதப் போராலோ இயற்கைப் பேரழிவாலோ இந்த உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், வித்தியாசமான ஒரு விஷயத்தை பைபிள் சொல்கிறது. அதாவது, ஒரு போர் நடக்கும் என்றும் அதன் முடிவு சந்தோஷமானதாக இருக்கும் என்றும் அது சொல்கிறது. அதுதான் அர்மகெதோன் போர்! (வெளி. 1:3) இது மனிதர்களை அழிப்பதற்கான போர் அல்ல, அவர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு போர்!

2 எப்படியென்றால், மனித ஆட்சிக்கு அது முடிவு கட்டும். கெட்டதை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு நீதியை நிலைநாட்டும். பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்கும். (வெளி. 11:18) இந்த விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள, நான்கு கேள்விகளுக்கான பதில்கள் நமக்குத் தெரிய வேண்டும். அந்தக் கேள்விகள்: அர்மகெதோன் என்றால் என்ன? அர்மகெதோனுக்குக் கொஞ்சம் முன்பு என்னென்ன சம்பவங்கள் நடக்கும்? இந்தப் போரில் தப்பிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அர்மகெதோன் நெருங்கிவருகிற இந்தச் சமயத்தில், நாம் எப்படித் தொடர்ந்து உண்மையோடு இருக்கலாம்?

அர்மகெதோன்​—அதன் அர்த்தம்

3. (அ) “அர்மகெதோன்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (ஆ) வெளிப்படுத்துதல் 16:14, 16-ன்படி, அர்மகெதோன் என்பது நிஜமான ஓர் இடம் கிடையாது என்று எப்படிச் சொல்லலாம்?

3 வெளிப்படுத்துதல் 16:14, 16-ஐ வாசியுங்கள். “அர்மகெதோன்” என்ற வார்த்தை பைபிளில் ஒரு தடவைதான் வருகிறது. “மெகிதோ மலை” என்ற அர்த்தமுள்ள எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கிறது. (வெளி. 16:16, அடிக்குறிப்பு) மெகிதோ என்பது பூர்வ இஸ்ரவேலில் இருந்த ஒரு நகரம். (யோசு. 17:11) ஆனால், அர்மகெதோன் என்பது நிஜமான ஓர் இடத்தைக் குறிப்பது கிடையாது. ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்கள்’ கடவுளுடைய மக்களுக்கு எதிராகப் போர் செய்வதற்கு ஒன்றுகூடி வருகிற சூழ்நிலையைத்தான் அது குறிக்கிறது. (வெளி. 16:14) இருந்தாலும், இந்தக் கட்டுரையில், பூமியின் ராஜாக்கள் ஒன்றுகூடி வந்த உடனேயே ஆரம்பிக்கப்போகிற போரைக் குறிப்பதற்கும் அர்மகெதோன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அர்மகெதோன் என்பது அடையாளப்பூர்வமான ஓர் இடம் என்று எப்படிச் சொல்லலாம்? முதலாவது, உண்மையிலேயே மெகிதோ மலை என்று எந்த மலையும் இல்லை. இரண்டாவது, ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்களும்’ அவர்களுடைய ராணுவமும் கூடிவருமளவுக்கோ, அவர்களுடைய போர் ஆயுதங்களைக் குவித்து வைக்குமளவுக்கோ மெகிதோவின் சுற்றுப்புறம் அவ்வளவு பெரியது கிடையாது. மூன்றாவது, கடவுளுடைய மக்களை இந்த உலக ‘ராஜாக்கள்’ தாக்கும்போது அர்மகெதோன் ஆரம்பமாகும். ஆனால், கடவுளுடைய மக்கள் ஒரு இடத்தில் அல்ல, பூமி முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

4. மெகிதோவை மனதில் வைத்து யெகோவா ஏன் தன்னுடைய கடைசி போருக்கு அர்மகெதோன் என்று பெயர் வைத்தார்?

4 கடைசியாக நடக்கப்போகிற மகா போரை யெகோவா ஏன் மெகிதோவோடு சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கிறார்? மெகிதோவிலும் அதன் பக்கத்திலிருந்த யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும்தான் அந்தக் காலத்தில் நிறைய போர்கள் நடந்தன. சிலசமயங்களில், யெகோவா நேரடியாக அந்தப் போர்களில் தலையிட்டிருக்கிறார். ஒருசமயம், சிசெராவின் தலைமையில் கானானியப் படை இஸ்ரவேலர்களுக்கு எதிராக அணிவகுத்து வந்தது. அந்தப் படையைத் தோற்கடிக்க இஸ்ரவேலின் நியாயாதிபதியான பாராக்குக்கு “மெகிதோவின் தண்ணீருக்குப் பக்கத்திலே” யெகோவா உதவினார். அந்த மாபெரும் வெற்றிக்காக பாராக்கும் தீர்க்கதரிசனம் சொல்கிறவளுமான தெபொராளும் யெகோவாவுக்கு நன்றி சொல்லிப் பாடினார்கள். “வானத்திலிருந்து நட்சத்திரங்கள் போர் செய்தன. . . . சிசெராவுடன் சண்டை போட்டன. கீசோன் நீரோடை எதிரிகளை அடித்துக்கொண்டு போனது” என்று பாடினார்கள்.—நியா. 5:19-21.

5. பாராக் செய்த போருக்கும் அர்மகெதோன் போருக்கும் என்ன வித்தியாசம்?

5 “யெகோவாவே, உங்கள் எதிரிகள் அழிந்துபோகட்டும். உங்களை நேசிக்கிறவர்கள் சூரியன்போல் பிரகாசமாக உதிக்கட்டும்” என்று சொல்லி, பாராக்கும் தெபொராளும் தங்களுடைய பாடலை முடித்தார்கள். (நியா. 5:31) அவர்கள் பாடியதுபோல், அர்மகெதோனில் கடவுளுடைய எதிரிகள் அழிந்துபோவார்கள். கடவுளை நேசிக்கிறவர்களோ காப்பாற்றப்படுவார்கள். ஆனால், பாராக் செய்த போருக்கும் அர்மகெதோன் போருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அர்மகெதோன் போரில், கடவுளுடைய மக்கள் போர் செய்ய மாட்டார்கள். ஆயுதங்களைக்கூட கைகளில் ஏந்தமாட்டார்கள். அவர்கள் “பதட்டம் அடையாமல்” யெகோவாமீதும் அவருடைய பரலோகப் படைகள்மீதும் ‘நம்பிக்கை வைப்பார்கள்.’ அதுதான் அவர்களுடைய “பலமாக” இருக்கும்.—ஏசா. 30:15; வெளி. 19:11-15.

6. அர்மகெதோனில் தன்னுடைய எதிரிகளை யெகோவா எப்படித் துவம்சம் செய்யலாம்?

6 அர்மகெதோன் போரில் தன்னுடைய எதிரிகளைத் துவம்சம் செய்வதற்குக் கடவுள் நிறைய வழிகளைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, நிலநடுக்கங்களையோ ஆலங்கட்டிகளையோ மின்னலையோ அவர் பயன்படுத்தலாம். (யோபு 38:22, 23; எசே. 38:19-22) எதிரிகளே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாகும்படியும் செய்யலாம். (2 நா. 20:17, 22, 23) தேவதூதர்களைப் பயன்படுத்தி அவர்களை நாசம் செய்யலாம். (ஏசா. 37:36) கடவுள் எந்த முறையைப் பயன்படுத்தினாலும் சரி, அவர் ஜெயிப்பது உறுதி! அவருடைய எதிரிகள் மண்ணோடு மண்ணாகிப்போவது நிச்சயம்! நீதியான ஜனங்களோ காப்பாற்றப்படுவார்கள்!—நீதி. 3:25, 26.

அர்மகெதோனுக்குக் கொஞ்சம் முன்பு நடக்கும் சம்பவங்கள்

7-8. (அ) 1 தெசலோனிக்கேயர் 5:1-6 சொல்கிறபடி, வழக்கத்துக்கு மாறான என்ன அறிவிப்பை உலகத் தலைவர்கள் செய்வார்கள்? (ஆ) அது ஓர் ஆபத்தான பொய் என்று ஏன் சொல்லலாம்?

7 “யெகோவாவின் நாள்” வருவதற்கு முன்பு “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு வெளியாகும். (1 தெசலோனிக்கேயர் 5:1-6-ஐ வாசியுங்கள்.) 1 தெசலோனிக்கேயர் 5:2-ல் சொல்லப்பட்டிருக்கிற “யெகோவாவின் நாள்,” ‘மிகுந்த உபத்திரவத்தை’ குறிக்கிறது. (வெளி. 7:14) அப்படியென்றால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கப்போகிறது என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? வழக்கத்துக்கு மாறான ஓர் அறிவிப்பு செய்யப்படும் என்று பைபிள் சொல்கிறது. மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கப்போகிறது என்பதற்கான அடையாளமாக அது இருக்கும்.

8 “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்புதான் அது! உலகத் தலைவர்கள் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு என்ன காரணம்? நமக்கு உறுதியாகத் தெரியாது! மதத் தலைவர்களும் அவர்களோடு சேர்ந்துகொள்வார்களா? இருக்கலாம்! எப்படியிருந்தாலும் சரி, பேய்களிடமிருந்து வருகிற பொய்யான அறிவிப்புதான் அது. அந்தப் பொய் ரொம்ப ஆபத்தானது. ஏனென்றால், அது மக்களுக்கு ஒரு தவறான நம்பிக்கையைக் கொடுக்கும். அதாவது, தாங்கள் ஏதோ பாதுகாப்பாக இருப்பதுபோல் மக்களை அது உணர வைக்கும். அதுவும், சரித்திரத்திலேயே இதுவரை வராத மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்பு மக்களை அப்படி உணர வைக்கும். ஆனால், “ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வருவதுபோல் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும்.” யெகோவாவின் உண்மை ஊழியர்களுக்கு என்ன நடக்கும்? யெகோவாவின் நாள் திடீரென்று ஆரம்பிப்பதை நினைத்து அவர்கள் ஆச்சரியப்பட்டாலும், அதைச் சந்திக்கத் தயாராக இருப்பார்கள்!

9. இந்த உலகத்தை கடவுள் எப்படி அழிப்பார்?

9 நோவாவின் காலத்தில் நடந்ததுபோல், சாத்தானுடைய உலகத்தை கடவுள் ஒரே நேரத்தில் அழிக்க மாட்டார். இரண்டு கட்டங்களில் அழிப்பார். முதல் கட்டமாக, மகா பாபிலோனை, அதாவது எல்லா பொய் மதங்களையும் அழிப்பார். இரண்டாம் கட்டமாக, சாத்தானுடைய உலகத்தில் மீதியிருக்கிற அரசியல், ராணுவம், வர்த்தகம் உட்பட எல்லாவற்றையும் அர்மகெதோன் போரில் அழிப்பார். இந்த இரண்டு முக்கியச் சம்பவங்களும் எப்படி நடக்கும் என்று இப்போது கவனமாகப் பார்க்கலாம்.

10. வெளிப்படுத்துதல் 17:1, 6 மற்றும் 18:24-ன்படி, மகா பாபிலோனை யெகோவா அழிக்கப்போவதற்கு என்ன காரணம்?

10 “பேர்போன விபச்சாரிக்குக் கிடைக்கப்போகிற தண்டனை.” (வெளிப்படுத்துதல் 17:1, 6; 18:24-ஐ வாசியுங்கள்.) மகா பாபிலோன், கடவுளுடைய பெயருக்கு நிறைய அவமரியாதையைக் கொண்டுவந்திருக்கிறாள். எப்படி? கடவுளைப் பற்றி அவள் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறாள். ஒழுக்கங்கெட்ட பெண்ணைப் போல், மனித அரசாங்கங்களை ஆதரிப்பதன் மூலம் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போயிருக்கிறாள். தன்னுடைய உறுப்பினர்களை அடக்கி ஆண்டு, பணத்தைச் சுருட்டியிருக்கிறாள். கடவுளுடைய ஊழியர்கள் உட்பட, நிறைய பேருடைய இரத்தத்தைச் சிந்தியிருக்கிறாள். (வெளி. 19:2) இந்தப் படுபாதகியை யெகோவா எப்படி அழிப்பார்?

11. “கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம்” எது, மகா பாபிலோனுக்கு எதிராக யெகோவா அதை எப்படித் திருப்பிவிடுவார்?

11 ‘கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின்’ ‘பத்துக் கொம்புகள்’ மூலம் அந்த ‘பேர்போன விபச்சாரியை’ யெகோவா அழிக்கப்போகிறார். மூர்க்க மிருகம், ஐக்கிய நாடுகள் சபைக்கு அடையாளமாக இருக்கிறது. பத்துக் கொம்புகள், அந்தச் சபையை ஆதரிக்கும் உலக அரசாங்கங்களுக்கு அடையாளமாக இருக்கிறது. கடவுள் குறித்திருக்கிற நேரத்தில், அந்த அரசாங்கங்கள் மகா பாபிலோன்மீது பாயும். அவளுடைய சொத்துகளை பறிமுதல் செய்வதன் மூலமும், அவளுடைய சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலமும், “அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும்.” (வெளி. 17:3, 16) அந்த அழிவு அவள்மேல் திடீரென்று வரும். அதாவது, ஒரே நாளில் அவள் அழிந்துவிட்டதுபோல் இருக்கும். அவளுடைய ஆதரவாளர்களை அது அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஏனென்றால், “நான் ஒரு ராணியாக உட்கார்ந்திருக்கிறேன், நான் விதவை அல்ல, நான் ஒருபோதும் துக்கப்பட மாட்டேன்” என்று அவள் ரொம்பக் காலமாகப் பெருமையடித்துக்கொண்டு இருந்தாளே!—வெளி. 18:7, 8.

12. என்ன செய்ய தேசங்களை யெகோவா விட மாட்டார், ஏன்?

12 தன்னுடைய மக்களை அழிப்பதற்குத் தேசங்களை யெகோவா விடமாட்டார். ஏனென்றால், அவருடைய பெயரை அவர்கள் தாங்கியிருக்கிறார்கள். மகா பாபிலோனை விட்டு வெளியேறும்படி அவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள். (அப். 15:16, 17; வெளி. 18:4) அவளைவிட்டு வெளியே வர மற்றவர்களுக்கும் உதவியிருக்கிறார்கள். அதனால், யெகோவாவின் ஊழியர்கள், ‘அவளுக்கு வரப்போகும் தண்டனைகளில் பங்குகொள்ள’ மாட்டார்கள். மகா பாபிலோனுக்கு வரும் அழிவிலிருந்து தப்பித்தாலும், அடுத்து வரப்போகிற சோதனையை ஜெயிப்பதற்குக் கடவுளுடைய ஊழியர்களுக்குப் பலமான விசுவாசம் தேவைப்படும்.

கடவுளுடைய மக்கள் எங்கே வாழ்ந்தாலும் சரி, தாக்குதல் நடக்கும்போது கடவுள்மீது முழு நம்பிக்கையோடு இருப்பார்கள் (பாரா 13) *

13. (அ) கோகு யார்? (ஆ) எசேக்கியேல் 38:2, 8, 9-ன்படி, கடவுளுடைய மக்களைத் தாக்கும்படி எது கோகுவைத் தூண்டும்?

13 கோகுவின் தாக்குதல். (எசேக்கியேல் 38:2, 8, 9-ஐ வாசியுங்கள்.) எல்லா பொய் மதங்களும் அழிந்த பிறகு, புயலில் தப்பித்த ஒற்றை மரம்போல் கடவுளுடைய மக்கள் இருப்பார்கள். அது சாத்தானுக்குப் பொறுக்குமா? அவன் கோபத்தில் கொந்தளிப்பான். பேய்த்தனமான பிரச்சாரத்தை, அதாவது ‘அசுத்தமான செய்திகளை’ பரப்புவதன் மூலம் அவனுடைய கோபத்தை வெளிப்படுத்துவான். தேசங்களின் தொகுதி, அந்தச் செய்திகளைக் கேட்டு யெகோவாவின் ஊழியர்களைத் தாக்கும். (வெளி. 16:13, 14) அந்தத் தொகுதிதான் “மாகோகு தேசத்தின் கோகு” என்று அழைக்கப்படுகிறது. தேசங்கள் அந்தத் தாக்குதலை ஆரம்பிக்கும் சமயத்தில், அடையாளப்பூர்வ இடமான அர்மகெதோனுக்கு வந்துசேர்ந்திருக்கும். அதாவது, அர்மகெதோன் போர் ஆரம்பமாகும்.—வெளி. 16:16.

14. கோகு எதைப் புரிந்துகொள்ளும்?

14 கோகுவின் நம்பிக்கை, ‘சாதாரண மனிதர்கள்மேல்தான்’ இருக்கும், அதாவது அதன் படைபலத்தின் மீதுதான் இருக்கும். (2 நா. 32:8) நம்முடைய நம்பிக்கையோ யெகோவாவின் மீது இருக்கும். ஒருசமயத்தில் சக்திபடைத்தவளாக இருந்த மகா பாபிலோனை, ‘மூர்க்க மிருகத்திடமிருந்தும்’ அதன் ‘பத்துக் கொம்புகளிடமிருந்தும்’ அதன் கடவுள்களால் காப்பாற்ற முடியாததால், நாம் நம்முடைய கடவுளான யெகோவாவை நம்புவதை தேசங்கள் பைத்தியக்காரத்தனமாக நினைக்கும். (வெளி. 17:16) அதனால், நம்மைச் சுலபமாக வீழ்த்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போடும். “தேசத்தை மூடுகிற மேகம் போல” யெகோவாவின் மக்களைத் தாக்கும். (எசே. 38:16) ஆனால், செங்கடலில் மாட்டிக்கொண்ட பார்வோனைப் போல், தான் வசமாக மாட்டிக்கொண்டதை கோகு சீக்கிரத்திலேயே புரிந்துகொள்ளும். யெகோவாவுக்கு எதிராகவே சண்டைபோட்டுக் கொண்டிருப்பதை அப்போது அது உணர்ந்துகொள்ளும்.—யாத். 14:1-4; எசே. 38:3, 4, 18, 21-23.

15. அர்மகெதோன் போரில் இயேசு என்ன செய்வார்?

15 கிறிஸ்துவும் அவருடைய பரலோகப் படைவீரர்களும் கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார்கள். கோகுவை, அதாவது தேசங்களையும் அதன் படைகளையும், அடியோடு அழிப்பார்கள். (வெளி. 19:11, 14, 15) ஆனால், யெகோவாவின் முக்கிய எதிரியான சாத்தானுக்கு என்ன நடக்கும்? பொய்களைப் பரப்புவதன் மூலம் அர்மகெதோன் போரில் கடவுளுடைய மக்களைத் தாக்கும்படி தேசங்களைத் தூண்டிய அவனையும், அவனுடைய பேய்களையும் இயேசு அதலபாதாளத்தில் அடைத்துவிடுவார். அங்கே ஆயிரம் வருஷங்கள் அவர்கள் அடைபட்டுக் கிடப்பார்கள்.—வெளி. 20:1-3.

அர்மகெதோன் போரில் தப்பிப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை

16. (அ) நமக்கு ‘கடவுளைப் பற்றித் தெரியும்’ என்பதை எப்படிக் காட்டலாம்? (ஆ) யெகோவாவைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பவர்களுக்கு அர்மகெதோன் போரில் என்ன நடக்கும்?

16 நாம் சமீபத்தில் சத்தியத்துக்கு வந்திருந்தாலும் சரி, ரொம்பக் காலமாக சத்தியத்தில் இருந்தாலும் சரி, அர்மகெதோனில் தப்பிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். அதாவது, நமக்கு ‘கடவுளைப் பற்றித் தெரியும்’ என்பதையும், ‘நம் எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்திக்குக் கீழ்ப்படிகிறோம்’ என்பதையும் செயலில் காட்ட வேண்டும். (2 தெ. 1:7-9) கடவுளுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, அவருடைய தராதரங்கள் என்ன ஆகியவற்றைப் பற்றி நமக்குத் தெரிந்திருந்தால், ‘கடவுளைப் பற்றி [நமக்கு] தெரியும்’ என்று அர்த்தம். அதோடு, அவரை நேசிக்கும்போதும், அவருக்குக் கீழ்ப்படியும்போதும், அவரை மட்டுமே வணங்கும்போதும் அவரைப் பற்றி நமக்குத் தெரியும் என்று அர்த்தம். (1 யோ. 2:3-5; 5:3) இப்படி, கடவுளைப் பற்றி நமக்குத் தெரியும் என்பதைச் செயலில் காட்டும்போது, ‘கடவுளும் [நம்மை] நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்’. அப்போது, நம்மால் அர்மகெதோனில் தப்பிக்க முடியும். (1 கொ. 8:3) ஏனென்றால், ‘கடவுள் [நம்மை] நன்றாகத் தெரிந்து வைத்திருப்பது,’ அவருடைய அங்கீகாரம் நமக்கு இருக்கிறது என்பதற்கான அடையாளம்!

17. ‘நம் எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்திக்குக் கீழ்ப்படிவதில்’ எவையெல்லாம் அடங்குகின்றன?

17 ‘நம் எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியில்,’ இயேசு கற்றுக்கொடுத்த எல்லா சத்தியங்களும் அடங்குகின்றன. பைபிளை வாசிக்கும்போது, அதை நாம் தெரிந்துகொள்ள முடியும். கற்றுக்கொண்ட சத்தியத்தின்படி நடந்துகொள்ளும்போது, நாம் நல்ல செய்திக்குக் கீழ்ப்படிகிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், கீழ்ப்படிவதில் எவையெல்லாம் அடங்குகின்றன? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய விஷயங்களை முதலிடத்தில் வைப்பது, அவருடைய நீதியான தராதரங்களின்படி வாழ்வது, அவருடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது ஆகியவை அடங்குகின்றன. (மத். 6:33; 24:14) நல்ல செய்தியைப் பிரசங்கித்து மற்றவர்களைச் சீஷர்களாக்குகிற முக்கியமான பொறுப்பு கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதும் கீழ்ப்படிவதில் அடங்குகின்றன.—மத். 25:31-40.

18. பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள், தங்களுடைய நன்றியை எப்படிக் காட்டுவார்கள்?

18 ‘வேறே ஆடுகள்’ தங்களுக்குச் செய்த உதவிகளுக்காக, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் சீக்கிரத்தில் அவர்களுக்குப் பலனளிக்கப்போகிறார்கள். (யோவா. 10:16) எப்படி? அர்மகெதோன் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, 1,44,000 பேரில் மீதியாயிருக்கிற எல்லாரும், சாவாமையுள்ள உடலில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். பரலோகப் படைகளோடு அவர்கள் சேர்ந்துகொள்வார்கள். அந்தப் படை, கோகுவை அடியோடு அழிக்கும்; ‘திரள் கூட்டத்தை’ காப்பாற்றும். (வெளி. 2:26, 27; 7:9, 10) அப்படியென்றால், பரலோக நம்பிக்கையுள்ள கடவுளுடைய ஊழியர்கள் பூமியில் இருக்கும்போதே அவர்களுக்கு உதவுவது திரள் கூட்டத்துக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

முடிவு நெருங்கிவருகிற இந்தச் சமயத்தில் தொடர்ந்து உண்மையாக இருங்கள்

19-20. அர்மகெதோன் நெருங்கிவருகிற இந்தச் சமயத்தில், சோதனைகள் மத்தியிலும் நாம் எப்படித் தொடர்ந்து உண்மையோடு இருக்கலாம்?

19 சமாளிப்பதற்குக் கஷ்டமாக இருக்கும் இந்தக் கடைசிக் காலத்தில் யெகோவாவின் ஊழியர்கள் நிறைய பேருக்குச் சோதனைகள் வருகின்றன. ஆனாலும், அவற்றை நம்மால் சந்தோஷத்தோடு சகித்துக்கொள்ள முடியும். (யாக். 1:2-4) அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து, உருக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். (லூக். 21:36) அதுமட்டுமல்ல, பைபிளை தினமும் படிக்க வேண்டும், படித்தவற்றை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். சீக்கிரத்தில் நிறைவேறப்போகிற மெய்சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனங்களையும் ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். (சங். 77:12) இதையெல்லாம் செய்வதன் மூலமும், ஊழியத்தை நன்றாகச் செய்வதன் மூலமும் நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ளலாம்; நம்முடைய நம்பிக்கைச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

20 சீக்கிரத்தில், இருந்த இடம் தெரியாமல் மகா பாபிலோன் அழிந்துவிடும்; அர்மகெதோன் போரும் முடிவுக்கு வந்துவிடும். அப்போது நாம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போம்! மிக முக்கியமாக, பூமியில் இருக்கிற எல்லாரும் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேர்க்கும்போதும், ஆட்சி செய்யும் உரிமை அவருக்குத்தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும்போதும் நாம் சந்தோஷத்தின் உச்சத்துக்கே போய்விடுவோம்! (எசே. 38:23) அப்படியென்றால், கடவுளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும், அவருடைய மகனுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கும், முடிவுவரை சகித்திருப்பவர்களுக்கும் அர்மகெதோன் ஓர் ஆசீர்வாதமே! —மத். 24:13.

பாட்டு 128 உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது

^ பாரா. 5 யெகோவாவின் மக்கள் ரொம்பக் காலமாகவே அர்மகெதோனுக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். அர்மகெதோன் என்றால் என்ன? அர்மகெதோனுக்குக் கொஞ்சம் முன்பு என்னென்ன சம்பவங்கள் நடக்கும்? முடிவு நெருங்கி வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நாம் எப்படித் தொடர்ந்து உண்மையாக இருக்கலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 71 படங்களின் விளக்கம்: நம்மைச் சுற்றி நடக்கப்போகிற சுவாரஸ்யமான சம்பவங்கள்: (1) எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் ஊழியம் செய்வோம், (2) படிப்புப் பழக்கத்தை விட்டுவிட மாட்டோம், (3) கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்போம்.

^ பாரா. 85 படங்களின் விளக்கம்: கிறிஸ்தவ குடும்பம் ஒன்றைத் தாக்குவதற்காக, போலீசார் போகிறார்கள். நடப்பதையெல்லாம் இயேசுவும் தேவதூதர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தக் குடும்பத்தார் முழுமையாக நம்புகிறார்கள்.