Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 37

யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்​—ஏன், எப்படி?

யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்​—ஏன், எப்படி?

“பரலோகத் தகப்பனுக்கு நாம் இன்னும் அதிகமாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இல்லையா?”​—எபி. 12:9.

பாட்டு 46 யெகோவா நம் ராஜா!

இந்தக் கட்டுரையில்... *

1. நாம் ஏன் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?

யெகோவா நம்மைப் படைத்தவர்! அதனால், நாம் அவருக்குக் கட்டுப்பட்டு * நடக்க வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. (வெளி. 4:11) யெகோவாவுடைய ஆட்சிதான் சிறந்தது! இந்தக் காரணத்துக்காகவும் நாம் அவருக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டும். வரலாறை புரட்டிப் பார்த்தால், எத்தனையோ மனிதர்கள் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்த விஷயம் நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் எல்லாரையும்விட யெகோவாதான் சிறந்த ஆட்சியாளர். அவர் மட்டும்தான் ஞானமான, அளவற்ற அன்பு காட்டுகிற, இரக்கமான, கரிசனையான ஆட்சியாளர்!—யாத். 34:6; ரோ. 16:27; 1 யோ. 4:8.

2. யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க, எபிரெயர் 12:9-11-ல் என்னென்ன காரணங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்?

2 தன்மீது இருக்கிற பயத்தால் அல்ல, தன்மீது இருக்கிற அன்பால் மற்றவர்கள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அவரை அன்பான அப்பாவாக நினைத்து நாம் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எபிரெயர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில், “பரலோகத் தகப்பனுக்கு நாம் இன்னும் அதிகமாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஏனென்றால், ‘நம்முடைய நன்மைக்காகத்தான்’ யெகோவா நமக்குப் பயிற்சி தருவதாக அவர் சொன்னார்.எபிரெயர் 12:9-11-ஐ வாசியுங்கள்.

3. (அ) யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (ஆ) எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்?

3 எல்லா விஷயங்களிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்பட்டு நடக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதன் மூலம் நாம் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம். நல்லது கெட்டதை நாமே முடிவு செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை எதிர்த்துப் போராடுவதன் மூலமும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம். (நீதி. 3:5) யெகோவாவுடைய தங்கமான குணங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது, அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது சுலபம். ஏனென்றால், அவருடைய எல்லா செயல்களுக்கும் அவருடைய குணங்கள்தான் அடிப்படையாக இருக்கின்றன. (சங். 145:9) எந்தளவுக்கு யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்கிறோமோ, அந்தளவுக்கு அவரை நாம் நேசிப்போம். அப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று சொல்வதற்கு சட்டங்கள் அடங்கிய பட்டியல் நமக்குத் தேவைப்படாது. ஏனென்றால், யெகோவா விரும்புவது போல் யோசிக்கவும், செயல்படவும், கெட்டதைத் தவிர்க்கவும் நாம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்போம். (சங். 97:10) இருந்தாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது சிலசமயங்களில் நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்? ஆளுநராகிய நெகேமியாவிடமிருந்தும், தாவீது ராஜாவிடமிருந்தும், இயேசுவின் தாய் மரியாளிடமிருந்தும் மூப்பர்களும் அப்பாக்களும் அம்மாக்களும் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

4-5. ரோமர் 7:21-23 சொல்வதுபோல், எல்லா சமயத்திலும் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏன் சிரமமாக இருக்கலாம்?

4 ஒரு காரணம்: வழிவழியாக கடத்தப்பட்டிருக்கிற பாவமும், தவறு செய்கிற இயல்பும். இந்தக் காரணத்தால், கட்டுப்பாட்டை மீற வேண்டும் என்ற தூண்டுதல் நம்மிடம் வந்துவிடுகிறது. ஆதாம் ஏவாள் விஷயத்தில் இதுதான் நடந்தது. கடவுள் தடை செய்திருந்த பழத்தைச் சாப்பிட்டதன் மூலம் அவர்கள் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள். நல்லது கெட்டதை அவர்களாகவே முடிவு செய்துகொண்டார்கள். (ஆதி. 3:22) இன்றிருக்கும் பெரும்பாலான மக்களும் அதைத்தான் செய்கிறார்கள்! யெகோவாவை ஒதுக்கிவிடுகிறார்கள்; நல்லது கெட்டதை அவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள்.

5 யெகோவாவைத் தெரிந்துகொண்டு அவரை நேசிப்பவர்களுக்குக்கூட, அவர் சொல்கிறபடி எல்லா சமயத்திலும் நடந்துகொள்வது சிரமமாக இருக்கலாம். அப்போஸ்தலன் பவுலின் விஷயத்திலும் இதுதான் உண்மை. (ரோமர் 7:21-23-ஐ வாசியுங்கள்.) அவரைப் போலவே நாமும் யெகோவாவுக்குப் பிடித்தவற்றைச் செய்ய ஆசைப்படுகிறோம். அதற்கு, தவறானவற்றைச் செய்வதற்கான தூண்டுதலை எதிர்த்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.

6-7. யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை கஷ்டமாக்குகிற இன்னொரு விஷயம் என்ன? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

6 இன்னொரு காரணம்: நம் ஊரில் இருப்பவர்களின் பழக்கவழக்கங்களும், அவர்கள் யோசிக்கும் விதமும். யெகோவா சொல்வதற்கு நேர்மாறாகத்தான் நிறைய பேர் யோசிக்கிறார்கள். அவர்களைப் போல் யோசிக்காமல் இருப்பதற்கு நாம் தினமும் கடினமாகப் போராட வேண்டியிருக்கிறது. ஒரு உதாரணத்தை மட்டும் இப்போது பார்க்கலாம்.

7 சில இடங்களில், கை நிறைய சம்பாதிக்கும்படி இளைஞர்களைக் கட்டாயப்படுத்துவது சகஜமாக இருக்கிறது. இமயா * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற சகோதரியின் விஷயத்தில் அதுதான் நடந்தது. யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு முன்பு, தன்னுடைய நாட்டிலிருந்த பிரபலமான ஒரு கல்வி நிறுவனத்தில் அவள் படித்தாள். பணத்தையும் அந்தஸ்தையும் தேடித் தருகிற ஒரு வேலையில் சேரும்படி அவளுடைய குடும்பத்திலிருந்தவர்கள் அவளைக் கட்டாயப்படுத்தினார்கள். அந்த ஆசை அவளுக்கும் இருந்தது. ஆனால் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டு, அவரை நேசிக்க ஆரம்பித்ததற்குப் பிறகு, தன்னுடைய லட்சியங்களை மாற்றிக்கொண்டாள். இருந்தாலும் அவள் இப்படிச் சொல்கிறாள்: “சில சமயத்துல, கை நிறைய சம்பாதிக்கிறதுக்கு வாய்ப்புகள் என்னை தேடி வரும். ஆனா அத ஏத்துக்கிட்டா, இப்ப யெகோவாவுக்கு சேவை செய்ற மாதிரி என்னால செய்ய முடியாம போயிடும்னு எனக்கு தெரியும். நான் வளர்ந்த விதம் அப்படியிருந்ததால, இந்த மாதிரியான வாய்ப்புகள வேண்டாம்னு சொல்றது கஷ்டமாதான் இருக்கு. அதனால, ‘உங்களோட சேவைய சுறுசுறுப்பா செய்றதுக்கு எது தடையா இருக்கோ, அத ஏத்துக்காம இருக்க உதவுங்கனு’ யெகோவாகிட்ட கெஞ்சி கேட்பேன்.”—மத். 6:24.

8. இப்போது நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

8 யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது நாம் நன்மையடைகிறோம். ஓரளவு அதிகாரம் பெற்றவர்களாகிய மூப்பர்களும் அப்பாக்களும் அம்மாக்களும் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது, மற்றவர்களும் நன்மையடைகிறார்கள். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள, இப்போது சில பைபிள் உதாரணங்களைப் பார்க்கலாம்.

மூப்பர்களே, நெகேமியாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

எருசலேமின் மதிலைக் கட்டும்போது ஜனங்களோடு சேர்ந்து வேலை செய்த நெகேமியாவைப் போல், இன்று மூப்பர்களும் ராஜ்ய மன்ற வேலையை மற்றவர்களோடு சேர்ந்து செய்கிறார்கள் (பாராக்கள் 9-11) *

9. நெகேமியாவுக்கு என்னென்ன சவால்கள் இருந்தன?

9 தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிற முக்கியமான பொறுப்பை மூப்பர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். (1 பே. 5:2) யெகோவாவின் மக்களை நெகேமியா நடத்திய விதத்திலிருந்து மூப்பர்கள் பாடம் கற்றுக்கொள்ளலாம். யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நெகேமியாவுக்கு நிறைய அதிகாரம் இருந்தது. (நெ. 1:11; 2:7, 8; 5:14) இப்போது, அவருக்கு இருந்த சில சவால்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். எருசலேமில் இருந்தவர்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியிருந்தார்கள். திருச்சட்டத்தின்படி லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டிய நன்கொடையைக் கொடுக்காமல் இருந்தார்கள். ஓய்வுநாள் சட்டத்தையும் யூதர்கள் மீறி நடந்தார்கள். யெகோவாவை வணங்காத மற்ற தேசத்துப் பெண்களை சிலர் கல்யாணம் செய்திருந்தார்கள். இப்போது ஆளுநரான நெகேமியா என்ன செய்வார்?—நெ. 13:4-30.

10. சவால்களை நெகேமியா எப்படிச் சமாளித்தார்?

10 அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன்னுடைய இஷ்டப்படி மக்களை அவர் ஆட்டிப்படைக்கவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஊக்கமாக ஜெபம் செய்தார். யெகோவாவின் சட்டதிட்டங்களை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (நெ. 1:4-10; 13:1-3) தன்னுடைய சகோதரர்களோடு சேர்ந்து மனத்தாழ்மையோடு வேலை செய்தார். எருசலேமின் மதிலைக் கட்டுவதற்கும் அவர்களுக்கு உதவினார்.—நெ. 4:15.

11. ஒன்று தெசலோனிக்கேயர் 2:7, 8 சொல்வதுபோல், சகோதர சகோதரிகளை மூப்பர்கள் எப்படி நடத்த வேண்டும்?

11 நெகேமியாவுக்கு வந்த அதே பிரச்சினைகள் இன்று மூப்பர்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனாலும், நிறைய விதங்களில் அவர்கள் நெகேமியாவைப் போலவே நடந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, சகோதர சகோதரிகளுக்காக அவர்கள் ஓடியாடி உழைக்கிறார்கள். தங்களுக்கு ஓரளவு அதிகாரம் இருப்பதால், மற்றவர்களைவிட தங்களை உயர்வானவர்களாக அவர்கள் நினைப்பதில்லை. சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளிடம் கனிவாக நடந்துகொள்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:7, 8-ஐ வாசியுங்கள்.) உண்மையான அன்பும் மனத்தாழ்மையும் அவர்களிடம் இருப்பதால், மற்றவர்களிடம் அன்பாகப் பேசுகிறார்கள். பல வருஷங்களாக மூப்பராக சேவை செய்யும் ஆண்ட்ரூ என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு மூப்பர் அன்பா நட்பா பழகுறப்போ, சகோதர சகோதரிகளோட மனச அது தொடுது. மூப்பர்களோட ஒத்துழைக்கணுங்குற ஆசையும் அவங்களுக்கு வருது.” பல வருஷங்கள் அனுபவம் பெற்ற இன்னொரு மூப்பரான ஜீவன் இப்படிச் சொல்கிறார்: “பிலிப்பியர் 2:3-ல இருக்குற அறிவுரையின்படி நடந்துக்குறதுக்கு நான் முயற்சி செய்றேன். மத்தவங்கள என்னைவிட உயர்ந்தவங்களா பார்க்குறதுக்கு தொடர்ந்து முயற்சி செய்றேன். அதனால, மத்தவங்கள அதிகாரம் பண்றத தவிர்க்க முடியுது.”

12. மூப்பர்கள் ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?

12 யெகோவாவைப் போலவே, மூப்பர்களும் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசராக இருந்தபோதும், “எளியவனைப் புழுதியிலிருந்து” தூக்கிவிடுவதற்காக யெகோவா “குனிந்து பார்க்கிறார்.” (சங். 18:35; 113:6, 7) கர்வம் பிடித்தவர்களை அவர் அருவருக்கிறார்.—நீதி. 16:5.

13. ஒரு மூப்பர் ஏன் ‘தன் நாக்கை அடக்க’ வேண்டும்?

13 யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கிற ஒரு மூப்பர், ‘தன் நாக்கை அடக்குவார்.’ அப்படிச் செய்யவில்லை என்றால், அவருக்கு மதிப்பு கொடுக்காதவரிடம் அவர் அன்பில்லாமல் பேசிவிட வாய்ப்பு இருக்கிறது. (யாக். 1:26; கலா. 5:14, 15) ஏற்கெனவே பார்த்த சகோதரர் ஆண்ட்ரூ இப்படிச் சொல்கிறார்: “என்னை மதிக்காத சகோதர சகோதரிகள நானும் மதிக்க கூடாதுனு சில சமயங்கள்ல நினைச்சிருக்கேன். ஆனா, பைபிள்ல இருக்கிற உண்மையுள்ள ஊழியர்கள பத்தி யோசிச்சு பார்த்தேன். மனத்தாழ்மையா, சாந்தமா இருக்குறது எவ்வளவு முக்கியங்குறது அப்போ எனக்கு புரிஞ்சுது.” சக மூப்பர்கள் உட்பட, சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் எல்லாரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பேசுவதன் மூலம் மூப்பர்கள் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.—கொலோ. 4:6.

அப்பாக்களே, தாவீது ராஜாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

14. அப்பாக்களுக்கு யெகோவா என்ன பொறுப்பு கொடுத்திருக்கிறார், அவர்களிடமிருந்து அவர் என்ன எதிர்பார்க்கிறார்?

14 அப்பாக்களைத்தான் குடும்பத் தலைவர்களாக யெகோவா நியமித்திருக்கிறார். பிள்ளைக்குக் கற்றுக்கொடுப்பதும், பிள்ளையை வழிநடத்துவதும், கண்டிப்பதும் அப்பாக்களின் பொறுப்பு; யெகோவா அதை எதிர்பார்க்கிறார்! (1 கொ. 11:3; எபே. 6:4) அதற்காக, நினைத்தபடியெல்லாம் அந்த அதிகாரத்தை அவர்களால் பயன்படுத்த முடியாது. அவர்கள் யெகோவாவுக்குப் பதில் சொல்ல வேண்டும்! ஏனென்றால், யெகோவாதான் குடும்பத்தை உருவாக்கியவர். (எபே. 3:14, 15) அவருக்குப் பிடித்த விதத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அப்பாக்கள் அவருக்குக் கட்டுப்படுகிறார்கள் என்று சொல்ல முடியும். தாவீது ராஜாவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அப்பாக்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

அப்பாக்கள் செய்கிற ஜெபத்தில், அவர்களுடைய மனத்தாழ்மை பளிச்சென்று தெரிய வேண்டும் (பாராக்கள் 15-16) *

15. அப்பாக்களுக்கு தாவீது ராஜா அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார் என்று ஏன் சொல்லலாம்?

15 தாவீதை, அவருடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, முழு இஸ்ரவேல் தேசத்துக்குமே தலைவனாக யெகோவா நியமித்திருந்தார். ராஜாவாக இருந்ததால், தாவீதுக்கு நிறைய அதிகாரம் இருந்தது. சிலசமயங்களில், அந்த அதிகாரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தினார்; படுமோசமான தவறுகளைச் செய்தார். (2 சா. 11:14, 15) ஆனாலும், யெகோவாவின் கண்டிப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார். தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி ஜெபம் செய்தார். யெகோவாவின் அறிவுரைகளின்படி நடப்பதற்கு எல்லா முயற்சியும் எடுத்தார். (சங். 51:1-4) அதோடு, ஆண்களிடமிருந்து மட்டுமல்ல, பெண்களிடமிருந்தும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு மனத்தாழ்மையோடு இருந்தார். (1 சா. 19:11, 12; 25:32, 33) தவறுகளிலிருந்து தாவீது பாடம் கற்றுக்கொண்டார், யெகோவாவின் சேவையை முதலிடத்தில் வைத்தார்.

16. தாவீதிடமிருந்து அப்பாக்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

16 அப்பாக்களே, தாவீது ராஜாவிடமிருந்து நீங்கள் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்: யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். தவறுகளை ஒத்துக்கொண்டு, மற்றவர்கள் கொடுக்கிற பைபிள் அடிப்படையிலான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் மனத்தாழ்மையோடு இருப்பதைப் பார்த்து உங்கள் குடும்பம் உங்களை மதிக்கும். குடும்பமாக ஜெபம் செய்யும்போது, உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள். அப்போது, யெகோவாவை நீங்கள் எந்தளவுக்கு நம்பியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தார் தெரிந்துகொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் வாழ்க்கைச் சக்கரம் யெகோவாவின் சேவையைச் சுற்றியே சுழலட்டும்! (உபா. 6:6-9) உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் கொடுக்கும் அருமையான பரிசுகளில் உங்கள் முன்மாதிரியும் ஒன்று!

அம்மாக்களே, மரியாளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

17. அம்மாக்களுக்கு யெகோவா என்ன பொறுப்பு கொடுத்திருக்கிறார்?

17 ஒவ்வொரு அம்மாவுக்கும் யெகோவா முக்கியமான ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். தங்களுடைய பிள்ளைகள்மேல் ஓரளவு அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். (நீதி. 6:20) சொல்லப்போனால், ‘தாயைப் போல பிள்ளை’ என்று சொல்லுமளவுக்கு ஓர் அம்மாவின் சொல்லும் செயலும் பிள்ளையை வடிவமைக்கும். (நீதி. 22:6) அப்படியென்றால், இயேசுவின் தாயான மரியாளிடமிருந்து இன்றிருக்கும் அம்மாக்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

18-19. மரியாளிடமிருந்து அம்மாக்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

18 வேதவசனங்களை மரியாள் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தாள். யெகோவாமேல் அவளுக்கு ஆழ்ந்த மரியாதையும், அவரிடம் நெருங்கிய பந்தமும் இருந்தது. தன்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று தெரிந்திருந்தும், யெகோவாவின் வழிநடத்துதலுக்கு அவள் கட்டுப்பட்டாள்.—லூக். 1:35-38, 46-55.

களைப்பாக இருக்கும் சமயங்களில், குடும்பத்தில் இருப்பவர்கள்மேல் அன்பு காட்ட அம்மாக்கள் ரொம்பவே முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம் (பாரா 19) *

19 அம்மாக்களே, நிறைய வழிகளில் நீங்கள் மரியாளைப் போலவே நடந்துகொள்ளலாம். முதலாவதாக, பைபிளை ஆழமாகப் படிப்பதன் மூலமும், தனிப்பட்ட விதத்தில் ஊக்கமாக ஜெபம் செய்வதன் மூலமும் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாவதாக, யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதற்காக உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளத் தயாராக இருங்கள். உதாரணத்துக்கு, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிற, வார்த்தைகளால் நோகடிக்கிற ஓர் அப்பா அம்மாவால் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கலாம். அதனால், உங்கள் பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். யெகோவாவின் தராதரங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, பிள்ளைகளிடம் அன்பாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்வது உங்களுக்குச் சவாலாக இருக்கலாம். முக்கியமாக, நீங்கள் களைப்பாக இருக்கும் சமயங்களில் உங்கள் பிள்ளை உங்கள் பேச்சைக் கேட்காதபோது, நீங்கள் பொறுமையை இழந்துவிடலாம். (எபே. 4:31) அந்த மாதிரியான சமயங்களில், யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்வது ரொம்ப முக்கியம். லிடியா என்ற ஓர் அம்மா இப்படிச் சொல்கிறார்: “நான் சொன்னபடி என்னோட பையன் கேட்காதப்போ, கோபத்துல கத்தாம இருக்குறதுக்கு ஊக்கமா ஜெபம் செய்வேன். அவன்கூட பேச பேசவே இடையில நிறுத்திட்டு யெகோவாகிட்ட மனசுக்குள்ள ஜெபம் செய்வேன். அப்படி பண்றப்போ என்னால அமைதியா இருக்க முடியுது.”—சங். 37:5.

20. சில அம்மாக்களுக்கு என்ன சவால்கள் இருக்கின்றன, அதை எப்படிச் சமாளிக்கலாம்?

20 சில அம்மாக்களுக்கு வேறுவிதமான சவால் இருக்கலாம். அதாவது, பிள்ளைகள்மீது இருக்கும் அன்பை எப்படிக் காட்டுவது என்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். (தீத். 2:3, 4) அவர்களில் நிறைய பேருடைய அப்பா அம்மா, பிள்ளைகள்மீது அன்பு காட்டாமலேயே வளர்த்திருப்பார்கள். நீங்களும் அப்படித்தான் வளர்க்கப்பட்டீர்களா? அப்படியென்றால், தயவுசெய்து உங்கள் அப்பா அம்மா செய்த தவறை நீங்களும் செய்து விடாதீர்கள். யெகோவாவுக்குக் கட்டுப்படுகிற ஓர் அம்மா, தன்னுடைய பிள்ளைகள்மேல் அன்பு காட்ட கற்றுக்கொள்ள வேண்டும். யோசிக்கும் விதம், உணரும் விதம், நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை மாற்றிக்கொள்வது ஒருவேளை உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், உங்களால் நிச்சயம் மாற முடியும். அப்போது, உங்களுக்கும் சந்தோஷம், உங்கள் குடும்பத்துக்கும் சந்தோஷம்!

தொடர்ந்து யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்

21-22. ஏசாயா 65:13, 14 சொல்கிறபடி, யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

21 யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் “யெகோவாவின் ஆணைகள் நீதியானவை, அவை இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. யெகோவாவின் கட்டளைகள் தூய்மையானவை, அவை கண்களைப் பிரகாசிக்க வைக்கின்றன. அவை உங்களுடைய ஊழியனை எச்சரிக்கின்றன. அவற்றின்படி நடக்கும்போது மிகுந்த பலன் கிடைக்கிறது” என்று அவர் எழுதினார். (சங். 19:8, 11) யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவர்களுக்கும், அவருடைய ஆலோசனைகளை அலட்சியம் செய்கிறவர்களுக்கும் இருக்கிற வித்தியாசத்தை இன்று நம்மால் பார்க்க முடிகிறது. யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவர்கள், “சந்தோஷம் பொங்கும் இதயத்தோடு ஆரவாரம் செய்வார்கள்.”ஏசாயா 65:13, 14-ஐ வாசியுங்கள்.

22 மூப்பர்களும் அப்பாக்களும் அம்மாக்களும் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது, அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும், அவர்களுடைய குடும்பங்களில் சந்தோஷத்துக்குக் குறைவே இருக்காது, சபையின் ஒற்றுமை பெருகும். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் இதயத்தை அவர்கள் சந்தோஷப்படுத்துவார்கள். (நீதி. 27:11) இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்?

பாட்டு 125 தேவ அமைப்புக்குப் பற்றுமாறாமல் கீழ்ப்படிவோம்

^ பாரா. 5 நாம் ஏன் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். யெகோவா கொடுத்திருக்கிற அதிகாரத்தை, மூப்பர்களும் அப்பாக்களும் அம்மாக்களும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். இந்த விஷயத்தில், ஆளுநராக இருந்த நெகேமியாவிடமிருந்தும், தாவீது ராஜாவிடமிருந்தும், இயேசுவின் தாய் மரியாளிடமிருந்தும் அவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

^ பாரா. 1 வார்த்தைகளின் விளக்கம்: மற்றவர்களுக்குக் கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்தப்படுகிற நபர்களுக்கு, கட்டுப்படு, கட்டுப்பட்டு நடந்துகொள்ளுதல் ஆகிய வார்த்தைகள் கசப்பானவையாக இருக்கும். ஆனால், கடவுளுடைய மக்களின் விஷயத்தில் அப்படிக் கிடையாது. ஏனென்றால், அவர்கள் மனதார கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார்கள். அதனால், இந்த வார்த்தைகள் அவர்களுக்குக் கசப்பதில்லை.

^ பாரா. 7 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 62 படங்களின் விளக்கம்: எருசலேமின் மதிலைக் கட்டும்போது நெகேமியா மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்ததுபோல், தன்னுடைய மகனோடு சேர்ந்து ஒரு மூப்பர் ராஜ்ய மன்ற பராமரிப்பு வேலையைச் செய்கிறார்.

^ பாரா. 64 படங்களின் விளக்கம்: குடும்பத்தோடு சேர்ந்து ஓர் அப்பா உருக்கமாக ஜெபம் செய்கிறார்.

^ பாரா. 66 படங்களின் விளக்கம்: ஒரு சின்னப் பையன், தான் செய்ய வேண்டிய வேலைகளையும் வீட்டுப் பாடங்களையும் முடிக்காமல் மணிக்கணக்காக வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறான். வேலையிலிருந்து களைப்பாகத் திரும்பிவந்திருக்கும் அவனுடைய அம்மா, அவன்மேல் எரிந்து விழாமல், வார்த்தைகளை அள்ளிக் கொட்டாமல், பொறுமையோடு அவனைக் கண்டிக்கிறார்.