Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 38

அமைதியான காலத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

அமைதியான காலத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

“தேசத்தில் அமைதி நிலவ யெகோவா உதவி செய்ததால் அந்தக் காலப்பகுதியில் போரோ எதிரிகளின் தொல்லையோ இருக்கவில்லை.”—2 நா. 14:6.

பாட்டு 144 உயிர் காக்கும் நற்செய்தி

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவுக்குச் சேவை செய்வது எப்போது சவாலாக இருக்கலாம்?

யெகோவாவை வணங்குவது எப்போது சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பிரச்சினைகளோடு போராடும்போதா அல்லது வாழ்க்கை ஓரளவு அமைதியாகப் போகும்போதா? பிரச்சினைகள் வரும்போது ஒருவேளை நாம் யெகோவாவை நம்பியிருக்கலாம். ஆனால், நம் வாழ்க்கை அமைதியாகப் போகும்போது என்ன செய்வோம்? யெகோவாவுக்குச் செய்யும் சேவையைக் கொஞ்சம் ஓரங்கட்டிவிடுவோமா? இதைப் பற்றித்தான் இஸ்ரவேலர்களை யெகோவா எச்சரித்தார்.—உபா. 6:10-12.

பொய் வணக்கத்துக்கு எதிராக ஆசா ராஜா அதிரடி நடவடிக்கை எடுத்தார் (பாரா 2) *

2. ஆசா ராஜா நமக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்?

2 ஆசா ராஜா நமக்கு அருமையான முன்மாதிரி. யெகோவாவை முழுமையாக நம்பியிருந்ததன் மூலம் அவர் ஞானமாக நடந்துகொண்டார். பிரச்சினைகள் வந்தபோது மட்டுமல்ல, அமைதியான காலங்களிலும் அவர் யெகோவாவுக்குச் சேவை செய்தார். வாழ்நாளெல்லாம் அவர் முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்தார். (1 ரா. 15:14) யூதாவிலிருந்த பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம் அவர் இதை நிரூபித்தார். அவர் “பொய் தெய்வங்களின் பலிபீடங்களையும் ஆராதனை மேடுகளையும் அழித்துப்போட்டார், பூஜைத் தூண்களை நொறுக்கிப்போட்டார், பூஜைக் கம்பங்களை வெட்டிப்போட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 14:3, 5) அதுமட்டுமல்ல, அவருடைய பாட்டி மாக்காளை ராஜமாதா அந்தஸ்திலிருந்து நீக்கினார். ஏனென்றால், மக்கள் வழிபடுவதற்காக ஒரு அருவருப்பான சிலையை அவள் செய்துவைத்திருந்தாள்.—1 ரா. 15:11-13.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

3 ஆசா, பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்டியது மட்டுமல்லாமல், உண்மை வணக்கம் செழித்தோங்குவதற்கு உறுதுணையாக இருந்தார். யூதா ராஜ்யத்தின் மக்கள் யெகோவாவிடம் திரும்பிவர உதவினார். அமைதியான காலத்தைக் கொடுத்து ஆசாவையும் அந்த மக்களையும் யெகோவா ஆசீர்வதித்தார். ஆசாவுடைய ஆட்சிக்காலத்தில் பத்து வருஷங்களுக்கு ‘தேசத்தில் . . . எதிரிகளின் தொல்லை இருக்கவில்லை.’ (2 நா. 14:1, 4, 6) அந்த அமைதியான காலத்தை ஆசா எப்படிப் பயன்படுத்தினார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஆசாவைப் போலவே நடந்துகொண்ட முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றியும் பார்ப்போம். உங்கள் நாட்டில் யெகோவாவைச் சுதந்திரமாக வணங்க முடிந்தால், இந்த அமைதியான காலத்தை நீங்கள் எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்றும் பார்ப்போம்.

அமைதியான காலத்தை ஆசா எப்படிப் பயன்படுத்தினார்?

4. இரண்டு நாளாகமம் 14:2, 6, 7 சொல்வதுபோல், அமைதியான காலத்தை ஆசா எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்?

4 இரண்டு நாளாகமம் 14:2, 6, 7-ஐ வாசியுங்கள். “எந்தப் பக்கத்திலிருந்தும் எதிரிகளின் தொல்லை இல்லாமல் [யெகோவா] நம்மை நிம்மதியாக வாழ வைத்திருக்கிறார்” என்று மக்களிடம் ஆசா சொன்னார். ஆனால், அந்த அமைதியான காலத்தில் சந்தோஷமாகப் பொழுதுபோக்கினால் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, நகரங்களையும் மதில்களையும் கோபுரங்களையும் கட்டி கதவுகளை வைத்தார். “தேசம் முழுவதும் நம்முடைய கையில்தான் இருக்கிறது” என்று யூதா மக்களிடம் சொன்னார். அதாவது, கடவுள் கொடுத்த அந்தத் தேசத்தில் எதிரிகளின் தொல்லை இல்லாமல் மக்கள் சுதந்திரமாக எல்லா இடத்துக்கும் போய் வரலாம் என்றும், கட்டிடங்களைக் கட்டலாம் என்றும் சொன்னார். அந்த அமைதியான காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி அவர் மக்களிடம் சொன்னார்.

5. தன்னுடைய படையை ஆசா ஏன் பலப்படுத்தினார்?

5 தன்னுடைய படையைப் பலப்படுத்துவதற்கும் அந்த அமைதியான காலத்தை ஆசா பயன்படுத்திக்கொண்டார். (2 நா. 14:8) அப்படியென்றால், யெகோவாமேல் அவருக்கு நம்பிக்கை இல்லையென்று அர்த்தமா? அப்படி இல்லை! ஒரு ராஜாவாக, ஆபத்துகளைச் சந்திக்கத் தன் மக்களைத் தயார்படுத்துவது தன்னுடைய கடமை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அந்த அமைதியான நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதுகூட அவருக்குத் தெரிந்திருந்தது, அதேபோல் அது மாறியது.

அமைதியான காலத்தை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்?

6. அமைதியான காலத்தை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்?

6 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டாலும் அமைதியான காலத்தையும் அனுபவித்தார்கள். அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்? உண்மையுள்ள அந்த ஆண்களும் பெண்களும் நல்ல செய்தியை இடைவிடாமல் பிரசங்கித்தார்கள், தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்தார்கள். அதனால் “சபை வளர்ந்துகொண்டே போனது.” அந்த அமைதியான காலத்தில் அவர்கள் மும்முரமாகச் செய்த ஊழியத்தை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.—அப். 9:26-31.

7-8. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை பவுலும் மற்றவர்களும் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள்? விளக்குங்கள்.

7 நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். உதாரணத்துக்கு, எபேசுவில் ‘வாய்ப்பு என்ற பெரிய கதவு திறக்கப்பட்டிருந்ததை’ அப்போஸ்தலன் பவுல் புரிந்துகொண்டார். அதனால், பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் அங்கே கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். —1 கொ. 16:8, 9.

8 கி.பி. 49-ல் நிறைய பேருக்கு நல்ல செய்தியைச் சொல்ல பவுலுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் அருமையான வாய்ப்புக் கிடைத்தது. ஏனென்றால், அந்த வருஷத்தில்தான் விருத்தசேதனம் சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. (அப். 15:23-29) அந்த முடிவு சபைகளுக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு, “யெகோவாவின் வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியை” பிரசங்கிக்க கிறிஸ்தவர்கள் கடினமாக முயற்சி செய்தார்கள். (அப். 15:30-35) அதற்கு என்ன பலன் கிடைத்தது? “சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.”—அப். 16:4, 5.

அமைதியான காலத்தை இன்று நாம் எப்படிப் பயன்படுத்தலாம்?

9. இன்று நிறைய நாடுகளில் என்ன சூழ்நிலை இருக்கிறது, நாம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

9 இன்று நிறைய நாடுகளில், பிரசங்கிப்பதற்கு அவ்வளவாக எதிர்ப்புகள் இல்லை. அதுபோன்ற ஒரு நாட்டில் நீங்கள் வாழ்கிறீர்களா? அப்படியென்றால், ‘இந்த வாய்ப்ப நான் எப்படி பயன்படுத்திக்கிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். விறுவிறுப்பான இந்தக் கடைசி நாட்களில், பிரசங்கிக்கிற வேலையையும் கற்பிக்கிற வேலையையும் யெகோவாவின் மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மும்முரமாகச் செய்துவருகிறார்கள். (மாற். 13:10) இந்த ஊழியத்தை நிறைய விதங்களில் நம்மால் ஆதரிக்க முடியும்.

வேறொரு நாட்டுக்குப் போய்ப் பிரசங்கிப்பதன் மூலம் அல்லது வேறொரு மொழி பேசுகிறவர்களிடம் பிரசங்கிப்பதன் மூலம் நிறைய பேர் அளவில்லாத சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறார்கள் (பாரா 10-12) *

10. என்ன செய்யும்படி 2 தீமோத்தேயு 4:2 நம்மை உற்சாகப்படுத்துகிறது?

10 அமைதியான காலத்தை நீங்கள் எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்? (2 தீமோத்தேயு 4:2-ஐ வாசியுங்கள்.) அதிகமாக ஊழியம் செய்வதற்காக நீங்களோ உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ வாழ்க்கையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய முடியுமா என்று யோசித்துப்பார்க்கலாம், இல்லையா? ஒருவேளை, பயனியர் ஊழியம் செய்ய முடியுமா என்றுகூட யோசித்துப்பார்க்கலாம், இல்லையா? பணம் பொருள் சேர்ப்பதற்கான காலம் இது கிடையாது! ஏனென்றால், மிகுந்த உபத்திரவத்தில் இதெல்லாம் நமக்குக் கைகொடுக்காது!—நீதி. 11:4; மத். 6:31-33; 1 யோ. 2:15-17.

11. நிறைய பேருக்கு நல்ல செய்தியைச் சொல்ல சிலர் என்ன செய்திருக்கிறார்கள்?

11 ஊழியத்தை அதிகமாகச் செய்வதற்காக நிறைய சகோதர சகோதரிகள் புதிய மொழியைக் கற்றிருக்கிறார்கள். ஏராளமான மொழிகளில் பைபிள் பிரசுரங்களை வெளியிடுவதன் மூலம் யெகோவாவின் அமைப்பு இவர்களுக்கு உதவி செய்துவருகிறது. உதாரணத்துக்கு, 2010-ல் நம்முடைய பிரசுரங்கள் கிட்டத்தட்ட 500 மொழிகளில் கிடைத்தன. ஆனால் இன்று, 1,000-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன.

12. மக்களுடைய தாய்மொழியில் நாம் ஏன் நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

12 பைபிள் சொல்லும் செய்தியைத் தங்களுடைய தாய்மொழியிலேயே கேட்பது எந்தளவுக்கு மக்களின் மனதைத் தொடுகிறது? அமெரிக்காவில் நடந்த ஒரு மண்டல மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். கின்யர்வாண்டா மொழியில் அந்த மாநாடு நடந்தது; அந்த மொழி ருவாண்டாவிலும் காங்கோவிலும் (கின்ஷாசா) உகாண்டாவிலும் பேசப்பட்டுவருகிறது. மாநாடு முடிந்த பிறகு, கின்யர்வாண்டா மொழி பேசும் ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “நான் அமெரிக்காவுக்கு வந்து 17 வருஷம் ஆச்சு, இப்பதான் முதல் தடவையா மாநாட்டு நிகழ்ச்சிகள என்னால முழுசா புரிஞ்சுக்க முடிஞ்சுது.” தன்னுடைய தாய்மொழியில் மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்டது இந்தச் சகோதரியின் மனதை ஆழமாகத் தொட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் ஊழியப் பகுதியில் வேறு மொழி பேசுகிற மக்கள் இருக்கலாம். உங்கள் மொழி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களுடைய தாய்மொழியில் நல்ல செய்தியைக் கேட்பது அவர்களுடைய மனதைத் தொடலாம். அதனால், அவர்களுடைய மொழியை உங்களால் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

13. ரஷ்யாவில் இருக்கிற சகோதர சகோதரிகள் அமைதியான காலத்தை எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள்?

13 எல்லா சகோதர சகோதரிகளாலும் சுதந்திரமாகப் பிரசங்கிக்க முடிவதில்லை. சில நாடுகளில், அரசாங்கங்கள் நம்முடைய வேலைக்குக் கடுமையான கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ரஷ்யாவில் என்ன நடந்ததென்று பார்க்கலாம். பல வருஷங்களாக அங்கே நம்முடைய சகோதரர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கடைசியில், மார்ச் 1991-ல் நம்முடைய வேலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட 16,000 யெகோவாவின் சாட்சிகள்தான் அங்கே இருந்தார்கள். 20 வருஷங்களுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை 1,60,000-ஐத் தாண்டியது! அமைதியான அந்தக் காலத்தை நம் சகோதர சகோதரிகள் ஞானமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், அந்த அமைதியான காலம் நீடிக்கவில்லை. இருந்தாலும், உண்மை வணக்கத்துக்காக ஓயாமல் உழைப்பதை அந்தச் சகோதர சகோதரிகள் நிறுத்திவிடவில்லை. யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்குத் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

அமைதியான காலம் நிலையானது அல்ல

ஆசா ராஜா உருக்கமாக ஜெபம் செய்ததால், ஒரு பெரிய படையைத் தோற்கடிக்க யெகோவா உதவினார் (பாராக்கள் 14-15)

14-15. யெகோவா எப்படி ஆசாவுக்கு உதவினார்?

14 ஆசாவின் நாட்களில் அமைதியான காலம் நிலைக்கவில்லை. பத்து லட்சத்துக்கும் அதிகமான வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய படை எத்தியோப்பியாவிலிருந்து வந்தது. தன்னுடைய படையால் யூதாவைச் சுலபமாகத் தோற்கடித்துவிட முடியுமென்று தளபதி சேராகு தப்புக்கணக்கு போட்டான். ஆனால், ஆசா ராஜா தன்னுடைய படைபலத்தை அல்ல, தன்னுடைய கடவுளான யெகோவாவை நம்பினார். “யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம், இந்தக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம்” என்று அவர் ஜெபம் செய்தார்.—2 நா. 14:11.

15 தன்னுடைய படையைவிட எத்தியோப்பிய படை இரண்டு மடங்கு பெரியதாக இருந்தாலும், யெகோவாவால் தன் மக்களைக் காப்பாற்ற முடியுமென்று ஆசா முழுமையாக நம்பினார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை, யெகோவா அவர்களைக் காப்பாற்றினார். எத்தியோப்பியப் படை படுதோல்வி அடைந்தது.—2 நா. 14:8-13.

16. அமைதியான காலம் நிலைக்காது என்று நமக்கு எப்படித் தெரியும்?

16 எதிர்காலத்தில் நம் ஒவ்வொருவருக்கும் என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனால், நாம் அனுபவிக்கிற அமைதியான காலம் நிலைக்காது என்று மட்டும் நமக்கு உறுதியாகத் தெரியும். சொல்லப்போனால், கடைசி நாட்களில் தன் சீஷர்களை “எல்லா தேசத்து மக்களும் . . . வெறுப்பார்கள்” என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். (மத். 24:9) “கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்று அப்போஸ்தலன் பவுலும் சொன்னார். (2 தீ. 3:12) சாத்தான் “பயங்கர கோபத்தோடு” இருக்கிறான். அவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம்.—வெளி. 12:12.

17. நம்முடைய விசுவாசம் எப்படியெல்லாம் சோதிக்கப்படலாம்?

17 ரொம்ப சீக்கிரத்தில், “மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை” என்று பைபிள் சொல்கிறது. (மத். 24:21) அப்போது, நம் ஒவ்வொருவருடைய விசுவாசமும் சோதிக்கப்படும். நம் குடும்பத்தில் இருப்பவர்களே நமக்கு எதிராகத் திரும்பலாம், நம் வேலையும் தடை செய்யப்படலாம். (மத். 10:35, 36) அந்தச் சமயத்தில், யெகோவா நம்மைக் காப்பாற்றுவார் என்று ஆசாவைப் போலவே நாமும் முழுமையாக நம்புவோமா?

18. எபிரெயர் 10:38, 39 சொல்கிறபடி, அமைதி இல்லாத காலத்தைச் சமாளிக்க எது உதவும்?

18 எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைகளைச் சந்திப்பதற்கு யெகோவா இப்போதே நம்மைத் தயார்படுத்துகிறார். நாம் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியோடு இருப்பதற்கு யெகோவா உதவுகிறார். ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்தி நமக்கு “ஏற்ற வேளையில் . . . உணவு” தருகிறார். (மத். 24:45) ஆனால், யெகோவாமேல் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நம் பங்கில் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும்.எபிரெயர் 10:38, 39-ஐ வாசியுங்கள்.

19-20. ஒன்று நாளாகமம் 28:9-ன் அடிப்படையில், என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?

19 ஆசா ராஜாவைப் போலவே நாமும் ‘[யெகோவாவை] தேட’ வேண்டும். (2 நா. 15:1, 2) ஒருவர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு ஞானஸ்நானம் எடுக்கும்போது யெகோவாவைத் தேட ஆரம்பிக்கிறார். யெகோவாமேல் இருக்கும் அன்பைப் பலப்படுத்திக்கொள்வதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யெகோவாவின் அமைப்பு ஏற்பாடு செய்கிற கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது ஒருவருக்கு உண்மையான புத்துணர்ச்சி கிடைக்கிறது, சகோதர சகோதரிகளிடமிருந்து உற்சாகமும் கிடைக்கிறது. (மத். 11:28) நாம் யெகோவாவை எந்தளவுக்குத் தேடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, ‘நான் சபை கூட்டங்களுக்கு தவறாம போறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அதோடு, ‘நான் தவறாம பைபிள் படிக்கிறேனா?’ என்றும் கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் குடும்பத்தோடு இருந்தால், ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குகிறீர்களா? தனியாக வாழ்கிறீர்கள் என்றால், பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்து படிப்பதற்குத் தவறாமல் நேரம் ஒதுக்குகிறீர்களா? அதோடு, பிரசங்கிப்பதற்கும் மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்கும் முழுமுயற்சி எடுக்கிறீர்களா?

20 நாம் ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? நம் இதயத்தையும் நம் மனதில் இருக்கிற யோசனைகளையும் யெகோவா ஆராய்ந்து பார்ப்பதாக பைபிள் சொல்கிறது; அதனால், நாமும் அதையே செய்ய வேண்டும். (1 நாளாகமம் 28:9-ஐ வாசியுங்கள்.) நம்முடைய குறிக்கோள்களில் அல்லது யோசனைகளில் ஏதாவது மாற்றம் தேவைப்பட்டால் அதைச் செய்வதற்கு யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். இனிமேல் வரப்போகும் சோதனைகளைச் சந்திக்கத் தயாராவதற்கு இதுதான் சமயம்! அதனால், அமைதியான காலத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள். அதற்கு இடைஞ்சலாக இருக்க எதற்குமே இடம்கொடுக்காதீர்கள்!

பாட்டு 28 புதிய பாடல்

^ பாரா. 5 உங்கள் நாட்டில் யெகோவாவைச் சுதந்திரமாக வணங்க முடிகிறதா? அப்படியென்றால், இந்த அமைதியான காலத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்? யூதாவின் ராஜா ஆசாவும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் எதிரிகளின் தொல்லை இல்லாத காலத்தை ஞானமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நீங்கள் எப்படி அவர்களைப் பின்பற்றலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லும்.

^ பாரா. 56 படவிளக்கம்: ஆசா ராஜா தன்னுடைய பாட்டியை ராஜமாதா அந்தஸ்திலிருந்து நீக்கினார். ஏனென்றால், மக்கள் வழிபடுவதற்காக ஒரு சிலையை அவள் செய்துவைத்திருந்தாள். ஆசாவுக்கு உண்மையாக இருந்த ஆதரவாளர்கள், அவரைப் போலவே சிலைகளை ஒழித்துக்கட்டினார்கள்.

^ பாரா. 58 படவிளக்கம்: தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் ஊழியம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் வாழ்க்கையை எளிமையாக்குகிறார்கள்.