Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 39

கிறிஸ்தவப் பெண்களுக்குப் பக்கபலமாக இருங்கள்

கிறிஸ்தவப் பெண்களுக்குப் பக்கபலமாக இருங்கள்

“நல்ல செய்தியை அறிவிக்கிற பெண்கள் படைபோல் ஏராளமாக இருக்கிறார்கள்.”—சங். 68:11.

பாட்டு 86 விசுவாசமிக்க பெண்கள், கிறிஸ்தவ சகோதரிகள்

இந்தக் கட்டுரையில்... *

நம் சகோதரிகள் சுறுசுறுப்போடும் ஆர்வத்துடிப்போடும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள், ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பதில் உதவுகிறார்கள், சகோதர சகோதரிகள்மேல் அக்கறை காட்டுகிறார்கள் (பாரா 1)

1. அமைப்புக்காக சகோதரிகள் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள், அதேசமயத்தில் என்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்? (அட்டைப் படம்)

சபையில் கடினமாக உழைக்கிற எல்லா சகோதரிகளையும் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! கூட்டங்களில் அவர்கள் பதில் சொல்கிறார்கள், நியமிப்புகளைச் செய்கிறார்கள், ஊழியத்தில் கலந்துகொள்கிறார்கள், ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்கிறார்கள், மற்ற சகோதர சகோதரிகள்மேல் உண்மையான அக்கறை காட்டுகிறார்கள். அதேசமயத்தில், அவர்கள் நிறைய சவால்களையும் சந்திக்கிறார்கள். சிலர், வயதான அப்பா-அம்மாவைப் பார்த்துக்கொள்கிறார்கள். வேறுசிலர், குடும்பத்திலிருந்து வரும் எதிர்ப்பைச் சமாளிக்கிறார்கள். இன்னும் சிலர், தனிமரமாகப் பிள்ளைகளை வளர்ப்பதற்குக் கடினமாக உழைக்கிறார்கள்.

2. சகோதரிகளுக்குப் பக்கபலமாக இருக்க நாம் ஏன் முயற்சி எடுக்க வேண்டும்?

2 சகோதரிகளுக்கு நாம் ஏன் பக்கபலமாக இருக்க வேண்டும்? ஏனென்றால், பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்புமரியாதையை இந்த உலகம் கொடுப்பதில்லை. அதோடு, பெண்களுக்குப் பக்கபலமாக இருக்கும்படி பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, பெபேயாளை வரவேற்று, ‘அவளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யும்படி’ ரோமிலிருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் கேட்டுக்கொண்டார். (ரோ. 16:1, 2) பவுல் கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பு, ஒரு பரிசேயராக இருந்தார். பரிசேயர்கள் பெண்களைத் தாழ்வாக நடத்தினார்கள். ஆனால், பவுல் கிறிஸ்தவராக மாறிய பிறகு இயேசுவைப் போலவே பெண்களை மதிப்புமரியாதையோடும் அன்போடும் நடத்தினார்.—1 கொ. 11:1.

3. பெண்களை இயேசு எப்படி நடத்தினார், அதுவும் கடவுளுடைய விருப்பப்படி நடந்த பெண்களை எப்படிக் கருதினார்?

3 எல்லா பெண்களையும் இயேசு மதிப்புமரியாதையோடு நடத்தினார். (யோவா. 4:27) யூத மதத் தலைவர்களைப் போல் அவர் பெண்களைத் தாழ்வாக நடத்தவில்லை. “பெண்களை இழிவுபடுத்துவதுபோல் அல்லது மட்டம்தட்டுவதுபோல் இயேசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை” என்று ஒரு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. யெகோவாவின் விருப்பப்படி நடந்துகொண்ட பெண்கள்மேல் இயேசுவுக்குத் தனி மரியாதை இருந்தது. ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் தன்னுடைய குடும்பத்தாரைப் போல்தான் அவர் நினைத்தார்.—மத். 12:50.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 கிறிஸ்தவ சகோதரிகளுக்கு அன்போடு உதவி செய்ய இயேசு எப்போதும் தயாராக இருந்தார். அவர்களுக்காக நேரம் ஒதுக்கினார், அவர்களைப் பாராட்டினார், அவர்கள் சார்பாகப் பேசினார். நாம் எப்படி இயேசுவைப் போலவே நடந்துகொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

அருமையான சகோதரிகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்

5. சிலசமயங்களில் சகோதரிகளுக்கு ஏன் மற்றவர்களுடைய நட்பு கிடைக்காமல் போகலாம்?

5 நாம் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, நம் எல்லாருக்குமே சகோதர சகோதரிகளுடைய நட்பு தேவை. ஆனால் சிலசமயங்களில், சகோதரிகளுக்கு மற்றவர்களுடைய நட்பு கிடைக்காமல் போகலாம். ஏன்? சில சகோதரிகள் சொல்வதைக் கவனிக்கலாம். “எனக்கு கல்யாணம் ஆகாததுனால சபையில எனக்கு அவ்வளவா மதிப்பு இல்லன்னு அடிக்கடி நினைச்சுக்குவேன். யாருக்கும் நான் பிரயோஜனம் இல்லன்னு எனக்கு தோணும்” என்று சகோதரி ஜாஸ்மின் * சொல்கிறார். அதேபோல், “நீங்க ஒரு சபைக்கு புதுசா போறப்போ உங்களுக்குன்னு நண்பர்கள் யாருமே இல்லாத மாதிரி தோணலாம்” என்று தேவை அதிகமுள்ள இடத்துக்குக் குடிமாறிப்போயிருக்கும் கிறிஸ்டி என்ற பயனியர் சகோதரி சொல்கிறார். சத்தியத்தில் தனியாக இருக்கும் சில சகோதரிகள், வீட்டில் இருப்பவர்களோடும் சரி, சபையில் இருப்பவர்களோடும் சரி, தங்களுக்கு எந்த ஒட்டுறவும் இல்லாததுபோல் நினைக்கலாம். சில சகோதரிகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாததாலோ, உடல்நிலை சரியில்லாதவர்களைக் கவனித்துக்கொள்வதாலோ வீட்டிலேயே முடங்கியிருக்கலாம். அதனால், தனிமையில் வாடலாம். “நான்தான் என்னோட அம்மாவ கவனிச்சிக்கிட்டேன், அதனால சகோதர சகோதரிகளோட சேர்ந்து என்னால நேரம் செலவிட முடியல” என்று சகோதரி அனிஷா சொல்கிறார்.

இயேசுவைப் போலவே சகோதரிகள்மேல் நாம் உண்மையான அக்கறை காட்ட வேண்டும் (பாராக்கள் 6-9) *

6. லூக்கா 10:38-42 சொல்வதுபோல், மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் இயேசு எப்படி உதவினார்?

6 இயேசு தன்னைப் பின்பற்றிய பெண்களுக்காக நேரம் ஒதுக்கினார், அவர்களுக்கு உண்மையான நண்பராக இருந்தார். உதாரணத்துக்கு, மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் அவர் எப்படி உண்மையான நண்பராக இருந்தார் என்று பார்க்கலாம். (லூக்கா 10:38-42-ஐ வாசியுங்கள்.) மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் கல்யாணம் ஆனதாகத் தெரியவில்லை. இயேசு தன் சொல்லிலும் செயலிலும் அவர்களை மிகவும் கண்ணியமாக நடத்தினார். அதனால், மரியாள் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவருடைய காலடியில் உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்டாள். * மார்த்தாளும், மரியாள் தனக்கு உதவாததைப் பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல் இயேசுவிடம் சொன்னாள். அப்போது, அந்த இரண்டு பெண்களுக்கும் முக்கியமான பாடங்களை இயேசு கற்றுக்கொடுத்தார். மற்ற சமயங்களிலும் அவர்களைப் போய்ச் சந்திப்பதன் மூலம் அவர்கள்மேலும் அவர்களுடைய சகோதரர் லாசருமேலும் இயேசு அக்கறை காட்டினார். (யோவா. 12:1-3) லாசருவின் உடல்நிலை மிகவும் மோசமானபோது, உதவி கேட்டு இயேசுவிடம் போகலாம் என்ற நம்பிக்கை மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் இருந்தது.—யோவா. 11:3, 5.

7. சகோதரிகளை நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்?

7 சில சகோதரிகளுக்கு மற்ற சகோதர சகோதரிகளோடு பழகுவதற்குக் கூட்டங்கள்தான் முக்கியமான வாய்ப்புகளாக இருக்கின்றன. அதனால், நாம் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை வரவேற்க வேண்டும். அவர்களோடு பேச வேண்டும். அவர்கள்மேல் அக்கறை வைத்திருப்பதைச் சொல்லிலும் செயலிலும் காட்ட வேண்டும். “மத்தவங்க நான் சொல்ற பதில கேட்டு பாராட்டுறப்பவும், என்னோட சேர்ந்து ஊழியம் செய்யறப்பவும், மத்த விதங்கள்ல என்மேல அக்கறை காட்டுறப்பவும் என்னை அவங்க ரொம்ப மதிக்கிறாங்கனு புரிஞ்சுக்க முடியுது” என்று முன்பு குறிப்பிடப்பட்ட ஜாஸ்மின் சொல்கிறார். சகோதரிகளை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும். “சகோதர சகோதரிகள் என்மேல அக்கறை வைச்சிருக்காங்கனு எனக்கு தெரியும். நான் கூட்டத்துக்கு போகலன்னா கண்டிப்பா எனக்கு மெசேஜ் பண்ணுவாங்க” என்று சகோதரி கீதா சொல்கிறார்.

8. இயேசுவை நாம் எந்த வழிகளில் பின்பற்றலாம்?

8 இயேசுவைப் போலவே சகோதரிகளோடு நேரம் செலவிடுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவதற்கோ பொழுதுபோக்குவதற்கோ அவர்களை அழைக்கலாம். அதுபோன்ற சமயங்களில், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நாம் பேச வேண்டும். (ரோ. 1:11, 12) கல்யாணம் ஆகாதவர்களுக்குச் சில சவால்கள் இருக்கும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், நிலையான சந்தோஷம் என்பது கல்யாணமாவதைப் பொறுத்தோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைப் பொறுத்தோ இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். (லூக். 11:27, 28) யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுக்கும்போதுதான் நம் சந்தோஷம் நிலைத்திருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினார். (மத். 19:12) மூப்பர்கள் எப்படி இயேசுவின் மனப்பான்மையைப் பின்பற்றலாம்?

9. சகோதரிகளுக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்?

9 முக்கியமாக மூப்பர்கள் கிறிஸ்தவப் பெண்களை அக்கா தங்கை போலவும், அம்மா போலவும் நினைக்க வேண்டும். (1 தீ. 5:1, 2) கூட்டங்களுக்கு முன்போ பின்போ அவர்களோடு பேச நேரம் ஒதுக்க வேண்டும். “நான் வேலையும் செஞ்சுட்டு பயனியர் சேவையும் செஞ்சதுனால ரொம்ப பிஸியா இருந்தேன். இத ஒரு மூப்பர் கவனிச்சாரு. இதுக்கெல்லாம் நான் எப்படி நேரம் ஒதுக்குறேனு அவர் அக்கறையா கேட்டாரு. அவரு என்மேல காட்டுன அக்கறைக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல” என்று கிறிஸ்டி சொல்கிறார். சகோதரிகளோடு பேச மூப்பர்கள் தவறாமல் நேரம் ஒதுக்கும்போது அவர்கள்மேல் அக்கறை வைத்திருப்பதைக் காட்டுகிறார்கள். * மூப்பர்களோடு தவறாமல் பேசுவதால் கிடைக்கும் நன்மையைப் பற்றி அனிஷா இப்படிச் சொல்கிறார்: “நான் அவங்கள பத்தி நல்லா தெரிஞ்சுக்குறேன், அவங்களும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சுக்குறாங்க. அதனால, பிரச்சினைகள் வர்றப்போ தயங்காம அவங்ககிட்ட உதவி கேட்க முடியுது.”

சகோதரிகளைப் பாராட்டுங்கள்

10. சகோதரிகளுக்கு எப்போது உற்சாகம் கிடைக்கும்?

10 நாம் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் நம் திறமைகளைக் கவனிக்கும்போதும் நம் வேலையைப் பாராட்டும்போதும் நமக்கு உற்சாகம் கிடைக்கிறது. ஆனால், மற்றவர்கள் அப்படிச் செய்யாதபோது நாம் சோர்ந்துபோகிறோம். “இவரோட தங்கச்சி... அவரோட பொண்ணு... அப்படினுதான் மத்தவங்க என்னை சொல்றாங்க. எனக்குனு ஒரு தனி அடையாளம் இல்லாத மாதிரி சிலசமயங்கள்ல தோணும்” என்று கல்யாணம் ஆகாத அபிகெயில் என்ற பயனியர் சகோதரி சொல்கிறார். சிலசமயங்களில் மற்றவர்கள் தன்னைக் கண்டுகொள்வதில்லை என்று அவர் நினைக்கிறார். ரூத் என்ற சகோதரியும் கல்யாணம் ஆகாதவர். பல வருஷங்களாக மிஷனரி சேவை செய்துவந்தார். அதற்குப் பிறகு, தன்னுடைய அப்பா-அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்காக சொந்த நாட்டுக்குத் திரும்பினார். இப்போது அவர் 70 வயதைத் தாண்டியிருந்தாலும் தொடர்ந்து பயனியர் சேவை செய்துவருகிறார். “நான் செய்றத மத்தவங்க பாராட்டி பேசறது எனக்கு ரொம்ப உற்சாகமா இருந்திருக்கு” என்று ரூத் சொல்கிறார்.

11. தனக்குப் பணிவிடை செய்த பெண்களை உயர்வாக மதித்ததை இயேசு எப்படிக் காட்டினார்?

11 கடவுள்பக்தியுள்ள சில பெண்கள் “தங்களுடைய உடைமைகளைக் கொண்டு” இயேசுவுக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்; அவர்களுடைய உதவியை இயேசு உயர்வாக மதித்தார். (லூக். 8:1-3) தனக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தை அவர்களுக்குக் கொடுத்ததோடு, ஆழமான சத்தியங்களையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். உதாரணத்துக்கு, சீக்கிரத்தில் தான் கொலை செய்யப்படப்போவதாகவும், பின்பு உயிரோடு எழுப்பப்படப்போவதாகவும் அவர்களிடம் சொன்னார். (லூக். 24:5-8) சோதனைகளைச் சந்திப்பதற்கு அப்போஸ்தலர்களைத் தயார்படுத்தியது போலவே இந்தப் பெண்களையும் அவர் தயார்படுத்தினார். (மாற். 9:30-32; 10:32-34) இயேசு கைது செய்யப்பட்டபோது அந்த அப்போஸ்தலர்கள் ஓடிப்போனது நமக்குத் தெரியும். ஆனால் இந்தப் பெண்கள், சித்திரவதைக் கம்பத்தில் இயேசு வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தபோது அவரைவிட்டு ஓடிப்போகாமல் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்!—மத். 26:56; மாற். 15:40, 41.

12. பெண்களுக்கு இயேசு என்ன பொறுப்புகளைக் கொடுத்தார்?

12 சில முக்கியமான பொறுப்புகளைப் பெண்களிடம் இயேசு ஒப்படைத்தார். உதாரணத்துக்கு, தான் உயிரோடு எழுப்பப்பட்டு முதன்முதலாகப் பெண்கள்முன் தோன்றியபோது, அதைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் சொல்லும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தார். (மத். 28:5, 9, 10) அதோடு, கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில் கடவுளுடைய சக்தி பொழியப்பட்டபோது அங்கே பெண்களும் இருந்திருக்கலாம். அப்படியென்றால், “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” வெவ்வேறு மொழிகளில் பேசும் அற்புதமான திறமை அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.—அப். 1:14; 2:2-4, 11.

13. கிறிஸ்தவப் பெண்கள் இன்று என்னென்ன பொறுப்புகளைச் செய்துவருகிறார்கள், அதற்கெல்லாம் நாம் எப்படி நன்றி காட்டலாம்?

13 யெகோவாவின் சேவையில் சகோதரிகள் செய்கிற எல்லாவற்றுக்கும் நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும். கட்டிடங்களைக் கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது, வேறு மொழி தொகுதிகளுக்கு உதவுவது, பெத்தேலில் வாலண்டியர் சேவை செய்வது என நிறைய பொறுப்புகளை அவர்கள் செய்கிறார்கள். அதோடு, நிவாரண வேலையிலும் மொழிபெயர்ப்பு வேலையிலும் அவர்கள் உதவுகிறார்கள். பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும்கூட சேவை செய்கிறார்கள். சகோதரர்களைப் போலவே சகோதரிகளும்கூட, பயனியர் ஊழியப் பள்ளியிலும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியிலும் கிலியட் பள்ளியிலும் கலந்துகொள்கிறார்கள். அதோடு, சபையிலும் அமைப்பிலும் இருக்கிற எல்லா பொறுப்புகளையும் செய்ய தங்கள் கணவருக்கு உதவுகிறார்கள். ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கும் கணவர்களால், தங்கள் மனைவிகளின் உதவி இல்லாமல் தங்களுடைய பொறுப்புகளை முழுமையாகச் செய்ய முடியாது. (எபே. 4:8) இப்படிப்பட்ட சகோதரிகளுக்கு என்னென்ன வழிகளில் பக்கபலமாக இருக்கலாம் என்று நீங்கள் யோசித்துப்பார்க்கலாம், இல்லையா?

14. சகோதரிகளைப் பற்றி சங்கீதம் 68:11 என்ன சொல்கிறது, ஞானமுள்ள மூப்பர்கள் என்ன செய்வார்கள்?

14 நல்ல செய்தியை அறிவிக்கிற கிறிஸ்தவ சகோதரிகள் “படைபோல் ஏராளமாக இருக்கிறார்கள்” என்பதையும், பிரசங்கிப்பதில் அவர்கள் ரொம்பவே திறமைசாலிகள் என்பதையும் ஞானமுள்ள மூப்பர்கள் புரிந்துகொள்கிறார்கள். (சங்கீதம் 68:11-ஐ வாசியுங்கள்.) அதனால், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள மூப்பர்கள் முயற்சி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, முன்பு குறிப்பிடப்பட்ட அபிகெயில் இப்படிச் சொல்கிறார்: ‘ஊழியத்துல நீங்க என்ன சொல்லி பேச்சை ஆரம்பிக்கிறீங்க... என்ன சொன்னா மக்கள் நல்லா கேட்கறாங்க... அப்படினெல்லாம் சகோதரர்கள் என்கிட்ட கேட்பாங்க. அது எனக்கு உற்சாகமா இருக்கும். ஏன்னா, யெகோவாவோட அமைப்புல எனக்கும் ஒரு இடம் இருக்குங்கற நம்பிக்கைய அது கொடுக்குது.’ பிரச்சினைகளைச் சந்திக்கிற இளம் சகோதரிகளுக்கு முதிர்ச்சியுள்ள சகோதரிகள் நன்றாக உதவி செய்வார்கள் என்பதையும் மூப்பர்கள் புரிந்துகொள்கிறார்கள். (தீத். 2:3-5) சகோதரிகளுக்கு நன்றி சொல்ல எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன, இல்லையா?

சகோதரிகளின் சார்பாகப் பேசுங்கள்

15. நாம் எப்போதெல்லாம் சகோதரிகளின் சார்பாகப் பேச வேண்டியிருக்கலாம்?

15 சகோதரிகள் ஏதாவது பிரச்சினையில் இருக்கும்போது, அவர்களுடைய சார்பாகப் பேச மற்றவர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படலாம். (ஏசா. 1:17) உதாரணத்துக்கு, கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற சகோதரிகள், தங்களுடைய கணவர்கள் செய்துவந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். அதுபோன்ற சமயங்களில், அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களுடைய சார்பாகப் பேச மற்றவர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படலாம். வயதான ஒரு சகோதரிக்கு, டாக்டர்களிடம் பேச உதவி தேவைப்படலாம். ஒரு சகோதரி, பயனியர் சேவை செய்வதோடு நம்முடைய அமைப்பின் மற்ற வேலைகளையும் செய்துகொண்டிருக்கலாம். அதனால், மற்ற பயனியர்களைப் போல அடிக்கடி ஊழியத்துக்குப் போக முடியாமல் இருக்கலாம். அதைப் பற்றி யாராவது குறை சொல்லும்போது, அவருடைய சார்பாக நாம் பேச வேண்டியிருக்கலாம். வேறென்ன விதங்களில் சகோதரிகளுக்கு நாம் உதவி செய்யலாம்? மறுபடியும் இயேசுவின் முன்மாதிரியைக் கவனிக்கலாம்.

16. மாற்கு 14:3-9 சொல்கிறபடி, இயேசு எப்படி மரியாளுக்கு ஆதரவாகப் பேசினார்?

16 தன்னைப் பின்பற்றிய பெண்களை மற்றவர்கள் தவறாகப் பேசியபோது இயேசு உடனடியாக அவர்கள் சார்பாகப் பேசினார். உதாரணத்துக்கு, மரியாளை மார்த்தாள் குறைசொன்னபோது இயேசு மரியாளுக்கு ஆதரவாகப் பேசினார். (லூக். 10:38-42) இன்னொரு சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் மரியாளைக் குறைசொன்னபோதும் இயேசு அவளுக்கு ஆதரவாகப் பேசினார். (மாற்கு 14:3-9-ஐ வாசியுங்கள்.) மரியாளுடைய நல்ல எண்ணத்தை இயேசு புரிந்துகொண்டு, “இவள் எனக்கு நல்லதுதான் செய்தாள். . . . இவள் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறாள்” என்று சொல்லிப் பாராட்டினார். “உலகில் எங்கெல்லாம் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பெண் செய்த காரியமும் இவள் நினைவாகச் சொல்லப்படும்” என்றுகூட சொன்னார். உதாரணத்துக்கு, இந்தக் கட்டுரையில்கூட அவளைப் பற்றி நாம் பேசுகிறோம்! சுயநலமில்லாமல் அவள் செய்ததை உலகெங்கும் பிரசங்கிக்கப்படுகிற நல்ல செய்தியோடு இயேசு சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கிறார் என்றால், அவளை எந்தளவுக்கு உயர்வாகப் பேசியிருக்கிறார் பார்த்தீர்களா? மற்றவர்கள் குறைசொன்னபோதும் இயேசு அவளைப் பாராட்டிப் பேசியபோது அவளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!

17. நாம் ஒரு சகோதரியின் சார்பாக எப்போது பேச வேண்டியிருக்கலாம் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.

17 கிறிஸ்தவ சகோதரிகளின் சார்பாகப் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும்போது, நீங்கள் அப்படிப் பேசுகிறீர்களா? இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: ஒரு சகோதரியின் கணவர் யெகோவாவின் சாட்சியாக இல்லை. அந்தச் சகோதரி அடிக்கடி கூட்டங்களுக்கு லேட்டாக வருகிறார். கூட்டங்கள் முடிந்தவுடன் போய்விடுகிறார். எப்போதாவது ஒருமுறைதான் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வருகிறார். இதைக் கவனிக்கிற சில சகோதர சகோதரிகள், ‘கணவர்கிட்ட கேட்டாதானே அவரு விடுவாரு’ என்று அந்தச் சகோதரியைக் குறைசொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அந்தச் சகோதரி ஏற்கெனவே தன்னால் முடிந்ததையெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார். அதோடு, எல்லா விஷயங்களுமே அவருடைய கையில் இல்லை. பிள்ளைகள் விஷயத்தில் முடிவான தீர்மானம் எடுப்பதும் அவருடைய கையில் இல்லை. அப்படியென்றால், மற்றவர்கள் அவரைக் குறைசொல்வதைக் கேட்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்? அந்தச் சகோதரியைப் பாராட்டலாம், அவர் செய்கிற நல்ல விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து பேசலாம். அப்போது, அவரைக் குறைசொல்வதை மற்றவர்கள் நிறுத்த வாய்ப்பிருக்கிறது.

18. வேறென்ன வழிகளில் சகோதரிகளுக்கு நாம் உதவலாம்?

18 சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதன் மூலம் நாம் அவர்கள்மேல் எந்தளவுக்கு அக்கறை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டலாம். (1 யோ. 3:18) உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவைக் கவனித்துவந்த அனிஷா, “நான் மத்த வேலைகள கவனிச்சுக்கறதுக்காக, சில சகோதர சகோதரிகள் எங்க வீட்டுக்கு வந்து என் அம்மாவ பார்த்துக்குவாங்க, சிலசமயம் சாப்பாடும் கொண்டு வருவாங்க. அவங்க என்மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு தெரிஞ்சுகிட்டேன், சபையில என்னையும் ஒரு முக்கியமான ஆளா மதிக்கிறாங்கனு புரிஞ்சுகிட்டேன்” என்று சொல்கிறார். அதேபோல், சகோதரி ஜாஸ்மினுக்கும் உதவி கிடைத்தது. காரை எப்படிப் பராமரிக்கலாம் என்று ஒரு சகோதரர் அவருக்குச் சொல்லிக் கொடுத்தார். “நான் பாதுகாப்பா இருக்கணுங்கறதுல சகோதர சகோதரிகள் இவ்வளவு அக்கறையா இருக்குறத நினைக்குறப்போ சந்தோஷமா இருக்கு” என்று ஜாஸ்மின் சொல்கிறார்.

19. மூப்பர்கள் வேறென்ன விதங்களில் சகோதரிகளுக்கு உதவலாம்?

19 சகோதரிகளுடைய தேவைகளை முக்கியமாக மூப்பர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். சகோதரிகளை நல்ல விதமாக நடத்த வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பது மூப்பர்களுக்குத் தெரியும். (யாக். 1:27) அதனால், அவர்கள் இயேசுவைப் போலவே நியாயமாக நடந்துகொள்கிறார்கள். எப்படி? சட்டங்களையே பிடித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவர்களை அன்பாக நடத்துவதன் மூலமும் அவர்களைப் புரிந்து நடந்துகொள்வதன் மூலமும் அப்படிச் செய்கிறார்கள். (மத். 15:22-28) சகோதரிகளுக்கு உதவ மூப்பர்கள் முயற்சி செய்யும்போது, யெகோவாவும் அவருடைய அமைப்பும் தங்கள்மேல் அன்பு வைத்திருப்பதை சகோதரிகள் புரிந்துகொள்கிறார்கள். சகோதரி கீதா வேறொரு வீட்டுக்குக் குடிமாறிப்போகிறார் என்ற விஷயத்தை அவருடைய தொகுதிக் கண்காணி கேள்விப்பட்டபோது உடனடியாக அவருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். “அப்பதான் எனக்கு ‘அப்பாடா’னு இருந்துச்சு. என்னை உற்சாகப்படுத்துற மாதிரி அவங்க பேசுனாங்க, தேவையான எல்லா உதவிகளயும் செஞ்சாங்க. சபையில என்னையும் ஒரு முக்கியமான ஆளா நினைக்கிறாங்கனு அப்போ புரிஞ்சுகிட்டேன். எதுக்குமே நான் தனி ஆளா போராட வேண்டியதில்லனும் தெரிஞ்சுகிட்டேன்” என்று கீதா சொல்கிறார்.

சகோதரிகள் எல்லாருக்குமே பக்கபலமாக இருக்க வேண்டும்!

20-21. கிறிஸ்தவ சகோதரிகள் எல்லாரையும் நாம் நேசிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

20 கடினமாக உழைக்கிற ஏராளமான சகோதரிகள் நம்முடைய சபைகளில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் நாம் பக்கபலமாக இருக்க வேண்டும். இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொண்டதைப் போல, சகோதரிகளுக்காக நேரம் ஒதுக்கும்போதும் அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளும்போதும் அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். கடவுளுடைய சேவையில் அவர்கள் செய்கிற எல்லாவற்றுக்காகவும் அவர்களைப் பாராட்ட வேண்டும், அவர்களுக்கு நன்றி காட்ட வேண்டும். தேவைப்படும்போது அவர்கள் சார்பாகப் பேச வேண்டும்.

21 ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் முடிவில், ஒன்பது கிறிஸ்தவப் பெண்களுடைய பெயர்களை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (ரோ. 16:1, 3, 6, 12, 13, 15) அவருடைய வாழ்த்துதலையும் பாராட்டையும் கேட்டபோது அவர்களுக்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்! நாமும் நம் சபையில் இருக்கும் எல்லா சகோதரிகளுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யும்போது, நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களை நாம் நேசிக்கிறோம் என்று அர்த்தம்.

பாட்டு 85 யெகோவா பல மடங்கு பலன் அளிப்பார்

^ பாரா. 5 கிறிஸ்தவப் பெண்கள் நிறைய சவால்களைச் சந்திக்கிறார்கள். இயேசுவைப் போலவே நாம் எப்படி அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். பெண்களுக்காக இயேசு நேரம் ஒதுக்கினார், அவர்களைப் பாராட்டினார், அவர்கள் சார்பாகப் பேசினார். அவருடைய உதாரணத்திலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.

^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 6 ஒரு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “சீஷர்கள் தங்களுடைய போதகர்களின் காலடியில் உட்கார்ந்திருப்பார்கள். இப்படி, போதகர்களாக ஆவதற்குப் பயிற்சி பெறுவார்கள். ஆனால், போதகர்களாக ஆவதற்குப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால், இயேசுவின் காலடியில் உட்கார்ந்து அவர் சொல்வதை மரியாள் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து யூத ஆண்களில் பெரும்பாலானவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்.”

^ பாரா. 9 சகோதரிகளுக்கு உதவும்போது மூப்பர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு சகோதரியைச் சந்திக்கத் தனியாகப் போகக் கூடாது.

^ பாரா. 65 படவிளக்கம்: பெண்கள்மேல் இயேசு உண்மையான அக்கறை காட்டியது போலவே இந்தச் சகோதரர்களும் அக்கறை காட்டுகிறார்கள். ஒரு சகோதரர், கார் டயரை மாற்றிக்கொடுத்து இரண்டு சகோதரிகளுக்கு உதவுகிறார். இன்னொரு சகோதரர், உடல்நிலை சரியில்லாத சகோதரியைப் போய்ப் பார்க்கிறார். வேறொரு சகோதரர், ஒரு சகோதரியோடும் அவருடைய மகளோடும் சேர்ந்து குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்வதற்காகத் தன் மனைவியோடு போகிறார்.