Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 37

‘கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள்’

‘கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள்’

“காலையில் விதை விதைக்கத் தொடங்கு, சாயங்காலம்வரை கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இரு.”—பிர. 11:6.

பாட்டு 98 ராஜ்ய விதை விதைத்தல்

இந்தக் கட்டுரையில்... *

1-2. பிரசங்கி 11:6-ல் இருக்கும் விஷயத்தைப் பிரசங்க வேலைக்கு எப்படிப் பொருத்தலாம்?

சில நாடுகளில், நல்ல செய்தியை மக்கள் ஆர்வமாகக் கேட்கிறார்கள். ஏனென்றால், அதற்காகத்தான் அவர்கள் ரொம்ப நாட்களாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். வேறுசில நாடுகளில், கடவுளைப் பற்றியோ பைபிளைப் பற்றியோ தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நீங்கள் வாழ்கிற பகுதியில் இருக்கும் மக்கள் நல்ல செய்தியை ஆர்வமாகக் கேட்கிறார்களா? மக்கள் கேட்டாலும் சரி, கேட்கவில்லை என்றாலும் சரி, போதும் என்று யெகோவா சொல்கிற வரைக்கும் நாம் பிரசங்கிக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.

2 யெகோவா தீர்மானித்திருக்கிற சமயம் வரும்போது பிரசங்க வேலையை அவர் நிறுத்தச் சொல்வார். அதன் பிறகு இந்த உலகத்துக்கு “முடிவு வரும்.” (மத். 24:14, 36) அதுவரை, ‘கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள்’ * என்ற அறிவுரைக்கு நாம் எப்படிக் கீழ்ப்படியலாம்?பிரசங்கி 11:6-ஐ வாசியுங்கள்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 ‘மனுஷர்களைப் பிடிப்பதில்’ திறமையானவர்களாக ஆவதற்கு நமக்கு உதவுகிற நான்கு வழிகளைப் பற்றி முந்தின கட்டுரையில் பார்த்தோம். (மத். 4:19) நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு நமக்கு உதவுகிற மூன்று வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதாவது, (1) பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுப்பதும், (2) பொறுமையாக இருப்பதும், (3) பலமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் ஏன் முக்கியம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுங்கள்

4. யெகோவா தந்திருக்கிற வேலைக்கு நாம் ஏன் முதலிடம் கொடுக்க வேண்டும்?

4 கடைசி நாட்களுக்கு அடையாளமாக இருக்கிற சம்பவங்களையும் நிலைமைகளையும் பற்றி இயேசு முன்கூட்டியே சொன்னார். பிரசங்க வேலை செய்வதிலிருந்து இவையெல்லாம் தன்னுடைய சீஷர்களைத் திசைதிருப்பலாம் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், “விழிப்புடன் இருங்கள்” என்று அவர் தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 24:42) நோவாவின் நாட்களில் நடந்ததுபோலவே நம்முடைய நாட்களில் நடக்குமென்றும் இயேசு சொன்னார். அன்றிருந்த மக்கள், நோவா கொடுத்த எச்சரிப்புகளைக் காதில் வாங்காமல் நிறைய விஷயங்களில் மூழ்கிப்போயிருந்தார்கள். (மத். 24:37-39; 2 பே. 2:5) இன்றும், அதே விஷயங்களில் நாம் மூழ்கிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான், யெகோவா தந்திருக்கிற வேலைக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும்.

5. பிரசங்க வேலை எந்தளவு நடக்குமென்று அப்போஸ்தலர் 1:6-8 சொல்கிறது?

5 பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுப்பது இன்று ரொம்ப ரொம்ப முக்கியம். தன்னுடைய மரணத்துக்குப் பிறகும் தன்னுடைய சீஷர்கள் பிரசங்க வேலை செய்வார்கள் என்றும், தான் செய்ததைவிட அவர்கள் அதிகமாகச் செய்வார்கள் என்றும் இயேசு முன்கூட்டியே சொன்னார். (யோவா. 14:12) இயேசு இறந்த பிறகு அவருடைய சீஷர்களில் சிலர் மீன்பிடிக்கும் தொழிலை மறுபடியும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, ஏராளமான மீன்களைப் பிடிக்க தன்னுடைய சீஷர்களில் சிலருக்கு அற்புதமாக உதவினார். மற்ற வேலைகளைவிட மனுஷர்களைப் பிடிக்கிற வேலைதான் ரொம்ப முக்கியம் என்பதை அந்தச் சமயத்தில் தன்னுடைய சீஷர்களுக்கு அவர் ஞாபகப்படுத்தினார். (யோவா. 21:15-17) இயேசு பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு, தான் ஆரம்பித்த பிரசங்க வேலை இஸ்ரவேல் தேசத்தின் எல்லைகளையெல்லாம் கடந்து உலகம் முழுவதும் விரிவடையும் என்று சொன்னார். (அப்போஸ்தலர் 1:6-8-ஐ வாசியுங்கள்.) பல வருஷங்களுக்குப் பிறகு, ‘எஜமானுடைய நாளில்’ * என்ன நடக்குமென்று ஒரு தரிசனத்தின் மூலம் அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு காட்டினார். அந்தத் தரிசனத்தில், பிரமிக்க வைக்கிற ஒரு சம்பவத்தை யோவான் பார்த்தார். அதாவது, தேவதூதருடைய வழிநடத்துதலின் கீழ் ‘எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும் நித்திய நல்ல செய்தி’ அறிவிக்கப்படுவதைப் பார்த்தார். (வெளி. 1:10; 14:6) இன்று யெகோவாவின் விருப்பம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. போதும் என்று அவர் சொல்லும்வரை பிரமாண்டமான இந்தப் பிரசங்க வேலையில் நாம் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம்.

6. பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுக்க எது நமக்கு உதவும்?

6 நமக்கு உதவுவதற்காக யெகோவா என்னவெல்லாம் செய்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் பிரசங்க வேலைக்கு முதலிடம் தர முடியும். உதாரணத்துக்கு, அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள்... டிஜிட்டல் பிரசுரங்கள்... ஆடியோ பதிவுகள்... வீடியோக்கள்... பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகள்... என எத்தனையோ விதங்களில் யெகோவா நமக்கு ஆன்மீக உணவை அள்ளித் தருகிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்: நம்முடைய வெப்சைட் 1000-க்கும் அதிகமான மொழிகளில் இருக்கிறது. (மத். 24:45-47) இன்று கடவுளுடைய ஊழியர்கள் உலகம் முழுவதும் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அரசியல், மதம், பொருளாதாரம் என இந்த உலகம் பல விதங்களில் பிளவுபட்டிருந்தாலும் இவர்கள் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஏப்ரல் 19, 2019, வெள்ளிக்கிழமை அன்று, உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகள் எல்லாருமே தினவசன கலந்தாலோசிப்பை ஒரு வீடியோவில் பார்த்தார்கள். அன்று சாயங்காலம், 2,09,19,041 பேர் இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த அற்புதங்களையெல்லாம் பார்ப்பதும் அவற்றில் ஒரு பாகமாக இருப்பதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்பதை யோசிக்கும்போது, பிரசங்க வேலைக்கு முதலிடம் தர நம் மனம் நம்மைத் தூண்டும்.

சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதற்குத் தடையாக இருக்கிற எதற்குமே இயேசு இடம்கொடுக்கவில்லை (பாரா 7)

7. பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுக்க இயேசுவின் முன்மாதிரி நமக்கு எப்படி உதவும்?

7 பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுப்பதற்கான இன்னொரு வழி, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுதான். சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதற்குத் தடையாக இருக்கிற எதற்குமே அவர் இடம்கொடுக்கவில்லை. (யோவா. 18:37) “இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும்” சாத்தான் அவருக்குக் காட்டியபோது, அவற்றைப் பார்த்து அவர் மயங்கிவிடவில்லை. அவரை ராஜாவாக்க மக்கள் முயற்சி செய்தபோது அவர் இணங்கிவிடவில்லை. (மத். 4:8, 9; யோவா. 6:15) பணத்துக்கும் பொருளுக்கும் அவர் ஆசைப்படவில்லை, பயங்கர எதிர்ப்பு வந்தபோது பயப்படவும் இல்லை. (லூக். 9:58; யோவா. 8:59) ‘சோர்ந்துபோய் பின்வாங்கிவிடாமல்’ இருப்பதற்கு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார். (எபி. 12:3) இந்த அறிவுரையை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், சோதனை நம்மைத் தாக்கினாலும் பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுப்போம்.

பொறுமையோடு இருங்கள்

8. பொறுமை என்றால் என்ன, முக்கியமாக நம் காலத்தில் அது ஏன் அவசியம்?

8 சூழ்நிலை மாறும்வரை அமைதியாகக் காத்திருப்பதுதான் பொறுமை. கஷ்டமான சூழ்நிலை முடிவுக்கு வருவதற்காகக் காத்திருக்கும்போதும் சரி, நீண்டநாள் ஆசை நிறைவேறுவதற்காகக் காத்திருக்கும்போதும் சரி, நமக்குப் பொறுமை தேவை. ஆபகூக் தீர்க்கதரிசி, யூதாவில் நடந்த வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டுமென்று ஏங்கினார். (ஆப. 1:2) இயேசுவின் சீஷர்கள், கடவுளுடைய அரசாங்கம் ‘உடனடியாக வர’ வேண்டுமென்றும், ரோமர்களுடைய அடக்குமுறையிலிருந்து அது தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் எதிர்பார்த்தார்கள். (லூக். 19:11) நாமும், கடவுளுடைய அரசாங்கம் எல்லா அக்கிரமத்துக்கும் முடிவுகட்டி நீதி குடியிருக்கிற புதிய உலகத்தைக் கொண்டுவருவதற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறோம். (2 பே. 3:13) ஆனால், யெகோவா குறித்திருக்கிற நேரம் வரும்வரை நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அப்படிப் பொறுமையாகக் காத்திருப்பதற்கு யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்கிற சில வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

9. யெகோவா எப்படியெல்லாம் பொறுமை காட்டியிருக்கிறார்?

9 பொறுமை காட்டுவதில் யெகோவாதான் தலைசிறந்த முன்மாதிரி. பேழையைக் கட்டி முடிப்பதற்கும் ‘நீதியைப் பிரசங்கிப்பதற்கும்’ நோவாவுக்குப் போதுமான நேரத்தைக் கொடுத்து யெகோவா பொறுமையாகக் காத்திருந்தார். (2 பே. 2:5; 1 பே. 3:20) அட்டூழியம் நிறைந்த நகரங்களான சோதோம் கொமோராவை அழிக்க யெகோவா முடிவெடுத்ததைப் பற்றி ஆபிரகாம் திரும்பத் திரும்பக் கேள்விகள் கேட்டபோது, யெகோவா பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டார். (ஆதி. 18:20-33) பல நூற்றாண்டுகளாக இஸ்ரவேல் தேசம் யெகோவாவுக்குத் துரோகம் செய்துகொண்டே இருந்தபோது அவர் எல்லையில்லாத பொறுமையைக் காட்டினார். (நெ. 9:30, 31) தன்னுடைய நண்பர்களாக இருப்பதற்கு அவர் யாரையெல்லாம் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள் ‘மனம் திருந்துவதற்காக’ போதுமான நேரத்தைக் கொடுத்துப் பொறுமையாகக் காத்திருக்கிறார். (2 பே. 3:9; யோவா. 6:44; 1 தீ. 2:3, 4) யெகோவாவே இவ்வளவு பொறுமையாக இருக்கிறார் என்றால் நாமும் பொறுமையோடு ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும், இல்லையா? பைபிளில் இருக்கிற ஓர் உதாரணத்தின் மூலமும் அவர் நமக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறார்.

கடினமாக உழைக்கும் விவசாயியைப் போலவே நாமும் நம்முடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைப்பதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறோம் (பாராக்கள் 10-11)

10. யாக்கோபு 5:7, 8-ல் இருக்கிற விவசாயியின் உதாரணம் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது?

10 யாக்கோபு 5:7, 8-ஐ வாசியுங்கள். விவசாயியைப் பற்றிய உதாரணம், பொறுமையாக இருப்பது எப்படி என்பதை நமக்குக் கற்றுத்தருகிறது. சில பயிர்பச்சைகள் வேகமாக வளரும் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலான பயிர்கள் அறுவடைக்குத் தயாராவதற்கு ரொம்பக் காலம் எடுக்கும். இஸ்ரவேல் தேசத்தில், பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராவதற்குக் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்தன. முதல் பருவ மழைக்குப் பிறகு (அக்டோபர் மத்தியில்) விவசாயி விதைகளை விதைத்தார், கடைசி பருவ மழைக்குப் பிறகு (ஏப்ரல் மத்தியில்) அறுவடை செய்தார். (மாற். 4:28) நாமும் விவசாயியைப் போலவே பொறுமையாக இருப்பது ஞானமானது. ஆனால், அப்படிப் பொறுமையாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

11. ஊழியத்தில் பொறுமை எப்படி நமக்கு உதவும்?

11 முயற்சிக்கு உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுவது மனித இயல்புதான். ஆனால், இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: நம்முடைய தோட்டத்தில் குழிதோண்டி, விதை விதைத்து, களை எடுத்து, தண்ணீர் ஊற்றினால்தான் செடிகொடிகள் வளர்ந்து பலன் தரும். அப்படியென்றால், அதற்காக ஓயாமல் உழைப்பது அவசியம். அதேபோல், சீஷராக்கும் வேலைக்காகவும் ஓயாமல் உழைப்பது அவசியம். நம் செய்தியை மக்கள் கேட்காதபோது நாம் சோர்ந்துவிடாமல் இருப்பதற்குப் பொறுமை உதவும். சிலர் நம்முடைய செய்தியைக் கேட்டு பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தாலும் நமக்குப் பொறுமை தேவை. ஏனென்றால், விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும்படி யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களுடைய மனதில் இருக்கிற பாரபட்சம், அலட்சியம் போன்ற களைகளைப் பிடுங்கியெறிய காலம் எடுக்கும். சிலசமயங்களில் இயேசுவின் சீஷர்களால்கூட அவர் கற்றுக்கொடுத்தவற்றை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லையே! (யோவா. 14:9) அதனால், ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: நாம் நடுகிறோம், தண்ணீர் ஊற்றுகிறோம், ஆனால் கடவுள்தான் வளர வைக்கிறார்.—1 கொ. 3:6.

12. சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரிடமும் சொந்தக்காரர்களிடமும் சாட்சி கொடுக்கும்போது நாம் எப்படிப் பொறுமையைக் காட்டலாம்?

12 சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரிடமும் சொந்தக்காரர்களிடமும் சாட்சி கொடுக்கும்போது பொறுமையைக் காட்டுவது ஒருவேளை நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், பிரசங்கி 3:7-ல் இருக்கிற நியமம் நமக்கு உதவும். “பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று அது சொல்கிறது. நம்முடைய நல்ல நடத்தையின் மூலம் நாம் சாட்சி கொடுக்க வேண்டும். அதேசமயத்தில், யெகோவாவைப் பற்றிப் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது. (1 பே. 3:1, 2) நாம் நல்ல செய்தியை மும்முரமாகச் சொல்கிற அதேசமயத்தில் நம் குடும்பத்தாரிடமும் சொந்தக்காரர்களிடமும் மற்ற எல்லாரிடமும் பொறுமையைக் காட்ட வேண்டும்.

13-14. பொறுமை காட்டிய யாருடைய உதாரணங்களை நாம் பின்பற்றலாம்?

13 பைபிள் காலங்களிலும் நவீன காலங்களிலும் வாழ்ந்திருக்கிற உண்மையுள்ள ஊழியர்களிடமிருந்து நாம் பொறுமையைக் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, அக்கிரமம் முடிவுக்கு வர வேண்டுமென்று ஆபகூக் தீர்க்கதரிசி ஏங்கினார். ஆனால், அவர் பொறுமையாக இருந்ததால்தான், “நான் ஒரு காவலாளியைப் போல [தொடர்ந்து] நின்றுகொண்டிருப்பேன்” என்று சொன்னார். (ஆப. 2:1) அப்போஸ்தலன் பவுலும் தன்னுடைய ஊழியத்தை ‘செய்து முடிக்க’ ஆசைப்படுவதாகச் சொன்னார். ஆனாலும், பொறுமையோடு ‘நல்ல செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்தார்.’—அப். 20:24.

14 கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற ஒரு தம்பதியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். மிகக் குறைவான சாட்சிகளே இருக்கிற ஒரு நாட்டுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அந்த நாட்டில் இருக்கிற பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்கள் கிடையாது. அவர்களில் ஒருசிலர்தான் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள். ஆனால், அந்தத் தம்பதியோடு சேர்ந்து கிலியட் பள்ளியில் படித்த மற்றவர்கள், தாங்கள் சேவை செய்துவருகிற நாடுகளில் நிறைய பேர் பைபிள் படிப்பதாகவும் நல்ல முன்னேற்றம் செய்வதாகவும் சொன்னார்கள். அந்தத் தம்பதி ஊழியம் செய்த நாட்டில் அவ்வளவாகப் பலன் கிடைக்காதபோதும், அவர்கள் தொடர்ந்து பொறுமையாக ஊழியம் செய்தார்கள். எட்டு வருஷங்களுக்குப் பிறகு, அவர்களிடம் பைபிள் படித்த ஒருவர் ஞானஸ்நானம் எடுத்தார். அப்போது அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! பைபிள்கால உதாரணங்களிலிருந்தும் நவீனகால உதாரணங்களிலிருந்தும் நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? அவர்களில் யாருமே தங்களுடைய ஆர்வத்தை இழந்துவிடவில்லை, தங்களுடைய கைகளை ஓயவிடவில்லை. அவர்களுடைய பொறுமைக்கு யெகோவா பலன் கொடுத்தார். அதனால், ‘விசுவாசத்தாலும் பொறுமையாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியை [நாம்] பின்பற்றலாம்.’—எபி. 6:10-12.

பலமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்

15. பிரசங்கிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு நம்பிக்கை எப்படி நமக்கு உதவுகிறது?

15 நாம் பிரசங்கிக்கிற செய்திமேல் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏன்? ஏனென்றால், பைபிளில் யெகோவா தந்திருக்கிற வாக்குறுதிகளை நம்புகிறோம். (சங். 119:42; ஏசா. 40:8) அதோடு, அதில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேறிவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, பைபிள் அறிவுரைகள் மற்றவர்களுடைய வாழ்க்கையை எப்படி நல்லபடியாக மாற்றியிருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறோம். இப்படி, நம்முடைய நம்பிக்கை இன்னும் அதிகமாகியிருக்கிறது. அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி எல்லாரும் கேட்க வேண்டிய ஒரு செய்தி என்ற உறுதியோடு, முடிந்தளவு எல்லாரிடமும் அதைச் சொல்ல ஆசைப்படுகிறோம்.

16. சங்கீதம் 46:1-3-ன்படி, பிரசங்கிப்பதில் உறுதியோடு இருக்க யெகோவாமேல் வைத்திருக்கிற நம்பிக்கை எப்படி உதவும், இயேசுமேல் வைத்திருக்கிற நம்பிக்கையும் எப்படி உதவும்?

16 நம்மைப் பிரசங்கிக்கும்படி சொன்ன யெகோவாமேலும் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். யெகோவா நியமித்திருக்கிற ராஜாவாகிய இயேசுமேலும் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். (யோவா. 14:1) நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, எப்போதுமே யெகோவா நமக்கு அடைக்கலமாக இருந்து நம்மைப் பலப்படுத்துவார் என்பதில் நாம் உறுதியோடு இருக்கலாம். (சங்கீதம் 46:1-3-ஐ வாசியுங்கள்.) அதோடு, யெகோவா கொடுத்த அதிகாரத்தால் பரலோகத்திலிருந்து பிரசங்க வேலையை இயேசு வழிநடத்துகிறார் என்பதிலும் நாம் உறுதியோடு இருக்கலாம்.—மத். 28:18-20.

17. நாம் ஏன் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

17 நாம் யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தால், நம் முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார் என்று உறுதியோடு இருப்போம். அதுவும், சிலசமயங்களில் எதிர்பார்க்காத விதங்களில் அவர் ஆசீர்வதிப்பார் என்று உறுதியோடு இருப்போம். (பிர. 11:6) உதாரணத்துக்கு, மேஜை அல்லது வீல் ஸ்டேண்டு ஊழியத்தை அவர் அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார். எப்படிச் சொல்கிறோம்? மேஜையில் அல்லது வீல் ஸ்டேண்டில் நாம் வைக்கிற பிரசுரங்களை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள். நவம்பர் 2014 நம் ராஜ்ய ஊழியத்தில் வந்த ஓர் அனுபவத்தைக் கவனிக்கலாம். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத நினைத்த ஒரு பல்கலைக்கழக மாணவியைப் பற்றி அதில் சொல்லப்பட்டிருந்தது. அந்த மாணவியால் ராஜ்ய மன்றத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவள் படிக்கிற பல்கலைக்கழக வளாகத்தில் யெகோவாவின் சாட்சிகள் மேஜை ஊழியம் செய்வதைப் பார்த்தாள். அவளுக்குத் தேவையான பிரசுரங்களை அந்த சாட்சிகள் அவளிடம் கொடுத்தார்கள். பிறகு, அவள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள், ஞானஸ்நானமும் எடுத்தாள். இப்போது ஒழுங்கான பயனியராகச் சேவை செய்துவருகிறாள். இதுபோன்ற அனுபவங்கள், நல்ல செய்தியைக் கேட்க இன்னும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. அப்படியென்றால், தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமென்று நம் மனம் நம்மைத் தூண்டுகிறது, இல்லையா?

கை ஓயாமல் விதைப்பதில் உறுதியாக இருங்கள்

18. யெகோவா நினைக்கும் நேரத்தில் பிரசங்க வேலை முடிவுக்கு வருமென்று நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?

18 சரியான நேரத்தில் பிரசங்க வேலை முடிவுக்கு வருமென்று நாம் உறுதியாக இருக்கலாம். நோவாவின் காலத்தில் என்ன நடந்ததென்று யோசித்துப்பாருங்கள். யெகோவா கொஞ்சம்கூட காலம் தவறாதவர் என்பதை அப்போது நிரூபித்தார். பெருவெள்ளத்தை எப்போது கொண்டுவர வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட 120 வருஷங்களுக்கு முன்பே யெகோவா முடிவு செய்திருந்தார். நிறைய வருஷங்களுக்குப் பிறகு, பேழையைக் கட்டச்சொல்லி நோவாவுக்குக் கட்டளை கொடுத்தார். கிட்டத்தட்ட 40, 50 வருஷங்களாக நோவா கடினமாக உழைத்தார். அவர் சொன்னதை மக்கள் கேட்கவில்லை என்றாலும் தொடர்ந்து அவர்களை எச்சரித்தார். பேழைக்குள் மிருகங்களைக் கொண்டுவரும்படி யெகோவா சொல்லும்வரை அவர் அப்படிச் செய்தார். பிறகு, சரியான நேரத்தில் “பேழையின் கதவை யெகோவா மூடினார்.”—ஆதி. 6:3; 7:1, 2, 16.

19. கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருந்தால் நாம் எதை எதிர்பார்க்கலாம்?

19 பிரசங்க வேலையை யெகோவா சீக்கிரத்தில் முடிவுக்குக் கொண்டுவருவார். சாத்தானுடைய உலகத்தை அழித்துவிட்டு, நீதியுள்ள புதிய உலகத்தைக் கொண்டுவருவார். அதுவரை, நோவாவையும் ஆபகூக்கையும் மற்றவர்களையும் போலவே நாமும் கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதோடு, பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும், யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் பலமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பாட்டு 10 ‘என்னை அனுப்புமே’

^ பாரா. 5 மனிதர்களைப் பிடிக்கும்படி இயேசு கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு பைபிள் மாணவர்களை முந்தின கட்டுரை உற்சாகப்படுத்தியது. ‘போதும்’ என்று யெகோவா சொல்லும்வரை பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு பிரஸ்தாபிகள் எல்லாரையும் இந்தக் கட்டுரை உற்சாகப்படுத்தும். புதியவர்களோ அனுபவம் உள்ளவர்களோ, எல்லாரும் இந்த விஷயத்தில் எப்படி உறுதியாக இருக்கலாம் என்பதற்கான மூன்று வழிகளையும் இந்தக் கட்டுரை விளக்கும்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: இந்தக் கட்டுரையில், ‘கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள்’ என்ற வார்த்தைகள், போதும் என்று யெகோவா சொல்லும்வரை தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதைக் குறிக்கின்றன.

^ பாரா. 5 ‘எஜமானுடைய நாள்’ 1914-ல் இயேசு ராஜாவாக ஆனபோது ஆரம்பித்தது. அவருடைய ஆயிர வருஷ ஆட்சியின் கடைசியில் அது முடிவுக்கு வரும்.