Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 39

பாசத்துக்குரிய ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது

பாசத்துக்குரிய ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது

“எத்தனை தடவை அவருடைய மனதைப் புண்படுத்தியிருப்பார்கள்!”—சங். 78:40.

பாட்டு 102 ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’

இந்தக் கட்டுரையில்... *

1. ஒருவரை சபைநீக்கம் செய்யும்போது அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?

நீங்கள் ரொம்ப நேசித்த ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாரா? அப்படியென்றால், அது உங்களுக்கு ரொம்பவே வேதனையாக இருந்திருக்கும். “நானும் என் கணவரும் 41 வருஷம் ஒன்னா வாழ்ந்தோம். அதுக்கு அப்பறம் அவர் இறந்துபோயிட்டாரு. அதவிட ஒரு பெரிய வேதன என் வாழ்கைல வராதுனு நினச்சேன். ஆனா, என் பையன் யெகோவாவையும் அவனோட மனைவியையும் குழந்தைகளையும் விட்டுட்டு போனப்போ நான் அப்படியே இடிஞ்சுபோயிட்டேன். என் கணவர் இறந்தப்ப இருந்த வேதனையைவிட இது பயங்கர வேதனையா இருந்துச்சு” என்று ஹில்டா என்ற சகோதரி சொல்கிறார். *

ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது அவருடைய குடும்பத்தாருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை யெகோவா புரிந்துகொள்கிறார் (பாராக்கள் 2-3) *

2-3. சங்கீதம் 78:40, 41 சொல்கிறபடி, தன்னை விட்டு ஒருவர் விலகும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

2 உங்களை யெகோவாவால் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அவரும் அந்த வலியை அனுபவித்திருக்கிறார். அவருடைய குடும்பத்திலிருந்த சில தேவதூதர்கள் அவரை ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். (யூ. 6) அவருடைய சொந்த ஜனங்களாக இருந்த இஸ்ரவேலர்கள் திரும்பத் திரும்ப அவருக்கு எதிராக கலகம் செய்தார்கள். இதுபோன்ற சமயத்திலெல்லாம் யெகோவாவுக்கு ரொம்பவே வேதனையாக இருந்திருக்கும். (சங்கீதம் 78:40, 41-ஐ வாசியுங்கள்.) அதனால், நீங்கள் அனுபவிக்கிற வேதனையை அவரால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். உங்களுக்குத் தேவையான ஆறுதலையும் உற்சாகத்தையும் கண்டிப்பாக அவர் கொடுப்பார்.

3 யெகோவா கொடுக்கும் உதவியிலிருந்து பிரயோஜனம் அடைய வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? இப்படிப்பட்ட வேதனையை அனுபவிப்பவர்களுக்கு சபையில் இருக்கும் மற்றவர்கள் எப்படி உதவி செய்யலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முதலில், நமக்கு எப்படிப்பட்ட எண்ணம் இருக்கக் கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

உங்களையே குற்றப்படுத்திக்கொள்ளாதீர்கள்

4. தங்களுடைய மகனோ மகளோ சத்தியத்தைவிட்டு விலகும்போது பெற்றோருக்கு எப்படி இருக்கும்?

4 தங்களுடைய மகனோ மகளோ யெகோவாவைவிட்டு விலகும்போது, ‘நம்ம கடமையை நாம சரியா செய்யாம போயிட்டோமோ?’ என பெற்றோர்கள் கவலைப்படுவது சகஜம். லூக் என்ற சகோதரருடைய மகன் சபைநீக்கம் செய்யப்பட்டார். “என்மேலதான் தப்புன்னு நான் நினைச்சேன். எனக்கு கெட்ட கனவுகள் வந்துச்சு. சில சமயத்துல நான் பயங்கரமா அழுவேன். என் மனசு ரொம்ப வலிக்கும்” என்று லூக் சொல்கிறார். எலிசபெத் என்ற சகோதரியின் மகனும் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். “ஒரு அம்மாவா என் கடமைய சரியா செய்யலையோ? சத்தியத்த என் பையனோட மனசுல ஆழமா பதியவைக்காம போயிட்டேனோ? அப்படியெல்லாம் நினைச்சு நான் கவலபட்டேன்” என்று அவர் சொல்கிறார்.

5. யெகோவாவை வணங்குவதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் பொறுப்பு யார் கையில் இருக்கிறது?

5 பெற்றோர்களே, தயவுசெய்து நீங்கள் உங்களைக் குற்றப்படுத்திக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், யெகோவா ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரை வணங்குவதா வேண்டாமா என்று முடிவெடுப்பது அவரவர் கையில்தான் இருக்கிறது. சில பிள்ளைகளுடைய அப்பா அம்மா நல்ல முன்மாதிரி வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகள் யெகோவாவிடம் நல்ல பந்தத்தை வைத்திருப்பார்கள். சில பிள்ளைகளுடைய அப்பா அம்மா சின்ன வயதிலிருந்தே யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுத்து நன்றாக வளர்த்திருப்பார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகள் பெரியவர்களான பின்பு யெகோவாவைவிட்டு விலகிப்போய்விடலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவர் யெகோவாவை வணங்குவதா வேண்டாமா என்று முடிவெடுப்பது அவர் கையில்தான் இருக்கிறது.—யோசு. 24:15.

6. அப்பாவோ அம்மாவோ யெகோவாவைவிட்டு விலகும்போது பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்?

6 பொதுவாக, அப்பா அம்மாவை பார்த்துதான் பிள்ளைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். அப்பாவோ அம்மாவோ யெகோவாவைவிட்டு அல்லது குடும்பத்தைவிட்டு விலகும்போது பிள்ளைகள் இடிந்துபோய்விடுகிறார்கள். (சங். 27:10) எஸ்தர் என்ற சகோதரியின் அப்பாவை சபைநீக்கம் செய்தபோது அவருக்கு அது ரொம்ப வேதனையாக இருந்தது. “என் அப்பா ஏதோ அவருக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா சத்தியத்தவிட்டு போகல. வேணும்னேதான் யெகோவாவவிட்டு விலகிபோயிட்டாரு. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, அவர சபைநீக்கம் செஞ்சப்போ இனி அவரோட எதிர்காலம் என்னாகுமோனு நினைச்சு கவலைல மூழ்கிட்டேன். இதெல்லாம் நினைக்கறப்போ சிலசமயத்துல எனக்கு நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்கும்” என்று அவர் சொல்கிறார்.

7. அப்பாவோ அம்மாவோ சபைநீக்கம் செய்யப்படும்போது பிள்ளைகளுக்கு ஏற்படும் வலியை யெகோவா புரிந்துவைத்திருக்கிறாரா? விளக்குங்கள்.

7 அருமை செல்வங்களே, உங்களுடைய அப்பாவையோ அம்மாவையோ சபைநீக்கம் செய்துவிட்டார்களா? அதை நினைத்து எங்களுடைய மனதும் ரொம்ப வலிக்கிறது. உங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அவருக்கு உண்மையோடு சேவை செய்வதை நினைத்து அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். உங்கள்மேல் அவர் உயிரே வைத்திருக்கிறார், சகோதர சகோதரிகளாகிய நாங்களும்தான்! உங்களுடைய அப்பாவோ அம்மாவோ எடுத்த முடிவுக்கு நீங்கள் பொறுப்பு கிடையாது. ஏனென்றால், யெகோவா ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதனால், “ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை சுமப்பான்” என்று பைபிள் சொல்வதை தயவுசெய்து ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கவலைப்படாதீர்கள்!—கலா. 6:5.

8. யெகோவாவைவிட்டு விலகிய ஒருவர், அவரிடம் திரும்பிவரும்வரை குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் என்ன செய்யலாம்? (“ யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

8 நீங்கள் நேசித்த ஒருவர் யெகோவாவைவிட்டு விலகிப்போகும்போது, என்றைக்காவது ஒருநாள் அவர் திரும்பவும் வருவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால், அவர் திரும்பிவரும் வரை நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தை பலமாக வைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் சரி, யெகோவாவைவிட்டு விலகியவருக்கும் சரி, நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரி வைக்க முடியும். அதோடு, இப்படிச் செய்வது உங்களுடைய வேதனைகளுக்கெல்லாம் மருந்து போடுவது போல் இருக்கும். உங்களுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

தொடர்ந்து யெகோவாவிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள...

9. யெகோவாவிடமிருந்து பலம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? (“ நீங்கள் நேசிக்கும் ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது இந்த வசனங்கள் ஆறுதலைத் தரும்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

9 உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, உங்களுடைய விசுவாசத்தையும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுடைய விசுவாசத்தையும் பலமாக வைத்துக்கொள்ள முடியும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தவறாமல் பைபிள் படியுங்கள். அதைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, யெகோவாவிடமிருந்து உங்களுக்குப் பலம் கிடைக்கும். ஜோயனா என்ற சகோதரியின் அப்பாவும் அக்காவும் சத்தியத்தைவிட்டு போய்விட்டார்கள். “அபிகாயில், எஸ்தர், யோபு, யோசேப்பு, இயேசு பத்தியெல்லாம் படிச்சப்போ என் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு. என் மனச நல்ல விஷயங்களால நிரப்ப முடிஞ்சுது, வலியையும் மறக்க முடிஞ்சுது. நம்ம வெப்சைட்ல இருக்கற சிறப்புப் பாடல்களும் என் மனசுக்கு இதமா இருந்துச்சு” என்று ஜோயனா சொல்கிறார்.

10. சங்கீதம் 32:6-8 சொல்கிறபடி, கஷ்டமான சூழ்நிலைகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

10 கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள். வேதனையில் தவிக்கும்போது, அவரிடம் ஜெபம் செய்யாமல் இருந்துவிடாதீர்கள். உங்களுடைய சூழ்நிலையை அவர் பார்க்கும் விதத்தில் பார்ப்பதற்கு உதவச் சொல்லி கேளுங்கள். உங்களுக்கு ‘விவேகத்தை தந்து நீங்கள் நடக்க வேண்டிய வழியைக் காட்ட’ சொல்லி அவரிடம் கெஞ்சுங்கள். (சங்கீதம் 32:6-8-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய மனதில் எவ்வளவு வலி இருக்கிறது என்று சொல்ல முடியாமல் ஒருவேளை நீங்கள் தவிக்கலாம். ஆனால், உங்கள் மனதில் இருப்பதை யெகோவா முழுமையாகப் புரிந்துகொள்வார். உங்கள்மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டும்படி அவர் உங்களைக் கேட்கிறார்.—யாத். 34:6; சங். 62:7, 8.

11. எபிரெயர் 12:11 சொல்கிறபடி, சபைநீக்கம் என்ற ஏற்பாட்டில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்? (“ சபைநீக்கம்—யெகோவாவின் அன்பான கண்டிப்பு” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

11 மூப்பர்கள் எடுத்த முடிவுக்கு ஆதரவு காட்டுங்கள். சபைநீக்கம் என்பது யெகோவா செய்திருக்கும் ஓர் ஏற்பாடு. தவறு செய்தவருடைய நன்மைக்காகவும் மற்றவர்களுடைய நன்மைக்காகவும்தான் யெகோவா இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார். (எபிரெயர் 12:11-ஐ வாசியுங்கள்.) பொதுவாக, மூப்பர்கள் எடுத்த முடிவு சரியில்லை என்று சொல்கிறவர்கள், சபைநீக்கம் செய்யப்பட்டவர்களைப் பற்றி யாரும் தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக சில விஷயங்களை சொல்லாமல் மறைத்துவிடுவார்கள். நமக்கு எல்லா உண்மைகளும் தெரியாது என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். பைபிள் நியமங்களை நன்றாகப் படித்து, கவனமாக ஆராய்ச்சி செய்துதான் மூப்பர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்றும் “யெகோவாவின் சார்பாக” அவர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள் என்றும் நாம் நம்ப வேண்டும்.—2 நா. 19:6.

12. யெகோவாவின் ஏற்பாட்டுக்கு ஆதரவு காட்டியதால் சிலருக்கு என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?

12 மூப்பர்கள் எடுத்த முடிவுக்கு நீங்கள் ஆதரவு காட்டும்போது, சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு உதவுகிறீர்கள். “எங்க பையன்கூட எந்த தொடர்பும் வெச்சுக்காம இருக்கறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, அவன் யெகோவாகிட்ட திரும்பி வந்ததுக்கு அப்பறம் அவனை சபைநீக்கம் செஞ்சது சரிதான்னு அவன் சொன்னான். நிறைய பாடங்கள கத்துகிட்டதாவும் சொன்னான். யெகோவா கண்டிக்கிறது நமக்கு எவ்வளவு நல்லதுனு நான் புரிஞ்சுகிட்டேன்” என்று நாம் ஏற்கெனவே பார்த்த எலிசபெத் சொல்கிறார். அவருடைய கணவர் மார்க் இப்படிச் சொல்கிறார்: “நாங்க எங்க பையன்கிட்ட பேசவே இல்ல. அவன் யெகோவாகிட்ட திரும்பிவந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்னு அவன் சொன்னான். நாங்க கீழ்ப்படிஞ்சு நடக்கறதுக்கு யெகோவா உதவுனாரு. அத நினச்சு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.”

13. வேதனையான சூழ்நிலைகளைச் சமாளிக்க எது உதவும்?

13 உங்களுடைய உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்கிற நண்பர்களிடம் பேசுங்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்க உதவும் அனுபவமுள்ள சகோதர சகோதரிகளுடன் பழகுங்கள். (நீதி. 12:25; 17:17) “எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோனுச்சு. ஆனா, என்மேல நம்பிக்க வைச்சிருக்கற நண்பர்கள்கிட்ட பேசினப்ப என்னால சமாளிக்க முடிஞ்சுது” என்று நாம் ஏற்கெனவே பார்த்த ஜோயனா சொல்கிறார். ஒருவேளை, சபையில் இருக்கிற யாராவது உங்களுடைய நிலைமையை இன்னும் மோசமாக்குவதுபோல் ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

14. நாம் ஏன் தொடர்ந்து ‘ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டும், தாராளமாக மன்னிக்க வேண்டும்’?

14 சகோதர சகோதரிகளிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். சொல்லப்போனால், எல்லா சமயத்திலும் எல்லாரும் சரியான விஷயங்களைச் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. (யாக். 3:2) ஏனென்றால், நாம் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள். அதனால், என்ன சொல்வது என்று தெரியாமல் சிலர் திணறலாம். அல்லது, தெரியாத்தனமாக நம்மைப் புண்படுத்துகிற மாதிரி ஏதாவது சொல்லிவிடலாம். அதுபோன்ற சமயத்தில், “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்” என்று பவுல் சொன்ன அறிவுரையை நாம் மனதில் வைக்க வேண்டும். (கொலோ. 3:13) ஒரு சகோதரியின் மகன் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். “சகோதரர்கள் என்னை ஆறுதல்படுத்ததான் வந்தாங்க. ஆனா, அவங்க சொன்னது என் மனச புண்படுத்திருச்சு. இருந்தாலும் அவங்கள தாராளமா மன்னிக்கறதுக்கு யெகோவா எனக்கு உதவுனாரு” என்று அந்தச் சகோதரி சொல்கிறார். இப்போது, சபையில் இருப்பவர்கள் சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தாருக்கு எப்படி உதவலாம் என்று பார்க்கலாம்.

சபையில் இருப்பவர்கள் செய்யும் உதவி

15. சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தாரிடம் நாம் எப்படி அன்பு காட்டலாம்?

15 சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள். மிரியம் என்ற சகோதரியின் தம்பி சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதற்குப் பின்பு, கூட்டங்களுக்குப் போவதற்கே அவருக்குச் சங்கடமாக இருந்தது. “சகோதர சகோதரிங்க என்ன சொல்லப் போறாங்களோன்னு நினைச்சு பயந்தேன். ஆனா அவங்க எல்லாரும் என்கூட சேர்ந்து வருத்தப்பட்டாங்க. என் தம்பிய பத்தி எதுவும் அவங்க தப்பா பேசல. அவங்க என்னை தனியா தவிக்கவிட்டுடல. அவங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன்” என்று அவர் சொல்கிறார். இன்னொரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என் பையன சபைநீக்கம் செஞ்சதுக்கு அப்பறம் நண்பர்கள் நிறைய பேரு எனக்கு ஆறுதல் சொல்ல வந்தாங்க. அதில சிலரு, ‘உங்கள என்ன சொல்லி ஆறுதல்படுத்தறதுன்னே எங்களுக்கு தெரியல’னு வெளிப்படையாவே சொன்னாங்க. என்னோட சேர்ந்து கண்ணீர் விட்டாங்க. என்னை ஆறுதல்படுத்தற மாதிரி கடிதங்கள எழுதினாங்க. இது எல்லாமே எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.”

16. சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தாருக்கு சபையில் இருக்கிறவர்கள் எப்படி தொடர்ந்து ஆதரவு காட்டலாம்?

16 சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தாருக்குத் தொடர்ந்து ஆதரவு காட்டுங்கள். உங்களுடைய அன்பும் ஆறுதலும் இப்போது அவர்களுக்கு ரொம்பவே தேவை. (எபி. 10:24, 25) சில சமயங்களில், அவர்களையும் சபைநீக்கம் செய்யப்பட்டவர்களைப் போல் நடத்த வாய்ப்பிருக்கிறது. தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள்! பெற்றோர்கள் யெகோவாவைவிட்டு விலகினாலும், சில பிள்ளைகள் சத்தியத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அதுபோன்ற இளம் பிள்ளைகளை நாம் மனதார பாராட்ட வேண்டும். எப்போதுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இப்போது, மரியா என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். அவருடைய கணவர் சபைநீக்கம் செய்யப்பட்டார், குடும்பத்தைவிட்டும் போய்விட்டார். “சகோதர சகோதரிகள் சிலர் என்னோட வீட்டுக்கு வந்து எனக்கு சமையல் செஞ்சு கொடுத்தாங்க. என் பிள்ளைங்களோட சேர்ந்து குடும்ப வழிபாடு செஞ்சாங்க. என்னோட வலியை புரிஞ்சுக்க அவங்க முயற்சி பண்ணுனாங்க. என்னோட சேர்ந்து அழுதாங்க. என்னை பத்தி மத்தவங்க தப்பான விஷயங்கள பேசினப்ப, எனக்காக அவங்க பேசுனாங்க. இடிஞ்சுபோய் உக்காந்திருந்த என்னை தூக்கி நிறுத்துனாங்க!” என்று அவர் சொல்கிறார்.—ரோ. 12:13, 15.

யெகோவாவைவிட்டு விலகியவருடைய குடும்பத்தாருக்கு சபையில் இருப்பவர்கள் அன்பும் ஆறுதலும் தரவேண்டும் (பாரா 17) *

17. சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மூப்பர்கள் எப்படி ஆதரவு காட்டலாம்?

17 மூப்பர்களே, சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தாரை பலப்படுத்த கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களை ஆறுதல்படுத்தும் முக்கியமான கடமை உங்களுக்கு இருக்கிறது. (1 தெ. 5:14) அதனால், கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் நீங்களாகவே போய் அவர்களிடம் பேசுங்கள், அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்களுடைய வீட்டுக்குப் போய் அவர்களைப் பாருங்கள், அவர்களுக்காக ஜெபம் செய்ய மறந்துவிடாதீர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்யுங்கள். சில சமயங்களில், உங்களுடைய குடும்ப வழிபாட்டுக்கும் அவர்களைக் கூப்பிடலாம். மேய்ப்பர்களே, துவண்டுபோயிருக்கிற யெகோவாவின் ஆடுகளுக்குக் கரிசனையையும் அன்பையும் அக்கறையையும் காட்டுங்கள்.—1 தெ. 2:7, 8.

நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்

18. இரண்டு பேதுரு 3:9 சொல்கிறபடி, தவறு செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார்?

18 “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும்” என்று யெகோவா விரும்புகிறார். (2 பேதுரு 3:9-ஐ வாசியுங்கள்.) அதனால், ஒருவர் எவ்வளவு மோசமான பாவம் செய்திருந்தாலும் அவருடைய உயிர் இன்னமும் யெகோவாவுக்கு ரொம்ப முக்கியம்தான். ஏனென்றால், நம் எல்லாருக்காகவும் அவர் மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய சொந்த மகனையே மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறார். தன்னைவிட்டுப் போனவர்கள் திரும்பவும் தன்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. காணாமல்போன மகனைப் பற்றி இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம். (லூக். 15:11-32) யெகோவாவைவிட்டு விலகிப்போன நிறைய பேர், அவரிடம் திரும்பி வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்களை சபையில் இருக்கிறவர்கள் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நாம் முன்பு பார்த்த எலிசபெத் என்ற சகோதரியின் மகனும் மறுபடியும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆனார். அப்போது, அவர் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டார். “நம்பிக்கை இழந்துடாம இருக்கறதுக்கு நிறைய பேரு எங்கள பலப்படுத்துனாங்க. அதுக்காக நான் ரொம்ப நன்றியோட இருக்கேன்” என்று அவர் சொல்கிறார்.

19. நாம் ஏன் எப்போதும் யெகோவாவை நம்பலாம்?

19 நாம் எப்போதுமே யெகோவாவை நம்பலாம். நமக்கு கெடுதல் வருகிற எதையுமே அவர் செய்ய மாட்டார். அவர் தாராள குணமுள்ள கடவுள், ரொம்ப கரிசனையான அப்பா. தன்னை நேசிப்பவர்கள் மீதும் வணங்குபவர்கள் மீதும், அவர் ஆழமான அன்பு வைத்திருக்கிறார். (எபி. 13:5, 6) “கஷ்டப்படறப்ப யெகோவா நம்மள கைவிட்டுருவாரோங்கற எண்ணம் உங்களுக்கு வேண்டவே வேண்டாம். யெகோவா எங்கள கைவிடவே இல்ல. நாம வேதனையில இருக்கறப்ப நம்ம பக்கத்துலயே இருப்பாரு” என்று நாம் ஏற்கெனவே பார்த்த மார்க் சொல்கிறார். உங்களுக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ யெகோவா எப்போதும் கொடுப்பார். (2 கொ. 4:7) அதனால், நீங்கள் நேசிக்கிற ஒருவர் யெகோவாவைவிட்டு விலகினாலும் உங்களால் யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்க முடியும்!

பாட்டு 44 சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்

^ பாரா. 5 நாம் நேசிக்கிற ஒருவர் யெகோவாவைவிட்டுப் போகும்போது நம் மனம் சுக்குநூறாக உடைந்துவிடுகிறது. அந்தச் சமயத்தில், யெகோவாவின் மனம் எவ்வளவு வலிக்கும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். யெகோவாவைவிட்டு விலகியவருடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் அந்த வேதனையைச் சமாளிப்பதற்கும், தொடர்ந்து யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தத்தை வைப்பதற்கும் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம். அதுமட்டுமல்ல, சபையில் இருக்கும் எல்லாரும் அவர்களுக்கு எப்படி ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 1 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 79 படவிளக்கம்: ஒரு சகோதரர் யெகோவாவையும் குடும்பத்தையும்விட்டு போகிறார். அப்போது அவருடைய மனைவியும் பிள்ளைகளும் வேதனையில் தவிக்கிறார்கள்.

^ பாரா. 81 படவிளக்கம்: யெகோவாவைவிட்டு போனவருடைய குடும்பத்தாரைப் பலப்படுத்த இரண்டு மூப்பர்கள் வந்திருக்கிறார்கள்.