படிப்புக் கட்டுரை 40
‘பலரை நீதியின் வழிக்குக் கொண்டுவரும் வேலை’
“பலரை நீதியின் வழிக்குக் கொண்டுவருகிறவர்கள் நட்சத்திரங்களைப் போல் என்றென்றும் ஜொலிப்பார்கள்.”—தானி. 12:3.
பாட்டு 151 அவர் அழைப்பார்
இந்தக் கட்டுரையில்... a
1. ஆயிர வருஷ ஆட்சியில் என்னென்ன அருமையான விஷயங்கள் நடக்கப்போகின்றன?
கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியில், உயிர்த்தெழுதல் ஆரம்பிக்கிற அந்த நாள் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கும்போதே நம் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது, இல்லையா? நாம் பறிகொடுத்த அன்பானவர்களை மறுபடியும் பார்க்க நாம் எல்லாருமே ஏங்குகிறோம். யெகோவாவும் அதற்காகத்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறார். (யோபு 14:15) எல்லாரும் தங்களுடைய அன்பானவர்களை வரவேற்கும்போது, இந்தப் பூமியே சந்தோஷத்தில் களைகட்டும். போன கட்டுரையில் நாம் பார்த்ததைப் போல், வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்பட்ட ‘நீதிமான்கள்’ “வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.” (அப். 24:15; யோவா. 5:29) நம்முடைய அன்பானவர்களில் நிறையப் பேர், ஒருவேளை அர்மகெதோனுக்குப் பிறகு சீக்கிரத்திலேயே உயிரோடு வரலாம். b ‘அநீதிமான்கள்,’ அதாவது யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளவோ அவருக்கு சேவை செய்யவோ போதுமான வாய்ப்பு கிடைக்காமல் இறந்துபோனவர்கள், “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.”
2-3. (அ) ஏசாயா 11:9, 10 சொல்கிறபடி, என்ன வேலை சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்குப் பிரமாண்டமாக நடக்கப்போகிறது, ஏன்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
2 உயிர்த்தெழுந்து வருகிற எல்லாருமே நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். (ஏசா. 26:9; 61:11) கற்பிக்கும் வேலை சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்குப் பிரமாண்டமாக நடந்தால்தான் அவர்களால் அப்படிக் கற்றுக்கொள்ள முடியும். (ஏசாயா 11:9, 10-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், உயிர்த்தெழுந்து வருகிற அநீதிமான்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி... கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி... மீட்புவிலையைப் பற்றி... கடவுளுடைய பெயர் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி... அவருடைய பேரரசுரிமையைப் பற்றி... தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். உயிர்த்தெழுந்து வருகிற நீதிமான்கள்கூட, யெகோவா பூமிக்கான தன்னுடைய நோக்கத்தை எப்படிப் படிப்படியாக வெளிப்படுத்தினார் என்ற தகவல்களையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த நீதிமான்களில் சிலர், பைபிள் எழுதி முடிக்கப்படுவதற்கு ரொம்ப வருஷங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். அதனால் நீதிமான்களும் சரி, அநீதிமான்களும் சரி, எக்கச்சக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
3 இந்தக் கட்டுரையில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் பார்ப்போம்: இந்த மிகப் பெரிய கற்பிக்கும் வேலை எப்படி நடக்கும்? கற்றுக்கொடுக்கப்படும் விஷயங்களின்படி நடப்பவர்களுக்கு என்ன ஆகும்? நடக்காதவர்களுக்கு என்ன ஆகும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். தானியேல் புத்தகத்திலும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் இருக்கிற சுவாரஸ்யமான சில தீர்க்கதரிசனங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இறந்தவர்கள் உயிரோடு வரும்போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இது உதவி செய்யும். முதலில், தானியேல் 12:1, 2-ல் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
“மண்ணுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் பலர் எழுந்திருப்பார்கள்”
4-5. முடிவு காலத்தைப் பற்றி தானியேல் 12:1 என்ன சொல்கிறது?
4 தானியேல் 12:1-ஐ வாசியுங்கள். முடிவு காலத்தில் அடுத்தடுத்து நடக்கப்போகிற சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி தானியேல் புத்தகம் சொல்கிறது. உதாரணத்துக்கு, மிகாவேல், அதாவது இயேசு கிறிஸ்து, ‘[கடவுளுடைய] ஜனங்களுக்குத் துணையாக நிற்கிறார்’ என்று தானியேல் 12:1 சொல்கிறது. 1914-ல் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆனபோது இது நிறைவேற ஆரம்பித்தது.
5 “பூமியில் முதன்முதலாக ஒரு தேசம் உருவானதுமுதல் அதுவரை வந்திருக்காத மிக வேதனையான காலம் வரும்” என்றும் தானியேல் சொல்கிறார். அந்தக் காலத்தில் இயேசு “செயலில் இறங்குவார்” என்றும் சொல்கிறார். இந்த ‘மிக வேதனையான காலமும்’ மத்தேயு 24:21-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘மிகுந்த உபத்திரவமும்’ ஒன்றுதான். இந்த வேதனையான காலத்தின் முடிவில், அதாவது அர்மகெதோனில், கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக இயேசு செயலில் இறங்குவார். இவர்கள், ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிக்கப்போகிற’ திரள் கூட்டமான மக்கள் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
6. மிகுந்த உபத்திரவத்திலிருந்து திரள் கூட்டம் தப்பித்த பின்பு என்ன நடக்கும்? விளக்குங்கள். (பூமியில் நடக்கிற உயிர்த்தெழுதலைப் பற்றி இந்த இதழில் வந்திருக்கிற “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியையும் பாருங்கள்.)
6 தானியேல் 12:2-ஐ வாசியுங்கள். திரள் கூட்டமான மக்கள் இந்த வேதனையான காலத்திலிருந்து தப்பித்த பின்பு என்ன நடக்கும்? கடைசி நாட்களில் அடையாள அர்த்தத்தில் நடக்கிற உயிர்த்தெழுதலைப் பற்றித்தான், அதாவது கடவுளுடைய ஊழியர்கள் ஆன்மீக விதத்தில் புத்துயிர் அடைவதைப் பற்றித்தான், இந்த வசனம் சொல்கிறது என்று முன்பு நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், பூஞ்சோலை பூமியில் நடக்கப்போகிற உயிர்த்தெழுதலைப் பற்றித்தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. c ஏன் அப்படிச் சொல்கிறோம்? இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள “மண்” என்ற வார்த்தை யோபு 17:16-லும் இருக்கிறது. அங்கே அது “கல்லறை” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? கடைசி நாட்களும் அர்மகெதோன் போரும் முடிந்த பின்பு நடக்கப்போகிற நிஜமான உயிர்த்தெழுதலைப் பற்றித்தான் தானியேல் 12:2 சொல்கிறது என்று புரிந்துகொள்கிறோம்.
7. (அ) உயிரோடு எழுப்பப்படுகிற சிலர் எந்த அர்த்தத்தில் “முடிவில்லாத வாழ்வைப்” பெறுவார்கள்? (ஆ) இதை “மேலான உயிர்த்தெழுதல்” என்று ஏன் சொல்லலாம்?
7 உயிரோடு எழுப்பப்படும் சிலர் “முடிவில்லாத வாழ்வைப்” பெறுவார்கள் என்று தானியேல் 12:2 சொன்னதன் அர்த்தம் என்ன? உயிரோடு எழுப்பப்படுகிறவர்கள் ஆயிர வருஷ ஆட்சியில் யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் தொடர்ந்து தெரிந்துகொண்டு அவர்களுக்குக் கீழ்ப்படிந்தால், கடைசியில் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள் என்று அர்த்தம். (யோவா. 17:3) பைபிள் காலங்களில் நடந்த உயிர்த்தெழுதலைவிட இது ‘மேலான உயிர்த்தெழுதலாக’ இருக்கும் என்று சொல்லலாம். (எபி. 11:35) ஏனென்றால், பைபிள் காலங்களில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் மறுபடியும் இறந்துவிட்டார்கள்.
8. உயிரோடு எழுப்பப்படுகிற மற்றவர்கள் எப்படி “வெட்கத்திற்கும் முடிவில்லாத இழிவுக்கும் உள்ளாவார்கள்”?
8 உயிரோடு எழுப்பப்படுகிற எல்லாருமே யெகோவா சொல்லிக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உயிரோடு எழுப்பப்படும் சிலர், “வெட்கத்திற்கும் முடிவில்லாத இழிவுக்கும் உள்ளாவார்கள்” என்று தானியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவுக்கு அவர்கள் அடங்கி நடக்காததால் வாழ்வின் புத்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்படாது, முடிவில்லாத வாழ்க்கையும் அவர்களுக்குக் கிடைக்காது. அதற்குப் பதிலாக ‘முடிவில்லாத இழிவுதான்’ அவர்களுக்கு மிஞ்சும். அதாவது, அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். அப்படியென்றால், தானியேல் 12:2 எதைப் பற்றிச் சொல்கிறது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வந்த பின்பு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அவர்களுக்குக் கடைசியில் முடிவில்லாத வாழ்வா நிரந்தரமான சாவா என்பது முடிவாகும் என்று அது சொல்கிறது. d—வெளி. 20:12.
“பலரை நீதியின் வழிக்குக் கொண்டுவருகிறவர்கள்”
9-10. மிகுந்த உபத்திரவத்துக்குப் பிறகு வேறு என்ன நடக்கும்? யார் “நட்சத்திரங்களைப் போல் என்றென்றும் ஜொலிப்பார்கள்”?
9 தானியேல் 12:3-ஐ வாசியுங்கள். வரப்போகிற ‘மிக வேதனையான காலத்துக்கு’ பிறகு வேறு என்ன நடக்கும்? தானியேல் 12:2-ஐப் போலவே 3-வது வசனமும் மிகுந்த உபத்திரவத்துக்குப் பிறகு நடக்கப்போகிற ஒரு விஷயத்தைப் பற்றித்தான் சொல்கிறது.
10 யார் “நட்சத்திரங்களைப் போல் என்றென்றும் ஜொலிப்பார்கள்”? அதைக் கண்டுபிடிக்க, மத்தேயு 13:43-ல் இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கு உதவி செய்யும். “அந்தச் சமயத்தில், நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்” என்று அவர் சொன்னார். அதே அதிகாரத்தில் 38-வது வசனத்தைப் பார்க்கும்போது, ‘கடவுளுடைய அரசாங்கத்தின் மகன்களை,’ அதாவது பரலோகத்தில் தன்னுடன் சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்களை, பற்றித்தான் இயேசு பேசிக்கொண்டிருந்தார் என்று புரிகிறது. அதனால் தானியேல் 12:3, பரலோக நம்பிக்கை உள்ளவர்களைப் பற்றியும் ஆயிர வருஷ ஆட்சியில் அவர்கள் செய்யப்போகிற வேலையைப் பற்றியும்தான் சொல்கிறது என்பது தெரிகிறது.
11-12. ஆயிர வருஷ ஆட்சியில் 1,44,000 பேர் என்ன வேலை செய்வார்கள்?
11 பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் எப்படிப் “பலரை நீதியின் வழிக்கு” கொண்டுவருவார்கள்? ஆயிர வருஷ ஆட்சியில் பூமியில் நடக்கிற கற்பிக்கும் வேலையை இயேசு வழிநடத்தும்போது இவர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இந்த 1,44,000 பேரும் ராஜாக்களாக ஆட்சி செய்வது மட்டுமல்லாமல் குருமார்களாகவும் சேவை செய்வார்கள். (வெளி. 1:6; 5:10; 20:6) அதனால் அவர்கள், “தேசத்தார் குணமாவதற்கு உதவி” செய்வார்கள். அதாவது, மனிதர்கள் படிப்படியாகப் பரிபூரணமாவதற்கு உதவி செய்வார்கள். (வெளி. 22:1, 2; எசே. 47:12) இது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமான ஒரு வேலையாக இருக்கும்!
12 நீதியின் வழிக்குக் கொண்டுவரப்படுகிற ‘பலரில்’ யாரெல்லாம் இருப்பார்கள்? உயிர்த்தெழுந்து வருபவர்களும், அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கிறவர்களும், பூஞ்சோலை பூமியில் பிறக்கப்போகிற குழந்தைகளும் இருப்பார்கள். ஆயிர வருஷத்தின் முடிவில், பூமியில் வாழ்கிற எல்லாருமே பரிபூரணமாக இருப்பார்கள். சரி, இவர்களுடைய பெயர்கள் எப்போது வாழ்வின் புத்தகத்தில் பேனாவில் எழுதப்படும், அதாவது நிரந்தரமாக எழுதப்படும்?
கடைசி சோதனை
13-14. முடிவில்லாத வாழ்க்கை கிடைப்பதற்கு முன்பு, பூமியில் வாழ்கிற எல்லா பரிபூரண மனிதர்களும் எதை நிரூபிக்க வேண்டியிருக்கும்?
13 ஆயிர வருஷத்தின் முடிவில் நாம் பரிபூரணமாக இருப்போம் என்பதற்காக நமக்கு முடிவில்லாத வாழ்க்கை தானாகக் கிடைத்துவிடும் என்று அர்த்தம் இல்லை. ஆதாம் ஏவாளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் பரிபூரணமாக இருந்தார்கள். ஆனால், முடிவில்லாத வாழ்க்கையைப் பெற அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்கள் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்.—ரோ. 5:12.
14 நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி, ஆயிர வருஷத்தின் முடிவில், பூமியில் வாழ்கிற எல்லாருமே பரிபூரணமாக இருப்பார்கள். அவர்கள் எல்லாருமே யெகோவாவின் ஆட்சிக்கு என்றென்றைக்கும் முழு ஆதரவு கொடுப்பார்களா? அல்லது, பரிபூரணமாக இருந்தும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போன ஆதாம் ஏவாள் மாதிரி சிலர் ஆகிவிடுவார்களா? இந்தக் கேள்விகளுக்கு நமக்கு எப்படிப் பதில் கிடைக்கும்?
15-16. (அ) யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதைக் காட்டுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் எப்போது வாய்ப்பு கிடைக்கும்? (ஆ) கடைசி சோதனையின் முடிவில் என்ன நடக்கும்?
15 ஆயிர வருஷங்களுக்கு சாத்தான் அடைத்து வைக்கப்பட்டிருப்பான். அதனால், யாரையும் அவனால் ஏமாற்ற முடியாது. ஆனால், ஆயிர வருஷத்தின் முடிவில் அவன் விடுதலை செய்யப்படுவான். பரிபூரணமாக இருக்கிற மக்களை ஏமாற்ற அவன் முயற்சி செய்வான். அந்தச் சமயத்தில், கடவுள்பக்கம் இருப்பதைத் தெளிவாகக் காட்டுவதற்குப் பரிபூரணமான மனிதர்கள் எல்லாருக்குமே வாய்ப்பு கிடைக்கும். கடவுளுடைய பெயரைப் புனிதப்படுத்தவும், அவருடைய ஆட்சியை ஆதரிக்கவும் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்ட வாய்ப்பு கிடைக்கும். (வெளி. 20:7-10) அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பொறுத்துதான் வாழ்வின் புத்தகத்தில் அவர்களுடைய பெயர் நிரந்தரமாக எழுதப்படுமா இல்லையா என்பது முடிவாகும்.
16 ஆதாம் ஏவாள் மாதிரியே சிலர், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவார்கள் என்றும், அவருடைய ஆட்சியை ஒதுக்கித்தள்ளுவார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. அவர்களுக்கு என்ன ஆகும்? “வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் எல்லாரும் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டார்கள்” என்று வெளிப்படுத்துதல் 20:15 சொல்கிறது. அப்படியென்றால், யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாருமே நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். ஆனால், பரிபூரணமான மனிதர்களில் முக்கால்வாசி பேர், கடைசி சோதனையில் ஜெயித்துவிடுவார்கள். அவர்களுடைய பெயர் வாழ்வின் புத்தகத்தில் நிரந்தரமாக எழுதப்படும்.
‘முடிவு காலத்தில்’
17. நம்முடைய காலத்தில் என்ன நடக்கும் என்று ஒரு தேவதூதர் தானியேலிடம் சொன்னார்? (தானியேல் 12:4, 8-10)
17 எதிர்காலத்தில் நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி யோசிக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, இல்லையா? நம்முடைய காலத்தில், அதாவது ‘முடிவு காலத்தில்,’ நடக்கப்போகிற சில முக்கியமான விஷயங்களைப் பற்றியும் ஒரு தேவதூதர் தானியேலிடம் சொன்னார். (தானியேல் 12:4, 8-10-ஐ வாசியுங்கள்; 2 தீ. 3:1-5) உதாரணத்துக்கு, ‘உண்மையான அறிவு பெருகும்’ என்று அவர் சொன்னார். அதாவது, தானியேல் புத்தகத்தில் இருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கடவுளுடைய மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்வார்கள் என்று சொன்னார். அதுமட்டுமல்ல, “கெட்டவர்கள் கெட்டதையே செய்வார்கள், அவர்களில் ஒருவரும் [அதை] புரிந்துகொள்ள மாட்டார்கள்” என்றும் சொன்னார்.
18. கெட்டவர்களுக்கு சீக்கிரத்தில் என்ன நடக்கும்?
18 கெட்டவர்கள் செய்கிற தவறுகளுக்கான தண்டனை இன்றைக்கு அவர்களுக்குக் கிடைக்காத மாதிரி நமக்குத் தோன்றலாம். (மல். 3:14, 15) ஆனால், சீக்கிரத்தில் இயேசு வெள்ளாடு போல இருக்கிற இந்தக் கெட்ட ஜனங்களை செம்மறியாடு போல இருக்கிற நல்ல ஜனங்களிடமிருந்து பிரிப்பார். (மத். 25:31-33) கெட்டவர்கள் எல்லாரையுமே அவர் தண்டிப்பார். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தில் தப்பிக்க மாட்டார்கள். பூஞ்சோலை பூமியில் உயிரோடு எழுப்பப்படவும் மாட்டார்கள். மல்கியா 3:16-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘நினைவுப் புத்தகத்திலும்’ அவர்களுடைய பெயர்கள் எழுதப்படாது.
19. நாம் இப்போதே என்ன செய்ய வேண்டும், ஏன்? (மல்கியா 3:16-18)
19 நாம் கெட்டவர்கள் இல்லை என்பதை இப்போதே நிரூபிக்க வேண்டும். (மல்கியா 3:16-18-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், யெகோவா அவருடைய ‘விசேஷ சொத்தை,’ அதாவது அவர் பொக்கிஷமாக நினைக்கிற அவருடைய ஜனங்களை, கூட்டிச் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்றுதான் நாமும் நிச்சயம் விரும்புவோம்!
20. தானியேலிடம் கடைசியாக யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார், அது நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஏன் ஆவலாக இருக்கிறீர்கள்?
20 நாம் உண்மையிலேயே ரொம்ப பரபரப்பான ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் ஆச்சரியமான விஷயங்கள் சீக்கிரத்தில் நடக்கப்போகின்றன. கெட்டவர்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுவார்கள். அதற்குப் பின்பு, “முடிவு நாளில் உன் பங்கை பெறுவதற்காக எழுந்திருப்பாய்” என்று தானியேலிடம் யெகோவா சொன்ன வாக்குறுதி நிறைவேறுவதை நாம் பார்ப்போம். (தானி. 12:13) தானியேலும் உங்களுடைய அன்பானவர்களும் திரும்ப உயிரோடு ‘எழுந்திருக்கப்போகிற’ அந்த நாளுக்காக நீங்கள் ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், கடவுளுக்கு உண்மையாக இருக்க உங்களால் முடிந்ததையெல்லாம் இப்போதே செய்யுங்கள். அப்போது, வாழ்வின் புத்தகத்தில் உங்களுடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்!
பாட்டு 80 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்
a தானியேல் 12:2, 3 வசனங்கள் ஒரு பிரமாண்டமான கற்பிக்கும் வேலையைப் பற்றிச் சொல்கின்றன. அதை நாம் புரிந்துகொண்ட விதத்தில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. அது என்ன? அந்தக் கற்பிக்கும் வேலை எப்போது நடக்கும்? அதன் நிறைவேற்றத்தில் யாருக்கெல்லாம் பங்கு இருக்கும்? ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் வரப்போகிற கடைசி சோதனைக்கு மக்களை இது எப்படித் தயார்படுத்தும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கட்டுரையில் பதில் பார்ப்போம்.
b கடைசி நாட்களில் யெகோவாவுக்கு உண்மையாக இருந்து இறந்துபோனவர்கள் முதலில் உயிரோடு எழுப்பப்படலாம். பிறகு, அவர்களுக்கு முன்பு இருந்த தலைமுறை... அதற்கும் முன்பு இருந்த தலைமுறை... என்று இப்படியே பின்வரிசையில் உயிர்த்தெழுதல் நடக்கலாம். இந்த வரிசையில் உயிர்த்தெழுதல் நடந்தது என்றால், ஒவ்வொரு தலைமுறையும் அவர்களுக்கு நன்றாகப் பழக்கமானவர்களை வரவேற்பார்கள். எப்படி இருந்தாலும் சரி, பூமியில் நடக்கும் உயிர்த்தெழுதல் சரியான வரிசையில்தான் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பரலோகத்துக்குப் போகிறவர்களும் ‘அவரவர் வரிசையில்தான்’ உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது.—1 கொ. 14:33; 15:23.
c தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் அதிகாரம் 17-லும், ஜூலை 1, 1987, ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 21-25-லும் சொல்லப்பட்ட விளக்கம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.
d அப்போஸ்தலர் 24:15-லுள்ள “நீதிமான்களும் அநீதிமான்களும்” என்ற வார்த்தைகளும், யோவான் 5:29-லுள்ள “நல்லது செய்தவர்கள்,” “கெட்டதைச் செய்துவந்தவர்கள்” என்ற வார்த்தைகளும் உயிரோடு வருபவர்களுடைய பழைய வாழ்க்கையை, அதாவது இறப்பதற்கு முன்பு அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், என்பதைத்தான் குறிக்கின்றன.