வாசகர் கேட்கும் கேள்விகள்
‘குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கிறேன்’ என்று அப்போஸ்தலன் பவுல் எந்த அர்த்தத்தில் சொன்னார்? (1 கொரிந்தியர் 15:8)
“கடைசியாக, குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கிற எனக்கும் தோன்றினார்” என்று 1 கொரிந்தியர் 15:8-ல் பவுல் சொன்னார். பரலோக மகிமையோடு இருந்த இயேசுவைத் தரிசனத்தில் பார்த்ததைப் பற்றி பவுல் இங்கே சொல்கிறார். ஆனால், குறைமாதத்தில் பிறந்தவனைப் போல் இருக்கிறேன் என்று பவுல் எந்த அர்த்தத்தில் சொன்னார்? பரலோகத்தில் பிறக்க வேண்டிய, அதாவது பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட வேண்டிய, காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவருக்கு அந்த உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதைப் பற்றித்தான் அவர் சொல்வதாக முன்பு நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த வசனத்தை இன்னும் ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது, நாம் புரிந்துகொண்ட விதத்தை மாற்ற வேண்டும் என்று தெரிகிறது.
அப்படியென்றால், ‘குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கிறேன்’ என்று பவுல் சொன்னதற்கு உண்மையிலேயே என்ன அர்த்தம்? அதற்குப் பல அர்த்தங்கள் இருக்கலாம்.
பவுல் என்று பிற்பாடு அழைக்கப்பட்ட சவுல் கிறிஸ்தவராக மாறியது திடீரென்று நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவமாக இருந்தது. ஒரு குழந்தை குறைமாதத்தில் பிறப்பது திடீரென்று நடக்கிற ஒரு சம்பவம். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்த வழியில், உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவைத் தரிசனத்தில் பார்ப்பார் என்று பவுல் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவர் அப்படி கிறிஸ்தவராக ஆனது, அவருக்கு மட்டுமல்ல தமஸ்குவில் அவர் துன்புறுத்த வேண்டும் என்று நினைத்த கிறிஸ்தவர்களுக்கும் ரொம்ப ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இது அவருக்கு ஒரு அதிர்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு அவருடைய கண் பார்வையே போய்விட்டது.—அப். 9:1-9, 17-19.
இவர் கிறிஸ்தவராக மாறியது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்தது. ‘குறைமாதத்தில் பிறந்த’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையை ‘காலம் தப்பி பிறந்த’ அல்லது ‘தப்பான நேரத்தில் பிறந்த’ என்றும் மொழிபெயர்க்கலாம். “யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் நான் பிறந்த மாதிரி இருந்தது” என்று த ஜெருசலேம் பைபிள் இந்த வசனத்தை மொழிபெயர்த்திருக்கிறது. உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவை சிலர் பார்த்ததாக அப்போஸ்தலன் பவுல் முந்தைய வசனங்களில் சொல்கிறார். அதாவது, உயிரோடு எழுப்பப்பட்ட இயேசு பரலோகத்துக்குப் போவதற்கு முன்பாகவே அவர்கள் அவரைப் பார்த்திருந்தார்கள். ஆனால், பவுல் கிறிஸ்தவராக மாறிய சமயத்தில் இயேசு ஏற்கெனவே பரலோகத்துக்குப் போயிருந்தார். (1 கொ. 15:4-8) இயேசு திடீரென்று அவருக்குத் தோன்றியபோது பவுலுக்கு அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அது எதிர்பாராத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு மாதிரி இருந்தது.
பவுல் தன்னைப் பற்றி ரொம்ப அடக்கத்தோடு பேசினார். பவுல் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஒருவரைக் குறைத்து எடைபோடுவதையும் குறிக்கலாம் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த அர்த்தத்தில்தான் பவுல் அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தார் என்றால், அப்போஸ்தலன் ஆவதற்கு தனக்குத் தகுதி இல்லை என்பதை நினைத்து அவர் அதைச் சொல்லியிருக்க வேண்டும். சொல்லப்போனால், “அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்; கடவுளுடைய சபையைக் கொடுமைப்படுத்தியதால் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட தகுதியில்லாதவன். ஆனாலும், கடவுளுடைய அளவற்ற கருணையால் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.—1 கொ. 15:9, 10.
இதுவரை நாம் பார்த்தபடி, நினைத்துக்கூடப் பார்க்காத விதத்தில் திடீரென்று இயேசு தனக்குத் தோன்றியதைப் பற்றி பவுல் சொல்லியிருக்கலாம். இல்லையென்றால், எதிர்பாராத நேரத்தில் தான் கிறிஸ்தவனாக ஆனதைப் பற்றி அவர் சொல்லியிருக்கலாம். அல்லது, அற்புதமான அந்தத் தரிசனத்தைப் பார்க்க அவருக்குத் தகுதியே இல்லை என்பதைப் பற்றி அவர் சொல்லியிருக்கலாம். எப்படி இருந்தாலும் சரி, அது அவருடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. இயேசு உயிரோடு எழுப்பப்பட்டிருந்தார் என்பதற்கு அது அவருக்கு ஒரு பெரிய அத்தாட்சியாக இருந்தது. அதனால்தான், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி மற்றவர்களிடம் பேசியபோதெல்லாம் இந்த எதிர்பாராத சம்பவத்தைப் பற்றியும் பவுல் அடிக்கடி சொன்னார்.—அப். 22:6-11; 26:13-18.