Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 38

இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?

இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?

“பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்.”—நீதி. 2:11.

பாட்டு 135 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’

இந்த கட்டுரையில்... a

1. யோவாசுக்கும் உசியாவுக்கும் யோசியாவுக்கும் மலை மாதிரி என்ன சூழ்நிலை வந்தது?

 நீங்கள் சின்ன வயதிலேயே அல்லது டீனேஜ் வயதிலேயே கடவுளுடைய மக்களுக்கு ராஜாவானால் எப்படி இருக்கும்! நீங்கள் அப்படி ராஜாவானால் என்ன செய்வீர்கள்? உங்களுடைய அதிகாரத்தைப் எப்படி பயன்படுத்துவீர்கள்? யூதாவுடைய ராஜாக்களாக ஆன நிறைய சிறுவர்களை பற்றி பைபிள் சொல்கிறது. யோவாஸ் வெறுமனே 7 வயது இருக்கும்போது ராஜாவானார்; உசியாவுக்கு 16 வயது இருக்கும்போது ராஜாவானார்; யோசியாவுக்கு 8 வயது இருக்கும்போது ராஜாவானார். அந்த பொறுப்பு அவர்களுக்கு மலை மாதிரி தெரிந்திருக்கும் இல்லையா? அவர்களுக்கு இது ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் பிரச்சினைகளை சமாளித்து யெகோவாவுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு யெகோவா அவர்களுக்கு உதவி செய்தார், மற்றவர்களும் உதவி செய்தார்கள்.

2. யோவாஸ், உசியா, யோசியா ஆகியோருடைய உதாரணங்களை பற்றி நாம் ஏன் படிக்க வேண்டும்?

2 நாம் யாருமே ராஜாவாகவோ ராணியாகவோ இல்லை. ஆனால் இந்த மூன்று பேரிடமிருந்து நாம் நிறைய முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுத்தார்கள். அதே சமயத்தில், சில கெட்ட முடிவுகளையும் எடுத்தார்கள். அவர்களுடைய உதாரணங்களிலிருந்து நாம் ஏன் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், ஏன் தொடர்ந்து யெகோவாவை தேட வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொள்ளலாம்.

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்

யோவாசை மாதிரியே இன்றைக்கும் நாம் நல்ல நண்பர்கள் சொல்கிற மாதிரியே கேட்டு நடக்க முடியும் (பாராக்கள் 3, 7) c

3. யோவாஸ் ராஜா நல்ல முடிவுகளை எடுக்க தலைமைக் குரு யோய்தா எப்படி உதவி செய்தார்?

3 யோவாசை மாதிரியே நல்ல முடிவுகளை எடுங்கள். யோவாஸ் சின்ன வயதாக இருந்தபோதே அவருடைய அப்பா இறந்துபோய்விட்டார். அதனால் தலைமைக் குரு யோய்தாதான் அவரை வளர்த்தார். யெகோவாவைப் பற்றி அவருக்கு சொல்லிக்கொடுத்தார். யோய்தா பேச்சைக் கேட்டு நடந்ததால், யோவாஸ் நல்ல முடிவுகளை எடுத்தார். யெகோவாவுக்குத்தான் சேவை செய்ய வேண்டும் என்றும், மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் யோவாஸ் முடிவெடுத்தார். யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கிற வேலை செய்வதற்குக்கூட ஏற்பாடு செய்தார்.—2 நா. 24:1, 2, 4, 13, 14.

4. யெகோவாவுடைய கட்டளைகளை நாம் பொக்கிஷம்போல் பார்த்தோம் என்றால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? (நீதிமொழிகள் 2:1, 10-12)

4 யெகோவாவை நேசிப்பதற்கும் அவர் சொல்லி தருகிற மாதிரி வாழ்வதற்கும் உங்கள் அப்பா அம்மாவோ, வேறு யாரோ உங்களுக்கு சொல்லி தருகிறார்கள் என்றால் உங்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். (நீதிமொழிகள் 2:1, 10-12-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய அப்பா அம்மா நிறைய விதத்தில் உங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். கேத்யா என்ற சகோதரி நல்ல முடிவுகளை எடுப்பதற்கு அவருடைய அப்பா எப்படி உதவி செய்தார் என்று பாருங்கள். தினமும் ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு போகும்போதும் அவருடைய அப்பா அவரிடம் தினவசனத்தை பற்றி பேசுவார். அதை பற்றி கேத்யா இப்படி சொல்கிறார்: “இந்த மாதிரி நாங்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டதால், அந்த நாளில் வருகிற கஷ்டமான சூழ்நிலைகளை என்னால் ஈசியாக சமாளிக்க முடிந்தது.” ஆனால் உங்கள் அப்பா அம்மா உங்களுக்கு பைபிளிலிருந்து சொல்லித்தருவது எல்லாம் உங்களை கட்டுப்படுத்துவது மாதிரி இருந்தால் என்ன செய்வீர்கள்? அவர்கள் கொடுக்கிற ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு எது உங்களுக்கு உதவி செய்யும்? அனஸ்டாசியா என்ற ஒரு சகோதரியுடைய அப்பா அம்மா சில சட்டங்களை போடுவதற்கு முன்பு ஏன் அந்த சட்டங்களை போடுகிறார்கள் என்று அவருக்கு பொறுமையாக புரிய வைப்பார்கள். அவர் இப்படி சொல்கிறார், “அப்பா அம்மா அப்படி செய்ததால் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. செய்ய கூடாது என்று அவர்கள் சொன்ன சில விஷயங்கள் என்னைக் கட்டிப் போடவில்லை. அன்பாக பாதுகாக்கிறது.”

5. நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும்போது, உங்கள் அப்பா அம்மாவுக்கும் யெகோவாவுக்கும் எப்படி இருக்கும்? (நீதிமொழிகள் 22:6; 23:15, 24, 25)

5 பைபிளில் இருந்து உங்கள் அப்பா அம்மா சொல்லி தருவதை நீங்கள் கேட்டு, அதேமாதிரி செய்யும்போது உங்கள் அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதைவிட முக்கியமாக கடவுளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அவரோடு உங்களுக்கு இருக்கும் நட்பு இன்னும் பலமாகும். (நீதிமொழிகள் 22:6-ஐயும் 23:15, 24, 25-ஐயும் வாசியுங்கள்.) சின்ன வயதில் யோவாஸ் நடந்துகொண்ட மாதிரியே நீங்களும் நடந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

6. யோவாஸ் யாருடைய பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார்? அதனால் என்ன ஆனது? (2 நாளாகமம் 24:17, 18)

6 யோவாஸ் எடுத்த தப்பான முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். யோய்தா இறந்த பிறகு யோவாஸ் கெட்ட நண்பர்களை தேர்ந்தெடுத்தார். (2 நாளாகமம் 24:17, 18-ஐ வாசியுங்கள்.) யூதாவிலிருந்த யெகோவாவை நேசிக்காத அதிகாரிகளுடைய பேச்சை யோவாஸ் கேட்க ஆரம்பித்துவிட்டார். அவர் அவர்களோடு சேராமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! (நீதி. 1:10) அதற்கு பதிலாக, இந்த கெட்ட நண்பர்களின் பேச்சைத்தான் அவர் கேட்டார். சொல்லப்போனால், யோவாசை திருத்த வேண்டும் என்று நினைத்த அவருடைய அத்தை மகன் சகரியாவை கொன்றே விட்டார். (2 நா. 24:20, 21; மத். 23:35) எவ்வளவு கொடூரமாக, முட்டாள்தனமாக நடந்துக்கொண்டார்! யோவாஸ் ஆரம்பத்தில் நல்லவராகதான் இருந்தார். ஆனால் போகப்போக அவர் ஒரு விசுவாசதுரோகியாக, ஒரு கொலைகாரனாக மாறிவிட்டார். கடைசியில் அவருடைய சொந்த ஊழியர்களே அவரை கொன்றுவிட்டார்கள். (2 நா. 24:22-25) யெகோவாவுடைய பேச்சையும் அவரை நேசிக்கிறவர்களுடைய பேச்சையும் தொடர்ந்து கேட்டு நடந்திருந்தால் அவருடைய வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இவருடைய உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொள்கிறீர்கள்?

7. யாரை உங்களுடைய நண்பர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

7 யோவாஸ் எடுத்த தப்பான முடிவிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடம் என்ன? யெகோவாமேல் பாசம் வைத்திருக்கிறவர்களை, அவருக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களை நம்முடைய நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். சரியானதை செய்வதற்கு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். நம் வயதில் இருப்பவர்களோடு மட்டும்தான் பழக வேண்டும் என்று அவசியம் கிடையாது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! யோவாஸ், தன்னைவிட வயதில் பெரியவராக இருந்த யோய்தாவோடும் நண்பராக இருந்தார். நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாமேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவா எதிர்பார்ப்பது போல் வாழ்வதற்கு அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவாவைப் பற்றியும் அவர் சொல்லி தந்திருக்கிற அருமையான உண்மைகளை பற்றியும் அவர்கள் என்னிடம் பேசுகிறார்களா? கடவுள் கொடுத்திருக்கிற நெறிமுறைகளை மதிக்கிறார்களா? நான் ஏதாவது தப்பு செய்தால் அதை மூடிமறைக்காமல் என்னிடம் நேராக சொல்கிறார்களா? இல்லையென்றால் எனக்கு பிடித்ததை மட்டும்தான் சொல்கிறார்களா?’ (நீதி. 27:5, 6, 17) நேரடியாக சொன்னால், உங்களுடைய நண்பர்களுக்கு யெகோவாமேல் பாசம் இல்லையென்றால் அவர்கள் உங்களுக்கு தேவையே இல்லை. அதேசமயத்தில், யெகோவாவை நேசிக்கிற நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை விட்டுவிடாதீர்கள்; அவர்கள்தான் உங்களுக்கு நல்ல நண்பராக இருப்பார்கள்!—நீதி. 13:20.

8. நீங்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தினால் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

8 சோஷியல் மீடியா இருப்பதால் நம்முடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் அடிக்கடி பேச முடிகிறது. ஆனால் நிறைய பேர் மற்றவர்கள் அவர்களை திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வாங்கிய பொருளையோ, அவர்கள் செய்த விஷயங்களையோ ஃபோட்டோ அல்லது வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்கிறார்கள். இப்படி மற்றவர்கள் முன்பு தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காக அதை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எல்லாரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேனா? நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமா அல்லது என்னை பெரிய ஆளாக காண்பிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமா? நான் யோசிக்கும் விதம், பேசும் விதம், நடந்துகொள்ளும் விதம் எல்லாம் சோஷியல் மீடியாவில் நான் பார்க்கிற ஆட்களை மாதிரியே மாறிவிட்டதா?’ ஆளும் குழுவில் சேவை செய்த சகோதரர் நேதன் நார் ஒரு ஆலோசனையை சொன்னார்: “மனிதர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க முயற்சி செய்யாதீர்கள். கடைசியில் யாரையுமே உங்களால் சந்தோஷப்படுத்த முடியாது. யெகோவாவுக்கு பிடித்த மாதிரி இருங்கள். அப்போது யெகோவாவை பிடித்த எல்லாரையும் நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள்.”

எப்போதும் மனத்தாழ்மையாக இருங்கள்

9. உசியா என்ன செய்வதற்கு யெகோவா உதவி செய்தார்? (2 நாளாகமம் 26:1-5)

9 உசியா மாதிரியே நல்ல முடிவுகளை எடுங்கள். உசியா ராஜா இளம் வயதில் மனத்தாழ்மையாக இருந்தார். உண்மை கடவுளுக்கு பயந்து நடக்க கற்றுக்கொண்டார். அவர் 68 வயது வரைக்கும் வாழ்ந்தார். ரொம்ப வருஷங்களுக்கு யெகோவா அவரை ஆசீர்வதித்தார். (2 நாளாகமம் 26:1-5-ஐ வாசியுங்கள்.) நாட்டின் எதிரிகள் நிறைய பேரை அவர் தோற்கடித்தார். நகரத்தை இன்னும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார். (2 நா. 26:6-15) அவர் செய்த எல்லாவற்றிலும் யெகோவா உதவி செய்ததை நினைத்து அவர் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.—பிர. 3:12, 13.

10. உசியாவுக்கு என்ன ஆனது?

10 உசியா எடுத்த தப்பான முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். உசியா ராஜா சொல்வதைத்தான் மற்றவர்கள் செய்வார்கள். இதுதான் அவருக்கு பழக்கம். அதனால் அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாரோ? ஒரு நாள் உசியா யெகோவாவுடைய ஆலயத்துக்குள் நுழைந்து ரொம்ப திமிராக தூபபீடத்தில் தூபம் காட்டப் போனார். அதை செய்வதற்கு ராஜாக்களுக்கு அனுமதி கிடையாது. (2 நா. 26:16-18) அப்போது அவரை தடுப்பதற்கு தலைமைக் குரு அசரியா ரொம்ப முயற்சி செய்தார். ஆனால் உசியாவுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிட்டது. அத்தனை நாளாக யெகோவாவுக்கு உண்மையாக இருந்த உசியா யெகோவாவிடம் இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார். பிறகு, யெகோவா அவரை தொழுநோயால் தண்டித்தார். (2 நா. 26:19-21) உசியா கடைசி வரைக்கும் மனத்தாழ்மையாக இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

நாம் எதையோ சாதித்துவிட்டோம் என்று பெருமை அடிக்காமல், நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றுக்குமே யெகோவாதான் காரணம் என்று அவருக்கு புகழ் சேர்க்க வேண்டும் (பாரா 11) d

11. நாம் மனத்தாழ்மையாக இருக்கிறோமா இல்லையா என்பதை எது காட்டும்? (படத்தையும் பாருங்கள்.)

11 உசியாவுக்கு பேர் புகழ் எல்லாம் கிடைத்த பிறகு அவருக்கு நடந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் பின்னால் இருந்தது யெகோவாதான் என்பதை அவர் மறந்துவிட்டார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நமக்கு கிடைக்கிற ஆசீர்வாதங்களும் பொறுப்புகளும் யெகோவாவிடமிருந்துதான் வருகின்றன என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் ஏதோ சாதித்துவிட்டோம் என்று பெருமை அடிக்காமல் நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றுக்குமே யெகோவாதான் காரணம் என்று அவருக்கு புகழ் சேர்க்க வேண்டும். b (1 கொ. 4:7) நாம் தப்பு செய்கிறவர்கள், நமக்குக் கண்டிப்பு தேவை என்பதை மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 60 வயதான ஒரு சகோதரர் இப்படி எழுதினார்: “என்னை பற்றியே நான் ரொம்ப பெரிதாக நினைக்க கூடாது என்று நான் கற்றுக்கொண்டேன். சின்னப் பிள்ளைத்தனமாக நான் செய்கிற தவறுகளுக்கு கண்டிப்பு கிடைக்கும்போது சோர்ந்துபோய்விடாமல், மறுபடியும் எழுந்து, என்னை மாற்றிக்கொண்டு யெகோவாவுக்கு தொடர்ந்து சேவை செய்ய முயற்சி செய்கிறேன்.” உண்மை என்னவென்றால், நாம் யெகோவாவுக்கு பயந்து மனத்தாழ்மையாக நடந்துக்கொள்ளும்போது நம்முடைய வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கும்.—நீதி. 22:4.

யெகோவாவை தேடிக்கொண்டே இருங்கள்

12. டீனேஜ் வயதில் யோசியா எப்படி யெகோவாவை தேடினார்? (2 நாளாகமம் 34:1-3)

12 யோசியா மாதிரியே நல்ல முடிவுகளை எடுங்கள். டீனேஜ் வயதில் இருந்தபோது யோசியா யெகோவாவை தேட ஆரம்பித்தார். யெகோவாவையும் அவருடைய விருப்பத்தை பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். ஆனால் சின்ன வயதிலேயே ராஜாவான யோசியாவுக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியாக இல்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் பொய் வணக்கம்தான் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தது. அதனால் உண்மை வணக்கத்தின் பக்கம் யோசியா உறுதியாக நிற்க வேண்டியிருந்தது. அதைத்தான் அவர் தைரியமாக செய்தார். 20 வயது ஆவதற்கு முன்பே தேசத்திலிருந்து பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்ட ஆரம்பித்தார்.—2 நாளாகமம் 34:1-3-ஐ வாசியுங்கள்.

13. யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்த பிறகு உங்களுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?

13 சின்ன பிள்ளைகளே, யோசியா மாதிரியே யெகோவாவை தேடுவதற்கும் அவருடைய குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் நீங்கள் முடிவு செய்யலாம். அப்படி நீங்கள் செய்தால் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். அர்ப்பணித்த பிறகு, தினமும் உங்களுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்? 14 வயதில் ஞானஸ்நானம் எடுத்த லூக், “இனி என் வாழ்க்கையில் யெகோவாவுடைய சேவைக்குத்தான் முதலிடம்! அவர் மனதை சந்தோஷப்படுத்துவதுதான் எனக்கு முக்கியம். மற்றவை எல்லாமே அப்புறம்தான்” என்று சொல்கிறார். (மாற். 12:30) நீங்களும் அப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையும் அழகாக இருக்கும்!

14. யோசியா ராஜா மாதிரி நடந்துகொண்ட சில இளம் பிள்ளைகளுடைய உதாரணங்களை சொல்லுங்கள்.

14 யெகோவாவை வணங்கும் இளம் பிள்ளைகளே, உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைகள் வரலாம்? 12 வயதில் ஞானஸ்நானம் எடுத்த ஜோஹனை, கூட படிக்கும் பிள்ளைகள் ஈ-சிகரெட் பிடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஈ-சிகரெட் பிடிப்பது உடல்நலத்தையும் யெகோவாவோடு அவருக்கு இருக்கிற நட்பையும் கெடுத்துவிடும் என்று யோசித்து பார்த்தது, அதை சமாளிக்க ஜோஹனுக்கு உதவி செய்தது. 14 வயதில் ஞானஸ்நானம் எடுத்த ரேச்சல், ஸ்கூலில் வருகிற பிரச்சினைகளை சமாளிக்க எது உதவி செய்தது என்று சொல்கிறார்: “எந்த ஒரு விஷயத்தையுமே பைபிளோடு அல்லது யெகோவாவோடு சம்பந்தப்படுத்தி பார்க்க நான் முயற்சி செய்கிறேன். உதாரணத்துக்கு, வரலாற்று பாடத்தில் நான் படிக்கும் விஷயம், பைபிளில் நான் படித்த பதிவை அல்லது தீர்க்கதரிசனத்தை எனக்கு ஞாபகப்படுத்தும். இல்லையென்றால் யாரிடமாவது பேசம்போது அவருக்கு எந்த பைபிள் வசனத்தை காட்டினால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்ப்பேன்” என்று சொல்கிறார். யோசியா ராஜாவுக்கு வந்த அதே பிரச்சினை உங்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் அவரை மாதிரியே உங்களால் ஞானமாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள முடியும். இளம் வயதிலேயே இந்த மாதிரி பிரச்சினைகளை சமாளிக்க நீங்கள் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் வரப்போகிற பிரச்சினைகளை உங்களால் சமாளிக்க முடியும்.

15. யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய யோசியாவுக்கு எது உதவி செய்தது? (2 நாளாகமம் 34:14, 18-21)

15 26 வயதில், யோசியா ராஜா யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பித்தார். அந்த சமயத்தில், ‘மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் திருச்சட்ட புத்தகம்’ கிடைத்தது. அது வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது, அதில் சொல்லியிருப்பதை தீவிரமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். (2 நாளாகமம் 34:14, 18-21-ஐ வாசியுங்கள்.) நீங்களும் பைபிளை தினமும் வாசிக்க ஆசைப்படுகிறீர்களா? ஏற்கெனவே வாசிக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? பிரயோஜனமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் வசனங்களை தனியாக குறித்து வைக்கிறீர்களா? முன்பு நாம் பார்த்த லூக், அவருக்கு பிடித்த குறிப்புகளை எல்லாம் ஒரு நோட்டில் எழுதிவைக்கிறார். நீங்களும் அப்படி செய்தால் உங்களுக்கு பிடித்த வசனங்களையும் குறிப்புகளையும் ஞாபகம் வைத்துக்கொள்வது ஈசியாக இருக்கும். நீங்கள் பைபிளை எவ்வளவு அதிகமாக தெரிந்துகொண்டு அதை நேசிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அதோடு சரியானதை செய்ய கடவுளுடைய வார்த்தை, யோசியாவை தூண்டியதுபோல் உங்களையும் தூண்டும்.

16. யோசியா ஏன் ஒரு பெரிய தப்பை செய்தார், அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

16 யோசியா எடுத்த தப்பான முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். யோசியாவுக்கு கிட்டத்தட்ட 39 வயது இருக்கும்போது, அவர் ஒரு பெரிய தப்பை செய்தார். அதனால் அவருடைய உயிரே போய்விட்டது. யெகோவாவை நம்பி அவருடைய வழிநடத்துதலை கேட்பதற்கு பதிலாக சொந்த புத்தியை நம்பி அவராகவே ஒரு முடிவை எடுத்துவிட்டார். (2 நா. 35:20-25) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நமக்கு எவ்வளவு வயதானாலும் சரி, எவ்வளவு வருஷமாக பைபிளை படித்துக்கொண்டு இருந்தாலும் சரி நாம் தொடர்ந்து யெகோவாவை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வது, அவருடைய வார்த்தையை படிப்பது, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது என எல்லாவற்றையும் தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையில் பெரிய பெரிய தவறுகளை செய்யாமல் இருப்போம், சந்தோஷமாக இருப்போம்.—யாக். 1:25.

இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்

17. யூதாவுடைய மூன்று ராஜாக்கள் பற்றிய பதிவிலிருந்து நாம் என்னென்ன பாடங்களை கற்றுக்கொள்கிறோம்?

17 இளம் வயதில்தான் உங்களால் நிறைய விஷயங்களை செய்ய முடியும், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும். யோவாஸ், உசியா, யோசியாவின் பதிவுகளிலிருந்து இளம் பிள்ளைகளால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும், யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ முடியும் என்பதை தெரிந்துகொள்கிறோம். உண்மைதான் இவர்களும் சில தவறுகளை செய்தார்கள், பின்விளைவுகளையும் அனுபவித்தார்கள். ஆனால் நாம், அவர்கள் செய்த தவறுகளை செய்யாமல் நல்லதை மட்டும் செய்தால் நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சின்ன வயதிலேயே தாவீது யெகோவாவோடு நெருங்கியிருந்தார். அதனால் யெகோவாவுடைய மனதை சந்தோஷப்படுத்தினார். அவரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தார் (பாரா 18)

18. உங்களாலும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை எந்த பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன? (படத்தையும் பாருங்கள்.)

18 யெகோவாவிடம் நெருங்கி போய் அவருடைய மனதில் இடம் பிடித்து சந்தோஷமாக வாழ்ந்த இன்னும் சில இளைஞர்களை பற்றியும் பைபிள் சொல்கிறது. அவர்களில் ஒருவர்தான் தாவீது. சின்ன வயதிலேயே அவர் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டார். பிறகு ஒரு ராஜாவாக ஆனார், யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தார். உண்மைதான் அவரும் தவறுகள் செய்தார். ஆனால் கடவுள் அவரை உண்மையுள்ள ஊழியராகத் தான் பார்த்தார். (1 ரா. 3:6; 9:4, 5; 14:8) தாவீதைப் பற்றி படிக்கும்போது அவரை மாதிரியே யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். மாற்கு அல்லது தீமோத்தேயுவை பற்றியும் நீங்கள் ஆராய்ச்சி செய்து படிக்கலாம். அவர்கள் சின்ன வயதிலேயே யெகோவாவுக்கு சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்; கடைசி வரைக்கும் உண்மையாக சேவை செய்தார்கள். யெகோவாவுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததால் அவர்களை பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டார். அவர்களும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

19. உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை எதை வைத்துச் சொல்லலாம்?

19 இப்போது உங்கள் வாழ்க்கையை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை வைத்துதான் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும். உங்கள் சொந்த புத்தியை நம்பாமல் யெகோவாவை நம்பினால், நல்ல முடிவுகளை எடுப்பதற்கு அவர் உங்களுக்கு உதவி செய்வார். (நீதி. 20:24) உங்களுக்கு சந்தோஷமான, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். யெகோவாவுக்காக நீங்கள் செய்கிற எல்லாவற்றையுமே அவர் ரொம்ப உயர்வாக பார்க்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வளவு பாசமான அப்பாவுக்கு சேவை செய்வதைவிட ஒரு நல்ல விஷயம் உங்கள் வாழ்க்கையில் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

பாட்டு 144 கண் முன் பரிசை வைப்போம்!

a இளம் பிள்ளைகளே, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற நட்பை கெடுக்கிற மாதிரி சில பிரச்சினைகள் உங்களுக்கு வரும் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய அப்பாவை சந்தோஷப்படுத்துகிற மாதிரி நீங்கள் எப்படி நல்ல தீர்மானங்களை எடுக்கலாம்? யூதாவுடைய ராஜாக்களாக ஆன மூன்று சிறுவர்களின் உதாரணத்தை கவனிக்கலாம். அவர்கள் எடுத்த தீர்மானங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.

b “சோஷியல் நெட்வொர்க்கில் பிரபலமாக இருப்பது முக்கியமா?” என்ற jw.org கட்டுரையில் இருக்கும் “தாழ்மை என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு பெருமையடிப்பது—ஜாக்கிரதை!” என்ற பெட்டியைப் பாருங்கள்.

c பட விளக்கம்: ஒரு முதிர்ச்சியுள்ள சகோதரி ஒரு இளம் சகோதரிக்கு ஒரு நல்ல அறிவுரையை கொடுக்கிறார்.

d பட விளக்கம்: மாநாட்டில் பேட்டி கொடுப்பதற்கு முன்பு ஒரு சகோதரி ஜெபம் செய்கிறார், பின்பு பேட்டி கொடுக்கிறார். முடிந்தபிறகு யெகோவாதான் அதை செய்ய உதவி செய்தார் என்று சொல்லி அவரை புகழ்கிறார்.