படிப்புக் கட்டுரை 39
சாந்தத்தின் வலிமையே வலிமை!
‘நம் எஜமானின் ஊழியன் சண்டைபோடக் கூடாது; அதற்குப் பதிலாக, எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொள்கிறவனாக இருக்க வேண்டும்.’—2 தீ. 2:24, 25.
பாட்டு 120 தாழ்மையுள்ள நம் ராஜா!
இந்த கட்டுரையில்... a
1. வேலை செய்யும் இடத்தில் அல்லது ஸ்கூலில் மற்றவர்கள் நம்மிடம் என்ன கேட்கலாம்?
உங்களோடு வேலை செய்யும் ஒருவர் அல்லது படிக்கும் ஒருவர் உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? பயமாக இருக்குமா? நம்மில் நிறைய பேருக்கு பயமாகத்தான் இருக்கும். ஆனால், ஒருவர் கேட்கும் கேள்வி அவர் உண்மையில் என்ன யோசிக்கிறார், என்ன நம்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள நமக்கு உதவி செய்யும். அதனால் அவருக்கு நல்ல செய்தியைப் பற்றி சொல்ல நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சிலசமயம் நம்மிடம் வாக்குவாதம் செய்வதற்காகவே சிலர் நம்மிடம் கேள்வி கேட்கலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் சிலர் நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி தவறாக கேள்விப்பட்டிருக்கிறார்கள். (அப். 28:22) அதுமட்டுமல்ல, நாம் வாழும் இந்த “கடைசி நாட்களில்” நிறையப் பேர் “எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக” இருக்கிறார்கள். ‘கொடூரமானவர்களாகவும்’ இருக்கிறார்கள்.—2 தீ. 3:1, 3.
2. சாந்தம் ஒரு நல்ல குணம் என்று நாம் ஏன் சொல்லலாம்?
2 ‘யாராவது என்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி கேட்கும்போது நான் எப்படி அமைதியாக, சாதுரியமாக பதில் சொல்வது?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில்தான் சாந்தம் உங்களுக்கு கைகொடுக்கும். சாந்தமாக இருக்கும் ஒருவர் சட்டென்று கோபப்பட மாட்டார். யாராவது கோபப்படுத்தும்போதும் சரி, என்ன பதில் சொல்வது என்று தெரியாதபோதும் சரி எரிச்சல்படாமல் அமைதியாகப் பேசுவார். (நீதி. 16:32) இதெல்லாம் சொல்வது ஈஸி, ஆனால் செய்வது ரொம்ப கஷ்டம் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அப்படியென்றால், நீங்கள் எப்படி சாந்தகுணத்தை வளர்த்துக்கொள்ளலாம்? ஒருவர் உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி கேட்கும்போது நீங்கள் எப்படி சாந்தமாக பதில் சொல்லலாம்? நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்களுடைய பிள்ளைகள் அவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி சாந்தமாக பேசுவதற்கு நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவி செய்யலாம்? இதைப் பற்றியெல்லாம் இப்போது நாம் பார்க்கலாம்.
சாந்தகுணத்தை எப்படி வளர்த்துக்கொள்வது?
3. சாந்தம் பலவீனமல்ல, பலம் என்று நாம் ஏன் சொல்லலாம்? (2 தீமோத்தேயு 2:24, 25)
3 சாந்தகுணம் பலவீனமல்ல, பலம் தான்! ஏனென்றால், ஒரு கஷ்டமான சூழ்நிலையில் அமைதியாக நடந்துகொள்வதற்கு மனபலம் தேவை. சாந்தம், ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில்’ ஒன்று. (கலா. 5:22, 23) சாந்தம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையை, பழக்கப்படுத்திய ஒரு காட்டுக் குதிரையைப் பற்றி சொல்வதற்காக சிலசமயங்களில் பயன்படுத்தினார்கள். சீறிப்பாயும் ஒரு குதிரை சாந்தமாக அமைதியாக மாறுவதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். அது அமைதியாக மாறினாலும், அதனுடைய பலம் கொஞ்சம்கூட குறைவதில்லை. நாம் எப்படி சாந்தத்தையும் வளர்த்துக்கொண்டு அதேசமயத்தில் பலமுள்ளவர்களாகவும் இருக்கலாம்? நம்முடைய சொந்த சக்தியால் இதை கண்டிப்பாக செய்ய முடியாது. இந்த அருமையான குணத்தை வளர்த்துக்கொள்ள உதவி கேட்டு, கடவுளுடைய சக்திக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். இதை கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை நிறையப் பேருடைய அனுபவங்கள் காட்டுகின்றன. நிறைய யெகோவாவின் சாட்சிகள், அவர்களை எதிர்ப்பவர்களிடம் ரொம்ப சாந்தமாக பேசியிருக்கிறார்கள். அதைப் பார்த்தவர்களுக்கு, நம்மேல் நல்ல அபிப்பிராயம் வந்திருக்கிறது. (2 தீமோத்தேயு 2:24, 25-ஐ வாசியுங்கள்.) சாந்தம் உங்களுடைய பலமாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
4. சாந்தத்தைப் பற்றி ஈசாக்கின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
4 பைபிளில் இருக்கும் நிறைய பதிவுகள் சாந்தம் எவ்வளவு அருமையான குணம் என்பதை காட்டுகின்றன. ஈசாக்கின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருசமயம் அவர் கேராருக்கு குடிமாறிப் போனார். அது பெலிஸ்தியர்களுடைய இடம். அங்கிருந்த ஜனங்கள் இவரைப் பார்த்து வயிற்றெரிச்சல்பட்டு, இவருடைய அப்பாவின் வேலைக்காரர்கள் தோண்டி வைத்திருந்த கிணறுகளை எல்லாம் மூடிவிட்டார்கள். ஆனால், ஈசாக்கு அவருடைய உரிமைக்காக சண்டைப் போடுவதற்கு பதிலாக அவருடைய குடும்பத்தை கூட்டிக்கொண்டு வேறு இடத்துக்கு போய் வேறு கிணறுகளை அங்கு தோண்டினார். (ஆதி. 26:12-18) ஆனால், அந்த கிணறுகளும் அவர்களுடையது என்று பெலிஸ்தியர்கள் அதற்கும் சண்டை போட்டார்கள். அந்த சமயத்தில்கூட ஈசாக்கு அந்த இடத்தில் இருந்து அமைதியாக புறப்பட்டு போய்விட்டார். (ஆதி. 26:19-25) மற்றவர்கள் அவரோடு வேண்டுமென்றே சண்டைக்கு வந்தபோதுகூட ஈசாக்கினால் எப்படி அவ்வளவு சாந்தமாக நடந்துகொள்ள முடிந்தது? கண்டிப்பாக அவருடைய அப்பா-அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார். ஆபிரகாம் மற்றவர்களோடு சமாதானமாக போனதையும், சாராள் ‘அமைதியும் சாந்தமுமான குணத்தைக்’ காட்டியதையும் அவர் கண்டிப்பாக கவனித்திருப்பார்.—1 பே. 3:4-6; ஆதி. 21:22-34.
5. சாந்தமாக நடந்துகொள்வதற்கு, அப்பா அம்மா பிள்ளைகளுக்கு சொல்லித்தர முடியும் என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது?
5 நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தீர்கள் என்றால், சாந்தம் எவ்வளவு முக்கியமான குணம் என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு உங்களாலும் சொல்லித்தர முடியும். மாக்ஸின்ஸ் என்ற 17 வயது பையனுடைய உதாரணத்தை கவனியுங்கள். ஸ்கூலிலும் சரி, ஊழியத்திலும் சரி, சிலர் அவனிடம் கோபமாக நடந்துகொண்டார்கள். ஆனால், சாந்தகுணத்தை வளர்த்துக்கொள்வதற்கு அவனுடைய அம்மா-அப்பா பொறுமையாக அவனுக்கு உதவி செய்தார்கள். அதைப் பற்றி அவர்கள் சொல்லும்போது, “மற்றவர்கள் நம்முடைய கோபத்தை கிளறும்போது, பதிலுக்கு கோபப்படுவதோ அல்லது அவர்களை தாக்குவதோ ஈஸி. ஆனால், அந்த சமயத்தில் நம்மையே அடக்கிக்கொண்டு அமைதியாக சாந்தமாக நடந்துகொள்வது ரொம்ப கஷ்டம். அதற்கு இன்னும் நிறைய பலம் தேவை என்பதை மாக்ஸின்ஸ் இப்போது புரிந்துகொண்டான்” என்று சொல்கிறார்கள். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், சாந்தம் இப்போது மாக்ஸின்ஸின் பலம் என்று சொல்லும் அளவுக்கு அவன் அமைதியாக நடந்துகொள்கிறான்.
6. இன்னும் சாந்தமாக நடந்துகொள்வதற்கு ஜெபம் எப்படி நமக்கு உதவி செய்யும்?
6 யாராவது நம் கோபத்தை கிளறினால், யெகோவாவைப் பற்றி தவறாக பேசினால் அல்லது பைபிளைப் பற்றி கிண்டல் செய்தால் நாம் என்ன செய்யலாம்? அந்த சமயத்திலும் சாந்தமாக நடந்துகொள்வதற்கு நாம் யெகோவாவுடைய சக்திக்காகவும், ஞானத்துக்காகவும் ஜெபம் செய்யலாம். இன்னும் கொஞ்சம் சாந்தமாக நடந்திருக்க வேண்டும் என்று ஒருவேளை பின்பு நமக்கு தோன்றினால் என்ன செய்வது? மறுபடியும் ஜெபம் செய்யுங்கள். அடுத்த தடவை இன்னும் எப்படி நன்றாக நடந்துகொள்ளலாம் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது, நம் கோபத்தை அடக்குவதற்கும் இன்னும் சாந்தமாக நடந்துகொள்வதற்கும் யெகோவா அவருடைய சக்தியை கொடுத்து நமக்கு உதவி செய்வார்.
7. சில வசனங்களை மனப்பாடம் செய்வது, நம்முடைய பேச்சையும் நாம் நடந்துகொள்ளும் விதத்தையும் கட்டுப்படுத்த எப்படி உதவி செய்யும்? (நீதிமொழிகள் 15:1, 18)
7 கஷ்டமான சமயங்கள் வரும்போது நம் பேச்சை கட்டுப்படுத்த சில பைபிள் வசனங்கள் நமக்கு உதவி செய்யும். கடவுளுடைய சக்தி அந்த வசனங்களை நமக்கு ஞாபகப்படுத்தும். (யோவா. 14:26) உதாரணத்துக்கு, நீதிமொழிகள் புத்தகத்தில் இருக்கிற சில நியமங்கள் நாம் சாந்தமாக இருக்க உதவி செய்யும். (நீதிமொழிகள் 15:1, 18-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, கோபம் தலைக்கேறும் சமயங்களில் நம்மையே கட்டுப்படுத்திக்கொண்டால் என்னென்ன நன்மைகள் வரும் என்றும் நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது.—நீதி. 10:19; 17:27; 21:23; 25:15.
சாந்தமாக இருக்க விவேகம் எப்படி உதவும்?
8. என்ன காரணத்துக்காக ஒருவர் நம் நம்பிக்கையைப் பற்றி கேள்வி கேட்கிறார் என்று நாம் ஏன் யோசித்துப்பார்க்க வேண்டும்?
8 விவேகமும் நமக்கு உதவி செய்யும். (நீதி. 19:11) விவேகமுள்ள ஒருவர், அதாவது நன்றாக யோசித்து நடக்கும் ஒருவர் அவருடைய நம்பிக்கையைப் பற்றி கேள்வி கேட்கும்போது அவசரப்பட்டு எதையும் சொல்லவோ, செய்யவோ மாட்டார். சிலர் கேட்கும் கேள்விகள், கடலில் மிதக்கும் பனிப்பாறைகள் மாதிரி. அதன் சின்ன பகுதிதான் கடலுக்கு மேல் நம் கண்ணுக்கு தெரியும். முக்கால்வாசி பகுதி கடலுக்கு கீழ் தான் இருக்கும். அதை நம்மால் பார்க்க முடியாது. அதேமாதிரி, சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பின்னால் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அதை நம்மால் உடனே பார்க்க முடியாது. அதனால், பதில் சொல்வதற்கு முன், ஏன் அவர்கள் அப்படி கேட்கிறார்கள் என்ற காரணம் நமக்கு முழுமையாக தெரியாது என்பதை நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.—நீதி. 16:23.
9. எப்பிராயீம் ஆண்களிடம் கிதியோன் எப்படி சாந்தமாகவும் விவேகமாகவும் நடந்துகொண்டார்?
9 எப்பிராயீம் ஆண்களிடம் கிதியோன் எப்படி நடந்துகொண்டார் என்று யோசித்துபாருங்கள். இஸ்ரவேலர்களுடைய எதிரிகளை எதிர்த்து சண்டை போடுவதற்கு ‘எங்களை ஏன் நீங்கள் முன்பே கூப்பிடவில்லை’ என்று கேட்டு அவர்கள் கிதியோனிடம் கோபமாக வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் இவ்வளவு ஆத்திரப்படுவதற்கு என்ன காரணம்? ஒருவேளை கௌரவ குறைச்சலாக இருந்திருக்குமோ? காரணம் எதுவாக இருந்தாலும் சரி, கிதியோன் அவர்களை புரிந்துகொண்டு, மதித்து நடந்தார். அவர்களிடம் சாந்தமாக பதில் சொன்னார். அதனால் என்ன நடந்தது? பிரச்சினை பெரிதாக வெடிக்கவில்லை. “அவர்களுடைய கோபம் தணிந்தது.”—நியா. 8:1-3.
10. நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி கேட்கிறவர்களிடம் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தெரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? (1 பே. 3:15)
10 ‘ஒழுக்க விஷயத்தில் நீங்கள் ஏன் பைபிள் சொல்கிற மாதிரி நடக்கிறீர்கள்’ என்று ஒருவேளை கூடப் படிக்கிறவர்களோ, கூட வேலை செய்பவர்களோ கேட்கலாம். அந்த சமயத்தில் அவர்களுடைய கருத்துக்கு நாம் மதிப்பு கொடுப்போம். அதேநேரம், நம் நம்பிக்கைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். (1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள்.) ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போது, ‘வம்பு பண்ணுவதற்காகத்தான் இப்படி கேட்கிறார்’ என்று யோசிக்காமல், அவர் ஏன் அப்படி நினைக்கிறார், எதற்காக இந்த கேள்வியை கேட்கிறார் என்று யோசித்துப்பார்க்க வேண்டும். அவர்கள் என்ன காரணத்துக்காக கேட்டிருந்தாலும் சரி, நாம் அவர்களிடம் அன்பாகவும் பொறுமையாகவும் பதில் சொல்ல வேண்டும். நாம் சொல்லும் பதிலை கேட்டு ஒருவேளை அவர்களுடைய கருத்தை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர்கள் நம்மிடம் கோபமாக, கிண்டலாக நடந்துகொண்டாலும் நாம் எப்போதும் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்.—ரோ. 12:17.
11-12. (அ) யாராவது கஷ்டமான கேள்வியை கேட்டால் பதில் சொல்வதற்கு முன் எதை யோசிக்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) மற்றவர்கள் கேட்கிற கேள்வியை வைத்தே அவர்களுக்கு எப்படி பதில் சொல்லலாம்? உதாரணம் சொல்லுங்கள்.
11 உதாரணமாக, ‘நீங்கள் ஏன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை’ என்று உங்களோடு வேலை செய்பவர் கேட்டால், எதனால் அவர் அப்படி கேட்கிறார் என்று யோசித்துபாருங்கள். நாமெல்லாம் ஜாலியாகவே இருக்க மாட்டோம் என்று அவர் நினைக்கிறாரா? அல்லது நாம் ஒருவேளை அவர்களோடு ஒத்துப்போகவில்லை என்றால் வேலை செய்பவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை கெட்டுப்போய்விடும் என்று நினைக்கிறாரா? அந்த சமயத்தில் கூடவேலை செய்பவர்கள் மேல் அவர் அக்கறையாக இருப்பதற்காக அவரை பாராட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும், அதுதான் நமக்கும் பிடிக்கும் என்று அவரிடம் சொல்லுங்கள். அப்படி செய்யும்போது நாம் அவர்களை புரிந்துகொள்கிறோம் என்பதை காட்டுவோம். அதன் பின்பு, அவர் மனதில் இருக்கும் குழப்பமும் போய்விடும். அப்படி செய்தால், பிறந்தநாள் சம்பந்தமாக பைபிளில் சொல்லியிருக்கும் விஷயங்களை அவரிடம் சாதாரணமாக, ஈசியாக பேச வாய்ப்பு கிடைக்கும்.
12 ரொம்ப பிரபலமாக பேசப்படும் சில கருத்துகளைப் பற்றி கேள்வி கேட்கும்போதும் நாம் இதே மாதிரி பேசலாம். ஓரினச்சேர்க்கையை பற்றி யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கும் கருத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூடப்படிக்கும் ஒருவர் சொல்லலாம். ஒருவேளை நமக்கு அப்படிப்பட்ட ஆட்களையே பிடிக்காது என்று நம்மைப் பற்றி தவறாக புரிந்து வைத்திருப்பதால் அவர்கள் இப்படி சொல்கிறார்களா? அல்லது அவர்களுடைய நண்பரோ சொந்தக்காரரோ ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதால் இப்படி சொல்கிறார்களா? அந்த சமயங்களில், ஒவ்வொருவருக்கும் தீர்மானம் எடுக்கும் உரிமை இருக்கிறது, அதை நாம் மதிக்கிறோம், நமக்கும் எல்லாரிடமும் அன்பு இருக்கிறது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியிருக்கலாம். b (1 பே. 2:17) அதன் பின்பு, பைபிளில் ஒழுக்க சம்பந்தமாக சொல்லியிருக்கும் விஷயங்கள் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கின்றன என்று நாம் அவர்களுக்கு புரிய வைக்கலாம்.
13. கடவுளை நம்புவது முட்டாள்தனம் என்று சொல்லும் ஒருவருக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?
13 ஒருவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தால், அவர் இதைத்தான் நம்புகிறார் என்று நாமாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. (தீத். 3:2) உதாரணமாக, உங்களோடு படிக்கும் ஒருவர், கடவுளை நம்புவதெல்லாம் முட்டாள்தனம் என்று சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். உடனே, அவர் பரிணாமத்தைத்தான் நம்புகிறார், அதைப்பற்றி அவருக்கு நிறைய தெரியும் என்று நீங்களாகவே நினைத்துக்கொள்ளலாமா? ஒருவேளை, அவர் பரிணாமத்தைப் பற்றி யோசித்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அந்த சமயத்தில் அவரிடம் அறிவியலைப் பற்றி பேசி வாக்குவாதம் செய்வதற்கு பதிலாக, அவர் யோசித்துப் பார்ப்பதற்கு சில விஷயங்களை சொல்லலாம். நம்முடைய வெப்சைட்டில் இருக்கும் படைப்பு சம்பந்தமான விஷயங்களை அவருக்கு காட்டலாம். அதில் அவர் பார்க்கும் கட்டுரையோ, வீடியோவோ அவருக்கு பிடித்துப்போய் அதைப் பற்றி அவர் நம்மிடம் பேசலாம். இப்படி, பதில் சொல்லும்போது அவர்களுடைய கருத்தை நாம் மதிக்கிறோம் என்று காட்டினால், அவர்களும் தங்களுடைய கருத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
14. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தவறாக நினைத்துக்கொண்டு இருந்த ஒருவரிடம் நீல் எப்படி நம் வெப்சைட்டை நன்றாக பயன்படுத்தினார்?
14 நிறையப் பேர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையில்லை என்று காட்ட நீல் என்ற ஒரு டீனேஜ் பையன் நம்முடைய வெப்சைட்டை பயன்படுத்தினான். “என் கூடப்படிக்கும் ஒரு பையன், நான் கட்டுக்கதைகளைத்தான் நம்புகிறேன், அறிவியலில் இருக்கும் உண்மைகளை நம்புவதில்லை என்று என்னைப் பற்றி சொல்வான்.” அந்த பையன் நீல்-ஐ பேச விடுவதுபோல் தெரியவில்லை. அதனால் நம்முடைய வெப்சைட்டில் இருக்கும் “அறிவியலும் பைபிளும்” என்ற பகுதியை நீல் அந்த பையனுக்கு காட்டினான். கொஞ்ச நாட்களுக்கு பின்பு, அந்த பையன் நம்முடைய வெப்சைட்டில் இருக்கும் விஷயங்களைப் படித்துப் பார்த்திருக்கிறான், உயிர் எப்படி உருவானது என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான் என்றும் நீலுக்கு தெரிய வந்தது. இதே மாதிரி பலன்கள் உங்களுக்கும் கிடைக்கலாம்.
குடும்பமாக சேர்ந்து தயாரியுங்கள்
15. பிள்ளைகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி கூடப் படிக்கிறவர்கள் கேள்வி கேட்கும்போது சாந்தமாக பதில் சொல்ல பெற்றோர்கள் எப்படி உதவி செய்யலாம்?
15 பிள்ளைகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால் எப்படி சாந்தமாக பதில் சொல்லலாம் என்று பெற்றோர்கள் அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். (யாக். 3:13) சில பெற்றோர்கள் அவர்களுடைய குடும்ப வழிபாட்டில் இதை பழகிப்பார்க்கிறார்கள். ஸ்கூலில் எந்த மாதிரி கேள்விகளை கேட்பார்கள் என்று யோசித்து பார்த்து அதைப் பற்றி கலந்துபேசுகிறார்கள்; பிறகு, எப்படி பதில் சொல்வது, அதுவும் சாந்தமாக எப்படி பதில் சொல்வது என்று நடித்து பார்க்கிறார்கள்.—“ குடும்பமாகப் பழகி பாருங்கள்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.
16-17. பழகிப் பார்ப்பது இளம் பிள்ளைகளுக்கு எப்படி உதவி செய்யும்?
16 பழகிப் பார்க்கும்போது நாம் ஏன் ஒரு விஷயத்தை நம்புகிறோம் என்று நமக்கு நாமே உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்; நம்ப வைக்கும் விதத்தில் மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க முடியும். jw.org வெப்சைட்டில் “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்” தொடரில் டீனேஜ் பிள்ளைகளுக்கு சில ஒர்க் ஷீட்டுகள் இருக்கின்றன. இளம் பிள்ளைகள் அவர்களுடைய நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்வதற்காகவே இதைத் தயாரித்திருக்கிறார்கள். இதை வைத்து அவர்களால் சொந்த வார்த்தைகளில் பதில்களை தயாரிக்கவும் முடியும். இந்தப் பகுதியை குடும்பமாக சேர்ந்து படிக்கும்போது நம் நம்பிக்கையை பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்கு சாந்தமாக பதில் சொல்ல கற்றுக்கொள்ளலாம்.
17 இந்த மாதிரி பழகிப் பார்த்தது மேத்யூ என்ற பையனுக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது. படிக்கிற இடத்தில் எதை பற்றியெல்லாம் பேசுவார்கள் என்று மேத்யூவும் அவனுடைய அப்பா அம்மாவும் யோசித்துப் பார்த்திருக்கிறார்கள். அதைப்பற்றி அடிக்கடி அவர்களுடைய குடும்ப வழிபாட்டில் கலந்துபேசி இருக்கிறார்கள். “எந்த மாதிரி கேள்விகளெல்லாம் வரலாம் என்று நாங்கள் யோசித்துப் பார்ப்போம். அதற்குப்பிறகு ஏற்கெனவே ஆராய்ச்சி செய்த விஷயங்களை வைத்து எப்படி பதில் சொல்லலாம் என்று பழகிப்பார்ப்போம். நான் ஏன் இதை நம்புகிறேன் என்பது என் மனதில் தெளிவாக இருந்தால், என்னால் தைரியமாக இருக்க முடியும், கேள்வி கேட்கிறவர்களுக்கு சாந்தமாக பதில் சொல்லவும் முடியும்” என்று மேத்யூ சொல்கிறான்.
18. கொலோசெயர் 4:6-ல் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
18 நம்ப வைக்கும் விதத்தில் தெளிவாக விளக்கி சொன்னால் எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. சாந்தமாக, சாதுரியமாக பேசுவதும் ரொம்ப முக்கியம். (கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.) நம் நம்பிக்கைகளை பற்றி பேசுவது ஒரு பந்தை தூக்கிப்போடுவது மாதிரி! அதை மெதுவாகவும் தூக்கி போடலாம், வேகமாகவும் தூக்கி எறியலாம். மெதுவாக தூக்கி போட்டால் எதிரில் இருப்பவரால் அதைப் பிடிக்க முடியும், தொடர்ந்து விளையாடவும் முடியும். அதேமாதிரி நம் நம்பிக்கைகளை பற்றி சாந்தமாக, சாதுரியமாக பேசும்போது மற்றவர்கள் அதை கேட்பார்கள்; நம்மால் தொடர்ந்து பேசவும் முடியும். ஆனால், வாக்குவாதம் செய்து ஜெயிக்க வேண்டும், நம்முடைய நம்பிக்கைகளை கேலி செய்ய வேண்டும் என்று நினைப்பவரிடம் நாம் தொடர்ந்து பேச வேண்டிய அவசியமில்லை. (நீதி. 26:4) சிலர்தான் அப்படி இருப்பார்கள். நிறையப்பேர் நாம் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பார்கள்.
19. நம் நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி கேட்கிறவர்களிடம் சாந்தமாக பதில் சொல்ல எது நமக்கு உதவி செய்யும்?
19 சாந்தமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தால், நிறைய பலன்கள் கிடைக்கும். யாராவது நாம் ஏற்றுக்கொள்ளாத ஒரு விஷயத்தை பற்றி கேள்வி கேட்டால் அல்லது அநியாயமாக குறை சொன்னால், சாந்தமாக பதில் சொல்ல பலம் தரச் சொல்லி யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நாம் சாந்தமாக பேசும்போது கருத்து வேறுபாடுகள் பெரிய கலவரமாக வெடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல சாந்தமாக, மரியாதையாக பதில் சொன்னால், கேட்கிறவர்கள் அவர்களுடைய கருத்தை மாற்றிக்கொள்வதற்கும் பைபிள் உண்மைகளை பற்றி தெரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ‘எப்போதும் நம் நம்பிக்கையைப் பற்றி பேச தயாராக இருப்போம்’, அதுவும் “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல” தயாராக இருப்போம்.” (1 பே. 3:15) எப்போதும் சாந்தத்தை உங்கள் பலமாக ஆக்கிக்கொள்ளுங்கள்!
பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!
a கோபமாக பேசுகிறவரிடம் அல்லது வாக்குவாதம் செய்கிறவரிடம் நம்முடைய நம்பிக்கையைப் பற்றி நாம் எப்படி சாந்தமாக பேசலாம் என்பதற்கு இந்த கட்டுரை சில ஆலோசனைகளை கொடுக்கும்.
b இதைப் பற்றிய சில ஆலோசனைகளுக்கு, “ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” என்ற கட்டுரையை, விழித்தெழு! எண். 3, 2016-ல் பாருங்கள்.
c jw.org வெப்சைட்டில் “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்” மற்றும் “யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற தலைப்புகளில் இருக்கிற தொடர் கட்டுரைகளில் நல்ல ஆலோசனைகள் இருக்கின்றன.