Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 37

சிம்சோனைப் போலவே யெகோவாவை நம்பியிருங்கள்

சிம்சோனைப் போலவே யெகோவாவை நம்பியிருங்கள்

“உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து என்னை நினைத்துப் பாருங்கள் . . . என்னைப் பலப்படுத்துங்கள்.”—நியா. 16:28.

பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!

இந்தக் கட்டுரையில்... a

1-2. சிம்சோனைப் பற்றிய பதிவைப் படிப்பது நமக்கு ஏன் நல்லது?

 சிம்சோன் என்ற பெயரைக் கேட்டதுமே, அவர் பயங்கரமான ஒரு பலசாலி என்பது உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அது உண்மைதான். ஆனால், சிம்சோன் தன் வாழ்க்கையில் ஒரு தவறான முடிவை எடுத்தார். அதனால் வந்த பின்விளைவுகளால் அவர் ரொம்பக் கஷ்டப்பட்டார். இருந்தாலும், சிம்சோன் தனக்கு எப்படியெல்லாம் உண்மையாகச் சேவை செய்தார் என்பதைத்தான் யெகோவா முக்கியமாக நினைத்துப் பார்த்தார். அதோடு, நம்முடைய நன்மைக்காக சிம்சோனின் உதாரணத்தை பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

2 தன் மக்களான இஸ்ரவேலர்களுக்காக அதிசயமான விஷயங்களைச் செய்ய யெகோவா சிம்சோனைப் பயன்படுத்தினார். சிம்சோன் இறந்து நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு, விசுவாசத்துக்குப் பேர்போனவர்களின் பட்டியலில் சிம்சோனின் பெயரையும் எழுதுவதற்கு அப்போஸ்தலன் பவுலை யெகோவா தூண்டினார். (எபி. 11:32-34) சிம்சோனின் உதாரணம் நம் எல்லாருக்குமே உற்சாகத்தைக் கொடுக்கும். ரொம்பக் கஷ்டமான சூழ்நிலைகளில்கூட அவர் யெகோவாவையே நம்பியிருந்தார். அவருடைய உதாரணம் நமக்கு எப்படி உற்சாகத்தைத் தருகிறது என்று இப்போது பார்க்கலாம். அவருடைய உதாரணத்திலிருந்து வேறு என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.

சிம்சோன் யெகோவாவை நம்பினார்

3. சிம்சோனுக்கு யெகோவா என்ன வேலையைக் கொடுத்தார்?

3 சிம்சோன் பிறந்த சமயத்தில், பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் தேசத்தை அடக்கி ஒடுக்கிக்கொண்டு இருந்தார்கள். (நியா. 13:1) அவர்களுடைய கொடுங்கோல் ஆட்சியால் இஸ்ரவேலர்கள் படாத பாடுபட்டார்கள். ‘பெலிஸ்தியர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவதற்காக’ சிம்சோனை யெகோவா தேர்ந்தெடுத்தார். (நியா. 13:5) இது எவ்வளவு பெரிய வேலை! இந்தக் கஷ்டமான நியமிப்பைச் செய்து முடிக்க சிம்சோன் யெகோவாவையே நம்பியிருக்க வேண்டியிருந்தது.

சிம்சோன் யெகோவாவை நம்பினார், சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்துகொண்டார். கையில் கிடைத்ததை வைத்து யெகோவாவின் விருப்பத்தைச் செய்து முடித்தார் (பாராக்கள் 4-5)

4. பெலிஸ்தியர்களிடமிருந்து தப்பிக்க சிம்சோனுக்கு யெகோவா எப்படி உதவினார்? (நியாயாதிபதிகள் 15:14-16)

4 சிம்சோன் எப்படி யெகோவாவை நம்பியிருந்தார் என்பதற்கும், யெகோவா எப்படி அவருக்கு உதவி செய்தார் என்பதற்கும் ஓர் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். ஒருசமயம், பெலிஸ்திய படைவீரர்கள் சிம்சோனைப் பிடித்துக்கொண்டு போவதற்காக லேகி என்ற இடத்துக்கு வந்தார்கள். அது அநேகமாக யூதாவில் இருந்திருக்க வேண்டும். அந்தச் சமயத்தில், யூதாவில் இருந்த ஆட்கள் பயந்துபோய்விட்டார்கள். அதனால், சிம்சோனை எதிரிகளிடம் பிடித்துக் கொடுக்க முடிவு செய்தார்கள். சிம்சோனின் சொந்த மக்களே, இரண்டு புதிய கயிறுகளால் அவரைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படைத்தார்கள். (நியா. 15:9-13) ஆனால், “யெகோவாவின் சக்தியால் சிம்சோன் பலம் பெற்றார்.” அவர் கையில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்து, கீழே விழுந்தன. “அந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் கழுதையின் பச்சைத் தாடை எலும்பைப் பார்த்தார்.” உடனே, அதை எடுத்து 1,000 பெலிஸ்திய வீரர்களைக் கொன்று குவித்தார்!நியாயாதிபதிகள் 15:14-16-ஐ வாசியுங்கள்.

5. கழுதையின் தாடை எலும்பை சிம்சோன் ஆயுதமாகப் பயன்படுத்தியது, அவர் யெகோவாவை முழுமையாக நம்பினார் என்பதை எப்படிக் காட்டியது?

5 பொதுவாக, ஒரு கழுதையின் தாடை எலும்பை யாருமே ஒரு ஆயுதமாக நினைக்கவோ பயன்படுத்தவோ மாட்டார்கள். அப்படியிருக்கும்போது, சிம்சோன் ஏன் அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்? தான் பயன்படுத்தும் ஆயுதம் தனக்கு வெற்றி தராது, யெகோவாதான் வெற்றி தருவார் என்பதை சிம்சோன் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அப்போது அவர் கைக்கு எது கிடைத்ததோ அதைப் பயன்படுத்தி யெகோவாவின் விருப்பத்தை அவர் செய்து முடித்தார். அவர் யெகோவாவை இந்தளவுக்கு நம்பியதால் யெகோவா அவருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்!

6. நம்முடைய நியமிப்புகளைச் செய்யும் விஷயத்தில் சிம்சோனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 யெகோவா நம்மிடம் எதைச் செய்யச் சொன்னாலும் அதைச் செய்வதற்கான பலத்தை நமக்குக் கொடுப்பார். நம்மால் செய்யவே முடியாது என்று நாம் நினைக்கும் நியமிப்புகளைக்கூட அவர் நம்மைச் செய்ய வைப்பார். அதுவும், நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில்! உதவிக்காக நீங்கள் யெகோவாவை நம்பியிருந்தால், அவருடைய விருப்பத்தைச் செய்ய சிம்சோனுக்குப் பலம் கொடுத்தது போலவே உங்களுக்கும் பலம் கொடுப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.—நீதி. 16:3.

7. யெகோவாவின் வழிநடத்துதலுக்காகக் கேட்பதும் அதை ஏற்றுக்கொள்வதும் எந்தளவு முக்கியம் என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது?

7 நம் அமைப்பின் கட்டுமான வேலைகளைச் செய்யும் நிறைய சகோதர சகோதரிகள், யெகோவாமேல் நம்பிக்கையைக் காட்டியிருக்கிறார்கள். முன்பெல்லாம், ராஜ்ய மன்றங்களையும் மற்ற கட்டிடங்களையும் நம் சகோதரர்கள்தான் புதிதாக வடிவமைத்துக் கட்டுவார்கள். ஆனால், யெகோவாவின் அமைப்பு வளர வளர, சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பொறுப்பில் இருந்த சகோதரர்கள் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்துவிட்டு, புது முறைகளை முயற்சி செய்து பார்த்தார்கள். உதாரணத்துக்கு, கட்டிடங்களை விலைக்கு வாங்கி அதைப் புதுப்பித்தார்கள். “ஆரம்பத்தில் இந்தப் புது மாற்றத்தை ஏற்றுக்கொள்வது சிலருக்குக் கஷ்டமாக இருந்தது” என்று ராபர்ட் சொல்கிறார். அவர் சமீப வருஷங்களாக, உலகம் முழுவதும் நடக்கும் நிறைய கட்டுமான புராஜக்ட்டுகளில் வேலை செய்திருக்கிறார். அவர் தொடர்ந்து சொல்லும்போது, “இவ்வளவு வருஷமாக நாங்கள் செய்ததிலிருந்து இது ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஆனால், மாற்றங்கள் செய்ய சகோதரர்கள் தயாராக இருந்தார்கள். யெகோவாவும் இந்த மாற்றங்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று சொல்கிறார். யெகோவா தன் விருப்பத்தைச் செய்ய தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டும்தான்! நாம் எல்லாருமே அவ்வப்போது நம்மை இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடுகிறேனா? அவருடைய சேவையில் மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்கிறேனா?’

யெகோவாவின் ஏற்பாடுகளை சிம்சோன் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்

8. ஒருசமயம் சிம்சோன் பயங்கர தாகமாக இருந்தபோது என்ன செய்தார்?

8 சிம்சோன் வேறு சில அதிசயமான விஷயங்களைச் செய்ததைப் பற்றியும் நீங்கள் படித்திருக்கலாம். அவர் தனி ஆளாக நின்று ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டார், பிற்பாடு அஸ்கலோன் நகரத்தில் 30 பெலிஸ்தியர்களைக் கொன்றுபோட்டார். (நியா. 14:5, 6, 19) இதுபோன்ற பெரிய பெரிய விஷயங்களை யெகோவாவின் உதவி இல்லாமல் செய்திருக்கவே முடியாது என்பது சிம்சோனுக்குத் தெரிந்திருந்தது. எப்படிச் சொல்லலாம்? ஒரு சந்தர்ப்பத்தில், 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றுபோட்ட பிறகு சிம்சோனுக்குப் பயங்கர தாகமாக இருந்தது. ஆனால், தாகத்தை தீர்க்க அவரே ஏதாவது செய்துகொள்ளாமல், யெகோவாவிடம் உதவி கேட்டு கெஞ்சினார்.—நியா. 15:18.

9. சிம்சோன் உதவி கேட்டு கெஞ்சியபோது யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார்? (நியாயாதிபதிகள் 15:19)

9 உதவிக்காக சிம்சோன் கெஞ்சியபோது, யெகோவா அற்புதமாக ஒரு ஊற்றை வரவைத்தார். அதிலிருந்து சிம்சோன் குடித்தபோது, “அவருக்கு உயிர் வந்தது, புத்துணர்ச்சி கிடைத்தது.” (நியாயாதிபதிகள் 15:19-ஐ வாசியுங்கள்.) நிறைய வருஷங்களுக்குப் பிறகு சாமுவேல் தீர்க்கதரிசி நியாயாதிபதிகள் புத்தகத்தை எழுதியபோதுகூட அந்த ஊற்று இருந்ததாகத் தெரிகிறது. தன் மக்களுக்கு ஒரு தேவை என்றால் யெகோவா உடனே உதவி செய்வார் என்பதை அந்த ஊற்று இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கலாம்.

யெகோவா தந்த தண்ணீரைக் குடித்தபோது சிம்சோனுக்கு பலம் கிடைத்தது. அதேபோல், இன்று யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டால் நமக்கும் பலம் கிடைக்கும் (பாரா 10)

10. யெகோவாவின் உதவி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

10 நமக்கு என்ன திறமைகள் இருந்தாலும் சரி, யெகோவாவின் சேவையில் எவ்வளவு செய்திருந்தாலும் சரி, நாமும் அவரிடம் எப்போதும் உதவி கேட்க வேண்டும். யெகோவாவை நம்பியிருந்தால் மட்டும்தான் நமக்கு உண்மையான வெற்றி கிடைக்கும் என்பதை நாம் மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். யெகோவா தந்த தண்ணீரைக் குடித்தபோது சிம்சோனுக்குப் பலம் கிடைத்தது. அதேபோல், இன்று யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் நாம் பயன்படுத்திக்கொண்டால் நமக்கும் பலம் கிடைக்கும்.—மத். 11:28.

11. யெகோவா கொடுக்கும் உதவியை நாம் எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம்? உதாரணம் சொல்லுங்கள்.

11 அலெக்ஸி என்ற சகோதரரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யாவில் பயங்கரமான துன்புறுத்தலை அனுபவித்து வருகிற நம் சகோதரர்களில் அவரும் ஒருவர். இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் உறுதியாக இருக்க எது அவருக்கு உதவி செய்கிறது? அவரும் அவருடைய மனைவியும், வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விடாமல் செய்கிறார்கள். அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “தினமும் பைபிளைப் படிப்பதற்கும் தனிப்பட்ட படிப்பை விடாமல் செய்வதற்கும் நான் முயற்சி செய்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் நானும் என் மனைவியும் தினவசனத்தைக் கலந்துபேசுவோம், ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவிடம் ஜெபம் செய்வோம்” என்று சொல்கிறார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் நம்மையே நம்புவதற்குப் பதிலாக யெகோவாவையே நம்பியிருக்க வேண்டும். அதற்கு, தனிப்பட்ட பைபிள் படிப்பு, ஜெபம், கூட்டம், ஊழியம் என எதையுமே தவறவிடாமல் இருப்பதன் மூலம் நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். யெகோவாவுக்குச் சேவை செய்ய நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்! சிம்சோனுக்குப் பலம் கொடுத்தது போலவே நமக்கும் கண்டிப்பாகப் பலம் கொடுப்பார்!

சிம்சோன் தளர்ந்துபோகவில்லை

12. சிம்சோன் என்ன தவறான முடிவை எடுத்தார், அவருடைய வாழ்க்கையில் முன்பு நடந்த சம்பவங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

12 சிம்சோன் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனிதர்தான். அதனால், சிலசமயங்களில் அவர் தவறான முடிவுகளை எடுத்தார். குறிப்பாக, அவர் எடுத்த ஒரு தவறான முடிவால் மோசமான பின்விளைவுகளை அனுபவித்தார். அவர் நியாயாதிபதியாகச் சேவை செய்ய ஆரம்பித்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, “சோரேக் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு பெண்ணை அவர் காதலித்தார். அவள் பெயர் தெலீலாள்.” (நியா. 16:4) ஆனால் அதற்குமுன், ஒரு பெலிஸ்தியப் பெண்ணோடு அவருக்கு நிச்சயமாகியிருந்தது. அது ‘யெகோவாவின் செயலால்’ நடந்தது. “பெலிஸ்தியர்களைத் தண்டிக்க அவர் சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்.” அதன் பிறகு, காசா என்ற பெலிஸ்திய நகரத்தில் ஒரு விபச்சாரியின் வீட்டில் சிம்சோன் தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில், நகரத்தின் வாசல் கதவுகளை பெயர்த்தெடுத்து தூக்கிக்கொண்டு போக யெகோவா சிம்சோனுக்கு பலம் கொடுத்தார். அதனால் அந்த நகரத்தைத் தோற்கடிக்க முடிந்தது. (நியா. 14:1-4; 16:1-3) ஆனால், தெலீலாளின் விஷயம் வேறு. அவள் அநேகமாக ஒரு இஸ்ரவேல் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அவளைக் காதலித்ததால் பெலிஸ்தியர்களைத் தோற்கடிக்க சிம்சோனுக்கு எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது.

13. தெலீலாள் விரித்த வலையில் சிம்சோன் எப்படிச் சிக்கினார்?

13 நிறைய பணத்துக்காக சிம்சோனை பெலிஸ்தியர்களிடம் பிடித்துக்கொடுக்க தெலீலாள் பேசிவைத்திருந்தாள். அவளுடைய இந்தச் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு சிம்சோன் காதலில் மயங்கிப்போயிருந்தாரா? அவளை அந்தளவுக்குக் கண்மூடித்தனமாக நம்பினாரா? எப்படியிருந்தாலும் சரி, சிம்சோனுடைய பலத்தின் ரகசியம் என்ன என்று கேட்டு அவள் நச்சரித்துக்கொண்டே இருந்தாள். கடைசியில், சிம்சோன் அதை அவளிடம் சொல்லிவிட்டார். இந்தத் தவறை அவர் செய்ததால் அவரிடமிருந்த பலமெல்லாம் போய்விட்டது. கொஞ்ச நாளுக்கு யெகோவாவும் அவரோடு இல்லாமல் போய்விட்டார்.—நியா. 16:16-20.

14. தெலீலாளை நம்பியதால் சிம்சோனுக்கு என்ன நிலைமை வந்தது?

14 யெகோவாவை நம்புவதற்குப் பதிலாக தெலீலாளை நம்பியதால் சிம்சோனுக்கு இடிமேல் இடி விழுந்தது! பெலிஸ்தியர்கள் அவரைப் பிடித்து, அவருடைய கண்களைத் தோண்டி எடுத்தார்கள். எந்த நகரத்தின் மக்களை அவர் அவமானப்படுத்தியிருந்தாரோ அதே நகரத்தில், அதாவது காசாவில், அவரைச் சிறையில் அடைத்தார்கள். அங்கே அவரை ஒரு அடிமையாக்கி, மாவு அரைக்க வைத்தார்கள். அதன் பிறகு, ஒரு விழாவைக் கொண்டாட பெலிஸ்தியர்கள் கூடிவந்தபோது, சிம்சோனை அசிங்கப்படுத்தினார்கள். அவர்களுடைய தெய்வம் தாகோன்தான் சிம்சோனை அவர்களுடைய கையில் பிடித்துக் கொடுத்ததாக நினைத்துக்கொண்டு அந்தத் தெய்வத்துக்கு ஒரு பெரிய பலியைக் கொடுத்தார்கள். அதன் பிறகு, சிம்சோன் அந்தக் கொண்டாட்டத்தில் “வேடிக்கை காட்டட்டும்” என்று சொல்லி, அவரைச் சிறையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து கேலி கிண்டல் செய்தார்கள்.—நியா. 16:21-25.

பெலிஸ்தியர்களைத் தண்டிக்க யெகோவா சிம்சோனுக்குப் பலம் கொடுத்தார் (பாரா 15)

15. சிம்சோன் மறுபடியும் யெகோவாவை நம்பியதை எப்படிக் காட்டினார்? (நியாயாதிபதிகள் 16:28-30) (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

15 சிம்சோன் ஒரு பெரிய தவறைச் செய்திருந்தார், ஆனாலும் அவர் தளர்ந்துபோகவில்லை! யெகோவா கொடுத்த வேலையைச் செய்வதிலேயே அவர் குறியாக இருந்தார். பெலிஸ்தியர்களைத் தோற்கடிக்க அவர் வாய்ப்பைத் தேடிக்கொண்டே இருந்தார். (நியாயாதிபதிகள் 16:28-30-ஐ வாசியுங்கள்.) சிம்சோன் யெகோவாவிடம், “நான் பெலிஸ்தியர்களைப் பழிவாங்க வேண்டும்” என்று கெஞ்சினார். சிம்சோனின் ஜெபத்துக்கு யெகோவா பதில் தந்தார். மறுபடியும் அற்புதமாக அவருக்குப் பலம் கொடுத்தார். அதனால், அதுவரை இல்லாத அளவுக்கு நிறைய பெலிஸ்தியர்களை அன்று சிம்சோன் கொன்றுபோட்டார்!

16. தவறு செய்த சிம்சோனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 சிம்சோன் செய்த தவறினால் அவருக்குப் படுமோசமான பின்விளைவுகள் வந்தது உண்மைதான். ஆனாலும், யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதை அவர் நிறுத்தவே இல்லை. நாமும் ஒருவேளை தவறு செய்யலாம், அதனால் நமக்குக் கண்டிப்புக் கிடைக்கலாம், சில பொறுப்புகளையும் நாம் இழக்கலாம். ஆனாலும், நாம் தளர்ந்து போய்விடக்கூடாது. யெகோவா நம்மை மன்னிக்க எப்போதுமே தயாராக இருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (சங். 103:8-10) நாம் தவறு செய்திருந்தாலும், யெகோவா தன் விருப்பத்தைச் செய்வதற்கு மறுபடியும் நம்மைப் பயன்படுத்த முடியும், சிம்சோனை அவர் பயன்படுத்தியது போல!

சிம்சோன் தன் தவறை நினைத்து ரொம்ப வேதனைப்பட்டிருப்பார், ஆனாலும் அவர் தளர்ந்துபோகவில்லை—நாமும் தளர்ந்துபோகக் கூடாது (பாராக்கள் 17-18)

17-18. மைக்கேலின் உதாரணத்தில் உங்கள் மனதைத் தொட்ட விஷயம் எது? (படத்தையும் பாருங்கள்.)

17 மைக்கேல் என்ற இளம் சகோதரரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவர் உதவி ஊழியராகவும் ஒழுங்கான பயனியராகவும் யெகோவாவின் சேவையை ரொம்ப சுறுசுறுப்பாகச் செய்துவந்தார். ஆனால், திடீரென்று அவர் ஒரு தவறு செய்துவிட்டதால் சபையில் இருந்த பொறுப்புகளை இழந்துவிட்டார். அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “அதுவரைக்கும் நான் யெகோவாவின் சேவையில் பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தேன். ஆனால், திடீரென்று எங்கேயோ மோதி அப்படியே நின்றுவிட்ட மாதிரி ஆகிவிட்டது. யெகோவா என்னை ஒரேயடியாகக் கைவிட்டுவிடுவார் என்று நான் நினைக்கவில்லைதான். ஆனால், முன்புபோல் யெகோவாவோடு நெருக்கமாக இருக்க முடியுமா, முன்புபோல் சபையில் நிறைய சேவை செய்ய முடியுமா என்றெல்லாம் யோசித்தேன்.”

18 நல்ல விஷயம் என்னவென்றால், மைக்கேல் தளர்ந்துபோகவில்லை. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “நான் மறுபடியும் யெகோவாவோடு நெருக்கமாவதற்கு என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். மனம்விட்டு ஜெபம் செய்வது, படிப்பது, படிப்பதை ஆழமாக யோசிப்பது என எல்லாவற்றையும் தவறாமல் செய்தேன்” என்று சொல்கிறார். அதன் பிறகு, மைக்கேலுக்கு மறுபடியும் சபையில் பொறுப்புகள் கிடைத்தன. இப்போது அவர் ஒரு மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “மற்றவர்களிடமிருந்து, முக்கியமாக மூப்பர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த உதவியும் உற்சாகமும்தான் யெகோவாவுக்கு இன்னும் என்மேல் பாசம் இருக்கிறது என்பதை எனக்குப் புரிய வைத்தது. மறுபடியும் சுத்தமான மனசாட்சியோடு என்னால் சபையில் சேவை செய்ய முடிகிறது. உண்மையிலேயே மனம் திருந்துகிறவர்களை யெகோவா கண்டிப்பாக மன்னிப்பார் என்பதை என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.” மைக்கேலைப் போல நாமும் ஏதாவது தவறு செய்திருந்தால், நம்மைத் திருத்திக்கொள்வதற்கும் யெகோவாவைத் தொடர்ந்து நம்பியிருப்பதற்கும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அப்போது, யெகோவா கண்டிப்பாக நம்மையும் பயன்படுத்துவார், நம்மையும் ஆசீர்வதிப்பார்!—சங். 86:5; நீதி. 28:13.

19. சிம்சோனின் உதாரணம் உங்களை எப்படிப் பலப்படுத்தியிருக்கிறது?

19 இந்தக் கட்டுரையில், சிம்சோனின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைப் பற்றி நாம் பார்த்தோம். அவர் தவறே செய்யாதவர் என்று நாம் சொல்ல முடியாது. தெலீலாளின் விஷயத்தில் அவர் தவறு செய்திருந்தாலும், யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய அவர் தொடர்ந்து முயற்சி எடுத்தார். யெகோவாவும் மறுபடியும் சிம்சோனைப் பயன்படுத்தினார். அதுவும், தன் விருப்பத்தை நிறைவேற்ற சிம்சோனைப் பெரியளவில் பயன்படுத்தினார். அப்படியென்றால், அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டிய ஒருவராகத்தான் யெகோவா அவரைப் பார்த்தார். அதனால்தான் எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் விசுவாசத்துக்குப் பேர்போனவர்களின் பட்டியலில் இவருடைய பெயரையும் சேர்த்திருக்கிறார். முக்கியமாக நாம் பலவீனமாக இருக்கும்போது நம்மைப் பலப்படுத்த யெகோவா ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார். இவ்வளவு பாசமான அப்பாவுக்குச் சேவை செய்வதை நினைக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சிம்சோனைப் போல நாமும் யெகோவாவிடம், “தயவுசெய்து என்னை நினைத்துப் பாருங்கள் . . . என்னைப் பலப்படுத்துங்கள்” என்று கெஞ்சிக் கேட்கலாம்.—நியா. 16:28.

பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

a சிம்சோன்—இவர் ரொம்பப் பிரபலமான ஒரு பைபிள் கதாபாத்திரம். இவருடைய கதையை வைத்து நாடகங்கள் எடுத்திருக்கிறார்கள், பாடல்கள் எழுதியிருக்கிறார்கள், சினிமாவும் எடுத்திருக்கிறார்கள். ஆனால், இவருடைய வாழ்க்கை வெறும் கதை அல்ல, அது நிஜம். அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டிய இவரிடமிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.