படிப்புக் கட்டுரை 41
பேதுருவின் இரண்டு கடிதங்கள்—நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
“இவற்றை உங்களுக்கு ஞாபகப்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறேன்.”—2 பே. 1:12.
பாட்டு 127 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்
இந்தக் கட்டுரையில்... a
1. பேதுரு இறப்பதற்கு முன்பு யெகோவா அவரை என்ன செய்ய வைத்தார்?
அப்போஸ்தலன் பேதுரு நிறைய வருஷங்களாக யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தார். இயேசுவோடு சேர்ந்து ஊழியம் செய்தார், யூதர்களாக இல்லாதவர்களுக்கும் நல்ல செய்தியை சொல்ல ஆரம்பித்தார். பிறகு, ஆளும் குழுவில் ஒருவராகவும் சேவை செய்தார். ஆனால் பேதுரு செய்த சேவைகள் அதோடு முடியவில்லை. அவர் இறப்பதற்கு கொஞ்சநாள் முன்பு அவருக்கு இன்னொரு வேலையையும் யெகோவா கொடுத்தார். கிட்டத்தட்ட கி.பி. 62-லிருந்து 64-குள் இரண்டு கடிதங்களை எழுதுவதற்கு யெகோவா பேதுருவை பயன்படுத்தினார். அதுதான் பைபிளில் இருக்கும் 1 பேதுரு புத்தகமும் 2 பேதுரு புத்தகமும். அவர் இறந்த பிறகு இந்தக் கடிதங்கள் கிறிஸ்தவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவரே சொன்னார்.—2 பே. 1:12-15.
2. சரியான சமயத்தில்தான் பேதுரு இந்தக் கடிதங்களை எழுதினார் என்று எதை வைத்து சொல்கிறோம்?
2 சகோதர சகோதரிகள், “பலவிதமான சோதனைகளால்” வேதனைப்பட்டு கொண்டிருந்த சமயத்தில்தான் பேதுரு இந்த கடிதங்களை எழுதினார். (1 பே. 1:6) அன்று நிலைமைகள் எப்படி இருந்தன? கெட்ட ஆட்கள் சபைக்குள் பொய் போதனைகளைப் பரப்ப முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். வெட்கங்கெட்ட விதத்தில் நடக்க சபையில் இருந்தவர்களை தூண்டினார்கள். (2 பே. 2:1, 2, 14) சீக்கிரத்தில் எருசலேம் நகரத்தையும் யூத சமுதாயத்தையும் ரோமப் படை வந்து அழிக்கப் போகிறார்கள்! அப்படியென்றால் எருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சீக்கிரத்திலேயே “எல்லாவற்றுக்கும் முடிவு” வரப்போவதை பார்க்கப் போகிறார்கள். (1 பே. 4:7) அன்று இருந்த கஷ்டங்களை சமாளிப்பதற்கும் சீக்கிரத்தில் வரப்போகும் சோதனைகளை சமாளிக்க தயாராவதற்கும் பேதுரு எழுதின கடிதங்கள் நிச்சயமாக அன்று இருந்த கிறிஸ்தவர்களுக்கு உதவியிருக்கும். b
3. பேதுருவின் கடிதங்களை படிப்பதால் நமக்கு என்ன நன்மை?
3 பேதுரு இந்தக் கடிதங்களை முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக எழுதினாலும், இன்று நாமும் அதிலிருந்து பயனடைய வேண்டும் என்பதற்காகவே யெகோவா இந்தக் கடிதங்களை அவருடைய வார்த்தையில் பதிவு செய்திருக்கிறார். (ரோ. 15:4) இன்று இந்த உலகத்தில் இருக்கிறவர்களும் வெட்கங்கெட்ட விதமாகத்தான் நடக்கிறார்கள். அதனால், யெகோவாவுக்கு சேவை செய்வதை கஷ்டமாக்கும் சோதனைகள் நமக்கும் வரலாம். அதுமட்டுமல்ல, எருசலேம் அழிந்த சமயத்தில் வந்ததை விட பெரிய உபத்திரவத்தை சீக்கிரத்தில் நாம் எல்லாரும் அனுபவிக்க போகிறோம். அதனால், பேதுரு எழுதின கடிதங்களில் இருந்து நாமும் முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். இதிலிருந்து, நாம் யெகோவாவுடைய நாளுக்காக எப்படி எதிர்பார்த்து இருக்கலாம், எப்படி மனிதர்களை பார்த்து பயப்படாமல் இருக்கலாம், ஒருவருக்கொருவர் எப்படி ஆழ்ந்த அன்பு காட்டலாம் என்பதையெல்லாம் கற்றுக்கொள்வோம். அதுமட்டுமல்ல, மூப்பர்கள் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளை எப்படி நன்றாக பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கு அவர்களுக்கும் சில விஷயங்களை ஞாபகப்படுத்தும்.
எதிர்பார்த்துக் காத்திருங்கள்
4. எது நம் நம்பிக்கையை அசைத்து பார்க்கும் என்று 2 பேதுரு 3:3, 4 சொல்கிறது?
4 நம்மை சுற்றியிருக்கும் மக்கள் யாருமே பைபிள் தீர்க்கதரிசனங்களை நம்புவதில்லை. முடிவு வருவதற்காக ரொம்ப வருஷங்களாக நாம் காத்திருப்பதைப் பார்த்து, நம்மை எதிர்ப்பவர்கள் கேலி செய்கிறார்கள். இன்னும் சிலர், முடிவு என்ற ஒன்று வரவே வராது என்று சொல்கிறார்கள். (2 பேதுரு 3:3, 4-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை ஊழியத்தில் நாம் பார்ப்பவர்கள், நம்மோடு வேலை செய்பவர்கள் அல்லது குடும்பத்தில் யாராவது இப்படி சொன்னால், நம் நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடும். அப்படிப்பட்ட சமயத்தில் நமக்கு எது உதவும் என்று பேதுரு சொல்கிறார்.
5. முடிவு வரும்வரை பொறுமையாக காத்திருக்க எது நமக்கு உதவும்? (2 பேதுரு 3:8, 9)
5 இந்த பொல்லாத உலகத்துக்கு யெகோவா ஏன் இன்னும் முடிவு கட்டாமல் இருக்கிறார் என்று சிலர் யோசிக்கலாம். இதற்கு நல்ல பதில் பேதுருவின் வார்த்தைகளில் இருக்கிறது. நேரத்தை நாம் பார்க்கும் விதத்துக்கும் யெகோவா பார்க்கும் விதத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று அதில் அவர் சொல்கிறார். (2 பேதுரு 3:8, 9-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுடைய பார்வையில் ஆயிரம் வருஷம்கூட ஒரேவொரு நாள் மாதிரிதான் இருக்கிறது. யெகோவா பொறுமையாக இருக்கிறார், யாரும் அழிந்துபோவதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால் அவருடைய நாளில் கண்டிப்பாக இந்த உலகத்துக்கு முடிவு கொண்டு வருவார். அதனால் மீதியிருக்கும் இந்த நேரத்தை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா தேசத்து ஜனங்களுக்கும் நாம் நல்ல செய்தியை சொல்ல வேண்டும்.
6. நாம் எப்படி யெகோவாவின் நாளை ‘எப்போதும் மனதில் வைத்திருக்கலாம்’? (2 பேதுரு 3:11, 12)
6 யெகோவாவின் நாளை ‘எப்போதும் மனதில் வைத்திருங்கள்’ என்று பேதுரு சொன்னார். (2 பேதுரு 3:11, 12-ஐ வாசியுங்கள்.) அதை எப்படி செய்யலாம்? முடிந்தால் தினமும் கொஞ்சம் நேரம் கண்ணை மூடி பூஞ்சோலை பூமியில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களை பற்றி யோசித்துப் பாருங்கள். சுத்தமான காற்று உங்கள் முகத்தில் படுகிறது. அதை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். சத்தான சாப்பாடு சாப்பிடுகிறீர்கள். இறந்துபோன உங்க அன்பானவர்கள் மறுபடியும் உயிரோடு வருகிறார்கள்—அதை நீங்கள் பார்க்கிறீர்கள். நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்தவர்களுக்கு, பைபிள் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் எப்படி நிறைவேறியது என்று நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள். இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது யெகோவாவின் நாளுக்காக ஆசையாக காத்திருக்க முடியும். இந்த உலகத்துக்கு சீக்கிரத்தில் முடிவு வரும் என்று சந்தேகமில்லாமல் நம்ப முடியும். எதிர்காலத்தைப் பற்றி ‘முன்கூட்டியே அறிந்திருப்பதால்’ தப்பான கருத்துக்களால் நாம் தடுமாறி போகமாட்டோம்.—2 பே. 3:17.
மனிதனைப் பார்த்து பயப்படாதீர்கள்
7. நமக்கு மனித பயம் வந்தால் என்ன நடக்கும்?
7 யெகோவாவின் நாளை நாம் எப்போதுமே மனதில் வைத்திருப்பதால் நல்ல செய்தியை நிறைய பேருக்கு சொல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கும். ஆனால் சிலநேரம் நாம் அதைப் பற்றி பேசாமல் போய்விடுவோம். ஏன்? ஏனென்றால் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அப்போது ஒரு பயம் வந்துவிடும். பேதுருவுக்கு அந்த பயம் வந்தது. இயேசு இறப்பதற்கு முந்தின ராத்திரி, பேதுரு தன்னை இயேசுவின் சீஷன் என்று சொல்வதற்கே பயந்தார். ‘இயேசுவை எனக்கு தெரியவே தெரியாது’ என்று திரும்பத் திரும்ப சொன்னார். (மத். 26:69-75) இப்படி பயந்துகொண்டிருந்த பேதுரு கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தைரியமாக என்ன சொன்னார் தெரியுமா? “மற்றவர்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறார்களோ அதைப் பார்த்து நீங்களும் பயப்படாதீர்கள், கலக்கம் அடையாதீர்கள்” என்று சொன்னார். (1 பே. 3:14) பேதுருவின் இந்த வார்த்தைகளிலிருந்து நம்மாலும் மனித பயத்தை துரத்தியடிக்க முடியும் என்று தெரிந்துகொள்கிறோம்.
8. நாம் எப்படி மனித பயத்தை துரத்தியடிக்கலாம்? (1 பேதுரு 3:15)
8 நாம் எப்படி மனித பயத்தை துரத்தியடிக்கலாம்? பேதுரு இப்படி சொல்கிறார்: “கிறிஸ்துவை எஜமானாகவும், பரிசுத்தமானவராகவும் உங்கள் இதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள்.” (1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நம் எஜமான் இயேசு கிறிஸ்து இப்போது ராஜாவாக இருக்கிறார், அவருக்கு நிறைய சக்தி இருக்கிறது என்பதை எப்போதும் யோசித்துப் பார்க்க வேண்டும். நல்ல செய்தியை சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தும் உங்களுக்கு பதட்டமாக, பயமாக இருக்கிறது என்றால், உடனே நம் ராஜாவை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் பரலோகத்தில் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். அவரை சுற்றி கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருக்கிறார்கள். இந்தக் காட்சியை அப்படியே உங்கள் கண்முன்னால் கொண்டு வாருங்கள். இயேசுவுக்கு ‘பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது,’ “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும்” அவர் நம் கூடவே இருப்பார் என்பதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (மத். 28:18-20) நம் நம்பிக்கையை பற்றி பேச ‘எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ என்று பேதுரு நம்மை உற்சாகப்படுத்துகிறார். வேலை செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் அல்லது மற்ற சமயங்களில் சாட்சி கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? எப்போது பேசலாம் என்று முன்பே யோசித்து வையுங்கள். என்ன பேசலாம் என்று தயாரித்து வையுங்கள். தைரியத்தை கேட்டு ஜெபம் செய்யுங்கள். மனித பயத்தை தூக்கிப்போட யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புங்கள்.—அப். 4:29.
“ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்”
9. ஒருசமயம் பேதுரு எப்படி அன்பு காட்டாமல் போய்விட்டார்? (படத்தையும் பாருங்கள்.)
9 எப்படி அன்பு காட்டுவது என்று பேதுருவுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் அவர் இருக்கும்போதுதான் இயேசு இப்படி சொல்லியிருந்தார்: “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவா. 13:34) இதெல்லாம் தெரிந்திருந்தும் ஒருசமயம் பேதுரு யூத கிறிஸ்தவர்களைப் பார்த்து பயந்ததால், மற்ற தேசத்து சகோதர சகோதரிகளோடு சேர்ந்து சாப்பிடாமல் இருந்துவிட்டார். பேதுரு அப்படி நடந்துகொண்டது “பாசாங்கு” செய்வதுபோல், வெளிவேஷம் போடுவதுபோல் இருக்கிறது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (கலா. 2:11-14) பவுல் திருத்தினபோது, பேதுரு அதை ஏற்றுக்கொண்டார். அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். பேதுரு அவருடைய இரண்டு கடிதத்திலும், அன்பு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் மட்டும் போதாது. சகோதர சகோதரிகள் மேல் அன்பை காட்ட வேண்டும் என்று திரும்பத் திரும்ப சொன்னார்.
10. “வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தை” எப்போது காட்டுவோம்? விளக்குங்கள். (1 பேதுரு 1:22)
10 சபையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளிடம் “வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தைக்” காட்ட வேண்டும் என்று பேதுரு சொன்னார். (1 பேதுரு 1:22-ஐ வாசியுங்கள்.) சத்தியத்துக்கு கீழ்ப்படியும்போதுதான் இப்படிப்பட்ட அன்பை காட்ட முடியும். “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” என்று அந்த சத்தியம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. (அப். 10:34, 35) சபையில் இருக்கும் ஒருசிலரிடம் மட்டும் அன்பு காட்டிவிட்டு மற்றவர்களிடம் அன்பு காட்டாமல் இருந்தோம் என்றால், இயேசு சொன்ன மாதிரி அன்பு காட்டுகிறோம் என்று சொல்ல முடியாது. உண்மைதான், இயேசுவை மாதிரியே நாமும் ஒருசிலரிடம் ரொம்ப நெருக்கமாக இருப்போம். (யோவா. 13:23; 20:2) அதேநேரம், “சகோதர பாசத்தை” எல்லா சகோதர சகோதரிகளிடமும் காட்ட வேண்டும் என்று பேதுரு நமக்கு ஞாபகப்படுத்துகிறார். நாம் எல்லாரும் ஒரு குடும்பம்போல் பாசமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.—1 பே. 2:17.
11. மனதார ‘ஊக்கமான அன்பைக்’ காட்டுவது என்றால் என்ன?
11 “இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்” என்று பேதுரு நம்மை உற்சாகப்படுத்துகிறார். இங்கே “ஊக்கமாக அன்பு காட்டுங்கள்” என்று சொல்லும்போது, ஒருவர்மேல் மனதார அன்பு காட்டுவது கஷ்டமாக இருந்தாலும் அவர்மேல் அன்பு காட்ட முயற்சி செய்வது என்று அர்த்தம். உதாரணமாக, ஒரு சகோதரர் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் மனதை காயப்படுத்திவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். முதலில் அவரிடம் அன்பு காட்ட வேண்டும் என்று தோன்றாது. அவர் எப்படி நடந்துகொண்டாரோ அப்படித்தான் நானும் இருப்பேன் என்று தோன்றும். ஆனால், பதிலுக்கு பதில் செய்வது யெகோவாவுக்கு சுத்தமாக பிடிக்காது என்ற முக்கியமான பாடத்தை பேதுரு இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டார். (யோவா. 18:10, 11) பேதுரு இப்படி எழுதினார்: “யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது செய்யாதீர்கள், யாராவது அவமானப்படுத்தினால் பதிலுக்கு அவமானப்படுத்தாதீர்கள்; அதற்கு மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள்.” (1 பே. 3:9) நமக்கு ஊக்கமான அன்பிருந்தால் எல்லாரிடமும், நம் மனதை காயப்படுத்தியவரிடமும் அன்பாக, கரிசனையாக நடந்துகொள்வோம்.
12. (அ) ஆழ்ந்த அன்பு இருந்தால் நாம் வேறு எதையும் செய்வோம்? (ஆ) ஒற்றுமை என்ற சொத்தை பாதுகாத்திடுங்கள் என்ற வீடியோவில் பார்த்த மாதிரி நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
12 பேதுரு எழுதின முதல் கடிதத்தில் ‘ஊக்கமான அன்பு’ என்ற வார்த்தைக்கு வேறொரு வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். அதுதான் “ஆழ்ந்த அன்பு.” அந்த அன்பு ஏதோ ஒருசில பாவங்களை மட்டுமல்ல “ஏராளமான பாவங்களை மூடும்.” (1 பே. 4:8) ஒருவேளை, சில வருஷங்களுக்கு முன்பு மன்னிப்பதைப் பற்றி இயேசு சொல்லிக்கொடுத்த பாடம் பேதுருவுக்கு ஞாபகம் வந்திருக்கலாம். அதை மனதில் வைத்து அவர் இப்படி எழுதியிருக்கலாம். சகோதரனை ‘ஏழு தடவை’ மன்னித்துவிட்டால், தாராளமாக மன்னித்துவிட்டதாக அர்த்தம் என்று பேதுரு நினைத்திருந்தார். ஆனால் இயேசு பேதுருவுக்கும் நமக்கும் ஒரு பாடத்தை சொல்லிக்கொடுக்கிறார். “77 தடவை” மன்னிக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்படியென்றால், மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும், அதில் கணக்கு பார்க்க கூடாது என்று இயேசு சொல்கிறார். (மத். 18:21, 22) இயேசு சொன்னதை செய்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? சோர்ந்து போய்விடாதீர்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருந்த எல்லாருக்கும் மன்னிப்பது சிலநேரம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால் அவர்களும் நம்மைப்போல் குறை உள்ளவர்கள்தான். ஆனால், நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களை மன்னிக்க நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய வேண்டும். அவர்களோடு சமாதானமாக முயற்சி செய்ய வேண்டும். c
மூப்பர்களே, யெகோவாவுடைய ஆடுகளை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்
13. சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த நேரத்தை ஒதுக்குவது மூப்பர்களுக்கு ஏன் சவாலாக இருக்கிறது?
13 இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேதுருவிடம், “என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும்” என்று சொன்னார். கண்டிப்பாக, பேதுரு இதை மறந்திருக்கவே மாட்டார். (யோவா. 21:16) நீங்கள் ஒரு மூப்பரா? அப்படியென்றால் இயேசு சொன்ன இந்த ஆலோசனை உங்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த முக்கியமான பொறுப்பை செய்ய நேரத்தை ஒதுக்குவது உங்களுக்கு ஒருவேளை கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், மூப்பர்கள் முதலில் அவர்களுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும். அவர்களுக்கு தேவையானதை கொடுத்து அவர்களை அன்பாக கவனிக்க வேண்டும். யெகோவாவோடு அவர்கள் நெருக்கமாக இருப்பதற்கும் உதவி செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, ஊழிய வேலையை மூப்பர்கள் முன்நின்று செய்ய வேண்டும். கூட்டங்களில், மாநாடுகளில் அவர்களுக்கு நியமிப்பு இருந்தால் அதை நன்றாக தயாரித்து செய்ய வேண்டும். மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவிலும் (HLC) உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான டிபார்ட்மென்டிலும் (LDC) சில மூப்பர்கள் சேவை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கூடுதலாக சில பொறுப்புகள் இருக்கும். நிஜமாகவே மூப்பர்கள் பம்பரமாக சுற்றுகிறார்கள்!
14. மந்தையை மேய்க்க மூப்பர்களை எது தூண்டுகிறது? (1 பேதுரு 5:1-4)
14 “கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்” என்று பேதுரு மற்ற மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். (1 பேதுரு 5:1-4-ஐ வாசியுங்கள்.) ஒரு மூப்பராக, சகோதர சகோதரிகள் மேல் உங்களுக்கு அன்பு இருக்கும். அவர்களை நன்றாக மேய்க்க வேண்டும் என்று நிச்சயமாக நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஆனாலும் சில நேரங்களில் நீங்கள் பிஸியாக, களைப்பாக இருப்பதால் இந்த நியமிப்பை உங்களால் முழுமையாக செய்ய முடியாமல் போகலாம். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? நீங்கள் செய்ய நினைத்தும் அதை செய்ய முடியாமல் போகும்போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். பேதுரு இப்படி எழுதினார்: “ஒருவன் சேவை செய்தால், கடவுள் கொடுக்கிற பலத்தில் சார்ந்திருந்து சேவை செய்ய வேண்டும்.” (1 பே. 4:11) சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. ஒருவேளை அதெல்லாம் இந்த உலகத்தில் முழுமையாக தீராத பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். யாராலும் செய்ய முடியாத உதவியை “முதன்மை மேய்ப்பர்” இயேசு கிறிஸ்துவால், அவர்களுக்கு செய்ய முடியும். அதை அவர் இன்றும் செய்வார், பூஞ்சோலை பூமியிலும் செய்வார். மூப்பர்களே, யெகோவா உங்களிடம் எதிர்பார்ப்பது இதுதான்: சகோதர சகோதரிகளிடம் அன்பாக இருங்கள், அவர்களை பாசமாக கவனித்துக்கொள்ளுங்கள், “மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.”
15. ஒரு மூப்பர் எப்படி மந்தையை நன்றாக கவனித்துக்கொண்டார்? (படத்தையும் பாருங்கள்.)
15 ரொம்ப வருஷமாக மூப்பராக சேவை செய்யும் வில்லியம் என்ற சகோதரருக்கு, மந்தையை மேய்ப்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்திருந்தது. கோவிட்-19 ஆரம்பித்த சமயத்தில், அவரும் அவரோடிருந்த மற்ற மூப்பர்களும் ரொம்ப முக்கியமான ஒரு வேலையை செய்தார்கள். அவர்கள் தொகுதியில் இருந்த ஒவ்வொருவரிடமும் வாராவாரம் பேசிவிடுவார்கள். ஏன் என்று அவரே சொல்கிறார்: “நிறைய சகோதர சகோதரிகள் வீட்டில் தனியாக இருப்பதால் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் தேவை இல்லாததை யோசித்து சோர்ந்துபோவதற்கு வாய்ப்பு இருக்கிறது.” யாராவது கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் எதை நினைத்து கவலைப்படுகிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொள்வதற்கு வில்லியம் அவர்கள் சொல்வதை நன்றாக கவனித்துக் கேட்பார். பிறகு, அவர்களை உற்சாகப்படுத்தும் பிரசுரங்களோ வீடியோக்களோ நம் வெப்சைட்டில் இருக்கிறதா என்று அவர்களுக்காகவே தேடிப் பார்ப்பார். அவர் என்ன சொல்கிறார் என்றால், “எப்போதையும் விட இப்போதுதான் ஆடுகளை மேய்ப்பது ரொம்ப முக்கியம். யெகோவாவைப் பற்றி தெரியாதவர்களுக்கே அவரை பற்றி சொல்லிக்கொடுக்க நாம் அவ்வளவு முயற்சி எடுக்கிறோம். அப்படியென்றால், மேய்ப்பு வேலையை எவ்வளவு அதிகமாக செய்ய வேண்டும்! யெகோவாவின் மந்தையில் இருக்கும் அவருடைய ஆடுகள் தொடர்ந்து சத்தியத்தில் இருக்க உதவுவதற்கும் அதேமாதிரி நாம் முயற்சி செய்ய வேண்டும்.”
யெகோவா உங்கள் பயிற்சியை முடிக்கட்டும்
16. பேதுருவின் கடிதங்களில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எப்படியெல்லாம் கடைப்பிடிக்கலாம்?
16 பேதுரு எழுதின இரண்டு கடிதங்களில் இருந்து ஒருசில பாடங்களைத்தான் இதுவரை நாம் பார்த்தோம். இதைப் படித்த பிறகு நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உதாரணமாக, பூஞ்சோலை பூமியில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி இன்னும் அதிகமாக யோசித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? வேலை செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் அல்லது மற்ற இடங்களில் சாட்சி கொடுப்பதை உங்கள் லட்சியமாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? சகோதர சகோதரிகள் மேல் ஊக்கமான அன்பை இன்னும் அதிகமாக காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மூப்பர்களே, நீங்கள் மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் கடவுளுடைய மந்தையை மேய்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? நாம் எப்படி இருக்கிறோம் என்று நேர்மையாக யோசித்துப் பார்த்தால், எந்தெந்த விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரியவரும். ஆனால் சோர்ந்து போய்விடாதீர்கள்; “நம் எஜமான் கருணையுள்ளவர்.” (1 பே. 2:3) அதனால் நீங்கள் முன்னேற்றம் செய்ய அவர் உங்களுக்கு உதவுவார். பேதுரு இந்த நம்பிக்கையையும் கொடுக்கிறார்: “கடவுள், . . . உங்களுடைய பயிற்சியை முடிப்பார். உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார், உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார்.”—1 பே. 5:10.
17. விடாமல் முயற்சி செய்யும்போதும் யெகோவா கொடுக்கும் பயிற்சியை ஏற்றுக்கொள்ளும்போதும் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?
17 ஒருசமயம் பேதுரு, இயேசு முன்னால் நிற்பதற்கு கூட தனக்கு தகுதி இல்லை என்று நினைத்தார். (லூக். 5:8) ஆனால், யெகோவாவும் இயேசுவும் அவருக்கு அன்பாக உதவி செய்ததால், அவரால் தொடர்ந்து இயேசுவுக்கு உண்மையான சீஷனாக இருக்க முடிந்தது. அதனால், அவருக்கு “நம்முடைய எஜமானும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் முடிவில்லாத அரசாங்கத்துக்குள் போவதற்குத் தாராளமாக அனுமதி” கிடைத்தது. (2 பே. 1:11) இது எவ்வளவு பெரிய பரிசு! நீங்களும் பேதுருவை போல விடாமுயற்சியோடு இருந்தால், யெகோவா கொடுக்கும் பயிற்சியை ஏற்றுக்கொண்டால், என்றென்றும் வாழும் பரிசு உங்களுக்கும் கிடைக்கும். “உங்களுடைய விசுவாசத்தின் பலனாக உங்களுக்கு மீட்பு கிடைக்கும்.”—1 பே. 1:9.
பாட்டு 109 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்
a பேதுருவின் கடிதங்கள், சோதனைகளை சமாளிக்க நமக்கு எப்படி உதவும் என்றும் மேய்ப்பர்களாக மூப்பர்கள் அவர்களுடைய பொறுப்புகளை சரியாக செய்ய எப்படி உதவும் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
b கி.பி. 66-ல் ரோமர்கள் முதல் தடவை எருசலேமை தாக்குவதற்கு முன்பே பேதுரு எழுதின இரண்டு கடிதங்களும் பாலஸ்தீனாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.