படிப்புக் கட்டுரை 38
பாட்டு 25 கடவுளுடைய விசேஷ சொத்து
எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்துகிறீர்களா?
“ஒருவன் அழைத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.”—மத். 24:40.
என்ன கற்றுக்கொள்வோம்?
இயேசு சொன்ன மூன்று உவமைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். உலகத்தின் முடிவு சமயத்தில் நடக்கப்போகிற நியாயத்தீர்ப்போடு அந்த உவமைகள் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் பார்ப்போம்.
1. சீக்கிரத்தில் இயேசு என்ன செய்யப்போகிறார்?
விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கப்போகிற ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். சீக்கிரத்தில், இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் இயேசு நியாயந்தீர்ப்பார். நியாயந்தீர்ப்பதற்கு முன்பு என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதைப் பற்றி அவர் சொன்னார். தன்னுடைய பிரசன்னத்துக்கும் “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும்” ஒரு தீர்க்கதரிசன ‘அடையாளத்தை’ பற்றி சீஷர்களுக்குச் சொன்னார். (மத். 24:3) இந்தத் தீர்க்கதரிசனம், மத்தேயு 24, 25 அதிகாரங்களில் இருக்கிறது. இதே பதிவு மாற்கு 13-வது அதிகாரத்திலும் லூக்கா 21-வது அதிகாரத்திலும் இருக்கிறது.
2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்ப்போம், அது ஏன் உதவியாக இருக்கும்?
2 நாம் தயாராக இருப்பதற்கு இயேசு மூன்று உவமைகள் மூலமாக எச்சரிப்பு கொடுத்தார். அது, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமை, புத்தியுள்ள கன்னிப்பெண்கள் புத்தியில்லாத கன்னிப்பெண்கள் பற்றிய உவமை மற்றும் தாலந்து பற்றிய உவமை. ஒரு நபர் எப்படி நடந்துகொள்கிறாரோ அதைப் பொறுத்துதான் அவர் நியாயந்தீர்க்கப்படுவார் என்பதை ஒவ்வொரு உவமையிலிருந்தும் தெரிந்துகொள்ள முடியும். இந்த உவமைகளைப் பற்றி பார்க்கும்போது அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் அதை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் பார்ப்போம். முதலில், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையைப் பார்க்கலாம்.
செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள்
3. இயேசு எப்போது மக்களை நியாயந்தீர்ப்பார்?
3 செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையில், தான் மக்களை எதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்போகிறார் என்பதை இயேசு சொன்னார். மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை ஆதரித்தார்களா இல்லையா, என்பதைப் பொறுத்து அவர் அவர்களை நியாயந்தீர்ப்பார். (மத். 25:31-46) “மிகுந்த உபத்திரவம்” சமயத்தில், அர்மகெதோனுக்குக் கொஞ்சம் முன்பு இயேசு அதை செய்வார். (மத். 24:21) ஒரு மேய்ப்பர் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து எப்படிப் பிரிப்பாரோ, அதேமாதிரி பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு உண்மையாக ஆதரவு கொடுத்தவர்களை ஆதரவு கொடுக்காதவர்களிடமிருந்து இயேசு பிரிப்பார்.
4. ஏசாயா 11:3, 4 சொல்வதுபோல், இயேசு மக்களை நீதியாக நியாயந்தீர்ப்பார் என்று நாம் ஏன் உறுதியாக சொல்லலாம்? (படத்தையும் பாருங்கள்.)
4 யெகோவாவால் நியமிக்கப்பட்ட நீதிபதியாக இயேசு நீதியோடு தீர்ப்பு கொடுப்பார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. (ஏசாயா 11:3, 4-ஐ வாசியுங்கள்.) மக்கள் நடந்துகொள்கிற விதம், அவர்களுடைய மனப்பான்மை, பேச்சு என எல்லாவற்றையும் இயேசு கவனிக்கிறார்; அபிஷேகம் செய்யப்பட்ட தன்னுடைய சகோதரர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் கவனிக்கிறார். (மத். 12:36, 37; 25:40) அவர்களுக்கும் அவர்கள் செய்கிற வேலைக்கும் யார் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது இயேசுக்கு நன்றாக தெரியும். a செம்மறியாடுகளைப் போன்றவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கான ஒரு முக்கியமான வழி: பிரசங்க வேலையில் உதவுவதுதான்! இப்படி ஆதரிக்கிறவர்கள், ‘நீதிமான்களாக’ நியாயந்தீர்க்கப்படுவார்கள்; பூமியில் ‘முடிவில்லாமல்’ வாழும் வாய்ப்பை பெறுவார்கள். (மத். 25:46, அடிக்குறிப்பு; வெளி. 7:16, 17) கடைசிவரை உண்மையாக இருக்கிறவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! மிகுந்த உபத்திரவம் சமயத்திலும் அதற்குப் பிறகும் உண்மையாக இருக்கிறவர்களுடைய பெயர்கள் “வாழ்வின் புத்தகத்தில்” தொடர்ந்து இருக்கும்.—வெளி. 20:15.
5. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம், அதை இயேசு யாருக்காகச் சொன்னார்?
5 உண்மையுள்ளவர்களாக இருங்கள். செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமை முக்கியமாக பூமியில் வாழ்கிற நம்பிக்கையுள்ளவர்களைப் பற்றிச் சொல்கிறது. அவர்கள் எப்படி உண்மையாக இருப்பதைக் காட்டலாம்? ஊழிய வேலையில் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் காட்டலாம். அதோடு, உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் உண்மையாக இருப்பதைக் காட்டலாம். (மத். 24:45) இந்த உவமையில் இருக்கிற எச்சரிப்பு பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கும் பொருந்தும். எப்படி? அவர்களுடைய நடத்தையையும் மனப்பான்மையையும் பேச்சையும்கூட இயேசு கவனிக்கிறார். அவர்களும் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இயேசு இன்னும் இரண்டு உவமைகளைச் சொன்னார். அதில், அவர்களுக்கென்று குறிப்பாக சில எச்சரிக்கைகள் இருக்கின்றன. அந்த உவமைகளும் மத்தேயு 25-வது அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான், புத்தியுள்ள கன்னிப்பெண்கள் மற்றும் புத்தியில்லாத கன்னிப்பெண்கள் பற்றி இயேசு சொன்ன உவமை. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
புத்தியுள்ள கன்னிப்பெண்கள் மற்றும் புத்தியில்லாத கன்னிப்பெண்கள்
6. ஐந்து கன்னிப்பெண்கள் புத்தியுள்ளவர்களாக இருந்ததை எப்படிக் காட்டினார்கள்? (மத்தேயு 25:6-10)
6 கன்னிப்பெண்கள் பற்றிய உவமையில், மணமகனைப் பார்க்கப்போன பத்து கன்னிப்பெண்களைப் பற்றி இயேசு சொன்னார். (மத். 25:1-4) அவர்கள் எல்லாருமே மணமகனோடு சேர்ந்து கல்யாண விருந்தில் கலந்துகொள்வதற்காகப் போனார்கள். அவர்களில் ஐந்து பேரை “புத்தியுள்ளவர்கள்” என்றும் ஐந்து பேரை “புத்தியில்லாதவர்கள்” என்றும் இயேசு சொன்னார். புத்தியுள்ள கன்னிப்பெண்கள் தயாராகவும் விழிப்பாகவும் இருந்தார்கள். மணமகன் வருவதற்கு ஒருவேளை ரொம்ப நேரம் ஆனாலும், அவருக்காக காத்திருப்பதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தயாராக இருந்தார்கள். ராத்திரியில் வெளிச்சம் தேவைப்படும் என்பதற்காக விளக்குகளையும் கொண்டு வந்திருந்தார்கள். மணமகன் வருவதற்குத் தாமதமானால் என்ன செய்வது என்று யோசித்து, கூடுதலாக கொஞ்சம் எண்ணெயையும் கொண்டுவந்திருந்தார்கள். இப்படி அவர்கள் தயாராக இருந்தார்கள். (மத்தேயு 25:6-10-ஐ வாசியுங்கள்.) மணமகன் வந்தபோது, புத்தியுள்ள கன்னிப்பெண்கள் அவரோடு சேர்ந்து கல்யாண விருந்தில் கலந்துகொள்ளப் போனார்கள். அதேமாதிரி, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் யாரெல்லாம் விழிப்பாகவும் உண்மையாகவும் இருந்து தயாராக இருப்பதை நிரூபிக்கிறார்களோ, அவர்கள் மணமகன், அதாவது இயேசு, வரும் சமயத்தில் அவரோடு சேர்ந்து பரலோக அரசாங்கத்துக்குள் போவார்கள். b (வெளி. 7:1-3) அப்படியென்றால், புத்தியில்லாத ஐந்து கன்னிப்பெண்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
7. புத்தியில்லாத ஐந்து கன்னிப்பெண்களுக்கு என்ன ஆனது, ஏன்?
7 புத்தியில்லாத ஐந்து கன்னிப்பெண்கள் மணமகன் வரும்போது தயாராக இல்லை. அவர்களுடைய விளக்குகள் அணைகிற மாதிரி இருந்தது; ஆனால், அவர்கள் கூடுதலாக எண்ணெய் கொண்டுவரவில்லை. மணமகன் சீக்கிரத்தில் வரப்போகிறார் என்று தெரிந்தபோது, அவர்கள் எண்ணெய் வாங்குவதற்காகப் போக வேண்டியிருந்தது. ஆனால் அதற்குள் மணமகன் வந்துவிட்டார். “தயாராக இருந்த கன்னிப்பெண்கள் அவரோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டுக்குள் போனார்கள், கதவும் மூடப்பட்டது.” (மத். 25:10) பிறகுதான் புத்தியில்லாத கன்னிப்பெண்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் உள்ளே போக கேட்டபோது, மணமகன் அவர்களிடம், “நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டார். (மத். 25:11, 12) மணமகன் வருவதற்கு எவ்வளவு நேரமானாலும் சரி, அவருக்காகக் காத்திருக்கிற மாதிரி அவர்கள் தயாராக வரவில்லை. இதிலிருந்து பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன பாடம்?
8-9. கன்னிப்பெண்கள் பற்றிய உவமையிலிருந்து பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)
8 தயாராகவும் விழிப்பாகவும் இருங்கள். இயேசு இங்கே பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் இரண்டு தொகுதி இருப்பார்கள் என்று சொல்லவில்லை. அதாவது, ஒரு தொகுதி முடிவு வரும்வரை தயாராக இருப்பார்கள் என்றோ மற்றொரு தொகுதி தயாராக இருக்க மாட்டார்கள் என்றோ அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் முடிவுவரை சகித்திருக்க தயாராக இல்லையென்றால் என்ன ஆகும் என்பதைத்தான் இயேசு இந்த உவமையின் மூலம் சொன்னார். அப்படி அவர்கள் தயாராக இல்லையென்றால், அவர்களால் பரலோகத்துக்குப் போக முடியாது. (யோவா. 14:3, 4) அப்படியென்றால், இந்த எச்சரிப்பு எவ்வளவு முக்கியம்! இந்த உவமை மூலம் இயேசு கொடுத்திருக்கிற எச்சரிக்கையை நாம் எல்லாருமே மனதில் வைக்க வேண்டும்; நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி! நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும் தயாராகவும் இருக்க வேண்டும், முடிவுவரை சகித்திருக்க வேண்டும்!—மத். 24:13.
9 கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையைச் சொன்ன பிறகு, தாலந்து பற்றிய உவமையை இயேசு சொன்னார். சுறுசுறுப்பாக வேலை செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை அது காட்டுகிறது.
தாலந்து
10. உண்மையாக இருந்ததை இரண்டு அடிமைகள் எப்படிக் காட்டினார்கள்? (மத்தேயு 25:19-23)
10 தாலந்து பற்றிய உவமையில், எஜமானுக்கு உண்மையாக இருந்த இரண்டு அடிமைகளைப் பற்றியும் உண்மையாக இல்லாத ஒரு அடிமையைப் பற்றியும் இயேசு சொன்னார். (மத். 25:14-18) இரண்டு அடிமைகள், கடினமாக உழைத்து எஜமானுக்கு நிறையப் பணம் சம்பாதித்து கொடுத்தார்கள். இப்படி, உண்மையாக இருந்ததைக் காட்டினார்கள். அந்த எஜமான் வெளியூருக்குப் போவதற்கு முன்பு அவர்களுக்குத் தாலந்தைக் கொடுத்தார். தாலந்து என்பது ஒரு பெரிய தொகையாக இருந்தது. அந்த இரண்டு உண்மையுள்ள அடிமைகளும் கடினமாக உழைத்தார்கள்; எஜமான் கொடுத்துவிட்டு போன பணத்தை ஞானமாகப் பயன்படுத்தினார்கள். அதனால் என்ன பலன் கிடைத்தது? எஜமான் திரும்பி வந்தபோது அவர் கொடுத்த பணத்தைவிட இரண்டு மடங்காக சம்பாதித்திருந்தார்கள். எஜமான் அவர்களைப் பாராட்டினார்; அவர்களும் ‘எஜமானோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.’ (மத்தேயு 25:19-23-ஐ வாசியுங்கள்.) ஆனால், மூன்றாவது அடிமையைப் பற்றி என்ன சொல்லலாம்? எஜமான் கொடுத்த பணத்தை வைத்து அவன் என்ன செய்தான்?
11. ‘சோம்பேறியாக’ இருந்த அடிமைக்கு என்ன ஆனது, ஏன்?
11 மூன்றாவது அடிமைக்கு ஒரு தாலந்து கிடைத்தது; ஆனால் அவன் ‘சோம்பேறியாக’ இருந்தான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தை அவன் நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று எஜமான் நினைத்தார். ஆனால் அவன் அதை மண்ணுக்குள் புதைத்து வைத்தான். எஜமான் திரும்பி வந்தபோது, அந்த ஒரு தாலந்தைத் தவிர கொடுப்பதற்கு வேறு எதுவுமே அவனிடம் இல்லை. அதுமட்டுமல்ல, அந்த அடிமையின் மனப்பான்மையும் சரியாக இல்லை. எஜமானுடைய பணத்தை அதிகமாக்காமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, எஜமானை “கறாரானவர்” என்று சொன்னான். இந்த அடிமையை எஜமான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவனிடம் கொடுத்த தாலந்தை அந்த எஜமான் திரும்ப வாங்கிவிடுகிறார். அவனை வீட்டை விட்டும் துரத்திவிடுகிறார்.—மத். 25:24, 26-30.
12. உண்மையுள்ள இரண்டு அடிமைகள் இன்று யாரைக் குறிக்கிறார்கள்?
12 அந்த இரண்டு உண்மையுள்ள அடிமைகள், உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைக் குறிக்கிறார்கள். இயேசுதான் அந்த எஜமான். இயேசு அவர்களிடம் ‘எஜமானோடு சேர்ந்து . . . சந்தோஷப்படுங்கள்’ என்று சொல்கிறார். முதலாம் உயிர்த்தெழுதல் மூலமாக அவர்கள் பரலோகத்துக்குப் போவார்கள்; இது அவர்களுக்குக் கிடைக்கும் பரிசு! (மத். 25:21, 23; வெளி. 20:5ஆ) அதேசமயத்தில், சோம்பேறி அடிமையின் உதாரணம், பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு எச்சரிப்பாக இருக்கிறது. எப்படி?
13-14. தாலந்து பற்றிய உவமையிலிருந்து பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)
13 சுறுசுறுப்பாக இருங்கள், கடினமாக உழையுங்கள். கன்னிப்பெண்கள் பற்றிய உவமையைப் போலவே இந்த உவமையிலும், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள் என்று இயேசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுடைய ஆர்வம் குறைந்துவிட்டால் என்ன ஆகும் என்பதைத்தான் விளக்கினார். அவர்கள் “அழைக்கப்பட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டும்” இருந்தாலும் கடினமாக உழைக்கவில்லை என்றால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பரிசை இழந்துவிடுவார்கள்; பரலோக அரசாங்கத்துக்குள் போவதற்கு அனுமதி கிடைக்காது.—2 பே. 1:10.
14 கன்னிப்பெண்கள் மற்றும் தாலந்து பற்றிய உவமையிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும், தயாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அதேசமயத்தில், சுறுசுறுப்பாகவும் கடினமாக உழைக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு இன்னொரு எச்சரிப்பையும் இயேசு கொடுத்தார். அது மத்தேயு 24:40, 41-ல் இருக்கிறது. இந்த எச்சரிப்பு, பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கிடைக்கப் போகிற கடைசி நியாயத்தீர்ப்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது.
யார் ‘அழைத்துக்கொள்ளப்படுவார்கள்’?
15-16. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் விழிப்போடு இருப்பது முக்கியம் என்பதை மத்தேயு 24:40, 41 எப்படிக் காட்டுகிறது?
15 இந்த மூன்று உவமைகளையும் சொல்வதற்கு முன்பு பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கிடைக்கப்போகிற கடைசி நியாயத்தீர்ப்பைப் பற்றி இயேசு சொன்னார்; அந்த நியாயத்தீர்ப்பில், யார் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்பது தெரியும். வயலில் வேலை செய்துகொண்டிருக்கிற இரண்டு ஆண்களைப் பற்றியும் மாவு அரைத்துக்கொண்டிருக்கிற இரண்டு பெண்களைப் பற்றியும் அவர் சொன்னார். இந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும், இரண்டு பேரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களில் ‘ஒருவர் அழைத்துக்கொள்ளப்படுவார், மற்றவர் கைவிடப்படுவார்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:40, 41-ஐ வாசியுங்கள்.) இதைச் சொன்னப் பிறகு சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்கள் எஜமான் எந்த நாளில் வருவார் என்பது உங்களுக்குத் தெரியாது.” (மத். 24:42) இதேமாதிரி ஒரு விஷயத்தைத்தான் கன்னிப்பெண்கள் பற்றிய உவமையைச் சொன்னப் பிறகும் சொன்னார். (மத். 25:13) இதிலிருந்து என்ன தெரிகிறது? பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் யார் உண்மையிலேயே அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்களோ... யார் கடைசிவரை உண்மையாக இருக்கிறார்களோ... அவர்களைத்தான் இயேசு பரலோக அரசாங்கத்துக்குள் ‘அழைப்பார்.’—யோவா. 14:3.
16 விழிப்புடன் இருங்கள். பரலோக நம்பிக்கையுள்ள ஒருவர் விழிப்போடு இல்லையென்றால் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு’ அவர் கூட்டிச்சேர்க்கப்பட மாட்டார். (மத். 24:31) இந்த எச்சரிப்பு அவர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் எல்லாருக்குமே பொருந்தும். பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிறவர்களும் இயேசுவின் இந்த எச்சரிப்பைக் கேட்டு, விழிப்போடு இருக்க வேண்டும்; கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும்.
17. நம்முடைய நாளில் யெகோவா ஒருவரை பரலோக நம்பிக்கையுள்ளவராக தேர்ந்தெடுத்தால் அதைப் பற்றி நாம் ஏன் கேள்வி கேட்கத் தேவையில்லை?
17 நமக்கு யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரியும்; அதனால் அவர் நீதியாக நியாயந்தீர்ப்பார் என்று நம்புகிறோம். ஒருவேளை, சமீப வருஷங்களில் ஒருவரை யெகோவா அபிஷேகம் செய்திருந்தால் அதைப் பற்றி நாம் கேள்வி கேட்பதில்லை. c திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்கிறவர்களைப் பற்றி இயேசு சொன்னதை நாம் மனதில் வைத்திருக்கிறோம். (மத். 20:1-16) திராட்சைத் தோட்டத்தில் சிலர் காலையிலிருந்தே வேலை செய்தார்கள். ஆனால், சிலர் கடைசியாக 11-ஆம் மணிநேரத்தில் வேலைக்கு வந்தார்கள். இவர்கள் எல்லாருக்கும் ஒரே கூலிதான் கிடைத்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவர் எப்போது அபிஷேகம் செய்யப்பட்டாலும் சரி, அவர் உண்மையாக இருந்தால் பரலோகத்துக்குப் போவதற்கான பரிசைப் பெறுவார்.
எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்துங்கள்
18-19. நாம் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம்?
18 இதுவரைக்கும் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையிலிருந்து பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிறவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது முக்கியம் என்பதைக் கற்றுக்கொண்டோம்; இப்போதும் சரி, மிகுந்த உபத்திரவம் சமயத்திலும் சரி, அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும். இப்படி உண்மையாக இருக்கிறவர்களை, “முடிவில்லாத வாழ்வை” பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்று இயேசு எதிர்காலத்தில் நியாயந்தீர்ப்பார்.—மத். 25:46, அடிக்குறிப்பு.
19 பரலோக நம்பிக்கையுள்ளவர்களை எச்சரிப்பதற்காக இயேசு சொன்ன இரண்டு உவமைகளையும் பார்த்தோம். புத்தியுள்ள கன்னிப்பெண்கள் மற்றும் புத்தியில்லாத கன்னிப்பெண்கள் பற்றிய உவமையில், ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாக நடந்துகொண்டார்கள். மணமகனுக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருக்க தயாராக வந்திருந்தார்கள், விழிப்போடு இருந்தார்கள். ஆனால் புத்தியில்லாத கன்னிப்பெண்கள் தயாராக வரவில்லை. அதனால் மணமகன் அவர்களைக் கல்யாண விருந்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? இயேசு இந்த உலகத்துக்கு முடிவு கொண்டுவரும்வரை காத்திருக்க தயாராக இருக்க வேண்டும்; அதற்கு எவ்வளவு நாள் ஆனாலும் சரி! தாலந்து பற்றி இயேசு சொன்ன உவமையில், இரண்டு உண்மையுள்ள அடிமைகளைப் பற்றிப் பார்த்தோம். அவர்கள் கடினமாக உழைத்தார்கள், சுறுசுறுப்பாக இருந்தார்கள். அதனால், எஜமான் அவர்களை ஏற்றுக்கொண்டார். ஆனால், சோம்பேறியாக இருந்த அடிமையை எஜமான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலிருந்து என்ன பாடம்? நாம் கடைசிவரை யெகோவாவுடைய சேவையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தொடர்ந்து விழிப்போடு இருப்பது எவ்வளவு முக்கியம் என்றும் பார்த்தோம். அப்படி இருந்தால்தான், இயேசு அவர்களைப் பரலோகத்துக்கு ‘அழைப்பார்.’ பரலோகத்தில் இயேசுவோடு ‘கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு’ பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ரொம்ப ஆசையாகக் காத்திருக்கிறார்கள். அர்மகெதோன் போருக்குப் பிறகு நடக்கப்போகிற ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் அவர்கள் இயேசுவின் மணமகளாக இருப்பார்கள்.—2 தெ. 2:1; வெளி. 19:9.
20. தன்னுடைய எச்சரிப்புகளைக் கேட்டு நடக்கிறவர்களுக்கு யெகோவா என்ன செய்வார்?
20 நியாயத்தீர்ப்பு நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது; ஆனால் நாம் பயப்படத் தேவையில்லை. நாம் கடைசிவரை உண்மையாக இருந்தால், யெகோவா நமக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுப்பார்; அழிவிலிருந்து ‘தப்பிக்கவும்’ “மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும்” அந்தச் சக்தி நமக்கு உதவும். (2 கொ. 4:7; லூக். 21:36) நமக்குப் பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, இயேசு சொன்ன உவமைகளிலிருந்து கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கலாம். அப்படிச் செய்தால், யெகோவாவை நாம் சந்தோஷப்படுத்துவோம். யெகோவா நம்மேல் அளவற்ற கருணை காட்டி நம்முடைய பெயர்களை வாழ்வின் புத்தகத்தில் எழுதுவார்.—தானி. 12:1; வெளி. 3:5.
பாட்டு 26 எனக்காகவே நீங்கள் செய்தீர்கள்
a மே 2024 காவற்கோபுரத்தில், “சீக்கிரத்தில் யெகோவா எப்படி மக்களை நியாயந்தீர்ப்பார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
b கூடுதலாக தெரிந்துகொள்ள, மார்ச் 15, 2015 காவற்கோபுரத்தில் வெளிவந்த “நீங்கள் ‘விழிப்புடன்’ இருப்பீர்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c ஜனவரி 2020 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 29-30 பாராக்கள் 11-14-ஐப் பாருங்கள்.
d பட விளக்கங்கள்: பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சகோதரி, ஊழியத்தில் பார்த்த இளம் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார்.