Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 36

பாட்டு 89 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்

‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருங்கள்’

‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருங்கள்’

‘கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைக்காதீர்கள் . . . அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.’யாக். 1:22.

என்ன கற்றுக்கொள்வோம்?

கடவுளுடைய வார்த்தையைத் தினமும் படிக்க வேண்டும்... அதை யோசித்துப் பார்க்க வேண்டும்... கடைப்பிடிக்க வேண்டும்... என்ற ஆசையை வளர்த்துக்கொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

1-2. கடவுளுடைய மக்கள் ஏன் சந்தோஷமாக இருக்கிறார்கள்? (யாக்கோபு 1:22-25)

 யெகோவாவும் இயேசுவும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சங்கீதம் 119:2-ஐ எழுதிய சங்கீதக்காரர் இப்படிச் சொன்னார்: “[கடவுளுடைய] நினைப்பூட்டுதல்களின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள். அவரை முழு இதயத்தோடு தேடுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.” இயேசுகூட இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”—லூக். 11:28.

2 யெகோவாவுடைய ஊழியர்களாக நாம் எல்லாருமே சந்தோஷமாக இருக்கிறோம். நம்முடைய சந்தோஷத்துக்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய காரணம்: கடவுளுடைய வார்த்தையை நாம் தினமும் படிப்பதும், அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும்தான்.யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள்.

3. கடவுளுடைய வார்த்தையின்படி செய்வதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன?

3 ‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்வதால்’ நமக்கு நிறையப் பலன்கள் கிடைக்கின்றன. அதில் ஒரு முக்கியமான பலன்: நம்மால் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த முடிகிறது. யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறோம் என்ற உணர்வு நமக்கும் சந்தோஷத்தைத் தருகிறது. (பிர. 12:13) அதோடு, கடவுளுடைய வார்த்தையின்படி செய்வதால் நம்முடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கிறது, சகோதர சகோதரிகளிடம் நல்ல நட்பையும் வைத்துக்கொள்ள முடிகிறது. இது உண்மை என்பதை நீங்களே ருசித்திருப்பீர்கள்! அதுமட்டுமல்ல, யெகோவாவை வணங்காத மக்களுக்கு வருகிற நிறையப் பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க முடிகிறது. இதைப் பற்றி தாவீது ராஜாகூட சொன்னார். அவர் எழுதிய ஒரு பாடலில், யெகோவாவின் சட்டங்கள், ஆணைகள், நீதித்தீர்ப்புகள் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில் இப்படி முடித்தார்: “அவற்றின்படி நடக்கும்போது மிகுந்த பலன் கிடைக்கிறது.”—சங். 19:7-11.

4. கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருப்பது ஏன் சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கிறது?

4 உண்மைதான், கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருப்பது எல்லா சமயத்திலும் சுலபமாக இருப்பதில்லை. ஏனென்றால், நாம் எல்லாரும் ரொம்ப பிஸியாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். இருந்தாலும், பைபிளை வாசித்து யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நாம் நேரம் ஒதுக்க வேண்டும். பைபிளைத் தினமும் வாசிப்பதற்கு உதவுகிற சில ஆலோசனைகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். படித்ததை யோசித்துப் பார்ப்பதற்கும் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும் உதவுகிற டிப்ஸையும் பார்க்கலாம்.

நேரத்தை ஒதுக்குங்கள்

5. என்ன மாதிரியான பொறுப்புகள் இருப்பதால் நாம் பிஸியாக இருக்கிறோம்?

5 யெகோவாவுடைய மக்களாக நாம் எல்லாருமே ரொம்ப பிஸியாக இருக்கிறோம். பைபிள் சொல்கிற முக்கியமான பொறுப்புகளைச் செய்வதற்கும் நாம் நிறைய நேரத்தைச் செலவு செய்கிறோம். உதாரணத்துக்கு, நம்மையும் நம் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்காக கடினமாக உழைக்கிறோம். (1 தீ. 5:8) நிறையக் கிறிஸ்தவர்கள், வயதானவர்களை அல்லது உடம்பு முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள். நம்முடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளவும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பொறுப்புகளோடு சேர்த்து, சபையிலும் நிறைய வேலைகளைச் செய்கிறோம். இன்னொரு முக்கியமான பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அதுதான், பிரசங்க வேலை! இவ்வளவு விஷயங்களைச் செய்ய வேண்டியிருப்பதால், பைபிளைத் தினமும் படிப்பதற்கும்... படித்ததை யோசிப்பதற்கும்... அதைக் கடைப்பிடிப்பதற்கும்... எங்கிருந்து நேரத்தைக் கண்டுபிடிப்பது என்று நாம் யோசிக்கலாம்.

6. பைபிளை வாசிப்பதற்கு நீங்கள் எப்படி முன்னுரிமை கொடுக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

6 கிறிஸ்தவர்களாக நாம் செய்ய வேண்டிய ‘மிக முக்கியமான காரியங்களில்’ பைபிள் வாசிப்பதும் ஒன்று. (பிலி. 1:10) அதனால், அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு சந்தோஷமான மனிதர் என்ன செய்வார் என்று முதலாம் சங்கீதம் சொல்கிறது. ‘அவர் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறார். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறார்’ என்று அது சொல்கிறது. (சங். 1:1, 2) இதிலிருந்து என்ன தெரிகிறது? பைபிளை வாசிப்பதற்கென்று நாம் ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். எது சரியான நேரமாக இருக்கும்? உங்களுடைய சூழ்நிலையைப் பொறுத்து நீங்களே ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தவறாமல் வாசிப்பதற்கு ஏற்ற மாதிரி அந்த நேரம் இருக்க வேண்டும், அதுதான் முக்கியம்! விக்டர் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “காலையில் பைபிள் படிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் காலையில் சீக்கிரமாக எழுந்துகொள்ளும் ஒரு ஆள் கிடையாது. இருந்தாலும், அப்படி எழுந்து படிக்கும்போது என்னால் கவனம் சிதறாமல் படிக்க முடிகிறது. படிப்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவும் முடிகிறது.” ஒருவேளை, உங்களுக்கும் காலையில் எழுந்து படிப்பது ஒத்துவருமா என்று யோசித்துப் பாருங்கள். இல்லையென்றால், எந்த நேரம் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று யோசித்து முடிவு செய்யுங்கள்.

பைபிளைத் தவறாமல் படிப்பதற்கு எந்த நேரம் உங்களுக்கு வசதியாக இருக்கும்? (பாரா 6)


யோசித்துப் பாருங்கள்

7-8. பைபிளை வேக வேகமாகப் படித்தால் முழுமையாக நன்மையடைவோமா? உதாரணத்தோடு விளக்குங்கள்.

7 சிலசமயத்தில், நாம் நிறைய விஷயங்களைப் படித்துக்கொண்டே போவோம். ஆனால், எதுவுமே மனதில் பதிந்திருக்காது. கொஞ்ச நேரத்தில், ‘என்ன படித்தேன் என்று ஞாபகமே இல்லையே!’ என்று யோசித்திருக்கிறீர்களா? சொல்லப்போனால், நம் எல்லாருக்குமே இந்த மாதிரி நடந்திருக்கும். பைபிள் வாசிக்கும்போதுகூட இப்படி நடந்திருக்கும். ஏன் இப்படி நடக்கிறது? ஒருவேளை, ஒவ்வொரு நாளும் இவ்வளவு அதிகாரங்களைப் படிக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளை நாம் வைத்திருந்திருக்கலாம். குறிக்கோளை வைத்து அதை அடைய நாம் முயற்சி எடுக்க வேண்டும்தான். (1 கொ. 9:26) ஆனால், குறிக்கோளை அடைய வேண்டுமென்பதற்காக, வெறுமனே பைபிளை வாசித்துக்கொண்டே போனால் நமக்கு முழு பிரயோஜனம் கிடைக்காது.

8 இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். செடிகள் உயிர் வாழ்வதற்கு மழை அவசியம். ஆனால், மழை கொட்டோ-கொட்டென்று கொட்டினால் என்ன ஆகும்? மண்ணில் இருக்கிற ஈரப்பதம் அதிகமாகி நிலம் ‘சொத-சொத’ என்று ஆகிவிடும். அவ்வளவு தண்ணீர் செடிகளுக்குப் பிரயோஜனமாக இருக்காது. சொல்லப்போனால், அவற்றின் வளர்ச்சியைக்கூட அது பாதிக்கும். ஆனால், மிதமான ஒரு வேகத்தில் மழை பெய்தால், மழை நீரை நிலம் உறிஞ்சிகொள்ளும். செடிக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும்; அவை நன்றாக வளரும். அதேமாதிரி, நாம் பைபிளை வேக வேகமாகப் படித்துக்கொண்டே போனால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. படிக்கிற விஷயங்கள் நம் மனதில் பதியாது... அதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது... வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முடியாது.—யாக். 1:24.

மழை நீரை உறிஞ்சுவதற்கு நிலத்துக்கு நேரம் தேவை. அதேமாதிரி, பைபிளைப் படித்து புரிந்துகொள்வதற்கும் அதைக் கடைப்பிடிப்பதற்கும் நமக்கு நேரம் தேவை (பாரா 8)


9. பைபிளை வேக வேகமாக வாசிக்கிற பழக்கம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

9 பைபிளை வேக வேகமாக வாசிக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், வாசிக்கும்போது கொஞ்சம் நிதானமாக வாசிக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக வாசித்தால், வாசிக்க வாசிக்கவே படிக்கிற விஷயங்களை யோசித்துப் பார்க்க முடியும். அல்லது, படித்து முடித்த உடனேகூட அதை யோசித்துப் பார்க்க முடியும். இப்படிச் செய்வது அவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம் கிடையாது; படிக்கிற நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக்கினாலே போதும்! அல்லது, படிப்பதற்காக இப்போது ஒதுக்கியிருக்கிற நேரத்தில் சில வசனங்களை மட்டும் படித்துவிட்டு, மீதி நேரத்தை யோசித்துப் பார்ப்பதற்கு வைத்துக்கொள்ளுங்கள். முன்பு பார்த்த விக்டர் இப்படிச் சொல்கிறார்: “நான் பைபிள் வாசிக்கும்போது கொஞ்சம்தான் வாசிப்பேன். ஒருவேளை, ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம்தான் வாசிப்பேன். காலையிலேயே சீக்கிரமாக எழுந்து வாசிப்பதால், படித்த விஷயத்தை அந்த நாள் முழுவதும் யோசித்துப் பார்க்க முடிகிறது.” எவ்வளவு படிக்க வேண்டும் என்பதை உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி முடிவு பண்ணுங்கள். ஆனால், படிக்கிற விஷயங்களை யோசித்துப் பார்க்க முடிகிற ஒரு வேகத்தில் படியுங்கள்.—சங். 119:97; “ யோசித்துப் பார்க்க சில கேள்விகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

10. படிக்கிற விஷயங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17, 18)

10 நீங்கள் பைபிளை எப்போது வாசித்தாலும் சரி, எவ்வளவு நேரம் வாசித்தாலும் சரி, படிக்கிற விஷயங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசித்துப் பார்ப்பது முக்கியம். படிக்கும்போது இந்தக் கேள்வியைக்கூட கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் படிக்கிற இந்த விஷயத்தை இன்றைக்கு அல்லது இன்னொரு சமயத்தில் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?’ ஒருவேளை, 1 தெசலோனிக்கேயர் 5:17, 18-ஐப் படிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். (வாசியுங்கள்.) இந்த இரண்டு வசனங்களைப் படித்த பிறகு, கொஞ்சம் நிறுத்தி, நீங்கள் எவ்வளவு அடிக்கடி ஜெபம் செய்கிறீர்கள்... எவ்வளவு உருக்கமாக செய்கிறீர்கள்... என்பதை யோசியுங்கள். எந்தெந்த விஷயங்களுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லலாம் என்பதைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, குறிப்பாக மூன்று விஷயங்களுக்கு நன்றி சொல்லலாம் என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படி, ஒருசில நிமிஷங்கள் யோசித்துப் பார்த்தாலே கடவுளுடைய வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டுமல்ல அதைச் செய்கிறவர்களாகவும் இருப்பீர்கள். பைபிளைப் படிக்கும்போது, இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்! நாட்கள் போகப்போக யெகோவாவுக்குப் பிடித்த ஒரு நபராக ஆகிவிடுவீர்கள். ஆனால், படிக்கப் படிக்க உழைக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதுபோல் தோன்றினால் என்ன செய்வது?

அடைய முடிந்த குறிக்கோள்களை வையுங்கள்

11. பைபிள் படிக்கும்போது எதை நினைத்து நீங்கள் ஒருவேளை சோர்ந்துபோகலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

11 பைபிளைப் படித்து யோசித்துப் பார்க்கும்போது, முன்னேறுவதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதை நினைத்து நீங்கள் சோர்ந்துபோகலாம். இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: இன்றைக்கு நீங்கள் பைபிள் வாசிக்கிறீர்கள். அதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று ஒரு ஆலோசனை இருக்கிறது. (யாக். 2:1-8) அதைப் படித்ததும், ‘ஆமாம், மற்றவர்களை நான் இன்னும் நன்றாக நடத்த வேண்டும்’ என்று உங்களுக்குத் தோன்றுகிறது. அதனால், சில மாற்றங்கள் செய்ய முடிவெடுக்கிறீர்கள். அது ஒரு நல்ல விஷயம்! அடுத்த நாள் வாசிக்கும்போது, பேச்சைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்ற ஆலோசனையைப் பார்க்கிறீர்கள். (யாக். 3:1-12) நீங்கள் பேசுகிற விதம் சிலசமயங்களில் அன்பில்லாமலும் நோகடிக்கிற மாதிரியும் இருப்பதை உணர்கிறீர்கள். அதனால், பேசுகிற விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறீர்கள். அடுத்த நாள் பைபிள் வாசிக்கும்போது, உலக நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதைப் பற்றிப் படிக்கிறீர்கள். (யாக். 4:4-12) இப்போது, உங்களுடைய பொழுதுபோக்கைப் பற்றி யோசித்துப் பார்க்கிறீர்கள். அதிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. நான்காவது நாள் படிக்கும்போது, கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் ஏற்கெனவே நிறைய இருக்கிறதே என்று நினைத்து உங்களுக்குத் தலையே சுற்றலாம்!

12. பைபிள் வாசிக்கும்போது நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதுபோல் தோன்றினால், நீங்கள் ஏன் சோர்ந்துபோக வேண்டியதில்லை? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

12 மாற்றங்கள் செய்ய நிறைய விஷயங்கள் இருந்தால், அதை நினைத்து சோர்ந்துபோகாதீர்கள். நீங்கள் அப்படி யோசிப்பதே உங்களுக்கு நல்ல மனசு இருப்பதைக் காட்டுகிறது. மனத்தாழ்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிற ஒரு நபர்தான், பைபிள் படிக்கும்போது என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று யோசிப்பார். a அதனால், நீங்கள் யோசிப்பது நல்லதுதான். அதேசமயத்தில், “புதிய சுபாவத்தை” போட்டுக்கொள்வது தொடர்ச்சியாக நடக்கிற ஒரு விஷயம் என்பதை மறந்துவிடாதீர்கள். (கொலோ. 3:10) அப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக தொடர்ந்து இருப்பதற்கு உங்களுக்கு எது உதவும்?

13. அடைய முடிந்த குறிக்கோள்களை எப்படி வைக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

13 நீங்கள் கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களையும் ஒரே சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அடைய முடிந்த சில குறிக்கோள்களை வையுங்கள். (நீதி. 11:2) ஒருவேளை, நீங்கள் இப்படிக்கூட செய்துபார்க்கலாம்: நீங்கள் எவற்றிலெல்லாம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை ஒரு லிஸ்ட் போடுங்கள். அதில், முதலில் செய்ய வேண்டிய ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுங்கள். மீதி விஷயங்களை நாட்கள் போகப்போக செய்யுங்கள். அப்படியென்றால், முதலில் எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

பைபிளில் படித்த எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். அடைய முடிந்த குறிக்கோள்களை வையுங்கள், ஓரிரண்டு விஷயங்களை முதலில் செய்துபாருங்கள் (பாராக்கள் 13-14)


14. நீங்கள் முதலில் எந்தக் குறிக்கோளில் உழைக்கலாம்?

14 ஒருவேளை, உங்களால் சுலபமாக அடைய முடிந்த ஒரு குறிக்கோளை வைத்து அதற்காக உழைக்க ஆரம்பிக்கலாம். இல்லையென்றால், எந்த விஷயத்தில் மாற்றம் செய்வது ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறீர்களோ அதில் உழைக்க ஆரம்பிக்கலாம். உங்கள் குறிக்கோள் என்ன என்பதை முடிவு பண்ணப் பிறகு, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியை அல்லது யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் குறிக்கோளைப் பற்றி ஜெபம் செய்யுங்கள். குறிக்கோளை எட்டிப்பிடிக்க தேவையான “ஆர்வத்தையும் வல்லமையையும்” தரச்சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். (பிலி. 2:13) அதற்குப் பிறகு, ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட விஷயங்களைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். முதல் குறிக்கோளை அடைவதில் முன்னேறுவதைப் பார்க்கும்போது, அடுத்த குறிக்கோளை அடைவதற்கும் உழைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். சொல்லப்போனால், ஒரு விஷயத்தில் முன்னேறினால் அடுத்தடுத்த விஷயங்களைச் செய்வது சுலபமாக இருக்கும்.

கடவுளுடைய வார்த்தை ‘உங்களுக்குள் செயல்படட்டும்’

15. பைபிள் வாசிக்கிற நிறையப் பேருக்கும் யெகோவாவின் மக்களுக்கும் என்ன வித்தியாசம்? (1 தெசலோனிக்கேயர் 2:13)

15 சிலர் பைபிளைப் பல தடவை படித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையிலேயே பைபிளை நம்புகிறார்களா? அதற்கு ஏற்ற மாதிரி தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நினைக்கிறார்களா? நிறையப் பேர் அப்படி இல்லை! ஆனால், யெகோவாவின் மக்கள் அப்படிக் கிடையாது. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் மாதிரியே, பைபிள் “உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்” என்று நாம் நம்புகிறோம். அது நமக்குள் செயல்படுவதற்கும் அனுமதிக்கிறோம்.1 தெசலோனிக்கேயர் 2:13-ஐ வாசியுங்கள்.

16. கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருக்க எது நமக்கு உதவும்?

16 பைபிளை வாசிப்பதும், அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் எல்லா சமயத்திலும் சுலபம் இல்லைதான். ஏனென்றால், வாசிப்பதற்கு நேரம் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். அல்லது, வேக வேகமாக வாசிக்கிற பழக்கம் இருப்பதால் வாசிக்கிற விஷயங்கள் மனதில் பதியாமல் போய்விடலாம். அல்லது, செய்ய வேண்டிய முன்னேற்றங்களை நினைத்து நாம் சோர்ந்துவிடலாம். எந்த மாதிரி சவால்கள் உங்களுக்கு இருந்தாலும் சரி, யெகோவாவின் உதவியோடு உங்களால் கண்டிப்பாக அதைத் தாண்டி வர முடியும். யெகோவாவுடைய உதவியை ஏற்றுக்கொள்வதற்கும், படிக்கிற விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்வதற்கும் உறுதியாக இருங்கள். கடவுளுடைய வார்த்தையை அதிகமாகப் படிக்கும்போதும் அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போதும் நாம் சந்தோஷமாக இருப்போம்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை!—யாக். 1:25.

பாட்டு 94 கடவுளுடைய வார்த்தைக்கு நன்றி

a jw.org வெப்சைட்டில் இருக்கிற உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... பைபிளை வாசிப்பது பற்றி... என்ற வீடியோவைப் பாருங்கள்.