Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 39

பாட்டு 125 இரக்கம் காட்டுவோம்!

கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்

கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்

“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”அப். 20:35.

என்ன கற்றுக்கொள்வோம்?

கொடுப்பதால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிப்பதற்கும், அந்தச் சந்தோஷத்தை இன்னும் அதிகமாக்குவதற்கும் என்ன செய்யலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. கொடுப்பதில் சந்தோஷம் கிடைக்கிற மாதிரி யெகோவா நம்மை ஏன் படைத்திருக்கிறார்?

 வாங்குவதைவிட கொடுக்கும்போதுதான் நமக்கு நிறையச் சந்தோஷம் கிடைக்கிறது. (அப். 20:35) சொல்லப்போனால், மனிதர்களை யெகோவா அப்படித்தான் படைத்திருக்கிறார். அதற்காக, வாங்குவதால் சந்தோஷமே கிடைக்காது என்று அர்த்தமா? இல்லை. நமக்கு யாராவது ஏதாவது கொடுக்கும்போது நமக்குச் சந்தோஷமாக இருப்பது உண்மைதான். ஆனால், நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நமக்கு இன்னும் அதிக சந்தோஷம் கிடைக்கிறது. யெகோவா நம்மை இப்படிப் படைத்திருப்பது நம்முடைய நன்மைக்காகத்தான்.

2 அவர் நம்மை இப்படிப் படைத்திருப்பதால் நம்மை நாமே சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு வாய்ப்புகளைத் தேடும்போது நம்முடைய சந்தோஷத்தை அதிகமாக்கலாம். எவ்வளவு அருமையான விதத்தில் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார்!—சங். 139:14.

3. யெகோவாவை “சந்தோஷமுள்ள கடவுள்” என்று ஏன் சொல்லலாம்?

3 கொடுப்பதில் சந்தோஷம் கிடைக்கும் என்று பைபிள் சொல்வது ரொம்பவே உண்மை. அதனால்தான், யெகோவா ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருக்கிறார். (1 தீ. 1:11) முதன்முதலில் மற்றவர்களுக்குக் கொடுத்ததும் அவர்தான், கொடுப்பதில் கொடைவள்ளலும் அவர்தான். அப்போஸ்தலன் பவுல் சொன்ன மாதிரி யெகோவாவால்தான் “நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (அப். 17:28) “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” யெகோவாவிடமிருந்துதான் வருகிறது.—யாக். 1:17.

4. நம்முடைய சந்தோஷத்தை இன்னும் அதிகமாக்க என்ன செய்யலாம்?

4 கொடுப்பதால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லாருடைய ஆசை! அப்படிச் செய்வதற்கு யெகோவா மாதிரியே நாம் தாராள குணத்தைக் காட்ட வேண்டும். (எபே. 5:1) அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம். அதோடு, நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்கள் அதற்கு நன்றி காட்டாத மாதிரி தோன்றினால் என்ன செய்யலாம் என்றும் பார்ப்போம். இதையெல்லாம் தெரிந்துகொள்வது, கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கவும் அதை இன்னும் அதிகமாக்கவும் நமக்கு உதவும்.

யெகோவா மாதிரியே தாராளமாகக் கொடுங்கள்

5. யெகோவா நமக்கு என்னவெல்லாம் கொடுக்கிறார்?

5 யெகோவா எப்படியெல்லாம் தாராளமாகக் கொடுக்கிறார்? சில உதாரணங்களைப் பார்க்கலாம். வாழ்வதற்குத் தேவையானவற்றை யெகோவா கொடுக்கிறார். எல்லா சமயத்திலும் நம்முடைய வாழ்க்கை சொகுசாக இருக்கும்படி யெகோவா செய்வதில்லை. ஆனால், நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்கிறார். சாப்பாடு, துணிமணி, இருக்க இடம் போன்றவற்றை கொடுக்கிறார். (சங். 4:8; மத். 6:31-33; 1 தீ. 6:6-8) இவற்றையெல்லாம் யெகோவா வெறுமனே கடமைக்காக செய்யவில்லை. அப்படியென்றால் ஏன் இதையெல்லாம் செய்கிறார்?

6. மத்தேயு 6:25, 26-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

6 யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார். அதனால்தான் நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார். இதைப் பற்றி மத்தேயு 6:25, 26-ல் இயேசு என்ன சொன்னார் என்று பாருங்கள். (வாசியுங்கள்.) படைப்புகளிலிருந்து சில உதாரணங்களை வைத்து இயேசு பேசுகிறார். பறவைகளைப் பற்றி சொல்லும்போது, “அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?” என்று இயேசு கேட்டார். இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? பறவைகளையும் மிருகங்களையுமே யெகோவா கவனித்துக்கொள்கிறார் என்றால் நம்மைக் கவனிக்காமல் போய்விடுவாரா? கண்டிப்பாகக் கவனித்துக்கொள்வார்! மற்ற எல்லா படைப்புகளையும்விட யெகோவா தன்னுடைய மக்களை உயர்வாகப் பார்க்கிறார். ஒரு அன்பான அப்பா தன்னுடைய குடும்பத்தை எப்படிப் பார்த்துக்கொள்வாரோ அதேமாதிரி யெகோவா நம்மைப் பார்த்துக்கொள்கிறார்.—சங். 145:16; மத். 6:32.

7. யெகோவா மாதிரியே தாராளமாக மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு ஒரு வழி என்ன? (படத்தையும் பாருங்கள்.)

7 நமக்கும் மக்கள்மேல் அன்பு இருக்கிறது. அதனால், யெகோவா மாதிரியே அவர்களுக்குப் பொருள் உதவிகள் செய்யலாம். உங்களுக்குத் தெரிந்த சகோதர சகோதரிகள் யாருக்காவது சாப்பாடோ துணிமணியோ தேவைப்படுகிறதா? ஒருவேளை அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கு யெகோவா உங்களைப் பயன்படுத்தலாம். யெகோவாவுடைய மக்கள், பேரழிவு சமயங்களில் தாராள குணத்தைக் காட்டுவதில் பெயர்பெற்றவர்கள். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கஷ்டத்தில் இருந்தவர்களுக்குச் சகோதர சகோதரிகள் சாப்பாடு, துணிமணி, தேவையான மற்ற விஷயங்களை கொடுத்து உதவினார்கள். நிறையப் பேர் உலகளாவிய வேலைக்காக நன்கொடையும் கொடுத்தார்கள். இவையெல்லாமே உலகம் முழுவதும் நடந்த நிவாரண வேலைக்கு ரொம்ப உதவியாக இருந்தது. எபிரெயர் 13:16-ல் சொல்லியிருப்பதுபோல் அவர்கள் செய்திருக்கிறார்கள். அது இப்படிச் சொல்கிறது: “நல்லது செய்வதற்கும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்கும் மறந்துவிடாதீர்கள்; இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்.”

யெகோவா மாதிரியே நம்மால் தாராளமாகக் கொடுக்க முடியும் (பாரா 7)


8. யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து நமக்கு எப்படி உதவுகிறார்? (பிலிப்பியர் 2:13)

8 யெகோவா சக்தி கொடுக்கிறார். யெகோவாவுக்கு எல்லையில்லாத சக்தி இருக்கிறது. தன்னை உண்மையாக வணங்குகிறவர்களுக்கு அதைக் கொடுப்பதில் அவர் சந்தோஷப்படுகிறார். (பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.) சோதனையைச் சமாளிப்பதற்கோ கஷ்டத்தைச் சகிப்பதற்கோ நீங்கள் சக்தி கேட்டு ஜெபம் செய்திருக்கிறீர்களா? அல்லது, ‘இந்த நாளை ஓட்டுவதற்குச் சக்தி கொடுங்கள்’ என்றுகூட நீங்கள் ஜெபம் செய்திருக்கலாம். அந்த ஜெபத்துக்குப் பதில் கிடைத்தபோது பவுல் சொன்ன மாதிரியே உங்களுக்கு இருந்திருக்கும். “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று அவர் சொன்னார். —பிலி. 4:13.

9. நம்முடைய சக்தியைப் பயன்படுத்தி நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம்? (படத்தையும் பாருங்கள்.)

9 யெகோவா மாதிரி நமக்கு எல்லையில்லாத சக்தி இல்லை. அதனால், அவரை மாதிரியே நம்மால் மற்றவர்களுக்குச் சக்தி கொடுக்க முடியாது. ஆனால், நமக்கு இருக்கிற சக்தியையும் பலத்தையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் யெகோவா மாதிரியே நம்மால் நடந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, வயதான அல்லது உடம்பு முடியாத சகோதர சகோதரிகளுக்காக நாம் கடைக்குப் போய் பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது, வீட்டில் ஏதாவது வேலை செய்து கொடுக்கலாம். நம்முடைய சூழ்நிலை அனுமதித்தால், ராஜ்ய மன்றத்தைச் சுத்தப்படுத்துகிற... பராமரிக்கிற... வேலைகளைச் செய்யலாம். நமக்கு இருக்கிற சக்தியை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் நம் சகோதர சகோதரிகளுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும்.

நம்முடைய சக்தியையும் பலத்தையும் மற்றவர்களுக்காகப் பயன்படுத்தலாம் (பாரா 9)


10. வார்த்தைகளுக்கு இருக்கிற சக்தியை வைத்து நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம்?

10 வார்த்தைகளுக்கும் சக்தி இருப்பதை மறந்துவிடாதீர்கள். ஒருவர் செய்த நல்ல விஷயத்துக்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆறுதல் தேவைப்படுகிற யாராவது உங்கள் ஞாபகத்துக்கு வருகிறார்களா? அப்படியென்றால், நீங்களாகவே அவரிடம் போய்ப் பேசுங்கள். ஒருவேளை, நேரிலோ ஃபோனிலோ பேசலாம், அல்லது ஒரு கார்டோ ஈ-மெயிலோ மெசேஜோ அனுப்பலாம். நிறையத் தயாரித்து அழகான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேச வேண்டும் என்றில்லை. நீங்கள் மனசார சொல்கிற சில வார்த்தைகளே போதும். தொடர்ந்து உண்மையாக இருப்பதற்கும், அவர்களுடைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும் அது அவர்களுக்குச் சக்தியைக் கொடுக்கும்.—நீதி. 12:25; எபே. 4:29.

11. யெகோவா எப்படி நமக்கு ஞானத்தைக் கொடுக்கிறார்?

11 யெகோவா ஞானத்தைக் கொடுக்கிறார். அப்போஸ்தலன் யாக்கோபு இப்படி எழுதினார்: “உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் குறைசொல்ல மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்.” (யாக். 1:5, அடிக்குறிப்பு.) இந்த வார்த்தைகள் காட்டுவதுபோல் யெகோவா தன்னுடைய ஞானத்தைத் தனக்கென்றே வைத்துக்கொள்வதில்லை; அதை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கிறார். அப்படிக் கொடுக்கும்போது, அவர் நம்மை ‘திட்டுவது இல்லை,’ அதாவது ‘குறைசொல்வதில்லை.’ வழிநடத்துதல் கேட்டு அவரிடம் போகும்போது அவர் நம்மைச் சங்கடப்பட வைப்பதில்லை. சொல்லப்போனால், ஞானத்தைக் கேட்கச் சொல்லி அவரே சொல்லியிருக்கிறார்.—நீதி. 2:1-6.

12. நம்மிடம் இருக்கிற ஞானத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

12 நம்மிடம் இருக்கிற ஞானத்தை நாம் எப்படி யெகோவா மாதிரியே மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்? (சங். 32:8) கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க நமக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, புதிதாக ஊழியத்துக்கு வருகிறவர்களுக்கு நாம் பயிற்சி கொடுக்கிறோம். மூப்பர்கள், ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் நியமிப்புகளைச் செய்ய பொறுமையோடு சொல்லிக்கொடுக்கிறார்கள். அமைப்பின் கட்டுமான வேலையிலும் பராமரிப்பு வேலையிலும் அனுபவம் இருக்கிறவர்கள் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்.

13. பயிற்சி கொடுக்கும் விஷயத்தில் நாம் எப்படி யெகோவா மாதிரியே நடந்துகொள்ளலாம்?

13 மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிற விஷயத்தில் யெகோவா மாதிரியே நாம் நடந்துகொள்ளலாம். நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி யெகோவா தன்னுடைய ஞானத்தைத் தாராளமாகக் கொடுக்கிறார். நாமும் அதேமாதிரி நம்மிடம் இருக்கிற அறிவையும் அனுபவத்தையும் தாராளமாகக் கொடுக்கிறோம். ‘மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்தால், அவர்கள் நம்மைவிட பெரிய ஆளாக ஆகி நம்முடைய இடத்தைப் பிடித்துக்கொள்வார்கள்’ என்று நாம் பயப்படுவதில்லை. அதேசமயத்தில், ‘எனக்கு யாரும் சொல்லித்தரவில்லை. நான் எதற்கு மற்றவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும்? அவர்களாகவே கற்றுக்கொள்ளட்டும்!’ என்றும் யோசிப்பதில்லை. யெகோவாவுடைய மக்களுக்கு இந்த மாதிரி எண்ணம் என்றைக்குமே வந்துவிடக் கூடாது. சொல்லப்போனால், மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக நம்மிடம் இருக்கிற அறிவை மட்டுமல்ல, ‘நம்மையே கொடுக்கிறோம்.’ (1 தெ. 2:8, பொ.மொ.) காலப்போக்கில், அவர்களும் “மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க . . . போதிய தகுதி பெறுவார்கள்” என்று நம்புகிறோம். (2 தீ. 2:1, 2) நம்மிடம் இருக்கிற ஞானத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நாம் எல்லாருமே ஞானமுள்ளவர்களாக இருப்போம்; கொடுப்பதால் வருகிற சந்தோஷத்தை எல்லாருமே அனுபவிப்போம்.

மற்றவர்கள் நன்றி காட்டவில்லை என்றால்...

14. நாம் தாராளமாகக் கொடுக்கும்போது பொதுவாக நிறையப் பேர் என்ன செய்வார்கள்?

14 நாம் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கும்போது, குறிப்பாக நம் சகோதர சகோதரிகளுக்குக் கொடுக்கும்போது, அவர்கள் நமக்கு நன்றி சொல்வார்கள். ஒருவேளை, அவர்கள் அதை ஒரு கார்டில் எழுதி கொடுக்கலாம். அல்லது, வேறு விதங்களில் நன்றி சொல்லலாம். (கொலோ. 3:15) இப்படி அவர்கள் செய்யும்போது நமக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

15. சிலர் நன்றி காட்டவில்லை என்றாலும் நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

15 சிலசமயத்தில், சிலர் நமக்கு நன்றி காட்டாமல் போய்விடலாம். அவர்களுக்காக நம்முடைய நேரம், சக்தி, பொருள் என எல்லாவற்றையும் கொடுத்திருப்போம். ஆனால், அவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட நினைத்திருக்க மாட்டார்கள். இப்படி நடந்தால் நம்முடைய சந்தோஷம் போய்விடலாம், எரிச்சலாகக்கூட இருக்கலாம். அப்போது என்ன செய்வது? இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம், அப்போஸ்தலர் 20:35-ஐ ஞாபகம் வைத்துக்கொள்ளலாம். நம்முடைய சந்தோஷம் கொடுப்பதில்தான் இருக்கிறது; மற்றவர்கள் நன்றி காட்டுகிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்து இல்லை. மற்றவர்கள் நன்றி காட்டவில்லை என்றாலும் கொடுப்பதால் கிடைக்கிற சந்தோஷத்தை நம்மால் அனுபவிக்க முடியும். எப்படி என்று சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

16. கொடுக்கும்போது நாம் எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

16 யெகோவாவை மாதிரியே நடந்துகொள்ளுங்கள். மக்கள் நன்றி காட்டுகிறார்களோ இல்லையோ, யெகோவா அவர்களுக்கு நல்லதைச் செய்கிறார். (மத். 5:43-48) அதேமாதிரி நாமும், “எதையும் எதிர்பார்க்காமல்” மற்றவர்களுக்குக் கொடுத்தால் நமக்கு “மிகப் பெரிய பலன் கிடைக்கும்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (லூக். 6:35) “எதையும்” என்று சொல்லும்போது, அதில் நன்றி காட்டுவதும் உட்பட்டிருக்கிறது. மக்கள் நமக்கு நன்றி காட்டினாலும் சரி, காட்டவில்லை என்றாலும் சரி, நாம் அவர்களுக்குக் கொடுக்கும்போது, அதுவும் சந்தோஷமாகக் கொடுக்கும்போது, யெகோவா நமக்குத் திருப்பிக் கொடுப்பார்; நம்மைப் பல மடங்கு ஆசீர்வதிப்பார்.—நீதி. 19:17; 2 கொ. 9:7.

17. கொடுக்கிற விஷயத்தில் நாம் எப்படிச் சரியான மனப்பான்மையோடு இருக்கலாம்? (லூக்கா 14:12-14)

17 சரியான மனப்பான்மையோடு கொடுப்பதற்கு உதவுகிற ஒரு நல்ல நியமம் லூக்கா 14:12-14-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.) திருப்பி செய்ய முடிந்தவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதும், அவர்களை உபசரிப்பதும் தவறில்லைதான். ஆனால், திருப்பி ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு நாம் கொடுக்கிறோமா? எல்லா சமயத்திலும் இல்லையென்றாலும் சிலசமயத்தில் அப்படிச் செய்கிறோமா? அப்படியென்றால், இயேசு சொன்னதைச் செய்ய நாம் முயற்சி எடுக்கலாம். நமக்குத் திருப்பி செய்ய முடியாதவர்களை உபசரிக்கலாம். அது நமக்குச் சந்தோஷத்தைத் தரும். ஏனென்றால், நாம் யெகோவா மாதிரி நடந்துகொள்கிறோம். இப்படிச் செய்ய பழகிக்கொண்டால், மற்றவர்கள் நமக்கு நன்றி காட்டவில்லை என்றாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்.

18. நாம் எப்படி யோசிக்கக் கூடாது, ஏன்?

18 மற்றவர்களுடைய உள்நோக்கத்தைச் சந்தேகப்படாதீர்கள். (1 கொ. 13:7) மற்றவர்கள் நன்றி காட்டாத மாதிரி தோன்றினால் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அவர்களுக்கு உண்மையிலேயே நன்றி இல்லையா? அல்லது, நன்றி சொல்ல மறந்துவிட்டார்களா?’ அவர்கள் நன்றி காட்டாமல் இருக்க வேறு காரணங்களும் இருக்கலாம். சிலருக்கு மனதில் நன்றியுணர்வு இருக்கும், ஆனால் அதை எப்படி வெளியே காட்டுவது என்று தெரியாமல் இருக்கலாம். இன்னும் சிலருக்கு, மற்றவர்களிடமிருந்து உதவியை ஏற்றுக்கொள்வது சங்கடமாக இருக்கலாம். ஏனென்றால், ஒருகாலத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு நிறையக் கொடுத்திருப்பார்கள். எப்படியிருந்தாலும் சரி, நம் சகோதர சகோதரிகள்மேல் நமக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால் அவர்களைப் பற்றி நாம் தவறாக நினைக்க மாட்டோம், தொடர்ந்து சந்தோஷமாகக் கொடுப்போம்.—எபே. 4:2.

19-20. கொடுப்பதால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க எந்த குணம் நமக்குத் தேவை? (படத்தையும் பாருங்கள்.)

19 பொறுமையாக இருங்கள். தாராளமாகக் கொடுப்பதைப் பற்றி சாலொமோன் ராஜா இப்படி எழுதினார்: “உன் ரொட்டியைத் தண்ணீரின் மேல் தூக்கிப் போடு, நிறைய நாட்களுக்குப் பிறகு அது மறுபடியும் உனக்குக் கிடைக்கும்.” (பிர. 11:1) இந்த வார்த்தைகள் காட்டுகிற மாதிரி, சிலர் “நிறைய நாட்களுக்குப் பிறகு” நமக்கு நன்றி காட்டலாம். இது எவ்வளவு உண்மை என்பதற்கு ஒரு அனுபவத்தை இப்போது பார்க்கலாம்.

20 நிறைய வருஷங்களுக்கு முன்பு, ஒரு வட்டாரக் கண்காணியின் மனைவி புதிதாக ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரிக்கு கார்டு எழுதிக் கொடுத்தார். தொடர்ந்து உண்மையாக இருப்பதற்கு அவரை உற்சாகப்படுத்தினார். கிட்டத்தட்ட எட்டு வருஷங்களுக்குப் பிறகு அந்தச் சகோதரி பதில் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்: “இதை நான் உங்களிடம் சொன்னதில்லைதான். ஆனால் இவ்வளவு வருஷமாக யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நீங்கள் எழுதிய கார்டு எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. . . . அதில் எழுதியிருந்த விஷயம் எனக்கு ஆறுதலாக இருந்தது. குறிப்பாக, நீங்கள் எழுதியிருந்த வசனம் என் மனதைத் தொட்டது. அதை நான் மறக்கவே இல்லை.” a தனக்கு வந்த சில பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிவிட்டு அவர் இப்படி எழுதியிருந்தார்: “‘எனக்கு எதுவுமே வேண்டாம்... யெகோவாவும் வேண்டாம்... எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கேயாவது போய்விடலாம்’ என்று சிலசமயம் தோன்றும். அப்போதெல்லாம் நீங்கள் எழுதிய அந்த வசனம்தான் என் கண்முன் வரும். யெகோவாவை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள அது எனக்கு உதவியது. . . . இந்த எட்டு வருஷங்களில், நீங்கள் எழுதிய கடிதமும் அந்த வசனமும் என்னைப் பலப்படுத்திய அளவுக்கு வேறு எதுவும் என்னைப் பலப்படுத்தவில்லை.” அந்த வட்டாரக் கண்காணியின் மனைவிக்கு “நிறைய நாட்களுக்குப் பிறகு” பதில் கிடைத்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! இதேமாதிரி நமக்கும் நடக்கலாம்.

ஒருவருக்கு செய்த நல்ல விஷயத்துக்காக அவர் ரொம்ப நாள் கழித்து நமக்கு நன்றி சொல்லலாம் (பாரா 20) b


21. யெகோவாவை மாதிரியே தாராளமாகக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

21 ஆரம்பத்தில் பார்த்த மாதிரி, வாங்குவதைவிட கொடுப்பதில் நிறையச் சந்தோஷம் கிடைக்கிற மாதிரிதான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். நம் சகோதர சகோதரிகளுக்கு ஏதாவது உதவி செய்யும்போது, நமக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் நமக்கு நன்றி காட்டும்போதும் சந்தோஷமாக இருக்கிறது. அதேசமயத்தில், மற்றவர்கள் நமக்கு நன்றி காட்டுகிறார்களோ இல்லையோ, நாம் சரியானதைத்தான் செய்திருக்கிறோம் என்ற திருப்தி நமக்குக் கிடைக்கிறது. இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடாதீர்கள். நாம் எவ்வளவு கொடுத்தாலும் சரி, “யெகோவாவினால் அதைவிட அதிகமாக [நமக்கு] கொடுக்க முடியும்.” (2 நா. 25:9) உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட யெகோவா நமக்குக் கொடுப்பதுதான் ரொம்ப அதிகம். யெகோவாவே நமக்குத் திருப்பிக் கொடுக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! அதனால், கொடைவள்ளலான நம் அப்பா யெகோவா மாதிரியே நாம் எப்போதும் கொடுக்கலாம்!

பாட்டு 17 ‘நீங்கள் சொன்னதை செய்வேன்!’

a அந்தச் சகோதரிக்கு அவர் எழுதிக் கொடுத்த வசனம், 2 யோவான் 8. அது இப்படிச் சொல்கிறது: “நாங்கள் பாடுபட்டு உண்டாக்கியவற்றை நீங்கள் இழந்துவிடாமல் முழு பலனைப் பெற்றுக்கொள்வதற்கு விழிப்புடன் இருங்கள்.”

b பட விளக்கம்: ஒரு வட்டாரக் கண்காணியின் மனைவி ஒரு சகோதரியை உற்சாகப்படுத்துவதற்காக கார்டு எழுதுவது நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. நிறைய வருஷங்களுக்குப் பிறகு, அவருக்கு நன்றி சொல்லி பதில் கடிதம் வருகிறது.