படிக்க டிப்ஸ்
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு படியுங்கள்
படிப்பதற்கு முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ளப் போகிறேன்?’ ஏதோவொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும் எண்ணத்தோடு நாம் படிக்க ஆரம்பித்திருக்கலாம்; ஆனால், யெகோவா நமக்கு வேறொரு விஷயத்தைக் கற்றுக்கொடுக்கலாம். அதனால், படிக்கும்போது யெகோவா எனக்கு என்ன கற்றுக்கொடுக்க நினைக்கிறார் என்ற எண்ணத்தோடு படிக்க வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்?
ஞானத்துக்காக ஜெபம் செய்யுங்கள். நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று யெகோவா இப்போது எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவ சொல்லி ஜெபம் செய்யுங்கள். (யாக். 1:5) ஏற்கெனவே தெரிந்திருக்கிற விஷயங்களே போதும் என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள்.—நீதி. 3:5, 6.
கடவுளுடைய வார்த்தை செயல்படுவதற்கு இடங்கொடுங்கள். “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது.” (எபி. 4:12) அதனால், ஒவ்வொரு தடவை பைபிளைப் படிக்கும்போதும், அது நமக்குப் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும், வித்தியாசமான விதங்களில் உதவும். இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
யெகோவாவின் மேஜையில் இருக்கிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். “பிரமாதமான [ஆன்மீக] உணவு வகைகளை” யெகோவா நமக்குக் கொடுக்கிறார். (ஏசா. 25:6) சில ‘உணவு வகைகள்’ பிடிக்காததுபோல் தோன்றினாலும் அதைச் சாப்பிடாமல் இருந்துவிடாதீர்கள். இப்படிச் செய்வது நன்மைகளை மட்டுமல்ல சந்தோஷத்தையும் தரும்!