படிப்புக் கட்டுரை 37
பாட்டு 118 எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்
முடிவுவரை சகித்திருக்க உதவும் ஒரு கடிதம்!
‘ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.’—எபி. 3:14.
என்ன கற்றுக்கொள்வோம்?
எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்திலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம். முடிவுவரை உண்மையாகச் சகித்திருக்க அது நமக்கு உதவும்.
1-2. (அ) அப்போஸ்தலன் பவுல் எபிரெயர்களுக்குக் கடிதம் எழுதியபோது யூதேயாவில் என்ன சூழ்நிலை இருந்தது? (ஆ) அந்தக் கடிதம் சரியான சமயத்தில் கிடைத்தது என்று ஏன் சொல்லலாம்?
இயேசுவின் மரணத்துக்குப் பிறகு எருசலேமிலும் யூதேயாவிலும் வாழ்ந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு நிறையக் கஷ்டங்கள் வந்தன. கிறிஸ்தவ சபை உருவாகி கொஞ்ச நாளிலேயே அவர்களுக்குப் பயங்கரமான துன்புறுத்தல் வந்தது. (அப். 8:1) கிட்டத்தட்ட 20 வருஷங்கள் கழித்து, கடுமையான பொருளாதார நெருக்கடியையும் சந்தித்தார்கள்; ஒருவேளை, அந்தத் தேசத்தில் வந்த பஞ்சம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். (அப். 11:27-30) ஆனால், கிட்டத்தட்ட கி.பி. 61-ல், அந்தக் கிறிஸ்தவர்கள் ஒரு சமாதானக் காலத்தை அனுபவித்தார்கள். அந்தச் சமயத்தில், அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அது உண்மையிலேயே சரியான சமயத்தில் அவர்களுக்குக் கிடைத்தது என்று சொல்லலாம். ஏனென்றால், ரொம்பச் சீக்கிரத்தில் அந்தச் சமாதானக் காலம் மாறவிருந்தது.
2 இயேசு சொல்லியிருந்த எருசலேமின் அழிவு ரொம்பச் சீக்கிரத்தில் வரவிருந்தது. (லூக். 21:20) அந்தக் கஷ்டமான காலப்பகுதியைச் சமாளிக்க பவுல் கொடுத்த ஆலோசனை அந்தக் கிறிஸ்தவர்களுக்கு உதவியிருக்கும். உண்மைதான், அந்த அழிவு எப்போது வரும் என்று பவுலுக்கோ அந்தக் கிறிஸ்தவர்களுக்கோ தெரிந்திருக்காது. இருந்தாலும், மீதி இருந்த நாட்களைப் பயன்படுத்தி விசுவாசம், சகிப்புத்தன்மை மாதிரியான குணங்களை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கும்; அழிவைச் சந்திக்க தயாராகவும் முடிந்திருக்கும்.—எபி. 10:25; 12:1, 2.
3. எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் இன்று நமக்கு ஏன் பிரயோஜனமாக இருக்கும்?
3 எபிரெய கிறிஸ்தவர்கள் சந்தித்ததைவிட ரொம்பப் பயங்கரமான ஒரு உபத்திரவத்தை நாம் எல்லாருமே சந்திக்கப் போகிறோம். (மத். 24:21; வெளி. 16:14, 16) அதனால், அந்தக் கிறிஸ்தவர்களுக்கு யெகோவா கொடுத்த ஆலோசனைகளை இப்போது நாம் பார்க்கலாம். அது நமக்கும் பிரயோஜனமாக இருக்கும்.
‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்’
4. யூத கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன சவால்கள் இருந்தன? (படத்தையும் பாருங்கள்.)
4 யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு நிறையச் சவால்கள் இருந்தன. ஒருகாலத்தில் யூதர்கள்தான் யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக இருந்தார்கள். ரொம்பக் காலமாக எருசலேம் ஒரு முக்கியமான இடமாக இருந்தது. அங்கிருந்துதான் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்த ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள். எருசலேம் ஆலயம் உண்மை வணக்கத்தின் மையமாக இருந்தது. உண்மையுள்ள யூதர்கள் மோசேயின் திருச்சட்டத்தின்படியும் யூத மதத் தலைவர்கள் சொல்லிக்கொடுத்தபடியும் செய்தார்கள். உணவு பழக்கவழக்கங்கள்... விருத்தசேதனம்... மற்ற தேசத்து மக்களோடு பழகுவது... பற்றியெல்லாம் சட்டங்கள் இருந்தன. ஆனால், இயேசுவின் மரணத்துக்குப் பிறகு, யூதர்கள் கொடுத்த பலியை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருகாலத்தில் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக்கொண்டிருந்த யூத கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்திருக்கும். (எபி. 10:1, 4, 10) அப்போஸ்தலன் பேதுரு மாதிரியான சில முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுக்குக்கூட, தங்களையே மாற்றிக்கொள்வது சிலசமயங்களில் கஷ்டமாக இருந்தது. (அப். 10:9-14; கலா. 2:11-14) இந்தப் புதிய நம்பிக்கையால், யூத மதத் தலைவர்கள் கிறிஸ்தவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தினார்கள்.
5. சத்தியத்தின் பக்கம் உறுதியாக இருப்பது எபிரெய கிறிஸ்தவர்களுக்கு ஏன் சவாலாக இருந்திருக்கும்?
5 எபிரெய கிறிஸ்தவர்களுக்கு யூத மதத் தலைவர்களிடமிருந்தும் சபைக்குள் இருந்த சிலரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. யூத மதத் தலைவர்கள் அவர்களை விசுவாசதுரோகிகள் மாதிரி பார்த்தார்கள். சபைக்குள் இருந்த சிலர், திருச்சட்டத்தில் இருந்த சில விஷயங்களைக் கிறிஸ்தவர்களாக ஆன பிறகும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஒருவேளை, துன்புறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம். இதுவும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்குச் சவாலாக இருந்தது. (கலா. 6:12) இந்தச் சூழ்நிலையில், சத்தியத்தின் பக்கம் உறுதியாக நிற்க அவர்களுக்கு எது உதவியிருக்கும்?
6. எபிரெய கிறிஸ்தவர்களை என்ன செய்யச் சொல்லி பவுல் உற்சாகப்படுத்தினார்? (எபிரெயர் 5:14–6:2)
6 கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படிக்கச் சொல்லி எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்னார். (எபிரெயர் 5:14–6:2-ஐ வாசியுங்கள்.) எபிரெய வேதாகமத்தைப் பயன்படுத்தி, யூத வழிபாட்டு முறையைவிட கிறிஸ்தவர்கள் வழிபடுகிற முறைதான் உயர்ந்தது என்பதை பவுல் அவர்களுக்குப் புரிய வைத்தார். a சத்தியத்தைப் பற்றிய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் இன்னும் அதிகமாக்கச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்படிச் செய்தால், அவர்களால் பொய் போதனைகளைக் கண்டுபிடிக்கவும் அதை ஒதுக்கித்தள்ளவும் முடியும்.
7. இன்று நாம் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறோம்?
7 எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இருந்த அதே சூழ்நிலை இன்று நமக்கும் இருக்கிறது. யெகோவாவுடைய நீதியான சட்டங்களுக்கு எதிரான போதனைகளும் தகவல்களும் நம்மைச் சுற்றியும் இருக்கின்றன. செக்ஸ் மற்றும் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பைபிள் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவதால் நம்மைப் பற்றி எதிரிகள் தவறாகப் பேசுகிறார்கள். நாம் அன்பில்லாதவர்கள், மற்றவர்களுடைய விருப்பங்களை மதிக்காதவர்கள் என்றெல்லாம் குறை சொல்கிறார்கள். இன்று உலகத்தில் இருக்கிறவர்களுடைய மனப்பான்மையும் கருத்துக்களும் யெகோவாவுக்கு நேர் எதிராகத்தான் இருக்கின்றன. சொல்லப்போனால், அது இன்னும் மோசமாகிக்கொண்டே போகிறது. (நீதி. 17:15) அதனால், இந்த உலகத்தின் தவறான கருத்துக்களை அடையாளம் கண்டுபிடித்து அதை ஒதுக்கித்தள்ளுவது ரொம்ப ரொம்ப முக்கியம். நம்மைச் சோர்ந்துபோக வைப்பதற்கும் வழிதவறிப் போக வைப்பதற்கும் எதிரிகளுக்கு நாம் இடம் கொடுத்துவிடவே கூடாது.—எபி. 13:9.
8. நாம் எப்படி முதிர்ச்சியை நோக்கி முன்னேறலாம்?
8 பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு முதிர்ச்சியை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற ஆலோசனையைக் கொடுத்தார். இது நமக்கும் பொருந்தும். அப்படிச் செய்வதற்கு, நாம் பைபிளை ஆழமாகப் படிக்க வேண்டும். யெகோவா யோசிக்கிற மாதிரி யோசிக்கப் பழக வேண்டும். இதை ஞானஸ்நானம் எடுத்த பிறகும் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நாம் எவ்வளவு காலம் சத்தியத்தில் இருந்திருந்தாலும் சரி, தவறாமல் பைபிளைப் படிக்க வேண்டும். (சங். 1:2) அப்படிச் செய்தால், விசுவாசம் என்ற குணத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இந்தக் குணம் கிறிஸ்தவர்களுக்குத் தேவை என்று எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் சொல்லியிருந்தார்.—எபி. 11:1, 6.
‘விசுவாசத்தோடு இருந்து உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’
9. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு ஏன் பலமான விசுவாசம் தேவைப்பட்டது?
9 யூதேயாவில் இருந்தவர்களுக்குப் பயங்கரமான ஒரு கஷ்ட காலம் வரவிருந்தது. அதைச் சமாளிக்க அவர்களுக்குப் பலமான விசுவாசம் தேவை. (எபி. 10:37-39) எருசலேமைப் படைகள் சுற்றிவளைப்பதைப் பார்க்கும்போது மலைகளுக்கு ஓடிப்போக வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொல்லியிருந்தார். இந்த ஆலோசனையை எல்லா கிறிஸ்தவர்களுமே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது; அவர்கள் நகரத்தில் வாழ்ந்தாலும் சரி, நகரத்துக்கு வெளியே வாழ்ந்தாலும் சரி! (லூக். 21:20-24) அந்தக் காலத்தில், பொதுவாக ஒரு படை தாக்க வரும்போது, எருசலேம் மாதிரி மதில் சூழ்ந்த ஒரு நகரத்துக்குள் இருப்பதைத்தான் மக்கள் பாதுகாப்பாக நினைப்பார்கள். ஆனால், நகரத்தை விட்டு மலைக்கு ஓட இயேசு சொன்னார். அன்று இருந்தவர்களுக்கு இந்த ஆலோசனை ஒருவேளை நியாயமாகப்பட்டிருக்காது. ஆனாலும் அதற்குக் கீழ்ப்படிய அவர்களுக்குப் பலமான விசுவாசம் தேவைப்பட்டிருக்கும்.
10. பலமான விசுவாசம் இருந்தால் கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்? (எபிரெயர் 13:17)
10 சபையை முன்நின்று வழிநடத்துவதற்கு இயேசு யாரையெல்லாம் பயன்படுத்தினாரோ அவர்களையும் எபிரெய கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டியிருந்தது. ஏனென்றால், ஊரை விட்டு எப்போது போக வேண்டும்... எப்படிப் போக வேண்டும்... போன்ற குறிப்பிட்ட ஆலோசனைகளை அவர்கள்தான் சபையில் இருந்தவர்களுக்குக் கொடுத்திருப்பார்கள். (எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.) எபிரெயர் 13:17-ல், “கீழ்ப்படிந்து” நடங்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தையின் அர்த்தம், ஆலோசனை கொடுப்பவரை முழுமையாக நம்புவதால் அவருக்குக் கீழ்ப்படிவதைக் குறிக்கிறது. ஒருவருக்கு அதிகாரம் இருக்கிறதே என்பதற்காக அவருக்குக் கீழ்ப்படிவதை அது அர்த்தப்படுத்தவில்லை. எபிரெய கிறிஸ்தவர்கள், உபத்திரவக் காலம் வருவதற்கு முன்பே சபையை வழிநடத்துகிறவர்கள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. சமாதானக் காலத்திலேயே கீழ்ப்படியப் பழகினால்தான், கஷ்டமான சமயத்தில் கீழ்ப்படிவது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும்.
11. இன்று கிறிஸ்தவர்களுக்கு ஏன் பலமான விசுவாசம் தேவைப்படுகிறது?
11 எபிரெய கிறிஸ்தவர்கள் மாதிரியே நமக்கும் பலமான விசுவாசம் தேவை. ஏனென்றால், இந்த உலகத்துக்கு சீக்கிரம் முடிவு வரப்போகிறது என்ற செய்தியை நாம் சொல்லும்போது, மக்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. சொல்லப்போனால், நம்மைக் கேலி கிண்டல்கூட செய்கிறார்கள். (2 பே. 3:3, 4) அதுமட்டுமல்ல, மிகுந்த உபத்திரவத்தைப் பற்றிய சில விவரங்கள்தான் பைபிளில் இருக்கின்றன; நிறைய விஷயங்கள் நமக்கு இன்னும் தெரியாது. அதனால், யெகோவா சரியான நேரத்தில் இந்த உலகத்துக்கு முடிவு கொண்டு வருவார் என்ற பலமான விசுவாசம் நமக்குத் தேவை. அந்தச் சமயத்தில், யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்வார் என்ற விசுவாசமும் நமக்குத் தேவை.—ஆப. 2:3.
12. மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பதற்கு எது நமக்கு உதவும்?
12 இன்று, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்திதான் யெகோவா நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார் என்பதில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும். (மத். 24:45) ரோமப் படை எருசலேமைச் சுற்றிவளைத்தபோது உயிர் தப்புவதற்குத் தேவையான ஆலோசனைகள் எபிரெய கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்திருக்கும். அதேமாதிரி, மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது நமக்கும் குறிப்பிட்ட சில ஆலோசனைகள் கிடைக்கலாம். அதனால், நம்மை வழிநடத்துகிற சகோதரர்கள் கொடுக்கிற ஆலோசனைகள்மேல் இப்போதே நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவது இன்றைக்கே கஷ்டமாக இருந்தால், மிகுந்த உபத்திரவம் சமயத்தில் கீழ்ப்படிவது இன்னும் கஷ்டமாக இருக்கும்.
13. எபிரெயர் 13:5-ல் சொல்லியிருக்கிற ஆலோசனை ஏன் ரொம்பத் தேவையானது?
13 எப்போது வேண்டுமானாலும் ஊரை விட்டுப் போக வேண்டியிருக்கும் என்பது எபிரெய கிறிஸ்தவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர்கள் “பண ஆசையில்லாமல்” வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. (எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.) அவர்களில் சிலர் பஞ்சத்தாலும், வறுமையாலும் ரொம்பவே கஷ்டப்பட்டிருந்தார்கள். (எபி. 10:32-34) ஒருகாலத்தில் நல்ல செய்திக்காக கஷ்டங்களை அவர்கள் சகித்துக்கொண்டார்கள். ஆனால் நாட்கள் போகப்போக, அவர்களில் சிலர் பணம் பாதுகாப்பு தரும் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கலாம். உண்மை என்னவென்றால், எவ்வளவு பணம் இருந்தாலும் எருசலேமுடைய அழிவிலிருந்து அது அவர்களைக் காப்பாற்றாது. (யாக். 5:3) பணம் பொருளை நேசிக்கிற ஒருவருக்கு, வீட்டையும் சொத்துப்பத்தையும் விட்டுவிட்டு ஓடுவது ரொம்பக் கஷ்டமாக இருந்திருக்கும்.
14. நமக்குப் பலமான விசுவாசம் இருந்தால் பொருள் வசதிகள் சம்பந்தமாக இப்போதே எப்படிப்பட்ட முடிவுகள் எடுப்போம்?
14 இந்த உலகத்துக்கு ரொம்பச் சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது என்ற பலமான விசுவாசம் இருந்தால், பொருள் செல்வங்கள்மேல் ஆசையை வளர்த்துக்கொள்ள மாட்டோம். சொல்லப்போனால், மிகுந்த உபத்திரவம் சமயத்தில், பணம் நம் உயிரைப் பாதுகாக்காது. “யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் . . . வெள்ளியோ தங்கமோ [தங்களை] காப்பாற்றாது” என்று உணர்ந்துகொண்டு, மக்கள் “தங்களுடைய வெள்ளியை வீதிகளில் வீசிவிடுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எசே. 7:19) அதனால், பணத்தைச் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பதற்குப் பதிலாக நாம் எளிமையாக வாழ வேண்டும். அதேசமயத்தில், நம்மையும் நம் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். நம்மிடம் இருக்கிற பொருள் செல்வங்களைப் பராமரிப்பதிலேயே நம் நேரமெல்லாம் போய்விடாத மாதிரியும் பார்த்துக்கொள்ள வேண்டும்; அவற்றின்மேல் அதிக ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. (மத். 6:19, 24) ஏனென்றால், இந்த உலகத்துக்கு முடிவு வருகிற சமயத்தில் பொருள் செல்வங்களும் மற்ற விஷயங்களும் நம்முடைய விசுவாசத்துக்குச் சோதனையாக வந்து நிற்கலாம்.
‘நீங்கள் சகித்திருப்பது அவசியம்’
15. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவைப்பட்டது?
15 யூதேயாவில் நிலைமை மோசம் ஆக ஆக எபிரெய கிறிஸ்தவர்கள் தொடர்ந்து சகித்திருக்க வேண்டியிருந்தது. (எபி. 10:36) அவர்களில் சிலர், ஏற்கெனவே பயங்கரமான துன்புறுத்தலைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், நிறையப் பேர் சமாதானமான சமயத்தில்தான் கிறிஸ்தவர்களாக மாறியிருந்தார்கள்; அவர்கள் அந்தளவுக்குத் துன்புறுத்தலை அனுபவித்திருக்க மாட்டார்கள். அதனால்தான் பவுல் அவர்களுக்கு இந்தக் கடிதத்தில், துன்புறுத்தலைச் சந்திக்கவும் இயேசு மாதிரி மரணம்வரை உண்மையாக இருக்கவும் தயாராக சொன்னார். (எபி. 12:4) கிறிஸ்தவ மதம் வளர வளர, மதவெறி பிடித்த யூதர்கள் வெறித்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு, பவுல் எருசலேமுக்கு வந்தபோது யூதர்கள் பயங்கரமாகப் பிரச்சினை கிளப்பிவிட்டார்கள். 40-க்கும் அதிகமான யூதர்கள், “‘பவுலைக் கொலை செய்யும்வரை சாப்பிடவோ குடிக்கவோ மாட்டோம்’ என்று சொல்லி” சபதம் எடுத்திருந்தார்கள். (அப். 22:22; 23:12-14) இவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கூட்டங்களுக்கு வர வேண்டியிருந்தது, ஊழியம் செய்ய வேண்டியிருந்தது, தங்களுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
16. பிரச்சினைகளைச் சரியான விதத்தில் பார்க்க எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் எப்படி உதவும்? (எபிரெயர் 12:7)
16 எதிர்ப்பைச் சகித்திருக்க எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்? எதிர்ப்பைச் சரியான விதத்தில் பார்ப்பது உதவும். இது பவுலுக்குத் தெரிந்திருந்ததால்தான், கஷ்டங்களை அனுமதிப்பதன் மூலம் கடவுள் பயிற்சி கொடுக்கிறார் என்று விளக்கினார். (எபிரெயர் 12:7-ஐ வாசியுங்கள்.) இந்தப் பயிற்சி கிடைக்கும்போது, ஒருவரால் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும். கஷ்டங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டு இல்லாமல், சகித்திருப்பதால் கிடைக்கிற பலன்களைப் பற்றி யோசித்தால், சகித்திருப்பது அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும்.—எபி. 12:11.
17. துன்புறுத்தலைச் சகித்திருப்பதைப் பற்றி பவுல் என்ன கற்றுக்கொண்டார்?
17 கஷ்டங்களைத் தைரியத்தோடு சகித்திருக்க வேண்டும் என்று பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். இதைச் சொல்வதற்கு பவுல் சரியான நபர் என்று சொல்லலாம்! ஏனென்றால், அவரே முன்பு கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியிருந்ததால், எதிரிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, கிறிஸ்தவராக மாறிய பிறகு அவரும் ஏகப்பட்ட துன்புறுத்தல்களைச் சந்தித்திருக்கிறார். (2 கொ. 11:23-25) அதனால், சகித்திருப்பதற்கு என்ன தேவை என்பதை அவரால் உறுதியாகச் சொல்ல முடிந்தது. கஷ்டங்களைச் சகித்திருக்கும்போது, தன்னையே நம்பி இல்லாமல் யெகோவாவை நம்பி இருக்க வேண்டும் என்று பவுல் தன்னுடைய அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார். அதனால்தான், “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன்” என்று அவரால் தைரியமாக சொல்ல முடிந்தது.—எபி. 13:6.
18. எதிர்காலத்தில் நமக்கு என்ன நடக்கலாம், அதனால் இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
18 நம்முடைய சகோதரர்கள் சிலர் இப்போதே துன்புறுத்தலைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக ஜெபம் செய்வதன் மூலமும் தேவைப்படுகிற உதவிகளைச் செய்வதன் மூலமும் நாம் அவர்களுக்குத் துணையாக இருக்க முடியும். (எபி. 10:33) அதேசமயத்தில், “கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:12) அதனால், எதிர்காலத்தைச் சந்திக்க நாம் எல்லாருமே தயாராக வேண்டும். யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும். எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதைச் சகித்துக்கொள்ள அவர் நமக்கு உதவுவார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தன்னை வணங்குகிற எல்லாருக்குமே சரியான சமயத்தில் யெகோவா விடுதலை கொடுப்பார்.—2 தெ. 1:7, 8.
19. மிகுந்த உபத்திரவத்துக்குத் தயாராக நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)
19 எபிரெயர்களுக்கு பவுல் எழுதிய கடிதம் அவர்களுக்குக் கண்டிப்பாக உதவியிருக்கும். அவர்கள் சந்திக்கவிருந்த கஷ்டங்களைச் சமாளிக்க அது அவர்களைத் தயார்படுத்தியிருக்கும். கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படித்து புரிந்துகொள்ளும்படி பவுல் அவர்களிடம் சொன்னார். அப்படிச் செய்யும்போது, விசுவாசத்தைக் கெடுத்துப்போடுகிற போதனைகளைக் கண்டுபிடிக்கவும் அதை ஒதுக்கித்தள்ளவும் அவர்களால் முடியும். அவர்கள் தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பவுல் சொன்னார். அப்படிச் செய்தால், இயேசு கொடுத்த ஆலோசனைக்கு அவர்களால் உடனடியாக கீழ்ப்படிய முடியும்; இயேசுவால் நியமிக்கப்பட்டவர்கள் கொடுத்த ஆலோசனைக்கும் கீழ்ப்படிய முடியும். சோதனைகளைச் சரியான விதத்தில் பார்த்தால், அதாவது கடவுள் கொடுக்கிற பயிற்சியாகப் பார்த்தால், பிரச்சினைகளைச் சகித்திருக்க முடியும் என்றும் பவுல் அவர்களுக்குச் சொன்னார். இந்த ஆலோசனைகளை நாமும் கடைப்பிடித்தால், முடிவுவரை சகித்திருக்க முடியும்!—எபி. 3:14.
பாட்டு 126 விழிப்பாய், தைரியமாய் நில்லுங்கள்!
a யூத வழிபாட்டு முறையைவிட கிறிஸ்தவர்கள் வழிபடுகிற முறைதான் உயர்ந்தது என்பதை நிரூபிக்க, எபிரெய வேதாகமத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு பதிவுகளை முதல் அதிகாரத்திலேயே பவுல் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.—எபி. 1:5-13.