Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவாவின் சேவையில் ஒரு சுவாரஸ்யமான பயணம்

யெகோவாவின் சேவையில் ஒரு சுவாரஸ்யமான பயணம்

1951-ல் கனடாவின் கியுபெக் மாகாணத்தில் இருந்த ருவான் என்ற சின்ன ஊருக்கு நான் வந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட முகவரியில் இருந்த வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினேன். மார்சல் ஃபில்டோ a என்ற நபர் கதவைத் திறந்தார். அவர் கிலியட் முடித்துவிட்டு மிஷனரியாக சேவை செய்துகொண்டிருந்தார். அவருக்கு 23 வயது; உயரமாக இருந்தார். எனக்கு 16 வயதுதான்; நான் குள்ளமாக இருந்தேன். என்னுடைய பயனியர் நியமிப்பு கடிதத்தை அவரிடம் காட்டினேன். அவர் அதைப் படித்துவிட்டு என்னைப் பார்த்தார். “நீ வந்தது உன் அம்மாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

என் குடும்பம்

என் அப்பா அம்மா சுவிட்சர்லாந்திலிருந்து கனடாவுக்குக் குடிமாறி வந்திருந்தார்கள். ஒன்டாரியோ நகரத்தில் இருந்த டிம்மின்ஸ் என்ற ஊரில் குடியேறினார்கள். அந்த ஊரில் சுரங்கப் பணிகள் நடந்தது. அங்கேதான் 1934-ல் நான் பிறந்தேன். கிட்டத்தட்ட1939-ல், என் அம்மா காவற்கோபுர பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார். என்னையும் என் கூடப்பிறந்த ஆறு பேரையும் கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு போவார். சீக்கிரத்திலேயே அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனார்.

அம்மா எடுத்த முடிவு அப்பாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இருந்தாலும், அம்மா சத்தியத்தை ரொம்ப நேசித்தார்; அதை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 1940-களின் ஆரம்பத்தில், கனடாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டது. அந்தச் சமயத்திலும் அம்மா யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அம்மாவை என் அப்பா மோசமாக திட்டினாலும், அம்மா அவரை எப்போதுமே அன்பாகவும் மரியாதையாகவும் நடத்துவார். அம்மா வைத்த முன்மாதிரியால் நானும் என் கூடப்பிறந்தவர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டோம். கொஞ்ச காலத்தில் அப்பாவின் மனசு இளகியது; அவர் எங்கள் எல்லாரையும் அன்பாக நடத்தினார்.

முழுநேர சேவையை ஆரம்பித்தேன்

ஆகஸ்ட் 1950-ல் நியு யார்க் நகரத்தில் நடந்த தேவராஜ்ய அதிகரிப்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். அங்கே உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த சகோதர சகோதரிகளைப் பார்த்தேன். கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றவர்களுடைய பேட்டிகளையும் கேட்டேன். அதனால், யெகோவாவுடைய சேவையை அதிகமாக செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. முழுநேர சேவைக்குள் நுழைந்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். வீட்டுக்கு வந்ததும், ஒழுங்கான பயனியர் ஆவதற்கு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினேன். அதற்கு, கனடா கிளை அலுவலகத்திலிருந்து பதில் வந்தது. முதலில் என்னை ஞானஸ்நானம் எடுக்க சொல்லி அதில் சொல்லியிருந்தது. அக்டோபர் 1, 1950-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். ஒரு மாதத்துக்குப் பிறகு ஒழுங்கான பயனியராக ஆனேன். கப்புஸ்காசிங் என்ற ஊருக்கு நியமிக்கப்பட்டேன்; அதுதான் என்னுடைய முதல் நியமிப்பு. அந்த ஊர், நான் இருந்த இடத்திலிருந்து ரொம்பத் தூரத்தில் இருந்தது.

கியுபெக்கில் சேவை செய்தபோது

1951-ல், பிரெஞ்சு மொழி தெரிந்த சாட்சிகள் கியுபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழி பகுதிக்குக் குடிமாறிப் போக முடியுமா என்று கிளை அலுவலகம் கேட்டது. ஏனென்றால், அங்கே தேவை அதிகமாக இருந்தது. சின்ன வயதிலிருந்தே எனக்கு பிரெஞ்சு மொழியும் ஆங்கில மொழியும் பேசத் தெரியும். அதனால், நான் போவதற்கு முடிவெடுத்தேன். எனக்கு ருவானில் நியமிப்பு கிடைத்தது. அங்கே எனக்கு யாரையுமே தெரியாது. ஆரம்பத்தில் சொன்ன மாதிரி, என்னிடம் ஒரு முகவரி மட்டும்தான் இருந்தது. ஆனால், எல்லாமே நல்லபடியாக போனது. மார்சலும் நானும் நல்ல நண்பர்களாக ஆனோம். நான்கு வருஷங்கள் நான் கியுபெக்கில் சந்தோஷமாக சேவை செய்தேன். அந்தச் சமயத்தில் நான் ஒரு விசேஷ பயனியராக ஆனேன்.

கிலியடும் தள்ளிப்போன எதிர்பார்ப்புகளும்

கியுபெக்கில் இருந்தபோது, 26-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு கிடைத்தது. சந்தோஷத்தில் நான் துள்ளினேன்! நியு யார்க்கில் இருக்கிற தெற்கு லான்ஸிங்கில் அந்தப் பள்ளி நடந்தது. பிப்ரவரி 12, 1956-ல் நான் பட்டம் பெற்றேன். மேற்கு ஆப்பிரிக்காவில், இப்போது கானா b என்று அழைக்கப்படுகிற இடத்தில் எனக்கு நியமிப்பு கிடைத்தது. ஆனால் அங்கே போவதற்கு முன்பு, என்னுடைய பயணத்துக்குத் தேவையான சில டாக்குமென்ட்களைத் தயார் செய்வதற்காக நான் கனடா போக வேண்டியிருந்தது. அங்கே இரண்டு-மூன்று வாரங்கள் இருப்பேன் என்று நினைத்தேன்.

கடைசியில், அந்த டாக்குமென்ட்களுக்காக நான் ஏழு மாதங்கள் டோரான்டோவில் தங்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில், சகோதரர் க்ரிப்ஸின் குடும்பம் என்னைத் தங்களுடைய வீட்டில் தங்க வைத்துக்கொண்டது. அப்போதுதான் அவர்களுடைய மகள் ஷீலாவைப் பார்த்தேன்... பழகினேன்... காதலில் விழுந்தேன்... அவளும் என்னைக் காதலித்தாள். கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா என்று அவளிடம் கேட்க நினைத்தபோது, என்னுடைய விசா வந்துவிட்டது. ஷீலாவும் நானும் ஜெபம் செய்தோம்; என்னுடைய நியமிப்புக்குப் போவதுதான் சரி என்று முடிவு பண்ணினோம். அதேசமயத்தில், கடிதம் வழியாக பேசிக்கொள்ளலாம் என்றும் எதிர்காலத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்றும் முடிவு பண்ணினோம். அப்படி முடிவெடுப்பது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், அதுதான் சரி என்று பிறகு புரிந்துகொண்டோம்.

கானாவில் இருக்கிற அக்ராவுக்கு வந்துசேர எனக்கு ஒரு மாதம் எடுத்தது. ரயில், கப்பல், விமானம் என எல்லாவற்றிலும் பயணம் செய்து வந்துசேர்ந்தேன். அங்கே ஒரு மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய நியமிப்புக்காக கானா முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, பக்கத்திலிருந்த ஐவரி கோஸ்டிலும் (இப்போது கோட் டீவார்) டோகோலாந்திலும்கூட (இப்போது டோகோ) பயணம் செய்தேன். நிறைய சமயங்களில், கிளை அலுவலகத்தின் காரில் நான் தனியாகப் பயணம் செய்தேன். சகோதர சகோதரிகளைப் பார்ப்பதற்காகப் பயணம் செய்த ஒவ்வொரு நிமிஷமும் இன்பமாக இருந்தது!

வார இறுதி நாட்களில், எனக்கு வட்டார மாநாடுகளில் நியமிப்பு இருந்தது. எங்களுக்கென்று ஒரு மாநாட்டு மன்றம் கிடையாது. அதனால், தற்காலிகமான சில ஏற்பாடுகளைச் சகோதரர்கள் செய்தார்கள். மூங்கில் கம்பங்களையும் பனை ஓலைகளையும் வைத்து கூரை அமைத்தார்கள். கொளுத்தும் வெயிலிலிருந்து அது நிழல் தந்தது. உணவு சமைக்கிற இடத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் எதுவும் இருக்காது. அதனால் மிருகங்களைக் கட்டி வைத்திருப்பார்கள். எப்போது தேவையோ அப்போது அவற்றை அடித்து, எல்லாருக்கும் சமைத்துக் கொடுப்பார்கள்.

மாநாடு சமயங்களில் சில காமெடிகூட நடந்தது. ஒருதடவை, என்னோடு மிஷனரியாக சேவை செய்துகொண்டிருந்த சகோதரர் ஹெர்பர்ட் ஜென்னிங்ஸ் c பேச்சு கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது சமைக்கிற இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மாடு, மாநாடு நடக்கிற இடத்துக்குள் வந்துவிட்டது. மேடைக்கும் மக்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கும் இடையில் அது ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து, சகோதரர் ஜென்னிங்ஸ் பேச்சு கொடுப்பதை நிறுத்திவிட்டார். எங்கே போவது என்று தெரியாமல் அந்த மாடு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, வாட்டசாட்டமாக இருந்த நான்கு சகோதரர்கள் வந்து, அந்த மாட்டைப் பிடித்து மறுபடியும் சமைக்கிற இடத்துக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். அந்த இடமே சிரிப்பு சத்தத்தால் அதிர்ந்தது!

வார நாட்களில், பக்கத்தில் இருந்த கிராமங்களுக்குப் போய், புதிய உலக சமுதாயம்—செயலில் என்ற நம்முடைய படத்தைப் போட்டுக் காட்டுவேன். அதற்காக, இரண்டு மரங்களுக்கு இடையே அல்லது இரண்டு கம்பங்களுக்கு இடையே கனமான ஒரு வெள்ளை துணியைக் கட்டுவேன். அதில் படத்தைப் போட்டுக் காட்டுவேன். கிராம மக்கள் அதை விரும்பி பார்த்தார்கள். அங்கே இருந்த நிறையப் பேர் பார்த்த முதல் படமே அதுதான். மக்கள் ஞானஸ்நானம் எடுக்கிற காட்சிகளைப் பார்த்தபோது அவர்கள் சத்தமாகக் கைதட்டினார்கள். யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதையும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள அந்தப் படம் அவர்களுக்கு உதவியது.

1959-ல் கானாவில் எங்கள் கல்யாணம்

கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் ஆப்பிரிக்காவில் சேவை செய்த பிறகு, 1958-ல் நியு யார்க்கில் நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஷீலாவை மறுபடியும் பார்த்தேன். எனக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை! அவள் கியுபெக்கில் விசேஷ பயனியராக சேவை செய்துகொண்டிருந்தாள்; மாநாட்டுக்காக அங்கிருந்து வந்திருந்தாள். அதுவரை நாங்கள் கடிதங்கள் வழியாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது அவளை நேரில் பார்த்ததால், “என்னை கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா?” என்று கேட்டேன். அவளும் ஒத்துக்கொண்டாள். நான் சகோதரர் நாருக்கு d கடிதம் எழுதி, கிலியட் பள்ளியில் ஷீலா கலந்துகொண்டு என்னோடு ஆப்பிரிக்காவில் சேவை செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டேன். அவர் ஒத்துக்கொண்டார்! பிறகு, ஷீலா கானாவுக்கு வந்தாள். அக்டோபர் 3, 1959-ல் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். எங்கள் கல்யாணம் அக்ரா என்ற இடத்தில் நடந்தது. வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்ததால் அவருடைய ஆசீர்வாதத்தை நாங்கள் பார்த்தோம்.

கேமரூனில் ஒன்றாகச் சேவை செய்தோம்

கேமரூன் கிளை அலுவலகத்தில் சேவை செய்தபோது

1961-ல் எங்களை கேமரூன் நாட்டுக்கு நியமித்தார்கள். அங்கே ஒரு புதிய கிளை அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கு என்னை உதவ சொன்னார்கள். அதனால் நான் ஏகப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. புதிய கிளை அலுவலக ஊழியராக நான் கற்றுக்கொள்வதற்கும் நிறைய இருந்தது. அப்புறம், 1965-ல் ஷீலா கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அப்பா-அம்மாவாக ஆகப்போகிறோம் என்பதை ஏற்றுக்கொள்வது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக, அந்தப் புதிய பொறுப்பைச் செய்ய நாங்கள் ஆசையாக இருந்தோம். கனடாவுக்குத் திரும்பிப் போக திட்டங்கள் போட்டோம். அப்போதுதான், எங்கள் மனசை சுக்குநூறாக்கிய ஒரு சம்பவம் நடந்தது.

எங்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது! அது ஆண் குழந்தை என்று டாக்டர் சொன்னார். அந்தச் சம்பவம் நடந்து 50 வருஷங்களுக்குமேல் ஆகிறது. இருந்தாலும், எங்களால் அதை மறக்கவே முடியவில்லை. அந்தச் சமயத்தில், நாங்கள் அப்படியே உடைந்துபோனோம். இருந்தாலும், கேமரூனில் சேவை செய்கிற நியமிப்பு எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்ததால் அதைத் தொடர்ந்து செய்தோம்.

1965-ல் ஷீலாவோடு கேமரூனில்

அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருந்ததால் கேமரூனில் இருந்த சகோதர சகோதரிகள் அடிக்கடி துன்புறுத்தலைச் சந்தித்தார்கள். ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் நிலைமை ரொம்பவே மோசமாக இருந்தது. மே 13, 1970-ல் நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. அன்று, யெகோவாவின் சாட்சிகளைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்துவிட்டார்கள். எங்களுடைய அழகான புதிய கிளை அலுவலகத்தையும் அரசாங்கம் எடுத்துக்கொண்டது. ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அங்கே குடிமாறி வந்திருந்தோம். ஒரு வாரத்துக்குள் எல்லா மிஷனரிகளையும் நாட்டை விட்டு வெளியேற்றினார்கள்; எங்களையும்தான்! சகோதர சகோதரிகளை விட்டுவிட்டு வருவது எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ‘வரப்போகிற நாட்களை அவர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்களோ’ என்று நினைத்து கவலைப்பட்டோம்.

அடுத்த ஆறு மாதங்கள் நாங்கள் பிரான்சு கிளை அலுவலகத்தில் சேவை செய்தோம். அங்கே இருந்து கேமரூனில் இருந்த சகோதரர்களுக்கு உதவி செய்தேன். அதே வருஷம் டிசம்பர் மாதத்தில், எங்களை நைஜீரியா கிளை அலுவலகத்துக்கு நியமித்தார்கள். அந்தக் கிளை அலுவலகம்தான் கேமரூனில் நடந்த வேலைகளைக் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தது. நைஜீரியாவில் இருந்த சகோதர சகோதரிகள் எங்களைப் பாசமாக வரவேற்றார்கள். நாங்கள் அங்கே பல வருஷங்கள் சந்தோஷமாகச் சேவை செய்தோம்.

ஒரு கஷ்டமான முடிவு

1973-ல் ஒரு கஷ்டமான முடிவை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஷீலாவுக்குச் சில மோசமான உடல்நல பிரச்சினைகள் வந்தன. நியு யார்க்கில் ஒரு மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டிருந்தபோது, அவள் மனதளவில் உடைந்துவிட்டாள். அழுதுகொண்டே என்னிடம், “என்னால் இதற்குமேல் முடியாது! எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போகிறது; சோர்வாகிவிடுகிறேன்” என்றாள். என்னோடு சேர்ந்து அவள் மேற்கு ஆப்பிரிக்காவில் 14 வருஷங்களுக்கும் மேல் சேவை செய்திருக்கிறாள். அவளை நினைத்து நான் பெருமைப்பட்டேன். ஆனால் இப்போது, நாங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. எங்களுடைய சூழ்நிலையைப் பற்றி நிறையப் பேசினோம்; நிறைய ஜெபம் செய்தோம். பிறகு, கனடாவுக்கே திரும்பிப் போவதுதான் நல்லது என்று முடிவு செய்தோம். ஏனென்றால், அங்கே அவளுடைய உடல் நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும் என்று தோன்றியது. மிஷனரி சேவையையும் முழுநேர சேவையையும் விட்டுவிட்டுப் போவதை நாங்கள் கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் அப்படி ஒரு வேதனையான முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

கனடாவுக்கு வந்தப் பிறகு, என்னுடைய நண்பர் ஒருவரிடம் நான் வேலைக்குச் சேர்ந்தேன். அவர் டோரான்டோவுக்கு வடக்கிலிருந்த ஒரு டவுனில் கார் டீலராக இருந்தார். நானும் ஷீலாவும் தங்குவதற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மேஜை, நாற்காலி போன்றவற்றை வாங்கினோம். இப்படிச் செய்ததால் கடன் வாங்காமல் சமாளிக்க முடிந்தது. எங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள நினைத்தோம். ஏனென்றால், என்றைக்காவது ஒருநாள் மறுபடியும் முழுநேர சேவை செய்வோம் என்று எதிர்பார்த்தோம். நாங்கள் நினைத்ததைவிட சீக்கிரமாகவே எங்களுடைய ஆசை நிறைவேறியது!

சனிக்கிழமைகளில், ஒரு புதிய மாநாட்டு மன்றத்தின் கட்டுமான வேலையில் நான் வாலண்டியராகச் சேவை செய்தேன். ஒன்டாரியோவில் இருந்த நார்வெலில் அந்த மன்றத்தைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நாளில், என்னை மாநாட்டு மன்ற கண்காணியாகச் சேவை செய்ய சொன்னார்கள். ஷீலாவின் உடல்நிலை கொஞ்சம் தேறியதால், அவளாலும் இந்தப் புதிய நியமிப்பை செய்ய முடியும் என்று நினைத்தோம். ஜூன் 1974-ல், மாநாட்டு மன்ற வளாகத்திலிருந்த ஒரு வீட்டுக்குக் குடிமாறிப் போனோம். முழுநேர சேவையில் மறுபடியும் கால் வைத்ததை நினைத்து நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம்.

ஷீலாவின் உடல்நிலை நன்றாக முன்னேறியது. இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, வட்டாரச் சேவை செய்வதற்கான நியமிப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. கனடாவில் இருந்த மானிடோபா பகுதிதான் எங்களுக்கு நியமிக்கப்பட்ட வட்டாரம். அந்தப் பகுதியில் குளிர் காலங்களில் உறையவைக்கும் குளிர் இருக்கும். ஆனால் சகோதர சகோதரிகளுடைய அன்பு, எங்களைக் கதகதப்பாக வைத்துக்கொண்டது. நாம் எங்கே சேவை செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை; எங்கே இருந்தாலும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதுதான் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டோம்.

முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்

சில வருஷங்கள் வட்டாரச் சேவையில் இருந்த பிறகு, 1978-ல் கனடா பெத்தேலில் சேவை செய்ய எங்களைக் கூப்பிட்டார்கள். கொஞ்ச நாளிலேயே, ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்; ஆனால், அதை அடிபட்டுதான் கற்றுக்கொண்டேன். மான்ட்ரீலில் நடந்த ஒரு விசேஷக் கூட்டத்தில், பிரெஞ்சு மொழியில் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பேச்சைக் கொடுக்கும் நியமிப்பு கிடைத்தது. ஆனால், வந்திருந்தவர்கள் பேச்சை நன்றாகக் கவனிக்கும் அளவுக்கு நான் அதைச் சுவாரஸ்யமாகக் கொடுக்கவில்லை. அதனால், ஊழிய இலாகாவில் இருந்த ஒரு சகோதரர் எனக்கு ஆலோசனை கொடுத்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பேச்சு கொடுக்கிற திறமையை நான் இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அப்போதே புரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கொடுத்த ஆலோசனையை நான் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் கொஞ்சம் காரசாரமாக பேசிக்கொண்டோம். ‘அவர் குறை கண்டுபிடிக்கிறார், என்னைப் பாராட்டவே இல்லை’ என்றுதான் என் மனசுக்குத் தோன்றியது. அவர் கொடுத்த ஆலோசனையைப் பற்றி யோசிக்காமல், அவர் எப்படிப்பட்டவர்... ஆலோசனை கொடுத்த விதம் எப்படி இருந்தது... இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

பிரெஞ்சு மொழியில் பேச்சு கொடுத்தப் பிறகு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்

கொஞ்ச நாள் கழித்து, இந்த விஷயத்தைப் பற்றிக் கிளை அலுவலகக் குழுவிலிருந்த ஒரு சகோதரர் என்னிடம் பேசினார். ஆலோசனை கிடைத்தபோது அதை நான் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அவரிடம் ஒத்துக்கொண்டேன்; அதற்காக வருத்தப்படுவதாகவும் சொன்னேன். பிறகு, எனக்கு ஆலோசனை கொடுத்த அந்தச் சகோதரரிடம் போய்ப் பேசினேன். அவரும் என்னைப் பெருந்தன்மையோடு மன்னித்தார். அந்த அனுபவம், மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தது; அதை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்! (நீதி. 16:18) அதைப் பற்றி நிறைய தடவை யெகோவாவிடம் ஜெபம் செய்திருக்கிறேன். ஆலோசனை கொடுக்கப்பட்டால், அதைத் தவறாக எடுத்துக்கொள்ளவே கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.

இப்போது நான் கனடா பெத்தேலில் 40 வருஷங்களுக்கும் மேல் இருக்கிறேன். 1985-லிருந்து கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறேன். பிப்ரவரி 2021-ல் ஷீலா இறந்துபோனாள். அது எனக்கு ஒரு பெரிய இழப்பு! அந்த வேதனையோடு சேர்த்து, சில உடல்நல பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறேன். ஆனால், யெகோவாவுடைய சேவையில் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பதால் நாட்கள் போவதே தெரியவில்லை. “வாழ்நாள் காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!” (பிர. 5:20) வாழ்க்கையில் சில சவால்கள் இருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் அவை எல்லாவற்றையும்விட எனக்குக் கிடைத்த சந்தோஷம்தான் அதிகம்! யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்ததாலும், 70 வருஷங்கள் முழுநேர சேவையில் இருந்ததாலும் எனக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன. இளம் பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அவர்கள் அப்படிச் செய்தால், கண்டிப்பாக சந்தோஷத்தையும் திருப்தியையும் ருசிப்பார்கள்!

a பிப்ரவரி 1, 2000 காவற்கோபுரத்தில் சகோதரர் மார்சல் ஃபில்டோவின் வாழ்க்கை சரிதை வெளிவந்திருக்கிறது. அதன் தலைப்பு: “யெகோவாவே என் அடைக்கலமும் பெலனுமானவர்.”

b ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதி 1957 வரை ஆங்கிலேயர்களின் குடியிருப்பாக இருந்தது. அந்தச் சமயத்தில் அது கோல்ட் கோஸ்ட் (gold coast) என்று அழைக்கப்பட்டது.

c டிசம்பர் 1, 2000 காவற்கோபுரத்தில் சகோதரர் ஹெர்பர்ட் ஜென்னிங்ஸின் வாழ்க்கை சரிதை வெளிவந்திருக்கிறது. அதன் தலைப்பு: “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே.”

d அந்தச் சமயத்தில் சகோதரர் நேதன் நார் அமைப்பின் வேலைகளை வழிநடத்திக்கொண்டு இருந்தார்.