Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

எஜமானுடைய இரவு விருந்தை இயேசு ஆரம்பித்து வைத்தபோது, மற்ற 70 சீஷர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் இயேசுவை விட்டுவிட்டு போய்விட்டார்களா?

இயேசு ஆரம்பித்து வைத்த எஜமானுடைய இரவு விருந்தில் அந்த 70 சீஷர்கள் இல்லை என்பதற்காக அவர்களை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ, அவர்கள் இயேசுவை விட்டுவிட்டு போய்விட்டார்கள் என்றோ நாம் நினைக்கத் தேவையில்லை. அந்தச் சமயத்தில், தன்னுடைய அப்போஸ்தலர்களோடு இருக்க வேண்டும் என்று இயேசு ஆசைப்பட்டார், அவ்வளவுதான்!

பன்னிரண்டு பேரும் சரி, அந்த எழுபது பேரும் சரி, இயேசுவின் சீஷர்கள்தான்! அவருக்கு இருந்த நிறையச் சீஷர்களிலிருந்து 12 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன்னுடைய அப்போஸ்தலர்கள் என்று அழைத்தார். (லூக். 6:12-16) இயேசு கலிலேயாவில் இருந்தபோது, “பன்னிரண்டு பேரையும் . . . வரவழைத்து” “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவும் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காகவும் அவர்களை அனுப்பினார்.” (லூக். 9:1-6) அதற்குப் பிறகு, யூதேயாவில் இருந்தபோது, “இன்னும் 70 பேரை நியமித்து . . . இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” (லூக். 9:51; 10:1) இதை வைத்து பார்க்கும்போது, இயேசுவுக்கு வெவ்வேறு இடங்களில் நிறையச் சீஷர்கள் இருந்தார்கள் என்றும் அவர்கள் அந்த இடங்களிலெல்லாம் பிரசங்கித்தார்கள் என்றும் தெரிகிறது.

இயேசுவின் சீஷர்களாக மாறிய யூதர்கள், ஒவ்வொரு வருஷமும் தங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து பஸ்கா பண்டிகையைக் கொண்டாடியிருப்பார்கள். (யாத். 12:6-11, 17-20) தன்னுடைய மரணம் நெருங்கிய சமயத்தில் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எருசலேமுக்குப் போனார்கள். அந்தச் சமயத்தில் யூதேயா, கலிலேயா, பெரேயா போன்ற இடங்களில் இருந்த எல்லா சீஷர்களையும் கூப்பிட்டுப் பெரிய அளவில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட இயேசு நினைக்கவில்லை. அந்தச் சமயத்தில் அவர் தன்னுடைய அப்போஸ்தலர்களோடு மட்டும் இருக்க ஆசைப்பட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. அவர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் பாடுகள் படுவதற்கு முன்பு உங்களோடு சேர்ந்து இந்த பஸ்கா உணவைச் சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தேன்.”—லூக். 22:15.

இயேசு அதைச் செய்வதற்கு ஒரு காரணமும் இருந்தது. அவர் சீக்கிரத்தில் ‘உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியாக’ சாக வேண்டியிருந்தது. (யோவா. 1:29) அது எருசலேமில்தான் நடக்க வேண்டியிருந்தது. அங்கேதான் ரொம்பக் காலமாக கடவுளுக்குப் பலிகள் கொடுக்கப்பட்டன. எகிப்திலிருந்து யெகோவா கொடுத்த விடுதலையை பஸ்கா ஆட்டுக்குட்டி இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும். ஆனால், இயேசுவின் பலி அதைவிட பெரிய ஒரு விடுதலையைக் கொடுக்கும். எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அது விடுதலை செய்யும். (1 கொ. 5:7, 8) அதுமட்டுமல்ல, அந்த 12 அப்போஸ்தலர்களும் கிறிஸ்தவ சபையின் அஸ்திவாரமாக ஆவதற்கு இயேசுவின் மரணம் வழி செய்தது. (எபே. 2:20-22) சொல்லப்போனால், பரிசுத்த நகரமான எருசலேமில் “12 அஸ்திவாரக் கற்கள் போடப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.” (வெளி. 21:10-14) கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதில் அப்போஸ்தலர்களுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. அதனால்தான், கடைசி பஸ்காவையும் எஜமானுடைய இரவு விருந்தையும் இயேசு அவர்களோடு கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பது புரிகிறது.

எழுபது பேரும் மற்ற சீஷர்களும் இயேசுவோடு அன்றைக்கு விருந்தில் கலந்துகொள்ளவில்லைதான். ஆனால், உண்மையாக இருந்த எல்லா சீஷர்களுமே இயேசு ஆரம்பித்து வைத்த எஜமானுடைய இரவு விருந்திலிருந்து பயனடைவார்கள். காலப்போக்கில் யாரெல்லாம் அபிஷேகம் செய்யப்பட்டார்களோ, அவர்கள் எல்லாருமே இயேசு அன்றைக்கு ராத்திரி செய்த அரசாங்கத்துக்கான ஒப்பந்தத்துக்குள் வந்தார்கள்.—லூக். 22:29, 30.