Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்”

“இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்”

“என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது.”—யோவா. 4:34.

பாடல்கள்: 95, 70

1. இந்த உலகத்தின் சுயநல மனப்பான்மை நம்முடைய மனத்தாழ்மையை எப்படிப் பாதிக்கலாம்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்கிற பாடங்களை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது நமக்குச் சவாலாக இருக்கலாம். அதற்கு ஒரு காரணம், சரியானதைச் செய்ய நமக்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது! இந்த “கடைசி நாட்களில்,” மனத்தாழ்மையைக் காட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் “சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக,” மற்றும் “சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:1-3) இதுபோன்ற குணங்களைக் காட்டுவது தவறு என்பது கடவுளுடைய ஊழியர்களான நமக்குத் தெரியும். ஆனால், இந்தக் குணங்களைக் காட்டுபவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெறுவதாகவும் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பதாகவும் தோன்றலாம். (சங். 37:1; 73:3) ஒருவேளை, ‘என்னோட தேவைகளவிட மத்தவங்களோட தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுல ஏதாவது பிரயோஜனம் இருக்கா? நான் தாழ்மையா நடந்தா, மத்தவங்க என்னை மதிப்பாங்களா?’ என்றும்கூட நாம் யோசிக்கலாம். (லூக். 9:48) இந்த உலகத்தின் சுயநல மனப்பான்மை நம்மீது ஆதிக்கம் செலுத்த நாம் விட்டுவிட்டால், நம்முடைய சகோதர சகோதரிகளுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுவிடும். அதோடு, நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் கண்டுகொள்வதும் மற்றவர்களுக்குக் கஷ்டமாகிவிடும். ஆனால், மனத்தாழ்மையுள்ள கடவுளுடைய ஊழியர்களைப் பற்றிப் படிக்கும்போதும், அவர்களைப் போலவே நடந்துகொள்ளும்போதும் அருமையான பலன்கள் கிடைக்கும்.

2. கடவுளுடைய உண்மை ஊழியர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

2 கடவுளுடைய நண்பர்களாக இருப்பதற்கு, கடந்த காலத்தில் வாழ்ந்த அவருடைய ஊழியர்களுக்கு எது உதவியது? அவர்களால் எப்படிக் கடவுளைப் பிரியப்படுத்த முடிந்தது? சரியானதைச் செய்வதற்குத் தேவையான தைரியம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? பைபிளிலிருக்கும் அவர்களுடைய உதாரணங்களைப் படித்துத் தியானிக்கும்போது, நம்முடைய விசுவாசம் பலப்படும்.

நம்முடைய விசுவாசம் பலப்படுவதற்கு எது தேவை?

3, 4. (அ) யெகோவா நமக்கு எப்படிக் கற்றுத்தருகிறார்? (ஆ) நம் விசுவாசம் பலமாக இருப்பதற்கு, வெறுமனே அறிவைப் பெற்றுக்கொள்வதோடு இன்னொன்றும் தேவை என்று ஏன் சொல்லலாம்?

3 நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா நமக்குத் தருகிறார். பைபிள்... பிரசுரங்கள்... நம்முடைய வெப்சைட்... JW பிராட்காஸ்டிங்... கூட்டங்கள்... மாநாடுகள்... என எல்லாவற்றிலிருந்தும் நமக்கு நல்ல அறிவுரைகளும் பயிற்சிகளும் கிடைக்கின்றன. ஆனால், வெறுமனே அறிவைப் பெற்றுக்கொள்வதைவிட இன்னொன்றும் தேவை என்று இயேசு சொன்னார். அதாவது, “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது” என்று சொன்னார்.—யோவா. 4:34.

4 இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? சத்தான உணவு சாப்பிடும்போது, நமக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது; நம் உடலுக்கும் பலம் கிடைக்கிறது. அதேபோல், கடவுளுடைய விருப்பதைச் செய்யும்போது, நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது; நம் விசுவாசம் பலமாகிறது. உதாரணத்துக்கு, நீங்கள் களைப்பாக இருக்கும்போது வெளி ஊழியக் கூட்டத்துக்குப் போயிருக்கிறீர்களா? ஆனால், ஊழியத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது எப்படி உணர்ந்தீர்கள்? சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியோடும் இருந்திருப்பீர்கள், இல்லையா?

5. ஞானமாக நடந்துகொள்ளும்போது என்ன நன்மை கிடைக்கும்?

5 யெகோவா சொல்வதை செய்யும்போது, நாம் ஞானமாக நடந்துகொள்கிறோம் என்று சொல்லலாம். (சங். 107:43) அப்படி நடந்துகொள்ளும்போது, நல்ல பலன்கள் கிடைக்கும். “நீ ஆசைப்படுகிற எதுவுமே [ஞானத்துக்கு] ஈடாகாது. . . . அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது வாழ்வளிக்கிற மரம் போன்றது. அதை உறுதியாகப் பிடித்துக்கொள்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 3:13-18) “இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:17) இயேசு சொன்னதைச் செய்யும்வரை, அவருடைய சீஷர்களால் சந்தோஷமாக இருக்க முடிந்தது. ஏதோ ஒரு தடவை மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் அவருடைய போதனைகளின்படியும் முன்மாதிரியின்படியும் அவர்கள் நடந்தார்கள்.

6. கற்றுக்கொண்ட விஷயங்களின்படி தொடர்ந்து நடப்பது ஏன் முக்கியம்?

6 கற்றுக்கொள்கிற விஷயங்களின்படி இன்று நாமும் நடக்க வேண்டும். மெக்கானிக்காக இருக்கும் ஒருவருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ரிப்பேர் செய்வதற்கான திறமையும், கருவிகளும், மற்ற பொருள்களும் அவரிடம் இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் பயன்படுத்தினால்தான், அவரால் ஒரு நல்ல மெக்கானிக்காக இருக்க முடியும். ஒருவேளை அவருக்குப் பல வருஷ அனுபவம் இருக்கலாம். ஆனால், எப்போதுமே அவர் ஒரு திறமையான மெக்கானிக்காக இருக்க வேண்டுமென்றால், தான் கற்றுக்கொண்டதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இப்போது நம் விஷயத்துக்கு வரலாம். முதல்முதலில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது, பைபிள் சொல்வதன்படி நடந்ததால் நமக்குச் சந்தோஷம் கிடைத்தது. ஆனால், எப்போதுமே நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், யெகோவா என்ன கற்றுக்கொடுக்கிறாரோ, அதன்படி ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும்.

7. பைபிள் உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

7 நம்முடைய மனத்தாழ்மைக்குச் சவால்விடுகிற சில சூழ்நிலைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். கடந்த காலத்தில் வாழ்ந்த உண்மை ஊழியர்கள் எப்படித் தொடர்ந்து மனத்தாழ்மையோடு நடந்துகொண்டார்கள் என்றும் கற்றுக்கொள்வோம். ஆனால், அவர்களுடைய அனுபவங்களை வெறுமனே படித்தால் மட்டும் போதாது; ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும், அதன்படி செய்யவும் வேண்டும்.

மற்றவர்களையும் உங்களைப் போலவே கருதுங்கள்

8, 9. அப்போஸ்தலர் 14:8-15-ல், பவுலின் மனத்தாழ்மையைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆரம்பப் படம்)

8 எல்லா விதமான மக்களும் “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும் மீட்புப் பெற வேண்டுமென்பதும்” கடவுளுடைய விருப்பம்! (1 தீ. 2:4) அப்படியென்றால், சத்தியத்தைப் பற்றித் தெரியாத நபர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அப்போஸ்தலன் பவுல், யெகோவாவைப் பற்றி ஓரளவு தெரிந்துவைத்திருந்த யூதர்களுக்கும் பிரசங்கித்தார்; பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட மற்றவர்களுக்கும் பிரசங்கித்தார். பொய்த் தெய்வங்களைக் கும்பிட்டவர்களுக்குப் பிரசங்கித்தபோது, பவுலின் மனத்தாழ்மை சோதிக்கப்பட்டது. எப்படி?

9 பவுலுடைய முதல் மிஷனரி பயணத்தின்போது, அவரும் பர்னபாவும் லீஸ்திராவுக்குப் போனார்கள். லிக்கவோனிய மொழி பேசிய அந்த மக்கள், பவுலையும் பர்னபாவையும் சூப்பர் ஹீரோக்களைப் போல் நடத்தினார்கள். தங்களுடைய பொய்த் தெய்வங்களான சீயுஸ் மற்றும் ஹெர்மஸுடைய பெயரைச் சொல்லி அவர்களை அழைத்தார்கள். பவுலும் பர்னபாவும் அதில் மயங்கிவிட்டார்களா? முன்பு போயிருந்த இரண்டு நகரங்களில் துன்புறுத்தலைச் சந்தித்திருந்ததால், இது தங்களுக்குக் கிடைத்த இனிமையான அனுபவம் என்று நினைத்தார்களா? தங்களுக்கு அருமையான வரவேற்பு கிடைத்ததால், நல்ல செய்தியை நிறைய பேர் காதுகொடுத்துக் கேட்பார்கள் என்று நினைத்தார்களா? இல்லவே இல்லை! அந்த மக்கள் செய்தது அவர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போல் குறைபாடுகள் உள்ள மனுஷர்கள்தான்” என்று சத்தமாகச் சொன்னார்கள்.—அப். 14:8-15.

10. லிக்கவோனிய மக்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பவுலும் பர்னபாவும் ஏன் நினைக்கவில்லை?

10 எந்த அர்த்தத்தில் தாங்களும் மனிதர்கள்தான் என்று பவுலும் பர்னபாவும் சொன்னார்கள்? லிக்கவோனிய மக்கள் கடவுளை எந்த விதத்தில் வழிபட்டார்களோ, அதே விதத்தில்தான் தாங்களும் வழிபடுவதாக அவர்கள் சொல்லவில்லை; தாங்களும் பாவ இயல்புள்ளவர்கள் என்றுதான் சொல்லவந்தார்கள். அவர்கள் இரண்டு பேரும் கடவுளால் அனுப்பப்பட்ட மிஷனரிகளாக இருந்தார்கள். (அப். 13:2) கடவுளுடைய சக்தியால் அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார்கள்; அருமையான எதிர்கால நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது. அதற்காக, தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. நல்ல செய்தியை அந்த மக்கள் ஏற்றுக்கொண்டால், பரலோகத்தில் வாழும் வாய்ப்பு அவர்களுக்கும் கிடைக்கும் என்பதை பவுலும் பர்னபாவும் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்.

11. ஊழியம் செய்யும்போது, பவுலைப் போலவே நாமும் எப்படி மனத்தாழ்மையாக இருக்கலாம்?

11 பவுலைப் போலவே மனத்தாழ்மையைக் காட்டுவதற்கான ஒரு வழி: நமக்குச் சில ஊழிய நியமிப்புகள் கிடைக்கும்போதோ, யெகோவாவின் உதவியால் சில காரியங்களைச் சாதிக்கும்போதோ, நம்மை விசேஷமானவர்கள் என்று நினைக்காமல் இருப்பது! நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னோட பிராந்தியத்துல இருக்குறவங்கள பத்தி நான் என்ன நினைக்குறேன்? குறிப்பிட்ட சில ஆட்கள்மேல எனக்கு ஏதாவது தப்பெண்ணம் இருக்கா?’ நல்ல செய்தியைக் காதுகொடுத்துக் கேட்கிற மக்களைக் கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் முயற்சி செய்கிறார்கள். சிலர், மற்றவர்களால் தாழ்வாகக் கருதப்படுகிற மக்களுடைய மொழி அல்லது கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், அவர்களைவிட தங்களை உயர்வாக நினைப்பதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக, அவர்கள் ஒவ்வொருவரையும் நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள்.

மற்றவர்களுடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்யுங்கள்

12. மற்றவர்கள்மேல் தனக்கு உண்மையான அக்கறை இருப்பதை எப்பாப்பிரா எப்படிக் காட்டினார்?

12 நாம் மனத்தாழ்மையானவர்கள் என்பதைக் காட்டுவதற்கான இன்னொரு வழி: ‘நாம் பெற்றிருக்கிற அதே விலைமதிப்புள்ள நம்பிக்கையைப் பெற்றிருக்கும்’ சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்வது! (2 பே. 1:1) இதைத்தான் எப்பாப்பிரா செய்தார். இவரைப் பற்றி பைபிளில் மூன்று தடவைதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பவுல், ரோமில் வீட்டுச் சிறையில் இருந்தபோது, கொலோசெ கிறிஸ்தவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதில் எப்பாப்பிராவைப் பற்றி இப்படிச் சொன்னார்: “உங்களுக்காக எப்போதும் அவர் ஊக்கமாக ஜெபம் செய்கிறார்.” (கொலோ. 4:12) சகோதரர்களைப் பற்றி எப்பாப்பிராவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது; அவர்கள்மீது அவருக்கு ஆழ்ந்த அக்கறை இருந்தது. அவரை “சக கைதி” என்று பவுல் சொன்னதிலிருந்து, எப்பாப்பிராவுக்கும் சில கஷ்டங்கள் இருந்ததென்று தெரிகிறது. (பிலே. 23) இருந்தாலும், மற்றவர்களுடைய தேவைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்; அவர்களுக்கு உதவ தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். சகோதர சகோதரிகளுக்காக அவர் ஜெபம் செய்தார்; அதுவும், அவர்களுடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்தார். நாமும் அதேபோல் செய்யலாம். அப்படிச் செய்யப்படுகிற ஜெபங்கள் மிகவும் வலிமையுள்ளது.—2 கொ. 1:11; யாக். 5:16.

13. ஜெபம் செய்யும்போது நீங்கள் எப்படி எப்பாப்பிராவைப் பின்பற்றலாம்?

13 யாருடைய பெயரையெல்லாம் குறிப்பிட்டு நீங்கள் ஜெபம் செய்யலாம் என்று யோசித்துப்பாருங்கள். ஒருவேளை, உங்கள் சபையில் இருக்கும் நண்பர்களோ சில குடும்பங்களோ பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கலாம். சில கஷ்டமான தீர்மானங்களை அவர்கள் எடுக்க வேண்டியிருக்கலாம் அல்லது சோதனைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கலாம். நம்முடைய வெப்சைட்டில்,ஜெகோவாஸ் விட்னஸஸ் இம்பிரிசன்ட் ஃபார் தெயர் ஃபெயித் என்ற தலைப்பின்கீழ் சில சகோதரர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவர்களுக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். (நியூஸ்ரூம் > லீகள் டெவலப்மென்ட்ஸ் என்ற தலைப்பில் பாருங்கள்.) சிலர், தங்களுடைய அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்திருக்கலாம். வேறு சிலர், சமீபத்தில் நடந்த பேரழிவுகளில் அல்லது போர்களில் தப்பிப்பிழைத்திருக்கலாம். மற்றவர்கள், பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கலாம். இப்படி, எத்தனையோ சகோதர சகோதரிகளுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்காக நாம் ஜெபம் செய்யும்போது நம்முடைய தேவைகளின் மீது மட்டுமல்ல, அவர்களுடைய தேவைகளின் மீதும் நமக்கு அக்கறை இருக்கிறது என்பதை நிரூபிக்கிறோம். (பிலி. 2:4) இதுபோன்ற ஜெபங்களை யெகோவா கவனித்துக் கேட்கிறார்!

‘நன்றாகக் காதுகொடுத்துக் கேளுங்கள்’

14. காதுகொடுத்துக் கேட்பதில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரி என்று ஏன் சொல்லலாம்?

14 நாம் மனத்தாழ்மையானவர்கள் என்பதைக் காட்டுவதற்கான மற்றொரு வழி: காதுகொடுத்துக் கேட்பது! ‘நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கும்படி’ யாக்கோபு 1:19 சொல்கிறது. காதுகொடுத்துக் கேட்பதில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரி! (ஆதி. 18:32; யோசு. 10:14) உதாரணத்துக்கு, யாத்திராகமம் 32:11-14-ல் இருக்கும் உரையாடலை படித்துப் பாருங்கள். (வாசியுங்கள்.) மோசேயின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், அவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்ட யெகோவா அனுமதித்தார். ஒருவேளை, முன்பு தவறு செய்த ஒருவர் உங்களிடம் பேசும்போது நீங்கள் பொறுமையோடு கேட்பீர்களா? அவர் கொடுக்கும் ஆலோசனையின்படி செய்வீர்களா? ஆனால், விசுவாசத்தோடு யாராவது தன்னிடம் பேசும்போது, யெகோவா பொறுமையோடு காதுகொடுத்துக் கேட்கிறார்!

15. மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலம் நாம் எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம்?

15 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஆபிரகாம்... ராகேல்... மோசே... யோசுவா... மனோவா... எலியா... எசேக்கியா... இவங்கெல்லாம் பேசுனத யெகோவா கேட்டாரு. இன்னைக்கு மத்தவங்க பேசுறதயும் அவரு மனத்தாழ்மையோட கேட்குறாரு. அப்படீனா, நானும் மத்தவங்க பேசுறத கேட்கணும், இல்லையா? சகோதர சகோதரிகள் பேசுறத காதுகொடுத்து கேட்குறது மூலமாவும், பொருத்தமான சமயத்துல அவங்களோட ஆலோசனைகளின்படி செய்றது மூலமாவும், அவங்களுக்கு என்னால இன்னும் அதிகமா மதிப்பு கொடுக்க முடியுமா? சபையில இருக்குற யாராவதுமேல இல்லனா என்னோட குடும்பத்துல இருக்குற யாராவதுமேல இன்னும் அக்கறை காட்ட வேண்டியிருக்கா? அதுக்கு நான் என்ன செய்யலாம்?’—ஆதி. 30:6; நியா. 13:9; 1 ரா. 17:22; 2 நா. 30:20.

“ஒருவேளை நான் படுகிற கஷ்டத்தை யெகோவா பார்ப்பார்”

“விட்டுவிடுங்கள்” என்று தாவீது சொன்னார். நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்? (பாராக்கள் 16, 17)

16. சீமேயியால் மோசமாக நடத்தப்பட்டபோது, தாவீது என்ன செய்தார்?

16 யாராவது நம்மைத் தவறாக நடத்தும்போது, நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும்; இதைச் செய்யவும் மனத்தாழ்மை உதவும். (எபே. 4:2) 2 சாமுவேல் 16:5-13-ல், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதற்கான ஓர் அருமையான முன்மாதிரி இருக்கிறது. (வாசியுங்கள்.) சவுல் ராஜாவின் சொந்தக்காரரான சீமேயி, தாவீதையும் அவருடைய ஊழியர்களையும் அவமானப்படுத்தினான்; அவர்களைத் தாக்கினான். தாவீது நினைத்திருந்தால் அவனைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், பொறுமையோடு அந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டார். தாவீதால் எப்படி அந்தளவு சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட முடிந்தது? மூன்றாம் சங்கீதத்தில் அதற்கான பதில் இருக்கிறது.

17. சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட தாவீதுக்கு எது உதவியது, நாம் எப்படி அவரைப் போலவே நடந்துகொள்ளலாம்?

17 தன்னுடைய மகன் அப்சலோம், தன்னைக் கொல்லத் துடித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் தாவீது மூன்றாம் சங்கீதத்தை எழுதினார். அந்தச் சமயத்தில்தான் சீமேயியும் தாவீதைத் தாக்கினான். இந்தச் சூழ்நிலையில், அமைதியாக இருப்பதற்கான பலம் தாவீதுக்கு எங்கிருந்து கிடைத்தது? சங்கீதம் 3:4-ல் அவர் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவை நோக்கி நான் சத்தமாகக் கூப்பிடுவேன். பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் சொல்வார்.” நம்மை யாராவது தவறாக நடத்தும்போது நாமும் தாவீதைப் போலவே ஜெபம் செய்ய வேண்டும். அப்போது, தன்னுடைய சக்தியைக் கொடுத்து யெகோவா நமக்கு உதவுவார்; அந்தச் சக்தியின் உதவியோடு நம்மால் சகித்திருக்க முடியும். மற்றவர்கள் உங்களைத் தவறாக நடத்தும்போது, இன்னுமதிக சுயக்கட்டுப்பாட்டை நீங்கள் காட்ட வேண்டியிருக்கிறதா? அவர்களை இன்னும் தாராளமாக மன்னிக்க வேண்டியிருக்கிறதா? நீங்கள் படும் கஷ்டம் யெகோவாவுக்குத் தெரியும் என்றும், அவர் உங்களுக்கு உதவுவார் என்றும், நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார் என்றும் நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?

“எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்”

18. தொடர்ந்து யெகோவாவின் அறிவுரைகளின்படி செய்யும்போது நாம் எப்படி நன்மையடையலாம்?

18 சரியானதைச் செய்யும்போது, நாம் ஞானமுள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறோம்; யெகோவாவும் நம்மை ஆசீர்வதிப்பார். “எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்” என்று நீதிமொழிகள் 4:7 சொல்கிறது. ஞானம் அறிவிலிருந்து பிறக்கிறது என்பது உண்மைதான்; ஆனால், வெறுமனே தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது மட்டுமே ஞானம் அல்ல. நாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் நாம் ஞானமுள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும். குளிர்காலத்துக்காக உணவைச் சேமித்துவைப்பதன் மூலம் எறும்புகளும்கூட ஞானமாக நடந்துகொள்கின்றன! (நீதி. 30:24, 25) ‘கடவுளுடைய ஞானமாக இருக்கிற’ கிறிஸ்து, எப்போதுமே தன்னுடைய அப்பாவுக்குப் பிடித்ததையே செய்கிறார். (1 கொ. 1:24; யோவா. 8:29) சரியானதைச் செய்வதன் மூலமும், தொடர்ந்து மனத்தாழ்மையாக இருப்பதன் மூலமும் நாம் ஞானமுள்ளவர்கள் என்பதைக் காட்டினால், யெகோவா நமக்குப் பலன் தருவார். (மத்தேயு 7:21-23-ஐ வாசியுங்கள்.) எல்லாரும் மனத்தாழ்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும் ஓர் இடமாக உங்கள் சபையை ஆக்குவதற்காகத் தொடர்ந்து உழையுங்கள். சரியானது என்று தெரிந்ததை நடைமுறைப்படுத்துவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும்; பொறுமையோடு இருப்பதும் அவசியம். ஆனால் அப்படிச் செய்யும்போது, நாம் மனத்தாழ்மையுள்ளவர்கள் என்பதைக் காட்டலாம்; அந்த மனத்தாழ்மை, இப்போதும் என்றென்றும் சந்தோஷத்தை அள்ளித்தரும்.