Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவைப் போலவே கரிசனையையும் கருணையையும் காட்டுங்கள்

யெகோவாவைப் போலவே கரிசனையையும் கருணையையும் காட்டுங்கள்

“ஏழைக்கு கரிசனையோடு உதவுகிறவன் சந்தோஷமானவன்.”—சங். 41:1.

பாடல்கள்: 77, 50

1. யெகோவாவின் மக்கள் எப்படி ஒருவர்மேல் ஒருவர் பாசத்தைப் பொழிகிறார்கள்?

உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் மக்கள் ஒரே குடும்பம்போல் இருக்கிறார்கள். சகோதர சகோதரிகளாக, ஒருவர்மேல் ஒருவர் பாசத்தைப் பொழிகிறார்கள். (1 யோ. 4:16, 21) சிலசமயங்களில், தங்கள் சகோதரர்களுக்காகப் பெரிய பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். ஆனால், நிறைய சமயங்களில் சின்னச் சின்ன விஷயங்களைச் செய்வதன் மூலம் தங்களுடைய அன்பைக் காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசுகிறார்கள்; ஒருவரை ஒருவர் அன்போடும் கரிசனையோடும் நடத்துகிறார்கள். இப்படி நாம் கரிசனையோடு நடந்துகொள்ளும்போது, நம்முடைய பரலோகத் தகப்பனைப் பின்பற்றுகிறோம்.—எபே. 5:1.

2. யெகோவாவின் அன்பை இயேசு எப்படி வெளிக்காட்டினார்?

2 இயேசு தன்னுடைய அப்பாவை அச்சுப்பிசகாமல் பின்பற்றினார். அவர் மற்றவர்களை எப்போதுமே கரிசனையோடு நடத்தினார். “உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்” என்று அவர் சொன்னார். (மத். 11:28, 29) இயேசுவைப் போலவே நாமும், ‘ஏழைகளுக்கு கரிசனையோடு உதவினால்’ யெகோவாவின் இதயத்தைச் சந்தோஷப்படுத்துவோம்; அப்படிச் செய்வது நமக்கும் சந்தோஷத்தைத் தரும். (சங். 41:1) குடும்பத்தாரிடமும், சபையில் இருப்பவர்களிடமும், ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடமும் நாம் எப்படிக் கரிசனையோடு நடந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

குடும்பத்தாரிடம் கரிசனை

3. ஒரு கணவர் தன் மனைவியிடம் எப்படிக் கரிசனையோடு நடந்துகொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

3 குடும்பத்தாருக்குக் கரிசனை காட்டும் விஷயத்தில், குடும்பத் தலைவர்கள் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். (எபே. 5:25; 6:4) ஒரு கணவர் தன் மனைவியை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், மனைவியின்மேல் அக்கறை காட்ட வேண்டுமென்றும் பைபிள் சொல்கிறது. (1 பே. 3:7; அடிக்குறிப்பு) கரிசனையுள்ள ஒரு கணவர், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் பல விஷயங்களில் வித்தியாசங்கள் இருப்பதைப் புரிந்துகொள்வார். தன் மனைவியைவிட தன்னை உயர்ந்தவராக நினைக்க மாட்டார். (ஆதி. 2:18) தன் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கண்ணியத்தோடும் மதிப்போடும் நடத்துவார். கனடாவில் இருக்கும் ஒரு மனைவி தன் கணவரைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “என்னோட உணர்வுகளுக்கு அவர் எப்பவுமே மதிப்பு கொடுப்பாரு. எதையாவது நான் சொல்றப்போ, ‘அந்த மாதிரியெல்லாம் நீ யோசிக்க கூடாது’னு சொல்ல மாட்டாரு. நான் சொல்றதை காது கொடுத்து கேட்பாரு. நான் யோசிக்குற விதம் தப்பா இருந்துச்சுனா, அத சரி செய்வாரு; ஆனா அத அன்பா செய்வாரு.”

4. இன்னொரு பெண்ணிடம் பழகும் விஷயத்தில், ஒரு கணவர் எப்படித் தன் மனைவியின் உணர்வுகளை மதிக்கலாம்?

4 தன் மனைவியை கரிசனையோடு நடத்தும் ஒரு கணவர், இன்னொரு பெண்ணிடம் விளையாட்டுக் காதலில் ஈடுபட மாட்டார்; தேவையில்லாத அக்கறையையும் காட்ட மாட்டார். (யோபு 31:1) நேரிலோ சோஷியல் மீடியாவிலோ இன்டர்நெட்டிலோ அப்படிச் செய்யமாட்டார். ஆபாசமான வெப்சைட்டுகளையும் பார்க்க மாட்டார். தன் மனைவிக்கு எப்போதும் உண்மையோடு இருப்பார். ஏனென்றால், தன் மனைவியை அவர் நெஞ்சார நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, யெகோவாவின் மேலும் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்; தவறான காரியங்களையும் வெறுக்கிறார்.சங்கீதம் 19:14-ஐயும், 97:10-ஐயும் வாசியுங்கள்.

5. ஒரு மனைவி எப்படித் தன் கணவரிடம் கரிசனையோடு நடந்துகொள்ளலாம்?

5 தங்களுடைய தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைக் கணவர்கள் பின்பற்றும்போது, அவர்களுக்கு “ஆழ்ந்த மரியாதை” காட்டுவது மனைவிகளுக்குச் சுலபமாக இருக்கும். (எபே. 5:22-25, 33) தன் கணவர்மீது மரியாதை வைத்திருக்கும் ஒரு மனைவி, அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வாள். உதாரணத்துக்கு, சபை வேலைகளில் தன் கணவர் பிஸியாக இருக்கும்போதோ, ஏதாவதொரு பிரச்சினையைச் சமாளித்துக்கொண்டிருக்கும்போதோ, மனைவி அதைப் புரிந்துகொண்டு கரிசனையோடு நடந்துகொள்வாள். பிரிட்டனில் இருக்கும் ஒரு கணவர் இப்படிச் சொல்கிறார்: “என் மனசுல ஏதோ ஒண்ணு ஓடிட்டு இருக்குங்குறத என்னை பார்த்தே என்னோட மனைவி புரிஞ்சிக்குவா. நீதிமொழிகள் 20:5-ல சொல்லியிருக்கிற மாதிரி என் மனசுல இருக்குற விஷயத்தை ‘மொண்டெடுக்க’ முயற்சி செய்வா. சரியான நேரம் பார்த்து எங்கிட்ட பேசுறதுக்காக காத்துட்டு இருப்பா; அவகிட்ட சொல்ல முடிஞ்ச விஷயங்களா இருந்தா, எங்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவா.”

6. மற்றவர்களின் தேவைகளை மனதில் வைப்பதற்கும் கரிசனையோடு நடந்துகொள்வதற்கும் பிள்ளைகளை நாம் எல்லாரும் எப்படி உற்சாகப்படுத்தலாம், அப்படிச் செய்வதால் அவர்கள் எப்படிப் பிரயோஜனமடைவார்கள்?

6 பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் கரிசனையோடு நடத்தும்போது, பிள்ளைகளுக்கு அவர்கள் நல்ல முன்மாதிரி வைக்கிறார்கள். மற்றவர்களுடைய தேவைகளைப் பற்றி யோசிக்கவும், அவர்களுக்குக் கருணை காட்டவும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றத்தில் அங்குமிங்கும் ஓடக் கூடாது என்று சொல்லித்தரலாம். அல்லது, சகோதர சகோதரிகள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடும் சமயங்களில், வயதானவர்கள் முதலில் உணவை எடுத்த பிறகு தாங்கள் எடுக்கும்படி சொல்லித்தரலாம். பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விஷயத்தில், சபையில் இருக்கும் மற்றவர்களும் பெற்றோர்களுக்கு உதவலாம். எப்படி? பிள்ளைகள் கரிசனையோடு நடந்துகொள்ளும்போது, நாம் அவர்களைப் பாராட்டலாம். உதாரணத்துக்கு, ஒரு பிள்ளை, ராஜ்ய மன்றத்தின் கதவை நமக்காகத் திறந்துவிடும்போது, நாம் மனதாரப் பாராட்டலாம். இப்படிச் செய்யும்போது அந்தப் பிள்ளைக்குச் சந்தோஷமாக இருக்கும். “கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம்” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை அந்தப் பிள்ளை அப்போது புரிந்துகொள்ளும்.—அப். 20:35.

சபையில் கரிசனை

7. காதுகேட்காத மனிதனுக்கு இயேசு எப்படிக் கரிசனை காட்டினார், இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

7 ஒருநாள், தெக்கப்போலி பகுதியில் இயேசு இருந்தபோது, “காதுகேட்காதவனும், பேச்சுக் குறைபாடு உள்ளவனுமான ஒருவனை” மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். (மாற். 7:31-35) இயேசு அவனைக் குணப்படுத்தினார்; ஆனால், மற்றவர்களுக்கு முன்பாக அதைச் செய்யவில்லை. ஏனென்றால், அந்த மனிதன் காதுகேட்காதவனாக இருந்ததால், ஒரு பெரிய கூட்டத்துக்கு நடுவில் இருப்பதே அவனுக்குத் தர்மசங்கடமாக இருந்திருக்கலாம். அவனுடைய உணர்ச்சிகளை இயேசு புரிந்துகொண்டதால், “அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய்” யாரும் இல்லாத இடத்தில் அவனைக் குணப்படுத்தினார். இயேசுவைப் போல், நம்மால் அற்புதங்களைச் செய்ய முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், சகோதர சகோதரிகளின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு நம்மால் கருணை காட்ட முடியும். “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல்கூட எழுதினார். (எபி. 10:24) காதுகேட்காத அந்த மனிதனின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதால், இயேசு அவனைக் கரிசனையோடு நடத்தினார். நாம் பின்பற்றுவதற்கு ஓர் அருமையான முன்மாதிரி, இல்லையா?

8, 9. வயதானவர்களுக்கும் உடல்நலப் பிரச்சினையோடு போராடுபவர்களுக்கும் நாம் எப்படிக் கரிசனை காட்டலாம்? சில உதாரணங்களைக் கொடுங்கள்.

8 வயதானவர்களையும் உடல்நலப் பிரச்சினையோடு போராடுபவர்களையும் கரிசனையோடு நடத்துங்கள். கிறிஸ்தவ சபையாக நாம் எவ்வளவு சாதிக்கிறோம் என்பதைவிட நாம் எந்தளவு அன்பு காட்டுகிறோம் என்பதுதான் ரொம்ப முக்கியம். ஏனென்றால், அன்புதான் கிறிஸ்தவ சபையின் அடையாளம்! (யோவா. 13:34, 35) நம் மனதில் அன்பு இருந்தால், கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் வருவதற்கு, வயதான அல்லது உடல்நிலை மோசமாக இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வோம். அப்படி உதவி செய்வதில் நமக்குச் சில அசௌகரியங்கள் இருந்தாலும் நாம் தொடர்ந்து உதவுவோம். அல்லது, அவர்களால் கொஞ்சம் மட்டுமே செய்ய முடிந்தாலும் நாம் அவர்களுக்கு உதவுவோம். (மத். 13:23) வீல்சேர்தான் வாழ்க்கை என்று இருக்கும் மைக்கேல் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். தன்னுடைய குடும்பத்தாரும் சபையில் இருப்பவர்களும் தனக்கு செய்யும் உதவிக்காக அவர் ரொம்ப நன்றியோடு இருக்கிறார். “அவங்க எனக்கு உதவி செய்றதுனாலதான் என்னால் முடிஞ்சளவுக்கு எல்லா கூட்டத்துக்கும் போக முடியுது; ஊழியத்திலயும் கலந்துக்க முடியுது. முக்கியமா, பொது ஊழியம் செய்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவர் சொல்கிறார்.

9 உலகம் முழுவதும் இருக்கிற பல பெத்தேல் குடும்பங்களில், வயதான அல்லது உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளித்துவரும் உண்மையுள்ள சகோதர சகோதரிகளும் இருக்கிறார்கள். கடிதங்கள் மூலமும் தொலைப்பேசி மூலமும் சாட்சி கொடுப்பதற்கு, அங்கிருக்கும் கண்காணிகள் அவர்களுக்கு அன்போடு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். 86 வயதான பில் என்ற சகோதரர், ரொம்பத் தூரத்தில் இருக்கும் ஆட்களுக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் சாட்சி கொடுக்கிறார். “கடிதம் மூலமா சாட்சி கொடுக்குறத ஒரு பாக்கியமா நினைக்குறேன்” என்று அவர் சொல்கிறார். கிட்டத்தட்ட 90 வயதாகும் நான்சி என்ற சகோதரி, “வெறுமனே பக்கங்கள நிரப்புறதுக்காக நான் கடிதங்கள எழுதுறது கிடையாது. இதுவும் ஒரு விதமான ஊழியம்தான்! மக்களுக்கு சத்தியத்த பத்தி தெரியணும், இல்லையா?” என்று சொல்கிறார். 1921-ல் பிறந்த ஈத்தெல் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் வலி வேதனையோடதான் போயிட்டிருக்கு. சிலசமயத்துல, உடை உடுத்துறதே கஷ்டமா இருக்கும்.” இந்தச் சூழ்நிலையிலும் தொலைப்பேசியின் மூலம் சாட்சி கொடுப்பது அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நல்ல மறுசந்திப்புகளும் அவருக்கு இருக்கின்றன. 85 வயதான பார்பரா இப்படிச் சொல்கிறார்: “என்னோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு. அதனால ஊழியத்துக்கு தவறாம போறது கஷ்டமா இருக்கு. ஆனா தொலைப்பேசி மூலமா என்னால மத்தவங்ககிட்ட பேச முடியுது. யெகோவாவுக்கு ரொம்ப நன்றி!” ஒரு கிளை அலுவலகத்திலிருக்கும் வயதான சகோதர சகோதரிகள் ஒரு தொகுதியாகச் சேர்ந்து ஊழியத்தில் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள் தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குள், 1,228 மணிநேரம் ஊழியம் செய்திருக்கிறார்கள்; 6,265 கடிதங்களை எழுதியிருக்கிறார்கள்; 2,000-க்கும் அதிகமான தொலைப்பேசி அழைப்புகளைச் செய்திருக்கிறார்கள்; 6,315 பிரசுரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய முயற்சிகளைப் பார்த்து யெகோவா நிச்சயம் சந்தோஷத்தில் பூரித்துப்போயிருப்பார்!—நீதி. 27:11.

10. கூட்டங்களிலிருந்து முழு நன்மையடைய நம் சகோதரர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

10 கூட்டங்களில் கரிசனை. நாம் கரிசனையோடு நடந்துகொண்டால், கூட்டங்களிலிருந்து நம் சகோதரர்கள் முழு நன்மை அடைவார்கள். எப்படி? ஒரு வழி, கூட்டங்களுக்குச் சீக்கிரமாக வருவது! கூட்டம் ஆரம்பித்த பிறகு வந்தால், மற்றவர்களுடைய கவனம் சிதற வாய்ப்பிருக்கிறது. சிலசமயங்களில், தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகிவிடலாம். ஆனால், தாமதமாக வருவதே நம்முடைய பழக்கமாக இருந்தால், அது நம்முடைய சகோதரர்களை எப்படிப் பாதிக்கிறது என்றும், அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள நாம் என்ன செய்யலாம் என்றும் யோசித்துப்பார்க்க வேண்டும். கூட்டங்களுக்கு வரும்படி நம்மை அழைத்திருப்பது யெகோவாவும் அவருடைய மகன் இயேசுவும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. (மத். 18:20) சரியான நேரத்துக்கு நாம் கூட்டங்களுக்குப் போனால், அவர்கள் இரண்டு பேருக்கும் மரியாதை காட்டுகிறோம் என்று அர்த்தம்!

11. நியமிப்பைச் செய்யும் சகோதரர்கள் 1 கொரிந்தியர் 14:40-ல் சொல்லப்பட்டிருக்கும் அறிவுரைக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

11 நாம் கரிசனையோடு நடந்துகொண்டால், பைபிள் கொடுக்கும் ஓர் அறிவுரைக்குக் கீழ்ப்படிவோம். “எல்லா காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடக்க வேண்டும்” என்பதுதான் அந்த அறிவுரை! (1 கொ. 14:40) நியமிப்புகளைச் செய்யும் சகோதரர்கள் சரியான நேரத்துக்குள் முடிக்கும்போது, இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறார்கள் என்று சொல்லலாம். இப்படிச் செய்யும்போது, அடுத்த பேச்சாளருக்கு மட்டுமல்ல சபையாருக்கும் அவர்கள் கரிசனை காட்டுகிறார்கள். ஒருவேளை கூட்டம் தாமதமாக முடிந்தால், சகோதரர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்துப்பாருங்கள். உதாரணத்துக்கு, சிலர் தங்கள் வீட்டுக்குப் போக ரொம்பத் தூரம் வண்டி ஓட்ட வேண்டியிருக்கலாம். சிலர், பஸ் அல்லது ரயிலைப் பிடிக்க வேண்டியிருக்கலாம். சிலருடைய துணை சத்தியத்தில் இல்லாமல் இருக்கலாம்; குறிப்பிட்ட நேரத்துக்குள் இவர்கள் வீடு திரும்ப வேண்டுமென்று அந்தத் துணை எதிர்பார்க்கலாம்.

12. நாம் ஏன் மூப்பர்களுக்கு மதிப்புமரியாதையையும் அன்பையும் காட்ட வேண்டும்? (“ நம்மை வழிநடத்தும் சகோதரர்களுக்குக் கரிசனை காட்டுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

12 சபையிலும் ஊழியத்திலும் மூப்பர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதனால், நாம் அவர்களுக்கு மதிப்புமரியாதையையும் அன்பையும் காட்ட வேண்டும், இல்லையா? (1 தெசலோனிக்கேயர் 5:12, 13-ஐ வாசியுங்கள்.) அவர்கள் நமக்காகச் செய்யும் எல்லாவற்றுக்கும் நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த நன்றியை நாம் எப்படிச் செயலில் காட்டலாம்? அவர்களுக்கு முழு ஆதரவு காட்டுவதன் மூலமும், மனப்பூர்வமாகக் கீழ்ப்படிவதன் மூலமும்தான்! ஏனென்றால், அவர்கள் ‘நம்மைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால், நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள்.’—எபி. 13:7, 17.

ஊழியத்தில் கரிசனை

13. இயேசு மக்களை நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 இயேசுவைப் பற்றி ஏசாயா இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “மிதிபட்ட எந்த நாணலையும் ஒடித்துப்போட மாட்டார். மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார்.” (ஏசா. 42:3) இயேசுவுக்கு மக்கள்மேல் அன்பு இருந்ததால்தான், அனுதாபத்தோடு நடந்துகொண்டார். ‘மிதிபட்ட நாணலை’ போலவும், ‘மங்கியெரிகிற திரியை’ போலவும் இருந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டார். அதனால்தான், அவர்களுக்குக் கருணை காட்டினார்; அவர்களிடம் பொறுமையோடு நடந்துகொண்டார். பிள்ளைகள்கூட இயேசுவோடு இருக்க ஆசைப்பட்டார்கள். (மாற். 10:14) இயேசுவைப் போலவே மக்களைப் புரிந்துகொள்ளவோ அவர்களுக்குக் கற்றுத்தரவோ நம்மால் முடியாது என்பது உண்மைதான்! இருந்தாலும், ஊழியம் செய்யும் பகுதியிலிருக்கும் மக்களிடம் நாம் எப்படிக் கரிசனை காட்டலாம்? அவர்களிடம் எப்படிப் பேசுகிறோம்... எந்த நேரத்தில் சந்திக்கிறோம்... எவ்வளவு நேரம் பேசுகிறோம்... போன்ற விஷயங்களில் நாம் அவர்களுக்குக் கரிசனை காட்டலாம்.

14. மக்களிடம் நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதைப் பற்றி ஏன் யோசித்துப்பார்க்க வேண்டும்?

14 மக்களிடம் எப்படிப் பேச வேண்டும்? இன்று, மோசடி நிறைந்த வியாபாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் மதத்தலைவர்களாலும் கோடிக்கணக்கான மக்கள் “கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்” இருக்கிறார்கள். (மத். 9:36) அதனால், அவர்கள் யாரையும் நம்புவதில்லை. வாழ்க்கையில் அவர்களுக்கு எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருப்பதால், அவர்கள்மேல் நாம் உண்மையிலேயே அக்கறை வைத்திருக்கிறோம் என்பதை நம்முடைய வார்த்தைகளும் நாம் பேசும் விதமும் காட்ட வேண்டும். பெரும்பாலும், பைபிளிலிருக்கும் வசனங்களை நாம் அருமையாக எடுத்துப் பேசுகிறோம் என்பதற்காக மட்டுமல்ல, நாம் அவர்கள்மேல் அக்கறை காட்டுகிறோம் என்பதற்காகவும், அவர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்கிறோம் என்பதற்காகவும் மக்கள் நம் செய்தியைக் கேட்கிறார்கள்.

15. நாம் ஊழியம் செய்யும் பகுதியிலிருக்கும் மக்களிடம் கரிசனை காட்டுவதற்கான சில வழிகள் என்ன?

15 ஊழியம் செய்யும் பகுதியிலிருக்கும் மக்களிடம் கரிசனை காட்ட இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நாம் அவர்களிடம் கேள்வி கேட்கும்போது, மரியாதையோடும் கனிவோடும் கேட்க வேண்டும். பயனியராகச் சேவை செய்யும் ஒரு சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் ஊழியம் செய்யும் பகுதியில் இருக்கிற பெரும்பாலான மக்கள் கூச்ச சுபாவமுள்ளவர்கள். அதனால், அவர்களைத் தர்மசங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்காதபடி அவர் பார்த்துக்கொள்கிறார். “உங்களுக்கு கடவுளோட பெயர் தெரியுமா?” அல்லது “கடவுளுடைய அரசாங்கம்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்பதற்குப் பதிலாக, “கடவுளுக்கு ஒரு பேரு இருக்குங்குறத பைபிள்ல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன். அத உங்களுக்கு காட்டட்டுமா?” என்று கேட்பாராம். எல்லா இடங்களிலும் இந்த முறை பலன் தராது என்பது உண்மைதான். ஏனென்றால் மக்களின் கலாச்சாரம் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. நம்முடைய பகுதியிலிருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, நாம் அவர்களை எப்போதும் மரியாதையோடும் கரிசனையோடும் நடத்த வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுமென்றால், நாம் அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

16, 17. இந்த விஷயங்களில் நாம் எப்படிக் கரிசனை காட்டலாம்? (அ) மக்களை எப்போது சந்திக்கிறோம் என்பதில்... (ஆ) மக்களிடம் எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பதில்...

16 எந்த நேரத்தில் போய் மக்களைச் சந்திக்க வேண்டும்? நாம் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, எப்போதுமே மக்கள் நம்மை அன்போடு வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அவர்கள் அழைக்காமலேயே நாம் அவர்கள் வீட்டுக்குப் போகிறோம். அதனால், அவர்களுக்குச் சௌகரியமான நேரத்தில் நாம் போக வேண்டும். (மத். 7:12) உங்கள் பகுதியிலிருக்கும் மக்களுக்கு, வார இறுதி நாட்களில் ரொம்ப நேரம் தூங்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியென்றால், முதலில் தெரு ஊழியமோ பொது ஊழியமோ செய்துவிட்டு, அல்லது மறுசந்திப்புகளைச் சந்தித்துவிட்டு, பிறகு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியுமா என்று யோசித்துப்பாருங்கள்.

17 மக்களிடம் எவ்வளவு நேரம் பேச வேண்டும்? இப்போதெல்லாம் மக்கள் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள். அதனால், ரொம்ப நேரம் பேசுவதற்குப் பதிலாக, சுருக்கமாகப் பேச வேண்டும். அதுவும் முதல் தடவை சந்திக்கும்போது அப்படிச் செய்வது ரொம்பவே முக்கியம். (1 கொ. 9:20-23) அவர்கள் பிஸியாக இருப்பதை நாம் புரிந்துகொண்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தால், அடுத்த தடவை சந்திக்கும்போது நம்மிடம் பேசத் தயங்க மாட்டார்கள். கடவுளுடைய சக்தி உண்டாக்குகிற குணங்களை நாம் காட்டினால், நாம் உண்மையில் ‘கடவுளுடைய சக வேலையாட்களாக இருப்போம்.’ மற்றவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு யெகோவா நம்மைப் பயன்படுத்துவார்.—1 கொ. 3:6, 7, 9

18. மற்றவர்களுக்குக் கரிசனை காட்டும்போது நமக்கு என்ன ஆசீர்வாதம் கிடைக்கும்?

18 நம்முடைய குடும்பத்தாரிடமும், சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளிடமும், ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடமும் கரிசனை காட்ட நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, இன்றும் சரி எதிர்காலத்திலும் சரி, நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும். சங்கீதம் 41:1, 2 சொல்வதுபோல், “ஏழைக்கு கரிசனையோடு உதவுகிறவன் சந்தோஷமானவன். ஆபத்து நாளில் யெகோவா அவனைக் காப்பாற்றுவார். யெகோவா அவனைப் பாதுகாத்து, உயிரோடு வைப்பார். இந்தப் பூமியில் அவன் சந்தோஷமானவன் என்று புகழப்படுவான்.”