Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்வ வல்லவர், இருந்தாலும் கரிசனையுள்ளவர்!

சர்வ வல்லவர், இருந்தாலும் கரிசனையுள்ளவர்!

“நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை [யெகோவா] நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.”—சங். 103:14.

பாடல்கள்: 91, 9

1, 2. (அ) அதிகாரம் படைத்த மனிதர்கள் மற்றவர்களை நடத்தும் விதத்துக்கும், யெகோவா மற்றவர்களை நடத்தும் விதத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

அதிகாரம் படைத்தவர்கள், பெரும்பாலும் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். (மத். 20:25; பிர. 8:9) ஆனால், யெகோவா ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை. அவர் சர்வ வல்லமையுள்ளவராக, அதாவது இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக சக்தி படைத்தவராக, இருந்தபோதிலும் பாவ இயல்புள்ள மனிதர்களிடம் கரிசனையோடு நடந்துகொள்கிறார். நம்முடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு நம்மிடம் தயவோடும் அக்கறையோடும் நடந்துகொள்கிறார். நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பதும், நமக்கு வரம்புகள் இருக்கின்றன என்பதும் அவருக்குத் தெரியும். அதனால், நம்மால் முடியாததை அவர் எதிர்பார்ப்பதில்லை.—சங். 103:13, 14.

2 தன்னுடைய மக்களிடம் யெகோவா எப்படிக் கரிசனையோடு நடந்துகொண்டார் என்பதைப் பற்றிய பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. மூன்று பதிவுகளை இப்போது பார்க்கலாம். (1) தலைமைக் குருவான ஏலியிடம் நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொல்வதற்கு, சிறுவன் சாமுவேலுக்கு யெகோவா உதவியதைப் பற்றிய பதிவு. (2) இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்த தன்னால் முடியாதென்று மோசே உணர்ந்தபோது, பொறுமையாக அவருக்கு உதவியதைப் பற்றிய பதிவு. (3) எகிப்தைவிட்டு வெளியேறிய இஸ்ரவேலர்களை கரிசனையோடு நடத்தியதைப் பற்றிய பதிவு. இந்தப் பதிவுகளிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?

ஒரு சிறுவனுக்குக் காட்டப்பட்ட கரிசனை

3. ஒருநாள் ராத்திரி வழக்கத்துக்கு மாறான என்ன சம்பவம் நடந்தது, நம் மனதில் என்ன கேள்வி எழுகிறது? (ஆரம்பப் படம்)

3 சிறுவனாக இருந்தபோதே சாமுவேல் வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய ஆரம்பித்தான். (1 சா. 3:1) ஒருநாள் ராத்திரி சாமுவேல் படுக்கைக்குப் போன பிறகு, வழக்கத்துக்கு மாறான ஒரு சம்பவம் நடந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 சாமுவேல் 3:2-10-ஐ வாசியுங்கள்.) யாரோ தன்னைக் கூப்பிடுவது சாமுவேலின் காதில் விழுந்தது. வயதான தலைமைக் குரு ஏலிதான் தன்னைக் கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் ஓடிப்போய், “என்னைக் கூப்பிட்டீர்களா?” என்று சாமுவேல் கேட்டான். “நான் உன்னைக் கூப்பிடவில்லையே” என்று ஏலி சொன்னார். இப்படியே இரண்டு தடவை நடந்தது. அப்போது, கடவுள்தான் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி புரிந்துகொண்டார். அதனால், அடுத்த தடவை என்ன செய்ய வேண்டுமென்று சாமுவேலிடம் அவர் சொன்னார். அவர் சொன்னபடியே சாமுவேல் செய்தான். சாமுவேலை கூப்பிட்டது தான்தான் என்று யெகோவா ஏன் அவனிடம் ஆரம்பத்திலேயே சொல்லவில்லை? இதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், சாமுவேலின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டதால்தான் யெகோவா அப்படிச் செய்தார் என்று நாம் நம்பலாம்.

4, 5. (அ) ஏலியிடம் ஒரு செய்தியைச் சொல்லும்படி யெகோவா சொன்னபோது சாமுவேல் என்ன செய்தான்? (ஆ) சாமுவேலைப் பற்றிய இந்தப் பதிவு யெகோவாவைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது?

4 ஒன்று சாமுவேல் 3:11-18-ஐ வாசியுங்கள். பெரியவர்களுக்கு, அதுவும் முக்கியமான பொறுப்புகளிலிருந்த பெரியவர்களுக்கு, சிறு பிள்ளைகள் மரியாதை தர வேண்டுமென்று யெகோவாவின் சட்டம் சொல்லியிருந்தது. (யாத். 22:28; லேவி. 19:32) அப்படியிருக்கும்போது, சாமுவேலைப் போன்ற ஒரு சிறுவன், விடியற்காலையிலேயே எழுந்துபோய் யெகோவாவின் கடுமையான நியாயத்தீர்ப்புச் செய்தியை ஏலியிடம் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! அது எவ்வளவு கஷ்டமான ஒரு வேலையாக இருந்திருக்கும்! அதனால்தான், ‘அந்தத் தரிசனத்தைப் பற்றி ஏலியிடம் சொல்வதற்கு சாமுவேல் பயந்தான்’ என்று பைபிள் சொல்கிறது. சாமுவேலைக் கூப்பிட்டது தான்தான் என்பதை ஏலி உணரும்படி யெகோவா செய்தார். அதனால், கடவுளின் செய்தியை மறைக்காமல் தன்னிடம் சொல்லும்படி சாமுவேலிடம் ஏலி சொன்னார். ஏலியின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து “எல்லாவற்றையும்” சாமுவேல் சொன்னான்

5 இதேபோன்ற ஒரு செய்தியை “கடவுளால் அனுப்பப்பட்ட ஒருவர்” ஏலியிடம் முன்னதாகவே சொல்லியிருந்ததால், சாமுவேல் சொன்னது எதிர்பார்க்காத ஒரு செய்தி என்று சொல்ல முடியாது. (1 சா. 2:27-36) யெகோவா எவ்வளவு கரிசனையுள்ளவர், எவ்வளவு ஞானமுள்ளவர் என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது.

6. சிறுவனாக இருந்த சாமுவேலுக்கு கடவுள் உதவியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 நீங்கள் ஓர் இளைஞரா? அப்படியென்றால், சாமுவேலைப் பற்றிய பதிவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? உங்கள் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் யெகோவா புரிந்துகொள்கிறார் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவேளை, உங்களுக்குக் கூச்ச சுபாவம் இருக்கலாம்; அதனால், வயதில் பெரியவர்களுக்குப் பிரசங்கிப்பதோ மற்ற இளைஞர்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதோ உங்களுக்குச் சவாலாக இருக்கலாம். ஆனால், யெகோவா உங்களுக்கு உதவ விரும்புவதால் அவரிடம் ஜெபம் செய்யுங்கள்; உங்கள் உணர்வுகளை அவரிடம் கொட்டுங்கள். (சங். 62:8) சாமுவேலைப் போன்ற மற்ற இளைஞர்களின் உதாரணங்களை பைபிளில் வாசித்து, அதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பாருங்கள். உங்கள் வயதிலிருக்கும் அல்லது உங்களைவிட வயதில் மூத்த சகோதர சகோதரிகளிடம் பேசுங்கள்; நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களும் சந்தித்திருப்பார்கள். யெகோவா எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவினார், அதுவும் எதிர்பார்க்காத விதங்களில் எப்படி உதவினார் என்பதைப் பற்றி அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.

மோசேக்குக் காட்டப்பட்ட கரிசனை

7, 8. மோசேயின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதை யெகோவா எப்படிக் காட்டினார்?

7 மோசேக்கு 80 வயது இருந்தபோது, கஷ்டமான ஒரு நியமிப்பை யெகோவா அவருக்குக் கொடுத்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை விடுவிக்க வேண்டிய நியமிப்புதான் அது! (யாத். 3:10) இந்த நியமிப்பைப் பற்றிக் கேட்டபோது மோசேக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனென்றால், மீதியான் தேசத்தில் அவர் 40 வருஷங்களாக ஒரு சாதாரண மேய்ப்பனாகத்தான் இருந்தார். அதனால், “பார்வோனிடம் போவதற்கும் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று யெகோவாவிடம் அவர் கேட்டார். அதற்கு யெகோவா, “நான் உன்னோடு இருப்பேன்” என்று சொல்லி மோசேக்கு தைரியம் கொடுத்தார். (யாத். 3:11, 12) அதுமட்டுமல்ல, மோசே சொல்வதை இஸ்ரவேலின் பெரியோர்கள் “நிச்சயம் கேட்பார்கள்” என்றும் உறுதியளித்தார். இருந்தாலும், “அவர்கள் நான் சொல்வதைக் கேட்காமலும் என்னை நம்பாமலும் போனால், என்ன செய்வது?” என்று மோசே மறுபடியும் கேட்டார். (யாத். 3:18; 4:1) ‘யெகோவாவே நீங்க சொல்ற மாதிரியெல்லாம் நடக்கும்னு எனக்கு தோணல’ என்றுதான் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்! ஆனால், மோசேயிடம் யெகோவா பொறுமையாக இருந்தார்; அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் கொடுத்தார். சொல்லப்போனால், பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களிலேயே இந்த வல்லமையைப் பெற்ற முதல் நபர் மோசேதான்!—யாத். 4:2-9, 21.

8 யெகோவா இவ்வளவு சொன்ன பிறகாவது மோசே ஒத்துக்கொண்டாரா? இல்லை, மறுபடியும் இன்னொரு சாக்குப்போக்கைச் சொன்னார். அதாவது, தனக்குச் சரளமாகப் பேச வராது என்று சொன்னார். அதனால், “நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ என்ன பேச வேண்டும் என்பதை நான் சொல்லிக்கொடுப்பேன்” என்று யெகோவா சொன்னார். இப்போதாவது மோசே திருப்தியடைந்தாரா? இல்லை. தனக்குப் பதிலாக வேறொருவரை அனுப்பும்படி சொன்னார்! இதைக் கேட்டு யெகோவா கோபப்பட்டார். இருந்தாலும், மோசேயின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மோசேயின் சார்பாகப் பேச ஆரோனை அனுப்பினார்.—யாத். 4:10-16.

9. மோசே ஒரு நல்ல தலைவராக ஆவதற்கு யெகோவா காட்டிய பொறுமையும் தயவும் எப்படி உதவின?

9 இந்தப் பதிவு யெகோவாவைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது? யெகோவா சர்வ வல்லவராக இருப்பதால், தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி மோசேயை பயமுறுத்தியிருக்கலாம்; தனக்குக் கீழ்ப்படியும்படி செய்திருக்கலாம். ஆனால், யெகோவா அப்படிச் செய்யவில்லை; பொறுமையாகவும் தயவாகவும் நடந்துகொண்டார். மனத்தாழ்மையுள்ள அந்த ஊழியனோடு இருப்பதாக உறுதியளித்தார். யெகோவா இப்படிச் செய்தது பலன் தந்ததா? நிச்சயமாக! மோசே கடவுளுடைய மக்களின் மாபெரும் தலைவராக ஆனார்! யெகோவா எப்படி அவரிடம் சாந்தத்தோடும் கரிசனையோடும் நடந்துகொண்டாரோ, அதேபோல் அவரும் மற்றவர்களிடம் நடந்துகொள்ள முயற்சி செய்தார்.—எண். 12:3.

யெகோவாவைப் போல் மற்றவர்களை நடத்துகிறீர்களா? (பாரா 10)

10. யெகோவாவைப் போலவே மற்றவர்களுக்குக் கரிசனை காட்டும்போது நமக்கு என்ன பலன்கள் கிடைக்கின்றன?

10 நீங்கள் ஒரு கணவரா, பெற்றோரா, அல்லது மூப்பரா? அப்படியென்றால், மற்றவர்கள்மேல் உங்களுக்கு ஓரளவு அதிகாரம் இருக்கிறது. அதனால், யெகோவாவைப் போலவே நீங்களும் உங்கள் மனைவியிடம், பிள்ளைகளிடம் அல்லது சபையில் இருப்பவர்களிடம், பொறுமையாகவும் தயவாகவும் நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம்! (கொலோ. 3:19-21; 1 பே. 5:1-3) யெகோவாவையும் பெரிய மோசேயாகிய இயேசு கிறிஸ்துவையும் நீங்கள் பின்பற்றினால், உங்களிடம் வந்து பேசுவது மற்றவர்களுக்குச் சுலபமாக இருக்கும்; நீங்களும் அவர்களை உற்சாகப்படுத்த முடியும். (மத். 11:28, 29) அவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாகவும் இருக்க முடியும்.—எபி. 13:7.

வல்லமையுள்ள, ஆனால் கரிசனையுள்ள மீட்பர்

11, 12. எகிப்தைவிட்டுக் கிளம்பிய இஸ்ரவேலர்களை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் யெகோவா எப்படி உணரவைத்தார்?

11 கி.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுக் கிளம்பியபோது, அவர்களுடைய எண்ணிக்கை சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் பிள்ளைகள், வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், மாற்றுத் திறனாளிகள் என எல்லாரும் இருந்திருப்பார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தை வழிநடத்த அக்கறையான, புரிந்து நடந்துகொள்கிற ஒரு தலைவர் தேவை என்பதில் சந்தேகமே இல்லை. யெகோவா அப்படிப்பட்ட தலைவராகத்தான் இருந்தார்; மோசேயின் மூலம் அவர் அந்த மக்களை வழிநடத்தினார். அதனால், தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரான எகிப்தைவிட்டுக் கிளம்பியபோது இஸ்ரவேலர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.—சங். 78:52, 53.

12 தன்னுடைய மக்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணருவதற்கு யெகோவா என்ன ஏற்பாடுகளைச் செய்தார்? ‘ஒரு படையைப் போல அணிவகுத்துப் போகும்படி’ அவர் அந்தத் தேசத்தை ஒழுங்கமைத்தார். (யாத். 13:18) அவர்கள் அப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததால் யெகோவாதான் தங்களை வழிநடத்துகிறார் என்பதை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதோடு, ‘பகலில் ஒரு மேகத்தையும்,’ ‘ராத்திரியில் நெருப்பின் வெளிச்சத்தையும்’ அவர் கொடுத்தார். யெகோவாதான் தங்களைப் பாதுகாக்கிறார், வழிநடத்துகிறார் என்பதை இது அவர்களுக்கு நினைப்பூட்டியது. (சங். 78:14) அடுத்து வரவிருந்த சவாலைச் சந்திக்கவும் இது அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது.

செங்கடல் வழியாகத் தன்னுடைய மக்களை வழிநடத்தியபோது, யெகோவா எப்படி அவர்களைக் கரிசனையோடு கவனித்துக்கொண்டார்? (பாரா 13)

13, 14. (அ) செங்கடல் வழியாக இஸ்ரவேலர்களை யெகோவா எப்படி வழிநடத்திக்கொண்டு போனார்? (ஆ) எகிப்தியர்களைவிட தனக்கு அதிக வல்லமை இருக்கிறது என்பதை யெகோவா எப்படி நிரூபித்தார்?

13 யாத்திராகமம் 14:19-22-ஐ வாசியுங்கள். இஸ்ரவேலர்களோடு நீங்களும் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது, எகிப்தியர்களின் படை உங்களைத் துரத்திக்கொண்டு வருகிறது; உங்கள் முன்னால் இருப்பதோ செங்கடல்! வசமாக மாட்டிக்கொண்டதுபோல் உணருகிறீர்கள். இப்போது யெகோவா தலையிடுகிறார்! உங்கள் முன்னால் போய்க்கொண்டிருந்த மேகத் தூண் இப்போது உங்கள் முகாமுக்கு பின்னால் போய், உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் இடையில் வந்து நிற்கிறது. எகிப்தியர்கள் இருட்டில் தவிக்கிறார்கள்; ஆனால் உங்கள் முகாமோ அற்புதமான வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. இப்போது, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டுகிறார். கிழக்கிலிருந்து பலத்த காற்று வீசுகிறது. கடல் இரண்டாகப் பிளக்கிறது! கடல்படுகை உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது! அது சேரும் சகதியுமாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே அதில் கால் வைக்கிறீர்கள். ஆனால் அது நன்றாகக் காய்ந்திருக்கிறது! கொஞ்சம்கூட வழுக்கவே இல்லை! உங்களால் சுலபமாக நடந்துபோக முடிகிறது! நீங்களும், உங்கள் குடும்பமும், உங்களுடைய மிருகங்களும், அந்தக் கடல்படுகையில் மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்ந்து சீராக நடந்துபோகிறீர்கள். வேகமாக நடக்க முடியாதவர்கள்கூட பத்திரமாக அக்கரைக்குப் போய்ச் சேருகிறார்கள்!

14 யாத்திராகமம் 14:23-ஐயும் 26-30-ஐயும் வாசியுங்கள். இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, பெருமைபிடித்த பார்வோன் முட்டாள்தனமாக உங்களையும் மற்ற இஸ்ரவேலர்களையும் துரத்திக்கொண்டே வருகிறான். இப்போது, மறுபடியும் மோசே தன் கையை கடலுக்கு நேராக நீட்டுகிறார். மதில்போல் நின்றுகொண்டிருந்த தண்ணீர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது. பார்வோனும் அவனுடைய படையிலிருந்த எல்லாரும் கடலுக்குள் மூழ்குகிறார்கள்; ஒருவர்கூட தப்பிக்கவில்லை!—யாத். 15:8-10.

15. இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

15 இந்தப் பதிவு யெகோவாவைப் பற்றி இன்னொரு விஷயத்தைக் கற்றுத்தருகிறது. அதாவது, அவர் எல்லாவற்றையும் சீராகச் செய்பவர்! அதனால், நாம் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணருகிறோம். (1 கொ. 14:33) ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொள்வதைப் போல, யெகோவாவும் தன்னுடைய மக்களை நடைமுறையான வழிகளில் கவனித்துக்கொள்கிறார். தங்களுடைய எதிரிகளிடமிருந்து யெகோவா அவர்களைப் பாதுகாக்கிறார். இந்த உலகத்துக்கு முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், யெகோவா தரும் பாதுகாப்பு நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது, இல்லையா?—நீதி. 1:33.

16. இஸ்ரவேலர்களை யெகோவா காப்பாற்றியதைப் பற்றிய பதிவைப் படிப்பது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?

16 இன்றும் ஒரு தொகுதியாக யெகோவா தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார். தன்னோடு ஒரு நல்ல பந்தத்தைக் காத்துக்கொள்ள அவர் உதவுகிறார்; எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கிறார். வெகு சீக்கிரத்தில் வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின்போதும் அவர்களைப் பாதுகாப்பார். (வெளி. 7:9, 10) அதனால், கடவுளுடைய மக்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி வயதானவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் சரி மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் சரி, பயப்படுவதற்கு எந்த அவசியமும் இருக்காது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதற்குப் பதிலாக, இயேசுவின் வார்த்தைகளை அவர்கள் மனதில் வைப்பார்கள். “நீங்கள் நேராக நிமிர்ந்து நின்று, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏனென்றால், உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது” என்று அவர் சொன்னார். (லூக். 21:28) பார்வோனைவிட சக்திபடைத்த கோகுவினால், அதாவது தேசங்களினால், தாக்கப்படும்போதும் யெகோவா தங்களைப் பாதுகாப்பாரென்று அவர்கள் நம்பிக்கையோடு இருப்பார்கள். (எசே. 38:2, 14-16) ஏனென்றால், யெகோவா மாறாதவர்! அவர் அன்பான, கரிசனையான மீட்பர் என்பதை மறுபடியும் நிரூபிப்பார்.—ஏசா. 26:3, 20.

17. (அ) தன்னுடைய மக்களை யெகோவா எப்படியெல்லாம் கவனித்துக்கொண்டார் என்பதைப் பற்றிப் படிப்பது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 தன்னுடைய மக்களை யெகோவா எப்படியெல்லாம் கவனித்துக்கொண்டார், வழிநடத்தினார், பாதுகாத்தார் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம். இதுபோன்ற பதிவுகளைப் படிக்கும்போது, யெகோவாவைப் பற்றி அவை என்ன சொல்கின்றன என்று யோசித்துப்பாருங்கள்; இதுவரை உங்களுக்குத் தெரியாத புதுப்புது விஷயங்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்மீது இருக்கும் அன்பும் விசுவாசமும் பலமாகும். நம்முடைய குடும்பத்திலும் சபையிலும் ஊழியத்திலும் நாம் எப்படி யெகோவாவைப் போல் கரிசனையோடு நடந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 3 இந்தச் சம்பவம் நடந்தபோது சாமுவேலுக்கு 12 வயது என்று யூத சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் சொல்கிறார்.

^ பாரா. 16 அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்களில், மாற்றுத் திறனாளிகளும் இருக்கலாம். இயேசு பூமியிலிருந்தபோது, “எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார்.” அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்களையும் அவர் குணமாக்குவார் என்பதை அது காட்டியது. (மத். 9:35) ஆனால், உயிர்த்தெழுந்து வருபவர்களுக்கு ஆரோக்கியமான உடல் இருக்கும்.