Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தொடர்ந்து அன்பு காட்டுங்கள்—அது மற்றவர்களைப் பலப்படுத்தும்!

தொடர்ந்து அன்பு காட்டுங்கள்—அது மற்றவர்களைப் பலப்படுத்தும்!

‘அன்பு பலப்படுத்துகிறது.’—1 கொ. 8:1.

பாடல்கள்: 73, 83

1. தன்னுடைய சீஷர்களோடு இருந்த கடைசி ராத்திரியன்று, முக்கியமான எந்த விஷயத்தைப் பற்றி இயேசு பேசினார்?

இயேசு தன்னுடைய சீஷர்களோடு இருந்த கடைசி ராத்திரியன்று, கிட்டத்தட்ட 30 தடவை அன்பைப் பற்றிப் பேசினார். “ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும்” என்று தன் சீஷர்களிடம் அவர் சொன்னார். (யோவா. 15:12, 17) அவர்கள்தான் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என்று மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளுமளவுக்கு, அவர்களுடைய அன்பு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கவிருந்தது! (யோவா. 13:34, 35) இயேசு சொன்ன அந்த அன்பு வெறுமனே உணர்ச்சி ரீதியிலான அன்பு அல்ல, அது வலிமையானது; அதில் சுயதியாகம் உட்பட்டிருக்கிறது. அதனால்தான், “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை. என்னுடைய கட்டளைப்படி நீங்கள் நடந்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார்.—யோவா. 15:13, 14.

2. (அ) கடவுளுடைய ஊழியர்கள் இன்று எதற்குப் பேர்போனவர்கள்? (ஆ) எந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?

2 உண்மையோடும் சுயதியாகத்தோடும் காட்டுகிற அன்புக்கும், முறிக்க முடியாத ஒற்றுமைக்கும் இன்று யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்கள்! (1 யோ. 3:10, 11) நாம் எந்த நாடு அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, என்ன மொழி பேசினாலும் சரி, எங்கிருந்து வந்திருந்தாலும் சரி, எப்படி வளர்க்கப்பட்டிருந்தாலும் சரி, உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளாகிய நாம், ஒருவர்மேல் ஒருவர் உண்மையான அன்பைக் காட்டுகிறோம். அன்பு காட்டுவது இன்று ஏன் அவ்வளவு முக்கியம்? யெகோவாவும் இயேசுவும் நம்மேல் அன்பு காட்டுவதன் மூலம் நம்மை எப்படிப் பலப்படுத்துகிறார்கள்? அன்பு காட்டுவதன் மூலம் நாம் எப்படி மற்றவர்களை ஆறுதல்படுத்தலாம், பலப்படுத்தலாம்?—1 கொ. 8:1.

அன்பு காட்டுவது இன்று ஏன் அவ்வளவு முக்கியம்?

3. “நிலைமை படுமோசமாக இருக்கும்” இந்தக் காலத்தில் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?

3 “நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்; வாழ்க்கை ‘துன்ப துயரங்களால் நிறைந்திருக்கிறது.’ (2 தீ. 3:1-5; சங். 90:10) நிறைய மக்கள் தாங்க முடியாத வேதனைகளை அனுபவிப்பதால், வாழவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஒவ்வொரு வருஷமும், 8,00,000-க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்; ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் என்ற கணக்கில் தற்கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன! வாழப் பிடிக்காமல், நம்முடைய சகோதர சகோதரிகளில் சிலர்கூட தற்கொலை செய்துகொள்வது ரொம்பவே வருத்தமான விஷயம்!

4. தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்த கடவுளுடைய ஊழியர்கள் சிலரைப் பற்றிச் சொல்லுங்கள்.

4 கடந்த காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களில் சிலர், தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் ரொம்பவே வேதனைப்பட்டிருக்கிறார்கள்; சாவதே மேல் என்றுகூட நினைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, வேதனை தாங்க முடியாத யோபு, “எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது; உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை” என்று சொன்னார். (யோபு 7:16; 14:13) ரொம்பவே ஏமாற்றமடைந்த யோனா, “யெகோவாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள். நான் வாழ்வதைவிட சாவதே மேல்” என்று சொன்னார். (யோனா 4:3) நம்பிக்கையிழந்துபோன எலியா தீர்க்கதரிசியும், “போதும், யெகோவாவே! என் உயிரை எடுத்துவிடுங்கள்” என்று சொன்னார். (1 ரா. 19:4) ஆனால், அந்த உண்மை ஊழியர்களை யெகோவா நேசித்தார்; அவர்கள் வாழ வேண்டுமென்றும் விரும்பினார். அவர்கள் அப்படிப் பேசியதற்காக யெகோவா அவர்களைக் கண்டிக்கவில்லை. அதற்குப் பதிலாக, வாழ வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவினார். அதன் மூலம், அவர்களால் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்ய முடிந்தது.

5. சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய அன்பு ஏன் தேவை?

5 இன்று நம்முடைய சகோதர சகோதரிகள் நிறைய பேர், தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்; அவர்களுக்கு நம்முடைய அன்பு ரொம்பவே தேவை. சிலர், கேலி கிண்டல் செய்யப்படுகிறார்கள் அல்லது துன்புறுத்தப்படுகிறார்கள். வேறுசிலர், கூட வேலை செய்கிறவர்களுடைய வம்புக்கு அல்லது புறணிப்பேச்சுக்கு ஆளாகிறார்கள். சிலர், ரொம்ப நேரம் வேலை செய்து செய்து களைத்துப்போகிறார்கள் அல்லது மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிற வேலையை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் சிலருக்கு, குடும்பப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒருவேளை, அவர்களுடைய கணவரோ மனைவியோ சத்தியத்தில் இல்லாமல் இருக்கலாம்; சதா அவர்களுடைய பழிப்பேச்சுக்கு ஆளாகலாம். இதுபோன்ற பல பிரச்சினைகளால், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நிறைய பேர் ரொம்பவே சோர்ந்துபோகிறார்கள். இவர்களுக்கு யாரால் உதவ முடியும்?

யெகோவா காட்டுகிற அன்பு நம்மைப் பலப்படுத்துகிறது

6. யெகோவா காட்டுகிற அன்பு அவருடைய ஊழியர்களை எப்படிப் பலப்படுத்துகிறது?

6 இன்றும் என்றென்றும் நம்மை நேசிப்பதாக யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். “நீ எனக்குத் தங்கமானவன். உன்னைக் கௌரவப்படுத்தினேன்; உன்மேல் அன்பு வைத்தேன். . . . பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்” என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா சொன்னார். (ஏசா. 43:4, 5) அதைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள் என்பது நமக்குத் தெரியும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “சக்திபடைத்த அவர் உன்னைக் காப்பாற்றுவார். உன்னை நினைத்துப் பூரித்துப்போவார்” என்று பைபிள் சொல்கிறது.—செப். 3:16, 17.

7. யெகோவாவின் அன்பு, பாலூட்டும் ஒரு தாயின் அன்பைப் போல் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆரம்பப் படம்)

7 தன்னுடைய மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் சரி, அவர்களைப் பலப்படுத்துவதாகவும் ஆறுதல்படுத்துவதாகவும் யெகோவா வாக்குக் கொடுக்கிறார். “நீங்கள் மடியில் வைத்துப் பாலூட்டப்படுவீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள். முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல, நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார். (ஏசா. 66:12, 13) தன்னுடைய மக்களை அவர் எந்தளவு நேசிக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஒரு பிள்ளை, தன்னுடைய அம்மா தன்னைத் தூக்கிவைத்துக்கொள்ளும்போதோ, தன்னோடு சேர்ந்து விளையாடும்போதோ பாதுகாப்பாக உணர்வான், இல்லையா? யெகோவா உங்களை ரொம்ப நேசிக்கிறார், நீங்கள் பாதுகாப்பாக உணர வேண்டுமென்று ஆசைப்படுகிறார். நீங்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்; அதில் உங்களுக்கு எப்போதுமே சந்தேகம் வேண்டாம்!—எரே. 31:3.

8, 9. கிறிஸ்துவின் அன்பு நம்மை எப்படிப் பலப்படுத்துகிறது?

8 யெகோவா நம்மை நேசிக்கிறார் என்று நம்புவதற்கு இன்னொரு காரணத்தை இப்போது பார்க்கலாம். “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்” என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 3:16) நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்ததன் மூலம், இயேசுவும் நம்மை நேசிப்பதைக் காட்டியிருக்கிறார்; அந்த அன்பு நம்மைப் பலப்படுத்துகிறது. ‘உபத்திரவமோ வேதனையோ,’ எதுவாக இருந்தாலும், “இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று” பைபிள் சொல்கிறது.—ரோ. 8:35, 38, 39.

9 நம்முடைய பிரச்சினைகள், சிலசமயங்களில் உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நம்மைப் பலவீனப்படுத்தலாம்; அதனால், யெகோவாவின் சேவையில் நாம் சந்தோஷத்தை இழந்துவிடலாம். ஆனால், கிறிஸ்து நம்மை எந்தளவு நேசிக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, சகித்திருப்பதற்குத் தேவையான பலம் நமக்குக் கிடைக்கும். (2 கொரிந்தியர் 5:14, 15-ஐ வாசியுங்கள்.) அதோடு, தொடர்ந்து வாழவும், யெகோவாவுக்குச் சேவை செய்யவும் நாம் விரும்புவோம். பேரழிவுகள்... துன்புறுத்தல்கள்... ஏமாற்றங்கள் அல்லது கவலைகள்... என எதை அனுபவித்தாலும், சோர்ந்துவிடாமல் இருக்க இயேசுவின் அன்பு நமக்கு உதவும்.

நம் சகோதரர்களுக்கு நம்முடைய அன்பு தேவை

இயேசுவின் முன்மாதிரியை வாசிப்பது உங்களுக்குத் தூண்டுதலாக இருக்கும் (பாராக்கள் 10, 11)

10, 11. சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துகிற கடமை யாருக்கு இருக்கிறது? விளக்கவும்.

10 தன்னுடைய அன்பின் மூலம் நம்மைப் பலப்படுத்துவதற்காக சபையையும் யெகோவா பயன்படுத்துகிறார். சபையில் இருக்கிற நம் சகோதர சகோதரிகளை நேசிக்கும்போது, நாம் யெகோவாவை நேசிக்கிறோம் என்று அர்த்தம்! அவர்கள் தங்கமானவர்கள் என்பதையும், யெகோவா அவர்களை நேசிக்கிறார் என்பதையும் அவர்கள் உணர்வதற்கு, நம்மால் முடிந்ததையெல்லாம் செய்வோம். (1 யோ. 4:19-21) “நீங்கள் இப்போது செய்து வருகிறபடியே எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தெ. 5:11) இது மூப்பர்களுடைய கடமை மட்டுமே அல்ல, நம் எல்லாருடைய கடமையும்கூட! நம் சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலாக இருப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றலாம்.ரோமர் 15:1, 2-ஐ வாசியுங்கள்.

11 சபையில் இருக்கிற சிலர், கடும் மனச்சோர்வால் அல்லது தீராத கவலையால் அவதிப்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். (லூக். 5:31) மூப்பர்களும் சகோதர சகோதரிகளும் பயிற்சி பெற்ற டாக்டர்கள் இல்லை என்பது உண்மைதான்; இருந்தாலும், அவர்கள் செய்கிற உதவியும், அவர்கள் தருகிற ஆறுதலும் ரொம்பவே முக்கியம். சபையில் இருக்கிற எல்லாராலும் ‘மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேச முடியும், பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியும், எல்லாரிடமும் பொறுமையாக இருக்க முடியும்.’ (1 தெ. 5:14) நம் சகோதர சகோதரிகள் உள்ளுக்குள் எப்படிப்பட்ட உணர்ச்சிகளோடு போராடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்கிறோம். நாம் அவர்களிடம் பொறுமையோடு இருக்க வேண்டும்; அவர்கள் சோர்வாக இருக்கும்போது, ஆறுதலாகப் பேச வேண்டும். மற்றவர்களைப் பலப்படுத்த நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? மற்றவர்களுக்கு ஆறுதல் தரும் விஷயத்திலும், மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற விஷயத்திலும் நீங்கள் எப்படி இன்னும் முன்னேறலாம்?

12. சபை மூலம் கிடைக்கிற அன்பால் பலமடைந்த ஒரு சகோதரியின் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

12 ஐரோப்பாவில் இருக்கிற ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “தற்கொலை செஞ்சுக்கலாம்னு சிலசமயங்கள்ல நான் நினைப்பேன். ஆனா, எனக்கு ஆதரவு தர்றதுக்கு எப்பவும் ஆட்கள் இருக்காங்க. இன்னைக்கு நான் உயிரோட இருக்குறேன்னா, அதுக்கு என்னோட சபையில இருக்குறவங்கதான் காரணம். சகோதர சகோதரிகளோட அன்பும் அரவணைப்பும் எப்பவுமே எனக்கு இருக்கு. நான் மனச்சோர்வால கஷ்டப்படுறேங்குற விஷயம் சபையில இருக்குற கொஞ்ச பேருக்குதான் தெரியும். ஆனாலும், சபை எப்பவுமே எனக்கு ஆதரவா இருக்கு. ஒரு தம்பதி, எனக்கு ஆன்மீக ரீதியில அப்பா அம்மா மாதிரி! என்னை அவங்க நல்லா பார்த்துக்குறாங்க. சொல்லப்போனா எனக்கு உதவுறதுக்காக 24 மணி நேரமும் அவங்க தயாரா இருக்குறாங்க.” நம் எல்லாராலும் இந்தளவுக்கு உதவ முடியாது என்பது உண்மைதான். ஆனால், நம் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த நம் ஒவ்வொருவராலும் நிறைய செய்ய முடியும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

அன்பால் மற்றவர்களை பலப்படுத்துவது எப்படி?

13. மற்றவர்களுக்கு ஆறுதலாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

13 நன்றாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். (யாக். 1:19) ஒரு சகோதரரோ சகோதரியோ பேசும்போது, அதை அனுதாபத்தோடு கேளுங்கள்; அதன் மூலம் நம்முடைய அன்பை நாம் காட்டலாம். அவருடைய நிலைமையை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு தயவோடு சில கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை உங்கள் முகபாவத்தில் காட்டுங்கள். அவர் பேசும்போது பொறுமையோடு இருங்கள்; அவர் தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டட்டும், குறுக்கே பேசாதீர்கள். இப்படிக் காதுகொடுத்துக் கேட்பதன் மூலம் அவருடைய மனப் போராட்டத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்; உங்கள்மீது நம்பிக்கை வைக்கவும், மனம்திறந்து பேசவும் வழிதிறந்து வைக்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, நீங்கள் பேசுவதைக் கேட்பது அவருக்குச் சுலபமாக இருக்கும். நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்கிறார்கள் என்றால், நீங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

14. குறை சொல்லும் விதத்தில் நாம் ஏன் பேசக் கூடாது?

14 குறை சொல்லாதீர்கள். நாம் குறை சொல்கிறோம் என்பது தெரிந்தால், மனச்சோர்வில் வாடுபவர்களின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். பிறகு, நம்மால் அவருக்கு உதவ முடியாமல் போய்விடும். “யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும். ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:18) மனச்சோர்வில் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் நாம் வேண்டுமென்றே புண்படுத்தும் விதத்தில் பேச மாட்டோம் என்பது உண்மைதான். ஆனால், நாம் யோசித்துப் பேசவில்லை என்றால், அவர்களுடைய மனதை ரணமாக்கிவிடுவோம். மற்றவர்களைப் பலப்படுத்த வேண்டுமென்றால், அவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்கிறோம் என்பதை அவர்கள் நம்பும்படி நடந்துகொள்ள வேண்டும்.—மத். 7:12.

15. மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கு எவை நமக்கு உதவும்?

15 மற்றவர்களை ஆறுதல்படுத்த பைபிளைப் பயன்படுத்துங்கள். (ரோமர் 15:4, 5-ஐ வாசியுங்கள்.) ‘சகிப்புத்தன்மையையும் பலத்தையும் தருகிற கடவுளிடமிருந்துதான்’ பைபிள் கிடைத்திருக்கிறது! அதனால், ஆறுதல் தருகிற வார்த்தைகள் அதில் ஏராளமாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதோடு, உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் மற்றும் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு நம்மிடம் இருக்கிறது. நம்முடைய சகோதர சகோதரிகளை ஆறுதல்படுத்தத் தேவையான வசனங்களையும் பிரசுரங்களையும் கண்டுபிடிக்க இவை நமக்கு உதவும்.

16. மனச்சோர்வில் இருப்பவர்களுக்கு உதவ, என்னென்ன குணங்கள் நமக்குத் தேவை?

16 கனிவாகவும் மென்மையாகவும் நடந்துகொள்ளுங்கள். யெகோவா, “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன். எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.” அதோடு, தன்னுடைய ஊழியர்களுக்கு ‘கரிசனை’ காட்டுகிற கடவுள். (2 கொரிந்தியர் 1:3-6-ஐ வாசியுங்கள்; லூக். 1:77; ரோ. 15:13) யெகோவாவைப் போலவே பவுல் நடந்துகொண்டதால், இந்த விஷயத்தில் அவர் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். “பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளைக் கனிவோடு கவனித்துக்கொள்வதுபோல் உங்களை நேசித்து உங்களிடம் மென்மையாக நடந்துகொண்டோம். இப்படி, உங்கள்மேல் கனிவான பாசம் வைத்திருப்பதால், கடவுளுடைய நல்ல செய்தியை மட்டுமல்ல, எங்கள் உயிரையே உங்களுக்காகக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்; அந்தளவுக்கு நீங்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தீர்கள்” என்று எழுதினார். (1 தெ. 2:7, 8) யெகோவாவைப் போலவே கனிவாக நடந்துகொள்ளும்போது, நம் சகோதர சகோதரிகள் எதற்காக ஜெபம் செய்கிறார்களோ, அது நம் மூலமாக அவர்களுக்குக் கிடைக்கும். அதாவது, அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்!

17. நம் சகோதர சகோதரிகளிடம் நமக்கு இருக்க வேண்டிய யதார்த்தமான கண்ணோட்டம் என்ன?

17 சகோதர சகோதரிகளிடம் பரிபூரணத்தை எதிர்பார்க்காதீர்கள். யதார்த்தமாக இருங்கள். சகோதர சகோதரிகளிடம் பரிபூரணத்தை எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போவீர்கள். (பிர. 7:21, 22) யெகோவா நம்மிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால், நாம் ஒருவருக்கொருவர் பொறுமையோடு நடந்துகொள்ள வேண்டும். (எபே. 4:2, 32) நம் சகோதர சகோதரிகள் போதுமான அளவு செய்வதில்லை என்ற உணர்வை நாம் அவர்களுக்கு ஏற்படுத்துவதும் இல்லை; மற்றவர்களோடு அவர்களை ஒப்பிடுவதும் இல்லை. நாம் அவர்களை உற்சாகப்படுத்துகிறோம்; அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களைப் பாராட்டுகிறோம். யெகோவாவின் சேவையைச் சந்தோஷமாகச் செய்ய இது அவர்களுக்கு உதவும்.—கலா. 6:4.

18. அன்பு காட்டுவதன் மூலம் மற்றவர்களைப் பலப்படுத்த நாம் ஏன் ஆசைப்படுகிறோம்?

18 யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் தங்கமானவர்கள்! (கலா. 2:20) சகோதர சகோதரிகளை நாம் ரொம்ப நேசிப்பதால், அவர்களை நாம் கனிவோடு நடத்த வேண்டும். ‘மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும் ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் [நம்மால்] முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.’ (ரோ. 14:19) பூஞ்சோலை பூமியில் வாழ்வதற்காக நாம் ஆசை ஆசையாகக் காத்திருக்கிறோம்; யாருமே அங்கே மனச்சோர்வால் வாடமாட்டார்கள்; அப்படி வாடுவதற்கு எந்தக் காரணமும் இருக்காது. நோய்... போர்கள்... வழிவழியாகக் கடத்தப்படுகிற மரணம்... துன்புறுத்தல்... குடும்பப் பிரச்சினைகள்... ஏமாற்றங்கள்... என எதுவுமே அங்கே இருக்காது. ஆயிர வருஷங்களின் முடிவில், எல்லாருமே பரிபூரணமானவர்களாக இருப்போம். கடைசி சோதனையில் ஜெயிப்பவர்கள், யெகோவாவின் மகன்களாகவும் மகள்களாகவும் அவரால் தத்தெடுக்கப்படுவார்கள்; இந்தப் பூமியில், “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை” அனுபவிப்பார்கள். (ரோ. 8:21) அதனால், நாம் ஒருவருக்கொருவர் தொடர்ந்து அன்பு காட்டலாம்; அது நம்மைப் பலப்படுத்தும்! அதோடு, கடவுள் தரும் அருமையான புதிய உலகத்துக்குள் காலடியெடுத்து வைக்க ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதற்கு உதவும்!

^ பாரா. 12 தற்கொலை எண்ணங்களால் தவிப்பவர்களுக்கு உதவுவதற்கு இந்தக் கட்டுரைகள் ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும்: ஜூலை 2014 விழித்தெழு! இதழில் வெளிவந்த “ஏன் வாழ வேண்டும்? வாழ மூன்று காரணங்கள்” என்ற கட்டுரை; ஏப்ரல் 2012 விழித்தெழு! இதழில் வெளிவந்த “‘வாழ்க்கையே வெறுத்து போச்சு’ என்று நினைக்கிறீர்களா?” என்ற கட்டுரை; நவம்பர் 8, 2001 விழித்தெழு! இதழில் வெளிவந்த “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற கட்டுரை.