Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் காலங்களில் நேரத்தை எப்படிக் கணக்கிட்டார்கள்?

பைபிள் காலங்களில் நேரத்தை எப்படிக் கணக்கிட்டார்கள்?

நேரத்தைத் தெரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவேளை கடிகாரத்தைப் பார்ப்பீர்கள்! மத்தியான வேளை ஆரம்பித்து ஒரு மணி நேரமும் முப்பது நிமிடமும் ஆகியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, “மணி என்ன ஆச்சு?” என்று உங்கள் நண்பர் கேட்கிறார். நீங்கள் என்ன சொல்வீர்கள்?

நீங்கள் வாழும் இடத்தைப் பொறுத்துதான் உங்கள் பதில் இருக்கும். உதாரணத்துக்கு, “1:30” என்றோ “13:30” என்றோ நீங்கள் சொல்லலாம். அல்லது, “இரண்டு மணி ஆவதற்கு இன்னும் முப்பது நிமிடங்கள் இருக்கின்றன” என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால், பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள் நேரத்தை எப்படிக் கணக்கிட்டார்கள்? அதற்கு நிறைய வழிகள் இருந்தன. எபிரெய வேதாகமத்தில், ‘விடியற்காலை,’ ‘காலை,’ “மத்தியானம்,” ‘பட்டப்பகல்,’ ‘சாயங்காலம்’ என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. (ஆதி. 8:11; 19:27; 43:16; உபா. 28:29; 1 ரா. 18:26) அதோடு, குறிப்பிட்ட சில காலப் பகுதிகளைப் பற்றியும் பைபிள் சொல்கிறது.

இஸ்ரவேலர்கள் இரவு நேரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள். ஒவ்வொரு பகுதியையும் ஒரு ‘ஜாமம்’ என்று சொன்னார்கள். (புல. 2:19) நியாயாதிபதிகள் 7:19-ல் “நடுஜாமம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரேக்கர்களும் ரோமர்களும் இரவு நேரத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்தார்கள். இயேசு பிறக்கும் சமயத்துக்குள், யூதர்களும் அவர்களைப் போலவே செய்தார்கள்.

சுவிசேஷ புத்தகங்களில், ஜாமங்களைப் பற்றி நிறைய தடவை குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, இயேசு, “நான்காம் ஜாமத்தில்” படகிலிருந்த தன்னுடைய சீஷர்களை நோக்கி கடல்மேல் நடந்துபோனதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (மத். 14:25) ஓர் உவமையில் இயேசு இப்படிச் சொன்னார்: “[எஜமான்] இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வரும்போது யாரெல்லாம் தயாராக இருப்பதைப் பார்க்கிறாரோ அவர்களெல்லாம் சந்தோஷமானவர்கள்!”—லூக். 12:38.

தன்னுடைய சீஷர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று சொன்னபோது, அந்த நான்கு ஜாமங்களையும் குறிப்பிட்டு இயேசு இப்படிச் சொன்னார்: “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால் வீட்டு எஜமான் வரும் நேரம் மாலையா, நடுராத்திரியா, சேவல் கூவும் நேரமா, அல்லது விடியற்காலையா என்பது உங்களுக்குத் தெரியாது.” (மாற். 13:35; அடிக்குறிப்பு) முதல் ஜாமம், மாலை நேரத்தைக் குறித்தது; அதாவது, சூரிய அஸ்தமனத்திலிருந்து இரவு சுமார் 9 மணிவரை நீடித்தது. இரண்டாவது ஜாமம், நடுராத்திரியைக் குறித்தது; அதாவது, இரவு சுமார் 9 மணியிலிருந்து நடுராத்திரிவரை நீடித்தது. மூன்றாம் ஜாமம், சேவல் கூவும் நேரத்தைக் குறித்தது; அதாவது, நடுராத்திரியிலிருந்து காலை சுமார் 3 மணிவரை நீடித்தது. ஒருவேளை, இயேசு கைது செய்யப்பட்ட ராத்திரியில், இந்த ஜாமத்தில் சேவல் கூவியிருக்கலாம். (மாற். 14:72) நான்காம் ஜாமம், விடியற்காலையைக் குறித்தது; அதாவது, காலை சுமார் 3 மணியிலிருந்து சூரியன் உதிக்கும்வரை நீடித்தது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இன்றிருப்பதுபோல் அன்று கடிகாரங்கள் எதுவும் இல்லையென்றாலும், நேரத்தைக் கணக்கிடுவதற்கு மக்கள் சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தினார்கள்.