Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வயதான கிறிஸ்தவர்களே​—⁠உங்கள் உண்மைத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறார்

வயதான கிறிஸ்தவர்களே​—⁠உங்கள் உண்மைத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறார்

உலகம் முழுவதும் இருக்கிற மூப்பர்கள், தாங்கள் செய்துவரும் பொறுப்புகளை ஒரு பாக்கியமாக நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட மூப்பர்கள் இருப்பது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்! இருந்தாலும், கொஞ்ச நாட்களுக்கு முன்பு அமைப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, வயதான மூப்பர்கள் செய்துவந்த சில முக்கியமான பொறுப்புகளை இளம் மூப்பர்களுக்குக் கொடுக்கும்படி சொல்லப்பட்டது.

இந்தப் புதிய ஏற்பாட்டின்படி, வட்டாரக் கண்காணிகளும், அமைப்பு நடத்தும் பல்வேறு பள்ளிகளில் போதகர்களாகச் சேவை செய்யும் சகோதரர்களும் 70 வயது ஆனபிறகு அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிடுவார்கள். அதேபோல், 80 வயதான மூப்பர்களும் தாங்கள் செய்துவந்த வெவ்வேறு பொறுப்புகளை இளம் மூப்பர்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் சேவை செய்யும் பொறுப்பு... சபை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் சேவை செய்யும் பொறுப்பு... போன்ற பொறுப்புகளும் இதில் அடங்குகின்றன. இந்த மாற்றத்தைப் பற்றி வயதான மூப்பர்கள் எப்படி உணருகிறார்கள்? யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் தங்களுடைய உண்மைத்தன்மையை அவர்கள் தொடர்ந்து காட்டிவருகிறார்கள்.

“இந்த மாற்றம் நல்லதுதான்” என்கிறார் சகோதரர் கென். இவர், 49 வருஷங்களாக கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் சேவை செய்தார். “சொல்லப்போனா, வேற ஒரு இளம் சகோதரர் ஒருங்கிணைப்பாளரா சேவை செஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லி, இந்த மாற்றத்தை பத்தி கேள்விப்பட்ட அன்னைக்கு காலையிலதான் யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன்” என்று அவர் சொல்கிறார். உலகம் முழுவதும் இருக்கிற வயதான உண்மையுள்ள சகோதரர்கள் நிறைய பேர், சகோதரர் கென்னைப் போலத்தான் உணர்ந்தார்கள். இருந்தாலும், ஆரம்பத்தில் சிலருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால், இந்தப் பொறுப்புகளின் மூலமாக சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்வது அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

“எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு” என்று சகோதரர் எஸ்பராண்டியூ சொல்கிறார். சபை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இவர் சேவை செய்து வந்தார். “என்னோட உடல்நிலை மோசமாயிட்டே வர்றதுனால என்னை கவனிச்சிக்குறதுக்கும் நிறைய நேரம் தேவைப்படுது” என்று அவர் ஒத்துக்கொள்கிறார். அவர் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறார். சபைக்கு ஓர் ஆசீர்வாதமாகவும் இருக்கிறார்.

பல வருஷங்களாகப் பயணக் கண்காணியாகச் சேவை செய்த சகோதரர்கள் இந்த மாற்றத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? “இத கேள்விப்பட்டப்போ எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு” என்று 38 வருஷங்களாகப் பயணக் கண்காணியாகச் சேவை செய்த சகோதரர் ஆலன் சொல்கிறார். இருந்தாலும், இளம் சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதால் வரும் பலன்களை அவர் புரிந்துகொண்டார். அவர் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிறார்.

ரஸல் என்ற சகோதரர், பயணக் கண்காணியாகவும் அமைப்பு நடத்தும் பள்ளிகளில் போதகராகவும் மொத்தம் 40 வருஷங்கள் சேவை செய்திருக்கிறார். இந்த மாற்றம் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்ததாக அவர் சொல்கிறார். ஏன்? “இந்த சேவைய நாங்க ஒரு பெரிய பாக்கியமா நினைச்சோம். அத தொடர்ந்து செய்றதுக்கு தேவையான தெம்பு எங்களுக்கு இருக்கிறதாவும் நினைச்சோம்” என்று ரஸல் சொல்கிறார். இப்போது, அவரும் அவருடைய மனைவியும், தங்களுக்குக் கிடைத்த பயிற்சியையும் அனுபவத்தையும் தாங்கள் இருக்கும் உள்ளூர் சபையில் பயன்படுத்துகிறார்கள். அதனால், அங்கிருக்கும் பிரஸ்தாபிகள் ரொம்பவே பிரயோஜனமடைகிறார்கள்.

இதுவரை பார்த்த சகோதரர்கள் செய்துவந்த சேவையில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல உங்களுக்கு ஏற்படாமல் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள 2 சாமுவேல் புத்தகத்தில் இருக்கும் பதிவு உங்களுக்கு உதவும்.

அடக்கமான, யதார்த்தமான மனிதர்

தன்னுடைய அப்பாவான தாவீது ராஜாவுக்கு எதிராக அப்சலோம் கலகம் செய்த சமயம் அது! எருசலேமிலிருந்து மக்னாயீமுக்கு தாவீது தப்பித்துப் போனார்; அது, யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே இருந்தது. அந்தச் சமயத்தில், அவர்களுக்கு சில அத்தியாவசியமான பொருள்கள் தேவைப்பட்டன. அப்போது என்ன நடந்ததென்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அந்தப் பகுதியிலிருந்த மூன்று ஆண்கள், தாராள குணத்தோடு அவர்களுக்கு உதவி செய்தார்கள்; பாய்களையும் உணவுப் பொருள்களையும் பாத்திரங்களையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். அப்படிக் கொடுத்தவர்களில் ஒருவர்தான் பர்சிலா! (2 சா. 17:27-29) அப்சலோமின் கலகம் முடிவுக்கு வந்ததும் தாவீது மறுபடியும் எருசலேமுக்குப் புறப்பட்டார். அப்போது, யோர்தான் ஆறுவரை பர்சிலா தாவீதோடு போனார். அவர் தன்னோடு எருசலேமுக்கு வரவேண்டும் என்று தாவீது ராஜா கேட்டுக்கொண்டார். பர்சிலா “பெரிய பணக்காரராக” இருந்தார்; தாவீது ராஜா கொடுக்கும் உணவை நம்பி வாழ வேண்டிய நிலையில் அவர் இருக்கவில்லை. இருந்தாலும், அவரைக் கவனித்துக்கொள்வதாகவும் உணவு தருவதாகவும் சொல்லி தாவீது அவரை அழைத்தார். அதற்கு என்ன காரணம்? ஒருவேளை, அவருடைய குணங்கள் தாவீதைக் கவர்ந்திருக்கலாம். அவருடைய ஆலோசனைகள் தனக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்றும் தாவீது நினைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, ராஜாவின் அரண்மனையில் வாழ்வதும் அங்கே வேலை செய்வதும் ஓர் அருமையான வாய்ப்பு, இல்லையா?—2 சா. 19:31-33.

யதார்த்தமானவராகவும் அடக்கமானவராகவும் இருந்த பர்சிலா, தனக்கு 80 வயதாகிவிட்டதாக தாவீது ராஜாவிடம் சொன்னார். அதோடு, “இனி வாழ்க்கையில் எனக்கு என்ன இருக்கிறது?” என்றும் சொன்னார். (2 சா. 19:35) தன்னுடைய நீண்ட கால வாழ்க்கையில் அவர் நிறைய ஞானத்தைச் சம்பாதித்திருப்பார். அதை வைத்து, தாவீதுக்கு நல்ல ஆலோசனைகளை அவரால் கொடுத்திருக்க முடியும். பிற்பாடு வந்த ரெகொபெயாம் ராஜாவுக்கு, ‘பெரியோர்கள்’ சிலர் அப்படித்தான் ஆலோசனை கொடுத்தார்கள்! (1 ரா. 12:6, 7; சங். 92:12-14; நீதி. 16:31) அப்படியிருக்கும்போது, “இனி வாழ்க்கையில் எனக்கு என்ன இருக்கிறது?” என்று பர்சிலா ஏன் சொன்னார்? வயதானதால் ஏற்பட்ட உடல் உபாதைகளையும் வரம்புகளையும் மனதில் வைத்து அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். தனக்கு ஏற்கெனவே எந்த ருசியும் தெரியவில்லை என்பதையும் காதும் சரியாகக் கேட்கவில்லை என்பதையும் அவர் ஒத்துக்கொண்டார். (பிர. 12:4, 5) அதனால், கிம்காம் என்ற இளைஞனைக் கூட்டிக்கொண்டு போகும்படி தாவீதிடம் கேட்டுக்கொண்டார்; கிம்காம் ஒருவேளை பர்சிலாவின் மகனாக இருந்திருக்கலாம்.—2 சா. 19:36-40.

எதிர்காலத்தை மனதில் வைத்துத் திட்டமிடுதல்

தனக்கு வயதாகிவிட்டதால், தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை பர்சிலா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் யதார்த்தமானவராக இருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது. வயதை மனதில் வைத்து அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமும், இதேபோன்ற காரணத்துக்காகத்தான் செய்யப்பட்டது. பர்சிலாவின் விஷயத்தில், அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் இன்று, ஒரு தனிப்பட்ட நபருடைய சூழ்நிலையையும் திறமையையும் அல்ல, நிறைய பேருடைய சூழ்நிலையையும் திறமையையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. உலகம் முழுவதும் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யும் வயதான மூப்பர்களுக்கு எது நல்லது என்பதை நியாயமாக யோசித்துப்பார்ப்பது அவசியமாக இருக்கிறது.

வயதானவர்கள் ரொம்ப நாட்களாகச் செய்துவந்த பொறுப்புகளை இளம் சகோதரர்கள் செய்யும்போது, அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்னும் உதவியாக இருக்கும் என்பதை அடக்கமுள்ள வயதான சகோதரர்கள் புரிந்துகொள்கிறார்கள். பர்சிலா, ஒருவேளை தன்னுடைய மகனுக்குப் பயிற்சி கொடுத்திருக்கலாம். அப்போஸ்தலன் பவுல், தீமோத்தேயுவுக்குப் பயிற்சி கொடுத்தார். அதேபோல், பெரும்பாலான சமயங்களில், வயதான சகோதரர்கள்தான் இளம் சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். (1 கொ. 4:17; பிலி. 2:20-22) இப்படிப்பட்ட இளம் சகோதரர்கள், உண்மையிலேயே ‘பரிசுகளாக’ இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள்; ‘கிறிஸ்துவின் உடலைப் பலப்படுத்துவதில்’ உதவியாக இருக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.—எபே. 4:8-12; எண்ணாகமம் 11:16, 17, 29-ஐ ஒப்பிடுங்கள்.

சேவை செய்ய மற்ற வாய்ப்புகள்

உலகம் முழுவதும் இருக்கிற சபைகளில் சேவை செய்கிற சகோதரர்கள் நிறைய பேர், தாங்கள் செய்துவந்த பொறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம், யெகோவாவின் அமைப்பிலிருக்கும் வேறு விதமான சேவைகளை இந்தச் சகோதரர்களால் செய்ய முடிகிறது.

“இப்போ நாங்க போற சபையில இருக்குற சில சகோதரிகளோட கணவர்கள் சத்தியத்தில இல்ல. எங்க நியமிப்புல ஏற்பட்ட மாற்றத்தால அவங்களோட கணவர்களுக்கு உதவி செய்ய என்னால முடியுது” என்று 19 வருஷங்கள் பயணக் கண்காணியாகச் சேவை செய்த சகோதரர் மார்கோ சொல்கிறார்.

“செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவுறதும் நிறைய பைபிள் படிப்புகள நடத்துறதும்தான் இப்போ எங்களோட இலக்கு” என்று 28 வருஷங்கள் பயணக் கண்காணியாகச் சேவை செய்த ஜெரால்டு சொல்கிறார். அவரும் அவருடைய மனைவியும் 15 பைபிள் படிப்புகளை நடத்திவருகிறார்கள். செயலற்ற பிரஸ்தாபிகளாக இருந்த பலர், இப்போது கூட்டங்களுக்கு வருகிறார்கள்.

முன்பு குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலன் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நிறைய ஊழியம் செய்ய இப்போ எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது. நாங்க பொது ஊழியம் செய்றோம், வியாபாரம் நடக்குற இடங்கள்ல ஊழியம் செய்றோம். அக்கம்பக்கத்துல இருக்கிறவங்ககிட்டயும் சாட்சி கொடுக்குறோம்; அதுல இரண்டு பேர் இப்போ கூட்டங்களுக்கு வர்றாங்க.”

நீங்கள் உண்மையுள்ள, தகுதிவாய்ந்த சகோதரரா? புதிய நியமிப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? அப்படியென்றால், விசேஷமான விதத்தில் மற்றவர்களுக்கு உங்களால் சேவை செய்ய முடியும். உங்களுக்குக் கிடைத்திருக்கும் அருமையான அனுபவங்களை உங்கள் சபையிலிருக்கும் இளம் சகோதரர்களுக்குச் சொல்வதன் மூலம் யெகோவாவுடைய வேலையை நீங்கள் ஆதரிக்கலாம். “திறமைசாலியா இருக்குற அருமையான இளைஞர்களுக்கு யெகோவா பயிற்சி கொடுக்குறாரு. அவங்கள நல்லா பயன்படுத்துறாரு” என்று முன்பு குறிப்பிடப்பட்டிருக்கும் ரஸல் சொல்கிறார். “அப்படிப்பட்ட சகோதரர்கள் திறமையா போதிக்குறாங்க, மேய்ப்பு சந்திப்புகள செய்றாங்க. அதனால, உலகம் முழுவதும் இருக்குற சகோதரர்கள் ரொம்ப பிரயோஜனமடையறாங்க” என்றும் அவர் சொல்கிறார்.—“ இளைஞர்கள் நன்றாக முன்னேறுவதற்கு உதவுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

உங்கள் உண்மைத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறார்

வேறு விதமான சேவையை நீங்கள் இப்போது ஆரம்பித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், நம்பிக்கையான மனப்பான்மையோடு இருங்கள். நீங்கள் இதுவரை செய்திருக்கும் சேவையால் நிறைய பேருடைய வாழ்க்கை வளமாகியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இனிமேலும் மற்றவர்களுடைய வாழ்க்கையை வளமாக்க உங்களால் முடியும்! நிறைய பேருடைய அன்பை நீங்கள் சம்பாதித்திருக்கிறீர்கள், இனிமேலும் சம்பாதிப்பீர்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவுடைய மனதில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள். ‘பரிசுத்தவான்களுக்காக நீங்கள் செய்திருக்கும் சேவையையும், இப்போது செய்துவருகிற சேவையையும், உங்களுடைய உழைப்பையும், தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும்’ கடவுள் ஒருபோதும் மறக்கமாட்டார். (எபி. 6:10) நீங்கள் முன்பு செய்த சேவையை மட்டுமல்ல, இப்போது செய்துவருகிற சேவையையும் யெகோவா மறக்க மாட்டார் என்ற உறுதியை இந்த வசனம் நமக்குத் தருகிறது. யெகோவாவுக்கு நீங்கள் அந்தளவு தங்கமானவர்களாக இருப்பதால், அவரைப் பிரியப்படுத்தும் விதத்தில் நீங்கள் செய்திருக்கும் சேவையையும், இப்போது செய்துவருகிற சேவையையும் அவர் மறக்கவே மாட்டார்!

ஒருவேளை, இதுபோன்ற மாற்றங்கள் உங்களுக்கு நடக்காமல் இருந்தாலும் நீங்கள் நன்மையடையலாம். எப்படி?

புதிய நியமிப்பைப் பெற்றிருக்கும் வயதான உண்மையுள்ள ஒரு சகோதரரோடு சேர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தால், அவருடைய அனுபவத்திலிருந்தும் முதிர்ச்சியிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். அவரிடம் ஆலோசனை கேளுங்கள். இப்போது கிடைத்திருக்கும் நியமிப்பை அவர் எப்படிச் செய்கிறார் என்பதைக் கவனியுங்கள். தனக்கிருக்கும் அனுபவத்தை அவர் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் புதிய நியமிப்பைப் பெற்றிருக்கும் ஒரு வயதான சகோதரரா? இல்லையென்றால், வயதான சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் ஒரு சகோதரரா அல்லது சகோதரியா? அப்படியென்றால், ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். நீண்ட காலமாகத் தனக்குச் சேவை செய்திருக்கிற, சேவை செய்துவருகிற சகோதர சகோதரிகளுடைய உண்மைத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறார்.