Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 2

மற்றவர்களுக்கு ‘மிகவும் ஆறுதலாக இருங்கள்’

மற்றவர்களுக்கு ‘மிகவும் ஆறுதலாக இருங்கள்’

“இவர்கள் . . . கடவுளுடைய அரசாங்கத்துக்காக உழைக்கிற என் சக வேலையாட்களாக இருக்கிறார்கள்; எனக்கு மிகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்கள்.”—கொலோ. 4:11.

பாட்டு 121 ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்

இந்தக் கட்டுரையில்... *

1. எப்படிப்பட்ட சூழ்நிலைகள் யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேருக்கு வருகின்றன?

உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உங்கள் சபையிலும் இருக்கிறார்களா? தீராத வியாதியால் சிலர் அவதிப்படலாம் அல்லது நெஞ்சார நேசித்த ஒருவரை பறிகொடுத்த துக்கத்தில் தவிக்கலாம். குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ நெருங்கிய நண்பரோ யெகோவாவை விட்டுப் போவதைப் பார்த்து வேறுசிலர் வேதனையில் இருக்கலாம். இன்னும் சிலர், இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவர்கள் எல்லாருக்குமே ஆறுதல் தேவை! அப்படியென்றால், நாம் எப்படி அவர்களுக்கு ஆறுதல் தரலாம்?

2. பவுலுக்கு ஏன் சிலசமயங்களில் ஆறுதல் தேவைப்பட்டது?

2 அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டவர், ரொம்பவே தைரியமானவர், தாராள குணம் படைத்தவர். ஆனால், அவரும்கூட சிலசமயங்களில் சோர்ந்துபோயிருக்கிறார். (ரோ. 9:1, 2) உயிருக்கே உலை வைக்கும் சூழ்நிலைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவர் சந்தித்தார். (2 கொ. 11:23-28) ‘உடலிலிருந்த ஒரு முள்ளோடும்’ அவர் போராடிக்கொண்டிருந்தார். ஒருவேளை, அது ஏதோவொரு உடல்நலப் பிரச்சினையாக இருந்திருக்கலாம். (2 கொ. 12:7) அதுமட்டுமல்ல, அவரோடு தோளோடு தோள் சேர்ந்து உழைத்த தேமா, “உலகத்தின் மேல் ஆசை வைத்து” அவரை விட்டுவிட்டுப் போய்விட்டான். இந்த ஏமாற்றத்தையும் பவுல் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.—2 தீ. 4:10.

3. பவுலை யெகோவா எப்படி ஆறுதல்படுத்தினார்?

3 யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து பவுலுக்குத் தேவையான ஆறுதலையும் ஆதரவையும் கொடுத்தார். (2 கொ. 4:7; பிலி. 4:13) அதோடு, மற்ற சகோதரர்களையும் பயன்படுத்தி அவரை ஆறுதல்படுத்தினார். அந்தச் சகோதரர்கள், தனக்கு ‘மிகவும் ஆறுதலாக இருந்தார்கள்’ என்று பவுல் சொன்னார். (கொலோ. 4:11) அவரை ஆறுதல்படுத்திய சகோதரர்களைப் பற்றி சொன்னபோது, அரிஸ்தர்க்கு, தீகிக்கு, மாற்கு ஆகிய மூன்று பேருடைய பெயர்களையும் குறிப்பிட்டார். பவுல் தொடர்ந்து சகித்திருப்பதற்கு அவர்கள் உதவினார்கள். இந்தளவு மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கு எந்தக் குணங்கள் அவர்களுக்கு உதவின? நாம் எப்படி அவர்களைப் போலவே நடந்துகொள்ளலாம்?

அரிஸ்தர்க்குவைப் போல் உண்மையான நண்பராக இருங்கள்

“கஷ்ட காலங்களில்” நம் சகோதர சகோதரிகள்கூடவே இருப்பதன் மூலம் அரிஸ்தர்க்குவைப் போல் நாம் உண்மையான நண்பர்களாக இருக்கலாம் (பாராக்கள் 4-5) *

4. அரிஸ்தர்க்கு எப்படி பவுலுக்கு உண்மையான நண்பராக இருந்தார்?

4 தெசலோனிக்கேயிலிருந்த மக்கெதோனியாதான் அரிஸ்தர்க்குவின் ஊர். இவர், அப்போஸ்தலன் பவுலுக்கு உண்மையான நண்பராக இருந்தார். பவுல் மூன்றாவது மிஷனரி பயணம் செய்தபோது எபேசு நகரத்துக்குப் போனார். அதைப் பற்றிச் சொல்லப்படும் பதிவில்தான் அரிஸ்தர்க்குவைப் பற்றி முதல் தடவையாகப் படிக்கிறோம். பவுலோடு இருந்தபோது அரிஸ்தர்க்குவை ஒரு கும்பல் பிடித்துக்கொண்டு போனது. (அப். 19:29) அந்தக் கும்பலிடமிருந்து விடுதலை கிடைத்த பிறகு, தான் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்காமல் பவுல்கூடவே அவர் இருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, பவுல் கிரீஸுக்குப் போனார். அங்கே பவுலுடைய உயிருக்கு ஆபத்து வந்தபோதிலும் அரிஸ்தர்க்கு அவரை விட்டுப் போகவில்லை. (அப். 20:2-4) கிட்டத்தட்ட கி.பி. 58-ல் பவுல் கைது செய்யப்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டார். ரோமுக்குப் போவதற்கு அவர்கள் ரொம்பத் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. போகும் வழியில் அவர்களுடைய கப்பல் விபத்துக்குள்ளானது. அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் அரிஸ்தர்க்கு பவுல்கூடவே இருந்தார். (அப். 27:1, 2, 41) ரோமிலிருந்தபோது, அரிஸ்தர்க்குவும் பவுலுடன் கொஞ்ச நாட்கள் சிறையில் இருந்திருக்கலாம். (கொலோ. 4:10) இப்படிப்பட்ட உண்மையான நண்பர் கிடைத்ததை நினைத்து பவுல் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! அவருக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!!

5. நீதிமொழிகள் 17:17 சொல்வதுபோல் நாம் எப்படி உண்மையான நண்பராக இருக்கலாம்?

5 அரிஸ்தர்க்குவைப் போலவே நம்மாலும் நம் சகோதர சகோதரிகளுக்கு உண்மையான நண்பர்களாக இருக்க முடியும். சந்தோஷமான சமயங்களில் மட்டுமல்ல, ‘கஷ்ட காலங்களில்கூட’ அப்படி இருக்க முடியும். (நீதிமொழிகள் 17:17-ஐ வாசியுங்கள்.) கஷ்டங்கள் தீர்ந்த பிறகும் சிலருக்கு ஆறுதல் தேவைப்படலாம். சகோதரி மேனகாவின் * அப்பா அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். மூன்று மாதங்களுக்குள் அவர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள். “நமக்கு வர்ற கஷ்டங்கள் ரொம்ப நாளைக்கு நம்மள பாதிக்கும். என்னோட அப்பா அம்மா இறந்துபோய் ரொம்ப நாள் ஆனதுக்கு அப்புறமும் என்னோட வேதனை போகலங்குறத உண்மையான நண்பர்கள் புரிஞ்சிக்கிட்டாங்க. அது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு” என்று மேனகா சொல்கிறார்.

6. உண்மையான நண்பர்கள் என்ன செய்யத் தயாராக இருப்பார்கள்?

6 உண்மையான நண்பர்கள் நமக்காகத் தியாகங்கள் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். உதாரணத்துக்கு, சகோதரர் பீட்டரின் அனுபவத்தைப் பார்க்கலாம். உயிருக்கு ஆபத்தான ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். “எங்க சபையில இருக்கிற ஒரு தம்பதிதான் எங்கள டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அப்பதான் பீட்டருக்கு இருந்த வியாதிய பத்தி தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கஷ்டமான சூழ்நிலையில அவங்க எங்க கூடவே இருந்தாங்க. எப்பெல்லாம் எங்களுக்கு உதவி தேவைப்பட்டுச்சோ அப்பெல்லாம் எங்க பக்கத்திலயே இருந்தாங்க” என்று அவருடைய மனைவி கேத்ரின் சொல்கிறார். கஷ்டங்களை அனுபவிக்கும்போது, உண்மையான நண்பர்கள் நம் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்!

தீகிக்குவைப் போல் நம்பகமானவராக இருங்கள்

பிரச்சினைகளோடு மற்றவர்கள் போராடும்போது, தீகிக்குவைப் போல் நாம் நம்பகமான நண்பர்களாக இருக்கலாம் (பாராக்கள் 7-9) *

7-8. கொலோசெயர் 4:7-9 சொல்வதுபோல், தீகிக்கு எப்படி நம்பகமான நண்பராக இருந்தார்?

7 ஆசியாவிலிருந்த ரோம மாகாணத்தைச் சேர்ந்தவர்தான் தீகிக்கு! அவர் பவுலுக்கு நம்பகமான நண்பராக இருந்தார். (அப். 20:4) கிட்டத்தட்ட கி.பி. 55-ல் யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் நிதி திரட்டிக்கொண்டிருந்தபோது, அந்த முக்கியமான வேலையில் தனக்கு உதவும்படி அவர் தீகிக்குவைக் கேட்டுக்கொண்டிருக்கலாம். (2 கொ. 8:18-20) ரோமில் முதல் தடவையாக பவுல் சிறையிலிருந்தபோது, தான் எழுதிய கடிதங்களை தீகிக்குவிடம் கொடுத்து ஆசியாவிலிருந்த சபைகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கும்படி சொன்னார். அவர்களை உற்சாகப்படுத்துகிற சில தகவல்களையும் அவரிடம் சொல்லி அனுப்பினார்.—கொலோ. 4:7-9.

8 தீகிக்கு தொடர்ந்து பவுலுக்கு நம்பகமான நண்பராக இருந்தார். (தீத். 3:12) ஆனால் அன்றிருந்த கிறிஸ்தவர்கள் நிறைய பேர், தீகிக்கு அளவுக்கு நம்பகமானவர்களாக இல்லை. கிட்டத்தட்ட கி.பி. 65-ல் இரண்டாவது தடவையாக பவுல் சிறையிலிருந்தபோது, ஆசிய மாகாணத்திலிருந்த கிறிஸ்தவர்கள் நிறைய பேர் அவரோடு பழகவில்லை. ஒருவேளை எதிர்ப்பை நினைத்து அவர்கள் பயந்தார்களோ என்னவோ! (2 தீ. 1:15) ஆனால் தீகிக்கு தொடர்ந்து நம்பகமானவராக இருந்ததால், பவுல் அவருக்கு இன்னொரு நியமிப்பைக் கொடுத்தார். (2 தீ. 4:12) தீகிக்குவைப் போல் ஒரு நல்ல நண்பர் கிடைத்ததை நினைத்து பவுல் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.

9. நாம் எப்படி தீகிக்குவைப் போல் நடந்துகொள்ளலாம்?

9 நம்பகமான நண்பராக இருப்பதன் மூலம் நாமும் தீகிக்குவைப் போலவே நடந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவுவதாக வெறுமனே வாயளவில் நாம் சொல்வதில்லை; சொன்னபடி நாம் அவர்களுக்கு உதவுகிறோம். (மத். 5:37; லூக். 16:10) நாம் கண்டிப்பாக உதவுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வரும்போது, அது அவர்களுக்கு உண்மையிலேயே ஆறுதலாக இருக்கும். அதைப் பற்றி ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “உதவுறேன்னு சொல்லிட்டு போனவங்க சரியான நேரத்துல உதவுவாங்களா மாட்டாங்களானு நினைச்சும் நாம கவலைப்பட வேண்டியதில்ல.”

10. நீதிமொழிகள் 18:24 சொல்வதுபோல், கஷ்டங்களை அல்லது ஏமாற்றத்தைச் சந்திப்பவர்களுக்கு யாரிடமிருந்து ஆறுதல் கிடைக்கும்?

10 கஷ்டங்களை அல்லது ஏமாற்றத்தைச் சந்திப்பவர்கள் நம்பகமான நண்பர்களிடம் தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டும்போது, அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். (நீதிமொழிகள் 18:24-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய மகன் சபைநீக்கம் செய்யப்பட்டபோது சகோதரர் ஜார்ஜ் ரொம்பவே நொந்துபோனார். “என் மனசுல இருக்கிறதையெல்லாம் நம்பகமான ஒருத்தர் கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்” என்று அவர் சொல்கிறார். ஆல்பர்ட் என்ற சகோதரர், தான் செய்த ஒரு தவறால் சபையில் இருந்த பொறுப்புகளை இழந்துவிட்டார். “என்னை குறை சொல்லாம, நான் சொல்றதையெல்லாம் காது கொடுத்து கேட்குற ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு” என்று அவர் சொல்கிறார். ஆல்பர்ட் நினைத்த மாதிரியே மூப்பர்கள் அவரிடம் அன்பாக நடந்துகொண்டார்கள். பிரச்சினையிலிருந்து வெளியே வர அவருக்கு உதவினார்கள். மூப்பர்கள் விவேகமாக நடந்துகொள்வார்கள், தான் சொன்னதை ரகசியமாக வைத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஆல்பர்ட்டுக்கு வந்தது. இது அவருக்கு ஆறுதலைத் தந்தது.

11. நாம் எப்படி நம்பகமான நண்பராக இருக்கலாம்?

11 நம்பகமான நண்பராக இருக்க வேண்டுமென்றால், பொறுமை என்ற குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சனா என்ற சகோதரியின் கணவர், அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தச் சமயத்தில், தன்னுடைய மனதில் இருந்ததையெல்லாம் நெருங்கிய நண்பர்களிடம் கொட்டியது சனாவுக்கு ஆறுதலைத் தந்தது. “நான் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டிருந்தேன். ஆனாலும் அவங்க பொறுமையா கேட்டாங்க” என்று அவர் சொல்கிறார். மற்றவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டால், நீங்களும் நல்ல நண்பராக இருக்க முடியும்.

மாற்குவைப் போல் மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள்

கடைசிவரை உண்மையோடு இருக்க, மாற்கு காட்டிய அன்பு பவுலுக்கு உதவியது; நம்முடைய சகோதர சகோதரிகள் துன்பத்தில் துவண்டுபோகும்போது நாம் அவர்களுக்கு உதவலாம் (பாராக்கள் 12-14) *

12. மாற்கு யார், மற்றவர்களுக்கு அவர் எப்படி உதவினார்?

12 எருசலேமைச் சேர்ந்தவர்தான் மாற்கு. இவர் யூத மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர். இவருடைய ஒன்றுவிட்ட சகோதரன் பர்னபா நன்கு அறியப்பட்ட மிஷனரியாக இருந்தார். (கொலோ. 4:10) மாற்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பணம் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவர் மற்றவர்களுக்குச் சேவை செய்தார்; அது அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. உதாரணத்துக்கு, பவுலோடும் பேதுருவோடும் சேர்ந்து பல சந்தர்ப்பங்களில் அவர் சேவை செய்தார். அவர்களுக்குத் தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்வது, தங்க இடம் தேடித் தருவது போன்ற நடைமுறையான உதவிகளைச் செய்தார். (அப். 13:2-5; 1 பே. 5:13) ‘கடவுளுடைய அரசாங்கத்துக்காக உழைக்கிற என் சக வேலையாட்களில்’ ஒருவர் என்று மாற்குவைப் பற்றி பவுல் சொன்னார். தனக்கு ‘பக்கபலமாக’ இருந்ததாகவும் சொன்னார்.—கொலோ. 4:10, 11, அடிக்குறிப்பு.

13. மாற்கு செய்த உதவியை பவுல் உயர்வாக நினைத்தார் என்பதை 2 தீமோத்தேயு 4:11 எப்படிக் காட்டுகிறது?

13 மாற்கு, பவுலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரானார். சுமார் கி.பி. 65-ல் பவுல் கடைசியாக ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தீமோத்தேயுவுக்கு பவுல் கடிதம் எழுதினார். மாற்குவைக் கூட்டிக்கொண்டு ரோமுக்கு வரும்படி அதில் சொல்லியிருந்தார். (2 தீ. 4:11) முன்பு மாற்கு தனக்கு உதவி செய்திருந்ததால் இந்த இக்கட்டான சமயத்தில் அவர் தன்னோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று பவுல் நினைத்தார். மாற்கு ரோமுக்கு வந்த பிறகு, பவுலுக்குத் தேவையான உணவு, எழுதுவதற்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்துகொடுத்தார். பவுலுக்கு மரண தண்டனை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், மாற்கு கொடுத்த ஆதரவும் உற்சாகமும் சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை அவருக்குத் தந்திருக்கும்.

14-15. மற்றவர்களுக்கு உதவி செய்வது பற்றி மத்தேயு 7:12-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

14 மத்தேயு 7:12-ஐ வாசியுங்கள். கஷ்டத்தில் தவிக்கிற நமக்கு மற்றவர்கள் உதவும்போது, நாம் ரொம்பவே நன்றியோடு இருக்கிறோம். டேவிட் என்ற சகோதரருடைய அப்பா, பயங்கரமான ஒரு விபத்தில் இறந்துவிட்டார். “நீங்க கஷ்டத்தில இருக்கறப்போ, வழக்கமா செய்ற வேலைகள்கூட உங்களுக்கு மலை மாதிரி தெரியலாம்” என்று டேவிட் சொல்கிறார். “மத்தவங்க செய்ற சின்ன சின்ன உதவிகள்கூட ரொம்ப பிரயோஜனமா இருக்கும்” என்றும் அவர் சொல்கிறார்.

15 யாருக்கெல்லாம் உதவி தேவை என்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தால், அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். நாம் ஏற்கெனவே பார்த்த பீட்டர்-கேத்ரின் தம்பதி எப்போதெல்லாம் டாக்டரிடம் போக வேண்டியிருந்ததோ, அப்போதெல்லாம் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோக ஒரு சகோதரி ஏற்பாடு செய்தார். பீட்டர்-கேத்ரின் தம்பதியால் வண்டி ஓட்ட முடியாததால், சபையில் இருப்பவர்கள் மாறி மாறி அவர்களை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவதற்கு ஒரு அட்டவணையை அந்தச் சகோதரி போட்டார். இது அந்தத் தம்பதிக்கு உதவியாக இருந்ததா? “எங்க தோள் மேல இருந்த பாரத்தை இறக்கி வெச்சமாதிரி இருந்துச்சு” என்று கேத்ரின் சொல்கிறார். நீங்கள் செய்கிற சின்ன சின்ன உதவிகள்கூட மற்றவர்களுக்கு ஆறுதலாகவும் பிரயோஜனமாகவும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

16. மாற்குவிடமிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?

16 சீஷரான மாற்குவுக்கு நிறைய வேலைகள் இருந்தன. யெகோவாவின் சேவையில் முக்கியமான பொறுப்புகளை அவர் செய்தார். அவருடைய பெயரைத் தாங்கிய சுவிசேஷ புத்தகத்தையும் எழுதினார். இவ்வளவு வேலைகள் இருந்தாலும், பவுலை ஆறுதல்படுத்த அவர் நேரம் ஒதுக்கினார். பவுலாலும் மாற்குவிடம் தயங்காமல் உதவி கேட்க முடிந்தது. ஹெலன் என்ற சகோதரி சொல்வதைக் கவனியுங்கள். அவருடைய பாட்டி கொடூரமான முறையில் மரணமடைந்தார். அந்தச் சமயத்தில், சகோதர சகோதரிகள் நிறைய பேர் ரொம்ப முயற்சி எடுத்து அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். “உண்மையிலேயே உதவி செய்யணும்னு நினைக்குறவங்ககிட்ட நம்மால சுலபமா பேச முடியுது. அவங்க உதவி செய்ய தயங்க மாட்டாங்க, ஆசை ஆசையா உதவுவாங்க” என்கிறார் ஹெலன். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மத்தவங்களுக்கு ஓடோடிப்போய் உதவி செய்வேங்குற பெயரை நான் எடுத்திருக்குறனா?’

மற்றவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்

17. இரண்டு கொரிந்தியர் 1:3, 4-ஐ ஆழமாக யோசித்துப்பார்ப்பது மற்றவர்களை ஆறுதல்படுத்த நம்மை எப்படித் தூண்டும்?

17 ஆறுதல் தேவைப்படுகிற சகோதர சகோதரிகள் நிறைய பேர் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நம்மை ஆறுதல்படுத்த மற்றவர்கள் என்ன சொன்னார்களோ, அதையே சொல்லி நாம் அவர்களை ஆறுதல்படுத்தலாம். தன்னுடைய பாட்டியைப் பறிகொடுத்த லாரா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவா நம்மள பயன்படுத்தி மத்தவங்கள ஆறுதல்படுத்துவாரு. ஆனா, அதுக்கு நாம இடங்கொடுக்கணும்.” (2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.) நாம் ஏற்கெனவே பார்த்த மேனகா இப்படிச் சொல்கிறார்: “2 கொரிந்தியர் 1:4-ல சொல்லியிருக்கிற விஷயம் ரொம்ப உண்மை. நமக்கு கிடைச்ச ஆறுதல மத்தவங்களுக்கும் நம்மளால கொடுக்க முடியும்.”

18. (அ) மற்றவர்களை ஆறுதல்படுத்த ஏன் சிலர் தயங்குகிறார்கள்? (ஆ) மற்றவர்களை நாம் எப்படி ஆறுதல்படுத்தலாம்? உதாரணம் சொல்லுங்கள்.

18 மற்றவர்களை ஆறுதல்படுத்த என்ன சொல்வது... என்ன செய்வது... என்று நினைத்து நாம் தயங்கலாம். ஆனால், அப்படிப்பட்ட எண்ணங்களை ஓரங்கட்டிவிட்டு மற்றவர்களை ஆறுதல்படுத்த செயலில் இறங்க வேண்டும். அப்பாவை இழந்த பால் என்ற மூப்பரை ஆறுதல்படுத்த சிலர் நிறைய முயற்சி எடுத்தார்கள். அதைப் பற்றி பால் இப்படிச் சொல்கிறார்: “என்கிட்ட வந்து பேசுறது மத்தவங்களுக்கு அவ்வளவு சுலபமா இல்ல. வார்த்தைகள் கிடைக்காம அவங்க தடுமாறுனாங்க. ஆனா, என்னை ஆறுதல்படுத்துறதுக்கும் பலப்படுத்துறதுக்கும் அவங்க எடுத்த முயற்சிகள நான் இன்னைக்கும் பெருசா நினைக்கிறேன்.” அடுத்ததாக, தாமஸ் என்ற சகோதரரின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் வாழ்ந்த இடத்தில் பயங்கரமான நிலநடுக்கம் வந்தது. “நிலநடுக்கத்துக்கு அப்புறம் நிறைய பேர் எனக்கு மெசேஜ் அனுப்பினாங்க. உண்மைய சொல்லணும்னா, அந்த மெசேஜெல்லாம் இப்ப ஞாபகத்துல இல்ல. ஆனா, நான் பத்திரமாதான் இருக்கேனாங்குறத நிறைய பேர் நிச்சயப்படுத்திக்கிட்டது நல்லா ஞாபகம் இருக்கு.” மற்றவர்கள்மேல் நமக்கு அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டுவதன் மூலம் நாம் அவர்களை ஆறுதல்படுத்த முடியும்.

19. மற்றவர்களுக்கு ‘மிகவும் ஆறுதலாக இருக்க’ வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

19 இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க நிலைமைகள் இன்னும் மோசமாகிக்கொண்டேதான் போகும். வாழ்க்கையும் சிக்கலாகிக்கொண்டேதான் போகும். (2 தீ. 3:13) அதுமட்டுமல்ல, நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் சிலசமயங்களில் நாமாகவே பிரச்சினைகளைத் தேடிக்கொள்கிறோம். தொடர்ந்து நமக்கு ஆறுதல் தேவை என்பது இதிலிருந்து தெரிகிறது. அப்போஸ்தலன் பவுலால் கடைசிவரைக்கும் உண்மையாக இருக்க முடிந்ததற்கு ஒரு காரணம், சகோதர சகோதரிகள் கொடுத்த ஆறுதல்தான்! அதனால், நாமும் அரிஸ்தர்க்குவைப் போல் உண்மையான நண்பர்களாக இருக்கலாம், தீகிக்குவைப் போல் நம்பகமானவர்களாக இருக்கலாம், மாற்குவைப் போல் மற்றவர்களுக்குச் சேவை செய்பவர்களாக இருக்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, சகோதர சகோதரிகள் கடைசிவரைக்கும் உண்மையாக இருப்பதற்கு நம்மால் உதவ முடியும்.—1 தெ. 3:2, 3.

^ பாரா. 5 அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அப்போதெல்லாம், சில சகோதரர்கள் அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார்கள். மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கு எந்த மூன்று குணங்கள் அவர்களுக்கு உதவியது என்பதை இப்போது கண்டுபிடிக்கலாம். அவர்களுடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதையும் பார்க்கலாம்.

^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

பாட்டு 75 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: கப்பல் விபத்திலிருந்து தப்பிக்க அரிஸ்தர்க்குவும் பவுலும் ஒன்றுசேர்ந்து போராடுகிறார்கள்.

^ பாரா. 58 படங்களின் விளக்கம்: தான் எழுதிய கடிதங்களை சபைகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கும்படி தீகிக்குவிடம் பவுல் கேட்டுக்கொள்கிறார்.

^ பாரா. 60 படங்களின் விளக்கம்: பவுலுக்கு மாற்கு உதவுகிறார்.