Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 2

”இயேசுவின் அன்புச் சீஷர்“ கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

”இயேசுவின் அன்புச் சீஷர்“ கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

“நாம் தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவோமாக. ஏனென்றால், அன்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது.”—1 யோ. 4:7.

பாட்டு 3 “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”

இந்தக் கட்டுரையில்... *

1. கடவுளுடைய அன்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 4:8) இது ஒரு அடிப்படை உண்மையை ஞாபகப்படுத்துகிறது. உயிருக்கு மட்டுமல்ல, அன்புக்கும் கடவுள் ஊற்றாக இருக்கிறார். அவர் நம்மை ரொம்ப நேசிக்கிறார். அதனால், நம்மால் தைரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடிகிறது.

2. மிக முக்கியமான என்ன இரண்டு கட்டளைகளைப் பற்றி மத்தேயு 22:37-40 சொல்கிறது, இரண்டாம் கட்டளைக்குக் கீழ்ப்படிவது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

2 விருப்பமிருந்தால் அன்பு காட்டலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், அது ஒரு கட்டளை! (மத்தேயு 22:37-40-ஐ வாசியுங்கள்.) யெகோவா பரிபூரணமானவர். நம்மை அக்கறையாகவும் அன்பாகவும் அவர் நடத்துகிறார். அதனால், இந்த வசனங்களில் இருக்கிற முதலாம் கட்டளைக்குக் கீழ்ப்படிவது நமக்குச் சுலபமாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் கட்டளைக்குக் கீழ்ப்படிவது கஷ்டமாக இருக்கலாம். அதில் சொல்லப்பட்டிருக்கும் மற்றவர்களில், சகோதர சகோதரிகளும் அடங்குவார்கள். இவர்கள் பரிபூரணமானவர்கள் கிடையாது என்பதால், சிலசமயங்களில் அன்பில்லாமல் ஏதாவது சொல்லிவிடலாம் அல்லது செய்துவிடலாம். அதனால்தான், பைபிள் எழுத்தாளர்கள் சிலரைப் பயன்படுத்தி, நாம் ஏன் அன்பு காட்ட வேண்டும்... எப்படிக் காட்ட வேண்டும்... என்றெல்லாம் யெகோவா எழுதி வைத்திருக்கிறார். அந்த எழுத்தாளர்களில் ஒருவர்தான் யோவான்.—1 யோ. 3:11, 12.

3. யோவான் எழுதிய புத்தகங்களிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

3 தான் எழுதிய பைபிள் புத்தகங்களில், கிறிஸ்தவர்கள் அன்பு காட்ட வேண்டும் என்பதை யோவான் வலியுறுத்தியிருக்கிறார். மற்ற மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களைவிட, ‘அன்பை’ பற்றி நிறைய பேசியிருக்கிறார். சுவிசேஷத்தையும் மற்ற மூன்று கடிதங்களையும் எழுதியபோது, யோவானுக்கு கிட்டத்தட்ட நூறு வயது இருந்திருக்கும். கிறிஸ்தவர்கள் எதைச் செய்தாலும் அன்பால்தான் செய்ய வேண்டும் என்பதை அவர் எழுதிய எல்லா புத்தகங்களிலிருந்தும் தெரிந்துகொள்கிறோம். (1யோ. 4:10, 11) இருந்தாலும், அன்பு காட்ட கற்றுக்கொள்வதற்கு அவருக்கும் கொஞ்சக் காலம் எடுத்தது.

4. எல்லா சமயத்திலும் யோவான் மற்றவர்களிடம் அன்பு காட்டினாரா? விளக்குங்கள்.

4 இளவயதில் இருந்தபோது, அன்பு காட்டுவது சிலசமயங்களில் யோவானுக்குக் கஷ்டமாக இருந்தது. உதாரணத்துக்கு, ஒரு தடவை சமாரியா வழியாக இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது, சமாரியாவை சேர்ந்த ஒரு கிராமத்தில் இருந்தவர்கள் இயேசுவையும் அவரோடு போனவர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், யோவானுக்குப் பயங்கர கோபம் வந்தது. உடனே, வானத்திலிருந்து நெருப்பை வரவழைத்து அந்தக் கிராமத்தில் இருந்தவர்களை அழிப்பதற்குக் கட்டளை கொடுக்கும்படி இயேசுவிடம் அவர் சொன்னார். (லூ. 9:52-56) இன்னொரு சமயம், மற்ற அப்போஸ்தலர்களிடம் அன்பு காட்ட தவறிவிட்டார். எப்படி? ‘நீங்க ராஜாவா ஆகுறப்போ என்னோட மகன்களுக்கு முக்கியமான இடம் கொடுங்க’ என்று யோவானுடைய அம்மா இயேசுவிடம் கேட்டார். யோவானும் அவருடைய சகோதரன் யாக்கோபும்தான் இப்படிக் கேட்கும்படி தங்கள் அம்மாவைத் தூண்டியிருக்க வேண்டும். இதைக் கேள்விப்பட்ட மற்ற அப்போஸ்தலர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது. (மத் 20:20, 21, 24) இப்படி யோவானிடம் நிறைய குறைகள் இருந்தாலும் அவரை இயேசு நேசித்தார்.—யோவா. 21:7.

5. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

5 யோவானுடைய உதாரணத்தையும், அன்பைப் பற்றி அவர் சொல்லியிருக்கிற சில விஷயங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அப்போது, சகோதர சகோதரிகள்மேல் எப்படி அன்பு காட்டலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம். அதோடு, முக்கியமான எந்த வழியில் குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பத்தின் மேல் அன்பு காட்டலாம் என்பதையும் பார்ப்போம்.

அன்பு—செயலில்!

நமக்காக உயிர்த் தியாகம் செய்ய, தன்னுடைய மகனையே அனுப்பி நம்மேல் வைத்திருக்கிற அன்பை யெகோவா காட்டினார் (பாராக்கள் 6-7)

6. யெகோவா எப்படி நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார்?

6 அன்பு என்றாலே பெரும்பாலும் கனிவான வார்த்தைகள்தான் நம்முடைய ஞாபகத்துக்கு வரும். ஆனால், அந்த அன்பு உண்மையாக இருக்க வேண்டுமென்றால், அது செயல்களிலும் காட்டப்பட வேண்டும். (யாக்கோபு 2:17, 26-ஐ ஒப்பிடுங்கள்.) உதாரணத்துக்கு, யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார். (1 யோ. 4:19) அழகான வார்த்தைகள் மூலம் அதைத் தெரியப்படுத்தி இருக்கிறார். (சங். 25:10; ரோ. 8:38, 39) ஆனால், வெறும் வார்த்தைகளிலிருந்து மட்டுமல்ல, அவருடைய செயல்களிலிருந்தும் அவருடைய அன்பை நாம் புரிந்துகொள்கிறோம். “தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார். இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது” என்று யோவான் எழுதினார். (1 யோ. 4:9) நமக்காகத் தன்னுடைய ஒரே மகனையே யெகோவா கொடுத்தார்! (யோவா. 3:16) யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு ஏதாவது அத்தாட்சி வேண்டுமா?

7. இயேசு நம்மேல் வைத்திருக்கிற அன்பை எப்படிக் காட்டியிருக்கிறார்?

7 சீஷர்கள்மேல் அன்பு வைத்திருப்பதைத் தன்னுடைய வார்த்தைகள் மூலம் இயேசு காட்டினார். (யோவா. 13:1; 15:15) ஆனால், வெறுமனே வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் காட்டியிருக்கிறார். “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை” என்று அவர் சொன்னார். (யோவா. 15:13) யெகோவாவும் இயேசுவும் நமக்காகச் செய்திருக்கிறவற்றை நினைத்துப்பார்க்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்?

8. ஒன்று யோவான் 3:18-ன்படி, நாம் என்ன செய்ய வேண்டும்?

8 யெகோவாவும் இயேசுவும் சொல்கிறபடியெல்லாம் செய்வதன் மூலம் அவர்கள்மேல் நாம் அன்பு காட்ட வேண்டும். (யோவா. 14:15; 1 யோ. 5:3) நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டிருக்கிறார். (யோவா. 13:34, 35) அந்த அன்பைச் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்ட வேண்டும். (1 யோவான் 3:18-ஐ வாசியுங்கள்.) அதை எப்படியெல்லாம் காட்டலாம்?

சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுங்கள்

9. அன்பிருந்ததால் யோவான் என்ன செய்தார்?

9 யோவான் நினைத்திருந்தால் அவருடைய அப்பாகூடவே தங்கியிருந்திருக்கலாம். அவருடைய குடும்பத் தொழிலான மீன் பிடிக்கும் தொழிலை செய்து நிறைய பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், இயேசுவின் சீஷரானதற்குப் பிறகு, யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வதற்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவருடைய வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அவர் துன்புறுத்தப்பட்டார். முதல் நூற்றாண்டின் கடைசியில், அவருடைய வயதான காலத்தில், நாடு கடத்தப்பட்டார். (அப். 3:1; 4:1-3; 5:18; வெளி. 1:9) அவர் சிறையில் இருந்தபோதும் மற்றவர்களைப் பற்றி நினைத்துப்பார்த்தார். உதாரணத்துக்கு, பத்மு தீவில் அவர் இருந்தபோது, “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காக வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதி சபைகளுக்கு அனுப்பினார். (வெளி. 1:1) பிற்பாடு, சுவிசேஷ புத்தகத்தையும் எழுதினார். பத்மு தீவிலிருந்து விடுதலையானதற்குப் பிறகு ஒருவேளை இவர் இதை எழுதியிருக்கலாம். சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் மூன்று கடிதங்களையும் எழுதினார். அவரைப் போலவே நீங்களும் எப்படி அன்பு காட்டலாம்?

10. மக்கள்மேல் வைத்திருக்கிற அன்பை நீங்கள் எப்படிக் காட்டலாம்?

10 நிறைய பணம் சம்பாதிப்பதற்கும் பேர் புகழை அடைவதற்கும் உங்கள் நேரத்தையும் பலத்தையும் பயன்படுத்தும்படி இந்த உலகம் சொல்லலாம். ஆனால், பிரசங்கிப்பதற்கும் யெகோவாவிடம் நெருங்கிவர மற்றவர்களுக்கு உதவுவதற்கும் நிறைய நேரத்தைச் செலவு செய்வதன் மூலம் மக்கள்மேல் வைத்திருக்கிற அன்பை நீங்கள் காட்டலாம். சகோதர சகோதரிகள் நிறைய பேர் இப்படிச் செய்கிறார்கள். சிலர், முழுநேரமாகக்கூட ஊழியம் செய்கிறார்கள்.

சகோதர சகோதரிகள்மேலும் நம் குடும்பத்தின் மேலும் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை செயல்கள் மூலம் காட்டுகிறோம் (பாராக்கள் 11, 17) *

11. யெகோவாமேலும் சகோதர சகோதரிகள்மேலும் அன்பு வைத்திருப்பதை நிறைய பேர் எப்படிக் காட்டுகிறார்கள்?

11 சகோதர சகோதரிகள் நிறைய பேர், தங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முழுநேர வேலை செய்கிறார்கள். இருந்தாலும், அமைப்புக்கு தங்களால் முடிந்த ஆதரவைக் காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, சிலர் பேரழிவு நிவாரணக் குழுக்களிலும் வேறுசிலர் கட்டுமான வேலைகளிலும் உதவுகிறார்கள். உலகளாவிய வேலைக்காக தாராளமாக நன்கொடை கொடுக்கும் வாய்ப்பு எல்லாருக்குமே இருக்கிறது. யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பால்தான் இவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள். அதோடு, ஒவ்வொரு வாரமும் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமும் பதில்கள் சொல்வதன் மூலமும் சகோதர சகோதரிகள்மேல் அன்பு வைத்திருப்பதை நாம் நிரூபிக்கிறோம். ரொம்பவே களைப்பாக இருந்தாலும் கூட்டங்களுக்குத் தவறாமல் போகிறோம். பயமாக இருந்தாலும் பதில்கள் சொல்கிறோம். நமக்கே பிரச்சினைகள் இருந்தாலும் கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறோம். (எபி. 10:24, 25) சகோதர சகோதரிகள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் நாம் உயர்வாக மதிக்கிறோம்!

12. சகோதர சகோதரிகள்மேல் இருந்த அன்பை யோவான் வேறு எப்படியும் காட்டினார்?

12 சகோதர சகோதரிகளைப் பாராட்டியது மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுத்ததன் மூலமும் யோவான் தன்னுடைய அன்பைக் காட்டினார். உதாரணத்துக்கு, அவர் எழுதிய கடிதங்களில் சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தையும் நல்ல செயல்களையும் பாராட்டினார். அதேசமயத்தில், பாவங்களை ஒத்துக்கொள்வதைப் பற்றி அறிவுரையும் கொடுத்தார். (1 யோ. 1:8–2:1, 13, 14) அதேபோல், சகோதர சகோதரிகள் செய்கிற நல்ல விஷயங்களை நாம் பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் தவறான வழியில் போய்க்கொண்டிருப்பது தெரியும்போது அவர்களுக்கு அன்பாக ஆலோசனை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பதற்குத் தைரியம் தேவை என்பது உண்மைதான். ஆனால், நண்பன் தன்னுடைய நண்பனை கூர்மையாக்குவான், அதாவது சரி செய்வான் என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 27:17.

13. நாம் என்ன செய்யக் கூடாது?

13 சிலசமயங்களில், சில விஷயங்களைச் செய்யாமல் இருப்பதன் மூலமும் சகோதர சகோதரிகள்மேல் இருக்கும் அன்பை நாம் காட்டலாம். உதாரணத்துக்கு, அவர்கள் ஏதாவது சொல்லிவிட்டால் எளிதில் புண்பட்டுவிடாதீர்கள். இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் கவனிக்கலாம். முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டுமென்றால், தன்னுடைய சதையை சாப்பிட்டு ரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று சீஷர்களிடம் இயேசு சொன்னார். (யோவா. 6:53-57) அதைக் கேட்ட சீஷர்கள் நிறைய பேர், அதிர்ச்சியடைந்து அவரை விட்டு போய்விட்டார்கள். ஆனால், யோவான் உட்பட அவருடைய உண்மை நண்பர்கள் அவர்கூடவே இருந்தார்கள். அவர் சொன்னது அவர்களுக்கும் புரியவில்லைதான்! அதை நினைத்து அவர்களும் குழம்பிப்போயிருப்பார்கள்தான்!! ஆனால், அவர் தவறாக ஏதோ சொல்லிவிட்டார் என்று நினைத்து அவர்கள் புண்பட்டுவிடவில்லை. அவர் சத்தியத்தைதான் பேசுவார் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கவில்லை. அதனால், அவர்மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தார்கள். (யோவா. 6:60, 66-69) அப்படியென்றால், நம்முடைய நண்பர்கள் ஏதாவது சொல்லும்போது நாம் எளிதில் புண்பட்டுவிடக் கூடாது. நாமாகவே ஒரு முடிவுக்கு வருவதற்குப் பதிலாக, அவர்கள் விளக்கிச் சொல்லும்வரை காத்திருக்க வேண்டும்.—நீதி. 18:13; பிர. 7:9.

14. சகோதர சகோதரிகளை நாம் ஏன் வெறுக்கக் கூடாது?

14 சகோதர சகோதரிகளை நாம் வெறுக்கக் கூடாது என்றும் யோவான் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்கவில்லையென்றால் நாம் சாத்தானின் கைப்பாவைகளாக ஆகிவிடுவோம். (1 யோ. 2:11; 3:15) முதல் நூற்றாண்டின் கடைசியில், சிலருடைய விஷயத்தில் இதுதான் நடந்தது. கடவுளுடைய மக்களுக்கு நடுவில் வெறுப்பையும் பிரிவினையையும் ஏற்படுத்த தன்னால் முடிந்த எல்லாவற்றையும் சாத்தான் செய்தான். யோவான் கடிதம் எழுதுவதற்கு முன்பே, சபையிலிருந்த சிலர் சாத்தானைப் போலவே நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தார்கள். உதாரணத்துக்கு, தியோத்திரேப்பு என்பவன் சபையில் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். (3 யோ. 9, 10) ஆளும் குழுவால் அனுப்பப்பட்ட சகோதரர்களுக்கு அவன் கொஞ்சம்கூட மதிப்பு காட்டவில்லை. அவனுக்குப் பிடிக்காதவர்களை யாராவது உபசரித்தால் அவர்களைச் சபையிலிருந்து விலக்கவும் அவன் முயற்சி செய்தான். அவனுக்கு எவ்வளவு அகம்பாவம் இருந்திருக்க வேண்டும்! இன்றும் கடவுளுடைய மக்களுக்கு நடுவில் பிரிவினைகளை ஏற்படுத்த சாத்தான் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். அவனுக்கு ஒருபோதும் நாம் இடம்கொடுக்கக் கூடாது.

குடும்பத்தின் மேல் அன்பு காட்டுங்கள்

தன்னுடைய அம்மாவின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும்படியும், யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய அவருக்கு உதவும்படியும் யோவானிடம் இயேசு கேட்டுக்கொண்டார். இன்று குடும்பத் தலைவர்களும் தங்களுடைய குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் (பாராக்கள் 15-16)

15. குடும்பத் தலைவர்கள் எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

15 குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பத்தின் மேல் அன்பு வைத்திருப்பதைக் காட்டுவதற்கு முக்கியமான ஒரு வழி, குடும்பத்தில் இருப்பவர்களுடைய உணவு, உடை மற்றும் மற்ற தேவைகளைக் கவனித்துக்கொள்வது! (1 தீ. 5:8) ஆனால், இதை செய்தால் மட்டும் போதாது. குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும் உதவ வேண்டும். (மத். 5:3) குடும்பத் தலைவர்களுக்கு இயேசு கிறிஸ்து அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். அவர் சித்திரவதைக் கம்பத்தில் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோதும் குடும்பத்தின் மேல் அக்கறை காட்டியதாக யோவான் சுவிசேஷம் சொல்கிறது. அவர் அவ்வளவு வேதனையில் இருந்தாலும் அங்கே நின்றுகொண்டிருந்த தன்னுடைய தாயான மரியாளைக் கவனித்துக்கொள்ளும்படி யோவானிடம் சொன்னார். (யோவா. 19:26, 27) மரியாளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள மற்ற பிள்ளைகள் இருந்தார்கள். ஆனாலும், அவர்களில் ஒருவர்கூட அதுவரை இயேசுவின் சீஷராக ஆகவில்லை. அதனால், தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்ய மரியாளுக்கு யாராவது உதவ வேண்டும் என்று இயேசு ஆசைப்பட்டார்.

16. யோவானுக்கு என்னென்ன பொறுப்புகள் இருந்தன?

16 யோவானுக்கு நிறைய பொறுப்புகள் இருந்தன. அவர் அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்ததால், பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தினார். ஒருவேளை அவருக்குக் கல்யாணமும் ஆகியிருக்கலாம். அதனால், குடும்பத்தில் இருந்தவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதோடு, யெகோவாவோடு அவர்கள் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும் அவர் உதவ வேண்டியிருந்தது. (1 கொ. 9:5) இதிலிருந்து குடும்பத் தலைவர்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

17. தங்களுடைய குடும்பத்தின் மேல் அன்பு வைத்திருப்பதைக் குடும்பத் தலைவர்கள் எப்படிக் காட்டலாம்?

17 குடும்பத் தலைவர்களாக இருக்கும் சகோதரர்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கலாம். உதாரணத்துக்கு, வேலை செய்கிற இடத்தில் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிற விதத்தில் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். (எபே. 6:5, 6; தீத். 2:9, 10) மேய்ப்பு சந்திப்பு செய்வது... பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்துவது... என சபையிலும் அவர்களுக்குப் பொறுப்புகள் இருக்கலாம். அதேசமயத்தில், தன்னுடைய மனைவியோடும் பிள்ளைகளோடும் சேர்ந்து தவறாமல் அவர்கள் பைபிள் படிக்க வேண்டும். இப்படித் தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கும் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும் அவர்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள் எடுக்கிற முயற்சிகளுக்குக் குடும்பத்தில் இருப்பவர்கள் ரொம்ப நன்றியோடு இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.—எபே. 5:28, 29; 6:4.

“என் அன்பில் நிலைத்திருங்கள்”

18. யோவான் எதில் உறுதியாக இருந்தார்?

18 ரொம்ப வருஷங்கள் யோவான் வாழ்ந்தார். சுவாரஸ்யமான நிறைய அனுபவங்கள் அவருக்குக் கிடைத்தன. அதேசமயத்தில், அவருடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்துகிற சில பிரச்சினைகள் அவருக்கு வந்தன. ஆனால், எல்லா சமயத்திலும் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளை உட்பட, இயேசுவின் எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். அதனால், இயேசுவும் யெகோவாவும் தன்மேல் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதிலும், எப்பேர்ப்பட்ட சோதனையையும் சமாளிக்கத் தேவையான பலத்தைத் தருவார்கள் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. (யோவா. 14:15-17; 15:9, 10; 1 யோ. 4:16) தன்னுடைய சொல்லிலும் செயலிலும் அன்பு காட்டுவதற்கு யோவான் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். சாத்தானாலும் சரி, இந்த உலகத்தாலும் சரி, அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

19. நம்மை என்ன செய்யும்படி 1 யோவான் 4:7 சொல்கிறது, ஏன்?

19 யோவானைப் போலவே நாமும் சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் ஓர் உலகத்தில்தான் வாழ்கிறோம். அவனுக்கு யார்மீதும் அன்பில்லை. (1 யோ. 3:1, 10) சகோதர சகோதரிகள்மேல் நாம் அன்பு காட்டக் கூடாது என்று அவன் ஆசைப்படுகிறான். ஒருபோதும் அவனுக்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. அதனால், நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்ட வேண்டுமென்று நாம் உறுதியாக இருக்கலாம். நம்முடைய சொல்லிலும் செயலிலும் அதை நிரூபிக்கலாம். அப்போது, யெகோவாவின் குடும்பத்தில் நாமும் ஒருவராக இருக்கிறோம் என்ற திருப்தி நமக்கு இருக்கும். நம்முடைய வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கும்.1 யோவான் 4:7-ஐ வாசியுங்கள்.

பாட்டு 69 உம் வழிகளை எனக்குப் போதிப்பீரே!

^ பாரா. 5 பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் “இயேசுவின் அன்புச் சீஷர்” அப்போஸ்தலன் யோவானாகத்தான் இருக்க வேண்டும். (யோவா. 21:7) அப்படியென்றால், அவருடைய இளவயதிலேயே அவரிடம் அருமையான குணங்கள் இருந்திருக்க வேண்டும். அவருடைய வயதான காலத்தில், அன்பைப் பற்றி விலாவாரியாக எழுதுவதற்கு யெகோவா அவரைப் பயன்படுத்தினார். இந்தக் கட்டுரையில், அவர் எழுதிய சில விஷயங்களைப் பார்ப்போம். அதோடு, அவரிடமிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம்.

^ பாரா. 59 படவிளக்கம்: நிறைய பொறுப்புகள் இருக்கும் ஒரு குடும்பத் தலைவர், பேரழிவு நிவாரணக் குழுவில் வேலை செய்கிறார். உலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுக்கிறார். குடும்ப வழிபாட்டுக்கு மற்றவர்களை அழைக்கிறார்.