உங்களுக்குத் தெரியுமா?
பைபிள் சொல்வது உண்மை என்பதை ஒரு பழங்காலக் கல்வெட்டு எப்படிக் காட்டுகிறது?
எருசலேமில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் (Bible Lands Museum), சுமார் கி.மு. 700-600 காலப்பகுதியைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு குகையில் அது கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குகை, இஸ்ரவேலில் எப்ரோனுக்குப் பக்கத்தில் இருக்கிறது. அந்தக் கல்வெட்டில், “ஹாகாவின் மகன் ஹாகாஃபை யாவே ஷவயோட் சபிக்கட்டும்” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்வெட்டு எப்படி பைபிளை ஆதரிக்கிறது? பைபிள் காலங்களில், கடவுளுடைய பெயரான யெகோவா (பழங்கால எபிரெயுவில், ய்ஹ்வ்ஹ் என்று எழுதப்பட்டது) பிரபலமாக இருந்ததையும், மக்கள் அதைத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தியதையும் அது காட்டுகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட குகைகளின் சுவர்களில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவை எதைக் காட்டுகின்றன? ஒன்றுகூடி வருவதற்கோ ஒளிந்துகொள்வதற்கோ அந்தக் குகைகளைப் பயன்படுத்தியவர்கள், அவற்றின் சுவர்களில் கடவுளுடைய பெயரையும் அந்தப் பெயரை உள்ளடக்கிய தனிப்பட்ட பெயர்களையும் எழுதுவது வழக்கமாக இருந்ததைக் காட்டுகின்றன.
கல்வெட்டிலும் குகைகளின் சுவர்களிலும் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளைப் பற்றி ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரேச்சல் நாபுல்சி இப்படிச் சொன்னார்: “ய்ஹ்வ்ஹ் என்ற பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. . . . இந்த எழுத்துகளும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட தகவல்களும், இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருந்தவர்களின் வாழ்க்கையில் ய்ஹ்வ்ஹ் என்ற பெயர் எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன.” இந்த விஷயம் பைபிள் சொல்வதை ஆதரிக்கிறது. ஏனென்றால், ய்ஹ்வ்ஹ் என்று எபிரெயுவில் எழுதப்பட்டிருக்கும் கடவுளுடைய பெயர், பைபிளில் ஆயிரக்கணக்கான தடவை காணப்படுகிறது. அதோடு, பலருடைய சொந்தப் பெயர்களில் கடவுளுடைய பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த “யாவே ஷவயோட்” என்ற வார்த்தைகளின் அர்த்தம், “படைகளின் யெகோவா” [அதாவது, “பரலோகப் படைகளின் யெகோவா”] என்பதுதான். அப்படியென்றால், பைபிள் காலங்களில் யெகோவா என்ற பெயரை மட்டுமல்ல, “படைகளின் யெகோவா” என்ற வார்த்தைகளையும் மக்கள் பொதுவாகப் பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது. இந்த விஷயமும் பைபிளை ஆதரிக்கிறது. ஏனென்றால், “படைகளின் யெகோவா” என்ற வார்த்தைகள், எபிரெய வேதாகமத்தின் மூலப் பிரதிகளில் 250-க்கும் அதிகமான தடவை வருகின்றன. பெரும்பாலும், ஏசாயா, எரேமியா, சகரியா ஆகிய புத்தகங்களில் வருகின்றன.