படிப்புக் கட்டுரை 1
பதட்டம் அடையாதீர்கள், யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்!
2021-க்கான வருடாந்தர வசனம்: “நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்.”—ஏசா. 30:15.
பாட்டு 152 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!
இந்தக் கட்டுரையில்... *
1. தாவீது ராஜாவைப் போலவே சிலருடைய மனதில் என்ன கேள்வி இருக்கலாம்?
கவலைகளே இல்லாமல் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டுமென்றுதான் நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம்! ஆனால், சிலசமயங்களில் கவலைகள் நம்மைத் திணறடிக்கலாம். “எத்தனை நாளைக்குத்தான் நான் கவலையில் தவிக்க வேண்டும்? எத்தனை நாளைக்குத்தான் இதயத்தில் துக்கத்தைச் சுமக்க வேண்டும்?” என்று கேட்ட தாவீது ராஜாவைப் போலவே யெகோவாவின் ஊழியர்கள் சிலர் கேட்கலாம்.—சங். 13:2.
2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
2 யாராலும் கவலையே இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அளவுக்கதிகமாக கவலைப்படாமல் இருப்பதற்கு நம்மால் சில விஷயங்களைச் செய்ய முடியும். இந்தக் கட்டுரையில், என்ன சில விஷயங்கள் நமக்குக் கவலையைத் தரலாம் என்று பார்ப்போம். பிறகு, பிரச்சினைகள் வரும்போது பதட்டம் அடையாமல் இருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய ஆறு விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
எவையெல்லாம் நம்மைக் கவலைப்பட வைக்கலாம்?
3. நமக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா?
3 கவலையை உண்டாக்குகிற விஷயங்களை நம்மால் ஓரளவுக்குத்தான் தடுக்க முடியும். சிலசமயங்களில் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. உதாரணத்துக்கு, உணவுப் பொருட்களின் விலை... துணிமணிகளின் விலை... வீட்டு வாடகை... இவையெல்லாம் வருஷா வருஷம் ஏறிக்கொண்டே போகிறது. அதோடு, கூடவேலை செய்பவர்களோ கூடபடிப்பவர்களோ நம்மை நேர்மையில்லாமல் நடக்க சொல்லலாம் அல்லது ஒழுக்கங்கெட்ட விஷயங்களைச் செய்ய சொல்லலாம். நம்மைச் மத். 13:22; 1 யோ. 5:19) அதனால், உலகம் முழுவதும் பிரச்சினைகளால் நிறைந்திருப்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
சுற்றியும் குற்றங்கள் நடக்கலாம். இவை எதுவுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை! இந்த உலகத்தில் இருக்கிற நிறைய பேர் பைபிள் நியமங்களின்படி வாழாததால், இந்த மாதிரியான விஷயங்கள் நம்மை பாதிக்கின்றன. சிலரை, யெகோவாவுக்கு சேவை செய்ய முடியாத அளவுக்கு, ‘உலகத்தின் கவலைகளிலேயே’ சாத்தான் மூழ்கடித்திருக்கிறான். (4. பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகலாம்?
4 சிலசமயங்களில், பிரச்சினைகளைப் பற்றியே யோசித்து யோசித்து கவலையில் நாம் மூழ்கிவிடலாம். உதாரணத்துக்கு, ‘என்னோட குடும்பத்துக்கு தேவையான வருமானம் கிடைக்காம போயிடுமோ? நோய் ஏதாவது வந்து வேல செய்ய முடியாம போயிடுமோ? என்னோட வேல பறிபோயிடுமோ? சோதனை ஏதாவது வந்தா கடவுளுக்கு உண்மையில்லாம போயிடுவனோ?’ என்று நாம் கவலைப்படலாம். அதோடு, ‘சீக்கிரத்துல கடவுளோட மக்கள சாத்தான் தாக்குறப்போ, என்னால அத சமாளிக்க முடியுமா?’ என்றும் நாம் கவலைப்படலாம். ‘இதையெல்லாம் நினைச்சு கவலப்படுறது தப்போ?’ என்றுகூட நாம் நினைக்கலாம்.
5. எந்த அர்த்தத்தில் “கவலைப்படுவதை நிறுத்துங்கள்” என்று இயேசு சொன்னார்?
5 “கவலைப்படுவதை நிறுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 6:25) அப்படியென்றால், நாம் எதை நினைத்தும் கவலைப்படக் கூடாதா? அப்படியில்லை! நம்மீது அக்கறை இருப்பதால்தான் அவர் அப்படிச் சொன்னார். அந்தக் காலத்தில் வாழ்ந்த உண்மை ஊழியர்கள் சிலர் கவலைப்பட்டபோது யெகோவா அவர்களைக் கண்டிக்கவில்லை. * (1 ரா. 19:4; சங். 6:3) நம்முடைய தேவைகளைப் பற்றி அளவுக்கதிகமாக கவலைப்பட்டு, யெகோவாவுக்கு செய்யும் சேவையை நாம் நிறுத்திவிடக் கூடாது என்று இயேசு ஆசைப்பட்டார். அப்படியென்றால், அளவுக்கதிகமாக கவலைப்படாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?—“ கவலையைக் குறைக்க...” என்ற பெட்டியைப் பாருங்கள்.
பதட்டம் அடையாமல் இருக்க உதவும் ஆறு விஷயங்கள்
6. பதட்டம் அடையாமல் இருப்பதற்கு எது உதவும் என்று பிலிப்பியர் 4:6, 7 சொல்கிறது?
6 (1) அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை நினைத்து நீங்கள் கவலைப்படும்போது, உடனடியாக யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள். (1 பே. 5:7) அப்போது, “எல்லா [மனிதர்களுடைய] சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” உங்களுக்கு கிடைக்கும். (பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) நீங்கள் மனஅமைதியோடு இருப்பதற்கு தன்னுடைய சக்தியைக் கொடுத்து யெகோவா உங்களுக்கு உதவுவார்.—கலா. 5:22.
7. நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
7 யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதைச் சொல்லி ஜெபம் செய்யுங்கள். அதைப் பற்றி உங்கள் மனதுக்குள் என்னவெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன என்றும் சொல்லுங்கள். அந்தப் பிரச்சினை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், அதைச் சரிசெய்வதற்கான ஞானத்தையும் பலத்தையும் தரும்படி கேளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றால், அளவுக்கதிகமாக கவலைப்படாமல் இருக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். உங்களுடைய பிரச்சினையை சொல்லி ஜெபம் செய்தால், யெகோவா எப்படிப் பதில் கொடுக்கிறார் என்பதைப் பார்க்க முடியும். உடனடியாக பதில் கிடைக்கவில்லை என்றால், ஜெபம் செய்வதை நிறுத்திவிடாதீர்கள். உங்கள் பிரச்சினையை சொல்லி ஜெபம் செய்வது மட்டுமல்லாமல், விடாமல் நீங்கள் ஜெபம் செய்ய வேண்டும் என்றும் யெகோவா விரும்புகிறார்.—லூக். 11:8-10.
8. ஜெபம் செய்யும்போது நீங்கள் எதை மறந்துவிடக் கூடாது?
8 கவலைகளை யெகோவாவிடம் கொட்டும்போது, நன்றி சொல்லவும் மறந்துவிடாதீர்கள். பிரச்சினைகள் திணறடிக்கும் சமயத்தில்கூட, இதுவரை யெகோவா உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நினைத்துப்பாருங்கள். சிலசமயங்களில், உங்கள் மனதில் இருப்பதைக் கொட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் நீங்கள் தவிக்கலாம். வெறுமனே ‘உதவுங்க 2 நா. 18:31; ரோ. 8:26.
யெகோவாவே’ என்று மட்டுமே சொல்ல முடியலாம். ஆனாலும், யெகோவா அதைக் கேட்பார், பதில் கொடுப்பார்.—9. உண்மையான பாதுகாப்பு எப்படிக் கிடைக்கும்?
9 (2) உங்களுடைய ஞானத்தை நம்பியிருக்காமல் யெகோவாவுடைய ஞானத்தை நம்பியிருங்கள். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம். அசீரியர்கள் யூதாவைத் தாக்கத் தயாராக இருந்த சமயம் அது! அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு யூதா மக்கள் எகிப்திடம் உதவி கேட்டார்கள். (ஏசா. 30:1, 2) அப்படிக் கேட்பது அவர்களை அழிவில்தான் கொண்டுபோய்விடும் என்று யெகோவா எச்சரித்தார். (ஏசா. 30:7, 12, 13) உண்மையான பாதுகாப்பு கிடைக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏசாயா மூலம் அவர் சொன்னார். அதாவது, “நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்” என்று சொன்னார்.—ஏசா. 30:15ஆ.
10. யெகோவாவை நம்புகிறோம் என்பதைக் காட்டுவதற்கு நம் வாழ்க்கையில் என்னென்ன சந்தர்ப்பங்கள் வரலாம்?
10 யெகோவாமீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு நம் வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் வரலாம். சில உதாரணங்கள்: ஒருவேளை, கைநிறைய சம்பாதிக்கிற ஒரு வேலை உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், அது உங்களுடைய நேரத்தையெல்லாம் உறிஞ்சிவிடலாம். இப்போது சேவை செய்கிற அளவுக்கு உங்களால் யெகோவாவுக்கு சேவை செய்ய முடியாமல் போகலாம். அல்லது, நீங்கள் வேலை செய்கிற இடத்தில் சத்தியத்தில் இல்லாத ஒருவர் உங்களைக் காதலிப்பதாக சொல்லலாம். அல்லது, உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் ‘உனக்கு யார் வேணும்? யெகோவாவா இல்ல நானா, நீயே முடிவு பண்ணிக்கோ’ என்று சொல்லி உங்களை மிரட்டலாம். இவை ஒவ்வொன்றும் கஷ்டமான சூழ்நிலைகள்தான். ஆனால், சரியான முடிவுகளை எடுப்பதற்கு யெகோவா உங்களுக்கு உதவுவார். (மத். 6:33; 10:37; 1 கொ. 7:39) யெகோவாமீது நம்பிக்கை வைத்து, அவர் சொல்கிறபடி செய்வீர்களா?
11. துன்புறுத்தல் வரும்போதும் பதட்டம் அடையாமல் இருப்பதற்கு எந்த பைபிள் பதிவுகளை படித்துப் பார்க்கலாம்?
11 (3) நல்ல உதாரணங்களிலிருந்தும் கெட்ட உதாரணங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். யெகோவாமீது நம்பிக்கை வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பைபிளில் இருக்கிற நிறைய பதிவுகள் காட்டுகின்றன. இதைப் படிக்கும்போது, கடவுளுடைய ஊழியர்களுக்குப் பயங்கரமான துன்புறுத்தல்கள் வந்தபோதும் அவர்களால் எப்படிப் பதட்டம் அடையாமல் இருக்க முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, பிரசங்கிக்கக் கூடாது என்று அப்போஸ்தலர்களுக்கு யூத உச்ச நீதிமன்றம் கட்டளை கொடுத்தபோது அவர்கள் பயந்துவிடவில்லை. “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று தைரியமாக சொன்னார்கள். (அப். 5:29) தாங்கள் அடிக்கப்பட்டபோதும் அப்போஸ்தலர்கள் பதட்டம் அடையவில்லை. ஏனென்றால், யெகோவா தங்கள் பக்கம் இருக்கிறார் என்பதும் அவருடைய ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால், நல்ல செய்தியை தொடர்ந்து அவர்கள் பிரசங்கித்தார்கள். (அப். 5:40-42) ஸ்தேவானுடைய விஷயத்தில் என்ன நடந்தது? அவர் சாகும்போதுகூட அவருடைய முகத்தில் ஒரு விதமான அமைதி தெரிந்தது. “அவருடைய முகம் ஒரு தேவதூதரின் முகம்போல்” இருந்தது. (அப். 6:12-15) ஏனென்றால், யெகோவாவின் ஆதரவு தனக்கு இருந்ததை அவர் உறுதியாக நம்பினார்.
12. துன்புறுத்தப்படும்போதும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை 1 பேதுரு 3:14-ம் 4:14-ம் எப்படிக் காட்டுகின்றன?
12 யெகோவாவின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதில் அப்போஸ்தலர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஏனென்றால், அற்புதங்களைச் செய்வதற்கு யெகோவா அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்திருந்தார். (அப். 5:12-16; 6:8) ஆனால், இன்று நமக்கு அப்படிக் கொடுப்பதில்லை. இருந்தாலும், நீதிக்காக நாம் கஷ்டப்படும்போது தன்னுடைய சக்தியைக் கொடுத்து உதவுவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். (1 பேதுரு 3:14-யும், 4:14-யும் வாசியுங்கள்.) அதனால், ‘எதிர்காலத்துல துன்புறுத்தல் வந்தா நான் எப்படி சமாளிப்பேன்?’ என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, யெகோவாமேல் இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்த நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். “உங்கள் எதிரிகள் எல்லாரும் திரண்டு வந்தாலும் உங்களை எதிர்த்து நிற்கவோ எதிர்த்துப் பேசவோ முடியாதபடி நான் உங்களுக்கு வார்த்தைகளையும் ஞானத்தையும் அருளுவேன்” என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார். முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போலவே நாமும் இந்த வாக்குறுதிகளை நம்ப வேண்டும். “சகித்திருப்பதன் மூலம் உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வீர்கள்” என்றும் இயேசு வாக்குக் கொடுத்திருந்தார். (லூக். 21:12-19) இன்னொரு விஷயத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதாவது, தனக்கு உண்மையாக வாழ்ந்து இறந்துபோனவர்களைப் பற்றிய ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் யெகோவா ஞாபகத்தில் வைத்திருக்கிறார். இதை வைத்து அவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்.
13. யெகோவாமேல் நம்பிக்கை வைக்காதவர்களைப் பற்றிப் படிப்பது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?
13 பதட்டம் அடையாமல் யெகோவாமேல் நம்பிக்கை வைக்கத் தவறியவர்களுடைய அனுபவங்களையும் நாம் படித்துப் பார்க்கலாம். அப்போது, அவர்கள் செய்த தவறுகளை நாமும் செய்யாமல் இருப்போம். உதாரணத்துக்கு, பலம் படைத்த எத்தியோப்பிய படை யூதாவைத் தாக்கியபோது, ஆசா ராஜா யெகோவாமேல் நம்பிக்கை வைத்தார். அதனால், யெகோவா அவருக்கு வெற்றி கொடுத்தார். (2 நா. 14:9-12) ஆனால் பிற்பாடு, இதைவிட சிறிய படையோடு இஸ்ரவேல் ராஜா பாஷா வந்தபோது, யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக சீரியர்கள்மேல் ஆசா நம்பிக்கை வைத்தார். தன்னைக் காப்பாற்ற சொல்லி ஏராளமான பொருள்களை அள்ளிக் கொடுத்தார். (2 நா. 16:1-3) அவருடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் தீராத நோய் அவருக்கு வந்தபோதும் யெகோவாவிடம் அவர் உதவி கேட்கவில்லை.—2 நா. 16:12.
14. ஆசா செய்த தவறுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 பிரச்சினைகளை சமாளிப்பதற்கு ஆசா ஆரம்பத்தில் யெகோவாவை நம்பியிருந்தார். ஆனால், போகப் போக யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் தன்மேலேயே நம்பிக்கை வைத்தார். மேலோட்டமாகப் பார்த்தால், சீரியர்களிடம் ஆசா உதவி கேட்டதில் எந்தத் தவறும் இல்லை என்பதுபோல் தோன்றலாம். ஏனென்றால், அப்படிக் கேட்டதால் அவருக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், அந்த வெற்றி நிலைக்கவில்லை. கொஞ்ச காலத்துக்குத்தான் யூதாவில் சந்தோஷமும் சமாதானமும் இருந்தது. “உங்களுடைய கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் சீரியா ராஜாமேல் நீங்கள் நம்பிக்கை வைத்ததால், அவனுடைய படை உங்கள் கையிலிருந்து தப்பித்துவிட்டது” என்று ஒரு தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்னார். (2 நா. 16:7) நமக்கு என்ன பாடம்? பைபிள் வழியாக யெகோவா தருகிற அறிவுரைகளின்படி நடக்காமல் நாமாகவே பிரச்சினைகளை சரிசெய்துகொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. ஒருவேளை, உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது? அப்போதும் பதட்டம் அடையாமல் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தால் அவர் நமக்கு உதவுவார்.
15. பைபிளைப் படிக்கும்போது நாம் என்ன செய்யலாம்?
15 (4) வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். பைபிளைப் படிக்கும்போது, பதட்டம் அடையாமல் யெகோவாமேல் நம்பிக்கை வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிற வசனங்களை நீங்கள் பார்க்கலாம். அப்படிப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். அதற்கு, அந்த வசனங்களை நீங்கள் வாய்விட்டு படிக்கலாம். அல்லது அதை எழுதி வைத்துக்கொண்டு அடிக்கடி எடுத்து பார்க்கலாம். யோசுவாவிடம் யெகோவா என்ன சொல்லியிருந்தார் என்று கவனியுங்கள். ஞானமாக செயல்பட, தவறாமல் திருச்சட்டத்தைத் தாழ்ந்த குரலில் படிக்கச் சொல்லியிருந்தார். அப்படிச் செய்ததால், பயப்படாமல் கடவுளுடைய மக்களை அவரால் வழிநடத்த முடிந்தது. (யோசு. 1:8, 9) கவலையையோ பயத்தையோ உண்டாக்குகிற சூழ்நிலைகளில்கூட மனசமாதானத்தோடு இருக்க பைபிளில் இருக்கிற நிறைய வசனங்கள் உதவும்.—சங். 27:1-3; நீதி. 3:25, 26.
16. பதட்டப்படாமல் தன்மேல் நம்பிக்கை வைப்பதற்கு சபையை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார்?
16 (5) சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிடுங்கள். பதட்டப்படாமல் தன்மேல் நம்பிக்கை வைக்க, சகோதர சகோதரிகள் வழியாக யெகோவா உதவுகிறார். கூட்டங்களில், மேடையிலிருந்து சொல்லப்படும் தகவல்களை நாம் கேட்கிறோம். மற்றவர்கள் சொல்கிற பதில்களையும் நாம் கவனிக்கிறோம். ஒருவரோடு ஒருவர் பேசி உற்சாகப்படுத்திக்கொள்கிறோம். (எபி. 10:24, 25) இவையெல்லாம் நமக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன. அதோடு, சபையில் இருக்கிற நண்பர்களிடம் நம் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டும்போது நமக்கு ஆறுதல் கிடைக்கிறது. நண்பர் சொல்கிற ஒரு “நல்ல வார்த்தை” நம்முடைய மனபாரத்தை நிச்சயம் குறைக்கும்.—நீதி. 12:25.
17. எபிரெயர் 6:19-ன்படி, கவலையை உண்டாக்குகிற சூழ்நிலைகளைத் தாக்குப்பிடிக்க நம்முடைய எதிர்கால நம்பிக்கை எப்படி உதவும்?
17 (6) உங்களுடைய நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய எதிர்கால நம்பிக்கை, “நம் உயிருக்கு நங்கூரம்” போன்றது. கவலையை உண்டாக்குகிற சூழ்நிலைகளிலும் அது நம்மைத் தாங்கிப்பிடிக்கும். (எபிரெயர் 6:19-ஐ வாசியுங்கள்.) யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிற எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அமைதி தவழும் அந்தப் புதிய உலகத்தை உங்கள் மனக்கண்களில் பாருங்கள். கவலைகளோ கஷ்டங்களோ அங்கே இருக்காது. (ஏசா. 65:17) கெட்ட விஷயங்கள் எதுவுமே நடக்காது. (மீ. 4:4) எதிர்கால வாக்குறுதிகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போதும் உங்களுடைய நம்பிக்கை இன்னும் பலமாகும். அதனால், பிரசங்கிக்கவும் சீஷராக்கவும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்போது, “உங்களுடைய நம்பிக்கை நிறைவேறும் என்ற முழு உறுதி கடைசிவரை உங்களுக்கு இருக்கும்.”—எபி. 6:11.
18. எதிர்காலத்தில் என்ன நடக்கலாம், அவற்றை நாம் எப்படிச் சமாளிக்கலாம்?
18 இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க, கவலையை உண்டாக்குகிற பிரச்சினைகள் இன்னும் அதிகமாகும். அந்த மாதிரியான சமயங்களில், நம்மீது நம்பிக்கை வைக்காமல் யெகோவாமீது நம்பிக்கை வைக்கவும் பதட்டம் அடையாமல் இருக்கவும் 2021-க்கான வருடாந்தர வசனம் உதவும். “நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்” என்ற வாக்குறுதியை அந்த வசனம் தருகிறது. இந்த வாக்குறுதியை நாம் நம்புகிறோம் என்பதை, 2021 முழுவதும் நம்முடைய செயல்கள் மூலம் காட்டலாம்.—ஏசா. 30:15.
பாட்டு 49 யெகோவா நம் தஞ்சமே!
^ பாரா. 5 இப்போதோ எதிர்காலத்திலோ நமக்குக் கஷ்டமான சூழ்நிலைகள் வரும்போது, யெகோவாமேல் நம்பிக்கை வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை 2021-க்கான வருடாந்தர வசனம் காட்டுகிறது. இந்த வசனத்தில் இருக்கிற அறிவுரையின்படி எப்படி நடந்துகொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
^ பாரா. 5 சகோதர சகோதரிகளில் சிலர் எப்போது பார்த்தாலும் அளவுக்கதிகமான கவலையில் (மனப்பதற்ற நோய்) மூழ்கிவிடுகிறார்கள். இயேசு சொன்ன கவலையோடு இதை நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.
^ பாரா. 63 படவிளக்கம்: (1) ஒரு சகோதரி, நாள் முழுவதும் வெவ்வேறு சமயங்களில் தன்னுடைய கவலைகளைப் பற்றி உருக்கமாக ஜெபம் செய்கிறார்.
^ பாரா. 65 படவிளக்கம்: (2) மதிய உணவு இடைவேளையின்போது பைபிளைப் படிக்கிறார்.
^ பாரா. 67 படவிளக்கம்: (3) பைபிளில் இருக்கிற நல்ல உதாரணங்களையும் கெட்ட உதாரணங்களையும் யோசித்துப்பார்க்கிறார்.
^ பாரா. 69 படவிளக்கம்: (4) மனப்பாடம் செய்ய விரும்புகிற வசனத்தை எழுதி ஃப்ரிட்ஜில் ஒட்டிவைக்கிறார்.
^ பாரா. 71 படவிளக்கம்: (5) ஒரு சகோதரியோடு சேர்ந்து ஊழியம் செய்வதன் மூலம் அவரோடு நேரம் செலவிடுகிறார்.
^ பாரா. 73 படவிளக்கம்: (6) எதிர்கால வாக்குறுதிகளைப் பற்றி யோசித்துப்பார்ப்பதன் மூலம் தன்னுடைய நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்கிறார்.