படிப்புக் கட்டுரை 4
பாசத்தைக் காட்டுங்கள்
“ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்.”—ரோ. 12:10.
பாட்டு 73 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்
இந்தக் கட்டுரையில்... *
1. குடும்பத்தில் இன்று பந்தபாசம் இல்லை என்று எப்படிச் சொல்கிறோம்?
கடைசி நாட்களில் மக்கள் “பந்தபாசம்” இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:1, 3) இதை நாம் கண்ணாரப் பார்க்கிறோம்! உதாரணத்துக்கு, இன்று லட்சக்கணக்கான தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். அதனால், அவர்களுடைய பிள்ளைகள் அன்புக்காக ஏங்குகிறார்கள். இன்னொரு பக்கம், குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அன்னியர்களாகத்தான் இருக்கிறார்கள். இதைப் பற்றி குடும்ப நல ஆலோசகர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்: “அம்மா அப்பா பிள்ளைகள் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து ஒருத்தருக்கொருத்தர் பேசிக்குறதுக்கு பதிலா, கம்ப்யூட்டர்கிட்டயும் ஃபோன்கிட்டயும் வீடியோகேம்ஸ்கிட்டயும்தான் பேசிக்கிறாங்க. இவங்க எல்லாரும் ஒரே வீட்டுல இருந்தாலும் முன்பின் தெரியாதவங்க மாதிரிதான் இருக்குறாங்க.”
2-3. (அ) ரோமர் 12:10 சொல்வதுபோல் நாம் யார்மேல் பாசத்தைக் காட்ட வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
2 இந்த உலகத்தில் இருக்கிற நிறைய பேரை போல நாம் அன்பு இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. (ரோ. 12:2) அதற்குப் பதிலாக, குடும்பத்தில் இருப்பவர்கள்மேல் மட்டுமல்ல சகோதர சகோதரிகள்மேலும் பாசமாக இருக்க வேண்டும். (ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்.) பாசம் என்றால் என்ன? ரத்த சொந்தங்களுக்குள் இயல்பாகவே ஏற்படுகிற பிணைப்புதான் பாசம்! இப்படிப்பட்ட ஒரு பிணைப்பு, சகோதர சகோதரிகளுக்கும் நமக்கும் இடையில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, நாம் எல்லாரும் ஒற்றுமையாக யெகோவாவை வணங்க முடியும்.—மீ. 2:12.
3 பாசத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும், எப்படித் தொடர்ந்து காட்டுவது என்றும் யெகோவாவிடமிருந்தும் அவருடைய ஊழியர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யெகோவா—‘கனிவான பாசம் நிறைந்தவர்’
4. யெகோவா நம்மேல் வைத்திருக்கிற ஆழமான அன்பைப் புரிந்துகொள்ள யாக்கோபு 5:11 எப்படி உதவுகிறது?
4 யெகோவாவின் பொன்னான குணங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று 1 யோ. 4:8) இந்த அன்புதான் அவரிடம் நம்மை ஈர்த்தது. அதோடு, யெகோவா ‘கனிவான பாசம் நிறைந்தவர்’ என்றும் பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 5:11-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மேல் வைத்திருக்கிற ஆழமான அன்பைப் புரிந்துகொள்ள இந்த வசனம் உதவுகிறது.
அது சொல்கிறது. (5. யெகோவா எப்படி இரக்கம் காட்டுகிறார், நாம் எப்படி அவரைப் போலவே நடந்துகொள்ளலாம்?
5 யெகோவா கனிவான பாசம் நிறைந்தவர் என்று சொல்வதோடு, இரக்கம் நிறைந்தவர் என்றும் யாக்கோபு 5:11 சொல்கிறது. (யாத். 34:6) இந்தக் குணமும் அவரிடம் நம்மை ஈர்த்திருக்கிறது. அப்படியென்றால், யெகோவா எப்படி இரக்கம் காட்டுகிறார்? ஒரு வழி, நம்முடைய தவறுகளை மன்னிப்பதன் மூலம்! (சங். 51:1) பைபிளைப் பொறுத்தவரை, இரக்கம் என்பது மன்னிப்பது மட்டும் கிடையாது. யாராவது ஒருவர் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நம்முடைய இதயத்தில் ஊற்றெடுக்கிற உணர்வுதான் இரக்கம்! இந்த உணர்வுதான், எப்படியாவது அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற தூண்டுதலைத் தருகிறது. இதே தூண்டுதல் யெகோவாவுக்கும் இருப்பதால்தான் நமக்கு உதவ அவர் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். ஒரு தாய் தன்னுடைய பிள்ளையைக் கவனித்துக்கொள்வதைவிட யெகோவா நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். (ஏசா. 49:15) பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போது நம்மைத் தூக்கிவிடுகிறார். (சங். 37:39; 1 கொ. 10:13) அப்படியென்றால், சகோதர சகோதரிகள்மேல் நாம் எப்படி இரக்கம் காட்டலாம்? அவர்கள் நம்மைப் புண்படுத்தும்போது அதை மனதிலேயே வைத்துக்கொண்டிருக்காமல் அவர்களை மன்னிக்கலாம். (எபே. 4:32) இன்னொரு முக்கியமான வழியும் இருக்கிறது. அதாவது, அவர்கள் கஷ்டத்தில் திணறிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டலாம். இப்படிச் செய்யும்போது, கனிவான பாசம் காட்டுவதில் தலைசிறந்தவரான நம் அப்பா யெகோவாவைப் போலவே நாம் நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம்.—எபே. 5:1.
யோனத்தானும் தாவீதும்—‘நெருங்கிய நண்பர்கள்’
6. யோனத்தானும் தாவீதும் ஒருவருக்கொருவர் எப்படிப் பாசத்தைக் காட்டினார்கள்?
6 பாவ இயல்புள்ளவர்களாக இருந்தபோதும் பாசத்தைக் காட்டிய நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதில் ஓர் உதாரணம்தான் யோனத்தானும் தாவீதும்! “யோனத்தான் தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 சா. 18:1) சவுலுக்கு அடுத்ததாக தாவீது ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். அது தெரிந்தவுடனே தாவீதை சவுல் வெறுக்க ஆரம்பித்தார். அவரைக் கொல்லத் துடித்தார். ஆனால், யோனத்தான் தன்னுடைய அப்பாவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. யோனத்தானும் தாவீதும் இணைபிரியாத நண்பர்களாக இருந்து, கடைசிவரை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக சத்தியம் செய்துகொண்டார்கள்.—1 சா. 20:42.
7. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இருந்த நெருக்கமான நட்பு ஏன் சாதாரணமான ஒரு விஷயமல்ல?
7 யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இடையில் இருந்த நெருக்கமான நட்பு சாதாரண ஒரு விஷயம் கிடையாது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? உதாரணத்துக்கு, தாவீதைவிட யோனத்தான் கிட்டத்தட்ட 30 வயது பெரியவர். இருந்தாலும், ‘தாவீது ரொம்ப சின்னப் பையன், அவனுக்கு அவ்வளவா அனுபவம் கிடையாது’ என்று யோனத்தான் நினைத்தாரா? இல்லை! அவர் தாவீதை தாழ்வாகப் பார்க்கவில்லை.
8. யோனத்தான் தாவீதின் உயிர் நண்பராக இருந்தார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
8 இப்போது இன்னொரு விஷயத்துக்கு வரலாம். யோனத்தான் சவுலுடைய வாரிசாக இருந்ததால் அடுத்ததாக அரியணை ஏறும் உரிமை தனக்குத்தான் இருப்பதாக அவர் நினைத்திருக்கலாம். தாவீதைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கலாம். (1 சா. 20:31) ஆனால், யோனத்தான் மனத்தாழ்மை உள்ளவராகவும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராகவும் இருந்தார். அதனால், அடுத்த ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீதுக்கு முழு ஆதரவு கொடுத்தார். தன்னுடைய அப்பா தன்மேல் கோபப்பட்டபோதும் அவர் தாவீதுக்கு உண்மையோடு இருந்தார்.—1 சா. 20:32-34.
9. தாவீதை எதிரியாக யோனத்தான் பார்த்தாரா? விளக்குங்கள்.
9 தாவீதுமேல் யோனத்தானுக்கு அளவுகடந்த அன்பு இருந்ததால் தாவீதை எதிரியாகப் பார்க்கவில்லை. யோனத்தான் திறமையான வில் வீரராகவும் தைரியமான போர் வீரராகவும் இருந்தார். அவரும் அவருடைய அப்பா சவுலும் “கழுகைவிட வேகமானவர்கள், சிங்கத்தைவிட வலிமையானவர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 சா. 1:22, 23) அதனால், யோனத்தான் நினைத்திருந்தால் தன்னுடைய வீரதீர செயல்களைப் பற்றிப் பெருமை பேசியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தாவீதோடு அவர் போட்டி போடவில்லை. பொறாமைப்படவும் இல்லை. தாவீதுடைய தைரியத்தையும், யெகோவாமேல் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் பார்த்து யோனத்தான் அசந்துபோனார். சொல்லப்போனால், கோலியாத்தை தாவீது கொன்றதற்குப் பிறகு, யோனத்தான் தாவீதை உயிருக்குயிராய் நேசித்தார். யோனத்தானைப் போலவே நாமும் நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் எப்படிப் பாசத்தைப் பொழியலாம்?
நாம் எப்படிப் பாசத்தைப் பொழியலாம்?
10. “இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாக” காட்டுவது என்றால் என்ன?
10 “இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 1:22) இந்த விஷயத்தில் யெகோவா நமக்கு அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். நாம் அவருக்கு உண்மையாக இருந்தால் நம்மேல் அவர் ஊக்கமாக அன்பு காட்டுவார். இந்த அன்பை வேறெந்த விஷயத்தாலும் முறிக்க முடியாது. (ரோ. 8:38, 39) ‘ஊக்கம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, “கடினமாக முயற்சி செய்வதையும்,” “சிரமமாக இருந்தாலும் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு விஷயத்தை செய்வதையும்” குறிக்கிறது. சகோதர சகோதரிகள்மேல் பாசத்தைப் பொழிவதற்கு சிலசமயங்களில் நாம் கடின முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம். அதில் சிரமங்களும் இருக்கலாம். அவர்கள் நம்மைப் புண்படுத்தும்போது நாம் தொடர்ந்து ‘அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்ய வேண்டும்.’ (எபே. 4:1-3) தொடர்ந்து “சமாதானமாக வாழ்வதற்கு” நாம் முயற்சி செய்தால், சகோதர சகோதரிகளுடைய குறைகளையே பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். யெகோவா பார்ப்பதைப் போலவே அவர்களைப் பார்ப்போம்.—1 சா. 16:7; சங். 130:3.
11. சகோதர சகோதரிகள்மேல் பாசத்தைக் காட்டுவது சிலசமயங்களில் ஏன் கஷ்டமாக இருக்கலாம்?
11 சகோதர சகோதரிகள்மேல் பாசம் காட்டுவது எல்லாச் சமயத்திலும் சுலபமாக இருக்காது. பிலி. 4:2, 3.
முக்கியமாக, அவர்களுடைய குறைகள் நமக்குத் தெரியவரும்போது அப்படிப் பாசம் காட்டுவது கஷ்டமாக இருக்கலாம். இந்தப் பிரச்சினை முதல் நூற்றாண்டிலும் இருந்தது. உதாரணத்துக்கு, எயோதியாளையும் சிந்திகேயாளையும் பற்றிப் பார்க்கலாம். பவுலுடன் “தோளோடு தோள் சேர்ந்து நல்ல செய்தியை” அறிவிப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் ஒத்துப்போகவில்லை. அதனால், “எஜமானுடைய சேவையில் ஒரே மனதோடு இருக்க வேண்டும்” என்று அவர்கள் இரண்டு பேருக்கும் பவுல் அறிவுரை கொடுத்தார்.—12. சகோதர சகோதரிகளிடம் பாசம் காட்டுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
12 சகோதர சகோதரிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால் அவர்களைப் புரிந்துகொள்வதும் அவர்கள்மேல் பாசம் காட்டுவதும் கஷ்டமாக இருக்காது. இப்படிச் செய்வதற்கு வயதோ பின்னணியோ தடையாக இருக்க வேண்டியதில்லை. தாவீதைவிட யோனத்தான் கிட்டத்தட்ட 30 வயது பெரியவராக இருந்தபோதும் தாவீதோடு அவரால் நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள முடிந்தது. அப்படியென்றால், உங்களைவிட வயதில் பெரியவர்களிடமோ சிறியவர்களிடமோ நட்பு வைத்துக்கொள்ள உங்களால் முயற்சி செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், “சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்ட” முடியும்.—1 பே. 2:17.
13. எல்லாரிடமும் ஒரே மாதிரியான நட்பு வைத்துக்கொள்ள முடியுமா? விளக்குங்கள்.
13 சகோதர சகோதரிகளிடம் பாசம் காட்ட வேண்டுமென்று சொல்லும்போது, எல்லாரிடமும் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள முடியுமென்று அர்த்தமா? இல்லை! நம்மைப் போன்றே விருப்பு வெறுப்புகள் இருப்பவர்களிடம் நாம் ஈர்க்கப்படுவது யதார்த்தம். அதனால், மற்ற சகோதர சகோதரிகளைவிட இவர்களிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வது இயல்பான ஒரு விஷயம். இந்த விஷயத்தில் இயேசுவைப் பற்றி கவனியுங்கள். அப்போஸ்தலர்கள் எல்லாரையும் “நண்பர்கள்” என்றுதான் அவர் சொன்னார். ஆனாலும், யோவானிடம் நெருக்கமான நட்பு வைத்திருந்தார். (யோவா. 13:23; 15:15; 20:2) அதற்காக மற்றவர்களைவிட யோவானை அவர் விசேஷமாக நடத்தவில்லை. உதாரணத்துக்கு, யோவானும் அவருடைய சகோதரர் யாக்கோபும் கடவுளுடைய அரசாங்கத்தில் தங்களுக்கு முக்கிய இடத்தைக் கேட்டபோது, “என்னுடைய வலது பக்கத்திலோ இடது பக்கத்திலோ உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை” என்று சொன்னார். (மாற். 10:35-40) இயேசுவைப் போலவே நாமும் நம்முடைய நெருங்கிய நண்பர்களை விசேஷமாக நடத்தக் கூடாது. (யாக். 2:3, 4) அப்படி நடத்தினால், சபையில் பிரிவினைகள் ஏற்படுவதற்கு காரணமாகிவிடுவோம். சபைகளில் இப்படி ஒருபோதும் நடக்கக் கூடாது!—யூ. 17-19.
14. போட்டி பொறாமையைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டுமென்று பிலிப்பியர் 2:3 சொல்கிறது?
14 நாம் ஒருவர்மேல் ஒருவர் பாசத்தைப் பொழியும்போது சபையில் போட்டி பொறாமை இருக்காது. இப்போது, யோனத்தானைப் பற்றி மறுபடியும் பார்க்கலாம். தாவீதோடு அவர் போட்டி போடவில்லை. தன்னுடைய இடத்தைத் தட்டிப் பறித்துவிட்டதாக நினைத்து அவர்மேல் பொறாமைப்படவும் இல்லை. நாம் யோனத்தானைப் போல நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகளிடம் இருக்கிற திறமைகளைப் பார்த்து அவர்கள்மேல் பொறாமைப்படக் கூடாது. அதற்குப் பதிலாக, ‘மனத்தாழ்மையோடு அவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாக கருத’ வேண்டும். (பிலிப்பியர் 2:3-ஐ வாசியுங்கள்.) எல்லாருமே சபைக்குப் பிரயோஜனமானவர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் மனத்தாழ்மையோடு இருந்தால் சகோதர சகோதரிகளிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் பார்ப்போம், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்.—1 கொ. 12:21-25.
15. டானியாவுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் நடந்ததிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
15 நமக்கு ஏதாவது எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும்போது, சகோதர சகோதரிகள் நம்மேல் பாசத்தைப் பொழிகிறார்கள். நமக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். இவர்கள் மூலம் யெகோவா நம்மை ஆறுதல்படுத்துகிறார். டானியா என்ற சகோதரிக்கும் அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம். 2019-ல், அமெரிக்காவில் நடந்த “அன்பு ஒருபோதும் ஒழியாது” சர்வதேச மாநாட்டுக்கு அவர்கள் போயிருந்தார்கள். சனிக்கிழமை நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது என்ன நடந்தது என்று டானியா சொல்கிறார்: “நாங்க கார்ல ஹோட்டலுக்கு திரும்பி
வந்துட்டு இருந்தப்போ ஒரு கார் திடீர்னு எங்க கார் மேல மோதிடுச்சு. எங்க யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லனாலும் நாங்க அதிர்ச்சியில காரவிட்டு வெளியே வந்து நின்னுட்டோம். அப்போ, ஒருத்தரு அவரோட கார் பக்கத்துல வர சொல்லி கை ஆட்டுனாரு. அவரும் மாநாட்டுக்கு வந்த ஒரு சகோதரர்தான். ஆனா, அவரு மட்டும் காரை நிறுத்தல. ஸ்வீடன்ல இருந்து மாநாட்டுக்கு வந்திருந்த 5 பேரு அவங்களோட கார நிறுத்துனாங்க. அந்த கார்ல இருந்த சகோதரிகள், என்னையும் என் பொண்ணையும் கட்டித் தழுவிகிட்டாங்க. அது எங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ‘எங்களுக்கு ஒண்ணும் இல்ல, நாங்க நல்லாதான் இருக்கோம்’னு சொன்னதுக்கு அப்புறமும் அவங்க எங்கள அப்படியே விட்டுட்டு போயிடல. எங்களுக்கு முதலுதவி கிடைச்சதுக்கு அப்புறமும், எங்க கூடவே இருந்து எங்களுக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தாங்க. அந்த கஷ்டமான சமயத்துல யெகோவாவோட அன்ப நாங்க அனுபவிச்சோம். அந்த சம்பவத்துக்கு அப்புறம், சகோதர சகோதரிகளயும் யெகோவாவயும் இன்னும் அதிகமா நேசிக்க ஆரம்பிச்சோம். யெகோவாவுக்கு இன்னும் நன்றியோட இருந்தோம்.” நீங்கள் கஷ்டத்திலிருந்தபோது ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள்மேல் பாசத்தைக் காட்டிய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?16. பாசம் காட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
16 நாம் ஒருவர்மேல் ஒருவர் பாசத்தைப் பொழிவதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, நம்முடைய சகோதர சகோதரிகள் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களை நம்மால் ஆறுதல்படுத்த முடிகிறது. நமக்குள் இருக்கிற ஒற்றுமையைப் பலப்படுத்த முடிகிறது. நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதை நிரூபிக்க முடிகிறது. அதன் மூலம் நல்ல ஜனங்கள் சத்தியத்துக்கு வருவதற்கு உதவ முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனும் எல்லா விதமான ஆறுதலின் கடவுளுமான’ யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடிகிறது. (2 கொ. 1:3) அதனால், நாம் எல்லாரும் ஒருவர்மேல் ஒருவர் பாசத்தை வளர்த்துக்கொண்டு, தொடர்ந்து அதைக் காட்டலாம்.
பாட்டு 77 மன்னியுங்கள்
^ பாரா. 5 நாம் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற அன்பைப் பார்த்து நாம் கிறிஸ்தவர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று இயேசு சொன்னார். அவர் சொன்னதன்படி நடப்பதற்கு நாம் எல்லாருமே முயற்சி செய்கிறோம். நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்கள்மேல் எப்படிப் பாசம் காட்டுகிறோமோ, அதேபோல் நமது சகோதர சகோதரிகள்மேலும் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட பாசத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும், எப்படித் தொடர்ந்து காட்டுவது என்றும் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
^ பாரா. 55 படவிளக்கம்: வயதான மூப்பரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து இளவயது மூப்பர் பேசுகிறார். அடுத்த படத்தில், தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிற அந்த இளவயது மூப்பரையும், அவருடைய மனைவியையும் வயதான மூப்பர் வரவேற்கிறார்.