படிப்புக் கட்டுரை 2
இயேசுவின் தம்பியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
“கடவுளுக்கும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அடிமையாக இருக்கிற யாக்கோபு.”—யாக். 1:1.
பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!
இந்தக் கட்டுரையில்... *
1. யாக்கோபின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
யாக்கோபு கடவுள் பக்தியுள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்தார். இது அவருக்குக் கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். அவருடைய அப்பா யோசேப்பும், அம்மா மரியாளும் யெகோவாவை ரொம்ப நேசித்தார்கள். அவரை வணங்குவதற்குத்தான் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தார்கள். மேசியாவாக ஆகப் போகிறவருக்குத் தம்பியாக இருக்கும் பாக்கியமும் யாக்கோபுக்குக் கிடைத்தது. இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் வளர்ந்தது யாக்கோபுக்குக் கிடைத்த அருமையான ஆசீர்வாதம்!
2. தன்னுடைய அண்ணனை உயர்வாக மதிக்க யாக்கோபுக்கு என்ன வாய்ப்புகள் இருந்தன?
2 தன்னுடைய அண்ணன் இயேசுவை உயர்வாக மதிப்பதற்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் யாக்கோபுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. (மத். 13:55) உதாரணத்துக்கு, 12 வயதிலேயே இயேசு வேதவசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அவர் பேசியதைக் கேட்டு எருசலேமிலிருந்த போதகர்களே அசந்துபோனார்கள். (லூக். 2:46, 47) இயேசுவோடு சேர்ந்து யாக்கோபும் மரவேலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியென்றால், அந்தச் சமயங்களிலும் அவர் இயேசுவைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டிருப்பார். “நாம ஒருத்தங்களோட சேர்ந்து வேலை செய்யறப்ப, அவங்கள பத்தி நெறைய தெரிஞ்சுக்க முடியும்” என்று சகோதரர் நேதன் ஹெச். நார் அடிக்கடி சொல்வார். * ‘இயேசு வளரவளர ஞானத்தில் பெருகி, கடவுளுடைய பிரியத்தையும் மனிதர்களுடைய பிரியத்தையும் பெற்றுவந்ததையும்’ யாக்கோபு கவனித்திருப்பார். (லூக். 2:52) இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஆரம்பத்தில் இயேசுவின் சீஷர்களில் ஒருவராக யாக்கோபு இருந்திருப்பார் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை.
3. இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்தில் யாக்கோபு எப்படி நடந்துகொண்டார்?
3 பூமியில் இயேசு ஊழியம் செய்த சமயத்தில் யாக்கோபு அவருடைய சீஷராக ஆகவில்லை. (யோவா. 7:3-5) சொல்லப்போனால், இயேசுவுக்கு “பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொன்ன சொந்தக்காரர்களில் ஒருவராக யாக்கோபும் இருந்திருக்கலாம். (மாற். 3:21) அதோடு, சித்திரவதைக் கம்பத்தில் இயேசு இறந்தபோது மரியாளின் பக்கத்தில் யாக்கோபு இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை.—யோவா. 19:25-27.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
4 இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, யாக்கோபு அவர்மேல் விசுவாசம் வைத்தார். அதற்குப் பிறகு, கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராக ஆனார். இந்தக் கட்டுரையில் யாக்கோபிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்களைப் பற்றிப் பார்ப்போம். (1) நாம் எப்போதும் பணிவாக நடந்துகொள்ள வேண்டும். (2) திறமையாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
யாக்கோபைப் போல் எப்போதும் பணிவாக நடந்துகொள்ளுங்கள்
5. உயிர்த்தெழுந்த இயேசு தன்னைச் சந்தித்த பின்பு யாக்கோபு என்ன செய்தார்?
5 இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, “யாக்கோபுக்கும், அதன் பின்பு எல்லா அப்போஸ்தலர்களுக்கும் தோன்றினார்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 15:7) அதற்குப் பிறகுதான், யாக்கோபு இயேசுவின் ஒரு சீஷராக ஆனார். எருசலேமிலிருந்த மாடி அறையில் கடவுளுடைய சக்திக்காக அப்போஸ்தலர்கள் காத்துக்கொண்டிருந்தபோது, அவரும் அவர்களோடு இருந்தார். (அப். 1:13, 14) கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழுவில் சேவை செய்யும் பாக்கியம் யாக்கோபுக்குக் கிடைத்தது. (அப். 15:6, 13-22; கலா. 2:9) கி.பி. 62-க்கு முன்னால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் ஒரு கடிதம் எழுதினார். இன்றைக்கு நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, அந்தக் கடிதம் நம் எல்லாருக்குமே பிரயோஜனமாக இருக்கிறது. (யாக். 1:1) அன்னாவின் மகனாகிய அனனியா தலைமைக் குருவாக இருந்தபோது அவர் கொடுத்த கட்டளைப்படி யாக்கோபு கொலை செய்யப்பட்டதாக முதல் நூற்றாண்டு சரித்திராசிரியர் ஜொசிஃபஸ் சொன்னார். யாக்கோபு தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்வரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்.
6. யாக்கோபுக்கும் அவருடைய காலத்தில் இருந்த மதத் தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?
6 யாக்கோபு பணிவானவராக நடந்துகொண்டார். இது நமக்கு எப்படித் தெரியும்? அன்றைக்கு இருந்த மதத் தலைவர்களுக்கும் யாக்கோபுக்கும் இருந்த வித்தியாசத்தை இப்போது பார்க்கலாம். இயேசுதான் கடவுளுடைய மகன் என்பதற்கான தெளிவான ஆதாரத்தைப் பார்த்தபோது யாக்கோபு அதைப் பணிவாக ஏற்றுக்கொண்டார். ஆனால், எருசலேமில் இருந்த முதன்மை குருமார்கள் அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணத்துக்கு, லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பியது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தாலும் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவரையும் லாசருவையும் கொல்வதற்கு முயற்சி செய்தார்கள். (யோவா. 11:53; 12:9-11) இயேசு உயிர்த்தெழுந்த விஷயத்தைக்கூட மக்களிடமிருந்து மறைக்கப் பார்த்தார்கள். (மத். 28:11-15) இது எல்லாவற்றுக்கும் காரணம், அந்த மதத் தலைவர்களுக்கு இருந்த தலைக்கனம்தான்.
7. நமக்கு ஏன் தலைக்கனம் இருக்கக் கூடாது?
7 பாடம்: தலைக்கனத்தை விட்டுவிட்டு யெகோவா சொல்வதைக் கேட்டு நடக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நம்முடைய இதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அது சரியாக வேலை செய்யாமல் போய்விடும். அதேபோல், நமக்குள்ளே தலைக்கனம் வந்துவிட்டால் நம்மால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க முடியாது. பரிசேயர்களுடைய இதயம் ரொம்பவே இறுகிப்போயிருந்தது. இயேசு கடவுளுடைய மகன் என்பதற்கும் அவரிடம் கடவுளுடைய சக்தி இருக்கிறது என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவா. 12:37-40) அதனால், முடிவில்லாத வாழ்க்கை கிடைப்பதற்கான வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள். (மத். 23:13, 33) இதற்குக் காரணம் அவர்களுக்கு இருந்த தலைக்கனம்தான். அப்படியென்றால், நம்முடைய குணம்... நாம் யோசிக்கிற விதம்... நாம் எடுக்கிற தீர்மானம்... இவையெல்லாம் பைபிளின்படியும், கடவுளுடைய சக்தி வழிகாட்டுகிறபடியும் இருக்கின்றனவா என்று நிச்சயப்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம், இல்லையா? (யாக். 3:17) யாக்கோபு பணிவானவராக இருந்ததால்தான் யெகோவா சொல்வதைக் கேட்டு நடந்தார். அதோடு, அவரால் மற்றவர்களுக்குத் திறமையாக சொல்லிக்கொடுக்கவும் முடிந்தது. அதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
யாக்கோபைப் போலவே திறமையாகக் கற்றுக்கொடுங்கள்
8. திறமையாகக் கற்றுக்கொடுக்க எது நமக்கு உதவும்?
8 யாக்கோபு படித்து பட்டம் வாங்கியவர் கிடையாது. அன்றைக்கு இருந்த மதத் தலைவர்கள், அப்போஸ்தலர்களான பேதுருவையும் யோவானையும் ‘கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்களாக’ பார்த்த மாதிரிதான் யாக்கோபையும் பார்த்தார்கள். (அப். 4:13) ஆனாலும், யாக்கோபால் திறமையாகக் கற்றுக்கொடுக்க முடிந்தது. பைபிளில் அவர் எழுதிய புத்தகத்திலிருந்து அதை நாம் தெரிந்துகொள்கிறோம். இன்றைக்கு நமக்கும்கூட பெரிய படிப்பு இல்லையென்றாலும் கடவுளுடைய சக்தியின் உதவியும், அமைப்பு கொடுக்கிற பயிற்சியும் இருப்பதால், நாமும் மற்றவர்களுக்குத் திறமையாகக் கற்றுக் கொடுக்க முடியும். கற்றுக்கொடுக்கிற விஷயத்தில் யாக்கோபிடமிருந்து நாம் நிறைய பாடங்களைத் தெரிந்துகொள்ளலாம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
9. யாக்கோபு எப்படிக் கற்றுக்கொடுத்தார்?
9 யாக்கோபு புரியாத வார்த்தைகளையோ கஷ்டமான விளக்கங்களையோ பயன்படுத்தவில்லை. அதனால், அவர் சொன்னதைக் கேட்ட மக்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். ஓர் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். மற்றவர்கள் நமக்கு அநியாயம் செய்யும்போது கோபத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல் சகித்திருப்பதற்கு என்ன செய்யலாம் என்று யாக்கோபு எளிமையாகக் கற்றுக்கொடுத்தார். “சகிப்புத்தன்மை காட்டியவர்களைச் சந்தோஷமானவர்கள் என்று கருதுகிறோம். யோபுவின் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், முடிவில் யெகோவா அவரை ஆசீர்வதித்ததைப் பற்றியும் தெரிந்திருக்கிறீர்கள்; யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர், இல்லையா?” என்று அவர் எழுதினார். (யாக். 5:11) இதிலிருந்து அவர் சொந்தமாக எதுவும் சொல்லவில்லை, கடவுளுடைய வார்த்தையிலிருந்துதான் கற்றுக்கொடுத்தார் என்பது தெரிகிறது. யோபுவைப் போல் உண்மையாக இருக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதைப் புரிய வைக்க கடவுளுடைய வார்த்தையை அவர் பயன்படுத்தினார். அதுமட்டுமல்ல, எளிமையான வார்த்தைகளையும் விளக்கங்களையும் பயன்படுத்தி அதைப் புரிய வைத்தார். இப்படி, தனக்குப் புகழ் சேர்க்காமல் யெகோவாவுக்குப் புகழ் சேரும்படி பார்த்துக்கொண்டார்.
10. யாக்கோபைப் போல் கற்றுக்கொடுப்பதற்கு ஒரு வழி என்ன?
10 பாடம்: கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொடுக்க வேண்டும், எளிமையாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். ‘இவருக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்கு’ என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்து நினைக்க வேண்டும் என்பது நம்முடைய குறிக்கோளாக இருக்கக் கூடாது. யெகோவாவுக்கு எவ்வளவு தெரியும் என்பதையும் அவர்கள்மேல் அவர் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதையும் அவர்களுக்குப் புரிய வைப்பதுதான் நம்முடைய குறிக்கோள். (ரோ. 11:33) இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் நாம் எப்போதுமே மற்றவர்களுக்கு பைபிளிலிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்களிடம், ‘உங்க இடத்துல நான் இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பேன், தெரியுமா?’ என்று சொல்வதற்குப் பதிலாக பைபிளில் இருக்கிற யாராவது ஒருவருடைய உதாரணத்தைக் காட்டி விளக்கலாம். அவர்களுடைய சூழ்நிலையைப் பற்றி யெகோவா எப்படி யோசிக்கிறார், அதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவலாம். அப்படிச் செய்தால், நமக்குப் பிடித்த விதமாக நடப்பதற்குப் பதிலாக யெகோவாவுக்குப் பிடித்த விதமாக நடக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவார்கள்.
11. அன்றைக்கு இருந்த கிறிஸ்தவர்களுக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் இருந்தன, அவர்களுக்கு யாக்கோபு என்ன ஆலோசனை கொடுத்தார்? (யாக்கோபு 5:13-15)
11 யாக்கோபு ஒளிவுமறைவு இல்லாமல் அறிவுரை கொடுத்தார். அன்றைக்கு இருந்த கிறிஸ்தவர்களுக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் இருந்தன என்பதை யாக்கோபு தெளிவாகப் புரிந்துவைத்திருந்தார். அவர் எழுதிய கடிதத்தைப் படிக்கும்போது நம்மால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை அவர்களுக்குக் கொடுத்தார். உதாரணத்துக்கு, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது சிலருக்குக் கஷ்டமாக இருந்தது. (யாக். 1:22) இன்னும் சிலர், ஏழைகளிடம் ஒருமாதிரியும் பணக்காரர்களிடம் ஒருமாதிரியும் நடந்துகொண்டார்கள். (யாக். 2:1-3) வேறு சிலருக்குத் தங்களுடைய நாவை அடக்குவது சிரமமாக இருந்தது. (யாக். 3:8-10) உண்மையிலேயே இவையெல்லாம் பெரிய பிரச்சினைதான். ஆனாலும், அவர்கள்மேல் இருந்த நம்பிக்கையை யாக்கோபு இழந்துவிடவில்லை. அவர்களுக்கு அன்பாக ஆலோசனை கொடுத்தார். அதேசமயத்தில், ஒளிவுமறைவு இல்லாமல் கொடுத்தார். இதைவிட பெரிய பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருந்தவர்களை மூப்பர்களிடம் போய் உதவி கேட்கச் சொன்னார்.—யாக்கோபு 5:13-15-ஐ வாசியுங்கள்.
12. பைபிள் படிக்கிறவர்கள் நிச்சயம் மாற்றங்களைச் செய்வார்கள் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்?
12 பாடம்: ஒளிவுமறைவு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள்மேல் நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்க வேண்டும். நம்மிடம் பைபிள் படிக்கிறவர்கள் பைபிள் சொல்வது போல் நடக்க போராடிக்கொண்டிருக்கலாம். (யாக். 4:1-4) அவர்களுக்குள்ளே ஊறிப்போயிருக்கிற கெட்ட பழக்கங்களை மாற்றிக்கொள்வதற்கும் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் அவர்களுக்குக் கொஞ்சம் காலம் எடுக்கலாம். நாமும் யாக்கோபைப் போலவே அவர்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைத் தயங்காமல் சொல்ல வேண்டும். பணிவாக நடந்துகொள்பவர்களை யெகோவா தன் பக்கம் ஈர்க்கிறார் என்பதையும், அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய உதவி செய்கிறார் என்பதையும் நாம் ஞாபகம் வைக்க வேண்டும். அவர்கள் நிச்சயம் மாற்றங்களைச் செய்வார்கள் என்று நம்ப வேண்டும்.—யாக். 4:10.
13. யாக்கோபு 3:2 சொல்கிறபடி, யாக்கோபு தன்னைப் பற்றி என்ன விஷயத்தைப் புரிந்துவைத்திருந்தார்?
13 யாக்கோபு தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்கவில்லை. அவர் இயேசுவின் தம்பியாக இருந்ததாலோ அவருக்கு முக்கியமான சில பொறுப்புகள் இருந்ததாலோ மற்ற கிறிஸ்தவர்களைவிட தன்னை ரொம்ப உயர்வாக நினைத்துக்கொள்ளவில்லை. “என் அன்பான சகோதரர்களே” என்றுதான் அவர்களைக் கூப்பிட்டார். (யாக். 1:16, 19; 2:5) தவறே செய்யாதவர் போல் அவர் தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை. “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்” என்று சொன்னபோது தன்னையும் சேர்த்துதான் சொன்னார்.—யாக்கோபு 3:2-ஐ வாசியுங்கள்.
14. நாமும் தவறு செய்கிறவர்கள்தான் என்பதை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்?
14 பாடம்: நாம் எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான் என்பதை மறந்து விடக் கூடாது. நம்மோடு பைபிளைப் படிக்கிறவர்களைவிட நாம் எந்த விதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். ஒருவேளை, தவறே செய்யாத ஒரு ஆளாக நம்மைக் காட்டிக்கொண்டால் என்ன ஆகும்? ‘அவங்கள மாதிரியெல்லாம் தப்பே செய்யாம இருக்கறது ரொம்ப கஷ்டம்’ என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால், பைபிள் சொல்கிறபடி நடப்பது நமக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது என்பதையும் அதைச் சமாளிப்பதற்கு யெகோவாதான் உதவி செய்தார் என்பதையும் அவர்களிடம் சொல்லும்போது, தங்களாலும் யெகோவாவுக்கு சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும்.
15. எப்படிப்பட்ட உவமைகளை யாக்கோபு பயன்படுத்தினார்? (யாக்கோபு 3:2-6, 10-12)
15 மனதைத் தொடுகிற உவமைகளை யாக்கோபு பயன்படுத்தினார். இதைச் செய்வதற்கு கடவுளுடைய சக்தி அவருக்கு உதவி செய்தது என்பது உண்மைதான். அதேசமயத்தில், உவமைகளைப் பயன்படுத்தி அவருடைய அண்ணன் இயேசு எப்படிக் கற்றுக்கொடுத்தார் என்பதையும் அவர் படித்துத் தெரிந்திருப்பார். தன்னுடைய கடிதத்தில் யாக்கோபு பயன்படுத்திய உவமைகள் எளிமையாக இருந்தன, பாடங்கள் தெளிவாகப் புரியும் விதத்தில் இருந்தன.—யாக்கோபு 3:2-6-யும், 10-12-யும் வாசியுங்கள்.
16. மனதைத் தொடுகிற உவமைகளை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்?
16 பாடம்: மனதைத் தொடுகிற உவமைகளைப் பயன்படுத்த வேண்டும். பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தும்போது, அது கேட்பவர்களுடைய காதில் விழுவதோடு அவர்களுடைய மனதில் படமாகவும் ஓடும். இப்படிச் செய்யும்போது, முக்கியமான பைபிள் உண்மைகள் அவர்களுடைய மனதில் ஆழமாக பதியும். மனதைத் தொடுகிற உவமைகளைப் பயன்படுத்துவது இயேசுவுக்குக் கைவந்த கலை. அவருடைய தம்பி யாக்கோபும் அப்படியே செய்தார். யாக்கோபு பயன்படுத்திய ஓர் உவமையை இப்போது பார்ப்போம். அது ஏன் மனதைத் தொடுகிற மாதிரி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
17. யாக்கோபு 1:22-25-ல் இருக்கிற உவமை மனதைத் தொடுகிற விதத்தில் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?
17 யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள். இந்த வசனங்களில், கண்ணாடியில் தன்னைப் பார்க்கிற ஒரு மனிதனைப் பற்றி யாக்கோபு சொல்கிறார். அன்றைக்கு இருந்தவர்கள் இந்த உவமையைச் சுலபமாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து பிரயோஜனம் அடைய வேண்டுமென்றால் அதை வாசிக்கிறவர்களாக மட்டுமல்லாமல் அதன்படி நடக்கிறவர்களாகவும் இருப்பது முக்கியம் என்பதைப் புரிய வைப்பதற்குத்தான் யாக்கோபு இந்த உவமையைச் சொன்னார். கண்ணாடியில் தன்னைப் பார்க்கிற மனிதன் ஏதோ சரிசெய்ய வேண்டியிருக்கிறது என்பது தெரிந்தும், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது முட்டாள்தனமாக இருக்கும். அதைப் போலவே, கடவுளுடைய வார்த்தையைப் படித்துவிட்டு நாம் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்யாமல் இருந்தால் அது முட்டாள்தனமாக இருக்கும்.
18. உவமைகளைப் பயன்படுத்தும்போது என்ன மூன்று விஷயங்களை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
18 யாக்கோபைப் போலவே உவமைகளைப் பயன்படுத்துவதில் மூன்று விஷயங்களை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்: (1) நாம் சொல்லும் விஷயத்துக்குப் பொருத்தமான உவமையைப் பயன்படுத்த வேண்டும். (2) கேட்பவர்களுக்கு அது புரியும் விதத்தில் இருக்க வேண்டும். (3) நாம் எதற்காக அதைச் சொல்கிறோம் என்பது தெளிவாகப் புரிய வேண்டும். பொருத்தமான உவமைகளை எங்கே கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறீர்களா? உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸில் (ஆங்கிலம்) “உவமைகள்” என்ற தலைப்பில் பாருங்கள். உவமைகளைப் பயன்படுத்துவது, மைக்கில் பேசுகிற மாதிரி என்று சொல்லலாம். மைக்கில் பேசும்போது நாம் சொல்லும் விஷயம் மற்றவர்களுக்குச் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கும். அதைப் போலவே, உவமைகளைப் பயன்படுத்தும்போதும் நாம் சொல்லும் விஷயம் மற்றவர்களுக்கு நன்றாகவும் தெளிவாகவும் புரியும். அதற்காக, நாம் உவமைகளாக அடுக்கிக்கொண்டே போகக் கூடாது. முக்கிய விஷயங்களைப் புரிய வைப்பதற்கு மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். இப்படி, கற்றுக்கொடுக்கிற விஷயத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ளும்போது ஒரு விஷயத்தை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். மக்களை நம் பக்கம் ஈர்ப்பது நம்முடைய குறிக்கோளாக இருக்கக் கூடாது. முடிந்தவரை நிறைய பேரை யெகோவாவின் குடும்பத்துக்குள் கூட்டிக்கொண்டு வருவதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
19. நம்முடைய சகோதர சகோதரிகளை நேசிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
19 யாக்கோபுக்குக் கிடைத்த மாதிரி ஒரு சகோதரன் நமக்கு இல்லையென்றாலும் யெகோவாவை வணங்குகிற நிறைய சகோதர சகோதரிகளைக் கொண்ட ஒரு பெரிய குடும்பம் நமக்கு இருக்கிறது. அவர்களை நாம் ரொம்ப நேசிக்கிறோம். அதனால், அவர்களோடு சேர்ந்து பழகுகிறோம், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். அவர்களோடு தோளோடு தோள் சேர்ந்து ஊழியம் செய்கிறோம். குணத்தில், நடந்துகொள்கிற விதத்தில், கற்றுக்கொடுக்கிற விதத்தில், யாக்கோபைப் போல் இருப்பதற்கு நாம் முயற்சி செய்தோமென்றால் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும். அதுமட்டுமல்ல, நல்ல ஜனங்கள் நம்முடைய அன்பான அப்பா யெகோவாவிடம் வருவதற்கு உதவ முடியும்.
பாட்டு 114 பொறுமை—ஒரு அருமையான குணம்
^ யாக்கோபும் இயேசுவும் ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்தார்கள். கடவுளுடைய பரிபூரண மகனான இயேசுவைப் பற்றி அன்றைக்கு இருந்த நிறைய பேரைவிட அவருடைய தம்பி யாக்கோபுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவ சபைக்கு யாக்கோபு தூணாக இருந்தார். அவருடைய வாழ்க்கையிலிருந்தும் அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
^ சகோதரர் நேதன் ஹெச். நார் ஆளும் குழுவில் ஒருவராக இருந்தார். 1977-ல் அவருடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
^ படவிளக்கம்: நாவை அடக்குவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிய வைக்க நெருப்பைப் பற்றிய ஓர் உவமையை யாக்கோபு சொன்னார். அவர் சொன்ன உவமை எல்லாருக்குமே புரிந்தது.