Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 3

இயேசு சிந்திய கண்ணீர்—நமக்கு என்ன பாடம்?

இயேசு சிந்திய கண்ணீர்—நமக்கு என்ன பாடம்?

“இயேசு கண்ணீர்விட்டார்.”—யோவா. 11:35.

பாட்டு 17 நான் ஆசையாய் செய்வேன்

இந்தக் கட்டுரையில்... *

1-3. என்னென்ன காரணங்களுக்காக நாம் கண்ணீர்விடுகிறோம்?

 கண்ணீர்—சில சமயங்களில் நாம் ஆனந்தக் கண்ணீர்விடுகிறோம். நிறைய சமயங்களில் துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர்விடுகிறோம். நமக்குப் பிடித்தவர்கள் யாராவது இறந்துபோனால் நம்மால் கண்ணீரை அடக்கவே முடியாது. துக்கத்தில் நாம் துவண்டு போய்விடுகிறோம். அமெரிக்காவில் இருக்கிற சகோதரி லிடியா இப்படி எழுதினார்: “என்னுடைய மகள் இறந்தபோது என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மற்றவர்கள் என்னதான் ஆறுதல் சொன்னாலும் அவளுடைய இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்த இழப்பிலிருந்து என்னால் மீளவே முடியாது என்று நினைத்தேன்.” *

2 வேறு சில காரணங்களுக்காகவும் நாம் கண்ணீர்விடுகிறோம். ஜப்பானில் பயனியராக சேவை செய்துகொண்டிருக்கிற ஹிரோமி என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “சிலசமயம் ஊழியத்துல நான் சொல்றத மத்தவங்க கேக்கலனா சோர்ந்துபோயிடுவேன். சத்தியத்த தேடிட்டு இருக்கிறவங்கள கண்டுபிடிக்க உதவுங்க யெகோவாவேனு நான் அவர்கிட்ட கண்ணீர்விட்டு ஜெபம் செய்வேன்.”

3 இவர்களுக்கு வந்தது போன்ற சூழ்நிலை உங்களுக்கும் வந்திருக்கிறதா? நம்மில் நிறைய பேருக்கு வந்திருக்கும். (1 பே. 5:9) நாம் எல்லாருமே ‘சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய’ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், சிலசமயங்களில் கண்ணீரோடு நாம் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. துக்கத்தில் தவிக்கும்போது... சோர்ந்துபோகும்போது... நம்முடைய விசுவாசத்தை சோதிக்கிற ஒரு கஷ்டமான சூழ்நிலை வரும்போது... நாம் கண்ணீர்விடுகிறோம். (சங். 6:6; 100:2) இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சமாளிக்க நாம் என்ன செய்யலாம்?

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

4 இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். வேதனை தாங்க முடியாமல் ‘கண்ணீர்விட்ட’ சந்தர்ப்பங்கள் அவருக்கும் வந்தன. (யோவா. 11:35; லூக். 19:41; 22:44; எபி. 5:7) அந்தச் சந்தர்ப்பங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவற்றிலிருந்து இயேசுவைப் பற்றியும் யெகோவாவைப் பற்றியும் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம். கண்ணீர்விடுகிற மாதிரியான சூழ்நிலைகள் நம் வாழ்க்கையில் வரும்போது நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

நண்பர்களுக்காக கண்ணீர்விட்டார்

துக்கத்தில் தவிப்பவர்களுக்கு இயேசுவைப் போலவே ஆதரவாக இருங்கள் (பாராக்கள் 5-9) *

5. யோவான் 11:32-36-ல் இருக்கிற சம்பவத்திலிருந்து இயேசுவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

5 அது கி.பி. 32, குளிர்காலம். இயேசுவின் நண்பன் லாசரு நோய்வாய்ப்பட்டு கடைசியில் இறந்துவிடுகிறார். (யோவா. 11:3, 14) மரியாள், மார்த்தாள் என்று இரண்டு சகோதரிகள் அவருக்கு இருந்தார்கள். இந்தக் குடும்பத்தை இயேசுவுக்கு ரொம்ப பிடிக்கும். லாசருவின் பிரிவை மார்த்தாளாலும் மரியாளாலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. லாசரு இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடனே அவர்கள் குடியிருந்த பெத்தானியா கிராமத்துக்கு இயேசு வருகிறார். அவர் வருவது தெரிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக மார்த்தாள் வேக வேகமாக போகிறாள். அவரைப் பார்த்தவுடனே, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொல்லி ஓவென்று அழுகிறாள். (யோவா. 11:21) அந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். அதற்குப் பிறகு, மரியாளும் மற்றவர்களும் விம்மி விம்மி அழுதுகொண்டிருப்பதை இயேசு பார்க்கிறார். வேதனை தாங்கமுடியாமல் அவரும் ‘கண்ணீர்விடுகிறார்.’—யோவான் 11:32-36-ஐ வாசியுங்கள்.

6. லாசரு இறந்தபோது இயேசு ஏன் அழுதார்?

6 லாசரு இறந்த சமயத்தில் இயேசு ஏன் அழுதார் என்பதைப் பற்றி வேதாகமங்களின் பேரில் உட்பார்வை என்ற ஆங்கிலப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “தன்னுடைய நண்பன் லாசரு இறந்ததை நினைத்தும், அவருடைய இரண்டு சகோதரிகள் வேதனையில் தவிப்பதைப் பார்த்தும் இயேசு ‘உள்ளம் குமுறி கண்ணீர்விட்டார்.’” * தன்னுடைய உயிர் நண்பன் லாசரு உடம்பு முடியாமல் இருந்தபோது, வலியிலும் வேதனையிலும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதையும், உயிர் போகும் சமயத்தில் அவர் எப்படியெல்லாம் துடித்திருப்பார் என்பதையும் இயேசு யோசித்துப் பார்த்திருக்கலாம், அதனால் அவர் கண்ணீர்விட்டிருக்கலாம். அதுமட்டுமல்ல, லாசருவின் பிரிவை நினைத்து வேதனையில் தவித்த மரியாளையும் மார்த்தாளையும் பார்த்தும் அவர் கண்ணீர்விட்டார். உங்களுடைய உயிர் நண்பரோ உங்கள் குடும்பத்தில் ஒருவரோ இறந்துபோயிருந்தால், நீங்களும் இப்படியெல்லாம் யோசித்து அழுதிருப்பீர்கள். அப்படியென்றால், இயேசு கண்ணீர்விட்ட இந்தச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிற மூன்று பாடங்களை இப்போது பார்க்கலாம்.

7. இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

7 நீங்கள் எவ்வளவு வேதனைப்படுகிறீர்கள் என்பதை யெகோவா முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இயேசு தன்னுடைய அப்பாவின் “குணங்களை அப்படியே காட்டுகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 1:3) இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? (யோவா. 14:9) தனக்குப் பிடித்த ஒருவர் இறக்கும்போது யெகோவா எவ்வளவு வேதனைப்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். உங்களுக்குப் பிடித்த ஒருவர் இறந்தபோது நீங்கள் எவ்வளவு நொந்துபோயிருக்கிறீர்கள் என்று யெகோவா கவனிப்பதோடு மட்டுமல்லாமல் அவரும் வேதனைப்படுகிறார். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம். உடைந்துபோன உங்களுடைய உள்ளத்தை குணமாக்க அவர் ஆசைப்படுகிறார்.—சங். 34:18; 147:3.

8. உங்கள் பாசத்துக்குரியவர்களை இயேசு உயிரோடு எழுப்புவார் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்பலாம்?

8 இறந்துபோன உங்கள் பாசத்துக்குரியவர்களை உயிரோடு எழுப்ப வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார். இயேசு கண்ணீர்விட்டு அழுவதற்கு கொஞ்சம் முன்பு, “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று மார்த்தாளிடம் சொன்னார். மார்த்தாளுக்கும் இயேசுமேல் நம்பிக்கை இருந்தது. (யோவா. 11:23-27) மார்த்தாள் யெகோவாவை வணங்கி வந்ததால் முற்காலத்தில் எலியாவும் எலிசாவும் சிலரை உயிரோடு எழுப்பிய விஷயம் அவளுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். (1 ரா. 17:17-24; 2 ரா. 4:32-37) அதோடு, சிலரை இயேசு உயிரோடு எழுப்பிய விஷயத்தையும் அவள் கேள்விப்பட்டிருக்கலாம். (லூக். 7:11-15; 8:41, 42, 49-56) மார்த்தாளைப் போலவே, நீங்களும் உங்களுடைய பாசத்துக்குரியவரை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியும் என்று உறுதியாக நம்பலாம். அப்படியென்றால், தன்னுடைய நண்பர்களை ஆறுதல்படுத்தியபோது இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? இறந்துபோனவர்களை உயிரோடு கொண்டுவர அவர் ஏக்கமாக இருக்கிறார் என்று தெரிந்துகொள்கிறோம்.

9. துக்கத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இயேசுவைப் போலவே நீங்களும் எப்படி ஆதரவாக இருக்கலாம்? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

9 துக்கத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மார்த்தாள், மரியாளோடு சேர்ந்து இயேசு அழுதது மட்டுமல்லாமல் அவர்கள் சொன்னதைக் கவனமாகக் கேட்டார், அவர்களிடம் ஆறுதலாகப் பேசினார். துக்கத்தில் தவிப்பவர்களிடம் இயேசுவைப் போலவே நாமும் ஆறுதலாகப் பேசலாம். ஆஸ்திரேலியாவில் இருக்கிற டான் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “என் மனைவி இறந்தப்ப, அந்த சூழ்நிலைய சமாளிக்க மத்தவங்களோட உதவி எனக்கு தேவைப்பட்டுச்சு. நிறைய தம்பதிகள், ராத்திரி பகல்னு பாக்காம நான் எப்ப பேசுனாலும் காதுகொடுத்து கேட்டாங்க. என் மனசில இருக்கறத எல்லாம் கொட்டுனப்ப பொறுமையா கேட்டாங்க. நான் அழறத அவங்க தர்மசங்கடமா நினைக்கல. எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க. கார் கழுவுறது, மளிகை சாமான் வாங்கறது, சமைக்கிறது, இதெல்லாம் என்னால செய்ய முடியாதப்ப அவங்க செஞ்சு கொடுத்தாங்க. அடிக்கடி என்கூட சேர்ந்து ஜெபம் பண்ணுனாங்க. அவங்க எனக்கு உண்மையான நண்பர்களாவும் ‘கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரர்களாகவும்’ இருந்தாங்க.”—நீதி. 17:17.

மற்றவர்களை நினைத்து கண்ணீர்விட்டார்

10. லூக்கா 19:36-40 என்ன சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறது?

10 அது கி.பி. 33, நிசான் 9-ஆம் தேதி. இயேசு எருசலேமுக்கு வருகிறார். நகரத்தை நெருங்கும் சமயத்தில், நிறைய மக்கள் தங்களுடைய மேலங்கிகளை வழியில் விரித்து அவரைத் தங்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொண்டதைக் காட்டினார்கள். உண்மையிலேயே அது ஒரு சந்தோஷமான நேரம். (லூக்கா 19:36-40-ஐ வாசியுங்கள்.) ஆனால், அதற்குப் பிறகு நடந்த விஷயத்தை சீஷர்கள் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘எருசலேம் நகரத்துக்குப் பக்கத்தில் [இயேசு] வந்தபோது அதை பார்த்து அழுதார்.’ சீக்கிரத்தில் எருசலேமுக்கு வரப்போகிற கதியைப் பற்றிக் கண்ணீரோடு சொன்னார்.—லூக். 19:41-44.

11. எருசலேம் மக்களைப் பார்த்து இயேசு ஏன் கண்ணீர்விட்டார்?

11 சிலர் இயேசுவை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும் நிறைய பேர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால், எருசலேம் அழிக்கப்படும் என்றும் அந்த அழிவிலிருந்து தப்பிக்கிற யூதர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார். (லூக். 21:20-24) அவர் நினைத்த மாதிரியே நடந்தது, நிறைய பேர் அவரை ஒதுக்கித்தள்ளினார்கள். இப்போது உங்களுடைய விஷயத்துக்கு வரலாம். நீங்கள் இருக்கிற இடத்தில் கொஞ்சம் பேர்தான் நல்ல செய்தியைக் கேட்கிறார்களா? அப்படியென்றால், இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? மூன்று பாடங்களை இப்போது கவனிக்கலாம்.

12. மற்றவர்களுக்காக இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

12 மக்கள்மேல் யெகோவா ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார். மற்றவர்களுக்காக இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து இதைத் தெரிந்துகொள்கிறோம். “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.” (2 பே. 3:9) நாமும் மற்றவர்கள்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறோம். அதனால்தான், மற்றவர்களுடைய மனதைத் தொடுகிற விதத்தில் நல்ல செய்தியைச் சொல்வதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம்.—மத். 22:39.

இயேசுவைப் போலவே, வெவ்வேறு நேரத்தில் ஊழியம் செய்யுங்கள் (பாராக்கள் 13-14) *

13-14. மக்கள்மேல் இயேசு எப்படி அனுதாபம் காட்டினார், நாமும் எப்படிக் காட்டலாம்?

13 ஊழியம் செய்வதற்காக இயேசு நிறைய முயற்சி எடுத்தார். மக்களைப் பார்த்து அவர் அனுதாபப்பட்டார். அதனால், கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (லூக். 19:47, 48) இயேசு சொல்வதைக் கேட்க வேண்டுமென்று ஏராளமான மக்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், சிலசமயங்களில் அவராலும் அவருடைய சீஷர்களாலும் “சாப்பிடக்கூட முடியவில்லை.” (மாற். 3:20) இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக ஒருவர் ராத்திரி நேரத்தில் வந்தார். அப்போதுகூட இயேசு அவருக்குக் கற்றுக்கொடுத்தார். (யோவா. 3:1, 2) இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்ட நிறைய பேர் அவருடைய சீஷர்களாக ஆகவில்லை. ஆனால், அவர்கள் எல்லாருக்கும் இயேசு முழுமையாகச் சொல்லிக்கொடுத்தார். இன்றைக்கு நமக்குக் கிடைக்கிற எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி எல்லாருக்கும் நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். (அப். 10:42) அதற்கு நாம் ஊழியம் செய்கிற விதத்தைக் கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கும்.

14 தேவையான மாற்றங்களைச் செய்வதற்குத் தயாராக இருங்கள். வெவ்வேறு நேரத்தில் ஊழியம் செய்தால்தான் நல்ல செய்தியில் ஆர்வம் காட்டுகிற ஜனங்களைப் பார்க்க முடியும். பயனியராக சேவை செய்கிற மெடில்டா என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “நானும் என் கணவரும் வேற வேற நேரத்தில ஊழியம் செய்ய முயற்சி செய்றோம். காலைல வியாபார பகுதில ஊழியம் செய்றோம். மத்தியான நேரத்தில ரோட்டுல மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கறதால வீல் ஸ்டாண்ட் ஊழியம் செய்றோம். சாயங்கால நேரத்தில மக்கள் வீடுகள்ல இருக்கறதால வீட்டுக்கு வீடு ஊழியம் செய்றோம்” என்று அவர் சொல்கிறார். அதனால், நமக்கு சௌகரியமான நேரத்தில் ஊழியம் செய்யாமல் நிறைய பேரை எப்போது பார்க்க முடியுமோ அப்போது ஊழியம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், யெகோவா நிச்சயம் நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவார்.

யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்பதற்காக கண்ணீர்விட்டார்

சோதனைகள் வரும்போது இயேசுவைப் போலவே உதவிக்காக யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள் (பாராக்கள் 15-17) *

15. இயேசு இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி என்ன நடந்தது என்று லூக்கா 22:39-44-ல் படிக்கிறோம்?

15 அது கி.பி. 33, நிசான் 14-ஆம் தேதி. அன்றைக்கு ராத்திரி கெத்செமனே தோட்டத்துக்கு இயேசு போகிறார். தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார். (லூக்கா 22:39-44-ஐ வாசியுங்கள்.) அந்த இக்கட்டான சமயத்தில் யெகோவாவிடம் ‘கண்ணீர்விட்டுக் கதறி மன்றாடுகிறார்.’ (எபி. 5:7) அந்த ராத்திரி அவர் ஏன் அப்படி ஜெபம் செய்தார்? யெகோவாவுக்குக் கடைசிவரை உண்மையாக இருப்பதற்காகவும், அவருடைய விருப்பத்தைச் செய்வதற்காகவும் பலத்தைத் தரச் சொல்லி ஜெபம் செய்தார். அவருடைய குமுறல்களை யெகோவா கேட்டார். அவரைப் பலப்படுத்துவதற்காக ஒரு தேவதூதரை அனுப்பினார்.

16. வேறு எதற்காகவும் இயேசு கண்ணீர்விட்டுக் கதறினார்?

16 தெய்வ நிந்தனை செய்ததாக தன்மேல் விழுந்த பழியோடு சாகப்போவதை நினைத்தும் இயேசு கண்ணீர்விட்டுக் கதறினார். அதோடு, யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துகிற ஒரு பெரிய பொறுப்பு தனக்கு இருந்ததும் அவருக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதை உரசிப் பார்க்கிற விதமான சோதனைகள் ஒருவேளை உங்களுக்கும் வரலாம். அப்படிப்பட்ட சமயங்களில், இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? மூன்று பாடங்களை இப்போது பார்க்கலாம்.

17. இயேசுவின் ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

17 யெகோவாவிடம் நீங்கள் மன்றாடும்போது அவர் அதைக் கவனமாகக் கேட்கிறார். யெகோவாவிடம் இயேசு மன்றாடியபோது அவர் அதைக் கவனமாகக் கேட்டார். ஏனென்றால், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதையும் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதையும்தான் இயேசு எப்போதுமே முக்கியமாக நினைத்தார். அவரைப் போலவே நீங்களும் அதை முக்கியமாக நினைத்தால் உங்களுடைய ஜெபத்துக்கும் யெகோவா நிச்சயம் பதில் கொடுப்பார்.—சங். 145:18, 19.

18. இயேசு உங்களைப் புரிந்துகொள்கிற ஒரு நண்பர் என்று எப்படிச் சொல்லலாம்?

18 உங்களை இயேசு நன்றாகப் புரிந்துகொள்கிறார். நாம் வேதனையில் இருக்கிற சமயத்தில் நம்மைப் புரிந்துகொள்கிற ஒரு நண்பர் நமக்கு ஆறுதல் தரும்போது, அதுவும் நம்மைப் போலவே கஷ்டங்களை அனுபவித்த ஒரு நண்பர் ஆறுதல் தரும்போது, நம் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கும்! அப்படிப்பட்ட ஒரு நண்பர்தான் இயேசு. நாம் பலவீனமாக இருக்கிறபோதும், நமக்கு உதவி தேவைப்படுகிறபோதும் நம் மனது எப்படி இருக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், “சரியான சமயத்தில்” நமக்கு உதவி கிடைக்கிற மாதிரி அவர் பார்த்துக்கொள்வார். (எபி. 4:15, 16) அவர் கெத்செமனே தோட்டத்தில் இருந்தபோது தேவதூதரின் உதவியை எப்படி ஏற்றுக்கொண்டாரோ, அதேபோல் யெகோவா உதவி செய்யும்போது நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு பிரசுரம், வீடியோ, அல்லது ஒரு பேச்சு மூலமாக யெகோவா உங்களுக்கு உதவுவார். அதோடு, ஒரு மூப்பரையோ அனுபவமுள்ள ஒரு நண்பரையோ பயன்படுத்தியும் அவர் உங்களுக்கு உதவலாம்.

19. பலத்துக்காக நீங்கள் என்ன செய்யலாம்? ஓர் அனுபவத்தை சொல்லுங்கள்.

19 ‘தேவ சமாதானத்தை’ யெகோவா கொடுப்பார். நாம் ஜெபம் செய்யும்போது, “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” நமக்குக் கிடைக்கும். (பிலி. 4:6, 7) அமைதியாக இருப்பதற்கும் தெளிவாக யோசிப்பதற்கும் அது நமக்கு உதவும். சகோதரி ரேச்சல் விஷயத்தில் இதுதான் நடந்தது. “எனக்குன்னு யாருமே இல்லனு நான் அடிக்கடி யோசிக்க ஆரம்பிச்சுடுவேன். அந்த மாதிரி சமயத்தில யெகோவாவுக்கு என் மேல அன்பே இல்லனு நெனக்கற அளவுக்கு போயிடுவேன். ஆனா என் மனசுக்குள்ள என்ன நெனக்கிறேங்கறத உடனடியா யெகோவாகிட்ட சொல்லிடுவேன். அப்படி செய்றதால எனக்கு மன அமைதி கிடைக்குது” என்று அவர் சொல்கிறார். ஜெபம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்பதை இந்த சகோதரியின் அனுபவத்திலிருந்து புரிந்துகொள்கிறோம்.

20. இயேசு கண்ணீர்விட்டதிலிருந்து என்னென்ன பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம்?

20 இந்தக் கட்டுரையில் இதுவரை நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் இவைதான்: தங்களுக்குப் பிடித்தவர்களை இழந்து தவிக்கிற நம் நண்பர்களுக்கு நாமும் ஆதரவாக இருக்க வேண்டும். அதே நிலைமை நமக்கு வரும்போது யெகோவாவும் இயேசுவும் நமக்கு ஆறுதல் கொடுப்பார்கள் என்று நம்ப வேண்டும். யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் மக்கள்மேல் அனுதாபம் இருப்பதால் நாமும் பிரசங்கிப்பதன் மூலம் மக்கள்மேல் அனுதாபம் காட்ட வேண்டும். நம் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் நம்முடைய பலவீனங்களையும் யெகோவாவும் இயேசுவும் நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள், சோதனைகளைச் சமாளிப்பதற்கு நமக்கு உதவ ஆசைப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தது, இல்லையா? அதனால் நாம் என்ன கற்றுக்கொண்டோமோ அதைத் தொடர்ந்து செய்வோம். நம்முடைய ‘கண்ணீரையெல்லாம் துடைப்பதாக’ யெகோவா கொடுத்த வாக்குறுதி நிறைவேறும்வரை இவற்றையெல்லாம் செய்துகொண்டே இருப்போம்.—வெளி. 21:4.

பாட்டு 120 மனத்தாழ்மை உள்ள நம் ராஜா

^ வேதனை தாங்க முடியாமல் சிலசமயங்களில் இயேசு கண்ணீர்விட்டதாக பைபிள் சொல்கிறது. அப்படி அவர் கண்ணீர்விட்ட மூன்று சந்தர்ப்பங்களையும் அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

^ சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ படவிளக்கம்: மரியாளையும் மார்த்தாளையும் இயேசு ஆறுதல்படுத்தினார். துக்கத்தில் தவிப்பவர்களை நாமும் அதேபோல் ஆறுதல்படுத்தலாம்.

^ படவிளக்கம்: நிக்கொதேமுவுக்கு இயேசு ராத்திரியில் கற்றுக்கொடுக்கிறார். மக்களுக்கு வசதியான நேரத்தில் நாமும் அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டும்.

^ படவிளக்கம்: யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்காக உதவி கேட்டு இயேசு ஜெபம் செய்கிறார். சோதனைகள் வரும்போது நாமும் அதைத்தான் செய்ய வேண்டும்.