படிப்புக் கட்டுரை 1
“யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது”
2022-க்கான வருடாந்தர வசனம்: “யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது.”—சங். 34:10.
பாட்டு 4 யெகோவா என் மேய்ப்பர்
இந்தக் கட்டுரையில்... *
1. எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் தாவீது இருந்தார்?
தாவீது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார். ஏன்? இஸ்ரவேலின் ராஜாவான சவுல் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். தாவீது நோபு நகரத்துக்கு வந்தபோது அங்கிருந்த ஒருவரிடம், ஐந்து ரொட்டி இருந்தால் கொடுக்கும்படி பாவமாக கேட்டார். (1 சா. 21:1, 3) அதற்குப் பிறகு, தாவீதும் அவருடைய ஆட்களும் ஒரு குகையில் தங்க வேண்டியிருந்தது. (1 சா. 22:1) தாவீதுக்கு ஏன் இந்த நிலைமை வந்தது?
2. சவுல் தனக்கே குழி பறித்துக் கொண்டிருந்தார் என்று எப்படிச் சொல்லலாம்? (1 சாமுவேல் 23:16, 17)
2 ஜனங்களுக்கு தாவீதை ரொம்ப பிடித்திருந்தது. அதுமட்டுமல்ல, நிறைய போர்களில் தாவீதுக்கு வெற்றி கிடைத்ததால் ஜனங்கள் அவரைப் புகழ்ந்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்து சவுல் ரொம்ப பொறாமைப்பட்டார். அதோடு, யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் ராஜாவாக இல்லாதபடி அவர் தன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார் என்றும் தாவீதைத்தான் அடுத்த ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் சவுலுக்குத் தெரிந்திருந்தது. (1 சாமுவேல் 23:16, 17-ஐ வாசியுங்கள்.) சவுல் அப்போதும் இஸ்ரவேலின் ராஜாவாகத்தான் இருந்தார். அவருக்கென்று ஒரு பெரிய படையே இருந்தது, நிறைய ஆதரவாளர்களும் இருந்தார்கள். அதனால்தான், தாவீது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார். யெகோவா தாவீதை ராஜாவாக ஆக்குவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று சவுல் நினைத்தாரா? (ஏசா. 55:11) அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. தாவீதை எதிர்ப்பதன் மூலம் சவுல் தனக்கே குழி பறித்துக் கொண்டிருந்தார். கடவுளை யாராவது எதிர்த்தால் அவர்கள் கண்டிப்பாகத் தோற்றுப்போவார்கள்!
3. கஷ்டமான சூழ்நிலையிலும் தாவீது எப்படி நடந்துகொண்டார்?
3 தாவீது லட்சிய வெறி பிடித்தவர் கிடையாது. இஸ்ரவேலின் ராஜாவாக வேண்டும் என்று அவர் ஆசைப்படவும் இல்லை. யெகோவாதான் அவரை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார். (1 சா. 16:1, 12, 13) அதனால், தாவீதை சவுல் ஒரு எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால், தாவீது தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததற்கு யெகோவாமேல் பழி போடவில்லை. ‘சரியான சாப்பாடு இல்ல. குகைக்குள்ளதான் ஒளிஞ்சிட்டிருக்க வேண்டியிருக்கு’ என்றெல்லாம் குறை சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவைப் புகழ்ந்து அழகான ஒரு பாட்டைப் பாடினார். ஒருவேளை, அவர் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோது இந்தப் பாடலைப் பாடியிருக்கலாம். “யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது” என்ற நம்முடைய வருடாந்தர வசனமும் இந்தப் பாடலின் ஒரு பகுதிதான்.—சங். 34:10.
4. எந்தக் கேள்விகளுக்கு நாம் பதில்களைப் பார்க்கப்போகிறோம், அது ஏன் முக்கியம்?
4 யெகோவாவின் ஊழியர்கள் நிறைய பேர் சிலசமயங்களில் போதுமான சாப்பாடோ வாழ்க்கைக்குத் தேவையான மற்ற விஷயங்களோ இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். * முக்கியமாக, இந்த கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நிறைய பேர் அப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். “மிகுந்த உபத்திரவம்” நெருங்க நெருங்க நிலைமை இன்னும் மோசமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். (மத். 24:21) அதனால், இந்த நான்கு கேள்விகளுக்கு இப்போது பதில்களைப் பார்க்கலாம். (1) தாவீதுக்கு எந்த ‘குறையும் வரவில்லை’ என்று எப்படிச் சொல்லலாம்? (2) இருப்பதை வைத்து திருப்தியாக வாழ நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? (3) நம்முடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்று நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்? (4) எதிர்காலத்துக்காக நாம் எப்படி இப்போதே தயாராகலாம்?
“எனக்கு ஒரு குறையும் வராது”
5-6. கடவுளுடைய ஊழியர்களுக்கு எந்த “குறையும் வராது” என்று தாவீது சொன்னதைப் புரிந்துகொள்ள சங்கீதம் 23:1-6 நமக்கு எப்படி உதவுகிறது?
5 யெகோவாவின் ஊழியர்களுக்கு எந்த ‘குறையும் வராது’ என்று தாவீது ஏன் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள 23-ஆம் சங்கீதம் நமக்கு உதவும். அந்த சங்கீதத்திலும் இதுபோன்ற வார்த்தைகளை அவர் சொல்லியிருக்கிறார். (சங்கீதம் 23:1-6-ஐ வாசியுங்கள்.) “யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார். எனக்கு ஒரு குறையும் வராது” என்று அந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் தாவீது சொல்கிறார். அதற்குப் பிறகு, முக்கியமான சில விஷயங்களைச் சொல்கிறார். உதாரணத்துக்கு, யெகோவாவைத் தன்னுடைய மேய்ப்பராக ஏற்றுக்கொண்டதால், தனக்கு அவர் செய்த நல்ல விஷயங்களைச் சொல்கிறார். யெகோவா தன்னை ‘நீதியின் பாதைகளில் நடத்துவதாகவும்’ வாழ்விலும் சரி, தாழ்விலும் சரி, அவர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்கிறார். “பசுமையான புல்வெளிகளில்” யெகோவா தன்னை வழிநடத்தினாலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார். சிலசமயங்களில் சோர்ந்துபோகும்போது, ‘பயங்கர இருட்டான பள்ளத்தாக்கில்’ நடப்பதுபோல் அவருக்கு இருந்தது. அவருக்கு எதிரிகளும் இருந்தார்கள். ஆனால், மேய்ப்பரான யெகோவா தன்னோடு இருப்பதால் “எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன்” என்று அவர் சொல்கிறார்.
6 அப்படியென்றால், தாவீதுக்கு எந்த ‘குறையும் வரவில்லை’ என்று எப்படிச் சொல்லலாம்? பதில் இதுதான்: யெகோவாவுடன் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள தேவையான எல்லாமே தாவீதுக்கு இருந்தது. அவருடைய சந்தோஷம் வசதிவாய்ப்புகளைப் பொறுத்து இருக்கவில்லை. தனக்கு யெகோவா எதைக் கொடுத்தாரோ அதில் அவர் திருப்தியாக இருந்தார். யெகோவா தருகிற ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும்தான் அவர் ரொம்ப முக்கியமாக நினைத்தார்.
7. லூக்கா 21:20-24 சொல்கிறபடி, யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு என்ன சூழ்நிலை வந்தது?
7 பணம் பொருளுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தை தாவீதின் வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். அதற்காக நமக்கு இருக்கிற வசதிவாய்ப்புகளை அனுபவிக்கக் கூடாது என்று அர்த்தம் கிடையாது. ஆனால், அதுவே நம்முடைய வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. இந்த முக்கியமான உண்மையை முதல் நூற்றாண்டில் யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டார்கள். (லூக்கா 21:20-24-ஐ வாசியுங்கள்.) எருசலேமை ‘படைகள் சுற்றிவளைக்க’ போகிற காலம் வரும் என்று அவர்களுக்கு இயேசு ஏற்கெனவே எச்சரிப்பு கொடுத்திருந்தார். அந்தச் சம்பவம் நடக்கும்போது அவர்கள் “மலைகளுக்குத் தப்பியோட” வேண்டியிருந்தது. அப்படிச் செய்தால் அவர்களால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அவர்கள் நிறைய காரியங்களை இழக்க வேண்டியிருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் வந்த ஒரு காவற்கோபுரத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “தங்கள் வீடுகளிலிருந்து உடைமைகளையுங்கூட எடுக்காமல், வயல்களையும் வீடுகளையும் விட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு யெகோவாவின் பாதுகாப்பிலும் ஆதரவிலும் திடநம்பிக்கை இருந்தது. முக்கியமாய்த் தோன்றின மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் கடவுளுடைய வழிபாட்டையே முதலாவதாக வைத்தார்கள்.”
8. யூதேயாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு நடந்த விஷயத்திலிருந்து நாம் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
8 முதல் நூற்றாண்டில், யூதேயாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு நடந்த விஷயத்திலிருந்து நாம் முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். மேலே பார்த்த அந்த காவற்கோபுரம் இப்படிச் சொல்கிறது: “பொருள் சம்பந்தமானவற்றை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதன்பேரில் எதிர்காலத்தில் சோதனைகள் வரலாம். அவை உண்மையில் அவ்வளவு முக்கியமானவையா, அல்லது கடவுளுடைய சார்பில் இருப்போர் எல்லாருக்கும் வரவிருக்கிற இரட்சிப்பு அதிக முக்கியமானதா? ஆம், நாம் ஓடிப்போவது சில கஷ்டங்களையும் நஷ்டங்களையும் உட்படுத்தலாம். . . . யூதேயாவிலிருந்து . . . தப்பியோடின நம் முதல் நூற்றாண்டினர் செய்ததைப்போல், தேவைப்படுகிற எதையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.” *
9. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த ஆலோசனை நமக்கு என்ன நம்பிக்கையைத் தருகிறது?
9 சொத்துசுகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு புது இடத்தில் போய் வாழ்வது அந்தக் கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சாப்பாடு, துணிமணி, வீடு போன்றவற்றுக்காக யெகோவாவை நம்பியிருப்பதற்கு அவர்களுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. எருசலேமை ரோமர்கள் சுற்றிவளைப்பதற்கு ஐந்து வருஷங்களுக்கு முன்பு எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் ஒரு நல்ல ஆலோசனை கொடுத்தார். இந்த ஆலோசனை அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்: “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள். ஏனென்றால், ‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். அதனால், ‘யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?’ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.” (எபி. 13:5, 6) பவுல் கொடுத்த ஆலோசனையைக் கேட்டு நடந்தவர்களுக்கு அந்தப் புது இடத்தில், இருப்பதை வைத்துத் திருப்தியாக வாழ்வது சுலபமாக இருந்திருக்கும். தங்களுடைய தேவைகளையெல்லாம் யெகோவா பார்த்துக்கொள்வார் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அவர்களைப் போலவே இன்றைக்கு நாமும் அதை உறுதியாக நம்பலாம்.
“அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்”
10. என்ன “ரகசியத்தை” பவுல் நமக்கு சொல்கிறார்?
10 எபிரெய கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்ததைப் போன்ற அதே ஆலோசனையை பவுல் தீமோத்தேயுவுக்கும் கொடுத்தார். அந்த ஆலோசனை நமக்கும் பிரயோஜனமாக இருக்கும்: “அதனால், நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்” என்று அவர் எழுதினார். (1 தீ. 6:8) அதற்காக, ஒரு நல்ல சாப்பாட்டை சாப்பிடுவதோ... ஒரு நல்ல வீட்டில் குடியிருப்பதோ... அவ்வப்போது ஒரு புது துணி வாங்குவதோ... தவறா? பவுல் அப்படிச் சொல்ல வரவில்லை. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதில் திருப்தியாக இருக்க வேண்டும் என்றுதான் சொன்னார். (பிலி. 4:12) இந்த ‘ரகசியத்தைதான்’ பவுல் கற்றுக்கொண்டார். நம்மிடம் இருக்கிற வீடு, பணம், பொருள் என எதையும்விட கடவுளோடு நமக்கு இருக்கிற நட்புதான் பெரிய சொத்து.—ஆப. 3:17, 18.
11. திருப்தியோடு இருப்பதைப் பற்றி இஸ்ரவேலர்களிடம் மோசே சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
11 நமக்கு என்ன தேவை என்பதைப் பற்றி நாம் நினைப்பதற்கும் யெகோவா நினைப்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம். இஸ்ரவேலர்கள் 40 வருஷங்களாக வனாந்தரத்தில் காலத்தை ஓட்டிய பிறகு அவர்களிடம் மோசே என்ன சொன்னார்? “உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்த எல்லாவற்றையும் ஆசீர்வதித்திருக்கிறார். இவ்வளவு பெரிய வனாந்தரத்தில் நீங்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியையும் அவர் பார்த்திருக்கிறார். இந்த 40 வருஷங்களாக உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருந்திருக்கிறார், உங்களுக்கு ஒரு குறையும் இருந்ததில்லை என்று சொன்னார்.” (உபா. 2:7) அந்த 40 வருஷங்களும் யெகோவா அவர்கள் சாப்பிடுவதற்கு மன்னாவைக் கொடுத்தார். அவர்களுடைய துணி கிழிந்துபோகாதபடி பார்த்துக்கொண்டார். அதனால், எகிப்தைவிட்டு வந்தபோது அவர்களிடம் என்ன துணிமணிகள் இருந்தனவோ அதை வைத்து அவர்களால் சமாளிக்க முடிந்தது. (உபா. 8:3, 4) இதெல்லாம் போதாது என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்களுக்குத் தேவையான எல்லாமே இருந்தது என்பதை மோசே ஞாபகப்படுத்தினார். இருப்பதை வைத்துத் திருப்தியாக வாழ நாம் கற்றுக்கொண்டால் யெகோவா நம்மைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார். அவர் நமக்குத் தருகிற சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்றும், அவையெல்லாம் அவர் நமக்கு தருகிற பரிசு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார்.
யெகோவா உங்களைப் பார்த்துக்கொள்வார் என்று முழுமையாக நம்புங்கள்
12. தாவீது தன்மேல் நம்பிக்கை வைக்காமல் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தார் என்று எப்படிச் சொல்கிறோம்?
12 யார் யெகோவாவை நேசிக்கிறார்களோ அவர்களிடம் அவர் உண்மையாக நடந்துகொள்வார் என்றும் அவர்களை உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக்கொள்வார் என்றும் தாவீதுக்கு நன்றாகத் தெரியும். 34-ஆம் சங்கீதத்தை அவர் எழுதியபோது ஆபத்தான சூழ்நிலையில் இருந்தார். ஆனாலும், ‘யெகோவாவின் தூதர் [தன்னை] சூழ்ந்து நிற்கிறார்’ என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. (சங். 34:7) போர்க்களத்தில் எதிரிகள் யாராவது வருகிறார்களா என்று எப்போதும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிற ஒரு போர்வீரனைப் போல், யெகோவாவின் தூதரை தாவீது மனதில் நினைத்திருக்கலாம். தாவீது ஒரு மாவீரர். அவரை ராஜாவாக ஆக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். கவண்கல் எறிவதில் அவர் கெட்டிக்காரர். வாளைச் சுழற்றுவதில் அவர் திறமைசாலி. ஆனால், எதிரியைத் தோற்கடிப்பதற்கு அவர் இவற்றையெல்லாம் நம்பியிருக்கவில்லை. (1 சா. 16:13; 24:12) கடவுள்மேல் அவர் முழு நம்பிக்கை வைத்தார். யெகோவாவுக்கு ‘பயந்து நடக்கிறவர்களை அவருடைய தூதர் காப்பாற்றுவார்’ என்று தாவீது உறுதியாக நம்பினார். இன்றைக்கு யெகோவா அற்புதமாகப் பாதுகாப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருவேளை இறந்துபோனாலும் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.
13. மாகோகு தேசத்தின் கோகு தாக்கும்போது நாம் ஏன் பாதுகாப்புக்கு யாருமே இல்லாதவர்கள் போல் தெரிவோம், ஆனால் நாம் ஏன் பயப்பட வேண்டியது இல்லை? (அட்டைப் படம்)
13 எதிர்காலத்தில் யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை உரசிப் பார்க்கிற மாதிரியான சோதனைகள் வரலாம். மாகோகு தேசத்தின் கோகு, அதாவது தேசங்களின் கூட்டணி, நம்மைத் தாக்க வரும்போது, அவர்கள் நம்மைக் கொன்றுவிடுவார்களோ என்று நாம் நினைக்கலாம். ஆனால், யெகோவாவால் நம்மைக் காப்பாற்ற முடியும், அவர் நம்மைக் காப்பாற்றவும் செய்வார் என்பதை அப்போது நாம் முழுமையாக நம்ப வேண்டும். காப்பாற்றுவதற்கு யாருமே இல்லாத ஆடுகளைப் போல் அந்தத் தேசங்களுக்கு நாம் தெரிவோம். (எசே. 38:10-12) நம்மிடம் எந்த ஆயுதமும் இருக்காது. நாம் சண்டை போடுவதற்கான பயிற்சி எடுத்தவர்களும் கிடையாது. அதனால், நம்மை ரொம்ப சுலபமாகத் தாக்கலாம் என்று அவர்கள் நினைப்பார்கள். நம்மைப் பாதுகாப்பதற்கு யெகோவாவின் தூதர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கு அது தெரியாது. ஏனென்றால், அவர்களுக்குக் கடவுள்மேல் விசுவாசம் இல்லை. கடவுளுடைய பரலோக படைகள் நமக்காகப் போர் செய்யும்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நிற்பார்கள்.—வெளி. 19:11, 14, 15.
எதிர்காலத்துக்காக இப்போதே தயாராகுங்கள்
14. எதிர்காலத்துக்காகத் தயாராக இப்போதே நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
14 எதிர்காலத்துக்காகத் தயாராக நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், பணம் பொருள்தான் வாழ்க்கை என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால், என்றைக்காவது ஒருநாள் நாம் அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு போக வேண்டியிருக்கும். அடுத்ததாக, நம்மிடம் இருப்பதை வைத்துத் திருப்தியாக வாழ வேண்டும். யெகோவாவோடு நமக்கு இருக்கிற நட்பை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட வேண்டும். கடவுளைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொண்டால், மாகோகு தேசத்தின் கோகு தாக்கும்போது அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புவோம்.
15. யெகோவா ஒருநாளும் கைவிட மாட்டார் என்பதை நம்புவதற்கு இளம் வயதில் நடந்த என்னென்ன சம்பவங்கள் தாவீதுக்கு உதவியாக இருந்தன?
15 சோதனைகளை சந்திக்கத் தயாராவதற்கு இன்னொரு விஷயமும் தாவீதுக்கு உதவியாக இருந்தது. அது நமக்கும் உதவியாக இருக்கும். “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவரிடம் தஞ்சம் அடைகிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று தாவீது சொன்னார். (சங். 34:8) யெகோவா கண்டிப்பாக உதவுவார் என்று தாவீது நம்பியதற்கான காரணத்தை அந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது. தாவீது எப்போதுமே யெகோவாவை நம்பியிருந்தார். யெகோவாவும் அவரை ஒருநாளும் கைவிடவில்லை. இளம் வயதில் தாவீது ராட்சதனான கோலியாத்தோடு போர் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது அந்த மாவீரனிடம், “இன்றைக்கு யெகோவா உன்னை என் கையில் கொடுப்பார்” என்று சொன்னார். (1 சா. 17:46) கொஞ்ச நாட்களுக்குப் பின்பு, சவுல் ராஜாவுக்கு தாவீது சேவை செய்துகொண்டிருந்தபோது அவரைக் கொல்வதற்கு சவுல் பல தடவை முயற்சி செய்தார். ஆனால், ‘யெகோவா தாவீதோடு இருந்தார்.’ (1 சா. 18:12) இப்படிப் பல அனுபவங்கள் தாவீதுக்கு இருந்ததால்தான் குகையில் தலைமறைவாக இருந்தபோதும் யெகோவா கண்டிப்பாகத் தனக்கு உதவுவார் என்று உறுதியாக நம்பினார்.
16. யெகோவா நல்லவர் என்பதை எப்படியெல்லாம் “ருசித்து” பார்க்கலாம்?
16 யெகோவாமேல் இப்போதே நமக்கு முழு நம்பிக்கை இருந்தால், எதிர்காலத்திலும் அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புவோம். யெகோவாமேல் விசுவாசம் இருந்தால், மாநாட்டுக்காக லீவு கேட்பதற்கு நாம் தயங்க மாட்டோம். அதேபோல், கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் அதிகமாக ஊழியம் செய்வதற்காகவும் வேலை நேரத்தை மாற்றித் தரச்சொல்லி முதலாளியிடம் பேசுவதற்கும் தயங்க மாட்டோம். ஒருவேளை, முதலாளி நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடலாம். ஏன், நம்மை வேலையிலிருந்துகூட நீக்கிவிடலாம்! அப்படி நடந்தால்கூட யெகோவா ஒருநாளும் நம்மைக் கைவிட மாட்டார் என்று நம்புவோமா? நமக்குத் தேவையானதை எல்லாம் அவர் எப்போதும் தருவார் என்பதில் உறுதியாக இருப்போமா? (எபி. 13:5) முழுநேர சேவையில் இருக்கிற நிறைய பேருக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று அவர்களுடைய அனுபவங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். யெகோவா எப்போதுமே உண்மையாக நடந்துகொள்வார்.
17. 2022-க்கான வருடாந்தர வசனம் என்ன, அந்த வசனம் ஏன் பொருத்தமாக இருக்கிறது?
17 யெகோவா நம் பக்கம் இருக்கும்போது, எதிர்காலத்தை நினைத்து நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவருடைய அரசாங்கத்துக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தோம் என்றால், அவர் நம்மைக் கைவிடவே மாட்டார். வரப்போகிற கஷ்டமான காலத்துக்கு நம்மைத் தயார்படுத்த வேண்டும் என்று ஆளும் குழு ஆசைப்படுகிறார்கள். ஒருநாளும் யெகோவா நம்மைக் கைவிட மாட்டார் என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், சங்கீதம் 34:10-ஐ 2022-க்கான வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்: “யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது.”
பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்
^ 2022-க்கான வருடாந்தர வசனம் சங்கீதம் 34:10-லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. “யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது” என்று அந்த வசனம் சொல்கிறது. இன்றைக்கு யெகோவாவை வணங்குகிற நிறைய பேர் பெரிய பணக்காரர்கள் கிடையாது. அப்படியிருக்கும்போது, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? அப்படியென்றால், இந்த வசனத்தை எப்படி நாம் புரிந்துகொள்ள வேண்டும்? இதைப் புரிந்துகொள்வது எதிர்காலத்தில் வரப்போகிற கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க நமக்கு எப்படி உதவும்?
^ செப்டம்பர் 15, 2014 காவற்கோபுரத்தில் வந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
^ மே 1, 1999 காவற்கோபுரத்தில் பக்கம் 19-ஐப் பாருங்கள்.
^ படவிளக்கம்: சவுல் ராஜாவிடமிருந்து தப்பித்து, குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோதும்கூட தனக்குத் தேவையானவற்றை யெகோவா கொடுத்ததற்கு தாவீது நன்றியோடு இருந்தார்.
^ படவிளக்கம்: இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு சாப்பிட யெகோவா மன்னாவைக் கொடுத்தார். அவர்களுடைய துணியும் கிழிந்துபோகாமல் பார்த்துக்கொண்டார்.