Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 1

கடவுளுடைய வார்த்தை சத்தியம் என்பதை உறுதியாக நம்புங்கள்

கடவுளுடைய வார்த்தை சத்தியம் என்பதை உறுதியாக நம்புங்கள்

2023-க்கான வருடாந்தர வசனம்: சத்தியம்தான் கடவுளுடைய வார்த்தையின் சாராம்சம்.—சங். 119:160.

பாட்டு 96 தேவன் தந்த வேதம்

இந்தக் கட்டுரையில்... a

1. இன்று நிறையப் பேர் பைபிளை ஏன் நம்புவதில்லை?

 இன்று நிறையப் பேர் யாரை நம்புவதென்றே தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறார்கள். அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் வியாபாரிகளும் மக்களுடைய நலனைப் பற்றி யோசிக்கிறார்களா என்றுகூட அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, கிறிஸ்தவமண்டல குருமார்கள்மேல் அவர்களுக்கு இருந்த மதிப்புமரியாதை குறைந்துகொண்டே வருகிறது. அதனால், அந்தக் குருமார்களின் கையில் இருக்கிற பைபிளை நம்பவும் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

2. சங்கீதம் 119:160 சொல்கிறபடி, நாம் எதை முழுமையாக நம்பலாம்?

2 ஆனால், ‘யெகோவா சத்தியத்தின் கடவுள்’ என்று அவருடைய மக்களான நாம் உறுதியாக நம்புகிறோம். அவர் எப்போதுமே நமக்கு நல்லதுதான் செய்ய ஆசைப்படுகிறார் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். (சங். 31:5; ஏசா. 48:17) பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்று நாம் முழுமையாக நம்புகிறோம். ஏனென்றால், “சத்தியம்தான் [கடவுளுடைய] வார்த்தையின் சாராம்சம்” என்று நமக்கு நன்றாகத் தெரியும். b (சங்கீதம் 119:160-ஐ வாசியுங்கள்.) ஒரு பைபிள் அறிஞர் இதைப் பற்றி எழுதியபோது, “கடவுள் சொல்லியிருக்கிற எதுவுமே பொய் கிடையாது, அது எதுவுமே நிறைவேறாமலும் போகாது. கடவுளுடைய மக்கள் அவரை நம்புகிறார்கள். அதனால், அவர் சொல்லியிருப்பதையும் அவர்கள் நம்பலாம்” என்று எழுதினார். அதை நாமும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்க்கப்போகிறோம்?

3 நம்மைப் போலவே மற்றவர்களும் கடவுளுடைய வார்த்தையை நம்புவதற்கு நாம் எப்படி அவர்களுக்கு உதவி செய்யலாம்? பைபிளை ஏன் நம்பலாம் என்பதற்கு மூன்று காரணங்களை நாம் பார்க்கலாம். அதாவது, பைபிள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது... பைபிளில் இருக்கிற தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறியிருக்கின்றன... பைபிள் எப்படி மக்களுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியிருக்கிறது... என்பதைப் பற்றியெல்லாம் பார்க்கலாம்.

பைபிளின் செய்தியை யாராலும் மாற்ற முடியவில்லை

4. பைபிளின் செய்தி மாறிவிட்டது என்று சிலர் ஏன் சந்தேகப்படுகிறார்கள்?

4 கிட்டத்தட்ட 40 பேரைப் பயன்படுத்தி யெகோவா பைபிளை எழுதினார். ஆனால், அவர்கள் கைப்பட எழுதிய பிரதிகள் எதுவுமே இப்போது நம்மிடம் இல்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் அவற்றின் நகல்களுடைய நகல்கள்தான். அதனால், பைபிள் எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் எழுதிய செய்திதான் இன்றுவரை இருக்கிறதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். ஆனால், பைபிளின் செய்தி மாறவே இல்லை என்பதை எதை வைத்து நம்பலாம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

எபிரெய வேதாகமத்தை நகல் எடுத்தவர்கள் கடவுளுடைய வார்த்தை துல்லியமானதாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். (பாரா 5)

5. எபிரெய வேதாகமம் எப்படி நகல் எடுக்கப்பட்டது? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

5 பைபிளின் செய்தியைப் பாதுகாப்பதற்காக யெகோவா தன்னுடைய மக்களிடம் அதை நகல் எடுக்கச் சொன்னார். இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்கள் திருச்சட்டத்தைக் கைப்பட நகல் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அந்தச் சட்டங்களை மக்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்காக லேவியர்களை நியமித்தார். (உபா. 17:18; 31:24-26; நெ. 8:7) யூதர்கள் பாபிலோனிலிருந்து விடுதலையான பிறகு, நகல் எடுக்கிறவர்களாக இருந்த சிலர், எபிரெய வேதாகமத்தைப் பார்த்து நிறைய நகல்களை எடுக்க ஆரம்பித்தார்கள். (எஸ்றா 7:6) அவர்கள் எல்லாரும் கண்ணும் கருத்துமாக வேலை பார்த்தார்கள். காலம் போகப் போக, எந்தத் தவறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வார்த்தைகளை மட்டுமல்ல, ஒவ்வொரு எழுத்தையும் எண்ணி எண்ணி நகல் எடுக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும், அவர்களெல்லாம் சாதாரண மனிதர்கள்தான் என்பதால் அவர்கள் நகல் எடுத்தபோது சின்னச் சின்ன தவறுகள் வந்தன. ஆனால், நிறைய நகல்கள் இருந்ததால் இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. எப்படி?

6. பைபிள் நகல்களில் தவறு இருக்கிறதா என்பதை அறிஞர்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

6 இதுபோன்ற தவறுகளையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு இன்று இருக்கிற அறிஞர்கள் ஒரு நல்ல வழியை வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு பக்கத்தை 100 பேர் கைப்பட நகல் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒருவர் மட்டும் ஒரு சின்ன தவறு செய்துவிடுகிறார். அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர் எழுதியதை மற்ற எல்லாரும் எழுதியதோடு வைத்துப் பார்த்தால் அதைக் கண்டுபிடித்துவிடலாம். பைபிள் நகல்களிலும் ஏதாவது தவறு இருக்கிறதா அல்லது ஏதாவது விட்டுப்போயிருக்கிறதா என்பதை அறிஞர்கள் இதே வழியில் கண்டுபிடிக்கிறார்கள்.

7. பைபிளை நகல் எடுத்தவர்கள் எவ்வளவு கவனமாக அந்த வேலையைச் செய்தார்கள்?

7 பைபிளை நகல் எடுத்தவர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு வேலை பார்த்தார்கள் என்றே சொல்லலாம். அவர்கள் அவ்வளவு கவனமாக வேலை பார்த்ததற்கு ஓர் ஆதாரத்தைக் கவனியுங்கள். முழு எபிரெய வேதாகமத்தின் ரொம்ப பழமையான நகல் கி.பி. 1008 அல்லது 1009-ஐச் சேர்ந்தது. அதற்குப் பெயர் லெனின்கிரேட் கோடெக்ஸ். சமீப காலங்களில் லெனின்கிரேட் கோடெக்சைவிட கிட்டத்தட்ட 1000 வருஷங்கள் பழமையான நிறைய நகல்களையும் நகல்களுடைய சின்னச் சின்ன துண்டுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆயிர வருஷங்களில் எத்தனையோ நகல்கள் எடுக்கப்பட்டிருக்கும், அதனால் லெனின்கிரேட் கோடெக்சில் நிறைய வார்த்தைகள் மாறியிருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையில்லை. லெனின்கிரேட் கோடெக்சையும் அந்தப் பழைய நகல்களையும் அறிஞர்கள் ஒப்பிட்டுப் பார்த்தபோது, வார்த்தைகளில் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்ததே தவிர, அவற்றின் அர்த்தம் மாறவே இல்லை.

8. கிரேக்க வேதாகமத்தின் நகல்களுக்கும் அதே காலப்பகுதியைச் சேர்ந்த மற்ற புத்தகங்களின் நகல்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

8 எபிரெய வேதாகமத்தை நகல் எடுத்தவர்களைப் போலவே ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிரேக்க வேதாகமத்தையும் நகல் எடுத்தார்கள். அதிலிருக்கிற 27 புத்தகங்களையும் ரொம்பக் கவனமாக நகல் எடுத்தார்கள். அந்த நகல்களைக் கூட்டங்களிலும் ஊழியத்திலும் பயன்படுத்தினார்கள். கிரேக்க வேதாகமத்தின் நகல்களை அதே காலப்பகுதியில் எழுதப்பட்ட மற்ற புத்தகங்களின் நகல்களோடு ஒரு அறிஞர் ஒப்பிட்டுப் பார்த்தார். “பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், கிரேக்க வேதாகமத்துக்குத்தான் நிறைய நகல்கள் இருக்கின்றன, அவை முழுமையாகவும் இருக்கின்றன” என்று அவர் சொன்னார். புதிய ஏற்பாடு—ஓர் அலசல் என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது: “பைபிள் எழுத்தாளர்கள் முதன்முதலில் எழுதிய விஷயம்தான் இன்று [கிரேக்க வேதாகமத்தின்] நம்பகமான மொழிபெயர்ப்பில் இருக்கிறது என்று நாம் உறுதியாக இருக்கலாம்.”

9. கடவுளுடைய வார்த்தையைப் பற்றி ஏசாயா 40:8 சொல்கிற விஷயம் உண்மை என்று எப்படிச் சொல்லலாம்?

9 பல நூற்றாண்டுகளாக, நிறையப் பேர் பைபிளை ரொம்ப கவனமாக நகல் எடுக்க ராத்திரி பகலாக உழைத்திருக்கிறார்கள். அதனால், ஒரு துல்லியமான பைபிள் நம் கையில் கிடைத்திருக்கிறது. c இப்படி பைபிளைப் பாதுகாத்தது யெகோவாதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (ஏசாயா 40:8-ஐ வாசியுங்கள்.) ஆனால், “பைபிளின் செய்தி மாறவில்லை என்பதற்காக அதைக் கடவுள்தான் கொடுத்தார் என்று சொல்லிவிட முடியுமா?” என்று சிலர் கேட்கலாம். அதனால், பைபிளை உண்மையிலேயே கடவுள்தான் கொடுத்திருக்கிறார் என்பதற்கு சில ஆதாரங்களை இப்போது பார்க்கலாம்.

பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம்பகமானவை

Left: C. Sappa/DeAgostini/Getty Images; right: Image © Homo Cosmicos/Shutterstock

பைபிள் தீர்க்கதரிசனங்கள் அன்றும் நிறைவேறியிருக்கின்றன, இன்றும் நிறைவேறிவருகின்றன (பாராக்கள் 10-11) e

10. இரண்டு பேதுரு 1:21 சொல்வது உண்மை என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள். (படங்களைப் பாருங்கள்.)

10 பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற நிறைய தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறியிருக்கின்றன. சொல்லப்போனால், நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு பைபிள் சொன்ன தீர்க்கதரிசனங்கள்கூட அப்படியே நிறைவேறியிருக்கின்றன. அவை உண்மை என்று சரித்திரமும் காட்டுகிறது. இதை நினைத்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், இந்தத் தீர்க்கதரிசனங்களைச் சொன்னதே யெகோவாதான் என்று நமக்குத் தெரியும். (2 பேதுரு 1:21-ஐ வாசியுங்கள்.) பாபிலோன் நகரத்தின் அழிவைப் பற்றி பைபிள் சொன்ன தீர்க்கதரிசனத்தை யோசித்துப் பாருங்கள். அன்று கொடிகட்டிப் பறந்த பாபிலோன் நகரம் கைப்பற்றப்படும் என்று கி.மு. 8-வது நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார். அதைக் கைப்பற்றப்போகிறவருடைய பெயர் கோரேசு என்றும்கூட சொன்னார். அதுமட்டுமல்ல, அந்த நகரத்தை கோரேசு எப்படிக் கைப்பற்றுவார் என்றும் ஏசாயா விவரமாகச் சொன்னார். (ஏசா. 44:27–45:2) பாபிலோன் அழிக்கப்படும் என்றும், மறுபடியும் அதில் யாருமே குடியிருக்கப்போவதில்லை என்றும்கூட சொன்னார். (ஏசா. 13:19, 20) அவர் சொன்னபடியே நடந்தது. கி.மு. 539-ல் மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனைக் கைப்பற்றினார்கள். ஓகோவென்று இருந்த அந்த நகரம் இன்று வெறும் மண்மேடாகத்தான் கிடக்கிறது.—இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் எலக்ட்ரானிக் பதிப்பில் பாடம் 3, குறிப்பு 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பாபிலோனின் அழிவை பைபிள் முன்னறிவித்தது என்ற வீடியோவைப் பாருங்கள்.

11. தானியேல் 2:41-43 இன்று எப்படி நிறைவேறிக்கொண்டு வருகிறது?

11 பைபிள் தீர்க்கதரிசனங்கள் அன்று மட்டுமல்ல, இன்றும் நிறைவேறுகின்றன. உதாரணத்துக்கு, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைப் பற்றி தானியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தை யோசித்துப் பாருங்கள். (தானியேல் 2:41-43-ஐ வாசியுங்கள்.) அந்த உலக வல்லரசு இரும்புபோல் “கொஞ்சம் உறுதியானதாகவும்” களிமண்போல் “கொஞ்சம் உறுதியற்றதாகவும்” இருக்கும் என்று தானியேல் ரொம்பத் துல்லியமாகச் சொன்னார். அவர் சொன்னது அப்படியே நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இரண்டு உலகப் போர்களையும் ஜெயிப்பதில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியப் பங்கு இருந்தது. அந்த ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இன்றுவரை பயங்கரமான படை பலத்தோடும் இருக்கிறது. அதனால், அது இரும்புபோல் உறுதியாக இருக்கிறது என்று சொல்லலாம். அதேசமயத்தில், அதன் குடிமக்களால் அது களிமண்போல் உறுதியில்லாமலும் இருக்கிறது. ஏனென்றால், அந்தக் குடிமக்கள் சமூக உரிமை இயக்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், அல்லது சுதந்திர போராட்டங்கள் மூலமாகத் தங்களுடைய உரிமைக்காகப் போராடுகிறார்கள். உலக அரசியல் விவகாரங்களைக் கரைத்துக் குடித்த ஒரு நிபுணர் சமீபத்தில் இப்படிச் சொன்னார்: “இன்று இருக்கிற ஜனநாயக நாடுகளிலேயே அரசியல் ரீதியாக ரொம்ப பிளவுபட்டிருக்கிற நாடு என்றால் அது அமெரிக்காதான்.” ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் இன்னொரு பாகமான பிரிட்டனும் சமீப வருஷங்களாக ரொம்ப பிளவுபட்டிருக்கிறது. முக்கியமாக, ஐரோப்பிய யூனியனின் நாடுகளோடு கூட்டு வைத்துக்கொள்ளும் விஷயத்தில் அங்கே நிறைய கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற பிளவுகள் இருப்பதால்தான் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசால் நினைத்தபடி செயல்பட முடிவதில்லை.

12. பைபிள் தீர்க்கதரிசனங்கள் என்ன நம்பிக்கையை நமக்குக் கொடுக்கின்றன?

12 ஏற்கெனவே நிறைவேறியிருக்கிற பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிக்கும்போது, எதிர்காலத்தைப் பற்றி கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை நமக்கு அதிகமாகிறது. “நீங்கள் தருகிற மீட்புக்காக ஏங்கித் தவிக்கிறேன். ஏனென்றால், உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று ஜெபம் செய்த சங்கீதக்காரனைப் போல் நாமும் உணருகிறோம். (சங். 119:81) பைபிள் மூலமாக யெகோவா நமக்கு “நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும்” கொடுத்திருக்கிறார். (எரே. 29:11) மனிதர்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் இதுபோன்ற ஒரு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் நமக்குக் கொடுக்க முடியாது. ஆனால், இது யெகோவாவுடைய வாக்கு என்பதால் இது கண்டிப்பாக நிறைவேறும். அதனால், பைபிள் தீர்க்கதரிசனங்களை நன்றாகப் படித்து, கடவுளுடைய வார்த்தையின்மேல் இருக்கிற நம்பிக்கையை நாம் தொடர்ந்து அதிகமாக்கிக்கொள்ளலாம்.

பைபிளின் அறிவுரைகள் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவுகின்றன

13. சங்கீதம் 119:66, 138 சொல்கிறபடி, பைபிளை நாம் நம்பலாம் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

13 பைபிளில் இருக்கிற அறிவுரைகளின்படி நடப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. பைபிளை ஏன் நம்பலாம் என்பதற்கான மூன்றாவது ஆதாரம் இதுதான். (சங்கீதம் 119:66, 138-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, விவாகரத்து செய்ய நினைத்த நிறைய தம்பதிகள் பைபிளைப் படித்ததால் சந்தோஷமாக, ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும், அப்பா அம்மாவுடைய அன்பும் அரவணைப்பும் இருக்கிற ஒரு சூழலில் வளர்வதால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள்.—எபே. 5:22-29.

14. பைபிளின்படி நடக்கும்போது வாழ்க்கையே அடியோடு மாறும் என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள்.

14 பைபிளில் இருக்கிற அறிவுரைகளின்படி நடந்ததால் பயங்கரமான குற்றவாளிகளுடைய வாழ்க்கைகூட அடியோடு மாறியிருக்கிறது. ஜாக் d என்ற கைதி இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவருடைய சிறையில் இருந்த மரண தண்டனைக் கைதிகளிலேயே அவர்தான் ரொம்பக் கொடூரமானவராக இருந்தார். ஆனால், ஒருநாள் ஜாக் இன்னொருவருடைய பைபிள் படிப்பில் போய் உட்கார்ந்தார். பைபிள் படிப்பு நடத்திய சகோதரர்கள் காட்டிய அன்பு அவருடைய மனதைத் தொட்டது. அதனால், அவரும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். பைபிளைப் படிக்கப் படிக்க, அவர் நடந்துகொள்கிற விதத்தையும் அவருடைய குணங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார். கொஞ்ச நாட்களில் அவர் பிரஸ்தாபி ஆனார். பின்பு ஞானஸ்நானமும் எடுத்தார். மற்ற கைதிகளிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர் ஆர்வமாகப் பிரசங்கித்தார். சத்தியத்தைத் தெரிந்துகொள்ள அவர்களில் குறைந்தது நான்கு பேருக்காவது உதவி செய்தார். மரண தண்டனை நிறைவேறும் நாள் வந்தபோது அவர் ஆளே அடியோடு மாறியிருந்தார். அவருடைய வக்கீல் ஒருவர் சொல்லும்போது, “20 வருஷங்களுக்கு முன்பு நான் பார்த்த ஜாக் வேறு, இப்போது பார்க்கிற ஜாக் வேறு. யெகோவாவின் சாட்சிகள் சொல்லிக்கொடுத்த விஷயங்கள், அவருடைய வாழ்க்கையை அப்படியே மாற்றியிருக்கிறது” என்று சொன்னார். ஜாக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அவருடைய உதாரணம், கடவுளுடைய வார்த்தையை நாம் நம்பலாம் என்றும் ஆளையே மாற்றுகிற சக்தி அதற்கு இருக்கிறது என்றும் தெளிவாகக் காட்டுகிறது.—ஏசா. 11:6-9.

பைபிளுடைய அறிவுரைகள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த எத்தனையோ பேருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியிருக்கின்றன (பாரா 15) f

15. பைபிள் சொல்கிறபடி நடப்பதால் யெகோவாவுடைய மக்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள்? (படத்தைப் பாருங்கள்.)

15 பைபிள் சத்தியங்களின்படி நடப்பதால் யெகோவாவுடைய மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். (யோவா. 13:35; 1 கொ. 1:10) அரசியல், இனம், சமூகம் என எல்லாவற்றிலும் பிளவுபட்டிருக்கிற இந்த உலகத்தில் நாம் சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் இருப்பது ரொம்ப பெரிய விஷயம். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கிற ஒற்றுமையைப் பார்த்து ஜீன் என்ற இளைஞர் அசந்துபோய்விட்டார். அவர் ஒரு ஆப்பிரிக்க நாட்டில் வளர்ந்தார். அங்கே உள்நாட்டுப் போர் வந்தபோது ராணுவத்தில் சேர்ந்தார். அதற்குப் பிறகு, பக்கத்து நாட்டுக்குத் தப்பித்து ஓடிவிட்டார். அங்கே யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்தார்கள். அதைப் பற்றி அவர் சொல்கிறபோது, “உண்மையான மதத்தில் இருக்கிறவர்கள் அரசியலில் கலந்துகொள்ள மாட்டார்கள், அவர்களுக்குள் பிரிவினை இருக்காது, ஒருவர்மேல் ஒருவர் அன்பாக இருப்பார்கள் என்றெல்லாம் நான் கற்றுக்கொண்டேன். முன்பு, ஒரு நாட்டுக்காக என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால், பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, யெகோவாவுக்காக என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று சொல்கிறார். ஜீன் இப்போது முழுமையாக மாறிவிட்டார். வேறு இனத்தையும் நாட்டையும் சேர்ந்தவர்களோடு சண்டை போடுவதற்குப் பதிலாக, பார்க்கிற எல்லாரிடமும் பைபிளில் இருக்கிற சமாதானமான செய்தியைச் சொல்கிறார். இப்படி வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும்கூட பைபிள் எந்தளவுக்கு உதவியாக இருக்கிறது, பார்த்தீர்களா! கடவுளுடைய வார்த்தையை நாம் நம்பலாம் என்பதற்கு இதுவும் ஒரு பெரிய ஆதாரம்.

கடவுளுடைய சத்திய வார்த்தையைத் தொடர்ந்து நம்புங்கள்

16. கடவுளுடைய வார்த்தையில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்வது ஏன் முக்கியம்?

16 உலக நிலைமைகள் மோசமாக மோசமாக, கடவுளுடைய வார்த்தையின்மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கைக்கு சோதனை வரலாம். நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் நம் மனதில் சந்தேக விதைகளை விதைக்கலாம். பைபிள் உண்மைதானா, நம்மை வழிநடத்துவதற்காக யெகோவா இந்த அமைப்பைத்தான் பயன்படுத்துகிறாரா என்றெல்லாம் நம்மைச் சந்தேகப்பட வைக்கலாம். ஆனால், யெகோவாவுடைய வார்த்தை எப்போதுமே உண்மையாகத்தான் இருக்கும் என்பதை நாம் நம்பினால்தான் இதுபோன்ற சோதனைகளை எதிர்த்து நிற்க முடியும். அதோடு, “எல்லா சமயத்திலும், கடைசிவரையிலும், யெகோவாவுடைய விதிமுறைகளின்படி நடக்க உறுதியாக” இருப்போம். (சங். 119:112) சத்தியத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்கும், அதன்படி நடக்க மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் நாம் ‘வெட்கப்படவே மாட்டோம்.’ (சங். 119:46) அதோடு, துன்புறுத்தல் மாதிரி பெரிய பெரிய பிரச்சினைகளைக்கூட “பொறுமையோடும் சந்தோஷத்தோடும்” சகிப்போம்.—கொலோ. 1:11; சங். 119:143, 157.

17. வருடாந்தர வசனம் நமக்கு எதை ஞாபகப்படுத்தும்?

17 யெகோவா நமக்கு சத்தியத்தைச் சொல்லிக்கொடுத்திருப்பதற்காக நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். குழப்பம் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியம்தான் நமக்கு ஒரு பிடிப்பைக் கொடுத்திருக்கிறது... நமக்கு ஒரு நல்ல வழியைக் காட்டியிருக்கிறது... பதட்டப்படாமல் நம்பிக்கையாக இருக்க நமக்கு உதவி செய்திருக்கிறது... கடவுளுடைய அரசாங்கத்தில் நமக்கு ஒரு அருமையான எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. கடவுளுடைய வார்த்தையின் சாராம்சமே சத்தியம்தான் என்பதில் நாம் உறுதியாக இருப்பதற்கு 2023-க்கான வருடாந்தர வசனம் நமக்கு உதவி செய்யட்டும்!—சங். 119:160.

பாட்டு 94 வேத வார்த்தைக்காக நன்றி!

a நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிற ஒரு வசனம் 2023-க்கான வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது: ‘சத்தியம்தான் கடவுளுடைய வார்த்தையின் சாராம்சம்.’ (சங். 119:160) இந்த வார்த்தைகள் உண்மை என்று கண்டிப்பாக நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், இன்று நிறையப் பேர் பைபிள் உண்மை என்றும், அது நல்ல நல்ல ஆலோசனைகளைத் தருகிறது என்றும் நம்புவதில்லை. அதை நம்புவதற்கு மூன்று ஆதாரங்களை இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம். இதையெல்லாம் நல்மனம் உள்ளவர்களுக்குக் காட்டி, பைபிள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நாம் உதவி செய்யலாம்.

b வார்த்தையின் விளக்கம்: “சாராம்சம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தையின் அர்த்தம், ஒட்டுமொத்தம், முழுக்க முழுக்க, அல்லது நூற்றுக்கு நூறு.

c பைபிள் மாறாமல் அப்படியே இருப்பதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு jw.org-ல் இருக்கிற “தேடவும்” பெட்டியில் “சரித்திரமும் பைபிளும்” என்று தேடுங்கள்.

d சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

e பட விளக்கம்: கடவுள் சொன்னபடியே, பிரமாண்டமான பாபிலோன் நகரம் வெறும் மண்மேடாக ஆனது.

f பட விளக்கம்: நிஜ சம்பவம் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு இளைஞர் மற்றவர்களோடு சண்டை போடுவதற்குப் பதிலாக, சமாதானமாக வாழ்வது எப்படி என்று பைபிளிலிருந்து கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் சொல்லித்தருகிறார்.