Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 3

பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்

இருண்ட காலங்களில் யெகோவா வழிகாட்டுவார்

இருண்ட காலங்களில் யெகோவா வழிகாட்டுவார்

“[யெகோவாதான்] உன் காலங்களை நிலைப்படுத்துகிறார்.”ஏசா. 33:6.

என்ன கற்றுக்கொள்வோம்?

இருண்ட காலங்களில் யெகோவாவின் உதவியைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று கற்றுக்கொள்வோம்.

1-2. யெகோவாவின் ஊழியர்களுக்கு எந்தமாதிரி கஷ்டங்கள் வரலாம்?

 சோக சம்பவங்கள் வாழ்க்கையை ஒரே நாளில் புரட்டிப்போட்டு விடலாம். சிலருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். லூயிஸ் a என்ற சகோதரருக்கு ஒரு அரிய வகை புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இன்னும் சில மாதங்கள்தான் அவர் உயிரோடு இருப்பார் என்று டாக்டர் சொல்லிவிட்டார். மோனிக்காவும் அவருடைய கணவரும் யெகோவாவுக்கு நிறைய சேவை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று ஒரு நாள், மூப்பராக இருந்த அந்தக் கணவர், ரகசியமாக ஒரு பாவத்தைப் பல வருஷங்களாக செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. கல்யாணம் ஆகாத ஒலிவியா என்ற சகோதரி, சூறாவளி வந்தபோது தன்னுடைய வீட்டை காலி செய்துவிட்டு போக வேண்டியிருந்தது. திரும்பி வந்தபோது அவருடைய வீடு தரைமட்டமாகி இருந்தது. இவர்கள் எல்லாருக்குமே சில நொடிகளில் வாழ்க்கை தலைகீழாக மாறியது. நீங்களும் இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்திருக்கிறீர்களா?

2 எல்லாருக்கும் வருவதுபோல், யெகோவாவின் ஊழியர்களான நமக்கும் கஷ்டங்களும் நோய்களும் வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்ல, நம்மை வெறுக்கிறவர்களிடம் இருந்து எதிர்ப்பும் துன்புறுத்தலும் வருகிறது. இந்த கஷ்டங்களெல்லாம் வராத மாதிரி யெகோவா தடுப்பதில்லை. இருந்தாலும், நமக்கு உதவி செய்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 41:10) அவர் தரும் உதவியோடு நம்மால் சந்தோஷத்தை இழக்காமல் இருக்க முடியும்... நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும்... எவ்வளவு மோசமான கஷ்டங்கள் வந்தாலும் அவருக்கு உண்மையாக இருக்க முடியும்... இருண்ட காலங்களில் யெகோவா எப்படி நமக்கு வெளிச்சம் காட்டுகிறார்? நான்கு வழிகளை இப்போது பார்க்கலாம். அவர் தருகிற உதவியிலிருந்து நன்மையடைய என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.

யெகோவா உங்களைப் பாதுகாப்பார்

3. இருண்டுபோன ஒரு சூழ்நிலையில் என்ன செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்?

3 பிரச்சினை. சோக சம்பவங்களால் வாழ்க்கை திடீரென்று இருண்டு போகும்போது, நம்மால் தெளிவாக யோசிக்கவும் முடியாது, நல்ல முடிவுகள் எடுக்கவும் முடியாது. ஏனென்றால், நம் இதயத்தில் தாங்க முடியாத வலி இருக்கும். கவலை நம் பார்வையை ஒரு மூடுபனி போல மங்கலாக்கிவிடும். எந்தத் திசையில் போவதென்று தெரியாமல் தடுமாறுவோம். முன்பு பார்த்த இரண்டு சகோதரிகள் என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்: “சூறாவளி என் வீட்டை நாசமாக்கியபோது திணறி போய்விட்டேன். என்னால் யோசிக்கவே முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்றும் புரியவில்லை” என்று ஒலிவியா சொல்கிறார். கணவர் செய்த துரோகத்தைப் பற்றி மோனிக்கா சொல்கிறார்: “நான் அப்படியே நொந்துபோய்விட்டேன். யாரோ என் இதயத்தில் குத்தியதுபோல் இருந்தது. ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதே பெரிய கஷ்டமாக இருந்தது. எனக்கு இப்படி நடக்கும் என்று கனவில்கூட நினைக்கவில்லை.” இந்தமாதிரி சூழ்நிலைகளில் யெகோவா நமக்கு எப்படி உதவுவார்? அவர் என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்?

4. பிலிப்பியர் 4:6, 7 சொல்வதுபோல், எதைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்?

4 யெகோவா என்ன செய்வார்? நமக்கு “தேவசமாதானம்” தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) யெகோவாவோடு நெருக்கமான பந்தம் வைத்திருப்பதால் கிடைக்கும் சமாதானம்தான் தேவசமாதானம்! அது நம் இதயத்தையும் மனதையும் அமைதிப்படுத்தும், சாந்தமாக்கும். அந்த சமாதானம் ‘எல்லா சிந்தனைக்கும் மேலானது’ என்று பைபிள் சொல்கிறது. அது கொடுக்கிற அமைதியை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏதோவொரு விஷயத்துக்காக உருக்கமாக ஜெபம் செய்த பிறகு, ஒருவிதமான அமைதியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதுதான் “தேவசமாதானம்.”

5. தேவசமாதானம் எப்படி நம் இதயத்தையும் மனதையும் பாதுகாக்கும்?

5 தேவசமாதானம், நம் “இதயத்தையும் மனதையும்” “பாதுகாக்கும்” என்று அந்த வசனம் சொல்கிறது. “பாதுகாக்கும்” என்பதற்கு கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை ராணுவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. நகரத்தைப் பாதுகாத்த காவல்காரர்களை இது குறித்தது. நகர வாசலை பாதுகாக்க காவல்காரர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில், மக்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். அதேபோல், தேவசமாதானம் நம் இதயத்தையும் மனதையும் பாதுகாக்கும்போது நாம் நிம்மதியாக இருப்போம்; பாதுகாப்பான உணர்வு நமக்கு இருக்கும். (சங். 4:8) பைபிளில் வரும் அன்னாளின் விஷயத்தில் அதுதான் நடந்தது. அவளுடைய சூழ்நிலை உடனடியாக மாறவில்லை. இருந்தாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது. (1 சா. 1:16-18) மனதில் அமைதி இருந்தால் நம்மால் தெளிவாக யோசிக்க முடியும் நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.

உங்களுடைய இதயத்தையும் மனதையும் பாதுகாக்க ‘தேவசமாதானத்தை’ கேளுங்கள்; அது கிடைக்கும்வரை ஜெபம் செய்யுங்கள் (பாராக்கள் 4-6)


6. தேவசமாதானம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

6 நாம் என்ன செய்ய வேண்டும்? மனதுக்குக் கஷ்டமாக இருக்கும்போது, நீங்களும் காவல்காரர்களைக் கூப்பிடுங்கள். அதாவது, தேவசமாதானத்தைக் கேளுங்கள். அது கிடைக்கும்வரை ஜெபம் செய்யுங்கள். (லூக். 11:9; 1 தெ. 5:17) ஏற்கெனவே பார்த்த லூயிஸின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று தெரிந்தபோது, அவருக்கும் அவருடைய மனைவி ஆனாவுக்கும் எப்படி இருந்திருக்கும்! லூயிஸ் இப்படி சொல்கிறார்: “இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சையைப் பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் முடிவெடுப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் நிறைய ஜெபம் செய்தது மனதுக்கு அமைதியைக் கொடுத்தது.” லூயிஸும் அவருடைய மனைவியும் அடிக்கடி ஜெபம் செய்தார்கள், உருக்கமாக ஜெபம் செய்தார்கள். மன சமாதானத்தை, அமைதியான இதயத்தை, நல்ல முடிவுகள் எடுக்க ஞானத்தைத் தர சொல்லி கேட்டார்கள். பிறகு, யெகோவாவின் உதவி கிடைத்ததை உணர்ந்தார்கள். உங்களுக்கும் இந்தமாதிரி கஷ்டங்கள் வரும்போது விடாமல் ஜெபம் செய்யுங்கள். (ரோ. 12:12) யெகோவா தரும் சமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் பாதுகாப்பதைக் கண்டிப்பாக உணருவீர்கள்.

யெகோவா உங்களை நிலைப்படுத்துவார்

7. இருண்ட காலங்களில் நம்முடைய உணர்ச்சிகள் எப்படியிருக்கும்?

7 பிரச்சினை. வாழ்க்கையில் இருண்ட காலங்கள் வரும்போது நம் உணர்வுகள், யோசனைகள், நடந்துகொள்கிற விதம் எப்போதும்போல் இருக்காது. புயலில் மாட்டிய கப்பலை, அலைகள் எப்படி அலைக்கழிக்குமோ அதேபோல் நம் உணர்வுகள் நம்மை அலைக்கழிக்கலாம். உணர்ச்சிகள் மாறி மாறி நம்மைத் தாக்கலாம். நாம் ஏற்கெனவே பார்த்த ஆனாவுக்கு அப்படித்தான் இருந்தது. லூயிஸ் இறந்தபிறகு ஆனாவின் உணர்ச்சிகள் அவரைப் பாடாய்ப்படுத்தியது. “வாழ்க்கையே வெறுமையாக இருந்தது. ஒரு நேரம் என்னை நினைத்து நான் பரிதாபப்பட்டேன். இன்னொரு நேரம், லூயிஸ் என்னை விட்டுவிட்டு போனதை நினைத்து கோபம் கோபமாக வந்தது” என்று ஆனா சொல்கிறார். அதுமட்டுமல்ல, லூயிஸ் உயிரோடு இருந்தபோது செய்த சில விஷயங்களை இப்போது ஆனா தனியாக செய்ய வேண்டியிருந்தது. இதனால் அவர் தனிமை உணர்வால் அவதிப்பட்டார். புயலில் மாட்டிய அந்தக் கப்பலைப் போல்தான் அவர் உணர்ந்தார். ஒருவேளை, உங்கள் உணர்ச்சிகள் உங்களை அலைக்கழித்தால் யெகோவா எப்படி உதவி செய்வார்?

8. ஏசாயா 33:6 சொல்வதுபோல், யெகோவா என்ன செய்வார்?

8 யெகோவா என்ன செய்வார்? நம்மை நிலைப்படுத்துவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 33:6-ஐ வாசியுங்கள்.) ஒரு கப்பல் புயலில் மாட்டிக்கொண்டால், அது அப்படியும் இப்படியும் பயங்கரமாக சாயும். அதனால் பெரிய ஆபத்து வந்துவிடலாம். அந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு, நிறைய கப்பல்களில், நீர் மட்டத்துக்குக் கீழ் ஸ்டெபிலைசர்கள், அதாவது துடுப்பு போல் இருக்கிற இரண்டு பாகங்கள், பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்டெபிலைசர்கள் இருப்பதால் கப்பல் சாய்வது கொஞ்சம் குறையும்; பயணிகளும் ஓரளவு பாதுகாப்பாக உணர்வார்கள். ஆனால் கப்பல் முன்னோக்கி போய்க்கொண்டிருந்தால்தான் இந்த ஸ்டெபிலைசர்கள் நன்றாக வேலை செய்யும். அதேபோல், பிரச்சினைகள் வரும்போது சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முன்னோக்கி போய்க்கொண்டிருந்தால்தான் யெகோவாவால் நம்மை நிலைப்படுத்த முடியும்.

தடுமாறாமல் நிலையாக இருப்பதற்கு ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள் (பாராக்கள் 8-9)


9. தடுமாறாமல் நிலையாக இருப்பதற்கு ஆராய்ச்சிக் கருவிகள் எப்படி உதவும்? (படத்தையும் பாருங்கள்.)

9 நாம் என்ன செய்ய வேண்டும்? உணர்ச்சிகள் புயல் போல் தாக்கும்போது, யெகோவாவோடு நெருக்கமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத் தொடர்ந்து செய்யுங்கள். முன்பு மாதிரி உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியாதுதான். ஆனால் யெகோவா உங்களைப் புரிந்துகொள்வார், கவலைப்படாதீர்கள்! (லூக்கா 21:1-4-ஐ ஒப்பிடுங்கள்.) தனிப்பட்ட விதமாக பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பதற்கும் அதை யோசித்துப் பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்குவது ரொம்ப முக்கியம். ஏன்? யெகோவா நமக்கு நிறைய அற்புதமான வீடியோக்களையும் கட்டுரைகளையும் தந்திருக்கிறார். பிரச்சினைகள் தாக்கும்போது சாய்ந்துவிடாமல் இருக்க இவையெல்லாம் உதவும். JW லைப்ரரி, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு போன்ற கருவிகளையும் யெகோவா கொடுத்திருக்கிறார். மோனிக்காவின் மனதில் இருந்த வலி அதிகமானபோது இந்த ஆராய்ச்சிக் கருவிகள் அவருக்கு உதவியது. “கோபம்,” “துரோகம்,” “உண்மைத்தன்மை” போன்ற வார்த்தைகளைப் போட்டு அவர் ஆராய்ச்சி செய்தார். மனதுக்கு அமைதி கிடைக்கும்வரை படித்துக்கொண்டே இருந்தார். “ஆரம்பத்தில், ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக இந்த வார்த்தைகளையெல்லாம் டைப் செய்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால், போகப் போக, நான் படித்த விஷயங்கள் யெகோவா என்னை பாசமாக கட்டியணைத்த உணர்வைக் கொடுத்தது. என்னுடைய எல்லா உணர்வுகளையும் யெகோவா புரிந்துகொள்கிறார், எனக்கு உதவி செய்கிறார் என்று நான் புரிந்துகொண்டேன்” என்கிறார் மோனிக்கா. யெகோவா தந்திருக்கும் கருவிகள் உங்களுக்கும் உதவும். புயலடித்து ஓயும்வரை உங்களாலும் தடுமாறாமல் நிலையாக இருக்க முடியும்.—சங். 119:143, 144.

யெகோவா உங்களைத் தாங்கிப் பிடிப்பார்

10. மனதை சுக்குநூறாக உடைக்கும் சம்பவங்கள் நடக்கும்போது நமக்கு எப்படி இருக்கலாம்?

10 பிரச்சினை. மனதை சுக்குநூறாக உடைக்கும் சம்பவங்கள் நடக்கும்போது உடலளவிலும் மனதளவிலும் நாம் சோர்ந்துபோகலாம். அடிபட்ட ஒரு ஓட்டப் பந்தய வீரரைப் போல் நாம் ஆகிவிடலாம். ஒரு காலத்தில் அவர் வேகமாக ஓடியிருப்பார், ஆனால் இப்போது அவர் நொண்டி நொண்டி நடக்க வேண்டியிருக்கும். அதேபோல், முன்பு சாதாரணமாக செய்துகொண்டிருந்த விஷயங்களை அல்லது சந்தோஷமாக செய்துகொண்டிருந்த விஷயங்களை இப்போது செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். எலியாவைப் போல், எழுந்திருக்க முடியாத அளவுக்கு நாம் சோர்ந்துவிடலாம்; ஒன்றுமே செய்யாமல் தூங்க வேண்டும் என்று தோன்றலாம். (1 ரா. 19:5-7) இப்படி சோர்வாக இருக்கும்போது யெகோவா எப்படி உதவுவார்?

11. யெகோவா வேறு எப்படி நமக்கு உதவி செய்கிறார்? (சங்கீதம் 94:18)

11 யெகோவா என்ன செய்வார்? நம்மைத் தாங்கிப் பிடிப்பதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 94:18-ஐ வாசியுங்கள்.) அடிபட்ட பிறகு ஓட்டப் பந்தய வீரருக்கு எப்படி நடப்பதற்கு உதவித் தேவைப்படுமோ அதேபோல், யெகோவாவுடைய சேவையைத் தொடர்ந்து சுறுசுறுப்பாக செய்வதற்கு நமக்கும் உதவித் தேவை. இந்தமாதிரி சமயங்களில் நமக்கு உதவுவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். “யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’” என்று சொல்லியிருக்கிறார். (ஏசா. 41:13) யெகோவாவின் உதவியை தாவீது ராஜாவும் அனுபவித்தார். கஷ்டங்கள் வந்த சமயத்திலும் எதிரிகள் தாக்கிய சமயத்திலும் அவர் இப்படிச் சொன்னார்: “உங்கள் வலது கையால் என்னைத் தாங்குகிறீர்கள்.” (சங். 18:35) அப்படியென்றால், யெகோவா நம்மை எப்படித் தாங்கிப் பிடிக்கிறார்?

குடும்பத்திடமிருந்து, நண்பர்களிடமிருந்து, மூப்பர்களிடமிருந்து கிடைக்கும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் (பாராக்கள் 11-13)


12. இன்று யாரை பயன்படுத்தி யெகோவா நமக்கு உதவி செய்கிறார்?

12 நம்மைத் தாங்கிப் பிடிக்க யெகோவா மற்றவர்களைப் பயன்படுத்துவார். உதாரணத்துக்கு, தாவீது சோர்வாக இருந்தபோது, அவருடைய நண்பரான யோனத்தான் அவரை பலப்படுத்தினார். (1 சா. 23:16, 17) அதேபோல், எலியாவுக்கு உதவி செய்ய யெகோவா எலிசாவைப் பயன்படுத்தினார். (1 ரா. 19:16, 21; 2 ரா. 2:2) இன்றும், நம் குடும்பத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் அல்லது மூப்பர்கள் மூலமாக யெகோவா நம்மைத் தாங்கிப் பிடிக்கிறார். ஆனால், சோர்வாக இருக்கும்போது மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ள தோன்றாது, தனியாக இருக்கத்தான் தோன்றும். இப்படி உணர்வது சகஜம்தான். அப்படியென்றால், யெகோவாவின் உதவியை ஏற்றக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

13. யெகோவா கொடுக்கும் உதவியிலிருந்து பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

13 நாம் என்ன செய்ய வேண்டும்? தனியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க கடுமையாக முயற்சி செய்யுங்கள். நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளும்போது நாம் யோசிக்கிற விதம் மாறும். நம்மைப் பற்றியும் நம் பிரச்சினைகளைப் பற்றியுமே நாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அதனால் நல்ல முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விடும். (நீதி. 18:1) சில சமயங்களில், அதுவும் வாழ்க்கையில் தாங்க முடியாத கஷ்டங்கள் வரும்போது, தனியாக இருக்க நினைப்பது தவறில்லை. ஆனால் ரொம்ப நாளுக்கு தனிமைப்படுத்திக்கொண்டால் யெகோவாவுடைய உதவியை நாம் ஒதுக்கித்தள்ளுவதுபோல் ஆகிவிடும். அதனால் குடும்பத்தில் இருப்பவர்கள், நண்பர்கள், மூப்பர்கள் கொடுக்கும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களைப் பயன்படுத்திதான் யெகோவா உங்களைத் தாங்கிப் பிடிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.—நீதி. 17:17; ஏசா. 32:1, 2.

யெகோவா உங்களை ஆறுதல்படுத்துவார்

14. பயந்து நடுங்குகிற எந்தமாதிரி சூழ்நிலைகள் நமக்கு வரலாம்?

14 பிரச்சினை. பயந்து நடுங்குகிற சூழ்நிலைகள் நம் எல்லாருக்குமே வரும். கடவுளுடைய உண்மை ஊழியர்களும், எதிரிகளை பார்த்து அல்லது பிரச்சினைகளை நினைத்து பயந்திருக்கிறார்கள். (சங். 18:4; 55:1, 5) அதேமாதிரி நமக்கும் பள்ளியிலோ, வேலை செய்கிற இடத்திலோ எதிர்ப்புகள் வரலாம்; அரசாங்கம்கூட நம்மை எதிர்க்கலாம். நோய் வந்ததால் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கலாம். அந்தமாதிரி சமயங்களில், ஒரு சின்ன பிள்ளையைப் போல் என்ன செய்வது என்று தெரியாமல் நாம் குழம்பி நிற்கலாம். அப்போது யெகோவா எப்படி உதவி செய்வார்?

15. யெகோவா என்ன செய்வார் என்று சங்கீதம் 94:19 சொல்கிறது?

15 யெகோவா என்ன செய்வார்? அவர் நம்மை ஆறுதல்படுத்தி, நம் இதயத்துக்கு இதமளிப்பார். (சங்கீதம் 94:19-ஐ வாசியுங்கள்.) இந்த சங்கீதத்தைப் படிக்கும்போது, இடி மின்னலுக்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் ஒரு சின்ன பிள்ளை நம் மனதுக்கு வரலாம். பயத்தில் அவள் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறாள். அவளுடைய அப்பா வந்து அவளை தூக்கி, தூங்கும்வரை அவளை தன் கைக்குள் அணைத்து வைத்துக்கொள்கிறார். புயல் இன்னமும் அடங்கவில்லை என்றாலும், தன் அப்பாவின் கைக்குள் இருப்பதால் அவள் பாதுகாப்பாக உணருகிறாள். இடி மின்னல் மாதிரியான பிரச்சினைகள் நம்மைத் தாக்கும்போது, நம் பரலோக அப்பா நம்மை அப்படித்தான் அரவணைக்கிறார். அவருடைய அரவணைப்பில் நாம் பயமில்லாமல் இருப்போம். ஆனால், அவருடைய அரவணைப்பு நமக்கு வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பைபிள் மூலமாக உங்களுடைய பரலோக அப்பா உங்களை அரவணைப்பார் (பாராக்கள் 15-16)


16. யெகோவாவின் அரவணைப்பு வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

16 நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவோடு தவறாமல் நேரம் செலவு செய்ய வேண்டும். அதாவது, ஜெபம் செய்ய வேண்டும், பைபிளைப் படிக்க வேண்டும். (சங். 77:1, 12-14) இப்படி செய்வது உங்கள் பழக்கமாக இருந்தால், பிரச்சினைகள் வரும்போது முதலில் பரலோக அப்பாவிடம்தான் உதவி கேட்டு போவீர்கள். உங்கள் பயம், கவலைகள் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். பைபிள் மூலமாக அவர் உங்களிடம் பேசுவதற்கும் உங்களை ஆறுதல்படுத்துவதற்கும் அவரை அனுமதியுங்கள். (சங். 119:28) பயமாக இருக்கும்போது பைபிளில் இருக்கும் குறிப்பிட்ட சில புத்தகங்களைப் படியுங்கள். யோபு, சங்கீதம், நீதிமொழிகள் போன்ற புத்தகங்களை நீங்கள் படிக்கலாம். அதோடு, மத்தேயு 6-வது அதிகாரத்தில் இயேசு சொல்லியிருக்கும் வார்த்தைகளும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். ஜெபம் செய்துவிட்டு பைபிளைப் படிக்கும்போது யெகோவாவின் அரவணைப்பை உங்களால் உணர முடியும்.

17. எந்த விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம்?

17 இருண்ட காலங்களில் நாம் தனியாக இல்லை; யெகோவா நம் கூடவே இருக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம். (சங். 23:4; 94:14) நம்மைப் பாதுகாப்பதாகவும் நிலைப்படுத்துவதாகவும் தாங்கிப் பிடிப்பதாகவும் ஆறுதல்படுத்துவதாகவும் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். யெகோவாவைப் பற்றி ஏசாயா 26:3 இப்படி சொல்கிறது: “கடவுளே, உங்களை முழுமையாகச் சார்ந்திருக்கிறவர்களை நீங்கள் பாதுகாப்பீர்கள். அவர்களை எப்போதும் சமாதானத்தோடு வாழ வைப்பீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” அதனால், யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள். அவர் கொடுக்கும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது, இருண்ட காலத்தைத் தாண்டி உங்களால் வெளிச்சத்துக்கு வர முடியும்.

உங்கள் பதில் என்ன?

  • எந்தமாதிரி சமயங்களில் யெகோவாவுடைய உதவி நமக்குத் தேவைப்படும்?

  • யெகோவா நமக்கு உதவி செய்கிற நான்கு வழிகள் என்ன?

  • யெகோவாவின் உதவி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பாட்டு 12 ஈடில்லா தேவன் யெகோவா

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.