Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 2

பாட்டு 132 என் உயிர் நீ!

கணவர்களே, உங்கள் மனைவிக்கு மதிப்புக் கொடுங்கள்

கணவர்களே, உங்கள் மனைவிக்கு மதிப்புக் கொடுங்கள்

“கணவர்களே, . . . [மனைவிக்கு] கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்.”1 பே. 3:7.

என்ன கற்றுக்கொள்வோம்?

சொல்லிலும் செயலிலும் ஒரு கணவர் அவருடைய மனைவிக்கு எப்படி அன்பும் மரியாதையும் காட்டலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1. கல்யாண வாழ்க்கை என்ற பரிசை யெகோவா தந்ததற்கு ஒரு காரணம் என்ன?

 யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்.” நாமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (1 தீ. 1:11) அதற்காக யெகோவா நமக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். (யாக். 1:17) அதில் ஒன்றுதான் கல்யாண வாழ்க்கை. ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்யும்போது, ‘காலம் முழுவதும் ஒருவர்மேல் ஒருவர் அன்பாக இருப்போம், மரியாதை காட்டுவோம், நெஞ்சார நேசிப்போம்’ என்று வாக்குக் கொடுக்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒருவர்மேல் ஒருவர் உயிரையே வைத்திருக்கும்போது உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பார்கள்.—நீதி. 5:18.

2. இன்று நிறைய கணவர்கள் அவர்களுடைய மனைவியை எப்படி நடத்துகிறார்கள்?

2 வருத்தமான விஷயம் என்னவென்றால், கல்யாண நாளன்று கொடுத்த வாக்கையே தம்பதிகள் நிறைய பேர் மறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதில்லை. சில வருஷங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், நிறைய கணவர்கள் அவர்களுடைய மனைவியை அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள், மோசமாகப் பேசுகிறார்கள், மனதைக் காயப்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருந்தது. இப்படிச் செய்யும் கணவர்கள், பெரும்பாலும் மற்றவர்கள் முன்னால் மனைவியை மரியாதையாகத்தான் நடத்துவார்கள். ஆனால் வீட்டில் அதற்கு நேர்மாறாக இருப்பார்கள். இன்னும் சில கணவர்கள் ஆபாசத்தைப் பார்ப்பதால் அவர்களுடைய கல்யாண வாழ்க்கையே நாசமாகியிருக்கிறது.

3. எதனால் சில கணவர்கள் மனைவியை மோசமாக நடத்துகிறார்கள்?

3 எதனால் சில கணவர்கள் அவர்களுடைய மனைவியை மோசமாக நடத்துகிறார்கள்? ஒருவேளை, அவர்களுடைய அப்பா அவர்களுடைய அம்மாவைக் கொடூரமாக நடத்தியிருப்பார். அதைப் பார்த்து வளர்ந்த சில ஆண்கள், மனைவியை மோசமாக நடத்துவது தப்பில்லை என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலபேர், ‘மனைவியை அடக்க தெரிந்தவன்தான் உண்மையான ஆம்பள’ என்று நம்புகிற கலாச்சாரத்தில் வளர்ந்ததால் அப்படி நடக்கிறார்கள். வேறுசில ஆண்கள், கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்திருக்கலாம். சில ஆண்களுக்கு, அடிக்கடி ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் இருப்பதால், செக்ஸ் ஆசைகளைத் தீர்க்கும் பொருளாக மட்டும்தான் பெண்களைப் பார்க்கிறார்கள். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, கணவர்கள் மனைவியை மோசமாக நடத்துவது இன்னும் அதிகமாகி இருக்கிறது என்று அறிக்கைகள் காட்டுகின்றன. இப்படி நிறைய காரணங்கள் இருக்கலாம். அதற்காகக் கணவர்கள் செய்வது எல்லாம் சரியென்று ஆகிவிடாது.

4. கிறிஸ்தவ கணவர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஏன்?

4 பெண்களைப் பற்றி இந்த உலகத்தில் இருக்கிற தவறான கருத்தை யெகோவாவை வணங்குகிற ஆண்கள் வளர்த்துக்கொள்ள கூடாது; அதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். a ஏனென்றால் ஒருவர் மனதில் எதை யோசிக்கிறாரோ அதைத்தான் செய்வார். ரோமில் இருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரிப்பு கொடுத்தார். (ரோ. 12:1, 2) ரோமர்களுக்கு பவுல் இதை எழுதியபோது, அந்தச் சபை ஆரம்பித்து பல வருஷங்கள் ஆகியிருந்தது. ஆனால் அப்போதும், உலகத்தில் இருந்தவர்களுடைய சில பழக்கவழக்கங்களும் கருத்துகளும் அந்தச் சபையில் சிலரிடம் இருந்திருக்கிறது. இது பவுலின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. அதனால்தான், யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் மாற்றிக்கொள்ளும்படி பவுல் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். அன்று பவுல் அவர்களுக்குக் கொடுத்த ஆலோசனை இன்று இருக்கிற கிறிஸ்தவ கணவர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால், சில கிறிஸ்தவ கணவர்களுடைய மனதில் உலகத்தின் கருத்துகள் இருப்பதால் மனைவியை மோசமாக நடத்துகிறார்கள். இது ரொம்ப வருத்தமான விஷயம். b கணவர்கள் மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்? அதற்கான பதிலை இந்தக் கட்டுரையின் முக்கிய வசனத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

5. 1 பேதுரு 3:7 சொல்வதுபோல் ஒரு கணவர் அவருடைய மனைவியை எப்படி நடத்த வேண்டும்?

5 1 பேதுரு 3:7-ஐ வாசியுங்கள். கணவர்கள் மனைவிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். பொதுவாக, நாம் மரியாதை வைத்திருக்கிற ஒருவரை மதிப்போடு நடத்துவோம். அப்படியென்றால், மனைவிக்கு மதிப்பு கொடுக்கிற கணவர் அவளிடம் அன்பாக, பாசமாக நடந்துகொள்வார். இந்தக் கட்டுரையில், கணவர்கள் எப்படி மனைவியை மதிப்போடு நடத்த வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். ஆனால் அதற்கு முன்பு, மனைவியை எப்படி நடத்தக் கூடாது என்று தெரிந்துகொள்ளலாம்.

மனைவியை மரியாதை இல்லாமல் நடத்தாதீர்கள்

6. மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தும் ஆண்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்? (கொலோசெயர் 3:19)

6 மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தக் கூடாது. கொடூரமாக நடந்துகொள்கிறவர்களை யெகோவா வெறுக்கிறார். (சங். 11:5) அதுவும் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி, முரட்டுத்தனமாக நடத்துகிற கணவரை யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. (மல். 2:16; கொலோசெயர் 3:19-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் 1 பேதுரு 3:7 சொல்வதுபோல், ஒரு கணவர் மனைவியைச் சரியாக நடத்தவில்லை என்றால் யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பு பாதிக்கப்படும். சொல்லப்போனால், அவர் செய்கிற ஜெபத்தைக்கூட யெகோவா கேட்க மாட்டார்.

7. எபேசியர் 4:31, 32 சொல்வதுபோல் எப்படிப்பட்ட பேச்சைக் கணவர்கள் தவிர்க்க வேண்டும்? (“வார்த்தையின் விளக்கம்” என்பதையும் பாருங்கள்.)

7 மோசமான வார்த்தைகளால் மனைவியைக் காயப்படுத்தக் கூடாது. சில கணவர்கள், மனைவியிடம் கோபமாகப் பேசுகிறார்கள், மனதைக் குத்திக் கிழிக்கும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் யெகோவா, “சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்” c வெறுக்கிறார். (எபேசியர் 4:31, 32-ஐ வாசியுங்கள்.) யெகோவா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார். வீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு கணவர் அவருடைய மனைவியிடம் எப்படிப் பேசுகிறார் என்பதையும் யெகோவா கவனிக்கிறார். எப்போதும் மனைவியிடம் கடுகடுப்பாகப் பேசுகிற ஒரு கணவர் அவருடைய கல்யாண வாழ்க்கையை மட்டுமல்ல, யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பையும் கெடுத்துக்கொள்கிறார்.—யாக். 1:26.

8. ஆபாசத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார், ஏன்?

8 ஆபாசத்தைப் பார்க்கக் கூடாது. ஆபாசத்தை யெகோவா வெறுக்கிறார். அது அவருக்கு அருவருப்பாக இருக்கிறது. அதனால், அசிங்கமான படங்களைப் பார்க்கிற ஒரு கணவர் யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பையும் கெடுத்துக்கொள்கிறார்; அவருடைய மனைவியையும் கேவலப்படுத்துகிறார். d கணவர், தன் மனைவிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். மனைவிக்கு உண்மையாக இருக்கிற ஒரு கணவர், வேறு பெண்ணோடு தப்பான உறவு வைத்துக்கொள்ள மாட்டார்; அதைப் பற்றி யோசித்துக்கூட பார்க்க மாட்டார். ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருக்கும் ஒருவர் அவளோடு ஏற்கெனவே தன் “இதயத்தில்” முறைகேடான உறவுகொண்டுவிடுகிறார் என்று இயேசு சொன்னார். eமத். 5:28, 29.

9. மனைவிக்குப் பிடிக்காத விதத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள கணவர்கள் கட்டாயப்படுத்துவதை யெகோவா ஏன் வெறுக்கிறார்?

9 மனைவிக்கு அருவருப்பாக இருக்கிற விதத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது. மனைவிக்குப் பிடிக்காத விதங்களிலோ அவளுக்கு அருவருப்பாக அல்லது அவளுடைய மனசாட்சிக்கு உறுத்தலாக இருக்கிற விதங்களிலோ செக்ஸ் வைத்துக்கொள்ள சில கணவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். இப்படிச் சுயநலமாக, மனைவிமேல் கொஞ்சம்கூட அன்பு இல்லாமல் நடந்துகொள்வது யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால், கணவர்கள் மனைவிமேல் அன்பு காட்ட வேண்டும், அவளை நெஞ்சார நேசிக்க வேண்டும், அவளுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (எபே. 5:28, 29) அப்படியென்றால், ஒரு கிறிஸ்தவ கணவர் மனைவிக்குப் பிடிக்காத விதத்தில் செக்ஸ் வைத்துக்கொள்பவராகவோ ஆபாசத்தைப் பார்ப்பவராகவோ கொடூரமாக நடந்துகொள்பவராகவோ இருந்தால் என்ன செய்வது? அவருடைய யோசனைகளையும் நடத்தையையும் அவர் எப்படி மாற்றிக்கொள்ளலாம்?

மோசமான இந்தப் பழக்கங்களைக் கணவர்கள் எப்படி விடலாம்?

10. இயேசுவின் முன்மாதிரி கணவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

10 மனைவியை இப்படி மோசமாக நடத்தாமல் இருக்க கணவர்கள் என்ன செய்ய வேண்டும்? இயேசுவைப்போல் நடந்துகொள்ள வேண்டும். இயேசு கல்யாணம் செய்துகொள்ளவில்லைதான். ஆனால், அவர் தன்னுடைய சீஷர்களை நடத்திய விதத்திலிருந்து மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று கணவர்கள் தெரிந்துகொள்ளலாம். (எபே. 5:25) இயேசு அவருடைய சீஷர்களை எப்படி நடத்தினார், அவர்களிடம் எப்படிப் பேசினார், அதிலிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

11. இயேசு அவருடைய அப்போஸ்தலர்களை எப்படி நடத்தினார்?

11 இயேசு அவருடைய அப்போஸ்தலர்களை எப்போதும் பாசமாக மரியாதையாக நடத்தினார். அவர்களை ஒருபோதும் கொடுமைப்படுத்தியதும் இல்லை, தரக்குறைவாக நடத்தியதும் இல்லை. இயேசு, அவர்களுடைய எஜமானாகவும் போதகராகவும் இருந்தார். அதற்காக அவருடைய அதிகாரத்தையும் பலத்தையும் காட்டி அவர்களை அடக்கி ஒடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மனத்தாழ்மையாக அவர்களுக்குச் சேவை செய்தார். (யோவா. 13:12-17) இயேசு அவருடைய சீஷர்களிடம், “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; . . . என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்று சொன்னார். (மத். 11:28-30) இயேசு சாந்தமாக இருந்தார். சாந்தம், கோழைத்தனம் கிடையாது. அது பலத்துக்கு அடையாளம். ஏனென்றால், சாந்தமாக இருக்கிறவரால்தான், யாராவது கோபப்படுத்தினால்கூட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்க முடியும்.

12. இயேசு மற்றவர்களிடம் எப்படிப் பேசினார்?

12 இயேசு பேசிய வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது, புத்துணர்ச்சி கொடுத்தது. அவரைப் பின்பற்றியவர்களிடம் அவர் கடுகடுப்பாகப் பேசியதே இல்லை. (லூக். 8:47, 48) எதிரிகள் அவரை அவமானப்படுத்தி அவருடைய கோபத்தைத் தூண்டிவிட பார்த்தபோதுகூட அவர் கோபப்படவில்லை, அவர்களை “பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை.” (1 பே. 2:21-23) சில சமயங்களில், இயேசு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். (மத். 27:12-14) கிறிஸ்தவ கணவர்களுக்கு இயேசு எவ்வளவு நல்ல முன்மாதிரி!

13. மத்தேயு 19:4-6 சொல்வதுபோல், ஒரு கணவர் எப்படி அவருடைய மனைவியோடு ‘சேர்ந்திருக்க’ வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

13 கணவர் தன் மனைவிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். ஒரு கணவர் தன் மனைவியோடு “சேர்ந்திருப்பான்” என்று அவருடைய அப்பா சொன்ன வார்த்தைகளையே மறுபடியும் சொன்னார். (மத்தேயு 19:4-6-ஐ வாசியுங்கள்.) “சேர்ந்திருப்பான்” என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “பசைபோட்டு ஒட்டுவது.” அப்படியென்றால், ஒரு கணவன்-மனைவிக்குள் இருக்கிற திருமண பந்தம், இரண்டு பேரையும் பிரிக்கவே முடியாதபடி பசைபோட்டு ஒட்டி வைத்த மாதிரி இருக்க வேண்டும். அந்தப் பந்தத்தைக் கெடுக்கிற மாதிரி இருவரில் ஒருவர் ஏதாவது செய்தால்கூட இரண்டு பேருக்குமே வலிதான். இப்படி மனைவியோடு ‘சேர்ந்திருக்கிற’ கணவர் ஆபாசத்தை எந்த விதத்திலும் பார்க்க மாட்டார். “வீணான காரியங்களைப் பார்க்காதபடி” உடனே அவருடைய ‘கண்ணைத் திருப்பிவிடுவார்.’ (சங். 119:37) சொல்லப்போனால், ‘எந்தப் பெண்ணையும் கெட்ட எண்ணத்தோடு பார்க்க மாட்டேன்’ என்று தன்னுடைய கண்களோடு ஒப்பந்தம் செய்திருப்பார்.—யோபு 31:1.

மனைவிக்கு உண்மையாக இருக்கும் கணவர் ஆபாசத்தைப் பார்க்க மாட்டார் (பாரா 13) g


14. மனைவியோடும் யெகோவாவோடும் இருக்கும் பந்தத்தைச் சரிசெய்ய ஒரு கணவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

14 சொல்லாலோ செயலாலோ மனைவியைக் காயப்படுத்திக்கொண்டு இருக்கிற ஒரு கணவர், யெகோவாவோடும் தன்னுடைய மனைவியோடும் அவருக்கு இருக்கும் பந்தத்தைச் சரிசெய்துகொள்ள வேண்டும். அதற்கு அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? முதலில், அவர் செய்வது தவறு என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர் செய்கிற எல்லாவற்றையும் யெகோவா பார்த்துக்கொண்டு இருக்கிறார்; யெகோவாவிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. (சங். 44:21; பிர. 12:14; எபி. 4:13) இரண்டாவதாக, மனைவியைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அவர் நடந்துகொள்கிற விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். (நீதி. 28:13) மூன்றாவதாக, தன் மனைவியையும் யெகோவாவையும் வேதனைப்படுத்தியதற்காக அவர்களிடம் மனசார மன்னிப்புக் கேட்க வேண்டும். (அப். 3:19) ‘என்னை மாற்றிக்கொள்வதற்கு ஆசையைக் கொடுங்கள். நான் யோசிக்கிற விதத்தை, என் பேச்சை, நான் நடந்துகொள்கிற விதத்தைக் கட்டுப்படுத்த உதவுங்கள்’ என்று யெகோவாவிடம் கெஞ்சி கேட்க வேண்டும். (சங். 51:10-12; 2 கொ. 10:5; பிலி. 2:13) நான்காவதாக, செய்த ஜெபத்துக்கு ஏற்ற மாதிரி நடக்க வேண்டும். மோசமாக நடப்பதையும் மோசமாகப் பேசுவதையும் விடுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். (சங். 97:10) ஐந்தாவதாக, சபையில் இருக்கிற அன்பான மூப்பர்களிடம் உடனே உதவி கேட்க வேண்டும். (யாக். 5:14-16) ஆறாவதாக, திரும்பவும் இந்த மாதிரி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று ஒரு திட்டம் போட வேண்டும். ஆபாசத்தைப் பார்க்கிற கணவரும் இதே விஷயங்களைச் செய்ய வேண்டும். கணவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா கண்டிப்பாக ஆசீர்வதிப்பார். (சங். 37:5) மோசமான இந்தப் பழக்கங்களைக் கணவர்கள் விட்டால் மட்டும் போதாது, மனைவிக்கு மதிப்பு கொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி?

உங்கள் மனைவிக்கு எப்படி மதிப்பு கொடுக்கலாம்?

15. ஒரு கணவர் எப்படி மனைவிமேல் பாசம் காட்டலாம்?

15 பாசத்தைக் காட்டுங்கள். கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிற சில சகோதரர்களுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. அவர்களுடைய மனைவியை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதைக் காட்ட தினமும் ஏதாவது செய்கிறார்கள். (1 யோ. 3:18) சின்ன சின்ன விஷயங்களைச் செய்துகூட ஒரு கணவர் பாசத்தைக் காட்டலாம். பாசமாக மனைவியின் கையைப் பிடிக்கலாம், கட்டிப் பிடிக்கலாம். ஒரு மெசேஜ் அனுப்பி, “நான் உன்னை மிஸ் பண்ணுறேன்” என்று சொல்லலாம், “நீ சாப்பிட்டியா” என்று கேட்கலாம். அவ்வப்போது, மனைவிக்குப் பிடித்த பொருள்களையோ பூவையோ வாங்கி கொடுத்து அவள்மேல் இருக்கும் பாசத்தைக் காட்டலாம். ஒரு கணவர் இதையெல்லாம் செய்யும்போது மனைவிக்கு மதிப்பு கொடுக்க முடியும், திருமண பந்தமும் பலமாகும்.

16. கணவர்கள் ஏன் மனைவியைப் பாராட்ட வேண்டும்?

16 மனதாரப் பாராட்டுங்கள். மனைவியை மதிக்கிற ஒரு கணவர், ‘நீ எனக்கு ரொம்ப முக்கியம்’ என்பதை மனைவியிடம் வெளிப்படையாகச் சொல்வார், அவளை உற்சாகப்படுத்துவார். மனைவி தனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறாள் என்று கவனித்து, ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் பாராட்டுவார். (கொலோ. 3:15) கணவர் மனதார பாராட்டும்போது மனைவியின் மனம் குளிர்ந்துவிடும். அன்பும் மதிப்பும் கிடைப்பதை மனைவி உணர்வாள், பாதுகாப்பாகவும் உணர்வாள்.—நீதி. 31:28.

17. ஒரு கணவர் தன் மனைவியை எப்படி மரியாதையாக நடத்தலாம்?

17 மென்மையாக மரியாதையாக நடத்துங்கள். மனைவிமேல் உயிரையே வைத்திருக்கிற ஒரு கணவர் அவளை முக்கியமானவளாக நினைப்பார், நெஞ்சார நேசிப்பார். அவளை யெகோவா கொடுத்த பொக்கிஷமாகப் பார்ப்பார். (நீதி. 18:22; 31:10) அதனால், எப்போதும் அவளை மென்மையாக மரியாதையாக நடத்துவார். செக்ஸ் வைத்துக்கொள்ளும்போதுகூட மனைவியைச் சங்கடப்படுத்துகிற மாதிரி, அவளுடைய மனசாட்சி உறுத்துகிற மாதிரி, அவளுக்கு அருவருப்பாக இருக்கிற விதத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்த மாட்டார். f இந்த விஷயத்தில், கணவருடைய மனசாட்சியும் யெகோவாவுக்கு முன்னால் சுத்தமாக இருக்க வேண்டும்.—அப். 24:16.

18. கணவர்களே, நீங்கள் என்ன செய்ய உறுதியாக இருக்கிறீர்கள்? (“ மனைவியை மதிக்கிற கணவராக இருக்க நான்கு வழிகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

18 கணவர்களே, எல்லா சமயத்திலும் மனைவிக்கு மதிப்பு கொடுக்க நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா பார்க்கிறார். உங்களை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறார். மனைவியை மரியாதை இல்லாமல் நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். எப்போதும் மனைவியைப் பாசமாக, மென்மையாக, மரியாதையாக நடத்துங்கள். அப்படிச் செய்யும்போது, நீங்கள் அவள்மேல் உயிரையே வைத்திருக்கிறீர்கள், அவள் உங்களுக்கு ரொம்ப முக்கியம் என்பதைக் காட்டுவீர்கள். மனைவிக்கு மதிப்பு கொடுங்கள்; யெகோவாவோடு இருக்கிற பந்தத்துக்குப் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், யெகோவாவோடு இருக்கும் நட்புதான் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம்.—சங். 25:14.

பாட்டு 131 ‘தேவன் இணைத்த பந்தம்’

a ஜனவரி 2024, காவற்கோபுரத்தில் வெளிவந்த, “யெகோவா பெண்களை மதிக்கிறார்—நீங்கள்?” என்ற கட்டுரையைப் படிப்பது கணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

bகுடும்ப வன்முறையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி” என்ற கட்டுரை, குடும்பத்தில் நடக்கிற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். இந்தக் கட்டுரையை jw.org-லும் JW லைப்ரரியிலும் “வேறுசில தலைப்புகள்” என்ற பகுதியில் பார்க்கலாம்.

c வார்த்தையின் விளக்கம்: “பழிப்பேச்சு. ஒருவரை கேவலமான பட்டப் பெயர்கள் வைத்து கூப்பிடுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது, எதற்கெடுத்தாலும் குறைசொல்வது இதில் அடங்கும். அசிங்கப்படுத்தும், அவமானப்படுத்தும், மனதைக் குத்திக் கிழிக்கும் எல்லா பேச்சுமே பழிப்பேச்சுதான்.

dஆபாசம் உங்கள் திருமண வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடலாம்” என்ற கட்டுரையை JW லைப்ரரியிலும் jw.org-லும் பாருங்கள்.

e கணவருக்கு ஆபாசத்தைப் பார்க்கிற பழக்கம் இருந்தால், அவருடைய மனைவிக்கு ஆகஸ்ட் 2023, காவற்கோபுரத்தில் வந்த “உங்கள் துணை ஆபாசத்தைப் பார்க்கும்போது...” என்ற கட்டுரை ரொம்ப உதவியாக இருக்கும்.

f ஒரு கணவனும் மனைவியும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் விஷயத்தில் எது சரி, எது தவறு என்று பைபிள் எந்த விவரத்தையும் சொல்வது இல்லை. இந்த விஷயத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவ தம்பதியும்தான் முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவு யெகோவாவை மகிமைப்படுத்துகிற விதத்திலும் ஒருவரை ஒருவர் பிரியப்படுத்துகிற விதத்திலும் இருக்க வேண்டும்; மனசாட்சியும் சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவாக, கணவன் மனைவிக்குள் மட்டுமே இருக்கிற இந்த அந்தரங்கமான விஷயங்களைப் பற்றி அவர்கள் வேறு யாரிடமும் பேசமாட்டார்கள்.

g பட விளக்கம்: ஒரு சகோதரரோடு வேலை செய்பவர்கள் ஆபாச படம் இருக்கிற பத்திரிகையை அவரிடம் பார்க்க சொல்கிறார்கள்.